ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Thursday, June 01, 2006நாகசாகி, 9/02/1945, 11.02.கொகுரா நகரின் மீது வானில் மூன்று முறை சுற்றி வந்தும், மேகமூட்டம் காரணமாக, விமானக் குழுவினரால் தீர்மானித்திருந்த இலக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இரண்டாவது இலக்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நாகசாகி நகரத்தை நோக்கி பாம்பர் விமானம் நகர்ந்தது. அமேரிக்க வான்படையின் B-29 Bock car காலை 10.58க்கு நாகஸாகியை அடைந்த போது, மீண்டும் மேக மூட்டம் காரணமாக கீழே எதுவும் தெரியவில்லை. மேகங்களுக்கிடையில் ஒரு கண இடைவெளி கிடைத்த போது, ஏற்கனவே இலக்காக தீர்மானிக்கபட்டிருந்த Mitsubishi Shipyardற்கு பதில் Mitsubishi Arms works கண்ணில் பட, அது இலக்காக உடனே தீர்மானிக்கப் பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'சின்ன பையனை' (Little boy) விட, நாகசாகியில் வீசப்பட்ட 'குண்டு மனிதன்' (Fat Man) பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. (ஆயிரக்கணக்கில் அப்பாவிகளை கொல்லப் போகிற ஒரு அணுகுண்டுக்கு சின்ன பையன், குண்டு மனிதன் என்று செல்லப் பெயர் வைப்பது என்ன வக்ர புத்தி என்று தோன்றக்கூடும்.வெளிப்படையான அணு ஆயுத போட்டியை பக்கத்து எதிரி நாட்டுடன் ஏற்படுத்தப் போகும் அணுகுண்டு சோதனைக்கு, 'புத்தர் சிரித்தார்' என்று மறைசொல் வைத்ததைப் போன்ற சமமான வக்ரமாக இதை பார்கலாம்.) வேலை முடிந்து, கிட்டதட்ட எரிபொருள் காலியாகும் நிலையில் ஒகினவா நோக்கி விமானம் விரைந்தது. சரியாக 11.02க்கு, 500மீட்டர் உயரத்தில் அணுகுண்டு வெடித்தது. வெடித்த நேரத்திலேயே, நாகசாகியின் புறப் பிரதேசமான உரகாமி (Urakami) பகுதியை கிட்டதட்ட முழுவதும் நாசம் செய்தது. குண்டு வெடித்த போது, விழுந்த இடத்தில் அருகே ஓடிகொண்டிருந்த ஆற்றில் ஆறு சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தார்களாம். அவர்களின் ஒரு எலும்பு, ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பு நாகசாகியின் இரண்டரை லட்சம் மக்கள் தொகையில் எழுபத்தைந்தாயிரம் பேரை உடனடியாய் அப்படியே காவு கொண்டது. அவர்கள் பாக்கியவான்கள்! இன்னொரு எழுபத்தைந்தாயிரம் மக்கள் காயமடைந்து (வெறுமே காயம் என்று சொல்வது அக்கிரமம்), கதிரியக்கத்தால் தோல் பிய்ந்து, உறுப்புகள் உருக்குலைந்து சாவதை விட கொடுமையாக துன்பப்பட்டு, சிறுக சாக வேண்டி வந்தது. இன்னும் அதே அளவு மக்கள் வெடிப்பின் கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டு சாக முடியாமல், இயற்கையாய் சாவு வந்து விடுதலை கிட்டுவதை எதிர்பார்த்திருக்கும் கொடூரத்தோடு வாழ வேண்டியிருந்தது. குண்டு வெடித்த இடத்திலிருந்து, இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் அனைவரும் எரிய வேண்டி வந்தது, நாலு கிலோ மீட்டர் வரை தீக்காயங்கள் இருந்தன. ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருந்த அனைத்து பொருள்களும் முழுவதுமாய் எரிக்கப்பட்டு, இரும்பு உருகி உருமாறி கற்கள் சிதைந்து, மூன்றில் ஒரு பங்கு நகரம் முற்றிலுமாக கருகி அழிந்தது. 1998இல் வாஜ்பாயின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியாவில், அதன் எதிர்வினையாய் சில நாட்களில் கழித்து பாகிஸ்தானிலும் மக்கள் தெருவுக்கு வந்து இனிப்பு வினியோகித்து ஆடி கொண்டாடியதை தொலைகாட்சியில் கண்ட, நாகசாகி வெடிப்பில் உயிர் பிழைத்து செத்துக்கொண்டிருக்கும் ஒருவர், கோபமாய் எழுதிய ஒரு கடித்தத்தை பல வருடங்கள் முன்பு இணையத்தில் வாசித்தேன். தேடி பார்பவர்களுக்கு ஒரு வேளை கிடைக்கலாம். மிகவும் உணர்ச்சியை கிளப்பும் கடிதம். 2004கின் ஜூலையில் ஜப்பானின் நான்கு தீவுகளில் ஒன்றான க்யூஷு தீவின் தலை நகரம் ஹகாடா/ஃபக்குவோக்காவிற்கு வேலை காரணமாய் சென்ற போது, ஒரு முழு நாள் சுற்றி பார்க்க கையில் இருந்தது. க்யூஷு தீவு முழுக்க இயற்கையின் அற்புதங்கள், எரிமலைகள் சூடான நீருற்றுகள் என்று எவ்வளவோ பார்க்க இருந்தும், நாகஸாகி செல்ல தீர்மானித்தேன். குண்டு வெடிப்பில் சிதிலமான ஒரு நகரை பார்க்க போவதில்லை, எல்லா ஜப்பானிய நகரை போன்ற ஒரு கலகலப்பான நகர்தான் காண கிடைக்கப் போகிறது என்று முன்னமே தெரிந்திருந்தாலும், வறலாற்று மற்றும் உணர்ச்சி பூர்வமான காரணங்களுக்காக செல்ல தீர்மானித்தேன். அதிகாலை எழுந்து இரண்டரை மணி நேரப் பயணத்தில் நாகஸாகியை அடைந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்து, நடைபாலம் தாண்டி, சுற்றுலா அலுவலகத்திற்கு சென்று, பரிந்துரைகள், வரைபடம், ட்ராமில் சுற்றுவதற்கு முழுநாள் பாஸ் வாங்கிகொண்டேன். முதலில் ட்ராமில் ஏறி குண்டு விழுந்த உரகாமி பகுதியை நோக்கி பயணப்பட்டேன். அமேரிக்காகாரன் அணுகுண்டு போடாமல் இருந்திருந்தால் கூட, நாகஸாகி ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒன்று. நூற்றாண்டுக் கணக்கில் வெளியே தொடர்பில்லாமல் ஒரு மூடுண்ட சமூகமாய் இருந்த ஜப்பானுக்கு, மேற்கின் நாகரீகம், குறிப்பாய் போர்துகீசு டச்சுகாரர்களுடன் தொடர்பு, வணிகம், நவீனம் கிருஸ்தவம் எல்லாமே நாகஸாகி வழியாகத்தான் வந்தது. சில நூறு ஆண்டுகள் முன்னாலேயே சிலர் கிருஸ்தவர்களாக மாறியும் இருந்தனர். குண்டு விழுந்த உரகாமி பகுதியில் கிருஸ்தவர்கள் அதிகம். அமேரிக்காகாரன் போட்ட அணுகுண்டு, தீர்மானித்திருந்த இலக்கை தவறவிட்டு, உரகாமி கதீட்ரல் மீதுதான் விழுந்தது. (இரவு ஆங்கிலம் தெரிந்த ஒரு ஜப்பானியருடன் மதுவருந்திக் கொண்டிருந்த போது சொன்னார்,"அமேரிக்காகாரன் விவரம் தெரியாமல் அவன் மீதே குண்டு போட்டுகொண்டான்".) 1500களிலேயே மேற்குடன் நாகஸாகி தொடர்பு வைத்திருந்தது. ஒரு பிரான்சிஸ் சேவியரும் வருகை தந்தார். கிருஸ்தவம் பரவத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, ஜப்பானிய அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டு, விசாரணைகளில் இறங்கியது. 1597இல் 26 ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய கிரிஸ்தவர்களை சிலுவையில் அறைந்தது. (இன்று அந்த 26 துறவிகளின் நினைவாக ஒரு சர்ச் நாகஸாகி நடுவில் உள்ளது.) சுற்றி வளைக்கப் பட்டு கிரிஸ்தவர்கள் சித்ரவதை, கொலை செய்யப்பட்டனர். வெளி நாட்டுக்காரர்களின் ஜப்பானிய மனைவிகளை நாடு கடத்தினர். ஸ்பானிஷ், போர்த்துகீசிய வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில் கிருஸ்தவர்கள் ஒரு கலகமோ புரட்சியோ எதோ ஒரு எழுச்சியை நிகழ்த்த முனைய, மொத்தமாய் கிருஸ்தவத்தின் வாழ்வே ஒரு முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகளாய் (ஜப்பானிய) கிரிஸ்தவர்கள் மிக ரகசியமாக கிருஸ்துவத்தை தங்களுக்குள் பேணி வந்தனர். மீண்டும் 18ஆம் நூற்றாண்டில் மேற்கிற்கும், நவீனத்திற்கும், கிரிஸ்தவத்தித்ற்கும் நாகசாகி கதவுகளை திறக்க, பொருளாதாரம் சிறந்து, முக்கிய கடற்கரை நகரமாய் வளர்ந்தது. 1945இல் அந்த ஒன்பதாம் தேதியில் நாகசாகியின் கப்பல் கட்டும் தொழிலை குறிவைத்தே பாம்பர் விமானம் வந்தது. இதையெல்லாம் படித்து கொண்டு, குண்டு விழுந்த உரகாமி பகுதிக்கு ட்ராம் வந்தவுடன் இறங்கி கொண்டேன். உரகாமி இன்று ஒரு வளமான, அமைதியான புறநகர் பகுதி. கதிரியக்க கழிவுகள் நீக்கப்பட்டு பாதுகாப்பான தொலைவுகளுக்கு சென்றுவிட, கடைகள், உணவகங்கள் என்று ஒரு இன்பத்தலமாக மாறியிருந்தது. குண்டு விழுந்த ஹைபோ செண்டர் பகுதிக்கு அருகிலேயே ஆர்பாட்டமான விடுதிகள். மொத்தத்தில் ஒரு ஐம்பது ஆண்டுகள் முன்பு அணுகுண்டால் நிகழ்ந்த பேரழிவை, கற்பனை தவிர, வேறு எதைகொண்டும் உணர முடியாத நிலை. ஹிரோஷிமாவில் இடிபாடுகள் கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வைத்திருப்பதாக நண்பன் சொன்னான். நாகசாகியில் எதுவுமே இல்லை. குண்டு விழுந்த இடத்தினருகில் இருந்த நதியின் சிமெண்டுக் கரையில், பல் வேறு உணர்ச்சிகளுக்கிடையில் வெயிலில் தனியாக நடந்தேன். வெடிப்பின் சிதிலமாக எதோ ஒன்று சுற்றுசுவரில் கண்ணாடி பகுதிக்கு பின்னே இருப்பதாக எழுதியிருந்தது. கதிரியக்கம் இருக்கலாம் என்று எச்சரித்திருந்தது. கண்ணை இடுக்கி பார்த்தும், ஒரு காம்பவுண்டு சுவர் இடிந்தது போல ஏதோ மங்கலாக (உள்ளே இருட்டு, கண்ணடியில் சூரிய பிரதிபலிப்பு வேறு) தெரிந்தது. நதிவழியே நடந்து விட்டு, சூப்பர் அங்காடியில் சாப்பாட்டை வாங்கி கொண்டு, குண்டு 500 மீட்டர் உயரத்தில் 50 ஆண்டுகள் முன்னால் விழுந்த, ஹைபோ செண்டர் பூங்காவிற்கு வந்தேன். எதிரில் ஜப்பான் என்ற குழந்தை 50 ஆண்டுகாலம் முந்தய வெடிப்பழிவிலிருந்து எழுந்து வருவதை உருவகிக்கும் படி எழுப்பப்பட்ட ஒரு சிலை. கையில் குழந்தையுடன் பிரமாண்டமான பெண் சிலை. பூங்காவின் ஒரு பக்கத்தில் குண்டு வெடிப்பில் கிட்டதட்ட அழிந்து போன கதீட்ரலின் மீதமிருக்கும் ஒரே ஒரு கற்சுவர். மற்றபடி கதிரியக்க பிரச்சனை எதுவுமில்லாமல் தாராளமாய் கிளைபரப்பியிருந்த மரங்கள். ஒரு பெஞ்சில் அமர்ந்து உண்ண தொடங்கினேன். எனது பக்கத்து பெஞ்சில் கொரியர் ஒருவர் பகல் தூக்கத்தில் இருந்தார்.தூரத்தில் மெலிதாக ஒரு ட்ரம் சத்தம் கேட்டது. அதை ட்ரம் என்று சொல்லமுடியாது, வேறு என்ன சொல்லலாம என்று தெரியாததால் ட்ரம் என்கிறேன். நம்ம ஊர் தப்பட்டை போன்ற தோல் வாத்தியம், அதில் (மௌன ஊர்வலத்தின் ஆரம்பத்தில் ஒருவர் பெரிய ட்ரம் ஒன்றை அடித்து கொண்டு போக பயன்படுத்துவாரே அந்த) குச்சி ஒன்றால் சீராக அடித்த படி, ஒரு ஷிண்டோ மதகுரு அணிவகுப்பிற்கே உரிய மிக சீரான நடையோடு நடந்து வந்தார். ஒரு கால் பின் தொடர, ஒரு கால் நடனத்தின் லாவகத்துடன் தரையை தொட்டும் தொடாமல் ஒரு அடி சென்று பாதத்தை முன்னால் வைத்தது. பூங்காவின் நடுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட, தினமும் நடந்து பழகிப்போன பாதையில், அவர் ட்ரம் சத்தத்துடன் நடந்து, குறிப்பிட்ட புள்ளியில் மீண்டும் அணுவகுப்பின் லாவகத்துடன் செங்கோணத்தில் திரும்பி, நட்ட நடு பூங்காவில் தியானிக்கும் மௌனத்தை அரை நிமிடம் காட்டி விட்டு, அதே ட்ரம் சத்தம் கலந்த நடையுடன் பூங்காவை விட்டு மெதுவாக அகன்றார். பல வருடங்களாக அவர் அந்த வேலையை தினமும் செய்து வந்துகொண்டிருக்க வேண்டும். இந்த ஒரு நிகழ்வு என் உணர்வுகளை முற்றிலும் மாற்றிவிட்டது. சாப்பிட பிடிக்கவில்லை. நடக்க வேண்டிய தொலைவுகளை நினைத்து சாப்பிடாமல் இருக்க முடியாது. உணர்வை மாற்ற இந்தியாவில் இருந்த இணையுடன் பேசிவிட்டு, ஒரு வழியாய் உணவை முடித்து பூங்காவை விட்டு கிளம்பினேன். ஹைபோசெண்டர் பூங்காவின் ஒரு பக்கத்தில், அமைதி பூங்கா, ஒன்று அதில் ஒரு அமைதிக்கான சிலை வானத்தை நோக்கி கைகாட்டியபடி.. குண்டு விழுந்த போது இந்த இடத்தில் ஒரு சிறைச்சாலை இருந்தது. கைதிகள், வார்டன் பாகுபாடின்றி ஒருவர் கூட மிஞ்சவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை. குண்டு வெடிப்புக்கு முன்னான உரகாமி கதீட்ரலை வேறு ஒரு இடத்தில் மறுநிர்மாணம் செய்திருந்தார்கள். நான் உள்ளே போகவில்லை. குண்டு வெடிப்பின் அழிவு அடையாளங்களை எல்லாம் முற்றாக அழித்து புதிதாய் ஆக்கி விட்டதால், அதை உணர ஒரு அணுகுண்டு மியூசியம் ஒன்றை 1996இல் திறந்து வைத்திருந்தார்கள். உள்ளே போனால் நரகம் எப்படியிருக்கும் என்பதை உருவகிக்க முடியும். ஆனால் செயற்கையான வகையில் காட்சிபெட்டிகள் அலர, வெடிப்பில் பிழைத்தவர்கள் ஜப்பனிய மொழியில் பேசிக்கொண்டிருக்க ஒரே குழப்பமாக இருந்தது. குண்டு வெடித்து உருக்குலைந்து, அக்கணமே நின்று போய் 11.02 காட்டிக் கொண்டிருக்கும் ஒரு கடிகாரம், எவ்வாறு பீங்கான்கள், நாணயங்கள் இதர பொருட்கள் உருமாறின என்று வரிசையாய் ஒரு மியூசியத்துக்கே உரிய பொருட்கள். மேலும் படங்கள் கதிரியக்க பாதிப்புடன் வாழ்ந்தவர்களின் பட தொகுப்புகள். பல படங்களை ஏற்கனவே பார்த்து விட்டதால் நாகசாகி போய் பார்த்து வந்த புதிய உணர்வை அவை ஏற்படுத்தவில்லை. என்னை மிகவும் பாதித்தது இரண்டு விஷயங்கள். ஒன்று ஒரு ஜப்பானிய குடும்பம். அம்மா, அப்பா இருவருமே குண்டு வெடிப்பின் தீவிரம் தாக்காத நாகசாகியின் புறநகர் பகுதியில் வேலைக்கு சென்றிருக்க, அவர்களது இரண்டு சிறுவர்கள் மட்டும் வீட்டில் இருந்தனர். குண்டு வெடித்த பின், நாம் கற்பனை செய்யக்கூடிய பதைபதைப்புடன், வீட்டிற்கு வந்து பார்தால் அவர்களால் தங்கள் குழந்தைகள் அங்கே இருந்ததற்கான எந்த தடயத்தையும் காணமுடியவில்லை. எலும்புகள், உடைகள் அணிகலன் காலணி என்று அவர்கள் இருந்ததற்கான எந்த தடயமும் அங்கில்லை. அவர்கள் இருந்திருக்க வேண்டிய இடத்தில் (ம்யூசியத்தில் வைக்கப்பட்டிருந்த வித்தியாசமான வடிவிலான) ஒரு கல் மட்டும் இருந்தது - குண்டு வெடிப்பின் அதிவெப்பத்தில் நடந்த எக்குதப்பான மாற்றங்களில் குழந்தைகள் அந்த கல்லாக உருமாறி சுருங்கி விட்டது போல். வெகு நாட்களுக்கு அவர்கள் அந்த கல்லையே தங்கள் குழந்தைகளாக கருதி, பத்திரப் படுத்தி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அணு குண்டு காட்சியகத்தை கட்டியவர்கள், இதை கேள்விபட்டு அவர்களை அணுக, தங்கள் கடைசி காலத்தில் அந்த கல்லை இங்கே ஒப்படைத்திருக்கிறார்கள். உணர்வு பூர்வமாய் பாதித்த விஷயம் இது. இரண்டாவது அரசியல் பூர்வமாகவும் பாதித்தது. அமைதி பூங்காவிலிருந்து அணு குண்டு காட்சியகத்திற்கு செல்லும் வழியில் எகப்பட்ட நினைவு கற்கள். அதில் ஒன்று குண்டு விழுந்த சமயம், நாகசாகியில் ஒப்பந்த தொழிலாளர்களாக கொண்டு வரப்பட்டு, இறந்து போயிருந்த கொரிய மக்களுக்கானது. ஜாப்பான் நாடு கடந்த ஐநூறு வருடங்களில் அண்டை நாடுகளான சீனா, கொரியாவின் மீது நடத்திய வன்முறை வெறியாட்டம், உலகின் மற்ற எந்த ஆதிக்க நாடுகளினுடையதை விட குறைவானதல்ல. அதில் ஒரு உதாரணமாக நாகசாகியில் கொண்டு வரப்பட்டிருந்த கொரியர்கள். இதில் மற்ற நாடுகளிடமிருந்து ஜப்பான் வேறுபடும் இடம், தனது தவறுகளை பட்டியலிட்டு அதற்காக ஜப்பான் கேட்கும், இன்று வரை தொடர்ந்து கேட்டு வரும் மன்னிப்புகள். ஜப்பானிய பிரதமரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் கொரியாவிடம் இதற்கு மன்னிப்பு கேட்கிறார். அந்த நினைவு கல்லில் விரிவாக ஜப்பான் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு, கொரிய மக்கள் அனைவரிடமும் ஜப்பான் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இனி ஒரு முறை இது எங்கும் நடைபெறக்கூடாது என்று உலக சமுதாயத்திடன் வேண்டி கேட்டுகொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது. அட்டூழியம் செய்து விட்டு மன்னிப்பு கேட்பது பெரிய விஷயமா என்று தோன்றலாம். பல நவீன கருத்தாக்கங்கள், சகிப்பு தன்மை/பரந்த மனப்பான்மையை முன்வைத்த - குறிப்பாக தேசியத்தை ஒரு நோயாக அணுகும் பார்வைகள் - உலக போர்களுக்கு பின்னால், அதன் பேரழிவை தரிசித்த பிறகு ஏற்பட்டது. ஜப்பான் நிகழ்தியது வன்முறைகள் உலகப்போர்களின் போது, உலகமே தொழில்நுட்ப காட்டுமிராண்டிகளாக இருந்த நேரம். ஆனால் அமேரிக்கா போன்ற நாடு, கடந்த ஐம்பது வருடங்களில் தங்களால் நிகழ்த்தப் பட்ட எந்த பயங்கரவாதத்திற்காவது குறைந்த பட்ச வருத்தமாவது தெரிவிக்குமா என்று பார்க்க வேண்டும். அதற்கு பிறகுதான் நேடிவ் இந்தியர்கள் என்று அழைக்கப்படும் செவ்விந்தியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு பற்றி கேள்வி கேட்க முடியும். அமேரிக்காவை விடுவோம். இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக செய்த பல வன்கொடுமைக்ளுக்கு தலித்களிடம் மன்னிப்பு கேட்கும் பண்பு ஆதிக்க ஜாதி சமூகங்களிடம் இருக்கிறதா? இடவொதுக்கீடு பற்றி என்னவும் கருத்து இருக்கட்டும். அதற்கு இவர்கள் முன்வைக்கும் வாதங்களை பாருங்கள். பல்லாயிரம் ஆண்டுகளாக கொழுத்ததன் குற்ற உணர்வு எங்காவது தெரிகிறதா? இன்று ஆதிவாசிகள் சமூகம் மீது நாம் நடத்தி வரும் வறலாறு காணாத வன்முறைகளை நியாயப்படுத்துவதிலும், பொய்யான அயோக்கியத்தனமான வாதங்களை முன்வைப்பதிலும் என்ன ஒரு கொடுரமான இந்திய உயர்தர வர்கத்தின் முகம் வெளிப்படுகிறது! காலகாலமாய் தங்கள் வாழ்ந்து வந்த நிலத்தை விட்டு ஒரு பெரும் சமூகத்தை வெளியேற்றுவதிலும், அவர்களுக்கான 'மறுவாழ்வு' (அதுவே வன்முறை நிறைந்தது என்பது ஒருபுறமிருக்க, அதை) பற்றி பேசுபவர்களை கூட தேசதுரோகிகாளாக சித்தரிக்கும் சகிப்புதன்மையற்ற சமூகமாக நாம் இருக்கிறோம். இதில் ஜப்பானிய அரசாங்கமும் சமூகமும் தங்கள் வறலாற்று குற்றத்திற்காக மன்னிப்பு கேட்பதை பார்த்து உணர்வு கொள்ளாமல் இருக்க இயலுமா! (சீனா தன் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைக்கு கூட மன்னிப்பு கேட்காது என்பதும் ஒரு விஷயம்.) தகாஷி நகாய் என்று ஒரு மருத்துவர்; அவரும் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்;நாகசாகியை விட்டு வெளியேறாமல் கதிரியக்கத்தால் பதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கவே தன் வாழ்க்கையை அர்பணித்தவர். ஆனால் வெடிகுண்டின் பிற்கால விளைவுகளால் பாதிக்கப்பட்டு 51இல் இறந்து போனார்.அவர் வாழ்ந்த குடிசை அவரின் நினைவிடமாக பராமரிக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து முடித்த போது மதியம் நன்றாக தாண்டியிருந்தது. அதற்கு பிறகு கிளம்பி ஒரு கனோனின் (புத்தர் காளி) கோவில், ஒரு கன்ஃப்யூஷியஸ் தலம், க்ளோவர் என்ற ஒரு டச்சுகாரன் ஒரு பிரபுவாய் வாழ்ந்து பராமரித்திருந்த, மலைமீதான க்ளோவர் தோட்டம் எல்லாம் பார்த்து, மையநகரத்தில் அலைந்து இரவு ஜப்பானிய பாரில் நாகசாகிக்கே உரித்தான குறிப்பிட்ட ஷஷீமி மீன் உட்ப்பட்ட ஒரு பெரும் மீன் உணவை பீர், சாகேயுடன் உள்ளே தள்ளிவிட்டு, காடைசி ரயிலை பிடித்து ஹகாதாவை பின்னிரவில் அடைந்த போது காலையிலிருந்த உணர்வுகள் முற்றிலும் மாறிவிட்டது. |
17 Comments:
படங்களை ஏற்றினால் அப்லோட் ஆகமாட்டேனென்கிறது. (படங்களுக்கான ஐகானை அழுத்தி வரும் திரையில் அப்ல்லொட் செய்தால், எல்லாம் முடிந்து done என்கிறது. ஆனால் படம் ஏறவில்லை.) Bளாகரில்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால், யோசனை இருந்தால் சொல்லவும். நன்றி. முடிந்தால் நாளை!
இன்று ரொம்பவே கண்ணை இழுக்கிறது. நாளை வலைப்பதிவிற்கு லீவு போடலாம என்று யோசிக்கிறேன்.
//1998இல் வாஜ்பாயின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து இந்தியாவில், அதன் எதிர்வினையாய் சில நாட்களில் கழித்து பாகிஸ்தானிலும் மக்கள் தெருவுக்கு வந்து இனிப்பு வினியோகித்து ஆடி கொண்டாடியதை தொலைகாட்சியில் கண்ட, நாகசாகி வெடிப்பில் உயிர் பிழைத்து செத்துக்கொண்டிருக்கும் ஒருவர், கோபமாய் எழுதிய ஒரு கடித்தத்தை பல வருடங்கள் முன்பு இணையத்தில் வாசித்தேன். //
வாஸ்த்தவம் தான். அவரின் கோபம் 100/100 நியாயமானது. ஆனால், அதற்காக எதுவும் செய்யாமல் தேமே என்று உட்கார்ந்திருக்க முடியாதே. போர் போன்ற தீமையை, அதன் வழியில் சென்று தான் வெல்ல வேண்டுமே தவிற, அதை தவிர்த்து அல்ல.
//போர் போன்ற தீமையை, அதன் வழியில் சென்று தான் வெல்ல வேண்டுமே தவிற, //
எப்படி ஒரு போருக்கான எல்லா தூண்டுதல்களையும், ஆயத்தங்களையும் செய்தா? அணுகுண்டு மட்டுமில்லாது, ஏவுகனைகளிலும் இந்தியா முதலில் செய்து, பாகிஸ்தானையும் பதிலுக்கு செய்யும் கட்டாயத்தில் ஆழ்தியது. (மற்ற விஷயத்தில் பாஜிஸ்தான் என்ன செய்திருந்தாலும் இந்த் விசயத்தில் இந்தியாதான் முதலில் தூண்டியது..) அது போரை தடுக்கும் முயற்ச்சி, தற்பாதுகாப்பு என்று 8 வருஷமாய் குரல் வந்து கொண்டிருக்கிறது.
//எப்படி ஒரு போருக்கான எல்லா தூண்டுதல்களையும், ஆயத்தங்களையும் செய்தா?//
போரில் எனக்கும் உடண்பாடில்லைதான். அதற்காக எதிரி அடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருப்பது இயலாது. ஒரு பேச்சுக்கு, நம்மை பார்த்து பாகிஸ்தானும் ஏவுகனை சோதனை நடத்தி, இருவரின் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை போட்டால், பாதிப்பு நம்மை விட பாகிஸ்தானை ரொம்ப பாதிக்கும். அதனால் நமக்கு எதிரான அதன் செயல்பாடுகளை சற்றெனும் முடக்கலாமென்ற ராஜதந்திர நடவடிக்கையாகவும் இருக்கலாம் இல்லையா?
//ஆயிரக்கணக்கில் அப்பாவிகளை கொல்லப் போகிற ஒரு அணுகுண்டுக்கு சின்ன பையன், குண்டு மனிதன் என்று செல்லப் பெயர் வைப்பது //
அந்த பெயர்கள் முறையே அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ஆகியவர்களை குறித்து வைக்கப்பட்டது என்று கேள்விபட்டிருக்கிறேன் ('Little Boy’ - Roosevelt who suffered from Polio. The original name was Thin Man which was later changed to Little boy; 'Fat Man' - Churchill who was fat)
///படங்களை ஏற்றினால் அப்லோட் ஆகமாட்டேனென்கிறது. (படங்களுக்கான ஐகானை அழுத்தி வரும் திரையில் அப்ல்லொட் செய்தால், எல்லாம் முடிந்து done என்கிறது. ஆனால் படம் ஏறவில்லை.) Bளாகரில்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். யாருக்காவது தெரிந்தால், யோசனை இருந்தால் சொல்லவும். ////
ரோசா,
பதிவை உள்ளிடும்போது "Edit Html" பெட்டி வழி உள்ளிட்டால் இந்த பிரச்சனை உள்ளது. எனவே "Compose" பெட்டியை தேர்ந்தெடுத்து அங்கு படங்களை உள்ளிட்டால் இந்த பிரச்சினை வராது.
http://karthikramas.blogspot.com/2006/05/eyewitnesses-to-hiroshima-and-nagasaki.html
Many Thanks for this post.
---
Regarding posting images:
1. if the image is hi-res, please reduce the picture quality/bring down the total size of the file. Blogger has issues with big pictures.
2. Sometimes, they might have been uploaded; but not transferred to the blog post window --> Try saving the post as draft and open it again to see the URLs listed inside.
3. Create a new post and try posting the lower quality images; save them as draft; and then publish it as a separate picture post.
4. Try using Picasa to post the images.
4. Avoid blogger for posting images. Either use photobucket.com (it boasts 5% of total web traffic) or yahoo's Flickr.com. Webshots.com might also satisfy your needs.
---
Again, my sincere thanks for this Japan experience sharing narration.
ரோசா வச்ந்த், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.
பாகிஸ்தான் ஒன்றும் தெரியாத பாப்பா நாம் அணுகுண்டு/ ஏவுகணைகள் செய்து அவர்களையும் நிர்பந்த படுத்திவிட்டோம். தவறு நம் மீது தான் என்றா?
ஆ.. அருமயான சித்தாந்தம்....
நகரேஷு காஞ்சி என்பது போல் நாடேஷு ஜப்பான் என்று பலர் சொல்வதைக் கேட்டுக் கேட்டு சின்ன வயசில் கடுப்பானதுண்டு. எதற்கெடுத்தாலும் 'ஜப்பான்காரன்...' என்று ஆரம்பிப்பது ஆயாசத்தை அளிக்கும். ஆயினும், இப்பொழுது ஒரு முறை ஜப்பான் போய் வந்த பிறகும், சுற்றுச்சூழல், அணுஆயுத எதிர்ப்பு, மற்றும் தொழில் நுட்பம் ஆகிய பலவற்றில் அந்நாடு முன்னிலையில் இருப்பதைப் பார்க்கும் போதும் அந்நாட்டின் மீது என்னிடத்தில் மிகுந்த மரியாதை உண்டாகி இருக்கிறது. மதம், கலாசாரத் தொன்மை, நவீன வாழ்க்கை, ஜனநாயக அரசியல் ஆகிய அனைத்துடனும் அவர்கள் வெற்றிகரமாக சமரசம் செய்து கொண்டிருப்பது போல் (குறைந்தபட்சம் வெளியிலிருந்து பார்க்கும் போது) தோற்றமளிக்கிறது.
மன்னிப்புக் கோருதல் பற்றி நீங்கள் சொல்வது மிகவும் சரி. என்றாவது ஒரு நாள் அமெரிக்கா அவ்வாறு செய்யும் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. To paraphrase George Orwell, Americans have worn the masks of hollow, self-righteous pride, and their faces have grown to fit their masks.
குறிப்பு: வரலாறு என்ற வார்த்தையைத் தொடர்ந்து தவறாக 'வறலாறு' என்று எழுதி வருகிறீர்கள். தயவு செய்து திருத்திக் கொள்ளவும்.
நன்றி ரோசா வசந்த்..
பயணக் கட்டுரை போலத் தெரியும் அரசியல் பத்தி.. காலையில் இருந்து பெற்ற உணர்வுகளில் இருந்து மீள்வதற்கான இரவு நேரத் தீர்வு? நம்பிக்கைகளுக்கும் செயல்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியை உணர்ந்து தன்னை மறக்க ஓர் வழி?
நல்ல பதிவு.. நன்றி..
//எப்படி ஒரு போருக்கான எல்லா தூண்டுதல்களையும், ஆயத்தங்களையும் செய்தா? அணுகுண்டு மட்டுமில்லாது, ஏவுகனைகளிலும் இந்தியா முதலில் செய்து, பாகிஸ்தானையும் பதிலுக்கு செய்யும் கட்டாயத்தில் ஆழ்தியது. //
அப்ப நாம எப்பவும் எதிர்வினையாக தான் செயல்படனும் என்று சொல்கிறீர்களா? பாக்கிஸ்தானை விடுங்க, சீனாக்காரன் நம்மை விட ஆயுத பலத்தில் எங்கோ போய்விட்டான். சீக்கிரம் நாம் பலமடைய வேண்டும். (சீனாவின் பலத்துக்கு எதிர்வினை).
You took me to Japan and Nagasaki.
1. சீனாவை மறந்துவிட்டீர்கள்.
2. நேற்று அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 370 மில்லியன் டாலர்
பெறுமானத்திற்கு ஏவுகணகள் விற்கப்போவதாக செய்தி வந்தது
Boeingக்கு விற்பனை குறைந்துவிட்டதாம் :(
காலையில் பதில் எழுத நேரமில்லை. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாய் படம் ஏற்றுவது பற்றி தகவல் தந்த சோழநாடன், பாஸ்டன் பாலாஜிக்கு.
ஸ்ரீகாந்த், திருத்திகொண்டேன் இனி.
நேசக்குமார் எழுதியதற்கு தனிப்பதிவாகத்தான் பதில் தரவேண்டும்.
//1. சீனாவை மறந்துவிட்டீர்கள்.//
ஆதிரை, எந்த விஷயத்தில், இந்தியாவிற்கு அணு ஆயுத போட்டியிலா? மற்றவை பிறகு.
ஆம்
Post a Comment
<< Home