![]() | ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | ||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Friday, June 02, 2006Bonjour!![]() கிட்டதட்ட அதே போன்ற உணர்வு, இந்தியாவை விட்டு முதன் முதலாக பிரான்ஸில் வாழ நேர்ந்த போது எனக்குள் தோன்றியது. பெரியாருடன் இப்படி அல்பத்தனமாக என்னை ஒப்பிட்டு கொள்வதற்கு தீவிர பெரியாரியர்கள் மன்னிக்கவும். பெரியார் ரஷ்யா சென்று வந்த பிறகான 40 வருட இயக்கத்தில், சில இடங்களில் சோவியத் அமைப்பு, அவர் சந்தித்த ஸ்டாலின் பற்றி சின்ன விமர்சனங்களை பெரியார் வைத்திருந்தாலும், சோவியத்தின் சமூக அமைப்பு அதன் மக்கள் மீது செலுத்திய (இப்போது வறலாற்றில் இடம்பெற்றுவிட்ட) வன்முறை, படுகொலைகளை பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. பொதுவுடமை அமைப்பு என்பதாக முயற்சி செய்யப்பட்ட அனைத்துமே (பேசப்பட்டது அல்ல), பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் கிடைக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகள் கூட இல்லாத ஸ்டாலினிச அமைப்புகளாகவே, உண்மையில் விளங்கிய யதார்த்தம் தாக்க, நம்பிக்கை தரகூடிய சமூக அமைப்பு என்று எதுவுமே கண்ணில் படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ![]() அந்த காலகட்டத்தில் என்னை சுற்றியிருந்த சூழல் காரணமாக, குறிப்பாக வட இந்திய வெறியை எதிர்கொள்வதை, சாதிய பேச்சுக்களை/சாதிய யதார்தத்தை காண நேருவதில், அன்றாட வாழ்வின் அளவுக்கு மீறிய ஹிபாக்ரசியை நானும் பூசிகொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்து இருந்து விடுதலை பெற்று, இந்தியாவை விட்டு எங்காவது போய் இருக்க மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டிருந்த நேரம். (பெரியாருக்கும் ரஷ்யாவை பார்ப்பதற்கு முன்னால் இப்படி ஒரு பெரிய ஏக்கம் இருந்திருக்கத்தானே செய்திருக்கும்.) பிரான்சை போல இந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் இடம் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்த நான் சொல்ல விரும்பும் பல விஷயங்களை சாருநிவேதிதா எனக்கு முன்னால் தனது பாணியில், ஜெர்மனியுடன் பிரான்சை ஒப்பிட்டு சொல்லியிருக்கிறார். (பார்க்க 1. , 2. ) ![]() இந்தியாவிலிருந்து மேற்கே போய் ஸெட்டிலான 'மேல்'ஜாதிகாரர்கள், மேற்கில் ரேசிசத்தை எதிர்கொள்வது பற்றி பேசுவதை போன்ற ஸிக் ஜோக் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவர்களிடம் கொஞ்சநேரம் பேசினால் மிக மோசமான ஜாதிய உளவியலை கொண்டிருப்பதை காணலாம். (நாம் பொதுவாய் சந்திக்க கூடிய பெரும் விழுக்காடை பற்றி பேசுகிறேனே ஒழிய எல்லோரையும் இல்ல்லீங்க!) நான் பிரான்ஸில் இருந்த ஒரு வருடத்தில் ஒரு இடத்தில் கூட அரேபியர்களை பற்றி கருப்பர்களை பற்றி ஒரு பிரஞ்சுக்காரன் தவறாக கதைத்து கேட்டது கிடையாது. ஆனால் பாண்டிச்சேரி தமிழர்களிடமும், ஈழத்தமிழர்களிடமும் மிக சாதாரணமாக, அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேட்கலாம். (பாண்டிச்சேரி தமிழர்கள் ஈழத்தமிழர்கள் பற்றியும் கூட மோசமான கமெண்டுகளை வைக்க கூடியவர்கள். அந்த விஷயத்தில் மட்டும் ஈழதமிழர்கள் பாண்டி தமிழர்களிடமிருந்து வித்தியாசப்படுவர்.) ![]() பிரான்ஸ் மட்டுமில்லாது பொதுவாய் மேற்கில் 'பொலிடிகலி கரெக்ட்' என்ற ஒரு வார்த்தையும் அடிக்கடி பயன்படுத்த படுவதையும், அது குறித்து விவாதிக்க படுவதையும், சிலவற்றை பேசுவது 'பொலிடிகலி நாட் கரெக்ட்' என்று கூறுவதையும் காணமுடியும். நமது சூழலில் (உதாரணமாய் திண்ணையில் மஞ்சுளா நவனீதன் ஒரு கட்டுரையில்) இந்த பொலிடிகலி கரெக்ட் என்று பேசுவதே வன்முறை என்பதாக குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ![]() யாருக்கும் எந்த வித குத்தல் இல்லாமல் நம் ஊர் எல்லாவகை ஊடகத்திலும் இந்த ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்கள் வருகிறது. கருப்பாய் இருப்பதை கேவலப்படுத்தியும் சிவப்பழகு பற்றியும் இங்கே எந்த கவலையும் இல்லாமல் பேசுவது போல் பிரான்சில் பேசுவது சாத்தியமே இல்லை. வழக்கு தொடுக்கப்பட்டு விளம்பரம் தடை செய்யப்படும். சோபாசக்தி சிலருடன் சேர்ந்து, ஈழதமிழ் பத்திரிகைகளில் ஜாதி குறிப்பிட்டு, ஜாதிவாரியாக தேர்வு செய்யும் திருமண விளம்பரங்களை தடை செய்ய முயற்சித்து கொண்டிருந்தார். (அதில் ஒரே ஒரு சிக்கல். சாதி பேசுவது இனவாதம் என்பதை நிறுவ வேண்டும்.) என் இணை, 80 விழுக்காடுக்கும் மேல் மக்கள் கருப்பாய் இருக்கும் தமிழகத்தில், கருப்பாய் இருப்பதால் பள்ளிநாட்களில் தான் அனுபவித்த பாகுபாடுகளை பற்றி சொல்வார். அதை எங்களின் பிரான்ஸ் அனுபவத்துடன் ஒப்பிடும்போது, எனக்கு பிரான்ஸ் சொர்கமாக தெரிந்தது. பலமுறை இதை பற்றி பேசும் போது சோபாசக்தி சொன்னால் ஒப்புகொள்ள மாட்டார். அரசு வன்முறை, அரேபியர்கள் கருப்பர்கள் மீதான ஒதுக்கம் என்று பலதை அவரால் அடுக்க முடியும். நான் சொல்வதெல்லாம் மிக எளிது. பிரான்ஸில் செட்டிலாக பின், இந்த வெள்ளை ஆதிக்கம் மற்ற விடுதலை அரசியல்களை பற்றி வசதியாய் பேசலாம். தவிர பிரான்சின் கலை அரசியல் சூழல் பற்றி பேசவும் வேண்டுமோ! எல்லாவற்ரையும் கலாபூர்வமாக அவர்களால்தான் செய்ய முடியும். கலைத்துவமாய் இருக்கும் பாரிஸ், அதே நேரம் எல்லா காலம்களிலும் ஏதாவது ஒரு அரசியல் உணர்வுடன் அலையும். எனக்கு பிரான்ஸை விட்டு கிளம்பியே ஆக வேண்டும் என்ற நிலை வந்த போது அழுகையே வந்துவிட்டது. அப்போது 'கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்திருந்த நேரம். ஒவ்வொரு காலகட்டத்தின் ஞாபகங்களை, பின்னர் நனவிடை தோய, சினிமா பாட்டின் இசை இடுக்குகளின் வைப்பது நம் வழக்கம். எனக்கு 'விடை கொடு எங்கள் நாடே' என்ற பாடல் பிரான்ஸை விட்டு வெளியேறுவதையே நினைவுபடுத்தும். |
9 Comments:
படங்கள் நான் எடுத்தது இல்லை. இணையத்திலிருந்து இப்போது இறக்கியது. பிரான்சில் இருந்த போது டிஜிட்டல் கேமரா வாங்கும் அளவிற்கு வசதியில்லை. அனலாக் கேமராவில் எடுத்தவற்றை வேலையிடத்தில் ஸ்கேன் செய்யும் அளவிற்கு பொறுமை இல்லை.
வச்ந்த, இந்தக்கட்டுரை சில முக்கிய புள்ளிகளைக் குறிப்பிடுகின்றது என்றாலும் எந்தள்வுக்கு நீங்கள் கூறும் 'வெள்ளைத்திமிர்' இனத்துவேசத்தை எளிதாக கடந்துவிடமுடியும் என்றும் தெரியவில்லை. அண்மையில் பாரிஸில் நடந்த/நடக்கும் கலவரங்களையும், பிரான்ஸ் உயர் அமைச்சர் ஒருவர் அந்தசமயம் எப்படி 'திருவாய்' மலர்ந்தார் என்பதையும் நீங்கள் அறிந்திருக்கூடும் (கிட்டத்தட்ட இதேமாதிரி இங்கேயும் சில அமைச்சர்கள் இனவாதக்கருத்துக்களைக் கூறுவதும் விடயங்கள் பெரிதாகும்போது மன்னிப்புக்கேட்பதும் நடந்துகொண்டுதானிருக்கின்றது) நீங்கள் குறிப்பிடும் 'வெளிப்படையாக' கூறும் தன்மை குறைவு என்பதை ஒத்துக்கொண்டாலும், இனத்துவேசத்தை வேறுவிதமான நுண்ணரசியலால் பயன்படுத்துகின்றார்கள் என்பதே உண்மை (சிலவேளைகளில் வெளிப்படையாகக் கூறும்போது சட்டத்தின் உதவியை நாடக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணமாயிருக்கக்கூடும்) சில தினங்களுக்கு முன் ஒரு நண்பர் சேரனின் கவிதையொன்றைப் பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தார். அந்தக்கவிதையில், ஒரு விளிம்பு நிலை மனிதனாயிருக்கும் வீடற்ற மனிதன்கூட, அவனுக்கு காசு போடவில்லை என்பதற்காய், F*** you paki என்று திட்டுவதாய் எழுதப்பட்டிருக்கும். அந்தக் கவிதையை விதந்து தனது அனுபவங்களுடன் சேர்த்துப்பார்க்கும் நண்பரிடம், எனக்கு அப்படி நடக்கவில்லை அப்படி சொல்லக்கூடாது என்று சொல்வதுகூட ஒருவித வன்முறைதானே. கிட்டத்தட்ட அந்தத் தொனிதான் உங்கள் பதிவில் துலங்குவதாய்த் தெரிகிறது. அதேசமயம் சாதி மனோபாவம் போல எங்கள் சமூகத்தில் இருக்கும் இனத்துவேசம் குறித்து நீங்கள் கூறும் புள்ளிகளுடன் ஒத்துப்போகின்றேன்.
...
மற்றும் இவ்வாறான இனத்துவேசங்களுக்கு எதிராய் தீவிரமாய் ஈடுபடும் நண்பர்களில் வெள்ளைத்தோல் உடையவர்கள் கணிசமாய் இருக்கின்றார்கள் என்பதையோ, தங்களுக்குச் சிறிதும் தொடர்பில்லாத மூன்றாம் உலக நாட்டுப்பிரச்சினைகளுக்குக்கூட நேர்மையாக குரல் கொடுப்பவர்களும் இவர்களில்தான் பலர் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். விமரசங்களைத்தாண்டி, பன்முகத்தன்மையும் பல்கலாச்சாரத் தன்மையையைச் சகித்துக்கொள்ளும் நாட்டு மக்கள் என்றளவில் பிரான்ஸ், கனடா, மற்றும் சில ஸ்காண்டிநேவிய நாடுகள வாழ்வதற்கு அருமையான இடங்கள்தான்.
//இந்தியாவிலிருந்து மேற்கே போய் ஸெட்டிலான 'மேல்'ஜாதிகாரர்கள், மேற்கில் ரேசிசத்தை எதிர்கொள்வது பற்றி பேசுவதை போன்ற ஸிக் ஜோக் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.//
ரொம்பவும் உண்மை. இதைப் பார்க்கும் போது, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் போது வெள்ளைக்காரர்களை இந்திய மேல்சாதி எப்படி எதிர்கொண்டிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
மற்றபடி உங்கள் பதிவிலிருக்கும் பல விஷயங்கள் அமெரிக்காவிற்கும் பொருந்தும். நியூயார்க் நகரம் பாரிஸை விட ஒரு order of magnitude அதிகம் பன்முகத்தன்மை கொண்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
//ஒவ்வொரு காலகட்டத்தின் ஞாபகங்களை, பின்னர் நனவிடை தோய, சினிமா பாட்டின் இசை இடுக்குகளின் வைப்பது நம் வழக்கம். //
Nicely said...
//(இப்போது வறலாற்றில் இடம்பெற்றுவிட்ட) //
Again, வரலாறு.
உந்தன் தேசத்தின் குரல் தொலைதூரத்தில் அதோ
செவியில் விழாதா சொந்த வீடு உன்னை
வாவென்று அழைக்குதடா தமிழா
அயல் நாடு உன் வீடல்ல
விடுதியடா ;-)
நேர்மையான நேர்த்தியான பகிர்வு.
//ஒவ்வொரு காலகட்டத்தின் ஞாபகங்களை, பின்னர் நனவிடை தோய, சினிமா பாட்டின் இசை இடுக்குகளின் வைப்பது நம் வழக்கம். எனக்கு 'விடை கொடு எங்கள் நாடே' என்ற பாடல் பிரான்ஸை விட்டு வெளியேறுவதையே நினைவுபடுத்தும்.//
நான் கல்லூரி முடித்த வருடம் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் பாடல்களை இப்பொழுது கேட்டாலும் எங்களது இன்டெர்ன்ஷிப் போஸ்டிங்கின் கடைசி நாட்கள் நினைவுக்கு வருவது வழக்கம்
அந்த வருடம் பல படங்கள் வெளி வந்திருந்தாலும் இந்த படம் நினைவில் நிற்பதற்கு ஒரு வேளை "விடை கோடு எங்கள் தாயே" பாடல் காரணமாக இருக்குமோ
டீஜே, நீங்கள் கூறுவதை நானும் ஒப்புகொள்ளலாம். இந்தியாவில் காணக்கிடைக்கும் மனநிலையையும், ப்ரான்சில் பார்க்க கூடிய மனநிலையையும் ஒப்பிட்டு, தனிப்பட்ட அனுபவத்தை முன்வைத்து மேலோட்டமாய் சொல்லியதுதான் இந்த பதிவு. பிரச்சனைகள் இல்லை என்று சொல்லவேயில்லை. மீண்டும் சொல்வதானால் இதையெல்லாம் பிரான்சில் உட்கார்ந்து உற்சாகமாய் பேசலாம்! மற்றபடி நீங்கள் குறிப்பிடும் கலவரம் பல பரிமாணங்கள் கொண்டது. அதை வெற்றாய் ஒரு மார்க்சிய பாணியில், ஸ்டீரியோடைப் இனவாத எதிர்ப்பு பாணியில் பார்பதும் நியாயமில்லை என்று நினைக்கிறேன். அது குறித்து விரிவாகத்தான் பேசவேண்டும். அதையும் கண்க்கில் கொண்டே என் பதிவு. கருத்துக்கு நன்றி.
ஸ்ரீகாந்த், ஏனோ நீங்கள் இந்த வாக்கியத்தை ஆட்சேபிப்பீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆமோதித்தது ஆச்சரியம்! எப்படியோ இப்படி சில முன்னபிப்ராயங்கள் ஏற்பட்டு விடுகின்றன. முன்னபிப்ராயம் பொய்க்கும் போது இன்னொரு பொறி கிடைகிறது. கருத்துக்கு நன்றி, நேர்மையாய் அதை பகிர்ந்ததற்கும். 'வரலாறு', திருந்த முயல்கிறேன். கடைசி குவாண்டம் கணித்தல் பதிவிலும் ற போட்டு பின்னர் மாற்றினேன். பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத்தானே மாறமுடியும். நன்றி!
பாஸ்டன் பாலாஜி, ஆமாம்!
பதிவில் உள்ளது முந்தய மனநிலை. ஒரு கட்டத்தில் உணர்ந்து, 'மிக விரும்பி மிகுந்த மனத் தெளிவுடன' சென்னையில் வாழ்வதை தேர்ந்தெடுத்துள்ளேன். கருத்துக்கு நன்றி.
//இந்தியாவிலிருந்து மேற்கே போய் ஸெட்டிலான 'மேல்'ஜாதிகாரர்கள், மேற்கில் ரேசிசத்தை எதிர்கொள்வது பற்றி பேசுவதை போன்ற ஸிக் ஜோக் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.//
இஃது இந்தியாவுக்குமட்டுமல்ல ஈழத்தவருக்கும் பொருந்தலாமென்று கேள்வி.
'கன்னத்தில் முத்தமிட்டால்' யதார்த்தம் செத்த ஒரு குப்பைப்படமென்பது எனது உணர்விற்கானது. அதனாலே விடைகொடு தாய்நாடே பற்றி ஏதும் சொல்லவில்லை.
உங்கள் அனுபவத்துடன் ஒப்புநோக்கி ஒரு நூலை நீங்கள் வாசிக்கவேண்டும். நானும் வாசிக்கவில்லை என்றபோதும் தொடர்ந்து (உங்களுக்குத் தெரிந்திருக்கும்) அதன் ஆசிரியரைக் காணப்படும் செவ்விகளைக் கண்டுகொண்டிருப்பதாலே சொல்கிறேன்.
Bernard-Henri Lévy's American Vertigo. இலெவியின் இஸ்ரேல் தொடர்பான நிலைப்பாடு அவரை அன்போடு என்னை அணுகவைக்கவிடாதது துயரமே :-) உங்கள் பாரிஸ், நாகசாக்கி குறிப்புகளைப் பார்க்கும்போது, அவர் அமெரிக்காவூடே பயணம் செய்து பிரெஞ்சியரின் அமெரிக்கா குறித்த பார்வை பற்றித் தருவது ஞாபகம் வருகிறது
//'கன்னத்தில் முத்தமிட்டால்' யதார்த்தம் செத்த ஒரு குப்பைப்படமென்பது எனது உணர்விற்கானது. அதனாலே விடைகொடு தாய்நாடே பற்றி ஏதும் சொல்லவில்லை.//
யதார்த்தம் செத்ததோடு, பிரச்சனையை மிகவும் கொச்சைப்படுத்திய படம் என்பதிலும் சந்தேகமில்லை. படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும், விஷமத்தனமாய் இருந்தாலும்,பாடல்கள் அதிலிருந்து தனித்து இயங்கி நமக்கான சில உணர்வுகளை தருவது தமிழ் சினிமாவில் புதிதான ஒன்றல்லவே. அந்த வகையில் .....
american vertigo படிக்க முயற்சிக்கிறேன். பரிந்துரைக்கு நன்றி.
// ஃபேர் அண்ட் லவ்லி போன்ற விளம்பரங்கள் //
நம்முடைய இனவெறியின் வெளிப்பாடு.
வ"ற"லாற்றை ஒரு வழி பண்ணுவது என்று முடிவு பண்ணிவிட்டீர்கள் போலிருக்கிறது, நடத்துங்க :-))
எழுத்துப்பிழை இல்லாமல் இருந்தால் அதிகமானோர் படிக்கும் தமிழ் பதிவுக்கு மேலும் சிறப்பு என்பது என் கருத்து.
Post a Comment
<< Home