ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, June 04, 2006

நர்மதா தரும் செய்தி.

நர்மதா பற்றிய ஒரு படத்தை பார்க்க.


நர்மதா குறித்த செய்திகளை கொஞ்ச நாட்களாக காணும். செய்திகள் இல்லையென்றால் பிரச்சனையில்லை என்று பொருள் இல்லை. அணை கட்டும் பணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. புலம் பெயர்க்கப்பட்டவர்களின் மறுவாழ்வு என்பது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. மேதா பட்கர் உண்ணாவிரத மிருந்த சம்பவ காலத்தில் இவ்வாறு எழுதியிந்தேன்.

"ஒருக்காலும் அரசு அணைக்கட்டு தொடர்பான தன் நிலையை தளர்த்தப் போவதில்லை. மிஞ்சி போனால் புலம் பெயர்க்கப் பட்ட மக்களுக்கான மறுவாழ்வு பற்றி மீண்டும் வாக்குறுதி அளிக்கலாம். அது நடைமுறையில் காலப்போக்கில் என்னவாகும் என்பதை மீண்டும் மீண்டும் வறலாறு சொல்கிறது."

இந்த மாதிரி விஷயங்களில் எல்லாம் நாம் சொல்லும் ஆருடம் பொய்த்து போகும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மிகுதியானது எது? ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கான வாய்ப்பு இல்லவே இல்லாமல்தான் இருக்கிறது. அரசு தங்களால் தேவையான மறுவாழ்விற்கான ஏற்பாடுகளை செய்ய முடியாது, அதற்கான நிலம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டு, மீண்டும் மறுவாழ்வு பஜனையை சுப்ரீம் கோர்ட்டில் பாடுகிறது. மேதாவின் உண்ணவிரதம் தந்த அழுத்தத்தால், தனது அராசாங்கத்தின் மந்திரிகள் நேரில் சென்று பார்த்து, அவர்கள் வாக்குமூலம் தந்த யதார்த்தத்தை உச்சநீதி மன்றத்தில் மாற்றி பேசுகிறது. இது குறித்து விரிவாய் பேசுவது இந்த பதிவின் நோக்கமல்ல. விரிவாய் பேசினால், தினம் ஒரு பதிவாக ஒரு வருடத்திற்கு எழுதும் அளவிற்கு விஷயமிருக்கும். இணயத்தில் எல்லாம் பேசப் பட்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடி தேவையான அளவு விஷயங்களை அறியலாம். நர்மதா மூலம் இந்திய அரசு என்ன வகை செய்தியை மக்களுக்கு, குறிப்பாக போராடும் மக்களுக்கு தருகிறது என்று பார்க்க வேண்டும்.

அரசு என்ற வலிமை மிகுந்த நிறுவனத்தை எதிர்த்த போராட்டத்தில், உரையாடல் என்பது இரு பக்கமும் ஏற்படும் நிர்பந்தங்களின் அடிப்படையிலேயே நிகழுகிறது. இவ்வாறான நிர்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்த எந்த ஒரு போராட்டமும் அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. (நெருக்கடிகள் தேவையில்லாமல் உரையாட முடியும் என்றால் போராட்டமே இல்லாமல் அரசை அணுகியிருக்க முடியும்.) இவ்வாறான நெருக்கடிகளை ஏற்படுத்துவதில் வன்முறை எத்தகைய பங்கை வகிக்கிறது என்பது சிக்கலான கேள்வி. அரசு (அதிலும் நாம் அனுபவிக்கும் 'ஜனநாயக அரசு') வன்முறையை எளிதில் கட்டவிழ்த்து விடாது. வன்முறையை அவிழ்த்து விட அதற்கு போராட்டம் ஒரு தீவிரமான நிலையை எட்ட வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் அரசின் எதிர்வினை அதீதமாய் இல்லாதிருப்பதை தங்களுக்கு சாதகமான நிலை என்று நினைத்து, முட்டாள்தனமாய் போராளி குழுக்கள் சகட்டு மேனிக்கு வன்முறையை பிரயோகித்து, அரசு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த தீவிரமான சூழலை ஏற்படுத்தி தருகிறது. அதற்காகவே காத்திருக்கும் அரசு எதிர்பாராத வன்முறை கொண்டு மொத்த போராட்டத்தையும் ஒடுக்குவது ஒரு வழக்கமாக பல சந்தர்ப்பங்களில் இருகிறது. ஆதிவாசிகள் போன்ற அதிகாரமற்ற மக்களின் போராட்டங்களை அடக்க இத்தகைய தீவிரமான ஒரு நிலையை எட்டவேண்டிய அவசியம் கூட இல்லை. மிக மெலிதான வன்முறை தென்பட்டால் அது போதுமானதாயிருக்கிறது. துப்பாக்கி சூடு மூலம் பலரை கொல்லும் அளவிற்கான அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட முடிகிறது.

இந்த வகையில் வன்முறையும் பயங்கரவாதமுமே வெல்வது உலகின் நியதியாக இருப்பது போலவே ஒரு தோற்றம் இருகிறது. உதாரணமாய் ஒரு தீவிரவாத குழுவுடன் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவது என்பது பயங்கரவாதத்தின் வெற்றியாகவே கருதமுடியும். தீவிரவாதக் குழுவின் தார்மீக நியாயங்களை உணர்ந்து எந்த அரசும் இறங்கி வந்த வரலாறு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவிலும் அப்படித்தான், இலங்கையிலும் அப்படித்தான். தமிழர்களுக்கான நியாயங்களை உணர்ந்து புலிகளுடன் சிங்கள அரசு பேச வரவில்லை. போர்களத்தில் புலிகளை தாக்கு பிடிக்க இயலாமலே இறங்கி வருகிறது. அந்த வகையில் இது புலிகளின் பயங்கரவாதத்திற்கான வெற்றி மட்டுமே. புலிகளை சிங்கள அரசு வெற்றி கொண்டிருந்தால் பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியதாக சிலர் புருடா விடுவார்கள். ஆனால் அதன் பொருள் புலிகளின் பயங்கரவாதத்தை விட சிங்கள் அரசின் பயங்கரவாதம் பலம் வாய்ந்தது என்றுதான் அதை கொள்ள முடியும். பின்லேடனின் பயங்கரவாதத்தை விட அமேரிக்க அரசின் பயங்கரவாதம் பன் மடங்கு பெரியது. அதனால் உரையாடலுக்கு இறங்கி வரும் கட்டாயம் ஒரு நாளும் அமேரிக்காவிற்கு ஏற்பட்டதில்லை. தொடர்ந்த வெற்றிகளுடன் கேள்வி கேட்க நாதியில்லாமல் பயங்கரவாத பட்டியலின் முதலிடத்தில் அமேரிக்கா வீற்றிருக்கிறது. இந்த உதாரணங்களை கொண்டு பார்தால் பயங்கரவாதம்தான் வென்று வருவதாக தோன்றும்.

இப்படி நினைப்பதற்கு எதிருதாரணமாக காந்தியின், அவரால் உந்தப்பெற்ற மார்டின் லூதர் கிங், மண்டேலா போன்றவர்களின் போராட்டங்களின் வெற்றிகள் இருப்பதாக தோன்றுகிறது. இங்கே வன்முறை கலக்கவில்லை என்றாலும், இந்த வகை போராட்டங்களும் நெருக்கடிகளை அரசுக்கு ஏற்படுத்துவதன் மூலமே அரசை நிர்பந்திக்க முடிகிறது. ஆனால் வன்முறையால் போராட்டத்தை எதிர்கொள்ள நினைக்கும் அரசை இது குழப்பிவிடுகிறது. வன்முறையை எதிர்கொள்வது வலிமையான அரசுக்கு மிகவும் எளிது. ஒரு பக்கம் போராட்டத்தின் வன்முறை மூலம் நிகழும் பாதிப்புகள் பற்றி ஒரு அரசுக்கு கவலைகிடையாது. அதே நேரம் அந்த பாதிப்புகளை வாய்பாக கொண்டு அதைவிட பல மடங்கு வன்முறையை செலுத்தி மொத்த எதிர்ப்பையும் அமுக்கிவிட முடிகிறது. ஆனால் வன்முறையற்ற போராட்டத்தில் இத்தகைய ஒரு வாய்ப்பு அரசாங்கத்திற்கு கிட்டுவதில்லை. ஏனெனில் போரட்டம் பலதரப்பட்ட (வன்முறையற்ற) வழிமுறைகளை கொண்டு, அரசு இயங்கும் சட்டகத்திற்குள்ளாகவே அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்கிறது. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதில் அரசுக்கு குழப்பம் இருப்பது இயல்பானதே.

காந்தி அகிம்சையை தனது தத்துவ/அரசியல் பார்வையின் அடிப்படையாக கொண்டிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் காந்தி அகிம்சை மீதான காதலினால் மட்டும் ஒரு வன்முறையற்ற போராட்டத்தை தேர்ந்தெடுக்கவில்லை. வன்முறையின் இந்த பரிமாணங்களை உணர்ந்தும் அதை தேர்ந்தெடுத்தார். அவருடைய போராட்டம் உலக அளவில் பலருக்கு உந்துதலாய் இருக்கிறது. (காந்தி மீது வேறு விமர்சனங்கள் இருப்பதை, குறிப்பாய் அம்பேதகாருக்கு எதிராக அவர் செயல்பட்டது, பூனா ஒப்பந்தம் இது போன்றவையை, இந்த இடத்தில் பேசவில்லை. போராட்ட வழிமுறை பற்றி மட்டுமே பேசுகிறேன்.) காந்தியின் வன்முறையற்ற போராட்டம் பலருக்கு, குறிப்பாய் நவீன இந்துத்வவாதிகளுக்கு மற்றும் கம்யூனிஸ்டுகளுக்கு முட்டாள்தனமாக தெரிந்தது. போராட்டங்களின் மூலம் போராடுபவர்களுக்கும் அரசுக்கும் வன்முறையோடு இருந்த தொடர்பை காந்தி புரிந்து வைத்திருந்த விஷயம் அவர்களுக்கு பிடிபடவில்லை.

ஆனால் வன்முறையற்ற போராட்டத்திற்கு காந்தி மட்டுமே உதாரணமாய் காட்டபட்டு, பெரியாரின் போராட்டமும் வன்முறையற்றது என்ற உண்மை திட்டமிட்டு மறக்கடிக்கப் படுகிறது, திரிக்கப்படுகிறது. ஆனால் பெரியார், காந்தி போல், தனது அரசியல் தத்துவங்களை அகிம்சையின் அடிப்படையில் கொண்டிருக்கவில்லை. பெரியாருக்கு அகிம்சையா, வன்முறையா என்பது ஒரு பிரச்சனையில்லை. ஆனால் காந்தியை போலவே, சொல்லப்போனால் காந்தியை விட தெளிவாக போராட்டங்களின் வன்முறைகளின் பின் மற்றும் பக்க விளைவுகளை பெரியாரும் புரிந்து கொண்டிருந்தார். அதனால்தான் 'பிராமணாள் ஹோட்டல்' என்ற ஒற்றை போர்டை நீக்க, மிக எளிதாக தாக்குதல் நடத்தி அதை சாதிக்க கூடிய ஒரு படைய தன் பக்கம் வைத்துருந்தும் நூறு நாட்களுக்கு வன்முறையற்ற போராட்டத்தை நடத்தினார். (அதையும் சில பார்பன புத்தி திரித்து, பெரியார் மூக்குடைந்ததாக அல்பமாய் இருமாப்புறுவதை கவனிக்க வேண்டும்.)


காந்தி தனது புரிதலை பேசியதில்லை, பெரியார் பேசவும் செய்திருக்கிறார். குறிப்பாய் பிரிடீஷ் அரசு அடக்கு முறை கொண்டு வந்த போது. கம்யூனிஸ்டுகள் எதிர்த்து தலைமறைவு போராட்டம் செய்ய முனைந்த போது, பெரியார் அரசுடன் ஒத்துழைக்க முன்வந்தார். அப்போது அவர் பேசிய பேச்சுக்களில் இந்த புரிதலை தெளிவாக முன்வைத்திருக்கிறார். (தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. கைவசம் சிக்கினால் தருகிறேன்.) கம்யூனிஸ்டுகள் வழக்கமான மூர்க்கத்தில் பெரியார் செய்ததை துரோகமாக மட்டும் பார்கின்றனர். 'லட்சக்கணக்கான தோழர்களின் உயிர்களை பலியிட்டுத்தான் ஒரு லட்சிய சமுதாயத்தை நாம் அடையவேண்டுமெனில் அது நமக்கு தேவையில்லை" என்று அவர் சொன்னதை நியாயமான முறையில் அறிவுபூர்வமாய் அவர்களால் எதிர்கொள்ள முடியாது.

பெரியாருக்கு அகிம்சை மீது காதல் எதுவும் கிடையாது. போரட்டத்தின் இலக்குகளை அடைய வன்முறையற்ற போராட்டம் உதவக்கூடும் என்றால் மென்முறையை கைகொள்ளலாம். மென்முறை உதவவில்லை, வன்முறைதான் உதவும் என்றால் வன்முறையையும் கைகொள்ளலாம் என்பதுதான் அவர் பார்வை. அதனால்தான் ராஜாஜியின் குலக்கல்விக்கு எதிரான போராட்டத்தில் தனது இரண்டு வருட போரட்டம் பலன் தராததால் வன்முறைக்கு அழைப்பு விடுத்தார். (எதிர்பார்த்தது போல் அந்த வன்முறை விளைவுறும் கலகத்தை முன்வைத்தே போராட்டத்தை நசுக்க ராஜாஜி எண்ணினார். ஆனால் முடிவில் அவர் பதிவி இழக்க நேரிட்டது.)

இத்தனையும் குறிப்பிட காரணம், அகிம்சை என்பதையும் ஒரு அடிப்படைவாதம் போல் பிடித்து தொங்குவதும் பயன் தரக்கூடியது அல்ல. மேதா பட்கர் மிக பெரிய அகிம்சை வழி போரட்ட எழுச்சியை உருவாக்கினார். அவருக்கு முன்னோடிகள் உண்டு, வேறு சிலரும் உண்டு. ஆனால் போராட்டம் மென்முறையில் செல்ல அவர் முக்கிய காரணம். ஜார்கண்டில் இருக்கும் நக்சல் பிரச்சனை நர்மதாவில் இல்லாததற்கு அவர் முக்கிய காரணம். அவர் இல்லாவிட்டால் வன்முறை துணைகொண்டு போராட்டம் நகர்ந்திருக்கலாம். வழக்கம் போல அதை எதிர்கொள்வது ஒரு அரசுக்கு எளிதானது, கலிங்காநகரிலும், கங்காவரத்திலும் எதிர்கொண்டது போல் எதிர்கொண்டிருக்கும்.

இந்துத்வவாதிகள் நர்மதா போராட்டத்தை புரட்டுகளால் எதிர்கொள்வதையும், அராஜகங்களை அவிழ்த்து விடுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும், மன்மோகன் சிங்கும் நர்மதா விஷயத்தில், அற்புதமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, சாதனை படைத்து, வரலாற்றில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் அது நடந்து கொண்ட விதத்தின் மூலம் மிக மோசமான ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு தருகிறது. அரசியல் நிர்பந்தத்திற்கும், கும்பல் வன்முறைக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கும்தான் ஒரு அரசு மரியாதை அளிக்குமே அன்றி, அதிகாரமற்ற விளிம்பு நிலை மக்களின், மிக பெரிய மென்முறை போராட்டத்திற்கு அல்ல. தீவிரவாதத்தின் வேர்களை ஆராயவேண்டும் என்று சொல்பவனை எல்லாம் திட்டி தீர்ப்பதை பிழைப்பாக வைத்திருப்பவர்கள், இந்த கட்டத்தில் எந்த வித சுயபரிசீலனைக்கும் தங்களை உட்படுத்த மாட்டார்கள் என்று தெரியும். தங்களின் இப்போதய குரலும் செய்கையும் மௌனமும்தான் தீவிரவாதத்திற்கு சுவாசம் அளிப்பதை ஒரு நாளும் அவர்கள் உணரப்போவதில்லை. உணர்ந்தாலும் சுயநலத்தால் அது குறித்து பேசப்போவதில்லை.

Post a Comment

4 Comments:

Blogger Thangamani said...

//அது நடந்து கொண்ட விதத்தின் மூலம் மிக மோசமான ஒரு செய்தியை நாட்டு மக்களுக்கு தருகிறது. அரசியல் நிர்பந்தத்திற்கும், கும்பல் வன்முறைக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கும்தான் ஒரு அரசு மரியாதை அளிக்குமே அன்றி, அதிகாரமற்ற விளிம்பு நிலை மக்களின், மிக பெரிய மென்முறை போராட்டத்திற்கு அல்ல. தீவிரவாதத்தின் வேர்களை ஆராயவேண்டும் என்று சொல்பவனை எல்லாம் திட்டி தீர்ப்பதை பிழைப்பாக வைத்திருப்பவர்கள், இந்த கட்டத்தில் எந்த வித சுயபரிசீலனைக்கும் தங்களை உட்படுத்த மாட்டார்கள் என்று தெரியும். தங்களின் இப்போதய குரலும் செய்கையும் மௌனமும்தான் தீவிரவாதத்திற்கு சுவாசம் அளிப்பதை ஒரு நாளும் அவர்கள் உணரப்போவதில்லை. உணர்ந்தாலும் சுயநலத்தால் அது குறித்து பேசப்போவதில்லை.//

வசந்த்:

மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணை இப்போதும் கண்ணை மூடிக்கொண்டிருப்பவர்களே திறக்கிறார்கள் என்பதை அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு நர்மதா அணைப் போராட்டம் சிறந்த ஒரு எளிமையான எடுத்துக்காட்டு.

உங்கள் நட்சத்திரப்பதிவுகளில் இதையே சிறந்ததாக நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி தமிழ்நாட்டில் பெரியாரின் நீண்ட போராட்டம் எப்படி வன்முறையற்றதாக இருந்தது ஆனால் இந்துத்துவ சகதிகள் எத்தனை வன்முறையை இங்கு பரப்பி கொலைகளை, சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன என்று இருள் நீங்கி சுப்பிரமணியரிடம் (சங்கராச்சாரியார்) சின்னக்குத்தூசி போன்ற பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியிருப்பார்கள். அதை நினைவுக்குக் கொண்டுவந்தது.

http://thatstamil.oneindia.in/specials/art-culture/essays/sivakumar1.html)

6/04/2006 6:12 PM  
Blogger முரளி கண்ணன் said...

very good article

11/12/2007 11:56 AM  
Blogger ROSAVASANTH said...

முரளி கண்ணன், வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

11/14/2007 3:44 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

எப்படித் தவறவிட்டேனென்று தெரியவில்லை. இப்பொழுதுதான் முதன்முறையாக வாசிக்கிறேன். வரிக்கு வரி உங்களுடன் உடன்படுகிற ஒரு இடுகை. மிக எளிமையாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

//அரசியல் நிர்பந்தத்திற்கும், கும்பல் வன்முறைக்கும், உயர் நடுத்தர வர்க்கத்தின் அபிலாஷைகளுக்கும்தான் ஒரு அரசு மரியாதை அளிக்குமே அன்றி, அதிகாரமற்ற விளிம்பு நிலை மக்களின், மிக பெரிய மென்முறை போராட்டத்திற்கு அல்ல.//

"அறவழியில் போராடுங்கள்" என்று அறிவுரை மட்டுமே சொல்லத் தெரிந்த இலக்கிய அறிவுஜீவிகளுக்குத் (மன்னிக்கவும், உண்மையைச் சொல்லப் போனால் - முட்டாள்களுக்குத்) தாமே வன்முறையை எதிர்கொள்ளும் பொழுதுதான் இது புலப்படும்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

10/04/2009 10:27 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

---------------------------------------
Site Meter