ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, October 06, 2006

பொதுப்புத்தி

டிசம்பர் 13 பாராளுமன்றத் தாக்குதலில் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் குற்றம் உறுதி பெற்று, முகமது அஃப்சலுக்கு தீர்பளிக்கப்பட்ட தூக்குதண்டனைக்கு எதிரான நிலைபாடுகளுக்கு, வழக்கம் போல பொதுப்புத்தி சார்ந்த எதிர்வினைகள், வலைப்பதிவுகள் உட்பட்ட எல்லா உடகங்களிலும் வந்துள்ளன. 'நமது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்கியவன்; அதை கோர்ட் உறுதி செய்தாகி விட்டது; அவன் சாவதுதான் எல்லாவிதத்திலும் நியாயமானது' என்பதற்கு மேல் வேறு எதையுமே யோசிக்கத் தெரியாத, யோசிக்க விரும்பாத பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்த விஷயத்தில் விநோதம் என்னவென்றால், அஃப்சலின் தூக்குதண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில இஸ்லாமியர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகி எதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும் எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை.

வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும், உளவுத்துறையின் கண்காணிப்பும், பொதுமக்களின் கண்டனமும் வந்து குவியுமா, விளம்பரமும் ஆதாயமும் வந்து குவியுமா என்பது மேலோட்டமான சிந்தனை கொண்ட அவர்களுக்கே மிக நன்றாக தெரியும். எதிராளியின் நேர்மையை அங்கீகரிக்கும் உன்னத மனநிலையை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், குறைந்த பட்சம் பொருந்த புளுகும் தன்மைகூட இவர்களிடம் கிடையாது என்பதற்கான உதாரணம் இது

இந்த விஷயத்தில் தெளிவான நிலைபாடு எடுக்கும் அளவிற்கு, செய்திகளையும், ஆதாரங்கள் குறித்த கட்டுரைகளையும் நான் இன்னும் படிக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளின் மூலம் தெரிந்த அளவில் அஃப்சலுக்கு பாராளுமன்றத் தாக்குதலில் பங்கு இருப்பதாக நம்பவே காரணங்கள் அதிகமாக இருக்கிறது. அவரே அதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. எனது தெளிவின்மை, அஃப்சலுக்கு தாக்குதலில் எந்தவிதமான பங்கு, அதற்கான ஆதாரம் என்பதை பற்றி மட்டுமே இருக்கிறது. நிச்சயமாக மாஸ்டர் மைண்டாக தாக்குதலை திட்டமிட்டு, அதில் நேரடியாய் பங்கு பெற்ற காரியத்தை அஃப்சல் செய்ததாக தெரியவில்லை. நேரடியாய் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை. திட்டமிடலின் பிராதான மூளையாக, இயக்கமாக இருந்து தாக்குதலை செயல்படுத்தியவர்களை இந்திய சட்டம் நெருங்கப் போவதில்லை. அப்படியில்லாமல் ஏதோ வகையில் தொடர்பு கொண்டதான பங்கிற்கு, இந்த தூக்கு தண்டனை நியாயமானதுதானா என்கிற விதத்தில்தான் எனக்கு கேள்வி இருக்கும்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 பேர்களை ஒட்டுமொத்தமாக தூக்கில் போடும்படி ஆணையிட்ட தீர்ப்பும் எப்படி பரவலான, பொதுப்புத்தி சார்ந்த வரவேற்பை பெற்றது என்பதை பார்க்க வேண்டும். குமுதமும், ஃப்ரண்ட்லைனும் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பாக அதை கொண்டாடியது. கொலைக்கான சதியில் 26 பேரும் நேரடியாய் பங்கு கொண்டு அதில் ஈடுபட்டதாகவும், அனைவரையும் தூக்கில் போடுவது மிகவும் நியாயமானதாகவுமே பொதுபுத்தி கருதியது. ஆனால் இது குறித்து ஓரளவு தீவிரமாய் உள்ளே போய் ஆராய்பவருக்கு கூட, 26 பேரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் குற்றச்செயலை நேரடியாய் மேற்கொண்ட குற்றவாளிகளுடன், ஏதோ வகையில் - குற்றம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு - தொடர்பு இருக்க நேர்ந்தவர்கள் என்ற வகையில் மட்டுமே, அவர்கள் மீது குற்றம் 'நிருபிக்கப் பட்டிருப்பதை' அறியலாம். (உதாரணமாக குற்றவாளி ஒருவருடன் மாலை காபி அருந்திவிட்டு போவதும் தொடர்பு என்பதாக கொள்ள வேண்டியது; காபி குடித்தவருக்கு எதிராளி சில நாட்களில் கொலை செய்யப் போகிறார் என்பது தெரியாமல் இருக்கலாம் என்பது ஒரு பொருட்டு இல்லை.) அவர்களுக்கு, அரசியல் நிலைபாடு சார்ந்து தமிழ் தேசியவாதிகள், தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் என்று பலரின் கரிசனம் இருந்ததால், பின்னர் மேல் முறையிடப்பட்டு, செலவு செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வாதாடப்பட்டு விடுதலையாகும் அதிர்ஷ்டம் இருந்தது. மீண்டும் நான் இங்கே குறிப்பிட விரும்பவது, பொதுபுத்தியின் பட்டறிவில் வெளிபடும், 26 பேரும் குற்றத்துடன் நேரடி தொடர்பு கொண்ட குற்றவாளிகளாகவும், அவர்களை கொல்வது மிகவும் நியாயமானதுதான் என்ற விமர்சனமற்ற ஆழ்ந்த நம்பிக்கை பற்றி மட்டுமே.

எனது கருத்தை சொல்லியாக வேண்டுமென்பதால் - இந்த எல்லாவற்றிலும் எனது நிலைபாடு தூக்குதண்டனை என்பதற்கே எதிரானது. அது ஆட்டோ சங்கருக்கும், வீரப்பனுக்கும், சிறுமியுடன் பாலியல் வல்லுறவு கொண்டவனுக்கும், 24பேரை ஒரே சமயத்தில் கொன்றவனுக்கும் சேர்த்து அது பொதுவானது; 'ஒரு நிரபராதி கொல்லப்பட்டு விடக்கூடாது' என்ற வாதத்தின் அடிப்படையில் வரும் தூக்குதண்டனை எதிர்ப்பு வாதம் அல்ல; எந்த வகை குற்றம் நிறுவப்படுதலுக்கும், ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனம், மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் (உதாரணமாய் தூக்கில் இடும்போது மலம் வெளிவந்துவிடாமலிருக்க, அதற்கு முன் சில மணிநேரங்களுக்கு பட்டினிபோடுதல் உட்பட்ட) மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன். அந்த பார்வையில் கமலின் 'விருமாண்டியை', அவர் பிரசாரித்தது போல், தூக்குதண்டனைக்கு எதிரான ஒரு படமாக என்னால் பார்க்க முடியவில்லை. குற்றம் செய்யாமல் மாட்டிகொண்ட கமலின் நிரபராதி பாத்திரம, தூக்கிலிடப்படுவதை பிரச்சனையாக பார்ப்பது அல்ல, தூக்குதண்டனைக்கு எதிரான பிரச்சாரம்; கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும். ஆனால் பசுபதி கொல்லப்படுவதுதான் சரி என்கிற நியாயத்துடன் அமைந்த திரைக்கதையை, தூக்கு தண்டனைக்கு எதிரானதாக என்னால் பார்க்க முடியவில்லை. (படத்தில் வேறு பல பிரச்சனைகள் உண்டு எனினும் இது முதன்மையானது.)

இந்தப் பார்வையில் எனது நிலைபாடு, எல்லாவகை தூக்கு தண்டனையையும் எதிர்ப்பதுபோல், அஃப்சலுக்கான தூக்கு தண்டனையையும் எதிர்க்கிறது. இவ்வாறான, எல்லாவகை குற்றம் நிறுவப்பட்டவர்களுக்குமான மரணதண்டனை எதிர்ப்பை பற்றி பேசுவது இந்த பதிவின் நோக்கமில்லை. விரிவாக பேச இயலாதது மட்டுமின்றி, அவ்வாறு பேசுவது இந்த குறிப்பிட்ட பிரச்சனையை திசை திருப்பவும் செய்யும். ஏனெனில் அஃப்சல் மீதான தூக்கு தண்டனைக்கு எதிரான விவாதம், என்னை மாதிரி நட்டு கழண்ட சில கேஸ்களின் ஒட்டுமொத்த தூக்கு தண்டனைக்கான எதிர்ப்புடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது.

அவ்வாறாக மரணதண்டனையின் இருப்பை அங்கீகரித்துக் கொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுகும் போதே, அஃப்சலுக்கு இந்த தாக்குதலில் எந்த வகையில் பங்கு, அதன் ஈடுபாடு மற்றும் தீவிரம் என்ன என்பதை பற்றி விவாதிக்க வேண்டியுள்ளது. முதன்மை குற்றவாளிகளை பிடிக்க இயலாத கையாலாகத்தனத்தை இவரை கொல்வதன் மூலம், நாம் தணித்து மனச்சமாதானம் அடைய விரும்புகிறோமா என்றும் கேட்டுக்கொள்ளலாம். அந்த வகையில் அஃப்சலை தூக்கில் போடுவதன் நியாயம் குறித்து எனக்கு தெளிவான கருத்து எதுவும் இல்லை. ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில், இந்த தெளிவின்மையை முன்வைப்பதும் எனக்கான அரசியலாக இருக்கிறது.

இவர்கள் வெளிப்படுத்தும் கூட்டு ஹிஸ்டீரியாவின் கொடூரத்தை அறிய, நாம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு, பொடா சிறையில் உடல்ரீதியில் கொடுமையாய் சித்ரவதை செய்யப்பட்டு, பின்பு மிக ஒட்டையான ஆதாரங்கள் மற்றும் பொய்யாக தயாரிக்கப் பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், அது நன்றாக தெரிந்தும் துக்குதண்டனை அளிக்கப் பட்டு, சாவு தலைக்கு மேல் தொங்கும் பயங்கரத்துடன் மீண்டும் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்து, இறுதியில் அதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றத்தில் தப்பிய கிலானியின் கதையை மிக விரிவாக அறிய வேண்டும். கிலானி என்ற பலரது அன்பிற்குரிய பேராசிரியரின் மீதான ஆதாரம் ஒன்றே ஒன்றுதான்; பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்துவிட்ட ஒருவனின் செல்பேசியில், அவருடய தொலைபேசி எண் இருந்தது. அது தவிர தாக்குதல் நடந்த மறுநாள் அவர் காஷ்மீரியில் பேசிய ஒரு தொலைபேசி உரையாடலை பதிந்து, அதை ஒரு லோக்கல் மொழிபெயர்பாளரால் மொழிபெயர்த்ததாக நினைத்து அளித்த மொழிபெயர்ப்பில், "What is this you have done in Delhi?" என்று எதிராளி கேட்க, "This was necessary." என்பதாக இருந்ததுதான். (பின்னர் அவர் பேசியது வேறு என்பதாக நிறுவப்பட்டது.) இந்த 'ஆதாரங்களின்' அடிப்படையில் கிலானி கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, வேலை இழந்து, குடும்ப அமைதி எல்லாவற்றையும் இழந்து, மரணதண்டனை பயமுறுத்த சில ஆண்டுகள் வாழ நேர்ந்து, இறுதி கட்டத்தில் உயிர் தப்ப நேர்ந்தது. இதை இந்த சந்தர்ப்பத்தில் சொல்ல ஒரே ஒரு காரணம்தான் உண்டு. மேலே பேசியுள்ள பொதுப்புத்தி எல்லாவகை ஊடகங்களிலும் கிலானி பற்றியும், அவருக்கான தண் டனை பற்றியும் எப்படி வெளிப்பட்டது என்பதுதான். இப்போது அஃப்சல் பற்றி வெளிபடும் அதே குரல்கள்தான் கிலானி பற்றியும் வெளிபட்டது; 'ஒரு கல்லூரி பேராசிரியரே பயங்கரவாதியாக இருப்பது' பற்றியும் கவலை கொண்டது; கிலானியையும் துக்கில் போடுவதுதான் சரி என்ற தன் கருத்தில் எந்த பரிசீலனைக்கும் அது இடம் அளிக்கவில்லை. கிலானியின் உதாரணம், சமூகத்தில் மதிப்பு பெற்ற ஒருவரின் கதி பற்றியது. அவ்வாறு இல்லாமல் நாடு முழுவதிலும் அநியாயமாய் சிறையில் வாடும் அப்பாவிகளை (தமிழர்கள் உட்பட) பற்றி பேசுவது எனது சக்தியை, இந்த வலைப்பதிவின் சாத்தியதை தாண்டியது

இந்த பொதுபுத்தியை மீறி சிந்திக்கவும், பரிசீலிக்கவும், அதை வெளிப்படையாய் பேசவும் மிகுந்த மனத்துணிவு வேண்டும்; பாயக்கூடிய வசைகள், தேசத்துரோக பட்டங்கள், அதிகாரத்தின் மிரட்டல் இதை மீறி செயல்படவும் வேண்டும்; இந்த நேர்மையால் பத்து பைசா பயன் இருக்காது; மாறாக விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்குமானதாக திரிக்கப்படும் அவதூறு பற்றிய கவலையும் இருக்க கூடாது; அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

ஆனால் இவ்வாறான நிலைபாடுகளையும் ஒற்றை பரிமாணத்தில் சுயவிமர்சனமின்றி எடுப்பதும் ஆபத்தானதாகவே எனக்கு தெரிகிறது. பொதுபுத்தி நமக்கு எதிராளியாகும் கட்டாயத்தில், சுயவிமர்சனமற்ற ஒரு சுழலில் மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருப்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. அத்தகைய விமர்சனத்தை அஃப்சல் விவகாரத்தில் நான் காண நேராததால் இதையும் சொல்ல வேண்டியிருக்கிறது; எனது கருத்தும் - கிலானி பற்றிய பிரச்சனையில் இருப்பது போல் - இந்த பிரச்சனையில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் முன்வைக்க வேண்டியுள்ளது.

கிலானி வழக்கு தொடர்பாக அடிப்படையான சிலவற்றை அறிய கீழே உள்ள இரண்டு சுட்டிகளில் வாசிக்க முயலலாம்.

1. கார்டியனில் வந்த கட்டுரை Victims of December 13

2. அருந்ததியின் கட்டுரை Who Pulled The Trigger...
Didn't We All?


இன்னும் இணையத்தில் இருக்கலாம். தேடுபவர்களுக்கு கிடைக்கும்.

Post a Comment

24 Comments:

Blogger icarus prakash said...

அப்பாடா, ஒரு வழியா சரி பண்ணி, தமிழ்மணத்திலே வரவெச்சாச்சு. "ராகங்கள் பதினாறு உருவான வரலாறு" பாட்டிலே, மீசை இருந்துது என்று அடம்பிடிக்கும், மாதவியை, ரஜினி, வாட்சை வைத்து மடக்குவார் ஞாபகம் இருக்கா? அது மாதிரி, நானும் இதை எட்டு பத்து தரம் கட்பேஸ்ட் பண்ணி யிருக்கேன். ஒருமுறை கூட படிக்கவில்லை. படிச்சுட்டு நிதானமா வரேன்.

பிரகாஷ்

10/06/2006 10:23 PM  
Blogger Balaji-Paari said...

இக்கட்டுரையை இட்டதற்கு மிக்க நன்றிகள். பல விசயங்களை தொட்டு எழுதி உள்ளீர்கள். மையக்கருத்தான தூக்கு தண்டனை என்பது
//ஒரு உயிரை அரசாங்கம் என்ற நிறுவனம், மிகுந்த இயந்திரத்தனமான திட்டமிடுதலுடன் (உதாரணமாய் தூக்கில் இடும்போது மலம் வெளிவந்துவிடாமலிருக்க, அதற்கு முன் சில மணிநேரங்களுக்கு பட்டினிபோடுதல் உட்பட்ட) மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப் பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க முடியாது என்ற கருத்தின் அடிப்படையில்//
இதில் எனக்கு முழு உடன்பாடே.

சமீபத்தில் வலையில் படித்த ஒரு விசயம் நினைவுக்கு வருகின்றது. ஒரு ஆப்பிரிக்க நாட்டில் தூக்கு தண்டனை குறித்த சட்ட திருத்தம், ஐரோப்பிய நாடுகளை முன்மாதிரியாக கொண்டு செய்யப்பட்டது. ஆனால் அதன் அரசியல் வேறு.
இருப்பினும் இது வரவேற்க படவேண்டியது.

விருமாண்டியை பொறுத்தவரை, கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து கதை களனை அமைக்கவில்லை. ஆகவே அப்படம் தூக்கு தண்டனையை எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் அத்தகை எண்ணம் தோற்றுவிக்கப்பட்டது என்றே புரிந்து கொள்கின்றேன். இத்தகைய அரைகுறையாக தோற்றுவிக்கப்படும் எண்ணங்கள் அதற்கு எதிராகவே பல நேரங்களில் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.

பேரா.கிலானியின் வழக்கு இக்கட்டுரைக்கு மிக்க பொருத்தமான இடத்தில் வந்துள்ளது.

நன்றிகள்

பாலாஜி-பாரி

10/06/2006 11:41 PM  
Blogger மணியன் said...

பொதுபுத்தி என்று ஒரேதடத்தில் சிக்கிக் கொள்ளாமல் இணைசிந்தனை அவசியம். நீங்கள் சொல்வதுபோல் மரணதண்டனை என்பது நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு ஒரு தடைக் கல்லே. அதுவும் இந்திய காவல்துறை communally sensitise ஆகாமல் இருக்கும்போது நீதித்துறை வழுக்கிவிட வாய்ப்புள்ளது.
அரசியல் சார்ந்தும் அஃப்சல் ஒரு martyr ஆகாமல் மிதவாதிகள் தீவிரவாதத்திற்கு செல்வதை தடுக்குமுகமாகவும் உணர்வுகளுக்கப்பாலான ஒரு ஆய்வு தேவை. குரல் கொடுத்ததிற்கு நன்றி.

10/07/2006 12:12 AM  
Blogger aathirai said...

இந்த அப்சல் விவகாரம் பற்றி ஒரு விபரமும் தெரியவில்லை.
இவனுக்கு வக்கீல் கூட அமர்த்தப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

ஒரு வழக்கில் ஒருவனுக்கு கற்பழிப்பு குற்றம் செய்ததாக
தண்டனை கொடுத்தார்கள். 20 வருடம் கழித்து DNA
ஆதாரப்படி அவன் கற்பழித்திருக்க முடியாது என்று கண்டுபிடித்தார்கள்.
இது போல தவறுகள் எல்லா நாடுகளிலும் நடக்கிறது. நிச்சயமாக
இந்தியாவில் தவறு செய்ய முடியாத சட்ட அமைப்பு இல்லை. இது
போன்றதொரு ஓட்டை உடைசல் அமைப்பில் மரண தண்டனை
விதிப்பது தவறு.

மற்றபடி முஸ்லிம் என்பதற்காகவோ, சாமியார் என்பதற்காகவோ,
அல்லது கலவரம் நேருமென்றோ ஒரு நல்ல நாட்டின் சட்டம் வளைந்து
கொடுக்கக்கூடாது.

ஜெயேந்திரருக்கு சார்ஜ் ஷீட் கொடுப்பதற்கு முன்னரே கம்பு கழியுடன் போராட்டம்
செய்த அதே தேசபக்தர்கள் இந்த மரணதண்டனை தீர்ப்பை (இப்படி ஒரு
தீர்ப்பை நம் நாட்டில் ஜெயேந்திரனுக்கு கொடுக்க மாட்டார்கள் என்று
நன்றாக தெரிந்தாலும்) அவருக்கு அளித்தால் இவர்கள் சட்டத்தின்
மாட்சியைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.

10/07/2006 2:02 AM  
Blogger -/சுடலை மாடன்/- said...

வசந்த், சரியான நேரத்தில் சரியான கண்ணோட்டத்தில் வந்தது உங்களது இந்த இடுகை, நன்றி.

நீங்கள் சொன்ன காரணங்கள் உள்பட வேறு சில காரணங்களுக்காகவும் மரண தண்டனைக்கு எதிரானவன் நான். கிலானி (ஜிலானி?) விசயத்தில் அது மேலும் உறுதியானது. கிலானி விசயத்தை தொடர்ந்து வாசித்து வந்ததால் என்னுடைய மாற்று நிலைப்பாட்டை பொதுபுத்தி மட்டுமே உள்ள மற்றவர்களுடன் சொல்ல முடிந்தது. ஆனால் அஃப்சல் விவகாரத்தில் நான் முனைந்து வேறெங்கும், குறிப்பாக மாற்று ஊடகங்கள் எதுவும், படிக்க நேரமில்லை. பதிவுகளில் வந்தவற்றை மட்டும் பார்த்ததனால் பொதுப்புத்தியுடன் முரண்படவில்லை. நான் அஃப்சலுக்கு நேரடியாக தொடர்புள்ளது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் ஏற்கனவே இரவி ஸ்ரீனிவாஸ் பதிவில் உங்களைப் போன்றோருக்கு வஜ்ராக்கள் மரணதண்டனை அளித்து விட்டார்கள் ;-)

நன்றி - சொ. சங்கரபாண்டி

10/07/2006 4:04 AM  
Blogger டிசே தமிழன் said...

வசந்த் அவசியமானதொரு பதிவு. நன்றி.

10/07/2006 4:36 AM  
Blogger Haranprasanna said...

/-கமல் தூக்கு தண்டனையை எதிர்த்து படமெடுக்க நினைத்தால், அவர் பசுபதியின் பாத்திரம் தூக்கிலிடப்படுவாதாகவும், அதற்கு எதிராகவும் என்பது மாதிரி கதை நகர்ந்திருக்க வேண்டும்.-/

Excellent.

----

ஆனாலும் ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு, சமூக அமைதிக்கு இது போன்ற கடுமையான சட்டங்கள் மிக அவசியம் என்றே நான் கருதுகிறேன். குற்றத்தின் தன்மையைப் பொருத்தே மற்ற எல்லா விஷயங்களும் முடிவு செய்யப்படுகின்றன. கிலானி விஷயத்தில் நேர்ந்தது, ஒரு தவிர்க்கமுடியாத தவறாக அல்லது நமது அரசு மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மையின் விளைவு. அதைப் பொதுவாக்க முடியாது. பாராளுமன்றம் தாக்கப்படுவது என்பது நாட்டின் அமைதிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் பேரச்சத்தை உண்டுபண்ணக்கூடியது. இவ்விசயத்தில் தூக்குத் தண்டனை சரிதான் என்று வாதிட முடியாவிட்டாலும் சரியல்ல என்று யோசிக்கக்கூட முடிவதில்லை.

10/07/2006 8:03 AM  
Blogger தங்கவேல் said...

உங்களுடன் இவ்விசயத்தில் 100 சதவிகிதம் ஒத்துப்போகிறேன் ரோசா. என்னுடைய கருத்தை ஒரு தனிப் பதிவாக எழுத எண்ணியிருந்தேன், உங்களுடயதைப் பார்க்கும் வரை. மிக நன்றாக வாதித்துள்ளீர்கள்.

10/07/2006 8:52 PM  
Blogger பெத்த ராயுடு said...

//ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற, மனித நாகரீகத்தின் முக்கியமான ஒரு கட்டத்தை அடைந்துவிட்ட ஒரு குமுகாயமாக நாம் இல்லாத யதார்த்தத்தை ஒப்புகொண்டே, நாம் இந்த விஷயத்தை அணுக வேண்டியிருக்கிறது.
//

1. ஐரோப்பிய குமுகாயத்தின் மீது அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தல்கள்/தாக்குதல்கள், மரண தண்டனை பற்றிய பார்வையை எதிர்காலத்தில் மாற்றலாம். யார் கண்டது.

2. நாகரீகத்தில் முன்னேறிய இந்த நாடுகள் ஆயுதத் தயாரிப்பிலும்/ஏற்றுமதியிலும் முன்ணனியில் இருப்பது (உம். ப்ரான்ஸ், ஸ்வீடன்) முரண்பாடான விடயம்.

10/08/2006 1:58 AM  
Blogger ROSAVASANTH said...

நேற்று இந்த பதிவை இட்டுவிட்டு, என்ன முயன்றும் கிளம்புவதற்கு முன் தமிழ்மணத்தில் சேர்க்க முடியவில்லை. நான் கிளம்பிய பின், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தன் கணிணியில் மணிநேரத்திற்கு உட்கார்ந்து, தவறுகளை திருத்தி இந்த பதிவை தமிழ்மணத்தில் பிரகாஷ் வரச்செய்தார். அவருக்கு எனது மிக மிக மனம் நிறைந்த நன்றிகள். குழலிலியும் இதற்காக முயற்சு செய்தார் என்று அறிகிறேன். அவரது அன்பிற்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. மேலும் எழுத கருத்து இருந்தால் திங்கள் வந்து எழுதுகிறேன். நன்றி!

10/08/2006 2:05 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Strong and clear views, though I am not in agreement with the content entirely !

http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

10/08/2006 4:25 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

வசந்த்,
நேற்றே இந்த பதிவில் கருத்து எழுத நினைத்து சரியான 'Post a Comment' சுட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டுவிட்டேன். முடிந்தால் இந்த சிக்கலை சரிசெய்யவும். இல்லையே வேறு templateக்கு மாறவும்.

இன்றைக்குப் பார்த்தால் எக்கச்சக்கமான பதிவுகள் இந்த விஷயத்தில்.

முதலில் பிரபு ராஜதுரை அவர்களை பதிவு எழுதத் தூண்டியதற்கு நன்றி. அவருடைய பதிவை மீண்டும் ஒருமுறை நிதானமாக படிக்க வேண்டும்.

உங்கள் பதிவில் ஒரு விஷயத்தைத் தவிர முழு உடன்பாடு உண்டு. வேறுபடும் விஷயத்தை ஒட்டி மீண்டும் கமெண்ட் பகுதியைக் கண்டுபிடித்து ஒட்டும் வேலை சிரமமென்பதால் மேற்கோள் காட்டுவதைத் தவிர்க்கிறேன்.

பிரத்தியேகமாக இதில் இஸ்லாமியர்கள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று நீங்கள் கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. பொதுப்புத்தி என்பது எல்லோருக்கும் பொதுவாகத் தான் இருக்க வேண்டும். பத்து பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அதில் ஒருவர் ஒருவர் இஸ்லாமியராக இருந்தால் பரவாயில்லை. ஆனால் பத்து பேரில் ஒன்பது பேர் முஸ்லீம்களாக இருந்தால் அது திசைத் திருப்பவே பயன்படுத்தப்படும். ஏற்கனவே, ஜனாதிபதி அப்துல் கலாம் அப்சலின் குடும்பத்தாரை சந்தித்ததிற்காக உள்நோக்கம் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தெரிகிறது. இந்துத்துவாதிகளின், தேசியவாதிகளின் கேள்வி கேட்கப்படமுடியாத ஹீரோவிக்கே இந்த கதி என்றால் சாமான்ய முஸ்லிம்கள், அதுவும் காஷ்மீர் பிரச்சினையில் கருத்து தெரிவிக்கும் தமிழ் முஸ்லீம்கள் எல்லாம் எம்மாத்திரம்?

இந்த பதிவின் மையக்கருத்தே ஒரு நாகரிக முதிர்ச்சியடைந்த நாட்டில் மிகக்கொடிய குற்றத்திற்கும் உயர்ந்த பட்ச தண்டனை மரணதண்டனையாக இருக்கவேண்டுமா கூடாதா என்ற அடிப்படையைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் அல் கொய்தா, பாகிஸ்தான் பந்துகளைத் தேடி மட்டையிலடித்து மூச்சிறைக்க இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்குமாக ஓடி ரன்களைக் குவிக்கும் ஆட்டம் வேடிக்கையாக உள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான உங்கள் நிலைப்பாட்டுக்கும், அதை தெளிவாக வெளிப்படுத்திய உங்கள் பதிவுக்கும் நன்றி.

10/08/2006 5:15 AM  
Blogger ROSAVASANTH said...

பாலா, எனது கருத்துக்களை தெளிவாகவும், பலமான வாதமாகவும் முன்வைத்திருப்பதாக எழுதியதற்கு நன்றி. ( நான் எழுதியதை ஒருமுறையாவது ஒழுங்காக நீங்கள் படித்துவிட்டுத்தான் இதை சொல்கிறீர்களா என்று ரொம்பவே சந்தேகம் இருப்பதால், இந்த பாராட்டை ஏற்க மிகவும் சங்கடமாக இருக்கிறது. ) ஆனால் ஒரு பதில் நாகரீகத்திற்கு கூட உங்கள் பதிவு பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. படிக்க முனைந்தேன்; ரொம்ப கொடுமையாக இருந்தது. இப்போதெல்லாம் இது போன்றவற்றை முழுமையாக படித்து பதில் சொல்லும் பொறுமையை வேண்டுமென்றே வைத்துகொள்தில்லை. அப்படி செய்வதற்கு சிறிய அளவில் கூட பலனும், ரெலவன்ஸும் இருப்பதாக தோன்றவில்லை. அதனால் உங்கள் பதிவை சில பத்திகளுக்கு மேல் முழுவதும் படிக்க முனையவில்லை. (செல்வன் எழுதியது அதைவிட மகா கொடுமை. ஆனால் ஏற்கனவே அவர் பதிவுகளை படித்திருந்த எனக்கு அதைவிட அதிகமாக அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.)

ஏதோ சும்மா போகிற போக்கில் கருத்து சொல்வதாய் நினைக்கக் கூடாது என்பதற்காக சொல்கிறேன். (அப்படியில்லாமல் மாய்ந்து மாய்ந்து எதிர்கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் (அளித்த போதும்), போகிற போக்கில் சொல்லி செல்வதாகவே சொல்வார்கள் என்பதும் தெரியும்.)

உதாரணமாய் இரண்டு விஷயங்கள். அஃப்சல் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்ட மூளை கிடையாது. தாக்குதலுக்கு உதவியதாக மட்டுமே அவர்மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது. நீங்களோ மாற்றி மாற்றி, இந்திய பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியவனை என்ன செய்யலாம் என்பது பற்றி 'விவாதித்து' இருந்தீர்கள். இந்த தாக்குதலை திட்டமிட்டு நிறைவேற்றியவர்களை இந்திய சட்டம் நெருங்கப் போவதில்லை என்பது என் பதிவில் உள்ள ஒரு வரி.

அடுத்து, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொல்பவர்களை பொதுப்புத்தி என்று நான் சொன்னதாக எடுத்துக் கொண்டு பதிவு போகிறது. சட்டம் தன் கடமையை செய்வது என்பதற்கு என்ன பொருள், கடமையை செய்வது என்பதற்கு - இந்த வரியில் குறிப்பது போல் - ஒற்றை அர்த்தம் ஏதாவது இருக்கிறதா, அதெப்படி சட்டம் பலனை எதிர்பார்க்காமல் தன் கடமையை செய்யும் என்ற கேள்விகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். (அதை இங்கே எழுப்புவது ரொம்ப அதிகப்படியாக இருக்கும்). நான் பொதுபுத்தி என்று சொன்னது, ஒரு குற்றத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்படும் நபரை முதன்மை குற்றவாளியாகவும், அவர்தான் பாராளுமன்றத்தை தாக்க எல்லாவகையிலும் காரணம் என்பது போலவும், அவரை பற்றிய எந்த பரீசீலனையிலும் ஈடுபடுவது மகா பாதகமான செயல் என்று சொல்வதை பற்றியும். இந்த பொதுபுத்திக்கு முக்கிய உதாரணமாக அளித்திருந்தது அஃப்சலை அல்ல, கிலானி என்ற அப்பாவியை! அவர் அனுபவித்த கொடுமைகளுக்கு என்ன பதில் என்பது வேறு கேள்வி. அவர்மீது குற்றச்சாட்டு இருந்த வரையில் அவரை பொதுபுத்தி எப்படி பார்த்தது என்பதும், ஒருவேளை அவர் (போலி ஆதாரங்களை மீறி) தப்பித்திருக்கவில்லை என்றால் பொதுப்புத்தி எப்படி பார்க்கும் என்பதை பற்றியது. (இன்னொரு உதாரணமாய் ராஜிவ் கொலை வழக்கில் கூட்டமாய் தூக்கில் போட தீர்ப்பளித்தது பற்றியது.) கொஞ்சம், நேர்மையாக சிந்திக்கும் பழக்கம் உள்ள எவரும் கிலானி பற்றி பேசிவிட்டு மற்றவற்றை பேசியிருக்க வேண்டும்.

நான் சொன்ன எதையும் சிறிய அளவில் கூட கணக்கில் கொள்ளாமல் எதையோ இத்தனை பேர்கள் எழுதுகிறார்கள். அதற்கு கூட்டம் கூட்டமாய் பாராட்டுக்கள் வேறு! இதை பார்த்து மனச்சோர்வு எதுவும் எனக்கு வரவில்லை. ஏனெனில் வேறு எதையும் நான் இங்கே எதிர்பார்க்கவில்லை. மற்றபடி இந்த பதிவை எழுதியது, வாய்திறப்பது என் கடமை என்று தோன்றியதால் மட்டுமே. கொள்வாரே இல்லாமல் போனால் கூட கவலைப்படாத முதிர்ச்சி வந்துவிட்டதாக இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மீண்டும் உங்கள் கருத்துக்கு நன்றி,

10/09/2006 4:23 PM  
Blogger ROSAVASANTH said...

மற்ற பின்னூட்டங்களுக்கும் நன்றி. சில பதில்களை பிறகு வந்து எழுதுகிறேன்.

10/09/2006 4:31 PM  
Blogger முத்து(தமிழினி) said...

//இந்துத்துவாதிகளின், தேசியவாதிகளின் கேள்வி கேட்கப்படமுடியாத ஹீரோவிக்கே இந்த கதி என்றால் சாமான்ய முஸ்லிம்கள், அதுவும் காஷ்மீர் பிரச்சினையில் கருத்து தெரிவிக்கும் தமிழ் முஸ்லீம்கள் எல்லாம் எம்மாத்திரம்?//

good pondi..excellent point..

10/09/2006 6:31 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

//( நான் எழுதியதை ஒருமுறையாவது ஒழுங்காக நீங்கள் படித்துவிட்டுத்தான் இதை சொல்கிறீர்களா என்று ரொம்பவே சந்தேகம் இருப்பதால், இந்த பாராட்டை ஏற்க மிகவும் சங்கடமாக இருக்கிறது. )
//
இரு முறை படித்தேன். இதை எழுதுமுன் மறுபடி படித்தேன்.

//ஆனால் ஒரு பதில் நாகரீகத்திற்கு கூட உங்கள் பதிவு பற்றி என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. படிக்க
முனைந்தேன்; ரொம்ப கொடுமையாக இருந்தது. இப்போதெல்லாம் இது போன்றவற்றை முழுமையாக படித்து பதில்
சொல்லும் பொறுமையை வேண்டுமென்றே வைத்துகொள்தில்லை.
//
முதலில், நான் அஃப்சலுக்கு மரணதண்டனை தான் சரி என்று எங்கும் வாதிடவில்லை. நான் என் பதிவில் கூறியது
"தீவிரவாதத்திற்கு துணை போனதாக அஷப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக படித்துத்
தெளியாததும் இதற்கு ஒரு காரணம்.". தலைப்பே 'அஃப்சல் மரண தண்டனை --- சில எண்ணங்கள்' என்பது தான்.
மேலும், நடுநிலைமையாகத் தான் எழுதியிருப்பதாக என் எண்ணம். உங்களுக்கு கொடுமையாகப் படுவது,
இன்னொருவருக்கு நன்றாக / நேர்மையாக இருப்பதாகப் படலாம்.

//உதாரணமாய் இரண்டு விஷயங்கள். அஃப்சல் பாராளுமன்ற தாக்குதலை திட்டமிட்ட மூளை கிடையாது. தாக்குதலுக்கு உதவியதாக மட்டுமே அவர் மீது நீதிம்னறத்தில் குற்றம் சாட்டப்பட்டு, அது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு
தீவிரம் என்பதை முன்வைத்து விவாதம் அமையவேண்டும் என்பதுதான் நான் எழுதியது. நீங்களோ மாற்றி மாற்றி, இந்திய பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியவனை என்ன செய்யலாம் என்பது பற்றி 'விவாதித்து' இருந்தீர்கள்.
//
'திட்டம் தீட்டியது' என்று ஓர் இடத்திலும், 'துணை போனது' என்று பதிவின் ஆரம்பத்திலும், இரு விதமாக எழுதியது தவறு
தான். இந்த தீவிரவாதப் பிரச்சினையில், என்னளவில், திட்டம் தீட்டுவதற்கும், நடத்த உதவுவதற்கும் (logistics) பெரிய வித்தியாசமில்லை. மாறுபடுவது உங்கள் உரிமை !

நான் கேட்ட, "திட்டம் தீட்டி சாதாரண பொதுமக்களை குண்டு வைத்துச் சிதறடிப்பது, 'தேசத் துரோகம்' என்ற வரையறைக்குள் வருமா, வராதா ??? அதற்கு மரண தண்டனை வழங்கலாமா, கூடாதா ??? " என்பது, அஃப்சல் பாராளுமன்றத்தையே தாக்குவதற்கு உதவி செய்தான், அது தேசத்துரோகம், அதனால் மரண தண்டனை சரி என்று
சொல்பவர்களுக்காக ! நீங்கள் வேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்பது என் எண்ணம் !

//ஆனால் எந்த வித விவாதத்திற்கும் தயாராக இல்லாத மனங்கள், கொல்வது மட்டுமே தர்மம் என்றும், அதில் இருந்து
விலகி சிந்திப்பவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று நினைக்கும் ஒரு சூழலில்
//
என்று நீங்கள் கூறியதைத் தான், நானும், "அஃப்சலின் தண்டனைக்கு எதிராக, காஷ்மீரத்துப்பெண்டிர், "Brother Afsal, We are proud of you" என்று பேனர் கட்டி ஊர்வலம் நடத்துவது மற்றும் "பாராளுமன்றத்தைத் தாக்கியது தேசத் துரோகத்தின் உச்சம்" என்று கூக்குரலிடுவது என்று இரு தீவிர நிலைப்பாடுகளையும், அவற்றின் நடுவே பலவிதமான
நிலைப்பாடுகளையும் நாம் பார்க்கிறோம்." என்று சுட்டியிருந்தேன் !!!!!

நீங்கள் கூறிய, "மிக நிதானமாக செய்யப்படும் அங்கீகரிக்கப்பட்ட கொலையை செய்வது, ஒரு நாகரீக சமுதாயத்தில் நடக்க
முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் தூக்கு தண்டனையை எதிர்க்கிறேன்." என்பதற்கு பொதுவான (அஃப்சல் விஷயத்தை முன் வைத்து அல்ல!) மாற்றுக் கருத்தாக

"இப்படி, பொத்தாம் பொதுவாக, 'நாகரீக' சமுதாயம் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு, திட்டம் தீட்டி, குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதம், எதிர்க்கத் திராணியில்லா இளம் சிறுமியை
வன்புணர்ந்துக் கொல்லும் வக்ரம் போன்றவைகளில் ஈடுபடும் கயவர்கள், "நாகரீக" சமுதாயத்திலிருந்து களையப்பட
வேண்டியவர்களே என்ற பதிலை கூற இயலும். மரண தண்டனையை எதிர்ப்பவர்களின் "பொதுப்புத்தி" என்று அவர்கள் கூறும் காரணங்களையும் எளிதாக நிராகரிக்க இயலும் !!!" என்று கூறியிருந்ததற்குக் காரணம், நீங்கள் அஃப்சலைத் தாண்டி
எடுத்த பொது நிலைப்பாடுக்காக மட்டுமே !!!

//அந்த வகையில் செயல்படும் சிறுபான்மை அறிவுஜீவிகளை நான் மிகவும் மதிக்கிறேன்.
//
ஒரு அப்சர்வேஷனாக, இந்த மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், high profile கேஸ்களில் மட்டும் மூக்கை நுழைத்துப் போராடுவது, அவர்கள் நோக்கத்தின் மேல் சந்தேகம் கொள்ள வைப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நீங்கள் என் பதிவை முழுதும் படிக்கவில்லை என்றதால்,

"அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிப்பதை "பொதுப்புத்தி" என்று நிராகரிப்பது பற்றிப் பார்ப்போம். ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை என்பது, அது நிகழ்ந்த சூழல், விசாரணையின் வாயிலாக சட்டத்தின் முன்
நிறுத்தப்பட்டவை, அது போன்ற குற்றங்களைத் தடுக்க deterrent ஆக தீர்ப்பு இருக்க வேண்டிய அவசியம், என்று பல விஷயங்களைச் சார்ந்தது." என்றும்

"போரில் ஈடுபடுவதும், மிருகங்களை மதத்தின் பெயரால் பலியிடுவதும் கூட நாகரீகமான சமுதாயங்கள் செய்யக் கூடாதது தான் ! தீவிரமான குற்றங்களால், தனிப்பட்ட அளவில் பெருமளவு பாதிக்கப்பட்ட / பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஜீவன்களுக்கும், சாதாரண பொதுமக்களுக்கும், அரசும், சட்டமும், சமூகமும் நம்பிக்கையூட்டும் வண்ணம் செயலாற்றுவது மிக அவசியம் ! சமூகத்திற்கு அது கடமையும் கூட ! இதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்." என்றும்

எழுதியிருந்தும், உங்களுக்கு பதிவே "கொடுமையாக"ப் பட்டால், 'அது உங்கள் கருத்து' என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. நன்றி.

10/09/2006 9:03 PM  
Blogger ROSAVASANTH said...

பாலா, விரிவான பதிலுக்கு நன்றி. நான் உங்கள் பதிவை படித்த அளவில் இரண்டு பிரச்சனைகளை சுட்டியிருந்தேன். அதில் இரண்டாவதாக பொதுபுத்தி என்று நான் சொல்வதில் வெளிபடும் வன்முறையாக நான் குறிப்பிட்ட கிலானி, ராஜிவ் கொலைவழக்கு பற்றி நீங்கள் மீண்டும் பேசவில்லை. அடுத்து நீங்கள், 'தாக்குதலை திட்டம் தீட்டுவதும், அதில் ஒரு வகையில் பங்கு கொள்வதும் ஒன்றுதான்' என்று ஒரே போடாக போடுவது கொஞ்சம் அதிர்சியாகவும், பதிலளிக்க அயர்ச்சியாகவும் இருந்தது.

இறுதியாக சில விஷயங்கள். நாம் சந்தித்த போது இஸ்ரேல் பற்றி நான் ஏன் எழுதவில்லை என்று கேட்டு, இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதல் unproportional என்று சொன்னீர்கள். அதாவது இரண்டு இஸ்ரேலிய வீரர்களுக்காக லெபனான் மீது இத்தனை பெரிய தாக்குதலை நடத்துவது தவறு என்பதாக உங்கள் வாதம் இருந்தது. அதை ஒத்து நடுநிலை என்று கருதிக்கொண்டு இரண்டு பக்கமும் விமர்சனம் வைத்து ஒரு பதிவு எழுதினீர்கள். இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் போது 'நடுநிலை பேணுவது' (அல்லது அவ்வாறு தனக்கு தானே நினைப்பது) போன்ற அநீதி கிடையாது. ஏனெனில் இந்த நடுநிலமை மீண்டும் இந்த பொதுப்புத்தி சார்ந்தது. இரண்டு வீரர்களை ஹெஸ்போலா கடத்தியதற்காக இந்த தாக்குதல் எனும்போதே அநியாயமான தர்க்கம் வந்து விடுகிறது. அப்படி பேசும் போது 20 வருடங்களாக இஸ்ரேல் ஹெஸ்புலா வீரர்களை கடத்தி சிறை வைத்திருப்பது ஒரு விஷயமில்லாமலும், அங்கீகாரத்திற்கு உரியதாகவும் ஆகிவிடுகிறது.

இந்த விஷயத்துடன் தொடர்பில்லாமல் பேசுவதாக தோன்றலாம். யாருக்காவது தொடர்பு புரியக்கூடும் என்று எழுதியுள்ளேன். நன்றி.

10/10/2006 3:49 PM  
Blogger ROSAVASANTH said...

Krishna என்ற பெயரில் ஒரு பின்னூட்டம் வந்துள்ளது. அதில் உள்ள ஒரே ஒரு வரி

"பிராமணனாக பிறந்துவிட்டு திராவிடர் சார்பாக ஜல்லியடிக்கிறீங்களா? இது நியாயமா?".

(அவர் profile போய் பார்த்ததில்) இது ஒரு போலி பின்னூட்டமாக இருக்கக் கூடும் என்று தோன்றியதால், அந்த ஐடியில் வெளியிடாமல், இப்படி இடுகிறேன்.

10/10/2006 5:19 PM  
Blogger ROSAVASANTH said...

இணையத் தொடர்பு தொடர்சியாக இல்லாததால் நண்பர்களின் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் எழுத முடியவில்லை. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சுமு சொன்னதுபோல், வேறுபடும் கருத்தை மட்டும் எழுத பாலாவிற்கு பதில் அளித்துள்ளேன். பெரும்பான்மையிடம் வெறித்தனமாய் வெளிப்படும் கருத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் இங்கே கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

10/10/2006 7:16 PM  
Blogger சுவனப்பிரியன் said...

பாராளுமன்றத் தாக்குதலில் அஃப்ஸலின் பங்கு!

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13, Terror Over Democracy By Nirmalangshu Mukherji: A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

ரோசா வசந்த்!

உங்களின் பல ஆக்கங்களை தொடர்ந்து படித்து வருபவன். உங்களின் பதிவுகளை தமிழ் மணத்தில் ஏன் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை? உங்களுக்கு நான் அனுப்பும் முதல் பின்னூட்டம் இது. உங்கள் பதிவுக்கு மேலதிக விபரங்கள் அஃப்ஸலின் மனைவியின் கடிதம் மூலம் கிடைக்கும் என்பதால் அந்த கடிதத்தின் ஒரு பகுதியை அனுப்பியுள்ளேன். பார்த்துக் கொள்ளவும்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

10/10/2006 10:31 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

வசந்த்,
//அதில் இரண்டாவதாக பொதுபுத்தி என்று நான் சொல்வதில் வெளிபடும் வன்முறையாக நான் குறிப்பிட்ட கிலானி, ராஜிவ் கொலைவழக்கு பற்றி நீங்கள் மீண்டும் பேசவில்லை.
//
சட்டம் தவறு செய்யும் வாய்ப்பு உள்ளது. சட்டத்திற்கு முன்னால் வைக்கப்படும் ஆதாரங்களைக் கொண்டே நீதி வழங்கப்படுகிறது. அதனாலேயே, தீவிரமான குற்றங்களுக்கு மரண தண்டனை ஒரு போதும் வழங்கக்கூடாது என்று கூறுவது சரியான வாதமா என்ற கேள்வி எனக்கிருக்கிறது. அவ்வளவு தான் என்னால் கூற முடிகிறது.

ஒரு சின்ன திருத்தம், அது unproportional இல்லை, disproportional.

10/11/2006 1:04 AM  
Blogger லிவிங் ஸ்மைல் said...

After all, தேசபக்தி என்ற பேரில் அரசு நடத்தும் நாடகம் இது, அதற்கு நம்ம தியாக மைந்தர்களின் உருக்கும் அதைவிட சூப்பர் நாடகம்.

இவர்களைப் பொருத்தவரை நாட்டுப்பற்றுன்னா... கிர்க்கெட், ஆஸ்கார் (இந்திய மசாலா சினிமாவுக்கு என்பதை நோக்கவும்);

கருமம்; கருமம்;

பின்ன... உருப்படியா எதுனா பேசினா, அவங்க தேச துரோகி..

வெளங்கிறும்...

பி.கு. title நச்...

10/11/2006 3:30 PM  
Blogger ROSAVASANTH said...

சுவனப்பிரியன் அஃப்சலின் மனைவியின் வாக்குமூலத்தை இங்கே முன்வைத்ததற்கு நன்றி.

பாலா, நான் பேசியது சட்டம் தவறு செய்யுமா என்பதை பற்றி அல்ல (தவறும் செய்யக்கூடியதாக சட்டம் இருக்குமெனில், ' சட்டம் தன் கடமையை செய்யட்டும்' என்பதாக நீங்கள் சொல்வதற்கு என்ன பொருள் என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும்). நான் பேசியது, சட்டத்தின் துணையுடன், ஒரு அப்பாவி சித்ரவதை செய்யப்பட்டு, அநிதியான தூக்கு தண்டனை அளிக்கப் படும்போது, பொதுபுத்தி என்பது எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றியது. இதை என் பதிவை படிக்கும் சிறுவர் சிறுமியரும் விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் தொடர்ந்து நீங்களும் மற்றவர்களும் வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். வேறு எதற்கோ பதில் சொல்கிறீர்கள்! இந்த சூழலில் விவாதிப்பது சாத்தியமில்லை என்பதை சொன்னால், அது திமிராகவும் பலருக்கு தெரிகிறது. ஆகையால் வேறு ஏதாவது நாம் பேசமுடியுமா?

லிவிங் ஸ்மைல், முதல் முறையாக என் பதிவில் எழுதும் பின்னூட்டத்திற்கு நன்றி.

10/11/2006 6:04 PM  
Anonymous Anonymous said...

அப்சல் வழக்கு பற்றி அல்ல. பொதுவாக மரண தண்டனை பற்றிய என் எண்ணங்கள்:
1. 'திருத்தப் பட முடியாத தீர்ப்பு' என்ற ஒரே காரணம்தான் மரண தண்டனைக்கு எதிராக செல்லுபடியாகும்.
2. ஒரு அரசாங்கம் திட்டமிட்டு இயந்திர கதியில் ஒருவர் உயிரை எடுப்பது - என்கிற விஷயம் உண்மைதான். ஆனால், குற்றவாளிகளும் அதை விட தெளிவாக திட்டமிட்டுத்தான் செயல்படுகிறார்கள். ஒரே வித்தியாசம், அவர்கள் திட்டம் போடும்போது மீடியாகாரர்கள் யாரையும் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லை. அப்படி செய்தால், அதில் உள்ள குரூரமும் நன்கு வெளிப்படும். குற்றம் நடந்து முடிந்தபின் வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு அமைதியாக அவர்கள் வெளிப்படும் போது அவர்களை திட்டமிட்டு தண்டித்ததுதான் பெரிய பாவம் போல் தோன்றி விடுகிறது.

3. அரசாங்கம் குற்றவாளிக்கு உரிய வாய்ப்பை அளித்து கீழ்கோர்ட், மேல்கோர்ட் என்று அவன் தரப்பை எடுத்து வைக்க நேரம் கொடுத்து, அதுவரை அவனுக்கு உணவளித்து காப்பாற்றுகிறது. இதன் முடிவில் தண்டனையோ, விடுதலையோ வழங்குகிறது. இதுவே நாகரிக சமுதாயம் செய்யக் கூடியது (நடைமுறையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அடிப்படை அமைப்பை குறை சொல்ல முடியாது). இதை 'திட்டம் போட்டு அரசாங்கம் கொல்கிறது' என்று சொல்வது சரியல்ல. இதை விட சிறப்பான நடைமுறை ஒன்று இருந்தால் அதை பின்பற்றலாம்.

-vp

10/25/2006 5:21 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter