ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, December 15, 2009

Sinuses

நான் சிலேயில் பத்து நாட்கள் இருந்தபோது அங்கே வாழ்க்கை என்பதே ஒரு கார்னிவலாக இருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் ததியாங்கியின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தார்கள். ததியாங்கி Reggaeton இசையின் முன்னோடிகளில் ஒருவர். எஸ்பேனால் மொழிபேசும் எல்லா நாடுகளிலும் இவருடைய பாடல்களை கேட்காமல் யாரும் ஒரு நாளை கடந்து விட முடியாது. வால்பரைசோ நகரை சுற்றி காட்டிய வேனோட்டியிடம், காரின் FMஇல் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முன்வைத்து ததியாங்கியை பற்றி நான் பேசியபோது, காரை நிறுத்தி சந்தோஷத்தில் என்னை கட்டி கொண்டார். அம்மன் கோவில் பாடல்கள் தரத்தில் இருக்கும் சினிமா இசையை கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ததியாங்கியின் பெயரை யாரும் கேள்விபட்டிருக்க கூட வாய்பில்லை. ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சிலேயில் இருந்து இந்த நரகத்திற்கு வந்த மறுநாள், லஞ்ச் நேரத்தில் அபிஷேக்கிடம் ததியாங்கி பற்றியும், லத்தீன் அமேரிக்க மக்கள் வாழ்வை கொண்டாடுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அவன் "தமிழ் நாட்டிலும் மக்கள் சினிமா பாட்டு கேட்டுகொண்டு வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?" என்று கேட்டான். நான் அருவருத்து போய் மீதி உணவை சாப்பிடாமல் எழுந்து வந்துவிட்டேன். அத்துடன் அவனுடனான என் உறவையும் முறித்துக் கொண்டுவிட்டேன்.

கடந்த சனிக்கிழமை காலையிலிருந்தே வீட்டில் ஏகப்பட்ட வேலைகள். வீட்டை ஒழுங்கு படுத்துவதுடன், நான்தான் சமைக்க வேண்டியிருந்தது. மதியம் வெளியே சென்றபோது வாகனபுகை ஒத்துகொள்ளாமல் சைனஸ் தலைவலி தொடங்கியது. சைனஸ் என்பது எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைக்கக் கூடிய அளவிற்கு கொடியது. (எதிரிக்கு இரங்கும் சிந்தை இருந்தால் இப்படி நினைக்கலாம். யாரையாவது பழிவாங்கும் வரம் கிடைத்தால் அவருக்கு சைனஸ் வரச்சொல்லி கேட்கலாம்.) அதை தலைவலி என்ற வார்த்தையால் விவரிக்க முடியாது. நெற்றி, கண்களுக்கு கீழே மையம் கொண்டு, முகம் முழுக்க மந்தமாய் வலி பரவியிருக்கும். வலியை பற்களிலும் தாடையிலும் உணர முடியும். கை கால்கள் கூட சோர்ந்துவிடும். இப்படி கொடுமையான சைனஸ் தலைவலியிலும், மனதை மாற்றிக்கொள்ளாமல் சாருநிவேதிதாவின் 10 நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னே எனக்கு பிடிக்கவே பிடிக்காத தென்னிந்திய உணவான வடையும், போண்டாவோ ஏதோ ஒன்றும் கொடுத்தார்கள். பசியில் தலைவலி அதிகமாகிவிடக்கூடதே என்று நானும் வாங்கிக்கொண்டேன். கைகளிலும், தட்டிலும் ஒரே எண்ணெய். தமிழ் மக்களால் ஏன் பிரஞ்சுகாரர்கள் போல் 90 ஆண்டுகள் வாழமுடியவில்லை என்று புரிந்தது. காபியையும், டீயையும் பாலுடன் கலந்து தயாரித்து அளித்ததை கண்டு எனக்கு குமட்டியது. என்னை போல ஐரோப்பிய மனம் கொண்டவனுக்கு இப்படி எதையும் விஷமாக்கி உட்கொள்வதை தாங்கி கொள்ளவே முடியாது. "ப்ளாக் டீ கிடைக்குமா?' என்று நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சிலேயாக இருந்திருந்தால் பச்சை மீனும், வொயினும் கொடுத்திருப்பார்கள்; கொடுத்தார்கள். அங்கே மதுவுடனே இது போன்ற நிகழ்வுகள் துவங்குகின்றன. இங்கேயோ நிகழ்வு முடிந்து குடிக்க போகிறோம், குடிக்க போகிறோம் என்று எதோ வெடிகுண்டு வைக்கப்போவது மாதிரியான ஒரு ஆண்டி எஷ்டாபிலிஷ்மெண்ட் காரியம் செய்வது போல பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா இறுதியில் தனது பேச்சு கோர்வையற்றபோது "சரி, நான்லீனியராவே பேசலாம்" என்றார் சாரு. அதையும், அவரையும் முன்மாதிரியாக வைத்து உதாராகவும், யதார்த்தமாகவும், ஒரு மூட் வரவழைத்து கொள்வதற்காகத்தான் கலந்து கட்டி மூன்று பத்திகளை சும்மா மேலே எழுதியுள்ளேன்.

பழைய ஹிந்தி பாடல்களில் ஆழ்ந்து, ரசனை ஒன்றினை உருவாக்கி கொள்ளாத, இளயராஜா பிடிக்காது என்று கற்பித்து கொண்ட துரதிர்ஷ்டவாதிகள், யூ ட்யூபில் ததியான்கியை தேடி கேட்கவும். (அதுவும் முடியாதவர்கள் நான் வேறு ஒரு சந்தர்பத்தில் அறிமுகப்படுத்த நேரும் வரை காத்திருக்கவும்). மற்றவர்கள் இந்த பாடலை அல்லது இந்த இன்னொரு பாடலை கேட்டுகொண்டே இந்த பதிவை வாசிக்கலாம். (அண்மையில் கேட்டிருக்காவிட்டால்) இரண்டு பாடல்களும் திரும்ப திரும்ப கேட்கவைக்கும் தன்மை கொண்டவை. அதனால் இந்த பதிவை வாசிப்பதை இடையிடையே நிறுத்தி, ஒரு counter point எஃபக்டிற்காக, பாட்டை மீண்டும் ஒரு முறை கேட்டுவிட்டு, பதிவை படிப்பதை தொடரலாம்.

அறிவித்திருந்த நேரமான ஐந்தரைக்கே கிட்டதட்ட போய்விட்டேன். விழா ஆறரை போலத்தான் துவங்கியது. நான் பேசக்கூடிய பரிச்சய முகங்கள் எதுவும் தென்படாமலும், சாருவிடமும் மற்றவர்களிடம் மீள் அறிமுகம் செய்து கொள்ளும் விருப்பமில்லாமல், ஒரு மணிநேரத்தை மொக்கையாக தலைவலியோடு சிந்திப்பது போல் அங்குமிங்கும் நடந்தபடி கழித்தேன். சாருவால் மோசமாக திட்டப்பட்ட யுவன் சந்திரசேகரை பார்த்து ஆச்சரியப்பட்டதை தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி அந்த ஒரு மணியில் நடக்கவில்லை. கூட்டத்திற்கு நான் வந்த காரணத்தை தர்க்கப்படுத்திக் கொண்டிருந்தேன். வீட்டின் அருகில் என்பது ஒரு அற்பமான காரணம். சாரு நிவேதிதா இன்று ஒரு செலிபிரிடியின் இடத்தை அடைந்திருக்கிறார். வேறு யாருக்கும் இல்லாத வகையில், இல்லாத அளவு அவருக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இது தமிழ் கலாச்சார சூழலையும் பாதிப்பதாக இருக்கிறது. எழுத்து ஊடகம் மட்டுமின்றி, விஜய் டீவி போன்றவற்றின் நிகழ்ச்சிகள் மூலமாக சாரு தமிழ் பொதுபுத்தியில் செய்யும் இடையீடுகளையும் நான் ஆதரிக்கிறேன். இதன் தொடர்பாக தமிழ் எழுத்துலகம், கலாச்சாரம் குறித்து அக்கறை உள்ள, சாருவின் எழுத்தை கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக வாசிப்பனான நான், இந்த 10 நூல் வெளியீட்டை முக்கிய நிகழ்வாக கருதுவதால் சென்றேன் என்பதாக சொல்லிக்கொண்டேன்.

இந்த பதிவை முற்றிலும் விமர்சன பூர்வமாக எழுதுவதற்கான காரணங்களை இவ்வாறாக சொல்லிக்கொள்கிறேன். சிறு பத்திரிகை சூழலில் அடைபட்டிருந்த காலம் முதல், புலம் பெயர்ந்த (ஈழ)தமிழர்கள் பத்திரிகை சூழலில் பாதிப்பை ஏற்படுத்திய காலம் வரை சாருவிற்கான (நான் உட்பட்ட) தீவிர ஆதரவாளர்கள் (அதே நேரம் எதிர்பாளர்களும்) உண்டு. அவர்கள் தீவிரமான சிந்தனையும், விமர்சன பூர்வமான மனப்பான்மையும் கொண்டவர்கள். சாரு தன் தீவிரத்தின் போலித்தனத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் போதெல்லாம் எளிதாக அதை அடையாளம் காணக்கூடியவர்கள். இதில் தமிழக சிறுபத்திரிகை சூழலில் சாருவின் பங்களிப்பை பொதிவாக பார்க்கும் நான், புலம் பெயர்ந்த ஈழத்தமிழ் சுழலில் அவர் நிகழ்த்திய பாதிப்பை ஆற்றல் விரயமாக பார்க்கிறேன். சாருவின் ஆற்றலை அல்ல, கடப்பாடுடன் கூடிய தீவிரத்தை கொண்ட ஈழத்தமிழர்கள் சாருவை முன்வைத்து விவாதித்து சண்டையிட்டு தங்கள் ஆற்றலை வீணடித்ததாக கருதியிருந்தேன். (எவ்வளவோ வீணடித்தத்தில் இது பெரிய பிரச்சனையில்லை என்றும் இப்போது தோன்றுகிறது). இன்றய இணைய சூழலில் நிலமை வேறு மாதிரி இருக்கிறது. சாருவின் சமீபத்திய ரசிகர்களுக்கு முந்தயவர்களுக்கு இருந்த தீவிரமும், விமர்சன பூர்வமான அணுகுமுறையும் இல்லை. கருணாநிதி, கமல், ரஜினிக்கு இருக்கும் ரசனை தன்மையை கொண்டதாக ஒரு ரசிக கூட்டம் அவருக்கு உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது ஆதரபூர்வமாக நாம் ஒரு விஷயத்தை சுட்டி காட்டி, அவர்களிடம் எதிர் ஆதரமோ தர்க்கமோ இல்லாத நிலையிலும் தீவிர ஆதரவு நிலையை கொண்டிருப்பது, சாருவை விமர்சிப்பவரை கிட்டத்தட்ட எதிரிபோல பார்ப்பது போன்ற தன்மை கொண்டதாக சொல்லலாம். இத்தகைய ஒரு சூழல் இருப்பதோ, இதில் சாரு அளவுக்கு மீறி புகழையோ, பலனையோ, அங்கீகாரத்தை அடைவது எந்த விதத்திலும் ஒரு சமூக ஆபத்து அல்ல. சமூகத்தில் யார் யாரோ அநியாயமாக பிழைக்கும் போது ஒரு எழுத்தாளன் நியாயம் என்று நாம் நினைப்பதற்கு அதிகமாக பலன் பெறக்கூடாதா? ஆனால் இந்த மொத்த விஷயத்தில் சாரு முன்வைப்பதாக அவரும் பலரும், குறிப்பிடும் அரசியலும், அவர் எழுத்துக்களில் இருப்பதாக கற்பிக்கப்படும் சப்வெர்சிவ் தன்மையும் கொச்சையாகியும், நீர்த்தும், போலியாகியும், சில இடங்களில் ஆபத்தாகவும் போகிற காரணத்தால், இத்தகைய அரசியலுக்கு, சப்வெர்சிவ் செயல்பாடுகளுக்கு ஆதரவான நான் இதை விமர்சிக்கும் வேலையை என் தளத்திலிருந்து முன்வைக்கிறேன்.  இது எனக்கு நானே சொல்லிகொள்வதாக இங்கே எழுதிக்கொள்ளும் காரணம். வாசிப்பவர்கள் தங்கள் பார்வைக்கேற்ப காரணங்களை கற்பிக்க முடியும். இனி நிகழ்வு குறித்த என் மனப்பதிவுகள். பலர் எழுதப்போவதாலும், சாரு வீடியோ தொகுப்பை தன் தளத்தில் வைக்கக்கூடும் என்பதாலும், எல்லா பேச்சுக்களை விரிவாக பதிவு செய்யாமல், என் விமர்சன கருத்துக்களை மட்டும் எழுதிச் செல்கிறேன்.

விழாவிற்கு சரியான கூட்டம், ஏகப்பட்ட கார்கள். ஃபிலிம் சேம்பர் நிறைந்து பலர் இடமில்லாமல் நின்று வழிந்த கூட்டம். ஒரு எழுத்தாளனுக்கான இத்தகைய அங்கீகாரம் தமிழ் சமூகத்தின் ஆரோக்கியமான கட்டத்தை குறிப்பதாகவே எனக்கு தோன்றியது. சற்று தாமதமாக அரங்கத்தில் நுழைந்ததில் உட்கார இடம் கிடைக்கவில்லை. பைகள், கர்சிப்களை போட்டு இடம்வேறு போட்டிருந்தார்கள். எந்த காலியான இருக்கைக்கு போனாலும் "ஆள் வராங்க" என்றார்கள். 'சாருவிற்கு வாசகனாக இருந்தும் திருந்தாத தமிழ் சமூகத்தை' அலுத்தபடி நிற்க தொடங்கினேன். ஒருவர் தனக்கு முன்னால் இருந்த வரிசையில் bag வைத்து தனது நண்பருக்காக இடம் பிடித்திருந்தார். "ஆள் வராங்களா?" என்று பக்கத்து இருக்கையிலிருந்த சம்பந்தமில்லாதவரை வரிசையாக பலர் தொந்தரவு செய்ய, பேக் வைத்தவர் அலட்டிகொள்ளவில்லை. ஒரு 15 நிமிடங்கள் பொறுத்து, நான் நேராக சென்று பேகை எடுத்து அவரிடம் கொடுத்து " உங்க ஃப்ரண்டு வந்தா எனக்கு சொல்லுங்க, அப்ப எழுந்து இடம் தரேன்" என்று அங்கே உட்கார்ந்தேன். நிகழ்வின் இறுதிவரை அந்த நபர் வரவேயில்லை.

நிர்மலா பெரியசாமியின் விழா ஒருங்கிணைப்பு கணீரென்றிருந்தது. சன்டீவியில் அவர் வாக்கியத்தை முடிக்கும்போதெல்லாம் ஏற்படுத்தும் ஒரு பிரத்யேக சத்தத்தை இங்கே தராமல் திருத்தியதில் ரம்மியமாக இருந்தது. புத்தகத்தை ஜிகினா பேக்கிங்கிலிருந்து எடுத்து தருவது, பெற்றுக்கொள்வது என்ற வைபவம் எல்லாம் முடிந்த பிறகு, மனுஷ்யபுத்திரன் பேசினார். சாருவின் உழைப்பு, வெளிப்படையான தன்மை என்று துவங்கி பேசியதில் சாருவின் நேர்மை, விமர்சனங்களை மதிப்பது என்பதாக சொன்னது மட்டும் எனக்கு நெருடியது. சா.காந்தசாமியும் சாருவின் நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்வது போன்றவற்றை பேசினார். (எழுத்தாளன் புத்திசாலியாக இருக்கக் கூடாது என்றெல்லாம் ஏதோ சொன்னார். அது பரவாயில்லை. ஆனால் பலருக்கு உவப்பான கருத்தை சொல்லக்கூடாது என்று சொன்னவர், அதை தான் ஏனோ செய்ய மறந்துவிட்டார்.) மனுஷ்யபுத்திரன் புத்தகங்களை வெளியிடுபவர். அவர் பேசியதை எல்லாம் பெரிது படுத்தக்கூடாது. சா.கந்தசாமி என்ற மூத்த எழுத்தாளர் இப்படி அப்பட்டமாக பொய் சொல்ல நேர்ந்தது என்னை படுத்தியது. (இதற்குள் அரங்க குளிரூட்டலில் தலைவலி அதிகமாக, விழா இறுதியில் சாகலாம் என்கிற நிலைக்கு தள்ளியது).

சாருவின் எழுத்தில் பல தன்மைகள் உள்ளதாக ஒருவர் கருதலாம். நிறுவபட்டவைகளை, ஒப்புக் கொள்ளப்பட்டவைகளை உடைப்பது, கலகம், பொதுபுத்தியை கேள்வி கேட்பது, நையாண்டி, வாசிப்பு சுவாரசியம் என்று நியாயமாய் சொல்லக்கூடியவற்றை பலவற்றை பேசாமால், நேர்மை, விமரசனங்களை கணக்கில் கொள்ளுதல் என்று சொன்னதில் இந்த நிகழ்வின் முதல் ஆபாசம் துவங்கியதாக எனக்கு தோன்றியது. யாராவது பின்நவீனத்துவத்தில் நேர்மைக்கு அர்த்தம் கிடையாது (குறைந்தது அதற்கு ஒற்றைத்தன்மை கிடையாது); வாழ்க்கையில் முரண்பாடுகள் இருக்கலாம்; எழுத்துக்கும் வாழ்வுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய தேவையில்லை என்றெல்லாம் சொன்னால் அது விவாதத்திற்குரியது. நான் ஆதரவான ஒரு நிலைபாடு கூட எடுக்க முடியும். சாருவின் எழுத்தில் வெளிப்படைதன்மை, தன்னை நிரவாணமாக்கும் தன்மை என்று எதையாவது சொன்னால் ஒப்புகொள்ளலாம், குறைந்த பட்சம் மறுப்பு சொல்லாமலாவது இருக்கலாம். (தன் சொந்த விஷயங்கள் (மற்றவர்களின் சொந்த விஷயங்கள்) பற்றியெல்லாம் அப்பட்டமாக எழுதுகிறாரே.) ஆனால் நேர்மையும், விமர்சனத்துக்கான ஜனநாயக தன்மையும் இருப்பதாக சொல்வது அப்பட்டமான பொய்.

ஒரு மறுக்க முடியாத உதாரணத்தை எடுப்போம். ஆபிதீன் சுமார் இரண்டு வருடங்கள் பல தளங்களில் புலம்பிய எழுத்து திருட்டு பற்றி சாரு வாயையே திறந்ததில்லை. போகிற போக்கில் எங்கேயோ ஆபிதீன் மோடி மஸ்தான் வேலை செய்து ஏமாற்றுவதாக பெயர் குறிப்பிடாமல் அயோக்கியத்தனமாக எழுதினார். ப்ரேம் தான் எழுதியதை சாரு தன் பெயரில் போட்டுகொண்டதாக சொன்னதற்காக, 'ஆடைகளை அவிழ்த்து கலகம் செய்ததை' ராஸலீலாவில் புனைவாக்கியவர், அதை மீண்டும் பெருமையாய் பதிவுகளில் சொல்லிகொள்பவர், ஆபிதீன் விஷயத்தில் செய்தது என்ன? (என்ன லாஜிக்? இனி நாட்டில் பொய்யாகவோ நிஜமாகவோ, திருட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாம் போலிஸ் ஸ்டேஷனில் ஒரு முறை நிர்வாணமாக நடந்து காட்டினால் போதுமானது போலும்.) சில வருடங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களுக்கு மறந்துவிடும் என்கிற அரசியல்வாதியின் தைரியத்தை போன்றதை விட, எந்த நேர்மையின் பலத்தில் இந்த விஷயத்தை எதிர்கொண்டார். இந்த ஒரு விவகாரமே பல பதிவுகள் எழுதக்கூடிய அளவிற்கு விஷயங்களை அடக்கியது. நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னது போல, ஆபிதீனின் கதையை தன் பெயரில் சாரு வெளியிட்டுகொண்டது கூட கயமைத்தனம் அல்ல. அது வாழ்வில் சருக்கிய ஒரு சம்பவம். அது குறித்த குற்றச்சாட்டு வந்தவுடன் நேர்மையாக எதிர்கொண்டிருக்க வேண்டும். எதிர்கொண்டிருந்தால் அந்த நேர்மையின் பலத்தில் தன் சாதனைகளை தக்க வைத்துக்கொண்டிருக்கலாம். சாரு எதிர்கொண்ட விதத்திற்கு கயமைத்தனம் என்று மட்டுமே பெயர். சாருவின் கயமைத்தனம் என்பது இதுடன் நிற்பது அல்ல. வெட்கமே இல்லாமல் ஜேமோ தமிழிசை கட்டுரையை 'திருடிய விஷயம்' பற்றி தார்மீகத்துடன் பேசுகிறார். இதுதான் சாரு ஸ்டைல். இதைத்தான் நேர்மை என்கிறார்கள். அசைக்க முடியாத உதாரணம் வேண்டும் என்பதற்காக இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டேன். மற்றபடி அவருடைய ஒவ்வொரு பதிவுகளிலும் சிரிப்பாய் சிரிக்கும் நேர்மைகளை வைத்து நாவலே எழுதலாம்.

விமரசனத்தை சாரு எப்படி எதிர்கொள்வார்? ஒன்று அதை கண்டுகொள்ளவே மட்டார்; அப்படி ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார். அல்லது அதை திரிப்பார். எதிராளியை கேவலமாக திட்டுவார். இதை தவிர வேறு எந்த விதத்தில் எந்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளார்? ஜெயமோகனையும், நாகார்ஜுனனையும் மிக மோசமாக திட்டியவை இதற்கான ஆதாரங்கள். என்னை பற்றியும் பொய்யாகவும், திரித்தும், வசைகளையும் கொண்டுதான் எதிர்கொண்டார். ஏதாவது ஒரு தருணத்தில் குறிப்பிட்ட விமர்சனத்தை அதன் நேரடியான பொருளில் எடுத்து அவர் எதிர்கொண்டது உண்டா? அவரது ரசிக சிகாமணிகளுக்கு அப்படி ஏதாவது ஒரு, ஒரே ஒரு, சந்தர்ப்பம் தோன்றினால் இங்கே பின்னூட்டமிடவும்.

அவருடைய தளத்தில் என்னவகை மாற்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன? 'ஒரு எதிர்வினை' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் பதிவினுள் நுழைந்தால் உள்ளே ஒரு அப்பட்டமான ஜால்ரா வினைதான் இருக்கும். இப்போதே பார்போம். உண்மையான விமர்சன நேர்மை என்பது எனது இந்த பதிவை எதிர்கொள்வது, குறைந்தது இதன் இருப்பை அக்னாலெட்ஜ் செய்வது. ஆனால் சாருவிற்கு அது ரொம்ப அதிகம். அதனால் உதாரணமாக சுரேஷ் கண்ணன் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். சாருவிற்கு ஆதரவாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் மேலோட்டமாக மென்மையாக சின்ன சின்ன விமர்சனங்கள் இருக்கின்றன. சாருவின் விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிவு என்பது சுரேஷ் கண்ணன் கட்டுரையை இருப்பை கூட ஒப்புகொள்ளாது. ஜால்ரா பதிவுகளை மட்டுமே அது அங்கீகரிக்கும்.

நேர்மையும், விமர்சனத்திற்கு இடமளிக்கும் ஜனநாயகம் இல்லாமலேயே கூட சாருவின் எழுத்து முக்கியமானது என்றுதான் நினைக்கிறேன். ஒரு ஒப்புமை கொண்டு விளக்க வேண்டுமானால் சாருவின் எழுத்தில் நேர்மை என்பது ராணுவ அதிகாரியிடம் இருக்கும் அகிம்சை மாதிரி. அதே நேரம் ஞாநியை எடுத்துக் கொண்டால் அவர் எழுத்து நேர்மையானது, விமர்சனங்களை கணக்கில் கொள்வது. நான் என் பார்வையில் சாருவின் எழுத்துக்களை, ஞாநியின் எழுத்துக்களை விட முக்கியமானதாக பார்க்கிறேன். ஞாநியின் எழுத்துக்களை ஒரு ஆபத்தாக பார்க்கும் அளவிற்கு, சாருவின் எழுத்தை ஆபத்தானதாக நான் பார்க்கவில்லை. ஆனால் சாருவிடம் இல்லாத பண்பை (தெரிந்து கொண்டே) இருப்பதாக மூத்த எழுத்தாளர்கள் புளுகுவது அசிங்கம் அல்லவா? (நான் குறிப்பிட்ட ஒரு விஷயம் மட்டுமல்ல, இலக்கிய சூழலில் பல விஷயங்கள் பலருக்கு தெரியும். பட்டியலிடும் அவசியம் இந்த சந்தர்ப்பத்தில் இருப்பதாக தோன்றவில்லை.

(பெரிதாகி விட்டதால் மீது அடுத்த பதிவில்).

Post a Comment

13 Comments:

Blogger -/பெயரிலி. said...

/நான் சிலேயில் பத்து நாட்கள் இருந்தபோது அங்கே வாழ்க்கை என்பதே ஒரு கார்னிவலாக இருப்பதை உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் ததியாங்கியின் பாடல்களை கேட்டு கொண்டிருந்தார்கள். ததியாங்கி Reggaeton இசையின் முன்னோடிகளில் ஒருவர். எஸ்பேனால் மொழிபேசும் எல்லா நாடுகளிலும் இவருடைய பாடல்களை கேட்காமல் யாரும் ஒரு நாளை கடந்து விட முடியாது. வால்பரைசோ நகரை சுற்றி காட்டிய வேனோட்டியிடம், காரின் FMஇல் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை முன்வைத்து ததியாங்கியை பற்றி நான் பேசியபோது, காரை நிறுத்தி சந்தோஷத்தில் என்னை கட்டி கொண்டார். அம்மன் கோவில் பாடல்கள் தரத்தில் இருக்கும் சினிமா இசையை கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் ததியாங்கியின் பெயரை யாரும் கேள்விபட்டிருக்க கூட வாய்பில்லை. ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. சிலேயில் இருந்து இந்த நரகத்திற்கு வந்த மறுநாள், லஞ்ச் நேரத்தில் அபிஷேக்கிடம் ததியாங்கி பற்றியும், லத்தீன் அமேரிக்க மக்கள் வாழ்வை கொண்டாடுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன். அவன் "தமிழ் நாட்டிலும் மக்கள் சினிமா பாட்டு கேட்டுகொண்டு வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?" என்று கேட்டான். நான் அருவருத்து போய் மீதி உணவை சாப்பிடாமல் எழுந்து வந்துவிட்டேன். அத்துடன் அவனுடனான என் உறவையும் முறித்துக் கொண்டுவிட்டேன்./

சாருநிவேதிதா சரடு வாசிப்பதுபோல ஒரு பிரமை. :-(

12/15/2009 9:25 PM  
Blogger -/பெயரிலி. said...

/விழா இறுதியில் தனது பேச்சு கோர்வையற்றபோது "சரி, நான்லீனியராவே பேசலாம்" என்றார் சாரு. அதையும், அவரையும் முன்மாதிரியாக வைத்து உதாராகவும், யதார்த்தமாகவும், ஒரு மூட் வரவழைத்து கொள்வதற்காகத்தான் கலந்து கட்டி மூன்று பத்திகளை சும்மா மேலே எழுதியுள்ளேன்./

அடச்சே! முதற்பந்தியுடனேயே முன்னைய பின்னூட்டத்தை வெறுத்துப்போய்ப் போடமுன்னால், இந்த வசனம்வரை நான் பொறுத்து இறங்கி வாசித்து வந்திருக்கலாம். :-(

12/15/2009 9:28 PM  
Blogger ROSAVASANTH said...

நன்றி பெயரிலி.

பொறுத்தார் பூமியாழ்வார்!

12/15/2009 9:51 PM  
Blogger KARTHIKRAMAS said...

என்ன கொடுமை? ரோசாவுக்கு என்ன ஆச்சு, மூடிவிடலாமா என்று எண்ணிக்கொண்டே வாசித்தேன். நல்ல வேளை பிழைத்தேன்!

12/15/2009 11:53 PM  
Blogger Prakash said...

ததியாங்கி//

பல முறை இணையத்தில் ஆங்கில வார்த்தை கொண்டு கலைஞர்களை தேடும் போது சிரமம் ஏற்படுகிறது. வாயை பிளந்து படிப்பதோடு ( வாசிப்பு அனுபவம்? ) நிறுத்தி கொள்ள வேண்டியுள்ளது.

12/16/2009 1:51 AM  
Blogger Raj Chandra said...

Roza,

The first few paragraphs, I thought you got inspired (?!) by Charu and started writing like him (Ok...enough, I don't want to bring another Sinus to you ;)).

//ததியாங்கி
Are you talking about "Daddy Yankee"?

12/16/2009 1:21 PM  
Blogger ROSAVASANTH said...

பின்னூட்டங்களுக்கு நன்றி. சில மணி நேரங்களில் வந்து பதில் சொல்கிறேன்.

12/16/2009 3:43 PM  
Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வந்திருந்தீர்களா..? பார்க்க முடியாமல் போய்விட்டதே..!?

12/16/2009 4:07 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், பிரகாஷ், உண்மை தமிழன் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ராஜ் சந்திரா, ஆமாம். நன்றி.

12/16/2009 5:51 PM  
Blogger ram said...

ரோசா,
ஜெயமோகன்-ஐ பற்றிய எந்த உருப்படியான விதமான விமர்சனமும் வைக்காமல் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி போகிற போக்கில் கருது சொல்வீர்கள்? இந்துத்வா என்ற ஒரே வார்த்தையை சொல்வது உங்களுக்கு எப்போது தான் போர் அடிக்க போகிறது? பெரியார் குறித்து, ஜாதி குறித்து,இந்து மதம் குறித்து மற்றும் பல விஷயங்கள் குறித்து அவருக்கு என்று ஒரு தனித்துவமான பார்வை இருக்கிறது. ஒன்று, நீங்கள் அதை ஏற்று கொள்ள வேண்டும் அல்லது அவர் கூறுபவற்றை விரிவாக மறுக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் ஒற்றை வார்த்தைகளை மட்டுமே உதிர்த்து கொண்டிருப்பது சரியா?

12/16/2009 8:34 PM  
Blogger ROSAVASANTH said...

ராம், நான் ஜெயமோகனை எதிர்கொண்டு , அவரது கருத்துக்களை மையப்படுத்தி எழுதும் போது விரிவான ஆதாரத்துடன், மேற்கோள்களுடன் என் கருத்துக்களை எழுதுவேன். இங்கே சாருவின் நூல் வெளியீட்டு விழாவில் அழகிய பெரியவன் பேசியதை முன்வைத்து பேசிக்கொண்டிருக்கிறேன். இங்கே முக்கிய பிரச்சனை ஜெயமோகனின் அரசியலுக்கு சாரு என்னவகை எதிர்வினை வைத்தார் என்பதுதான். 24 மணி நேரத்தில் 3 பதிவுகள் எழுதும்போது என்னால் இப்படித்தான் எழுத முடியும்.

ஆனால் ஜெமோ பற்றி ஞாநி பற்றி இந்த கருத்துக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நான் இந்த வகையில் எழுதியுள்ளேன். நீங்கள் என்னை தொடர்ந்திருந்தால் ஓரளவிற்கு புரியலாம்.

அடுத்து பொதுவாக கருத்தை சொல்லக் கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள்? ஜெயமோகனே அவ்வாறு பல கருத்துக்களை சொல்லியிருப்பதை உங்களுக்கு சுட்டி காட்ட முடியும். மேலும் நான் ஆதாரம் என்று ஒன்றை சொன்னால் அது எந்த அளவு உங்களுக்கு போதுமானது என்று எப்படி அறிவது? ஆதாரத்துடன் மாறி மாறி பேசிய பின், முன்பு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லும் கேஸ்கள் பல இருக்கிறதே.

அதனால் எப்போது எந்த அளவுக்கு விரிவாக ஆதரத்துடன் எழுதுவது என்பதை எழுதும் நபர்தான் தீர்மானிக்க முடியும். அதுவரை நான் எழுதுவதை நீங்கள் ஏற்கவேண்டாம். என்ன கெட்டுபோச்சு! நான் தர்க்கப்படுத்தும் சட்டகத்தில் பகிர்ந்து அந்த சந்தர்ப்பத்தில் எழுத்துடன் உரையாடுவர்களுக்காகத்தான் நான் எழுதுகிறேன். யாரும் என்னை முழுமையாக ஏற்று கொள்ள அல்ல. உங்களுக்கு எந்த சந்தர்ப்பத்தில் உரையாட முடிகிறதோ அப்போது செய்யுங்கள். ஆனால் பொத்தாம் பொதுவாகவும், விரிவாகவும் கருத்தை எந்த கருத்தையும் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. (அவதூறு, குற்றச்சாட்டு, கறாரான அர்த்தம் தரும் செய்திகள் என்பவை வேறு விஷயங்கள்.)

12/16/2009 9:00 PM  
Blogger ROSAVASANTH said...

4 ஆண்டுகளாக பதிவு எழுதுவதை நிறுத்திவிட்டு, திரும்ப எழுத துவங்காலாம் என்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு விஷயமாக எனது prioritiesக்கு ஏற்ப, எனது வேலை திட்டத்திற்கு ஏற்பதான் எழுத முடியும். அதில் நிச்சயம் ஜெமோ, ஞாநி எல்லாம் உண்டு. நான் குறிப்பிட்ட விசயத்தை மையப்படுத்தி எழுதும் போது விரிவாக பலருக்கும் நிறைவான ஆதரத்துடனேயே எழுதுவதை என் பழைய பதிவுகளை படித்தால் புரியும் (அவ்வாறு இல்லாமல் எனக்கு பிடிபடாதவற்றை பற்றி திடமான கருத்துக்கள் வைப்பதில்லை). அதனால் வந்த இரண்டாவது நாளில் உங்கள் இஷ்டத்திற்கு ஆதாரம் கேட்டு முரண்டு பிடிக்காதீர்கள்.

12/16/2009 9:09 PM  
Blogger clayhorse said...

முதல் பத்திகளைப் படித்தபோது சாருவின் பதிவு என்றுதான் நினைத்துவிட்டேன்.. :)

5/13/2010 2:29 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter