ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, October 26, 2008தீபாவளி.(உளரல்.காமில் எழுதத் துவங்கியது பெரிதாகி விட்டதால் இங்கேயே இடுகிறேன்). தேர்தல் அரசியல் தலைவர்களில், கலைஞர் மட்டும் இன்னும் கொள்கை பிடிப்பாய் தீபாவளி வாழ்த்து தெரிவிக்காமலிருக்க, கலைஞர் டீவி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளில் ̀சன்'னுடன் போட்டியிடும் காலத்தின் கட்டாயத்தில், தீபாவளி பற்றிய சில கருத்துக்கள்; தீபாவளி பற்றி ஏதோ வகையில் எதிரெண்ணம் கொண்டவர்களை முன்வைத்து. கிட்டத்தட்ட 15 வருஷங்கள் தீபவளியை கொண்டாடாமலும், விலகியும், பட்டும் படாமலும், தவிர்த்தும் வந்து, கடந்த மூன்று வருடங்களாய் கொண்டாடுகிறேன்; கொண்டாடுவது என்பது புத்தாடை, வெடிகளுடன், ̀சகலை' வீட்டில் கொண்டாட்டங்களில் பங்கேற்பது. மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பெரியார் இயக்க பாதிப்பில், கொள்கை பிடிப்புள்ள ஒரு கூட்டம் தீபாவளி பற்றி எதிர் எண்ணம் கொண்டு, ராவணனை/நரகாசூரனை -என்ற திராவிடன/ ̀சூத்திரனை'- கொன்ற தினமாக கருதி, கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறது. இஸ்லாத்திற்கோ, கிரிஸ்தவத்திற்கோ , முடிந்தால் பௌத்தத்திற்கு மாறுவது இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு. (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு என்று சொல்லவில்லை.) மிக தெளிவாக ̀நாம் வேறு; தீபாவளி நமக்கானதல்ல' என்ற எண்ணம் திடமாக வந்து, கொண்டாடாததன் மனக்குறை இருக்காது; குறிப்பாக குழந்தைகளுக்கு இருக்காது. இந்துவான அடையாளத்தை மாற்று மதத்தில் கரைக்காமல், குழந்தைகளிடம் தீபாவளியை பிடுங்குவது நிரப்ப முடியாத வெற்றிடத்தையும், மனக்குறையையும், தாழ்வு மனப்பான்மையை ஒத்த ஒரு மனநிலையையையுமே ஏற்படுத்தும். மேலும் எந்த ஒரு செயலுக்குமான பொருளை நாம் புதிது புதிதாக கற்பிக்க இயலும்; 80களின் (இளைஞ)தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக முந்தய தினம் முட்ட முட்ட தண்ணியடிப்பதே. மூன்று மதத்தவரும் சம அளவில் வாழும் தூத்துக்குடியில் வாழ்ந்த போது, 80களின் தெரு முக்கு க்ரூப்களில், இந்துக்கள் தீபாவளியன்று (எல்லோரும் கலக்க) பார்ட்டி தருவதும், ரம்ஜானில் இஸ்லாமிய இறுப்பினர்களும், கிரிஸ்மஸ் அன்று கிருஸ்தவ நண்பர்கள் தருவதும் ஒரு பண்பாடாய் உருவானது. அந்த தீபாவளி நீர் கொண்டாட்டத்திற்கு நரகசூரனோ, ராவணனோ, ராமனோ, கிரிஷ்ணனோ அருத்தம் தருவதில்லை. ஆகையால், இப்போதைக்கு தீபாவளியை வேறு தினத்திற்கு, வேறு சந்தர்ப்பத்திற்கு மாற்றவோ, இதே அளவு குதுகலத்தை பதிலீடு செய்யவும் இயலாததால், எல்லாரையும் தீபாவளி கொண்டாட அறைகூவுகிறேன். மீறி கொண்டாடாதவர்களை நான் திட்ட மாட்டேன். கொண்டாடுபவர்களை யாரும் திட்டாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். கொண்டாடும் அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள்! |
6 Comments:
ithaye jeyamohan sonna thitreenga...(http://jeyamohan.in/?p=637)...ennavo rosa...deepavali nalvazhthukkal..
வஸந்த் - இனிய தீபாவளி வாழ்த்துகள்.
பண்டிகை மாத்திரமல்லாதது எந்த ஒரு கொண்டாட்டத்திலும் (பிறப்பு, திருமணம்,...) சூழ்ந்திருப்பவர்கள் மூழ்கியிருக்க நாம் விலகிச் செல்வது, சக மனிதர்களிடமிருந்து தொற்றும் சந்தோஷத்தை விலக்கிச் செல்வது கொடூரமானதாகத்தான் தோன்றுகிறது. மாற்றுக் கலாச்சார சூழலில் வசிக்கும், அதிலும் டொராண்டோ போன்ற நகரத்தில் இருப்பதால் அகழ்வாராய்ச்சிகள் செய்யாமல் சூழ்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியில் பங்கேற்று மனதைப் புதுப்பித்துக் கொள்ளும் மனநிலைக்கு மாறியிருக்கிறேன். கூடவே பையன்களுக்குத் தோன்றத் துவங்கியிருக்கும் வேர் தேடல், அடையாளம் குறித்தவற்றுக்கும் இது இன்றியமையாததாக இருக்கிறது. ஒருவகையில் கிட்டத்தட்ட உங்கள் மனநிலையைப் ஒத்ததே. http://domesticatedonion.net/tamil/2008/10/26/deepavali/
இனிய வாழ்த்துகள்
//மகன் பிறந்த பிறகு தீபாவளியை தவிர்ப்பது வன்முறையாகவும், அராஜகமாகவும் தோன்றுகிறது.//
என் மனநிலையும் இதுதான்.
கோகுல், வெங்கட், தங்கவேல் நன்றி.
ஜெயமோகன் கட்டுரையை ஏற்கனவே படித்தேன். யாராவது திட்டினார்களா என்று தெரியாது; நான் திட்டவில்லை. ஆனால் ஜெயமோகனும் ̀இதை'யேத்தான் சொன்னதாக எனக்கு தோன்றவில்லை.
என் பார்வை தீபாவளி குறித்த எதிரெண்ணம் கொண்டவர்களை sympathyஉடனேயே பார்கிறது. ஜெயமோகன் ̀தமிழகத்தின் பிரச்சனையே இதுதான்' என்று துவங்குவார்.கடந்த நூற்றாண்டு பெரியார் இயக்கம் அதன் பாதிப்புகள் மீது மிகுந்த மரியாதையும், அவைகளை பொதிவாகவும்தான் நான் பார்கிறேன். அதன் அரசியல் நியாயங்களை மதிக்கிறேன்; மாறாக ஜேமோ அதை கேவலப்படுத்துவார். எல்லா அரசியலுக்கும் எதிர்விளைவுகள், அதை நேர்மையாக செயல்படுத்துவதன் பக்கவிளைவுகளாக வன்முறைகள் உண்டு. மேலும் நடைமுறை யதார்த்ததுடன் நாம் மேற்கொள்ளவேண்டிய சம்ரச சமன்பாடும் மிக தேவையானது. அதை காலப்போக்கில் பேசுவது முக்கியம். அந்த வகையில் நான் மேலே எழுதியுள்ளதற்கும் ஜெயமோகன் எழுதுவதற்கும் சில தர்க்க ஒற்றுமை இருப்பினும் அடிப்படைகள் வேறானவை.
ஜெயமோகன் சொல்வதாலேயே அதற்கு நேரெதிரான நிலைபாடு எடுக்கும் கூட்டம் உண்டு.. அதற்கு அவரது எழுத்தின் கள்ளமும் ஒரு காரணம்.(மேலும் அவர் பல இடங்களில் மற்றவர்களை பாற்றி சொல்லும் மூர்க்கம், எளிமைபடுத்துத்தல், வசதி ஏற்ப தர்க்கங்களை சமைத்து எடுத்தல் எல்லாம் அவரிடமும் உண்டு. ஜெயமோகன் பதிவு வகையறா எழுத துவங்கிய பிறகு இந்த வாசனை மிகவும் தூக்கல்.) இதையெல்லாம் மீறி ஜெயமோகன் சொல்வதை, நாமும் வந்தடைய நேர்ந்தால் அதை வெளிப்படுத்த தயங்க கூடாது என்பது என் பார்வை.
கடைசியாக இது போன்றவற்றை சொல்வதற்காக நான் திட்டப்படமாட்டேன் என்று நினைப்பதும் சரியல்ல. திட்டப்படும் அளவிற்கான விரிவான தளத்தில் நான் இன்னும் எழுதவில்லை. பண்டிகைகளின் தேவை பற்றி எழுதியதற்காக ஞாநி நன்றாக இணையத்திலே வாங்கியிருக்கிறார்.
ட்விட்டரில் அனாதை //if you want an equivalent festive mood compared to Ramjan or Chrismas, you could do it with Pongal (& new Tamil year :-) )// 140 எழுத்துக்களை விட பெரிய பதில் என்பதால் இங்கே.
அனாதை, நான் ரம்ஜானுக்கு, கிரிஸ்மஸுக்கு மாற்றாக அல்ல; தீபாவளிக்கு மாற்று உண்டா என்றுதான் யோசித்திருந்தேன். பிண்ணணி விளக்கம் சார்ந்து பொங்கல் தீதில்லாத, மனத்தடை இல்லாத பண்டிகைதான்; திராவிட இயக்கத்தவரும் அதை முன்வைக்கின்றனர். ஆனால் (விவாசாய வேர்களற்ற) என் சிறுவயது நினைவில் தீபாவளி அளவிற்கு பொங்கள் குதுகலம் சார்ந்ததாக இல்லைதான். நான் இதுவரை ப்ழகிய (பள்ளியிலிருந்து, கல்லூரி வரை) 20 வயதுவரையிலான எல்லா சிறுவர்களுக்குமே தீபாவளி, அதன் கொண்டாட்டம் சில மாதங்கள் முன்பே துவங்கிவிடுகிறது. திருநெல்வேலி பக்கம் 2மாசமாக ̀தீபாவளி வந்தாச்சா?' என்பதாக அதன் தயாரிப்புகளை பற்றி கேட்பதுண்டு. (̀ஆமாம் தச்சநல்லூர் பக்கம் வந்திருக்கு' என்று கிண்டலடிப்பதுண்டு). நாம் சமூகத்தில் எதிர்கொள்ளும் எத்தனையோ உவபில்லாத காரணங்களை போல, தீபாவளி போல சமூக கொண்டாட்டம் பொங்கள் உடபட மற்ற பண்டிகைகளுக்கு உண்டா என்று தெரியவில்லை. இதை பதிலீடு செய்ய முடியுமா என்பதும் தெரியவில்லை.
என் பிரச்சனை எனது தேர்வு பற்றியது அல்ல. மொத்தமாய் சமூக கூட்டத்தின் தேர்வு, அதில் சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கு நாம் அளிக்க கூடியதை பற்றியதும். நன்றி.
கோகுலுக்கு ஒரு விஷயம் எழுத விடுபட்டுவிட்டது. நா தீபாவளி என்ற பண்டிகையை மட்டுமே பேசுகிறேன். ஜெயமோகன் ஆவணி அவிட்டத்திற்கும் கூட ஆதரவாகத்தான் எழுதுவார். நான் விநாயக சதுர்த்தி பற்றிகூட (சமூக கும்பல்)கொண்டாட்டத்தை மட்டும் முன்வைத்து ஆதரிக்கவில்லை.
Post a Comment
<< Home