ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Tuesday, December 15, 2009

sinuses-2

( சென்ற பதிவின் தொடர்சி)


மதன் பாபு காமெடியாக பேசியது (அவரது அடையாளமான சிரிப்பை சிரித்ததை தவிர) எனக்கு சுவாரசியமாகதான் பட்டது. நூலை படிக்கவில்லை, ரெண்டு கட்டுரை மட்டும் படித்ததாகவும் சொன்னதும், படிக்காமலே பேசியயதையும் ரசிக்க முடிந்தது.  


வசந்த பாலன் வெயில் படத்தை பற்றி சாரு எழுதியதை பற்றி வருத்தப்பட்டார். சாரு `பிடித்திருந்தால் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுவார், பிடிக்காவிட்டால் இரக்கமே காட்ட மாட்டார்' என்றார். இப்போது அமீரை பற்றி கொஞ்சம் மாற்றி சொல்வதையும், வசந்த பாலனை தூக்கி பிடிப்பதையும் கணக்கில் கொண்டு சொன்னாரா என்று தெரியவில்லை. சாரு இறுதியில் தனது முந்தய வெயில் பற்றிய கருத்தை மாற்றிகொண்டு பேசியதையும், 'வசந்த பாலனை பாராட்டியிருக்கேன், அது போதவில்லை போலும். இன்னும் கவனிக்கிறேன்' என்பதாக சொன்னதை கேட்டு என்ன சொல்லுவார் என்று தெரியவில்லை. 


அழகிய பெரியவன் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர். மதிவண்ணன் ஏற்பாடு செய்திருந்த  ̀உள் ஒதுக்கீடு' குறித்த கருத்தரங்கம் ஒன்று முடிந்து அவருடன் மதுவருந்தி உரையாடியிருக்கிறேன்.  அதில் என் அன்பும் மரியாதையும் கூடவே செய்தது. அதில் சிறிதளவு இந்த கூட்டத்தால் கீழிரங்கியது. அழகிய பெரியவன் சாருவை பற்றி அல்லாத விஷயங்களில் நேர்மையாக பேசினார். திண்ணியம், மேலவளவு சம்பவங்களை எழுத்தாளர்கள் எதிர்வினை வைக்காததாக சொல்லி பேசினார். அதை நேர்மையான ஆதங்கமாக பார்க்கலாம். ஆனால் சாருவின் எழுத்துக்களில் இந்த வகை அரசியல் தெரிப்பதாக சொன்னது முழு உடான்ஸ். உதாரணமாக சோபாசக்தியை எடுத்துக் கொள்வோம். அவரது அத்தனை எழுத்து சார்ந்த நடவடிக்கைகளும் தீவிர அரசியல் சார்ந்து இயங்கி கொண்டிருப்பதை உணர முடியும். எல்லா பிரச்சனைகள் குறித்தும் அவரது தனித்துவமான பிரத்யேக பார்வை என்பதாக ஒன்று இருக்கும். சாருவின் எழுத்தை ஒப்பிட்டு பார்த்தால் அப்படி எதையுமே காணமுடியாது. அவர் பேசும் அரசியல் விஷயங்கள் மேலோட்டமானது, ஏற்கனவே பலர் சொன்னதை மேலோட்டமாக திரும்ப சொல்லும் பொத்தாம் பொது கருத்துக்கள். அப்படி இல்லாத பட்சத்தில் அது அபத்தமானதாக இருக்கும். ஈழப்பிரச்சனையை சரியான உதாரணமாக கொள்ளலாம். இதர எல்லா பிரச்சனைகளிலும் கூட அந்த பிரச்சனை குறித்த ஒரளவு ஆழ்ந்த புரிதலை கூட சாருவிடம் பார்க்க முடியாது. அழகிய பெரியவனின் செயல்பாடுகளையே எடுத்து கொள்வோம். அதில் வெளிப்படுவது போன்ற ஒரு அரசியல் பார்வை அக்கறையாவது எங்காவது சாருவிடம் வெளிப்படுகிறதா? சாரு அவர் தளத்தில் கடைசியாக எழுதிய 50 பதிவுகளை எடுத்து கொள்வோம், அதில் என்னவிதமான அரசியல் அக்கறைகள் வெளிப்படுகிறது என்று பார்போம்? உலகில் எந்த எழுத்தாளனும் செய்யாத அளவிற்கு தன்னை பற்றியும், தன் பிரச்சனைகளை பற்றியும் மாஸ்டர்பேட் செய்வது ஒரு அரசியல் என்றால் அது அபரிமிதமாகவே  இருக்கிறது.


சாருவின் எழுத்து நடவடிக்கைகளில் எல்லாம் தீவிர அரசியல் இருந்துதான் ஆகவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இல்லாத தீவிர அரசியலை இருப்பதாக உடான்ஸ் விடுவது ஆபாசம் அல்லவா! அழகிய பெரியவன் கடப்பாடு கொண்டிருக்கும் அரசியலுக்கு இப்படி எல்லாம் உடான்ஸ் விடுவது நண்மை பயக்குமா என்று யோசிக்க வேண்டும். உதாரணமாக 'ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை வைத்து திருநங்கையான கல்கி அவர்கள் தங்கள் பிரச்சனைகளை சாரு பிரதிபலிப்பதாகவும், சுய பால் உறவுக்கு அவர் அங்கீகாரம் தருவதாகவும் சொன்னார். அது நியாயமானது. ஆதாரத்துடன் பேசக்கூடிய விஷயம். ஆனால் அழகிய பெரியவன் முன்வைக்கும் அரசியல் சாருவிடம் வெத்து உதாராக மட்டுமே வெளிப்படுகிறது என்பதே யதார்த்தம். 


இதைவிட காமெடி ஒன்றை அழகிய பெரியவன் உதிர்த்தார். ஜெயமோகன் அம்பேத்காரை கொச்சை படுத்தி தமிழினி இதழில் எழுதிவருவதாக சொல்லி அது குறித்து சிறிது நேரம் பேசினார்.  (நான் அதை படிக்கவில்லை. ஆனால் காந்தி குறித்த தொடர் பதிவுகளில் (அதே கருத்துக்களை) ஜெமோ எழுதியுள்ளதை வாசித்திருக்கிறேன். அவை அருண்ஷோரி சொன்னது போன்றதுதான். ஆனால் அருண்ஷோரியினது போன்ற நேர்மையானதும் அல்ல. அருண்ஷோரி அம்பேத்காரை மோசமாக சித்தரிக்கும் போது  எந்த வித பாவனையும், நடிப்பும் கொள்ளவில்லை. ஜெயமோகன் அம்பேத்காரை மதிப்பதாகவும், உயர்வாக சொல்லிகொண்டே, அருண்ஷோரியை ஏற்றுக்கொள்ளாதது போலவும் சொல்லிக்கொண்டே, அம்பேத்காரை பலருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் கீழிரக்குகிறார். இது ஜெயமோகனிடம் வேறு இடங்களில் கண்ட உத்திதான். (காந்தி குறித்த பதிவுகளை தமிழின் முக்கிய அறிவுஜீவி நண்பர் சொல்லும்போது,   ̀லிட்டர் லிட்டரா பாலாக ஊற்றிகொண்டிருக்கும் போது நடுவில் ஒரு சொட்டு விஷத்தை' சேர்ப்பதாக சொன்னார்.)  இவை வேறு பிரச்சனகள்.)  இந்த பிரச்சனைகளையும் அதற்கான தன் எதிர்வினையையும் வைத்துகொண்டு அழகிய பெரியவன் ஒரு சிரிப்பாணி குண்டை தூக்கி போட்டார் (அது காமெடி குண்டு என்று எனக்கு தோன்றியது போல வேறு யாருக்காவது தோன்றியதா என்று தெரியவில்லை. கூட்டம் கைதட்டியது.). ஜெயமோகனின் இத்தகைய அரசியல்களுக்கு எதிர்வினையாக  ̀மம்மி ரிடன்ஸ்' என்ற சாரு கட்டுரையை எழுதியதாக போகிற போக்கில் குண்டு போட்டு சென்றார். 


சாருவின்  ̀மம்மி ரிடன்ஸ்' தொடர் பதிவுகளில் இருப்பது வெறும் தனி நபர் தாக்குதலன்றி எந்த அரசியல் உள்ளடக்கமும் இல்லாதது. தான் விமர்சிக்கப்பட்ட, தாக்கப்பட்ட ஆத்திரத்தில் விழைந்தது அன்றி எந்த அறம் அரசியல் சார்ந்து அதை அணுகுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. ஜெயமோகன் அற்பத்தனமானவர், அந்துமணியை கூட ஐஸ் வைப்பவர், சினிமா சான்ஸிற்காக கீழ் தரமாக நடப்பவர் ..இப்படி சாருவின் விடலை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கும் ஒரு வசைப்பதிவாக மட்டுமே போகிறதே தவிர ஜெயமோகன் முன்வைக்கும் எந்த அரசியலையும் எதிர்பக்கத்திலிருந்து அது தீண்டவே இல்லை. உண்மையில் ஜெமோவின் பல கட்டுரைகளை சாரு உள்வாங்கி படித்திருப்பாரா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது.  ̀மம்மி ரிடன்ஸ்' மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் சாரு ஜெமோவின் இந்துத்வா என்று அடையாளப்படுத்தக் கூடிய அரசியல்களுக்கு எதிர்வினை செய்தது கிடையாது. உதாரணமாக அழகிய பெரியவன் தனது எதிர்வினையாக ஜெமோவின் கருத்துக்களுக்கு எதிரான பலவற்றை அந்த் கூட்டத்துலேயே பேசினார். சாரு அப்படி ஒரு எதிர்வினையை கூட எந்த கட்டத்திலும் வைத்ததில்லை. ஒரு கட்டத்தில் ஜெமோவை காந்தியவாதி என்றவர் சாரு. சாருவிற்கு, ஜேமோவிடம் இருக்கும் பிரச்சனை ஒரு அரசியல்வாதி மற்றொரு அரசியல்வாதியிடம் கொள்ளும் காழ்ப்பை ஒத்தது மட்டுமே. தேவை என்றால் எதிர்காலத்தில் (மீண்டும்) தற்காலிக கூட்டணி வைக்கவும் தயங்காத முரண்பாடுதான் இது. 


ஆதவன் தீட்சண்யாவிற்கு சாரு வைத்த எதிர்வினை பற்றி பேசிய போது என் பார்வையில் அழகிய பெரியவன் இன்னமும் கீழிறங்கினார். ஆதவன் தீட்சண்யா தன் பேட்டியில் ' ஒரு எழுத்தாளன் குடிக்க முடியாமலும், பிரியாணி சாப்பிட முடியாமலும் இருப்பதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையா?' என்கிற வகையில்தான் கேள்வி எழுப்பினார். அதில் குடிப்பதற்கு எதிரான எந்த மதிப்பீடும் இல்லை என்பது சாதரண வாசிப்பில் எவருக்கும் புரியும். ஆனால் சாரு ஆதவன் தீர்சண்யாவை குடிப்பதற்கு எதிரான சனாதன மதிப்பீடு கொண்ட கருத்தை சொன்னதாக திரித்து, அதை முன்வைத்து தாக்குகிறார். இவ்வாறு திரித்துதான் பொதுவாக  தனக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்வது சாருவின் வழக்கம். ஆதவன் தீட்சண்யாவை  ̀பார்க்க ஐஏஎஸ் அதிகாரி மாதிரி இருப்பதாக சாரு எழுதியுள்ளதன் விஷமம் அழகிய பெரியவனை பாதிக்க கூட இல்லை என்கிறபோது, இவர் அழகியவன் மட்டும்தான் என்று நினைக்க தோன்றுகிறது.  (ஆதாவன் தீட்சண்யா மீதான் பிற விமரசனங்கள் -குறிப்பாக தமிழ்நதியை தாக்கி, ஈழப்பிரச்சனை சார்ந்து அவர் வைத்த கருத்துக்கள் வேறு விஷயம்.)


சரி, அடுத்த விஷயத்துக்கு. ஷாஜியின் பேச்சை நான் பொதுவாக ரசித்தேன். ஜேசுதாசை பிடிக்காது என்று சாரு மலையாளத்தில் எழுதிய தைரியம், தன்னடக்கமான மலையாள எழுத்தாளர்கள் இடையே, நான் என்று தன்னை முன் நிறுத்தி சாரு எழுதியது ..  போன்றவை பற்றி விமர்சிக்கவோ, வியக்கவோ எனக்கு அதிகமில்லை. மேலும் சாருவின் மலையாள phenomenon  எனக்கு இன்னமும் புரியாததாகவும், பிடிபடாததாகவுமாகவே இருக்கிறது. அது குறித்த கவலையோ, பிரமிப்போ எனக்கு பெரிதாக இல்லை. அதை விளங்கி கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில்தான் அது குறித்து பேச வேண்டும். 


கல்கி அவர்கள்  ̀ரெண்டாம் ஆட்டத்தை' முன்வைத்து பேசியது மட்டுமே இந்த கூட்டத்தில் எனக்கு நேர்மையானதாகவும், இயல்பானதாகவும் பட்டது.   ̀ரெண்டாம் ஆட்டம்'  நாடக நிகழ்வில் நடந்த வன்முறையை கலாச்சார பாசிசம் என்பதாகத்தான் நான் பார்கிறேன். ஆனால் அதை ஒட்டுமொத்தமாக சாரு ஹைஜாக் செய்வதும், தன்னை சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிடுவதையும் ஏமாற்று வேலை என்றுதான் சொல்ல வேண்டும்.  ̀ரெண்டாம் ஆட்டம்' நாடகத்தை அகஸ்தோ போவால் பற்றி எதுவுமே அறியாமல் அவர் எழுதியதாக முன்னுரையில் சொல்வது கேவலமான ஃபிலிம். அதில் பங்காற்றிய மற்றவர்களை பற்றி உரிய முறையில் குறிப்பிடாதது நேர்மையின்மை. இவைகளை அந்த நாடகத்துடன் பங்காற்றிய நண்பர் ஒருவருடன் பேசிய பின்பே (ட்விட்டரில் எழுதிய பிறகு) இங்கே பதிவு செய்கிறேன். இதையெல்லாம் கல்கி விமர்சனமாக சொல்லாததில் எனக்கு பிரச்சனை எதுவும் இல்லை. அவர் அறிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.  அன்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தனக்கு நண்பர்கள் என்றும், அவர்கள் கருத்து மாறியிருப்பதாகவும் கல்கி சொன்னார். ஆனால் அன்று சாரு தாக்கப்பட்டதாக திரும்ப திரும்ப அவர் சொன்ன அளவின் தீவிரம் உண்மை என்று எனக்கு தோன்றவில்லை. கூட்டத்தில் கலாட்டா நடந்தது, சாரு வெளியே வந்தால் அடிக்க காத்திருப்பதாக சொன்னார்கள், காத்திருந்தார்கள் (ஆனால் அடிக்கவில்லை.), சுபகுணராஜான் சாருவை ஒருமுறை தள்ளிவிட்டதை தவிர வேறு கைகலப்பு நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. இது குறித்து ரொம்ப துல்லியமாக பதியவேண்டிய அவசியம் இல்லை எனினும், சப்தர் ஹஷ்மியுடன் ஒப்பிட்டுக் கொள்ளும் ஆபாசத்தை செய்யாமல் இருந்தால் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. 


பாரதி கிருஷ்ண குமார் பேசியது இதுவரை குறிப்பிட்டது போன்ற அதே ஆபாசம். சாருவின் எழுத்தின் நேர்மை, அறச்சீற்றம், சமூக அக்கறை என்று இல்லாத விஷயங்களாக தமுஎச கூட்டத்தின் பேச்சு பாணியில் அடுக்கிக்கொண்டே போனார். மீண்டும் அவை குறித்து எழுதியதை எழுத அலுப்பாக இருப்பதால் தவிர்க்கிறேன்.  ஈழப்பிரச்சனை குறித்த சாருவின் கட்டுரையை தைரியமானதாக அவர் முன்வைத்தது ஆபாச நகைச்சுவையா, அசிங்க நகைச்சுவையா, ஸிக் ஜோக்கா, ஈழமக்கள் மீதான் வன்முறையா என்று எப்படி வகைப்படுத்துவது என்று எனக்கு புரியவில்லை. இது குறித்தும் பிறகு நான் எழுதுவேன் என்று நினைப்பதால் தவிர்க்கிறேன். 


(முதலில் எழுத மறந்து விட்டது. இன்னொரு பதிவு, முடிந்தவரையில் இன்றய இரவு தூங்குவதற்கு முன்பு வரும்).


Post a Comment

5 Comments:

Blogger ROSAVASANTH said...

இன்னொரு பதிவு வரும்.

12/15/2009 10:05 PM  
Blogger யுவகிருஷ்ணா said...

:-)

12/15/2009 10:23 PM  
Blogger ROSAVASANTH said...

லக்கி, குறிப்பான கருத்துக்கு நன்றி.

12/16/2009 4:39 PM  
Blogger சுகுணாதிவாகர் said...

நிறைய பிராக்கெட்களைத் தவிர்க்கவும். சமயங்களில் எந்த வரி எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்று தெரியாமல் வாசிப்பிற்கு இடைஞ்சலாக இருக்கிறது.

12/18/2009 2:56 PM  
Blogger ROSAVASANTH said...

சுகுணா, ஏற்கனவே என்னிடம் இருக்கும் பிரச்சனைதான். இதை தவிர்க்கத்தான் நினைக்கிறேன். முடிந்தவரை தொடங்கிய வாக்கியத்தை சீக்கிரமே முடிக்கத்தான் முயல்கிறேன். சில நேரம் கைமீறி விடுகிறது. அடுத்த முறை இன்னும் முயற்சிக்கிறேன்.

12/18/2009 4:28 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter