ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, April 11, 2010

தமாசு!

தீவிர அறிவு விவாதம், மற்றும் களப்பணிகள் செய்து அயர்ந்துவிட்ட தமிழ் அறிஞர் கூட்டம், சற்றே இளைப்பாற சில வெட்டி வேலைகளில் ஜாலியாக ஈடுபடுவதாக தோன்றுகிறது. இந்து மக்கள் கட்சி லீலாமணிமேகலையின் கவிதை தொகுப்பையும், இணையதளத்தையும் தடை செய்ய கோரி போலிஸில் புகார் கொடுத்திருக்கிறதாம். இது குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது; சிலர் பத்திரிகைகளில், இணையத்தில் கருத்து சொன்னார்கள்; கண்டித்தார்கள்; எல்லாம் நல்ல விஷயம்தான். இப்போது அடுத்த கட்டமாக கண்டன ஒன்று கூடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். யாரை கண்டித்து கூட்டம்? இந்து மக்கள் கட்சியையா? அப்படி என்றால் ஒரே ஒரு கூட்டம், ஒரே ஒரு விஷயத்துக்கு எப்படி போதுமானதாகும்? தினமும் ஒரு விஷயத்துக்காக கூட்டம் நடத்துவதுதானே நியாயமாக இருக்கும். ஒருவேளை அடையாள வேலை நிறுத்தம் மாதிரி எல்லாவற்றிற்கும் அடையாளமாக ஒரு நாள் கண்டன ஒன்று கூடல் போலும்.


' பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. ' என்கிறார்கள். தமாசாக இருக்கிறது. இப்படியே ஒரே மாதிரி ஸ்டீரியோடைப் வாக்கியங்களை எவ்வளவு காலத்துக்கு இன்னமும் அமைத்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை.

இந்து மக்கள் கட்சியின் புகாரை ஏற்று போலிஸோ, அரசாங்கமோ தடை செய்வதற்கு முன்நடவடிக்கையாக, முதன் முதல் படியாக, ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் மேலே சொன்ன அச்சுறுத்தல் என்பதற்கு பொருள் இருக்கிறது. இந்து மக்கள் கட்சி -மும்பையில் எண்ணிக்கையிலடங்கா வண்ணம் நடந்திருப்பதுபோல்- ஏதேனும் தாக்குதலில் ஈடுபட்டிருந்தாலும் இந்த அச்சுறுத்தல் என்று சொல்வதற்கு முகாந்திரம் உண்டு. ஒருவேளை அப்படி எதாவது நடக்காதது இவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமாகவும் இருந்து, வேறு வழியில்லாமல் புகார் கொடுத்ததையே முகாந்திரம் கொண்டு கண்டன கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்களோ என்னவோ! இப்படி ஏதையாவது கண்டித்து கூட்டம் நடத்தாவிட்டால் ஆழ்மனதில் ஒரு கண்டன ஈகோ நிறைவு கொள்ளாமல் ஆவியாக அலையும் போல.

அல்லது ஆண்குறி, விந்து பீச்சியடித்தல் போன்றவற்றை கச்சாவாக பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதைகளை இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்பு வேறு எப்படி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழகமாக இருக்கும் காரணத்தால் இந்து மக்கள் கட்சி, சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் எடுக்காமல், சட்டத்திற்கு உட்பட்டு ஒரு தடையை கோரும் ஜனநாயக தன்மையை காட்டியிருக்கிறார்கள். அப்படி இருப்பது பிரச்சனையோ என்னவோ, அவர்களையும் கூட்டம் கண்டனம் என்று மேற்படி செயலில் இறங்கத் தூண்டும் வகையில் ஒன்று கூடல் நடத்துகிறார்கள். இந்து மக்கள் கட்சியை விடுங்கள் கம்யூனிஸ்டுகளும், பாமகவும், திராவிட இயக்கங்களும் கட்சியின் அதிகாரபூர்வமாக என்ன நிலைபாடு கொண்டிருக்கிறது என்று கவிதைகளை படிக்க சொல்லிவிட்டு பின் கருத்து சொல்ல கேட்டு பார்க்கலாம்.

எனக்கு லீலாமணிமேகலையின் கவிதைகளில் பிரச்சனை எதுவும் இல்லை - அவைகளை கவிதை என்றவகையில் என்னால் எந்த விதத்திலும் ரசிக்க முடியவில்லை என்பதை தவிர. மிகவும் கச்சாவான மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதைகளில் கலகமோ, கவித்துவமோ வெளிபட்டதாக நான் தனிப்பட்டு கருதி அதற்கு வக்காலத்து என்னால் வாங்க முடியாது. ஆனால் அதை எழுதுவதற்கு அவருக்கு இருக்கும் உரிமைக்கு என் ஆதரவு குரலை வெளிப்படுத்த முடியும். அதில் எந்த தயக்கமும் இல்லை. அதே நேரம் அந்த கவிதைகளை விமர்சிக்கவும், எதிர்க்கவும், அந்த கவிதைகளில் மொழிரீதியான அத்து மீறல் நடந்துள்ளதாக கருத்து சொல்லவும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.( என் கருத்து அதுவல்ல.) இந்து மக்கள் கட்சி மேலே ஒரு படி போய் சட்டரீதியான தடையை கோரியிருக்கிறது. அதை சட்டரீதியாக எதிர்கொள்வதை தவிர பெரிதுபடுத்த இதில் எதுவும் இல்லை. பாய்ஸ் படத்தை தடை செய்ய பெண்கள் அமைப்புகள் கேட்டது போன்றதுதான் இது. தடைசெய்ய கேட்பது என்பதும் ஒருவித எதிர்ப்பை தெரிவிக்கும் வழிதான். அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் (அல்லது சட்டவிரோதமாக நடவடிக்கைகள்/தாக்குதல்கள் நடந்தாலோ) அது கருத்து சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக முடியும். ஒருவேளை மார்க்சியர்களும், ஃப்ராய்டியர்களும் கூட தங்கள் மனம் புண்பட்டதாக வழக்கு தொடரலாம். 'குட்டி ரேவதி' என்று ஒரு சினிமா கதாபாத்திரத்திற்கு பெயர் வைக்கவே எஸ்ராவிற்கு உரிமை இல்லை என்று ஒரு கண்டன கேலிகூத்து நடத்தியவர்கள், இப்படி எதிர்ப்பை தெரிவிக்க உரிமையில்லை என்று நினைப்பது இன்னொரு 'கருத்து சுதந்திர மனித விடுதலை' கேலிகூத்து மட்டுமே. (வினவின் பதிவுகளில் வெளிப்பட்ட ஆணாதிக்க மொழியை, வசவுகளை, சமூக மதிப்பிடுகளை தன் வாதத்திற்கு சாதகமாக்கும்தன்மையையும் நான் கண்டிக்கிறேன். கண்டித்தேன். ஆனால் எதிர்ப்பு என்பதே வெளிப்படக்கூடாது என்பது என் கருத்தல்ல.)

மீண்டும் சொல்வதானால் என்னால் கச்சாவான பாலியல்ரீதியான மொழி(வெளிப்படுவதால் மட்டும் ஒரு பிரதியை இலக்கியமாக கருத முடியாதே தவிர) அதனுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த மாதிரி எண்ணம் கொண்டவர்கள் சமூகத்தில் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். மிக குறைவாக மட்டுமே எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இது ஆணாதிக்கம் என்றும் குறுக்க முடியாது. ஆணிடம் இதே போன்ற மொழி வெளிபடும்பொதும் இதை ஒத்த எதிர்ப்பு வெளிபடலாம். கற்பித நெறிகளால் பெண்ணின் தூய்மையை உன்னதப்படுத்தும் ஆணாதிக்க சமூகமாக நம் சமூகம் இருப்பதால் பெண்ணுக்கான எதிர்ப்பு பல மடங்கு அதிகமாக இருக்கலாம். எனினும் பொதுக்களத்தில் இயங்கும் ஒரு கச்சாவான பாலியல் மொழிக்கான எதிர்ப்பு என்பதாக ஒன்று இருப்பதே பாசிசம் என்று நினைப்பதும், பாசிச கூறு கொண்ட குருட்டு பாசிச எதிர்ப்பு என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆகையால் எந்த வித பொறுப்பும் இல்லாமல் வெளிபடும் பாலியல்ரீதியான மொழிக்கு, எதிர்ப்பு என்பதே இருக்க கூடாது என்று நினைப்பவர்களுடன் பேச எனக்கு எதுவும் இல்லை. (தஸ்லிமா நஸ்ரின், தீபா மெஹ்தா, ஹுசைனுக்கு நிகழ்ந்த எதிர்ப்புகளை இங்கே ஒப்பிடவே முடியாது. அதன் தீவிரமும், அதிகாரமும் வேறு. தஸ்லிமா, தீபா, ஹுசைனிடம் வெளிபட்டதும் எந்தவித பொறுப்புணர்வும் இல்லாத ஒரு கச்சாவான பாலியல் மொழி சார்ந்த வெளிபாடு அல்ல.) மாறாக இவ்வாறான எதிர்ப்பும் இருக்கலாம் என்று ஜனநாயக பூர்வமாக நினைப்பவர்கள் எந்த வகையில் இந்த எதிர்ப்பு வெளிபட வேண்டும் என்பதை விளக்கி சொல்ல வேண்டும். குறிப்பாக சட்டரீதியான நடவடிக்கை என்றல்லாமல் வேறு எந்த ஜனநாயக வழியில் இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்டுகளின் அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்கிறார்கள் என்பதை சொல்லட்டும். மேலே பேசலாம்.

என்னை பொறுத்தவரை இதை பெரிது படுத்துவது வெட்டிவேலை. தமிழகத்திற்கு வெளியே தேசிய மற்றும் பிராந்திய இந்துத்வ கட்சிகள் அடைந்த நிலையை, இத்தனை ஆண்டுகால முனைப்புக்கு பிறகும் அடையாத நிலையில், குஷ்புவின் முன்மண பாலுறவு குறித்த கருத்தை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில், இதெல்லாம் இல்லாத எதிரியை கற்பித்து போராட கம்பு சுத்தும் வேலையாகத்தான் தெரிகிறது. விளம்பரத்திற்காக இதை செய்வதாகவெல்லாம் குற்றம் சாட்ட நான் சில அறிவு சார்ந்த அற காரணங்களால் விரும்பவில்லை.

இதைவிட இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன். இதில் அ.மார்க்ஸ் தஸ்லீமா நஸ்ரின் மீதான தாக்குதலை நியாயப்படுத்துபவர்களுடன் இணைந்து செயல்படுபவர். தமிழ் நாட்டிற்கு வெளியில் நடந்ததை விடுவோம். ஷகீலா பர்தா போடுவதற்கு எதிராக ரத்தம் கொதிக்கும் அறிக்கைகளை விட்டவர்களை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? அ.மார்க்ஸின் இந்த நிலைபாடுகளை சரியானதாக நியாயப்படுத்திய ராஜன்குறை இந்த கூட்டத்தில் என்ன பேசுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. (பார்க்க: சத்தியகடிதாசியில் ராஜன் குறையின் ஒரு காகமோனா பற்றிய கட்டுரையின் பின்னூட்டத்தில் அ.மார்க்ஸ் குறித்த ரவி ஶ்ரீனிவாசின் கேள்விக்கான ராஜனின் பதில்) என்னை பொறுத்தவரை தஸ்லிமா நஸ்ரினை வாழவிடாமல் இருக்கவிடாமல் இயங்கவிடாமல் இருக்கும் அடிப்படைவாதத்தை அனுமதிக்கும்/அங்கீகரிக்கும் அரசியல்களை விட, எந்த வித முக்கியத்துவம் இல்லாத இந்த விஷயத்திற்கு கூட்டம் நடத்துவது எல்லாம் நோய்கூறுகள் கொண்ட தமாசுகள் மட்டுமே.

தமிழ் சூழலில் அக்கறை கொண்டதாலும், இவர்கள் மீதும் இவர்களின் அரசியல் மீது நெடுங்காலமாக ஈடுபாடு கொண்டவன் என்ற வகையிலும் இந்த தமாசை பார்க்க போகலாமா வேண்டாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

Post a Comment

23 Comments:

Blogger RR said...

Excellent!

4/11/2010 4:42 AM  
Blogger sakthi said...

//இந்த பதிவை என்னை எழுத தூண்டிய ஒரே தீவிர விஷயம் தஸ்லிமா நஸ்ரின் மீதான தொடர்ந்த தாக்குதல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் என்னவகை எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம்தான். கண்டன கூட்டம் எல்லாம் வேண்டாம். எங்காவது ஒரு இடத்தில் தங்களின் தீவிர கண்டன குரலை இவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா? குறிப்பாக அ.மார்க்ஸ், பிறகு ஷோபாசக்தி, குறைந்த பட்சம் லீலா மணிமேகலையாவது. எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால் இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன்//

அறைகூவல் கேட்டது.. கூட்டத்தில ஒரு அய்ம்பதுபேர் பங்கேற்பதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்போதும் அதில் பங்கே பெறாத என்னைக் குறித்து அறைகூவும் அரசியல் அல்லது உளவியல் என்னவோ?

தஸ்லிமா நஸ்ரின் குறித்து நான் எங்காவது எழுதியுள்ளேனா என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ, இந்து அடிப்படைவாதத்தையோ, புலிகளுடைய கருத்துச் சுதந்திர மறுப்பையோ அரசுகளின் கருத்துச் சுதந்திர மறுப்பையோ எப்போதுமே கண்டித்துவந்துள்ளேன். ஒருவேளை தஸ்லிமா குறித்த நான் எதுவும் சொல்லாமல் இருந்தாலும் இப்போது தஸ்லிமாவிற்கு எனது முழு ஆதரவையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு என் முழு எதிர்ப்பையும் நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பதிவு செய்கிறேன். சரி இதற்கெல்லாம் அறைகூவுவதா? கேட்டால் சொல்ல மாட்டேனா?

லீனா மணிமேகலையும் தஸ்லிமா நஸ்ரின் குறித்துத் தனது கருத்தை இரண்டு வாரங்களிற்கு முன்பு குமுதம் இதழில் எழுதியருந்ததாக ஞாபகம். அவரின் வலைப்பதிவில் கூட அந்தக் கட்டுரை இருகக்கூடும். நேரமிருப்பின் தேடிப்பாருங்கள்.

-ஷோபாசக்தி

4/11/2010 5:09 AM  
Blogger ROSAVASANTH said...

//அறைகூவல் கேட்டது.. கூட்டத்தில ஒரு அய்ம்பதுபேர் பங்கேற்பதாக பெயர் குறிப்பிடப்பட்டுள்போதும் அதில் பங்கே பெறாத என்னைக் குறித்து அறைகூவும் அரசியல் அல்லது உளவியல் என்னவோ? //

நீங்கள் இந்த கூட்டத்திற்கு முழுமையான ஆதரவு அளிப்பவர் என்ற என் அனுமானம், மற்றும் பெயர் போட்ட 50பேர்களை விட எல்லாம் உங்களின் கருத்து எனக்கு முக்கியம் என்று நான் நினைப்பதுதான் காரணம் அல்லது உளவியல். இதற்கு மேல் அரசியலை நீங்கள்தான் கற்பிக்க வேண்டும். அனுமானம் தப்பு என்றால் நான் மன்னிப்புதான் கேட்கவேண்டும்.

//ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ, இந்து அடிப்படைவாதத்தையோ, புலிகளுடைய கருத்துச் சுதந்திர மறுப்பையோ அரசுகளின் கருத்துச் சுதந்திர மறுப்பையோ எப்போதுமே கண்டித்துவந்துள்ளேன். //

உங்கள் எழுத்துக்களை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உடனடியாக வாசித்து முடிக்க நான் தவறுவதில்லை. அந்த வகையில் நான் அறிந்ததில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கூறித்து எதிராக நீங்கள் எழுதி எதையுமே வாசித்த ஞாபகம் எதுவும் எனக்கு இல்லை. இருந்தால் தரவும். இந்து அடிப்படைவாதம், புலி எதிர்ப்புக்கு ஆதாரம் தேவையில்லை என்று சொல்லவும் வேண்டுமோ!

இருந்தும் இப்போது உங்கள் எதிர்ப்பை பதிவு செய்தது மகிழ்ச்சி. அந்த எதிர்ப்பை சுய பிரஞ்ஞயுடன் consistentஆக செயல்படுத்துவது எப்படி என்று நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

//சரி இதற்கெல்லாம் அறைகூவுவதா? கேட்டால் சொல்ல மாட்டேனா?//

இந்துத்வாவாதிகள் ̀நமது' ஹிபாக்கரசியாக இந்த விஷயத்திலான மௌனத்தை குறிப்பிடுகிறார்கள் என்பதால் அறைகூவிவிட்டேன். பதிவின் போக்கில் இல்லாவிட்டால் கேட்டுதான் இருப்பேன்.

//லீனா மணிமேகலையும் தஸ்லிமா நஸ்ரின் குறித்துத் தனது கருத்தை இரண்டு வாரங்களிற்கு முன்பு குமுதம் இதழில் எழுதியருந்ததாக ஞாபகம். அவரின் வலைப்பதிவில் கூட அந்தக் கட்டுரை இருகக்கூடும். நேரமிருப்பின் தேடிப்பாருங்கள்.//

உடனே பார்கிறேன். பிறகு இங்கு வருகிறேன்.

பின்னூட்ட கருத்துக்களுக்கு நன்றி!

4/11/2010 5:27 AM  
Blogger ROSAVASANTH said...

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/03/blog-post_31.html

இதை இப்போதுதான் வாசித்தேன். தஸ்லிமா மீதான அராஜகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

4/11/2010 5:40 AM  
Blogger ROSAVASANTH said...

தஸ்லிமாவின் பல பிரச்சனைகளின் போது, குறிப்பாக அவர் ஹைதாரபாத்தில் நேரடியாக உடல்ரீதியாக தாக்கப்பட்டபோது, தமிழ் சூழலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பேசுபவர்களின் எதிர்ப்பு எதுவுமே பதிவானதாக எனக்கு தோன்றவில்லை. அதன் ஆதங்கமே மேலே பதிவாகியுள்ளது.

4/11/2010 5:44 AM  
Blogger -/பெயரிலி. said...

உங்களுக்கும் புரட்சியோ கலகமோ பதிவிலே செய்யப் பொருள் அகப்படாவிடத்திலேதான் இதையெல்லாம் விமர்சித்து எழுதுகின்றீர்களென்று காட்டமாகப் பதிவு செய்கிறேன் ;-)

இக்கூட்டத்திலே கலந்துகொள்கின்றவர்களின் பெயர்களை பேஸ்புக்கிலே இதிலே கலந்துகொள்ளாத ஒருவர் போட்டுத்தான் விளம்பரத்தினை அறிந்தேன். அதிலே பெயர் தெரிந்த பாதிப்பேர்கள் எப்படியாகச் சில சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவாக எழுதும் பேசும் சகதிகளென்று இணையத்திலே தேடித்தான் தெரிந்துகொண்டேன் - இல்லாவிட்டால் தெரியாதல்லவா! ;-)

4/11/2010 7:15 AM  
Blogger ROSAVASANTH said...

//குஷ்புவின் முன்மண பாலுறவை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில்,..// என்பது 'குஷ்புவின் முன்மண பாலுறவு குறித்த கருத்தை அங்கீகரித்து தீர்ப்பு வெளிவந்த இந்த உற்சாகமான காலகட்டத்தில்..' என்று இருந்திருக்க வேண்டும். தவறாக எழுதி மீண்டும் வாசித்து நேற்றிரவு திருத்தாதது என் பிழை. மாற்றியிருக்கிறேன்.

4/11/2010 2:05 PM  
Blogger ROSAVASANTH said...

பெயரிலி, இணையம் பலவற்றை கற்றுதருகிறது. ஷோபா சக்தி புலி ஏதேச்சதிகாரம், இந்துத்வா போல இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் அதிர்ச்சி தரும் தகவலையும் மேலே அவர் எழுதியுள்ள பின்னூட்டத்தை பார்த்துதான் அறிந்தேன். அ.மார்க்ஸ் கூட இணையத்தில் தீவிரமாக எழுதும் போது இது போன்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்புகிறேன்.

4/11/2010 6:36 PM  
Blogger ROSAVASANTH said...

தகவலுக்காக: நாளை மதியம் 2 மணி வரை இணையம் பக்கம் வர இயலாது. புதிய பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு பிறகே வெளியிட இயலும். பொறுமைக்கு நன்றி.

4/11/2010 11:42 PM  
Blogger Rajan Kurai Krishnan said...

உலகில் எந்த அரசியல் நடவடிக்கையும் முன் தேர்வுகள் (priorities) அதன் விளைவான சார்புத் தன்மை கொண்டே அமையும் எனக் கருதுகிறேன். ஒப்புமையிலிருந்து உணர்தல் என்ற அடிப்படையிலேயே நாம் தோழமைச்சக்திகளை அடையாளம் காண முடியும். ஒரு சூழலில் எழுத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர் அவர் குறிப்பாக விதிவிலக்கொன்றை அறிவிக்காதவரை, இன்னொரு சூழலிலும் ஒத்த கருத்தை கொண்டிருப்பார் என்றுதான் கருதவேண்டும். உதாரணமாக எங்கோ ஒரு எழுத்தாளர் அவர் கருத்துகளுக்காக சிறையிடப்படுவார் என்றால் ரோசா வசந்த் அதை எதிர்ப்பார் என்றுதான் நான் நம்புவேன். அவர் ஏன் அதை பதிவு செய்யவில்லல என்று கேட்க மாட்டேன். Inference by analogy. ஆகவே அ.மார்க்ஸ் தஸ்லிமா நஸரீனுக்கு ஆதரவாகத்தான் சிந்திக்கிறார் என்று நான் அவரைக் கேட்கத் தேவையின்றி நம்புகிறேன்.
அவரது அரசியல் செயல்பாடுகளில் முன் தேர்வு இருப்பதை புரிந்து கொள்கிறேன். குஜராத்தில் நடந்தவவ, நடப்பவை என்ன என்று தெரிந்த வசந்திற்கு கொஞ்சம் யோசித்தால் இந்த இயல்பான முன் தேர்வைப் புரிந்து கொள்வதில் கஷ்டம் இருக்காது. வசந்திற்கு அத்தகைய முன் தேர்வுகளில் உடன்பாடு இல்லாமலிருந்தால்கூட இன்னொருவருக்கு இருக்கக்கூடிய சாத்தியத்தை புரிந்துகொள்ளலாம். நான் அனனத்து ஒடுக்குமுறைகளளயும் கண்டிப்பவன் என்று ஓயாமல் நிரூபித்துக் கொள்ள வேண்டிய தேவை ஒரு அரசியல் செயல்பாட்டாளருக்குக் கிடையாது. வலைப்பதிவர்களுக்கு அதற்கான அவகாசமும், அவசியமும் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை சுதந்திரவாதம் (liberalism) அது சந்திக்கும் சமகாலப் பிரச்சினைகளைக் குறித்து 15ஆம் தேதி நான் எதுவும் பேச நேரமிருக்காது. வசந்த் கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்தால் இரண்டு மணி நேரம் தத்துவரீதியான சிக்கல்களை விரிவாகப் பேசத் தயாராக உள்ளேன். ஆனால் தீர்வுகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

4/12/2010 12:37 AM  
Blogger உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

பகிர்வுக்கு நன்றி

4/12/2010 1:48 AM  
Blogger leena manimekalai said...

ஆசிரிய ஒழுங்கு, வாசிப்பு ஒழுங்கு, பிரதி ஒழுங்கு என்றெல்லாம் கவிதைக்கு ஒரு ஒழுங்கை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அது பெரும்பாலும் அழகியல், உருவ அமைதி, சமய ஆன்மீகம் என்ற போக்கில் தான் இருக்கிறது. அந்த மன அமைப்பு தான் கச்சா வார்த்தைகள், வடிவம் என்றெல்லாம் கவிதைக்கான வரையறைகளைப் பேச வைக்கிறது.
நவீன தமிழ் கவிதையில் பெண்ணெழுத்து சார்பு என்ற இடத்திலிருந்து மீறலுக்கு கடந்து வெகு காலமாகிறது. தன்னுடலை தானே கண்டடைதல், நிறுவனங்களிலிருந்து தன் உடலை வெளியேற்றுதல் என்ற அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெண்ணெழுத்து கண்டடையும் மொழி துறுத்தலாகத் தான் இருக்க முடியும்,உருவ அமைதிக்குள் அடங்கவே முடியாது.
என் கவிதையில் உறுப்புகள் துறுத்தலாகவும், கச்சாவாகவும் இருப்பதை அரசியலாகவே வைக்கிறேன். மரபு சார்ந்த ஒழுங்கில் என் கவிதை தொழிபடுவதில் எனக்கு உடன்பாடில்லை. கலாசார உடல் அரசியல் உடலாக மாறும் போது என் மொழி கச்சாவாகத்தான் வெளிப்படும்.,அது பொதுவான ஆண்நிலை மன அமைப்புகளுக்கு தொந்திரவாகவும், ஒவ்வாமையுமாகவும் மாறுவது எதிர்பார்த்தது. வாசிப்பவர்களின் வசதிக்காக கவிதை எழுதுவது கவிஞரின் வேலையில்லை.
அப்புறம் அச்சுறுத்தல் என்றால் ஒருவரைக் கைது செய்து, தெருவில் இழுத்துச்செல்வது தான் என்று நீங்கள் நம்புவது தான் எனக்கு தமாசாக இருக்கிறது. ஒரு சிறு சொல் கூட அச்சுறுத்தலை செய்துவிட முடியும். வினவு செய்ய முயற்சித்தது என்னைப் பொறுத்தவரை சொற்களால் ஆன வல்லுறவு தான்.இந்து மக்கள் கட்சியின் ஆராவாரத்தால் 'எதிர்ப்பு' திரண்டு ஒரு வடிவத்தை அடைந்திருக்கிறது. அது தொடர்ந்து கண்காணிப்பு என்ற பெயரில் அடிப்படைவாதிகள் செய்துக் கொண்டிருந்த பல வன்முறைகளுக்கான ஒரு கலக்டிவ் எதிர்வினை தான்.பொது ஒழுங்கிற்குள் கட்டுப்பட்டு இரு என்று ஒரு படைப்பாளியைச் சொல்லும் அடாவடித்தனத்தைக் கண்டிப்பதை ஸ்டீரியோடைப்பாக நீங்கள் நினைப்பது மிக மோசமான உளவியல்.
எதிர்ப்புக்காக ஒரு கூட்டம் சேரும்போது, நீங்கள் அப்போது அது நடந்ததே, அப்போது என்ன செய்தீர்கள், அதற்குமுன் வேறொன்று நடந்ததே , நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள் என்று விதண்டாவாதம் பேசுபவர்களை என்ன செய்வது? சதா தராசை தூக்கிக் கொண்டு திரிபவர்கள் அதில் தங்களையும் எதோ ஒரு தடவையாவது மறதியாகக் கூட நிறுத்திப் பார்த்துக் கொள்வது நல்லது. எந்த மன உயரமும் அற்ற தமிழ்ச்சமூகத்தில் படைப்பாளராய் இருப்பதும் துரதிருஷ்டம் தான்.

4/12/2010 2:54 AM  
Blogger ROSAVASANTH said...

ராஜான்குறை, லீனா பின்னூட்டங்களுக்கு நன்றி. என்னிடம் இருக்கும் பதில்களை இன்று இரவு வந்து இங்கு பின்னூட்ட முயற்சிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக இன்று முழுவதும் இணையத்திற்கு வர வாய்ப்பிருக்காது, அதானால் இடையில் வரும் பின்னூட்டங்களும் இரவு வந்துதான் வெளியிட முடியும். நன்றி.

4/12/2010 1:16 PM  
Blogger ROSAVASANTH said...

(நீண்ட பின்னூட்டத்தை ஒப்புகொள்ள மறுக்கிறது. அதனால் இரண்டாய் பிரித்து இடுகிறேன். )

அரசியல் சார்ந்த முன் தேர்வுகள் இருப்பது, அதனால் விளையும் சார்புதன்மை, தோழமை சக்திகளை அடையாளம் காண்பது .. இவை குறித்து ராஜன்குறை சொல்வதை நானும் உணர்ந்து கொண்டுதான் ரொம்ப குறைவாக குறிப்பிடகூடிய எனது செயல்பாடுகளும் இருப்பதை அவர் உணர்ந்திருப்பார் என்றே கருதுகிறேன். அது குறித்து நுணுக்கமாக விவாதிக்க தேவையிருப்பதாக தோன்றவில்லை.

தஸ்லிமா மீதான தாக்குதலை அ.மார்க்ஸ் தீவிரமாக எதிர்ப்பார் என்பதில் ராஜனுக்கு மட்டுமல்ல எனக்கும் இம்மியளவு சந்தேகம் இல்லை. தஸ்லிமா மீதான தாக்குதலை அவர் ஆதரிப்பார் என்றோ, அதை நியாயபடுத்த கூடும் என்றோ மார்க்சின் எதிரி கூட மனதார நம்பமாட்டார் என்றே நினைக்கிறேன். பிரச்சனை அவர் மனதளவில் எதிர்க்கிறாரா, ஷோபசக்தி போல ̀கேட்டால் சொல்ல மாட்டேனா?' என்று கிண்டலடித்து தன் எதிர்ப்பை எங்காவது பதிவு செய்வாரா என்பது அல்ல. உலகின் தான் எதிர்க்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ஒருவர் கண்டித்து, உலகில் எல்லாவற்றை பற்றியும் தனது நிலைபாட்டை வலியுறுத்திக் கொண்டே இருக்கவேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. லீனா நான் அப்படி சொல்வதாக எடுத்து பதிலளிப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. ராஜன் சற்று வேறு மாதிரி எடுத்து பதில் சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.

குறிப்பிட்ட அரசியலை தேர்வு செய்வது, அதன் வழிகாட்டுதலில் ஒரு பிரச்சனையில் அரசியல் நிலைபாட்டை தேர்வு செய்வது, சமரசம் செய்வது, சிலவற்றை பேசுவது அரசியலுக்கான ஆபத்து என்று மௌனம் காட்டுவது... இவை குறித்தெல்லாம் எவ்வளவு தூரம் புரிந்து கொள்ள வேண்டும், நியாயபடுத்த வேண்டும், அல்லது தோழமையாக விமர்சிக்க வேண்டும், விமர்சிக்கும்போது தோழமை தக்கவைப்பது எப்படி என்பது குறித்த பிரச்சனைகளில் இருந்துதான் மேலே உள்ள பதிவின் குறிப்பிட்ட பத்தியை எழுதியுள்ளதாக கருதுகிறேன்.

ராஜன் குறிப்பிடுவது போல் முன் தேர்வு என்று புரிந்து கொள்ள கூடிய ஒரு பிரச்சனை என்று இதை நான் நினைக்கவில்லை. ரவி ஶ்ரீனிவாஸ் முன்பு கேட்டதும், நான் எழுப்பியதும் எதிர்ப்பை பதிவு செய்வது என்பதை பற்றியது அல்ல. தஸ்லிமா மீது நடந்த தாக்குதலை நியாயப்படுத்துபவர்களை தோழமை சக்திகளாக நினைப்பதை பற்றியது. ஒரு உதாரணத்திற்காகத்தான் தஸ்லிமா நஸ்ரின்; தொடர்ந்து தாக்குதல்களும், மிரட்டல்களும், அது குறித்து வண்டி வண்டியாய் நியாயப்படுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதால், அரசியல் பிரஞ்ஞை என்று ஒன்றை வைத்திருப்பவர் இது குறித்து பேசாமல் இருக்க முடியாது என்று நினைப்பதால். மற்றபடி அ.மார்சின் அரசியல் நிலைபாடுகளும் கரிசனங்களூம் மிகுந்த பாரபட்சமுடையது, அது இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து விமர்சனமின்றி சமரச தன்மை கொண்டது என்பதை விளக்க தேவையே இல்லை. ராஜனுக்கும், அமாவிற்கும் இது நன்றாக தெரிந்த விஷயம்தான். இதை விளக்குவதில் நேரம் செலவழிக்கவும், இந்த ஆரம்ப கட்டத்திலேயே நிற்கவும் எனக்கு விருப்பம் இல்லை.

4/13/2010 2:24 AM  
Blogger ROSAVASANTH said...

(தொடர்ச்சி)


'எங்கோ ஒரு எழுத்தாளர் அவர் கருத்துகளுக்காக சிறையிடப்படுவார் என்றால் ரோசா வசந்த் அதை எதிர்ப்பார்' என்ற உதாரணம் இந்த சந்தர்ப்பத்துடன் இணைதன்மை கொண்டதாக நான் ஒப்புகொள்ளவில்லை. மீண்டும் சொல்வதானால் உலகின் மூலையில் நடைபெறுவதை பற்றி நிலைபாட்டை பதிவு செய்வதல்ல பிரச்சனை. வேறு உதாரணம் தருகிறேன். ஈழப்போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து, அதை தன் அரசியல் நிலைப்பாடாக கொண்ட சிலரின் முன் தேர்வுகளுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். புலிகள் செய்த மனித விரோத செயல்களை மனதளவில் முற்றிலும் எதிர்பவராக இருந்தும், அதை விமர்சன அரசியலாக கொள்வது தன் முந்தய அரசியல் நிலைபாட்டுக்கு, ஈழத்து இன அழிப்பை பிரச்சாரம் செய்வதற்கும் பிரச்சனை தரும் என்று கருதி ஒருவர் சமரசம் செய்துகொள்வதுடன் வேண்டுமானால் ஒப்பிடலாம். அத்தகைய சமரசம் செய்பவர்களை அமாவும் ஷோபாவும் எப்படி விமர்சிப்பார்கள் என்பதுடன் இந்த சந்தர்ப்பத்து பிரச்சனையை நீங்கள் ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஜெயமோகன் சொல்வது போல அ.மார்க்ஸை இஸ்லாமிய கூலிப்படை என்று நான் சொல்ல போவதில்லை. ராஜன் குறை சொல்வது போலவே, இந்துத்வாவை முக்கிய எதிரியாக கருதி, இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி பேசுவது இந்த இந்துத்வா எதிர்ப்பு அரசியலுக்கு தொய்வு தரும் என்று கருதியே (ராஜன் குறிப்பிடும் முன் தேர்வு கொண்டு) சமரசம் செய்வதாகவே நினைக்கிறேன். எனது தற்சமய நிலைபாடும் புரிதலும் இதற்கு எதிரானது. இஸ்லாமிய அடைப்படைவாதத்தை விமர்சிக்காமல் சமரசம் செய்வதுதான் இந்துத்வாவிற்கு உதவும் என்று நினைக்கிறேன். வலைப்பதிவில் நடந்தவைகளை ஆதாரமாக்கி இதை விளக்கி காட்டுவது கஷ்டமான வேலை இல்லை. அதே நேரம் அ.மார்க்சின் தேர்வை புரிந்து கொள்வதிலும் பெரிய சிரமம் இருப்பதாக தெரியவில்லை. புரிந்து கொள்வது, நியாயப்படுத்துவது, பிரச்சனைகள் புரிந்தும் விமர்சிக்காமல் இருப்பது போன்றவற்றிற்கு இடையேயான வித்தியாசங்களை உணர்வதும், எந்த சந்தர்ப்பங்களில் நியாயப்படுத்துவது, விமர்சிப்பது என்பதுதான்.

கோயம்புத்தூர் நிகழ்வுகளில் அ.மார்க்ஸ் நிலைபாடுகளை இந்த வகையில் நியாயமாக சொல்ல என்னால் இயலலாம். தஸ்லிமா மீதான் தொடர்ந்த தாக்குதல்களை (தொடர்ந்து பொதுவெளியில் பேசிவரும் ஒருவர்) பேசாமல், அதை நியாயபடுப்பவர்களை அரசியல் தோழமைகளாக பார்ப்பதுவிட்டு, குஷ்பு மீதான தாக்குதலை பாசிசம் என்று செயலில் இறங்கும் போது அது விமர்சிக்க வேண்டியது என்றுதான் நினைக்கிறேன். இம்ரானாவிற்கான அடிப்படை நியாயத்தை கூட செய்யாமல் ஒரு பத்தி எழுதிவிட்டு, அடுத்த பத்தியில், சினிமாவில் சிகரெட் பிடிப்பதை அன்புமணி தடை செய்வது பாசிசம் என்று எழுதுவது ஸிக் ஜோக்காகி விடுவதாகவும் நினைக்கிறேன்.

குறிப்பிட்ட அரசியலை யாரும் அந்த அரசியல் காரணங்களுக்காகவே தேர்வு செய்வதில்லை. அதற்கு பின்னால் மனித விடுதலையோ, மனிதாபிமானமோ, ஏற்றதாழ்வு, ஒடுக்குமுறை மீதான கோபமோ என்று ஏதோ என்று இருக்கிறது. அந்த குறிப்பிட்ட அரசியலை தேர்வு செய்ய வைத்த அந்த முன் காரணிதான் முக்கியமானதே ஒழிய அந்த அரசியல் பரிசீலனைக்கு உரியது என்று நினைக்கிறேன். அப்படி பார்க்கும் போது தஸ்லிமா மீதான தொடர்ந்த தாக்குதல்கள் இருப்பு மீதான அச்சுறுத்தல்கள் மீது விமர்சனமின்றி இருக்கும் அரசியலின் முன் தேர்வு நோய்கூறும் வன்முறையும் கொண்ட அரசியல் நியாயமாகவே எனக்கு படுகிறது. தஸ்லிமா என்பது சும்மா ஒரு உதாரணம்தான். நான் வலைப்பதிவாளன் என்று சொல்லும் அளவிற்கு கூட செயல்பாடு இல்லாமல் இருப்பதாலும், அரசியல் செயல்பாட்டாளராக இருக்கும் ஒருவரை விமர்சிக்க கூடாது என்று இன்றய சூழலில் என்னால் நினைக்கமுடியாது. அதை சுயநினைவில் கொள்வதும் சற்று ஜாக்கிரதையாக இருப்பதை மட்டுமே செய்ய முடியும்.

இன்னும் எழுத இழுத்து கொண்டு போக நிறய இருப்பினும், லீனாவிற்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் இங்கே நிறுத்தி கொள்கிறேன். இன்று இரவே அதையும் எழுத முயற்சிக்கிறேன். அல்லது நாளை.

4/13/2010 2:26 AM  
Blogger ROSAVASANTH said...

விடுபட்ட விஷயம். குஜராத்தில் நடப்பதை அறிந்திருந்தால் இந்த முன் தேர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்று ராஜன் சொல்வது என்னால் விளங்கி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குஜராத்தை மனதில் வைத்து கொண்டே, தஸ்லிமா மீதான தாக்குதலையும் எந்த ஐயமும் யாரும் கொள்ளாதவகையில் கண்டிப்பதில் பிரச்சனையிருப்பதாக எனக்கு தோன்றவில்லை. (வேண்டுமானால் 200%, 100% கணக்கு வைத்து கொள்ளலாம்.)

4/13/2010 2:30 AM  
Blogger ROSAVASANTH said...

அன்புள்ள லீலா மணி மேகலை,

உங்கள் முதல் பத்திகளில் பொதுவாய் குறிப்பிட்டு சொல்கிறீர்களா அல்லது என்னை குறிப்பிட்டு சொல்கிறீர்களா என்கிற தெளிவு இல்லை. என்னை சொல்வதாக இருக்கக்கூடிய வாசிப்புகளை மனதில் கொண்டு மட்டும் சில.

ஆசிரிய, வாசிப்பு, பிரதி என்று எது சார்ந்த ஒழுங்கையும் நான் வலியுறுத்தவில்லை; உங்கள் மொழி எனக்கு எந்த உறுத்தலையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்கிறேன். மீறி ஏற்படத்தான் செய்கிறது என்று நீங்கள் தீவிரமாக நம்பினால் செய்வதற்கு எதுவும் இல்லை. உங்கள் கவிதைகளை கவிதை என்ற அளவில் என்னால் ரசிக்க முடியவில்லை என்று சொல்வதை தவிர வேறு எதையும் நான் சொல்லவில்லை. நீங்கள் மேலே சொல்லும் அரசியலுக்கு பல ஆண்டுகாலமாக ஆதரவாகத்தான் பேசி வருகிறேன். (சில அழுகுணி ஆட்டங்கள் தவிர்த்து). உங்கள் தகவலுக்கு ̀தூமை' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை தொடங்க 95களில் நண்பர்களுடனான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். (பெருமையாகவோ, பதிவாகவோ இதை சொல்லவில்லை, 15 ஆண்டுகள் கழித்து எனக்கு இதெல்லாம் ஒவ்வாமை போன்ற உபாதைகளை புதிதாக உருவாக்க வாய்ப்பில்லை என்று வலியுறுத்த மட்டும் சொல்கிறேன்.) உங்கள் கவிதை எழுதும் உரிமைக்கு ஆதாரவாகத்தான் என் நிலைபாடு. உங்கள் கவிதைகளை பலர் பாராட்டுகிறார்கள், அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்வதாக யாரோ(சுகுணா என்று நினைக்கிறேன்) சொன்னார். அவைகளுக்கு எதிர்வினையாக இப்படி சொல்வது ஓவர், அப்படி எதுவும் கவிதையில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்பது என் கருத்து. இவைகள் உங்கள் எல்லா கவிதைகள் மீதான என் தனிப்பட்ட கருத்தும் அல்ல. நான் அவைகளை வாசிக்க இன்னும் நேரவில்லை. இப்போது பிரச்சனைகளாக பேசப்பட்ட கவிதைகளை பற்றி மட்டுமே. உங்களை மூர்க்கமாக எதிர்ப்பது, விமர்சனமின்றி ஆதரிப்பது என்ற அணிகளை மட்டுமே பார்கிறேன். உங்கள் உரிமைக்கு ஆதரவாகவும், கவிதைக்கு விமர்சனமாகவும் யாரும் கருத்து சொல்லி நான் கேட்டிராததால் ஒரு குரலாவது அப்படி ஒலிக்கட்டுமே என்று என் கருத்தை பதிவு செய்தேன். கச்சாவான பாலியல் மொழி கொண்டு கவிதை சமைக்க கூடாது அல்லது சமைக்க முடியாது என்பதும் என் கருத்து அல்ல. என் பார்வையில் கவிதை ஆகவில்லை என்பதுதான் நான் முன்வைக்கும் கருத்து. இதை ஆண்மனநிலை என்று சொல்லி எதிர்கொள்வீர்களாயின் அது ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி அமைக்காது. உங்களை வாசிப்பவர் மட்டுமல்ல, வாசிக்காதவர் வசதிக்காகவும் கவிதை சமைக்க நான் கேட்டுக் கொள்ளவில்லை.

4/13/2010 3:25 AM  
Blogger ROSAVASANTH said...

(தொடர்ச்சி) அச்சுறுத்தல் என்றால் அடித்து தெருவில் இழுத்துச் செல்வது என்று நான் சொல்லவில்லை. ஆனால் எதிர்ப்பு என்று ஒன்று திரண்டு வருவது என்பதாக நீங்கள் சொல்லும் ஒன்று, ஒருவரின் இருப்புக்கும் இயக்கத்துக்குமான அச்சுறுத்தல் இல்லை என்பதுதான் என் கருத்து. உங்கள் எழுத்துக்கு எதிர்ப்பு திரள கூடாது என்று நினைப்பதுதான் பிரச்சனைகுரியது. உங்கள் கவிதைக்கு எதிர்ப்பு இருக்காது என்று நினைத்திருந்தால் அது உங்களின் முதிர்ச்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை. எதிர்ப்பே இருக்க கூடாது என்று நினைத்தால் அது சகிப்பு தன்மை சம்பந்தபட்ட பிரச்சனை. எதிர்ப்பு ஒன்று திரளுவதாக நீங்கள் சொல்லும் ஒன்றை நிச்சயமாக ஒரு அச்சுறுத்தலாக என்னால் பார்க்க முடியவில்லை. அந்த எதிர்ப்பு வெளிபடும் விதத்தை வைத்துதான் பேசமுடியும்.

இந்து மக்கள் கட்சி, மகஇகவினர் மட்டுமின்றி, பெருமளவு பெண்ணிய போக்குகளை ஆதரிக்கும் சிலர் கூட இது போல எழுதுவதற்கு எதிர் கருத்து வைத்திருக்கிறார்கள். (தெளிவுக்காக சொல்கிறேன். எனக்கு அப்படி ஒரு எதிர்கருத்து இல்லை.) அவர்களை எல்லாம் அடிப்படைவாதிகளாக என்னால் பார்க்க முடியாது. ஒருவேளை உங்களுக்கு எதிர்ப்பு வெளிபடலாம் என்று நீங்கள் கருதினால், எப்படி எல்லாம் வெளிபடவேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள் என்று பதிவில் கேட்டுள்ளேன். நீங்கள் பதில் சொன்னால் அவர்களை அப்படி நடக்கும் படி வேண்டுமானால் வேண்டுகோள் விடுக்கிறேன். எதிர்ப்பிற்கான ஒரு வெளியையும் அனுமதிப்பதுதான் உண்மையான பாசிச எதிர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். (அதற்காக எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடாது, பதில் சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை.)

4/13/2010 3:27 AM  
Blogger ROSAVASANTH said...

(தொடர்ச்சி) ஆனால் சமூகத்தில் இந்த வழக்கு தொடுப்பது, புகார் செய்வதெல்லாம் சாதாரணம். அற்ப காரணங்களுக்காக, கண்டதிற்கும் தடை கோரியிருக்கிறார்கள். உதாரணம் சொன்னால் எண்ணிகையில் அடங்காது. இந்த பிரச்சனையுடன் ஒப்பிட்டு பேசினால் எல்லாம் ரொம்ப அபத்தமாக தோன்றும். அவையெல்லாம் சமூக பிரச்சனைகளாக யாராலும் உருமாற்றம் செய்யப்படவில்லை. பெரியார் பெயரை வாலி கவிதையில் பயன்படுத்தற்கு கூட தடை கோரினார்கள். (அதை சகிப்பின்மை என்று திண்ணையில் கட்டுரை எழுதியதை நான் எதிர்த்திருக்கிறேன்.) சிவகாசி படத்தில் வக்கீல்களை கேவலப்படுத்தியிருப்பதாக வழக்கு தொடர்ந்தால் (அவ்வாறு தொடர்வது எவ்வளௌ அபத்தமாயினும்) அது விஜய்கான அச்சுறுத்தல் இல்லை. அதை சமூக பிரச்சனையாக நாம் மாற்றமுடியாது.

'இந்து மக்கள் கட்சி புகார் கொடுத்திருக்கிறது, இதை வன்மையாக கண்டிக்கிறோம்' என்றிருந்தால் தமாசாக சொல்லியிருக்க மாட்டேன். "எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. " என்றெல்லாம் சொல்வதுதான் தமாசாக தெரிகிறது. இப்படி நீட்டி வாசிப்பது அ.மார்க்ஸ் தமிழ் கலக எழுத்துக்கு தந்த கொடை. சமூக ஒடுக்குமுறைகளை தீவிரமாக எதிர்ப்பவர்களும், எதிராக செயல்பட்டு கொண்டிருப்பவர்களும் கூட உங்களை எழுத்தை தடை செய்ய கேட்க சாத்தியம் உள்ளது. குறிப்பாக பெண்கள் மீதான கொடுமைகளை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் கூட அப்படி ஒரு நிலைபாடு எடுக்க முடியும். (இதை சொல்லி நான் எதையும் நியாயப்படுத்த வரவில்லை). அந்த நிலைபட்டையும் சமூக ஒடுக்க முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தல் என்று என்னால் பார்க்க முடியாது. அவை எப்படி இருந்தாலும் உங்கள் கவிதைகளுக்கான எதிர்ப்பை வேறு பல வார்த்தைகளால் பேச முடியும். 'எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் ' என்று சொல்வதான் ஜோக்காகத்தான் தெரிகிறது. மற்றபடி ஸ்டீரியோடைப் என்று நான் சொன்னது 'பொது ஒழுங்கிற்குள் கட்டுப்பட்டு இரு என்று ஒரு படைப்பாளியைச் சொல்லும் அடாவடித்தனத்தைக் கண்டிப்பதை" என்று எதையும் அல்ல.

4/13/2010 3:28 AM  
Blogger ROSAVASANTH said...

(தொடர்ச்சி) சரியாக வாசியுங்கள். ' எல்லா பிரச்சனை குறித்தும் கருத்து சொல்ல இயன்றதில்லை என்றால், இப்போதாவது கருத்து சொல்லும் படி நேரடியாக அறைகூவுகிறேன்.' என்றுதான் எழுதியுள்ளேன். தஸ்லிமா நஸ்ரினுக்காக குரல் கொடுத்திராதவர்கள், ரசூலுக்காக குரல் கொடுப்பது இந்துத்வாவிற்கு சாதகமாகிவிடும் (உண்மையில் குரல் கொடுக்காததுதான் சாதகமாகிவிடும்) என்று ஒரு நியாயயத்தை தந்தவர்கள், தஸ்லீமா மீதான தாக்குதலை ஆதரித்து எழுந்த குரலுக்கு எதிர்வினை வைக்காதவர்கள் இப்போது பேசுவதை பற்றி கேட்பது விதண்டாவாதமா? எப்படி? இதுவும் ஏதோ இப்போது கேட்கப்படும் கேள்வியும் இல்லையா. தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும் கேள்வியும் ஆகும். இது ஒட்டுமொத்தமாக ஒன்றை மனதில் வைத்து செய்யப்படும் விமர்சனம். தராசை தூக்கிக் கொண்டு அலைவது என் வேலையும் அல்ல. உலகின் பிரச்சனைகளை எல்லாம் வரிசை படுத்து, முக்கியத்துவம் சார்ந்து அடுக்கி, அளந்து எதிர்ப்பை அளிக்க வேண்டும் என்றும் யாரையும் கோரவில்லை. என் தராசை வைத்து என்னை அளப்பதில் தத்துவ மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதனால் உங்கள் தராசை வைத்து விமர்சிக்கும் படி வேண்டுகோள் வைக்கிறேன். (என் சுய நினைவில் எனக்கு வாய்க்கும் வெளியில் முக்கிய பிரச்சனைகளை எதிர்ப்பதை தவிர்த்ததில்லை என்றே நம்புகிறேன்.)

கண்டன கூட்டம் நடத்தும் உரிமை பற்றி நான் எதுவும் பேசவில்லை. நாட்டில் எவ்வள்வோ நடக்கும்போது இதனால் என்ன பெரிய பிரச்சனை! நான் பகிர்ந்து கொள்ளும் அரசியலை கொண்டவர்கள் என்பதால் தமாசாக பார்பதை பதிவு செய்கிறேன். முகமதுவின் கார்டூனை வரைய டென்மார்க் பத்திரிகைக்கு உரிமை இல்லை என்று சொன்ன மார்க்ஸ், உங்களுக்கு வரும் எதிர்ப்பை பாசிசம், கலாச்சார கண்காணிப்பு என்று சொன்னால் அதெல்லாம் ஸிக் ஜோக் அல்லாமல் வேறு என்ன? (முகமது கார்டூனுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமைக்கு ஆதரவாகத்தான் நான் என் கருத்தை பதிவு செய்துள்ளேன்.)

'எந்த மன உயரமும் அற்ற தமிழ்ச்சமூகத்தில் படைப்பாளராய் இருப்பதும் துரதிருஷ்டம் தான்' என்கிறீர்கள். தமிழ் சமூகம் நிறைய பிரச்சனைகள் வாய்ந்தது உண்மைதான். ஆனால் உங்கள் கவிதையின் மொழியை பொதுவெளியில் சகஜமாக ஏற்று, எதிர்ப்பே இல்லாமல் இருந்த, இருக்கும், இருக்க கூடிய சமூகம் ஒன்றை குறிப்பிடுங்கள். (அப்படி ஒரு சமூகம் இல்லாத காரணத்தால் உங்களுக்கான எதிர்ப்பு நியாயம் என்று நான் சொல்லவில்லை).

இப்போதைக்கு இவ்வளவுதான் என் தரப்பு விளக்கம். தேவையானால் பிறகு.

அன்பும் மரியாதையுடனும்
வசந்த்.

4/13/2010 3:29 AM  
Blogger ROSAVASANTH said...

கீற்று வலைதள கூட்ட அறிவிப்பு என்றின் பின்னூட்டத்தில் rosa பெயரில் பின்னூட்டம் வந்துள்ளது. rosa பெயர் எனக்கு மட்டும் சொந்தம் அல்ல, வைத்துகொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதை எழுதியது நான் அல்ல, இந்த பதிவை தவிர வேறு எங்கும் நான் கருத்து சொல்லவில்லை என்று தெளிவுக்காக இங்கே பதிவு செய்கிறேன்.

4/13/2010 3:47 AM  
Blogger mathi said...

எதிர்ப்பு திரண்டதா அல்லது திரட்டப்பட்டதா? ஒரு சிறு சொல் கூட அச்சுறத்தலை ஏற்படுத்திவிடும் என்கிறார் லீனா மணிமேகலை. நியாயம்தான். ஒரு சிறு சொல் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு புகாருக்காக கண்டனக்கூட்டம் நடத்துபவர்கள், லீனா மணிமேகலையால் சம்பளம் மறுக்கப்பட்டு, ஆள் வைத்து தாக்கப்பட்ட தீபக் விவகாரத்தில் எங்கே போனார்கள்? அது மனித உரிமை மீறல் இல்லையா? சொல்லப்போனால் இன்னும் மோசமான மீறல்.உழைப்பை சுரண்டுவது அருவருக்கத்தக்க செயல். கருத்து சுதந்திரம், மனித உரிமை மீறல் எல்லாம் லீனாவின் தனி சொத்தா என்ன? இவர்கள் எல்லாம் மார்க்சியவாதிகள் என்று வேறு சொல்லிக்கொள்கிறார்கள். உடலின் மொழியை உண்மையான அரசியலாக முன்வைத்த எந்த பெண்கவிஞரும் இந்த எதிர்ப்புத்திரட்டப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. மனித உரிமை ஆர்வலர்கள் கூட செலக்டிவ் அம்னீஷியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் போலும். விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள்.

4/13/2010 2:50 PM  
Blogger ROSAVASANTH said...

என் பதிவில் பின்னூட்டங்கள் எதையும் பொதுவாக தடை செய்வதில்லை. போலி பின்னூட்டங்கள் மற்றும் பிறரை பற்றிய வசைகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன; சில எடிட் செய்யப்பட்டுள்ளன. பொய் குற்றச்சாடட்ுகள், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கொண்ட பின்னூட்டங்களையும் தடை செய்வதில்லை. அதை மறுப்பதற்கு குற்றம் சாட்டலின் இலக்காக இருப்பவருக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால். அந்த வகையில் மேலே மதி என்பவரின் பின்னூட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பதால் அதை ஏற்பதோ ஆதரிப்பதோ என்று பொருள் ஆகாது. அதில் குறிப்பாக சம்பளம் தராதது, ஆள் வைத்தது அடித்தது (ஏற்கனவே வேறு தளங்களில் வெளியாகியுள்ளவைகள்) போன்றவைகள் ஆதாரபூர்வமாக யாராலும் முன் வைக்கப்பட்டதாக நான் கருதவில்லை. எங்கோ நடந்த, நம்மால் உண்மையா என்று சரி பார்க்க முடியாத சம்பவங்கள் குறித்து இங்கே எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். கருத்துரீதியான பிரச்சனைகள மட்டும் விவாதிப்பதே என் நோக்கம். அவற்றை முன்வைத்து மட்டுமே இங்கே எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். (மற்ற இடங்களில் எழுதுவது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை). புரிந்து கொண்டால் நன்றி.

4/13/2010 3:53 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter