ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, January 31, 2005

நெரிந்து!

ம. மதிவண்ணன்

(மதிவண்ணனின் நெரிந்து கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இங்கே பதிகிறேன். இவை ஏற்கனவே அநாதையின் வலைப்பதிவுகளில் துண்டு துண்டாக பல பதிவுகளில் பதிந்ததுதான். இங்கே மொத்தமாக பதிவது மட்டுமில்லாமல், முன்பு டிஸ்கியில் பதிந்தது இப்போது யூனிகோடிற்கு மாற்றப்பட்டுள்ளது - ரோஸாவசந்த்.)

1. ஆகப்போவதொன்றுமில்லை
எல்லா எத்தனமும் வீணேயெனினும்
மூளையன்றோடு பிணைத்துன்
கழுத்தை சுற்றி கிடக்கும் வலிய சங்கிலியின்
இரும்புக் கண்ணிகளை
கடித்துக் கொண்டாவது இரு.


2. ஊர்த்தெரு நடுவில் நொத்தப்பட்ட
உள், வெளி வலிமரக்க ஊற்றிக்கொண்ட
தகப்பனின் போதைப் புலம்பலில்
யுகங்களின் வலி வெளிப்படுகையில்
கையாலாகாமற் குமையும் இம்முகத்தின் உள்ளீடும்,

விழிமலர் விரிப்பில் வீழ்ந்து
கொஞ்சு மொழிப் புதிர்ப் பொருளில் கிறங்கிக்
கிட்டே போகுங்கால்,
பாட்டன் தூக்கிய பீவாளியிலிருந்தொன்று
புறப்பட்டு வந்து பொறிகலங்கச் சென்னியிலறைய
நொண்டி புறமோடும்
உணர்வு நடுங்கலின் அதிர்வெண்ணும்

அறிவாயா?
என்னை எழுதும் உரிமை நாட்ட
முண்டாத் தட்டும் நீ.
சொல்ல பதிலில்லையெனில்,
தூரமோடிப் போ
எல்லாத்தையும் பொத்திகொண்டு.


3. தனது அத்தியவசியங்களாலான
மூட்டையைக் கவனமாய் இடுக்கிகொண்டு
தகிக்கும் வெயிலை உணராதவனாய்
நீளமான அந்த கடைவீதியைச்
சளைக்காமல் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.

கற்கவசம் கட்டிய மனித முகங்களுக்கிடையில்
காற்றின் திசையிலும் பெருக்கதெரியாமல்
மல்லுக்கட்டி கொண்டேயிருக்கிறான்
கடைவீதி வேறு இன்னும் நீளமாயிருக்கிறது.


4. ஆடை உறுத்தாத நிர்வாணங்கொண்டு
ஒரு பூ மாதிரி என் மீது கவிந்து
ஒவ்வொரு மயிர்காலிலும்
என்னை மீட்டிகொண்டிருக்கிறாய்.

நான் நாறும் சட்டையுடனவன்
திடுமென நுழைந்து தன் கர்ணகடூரக் குரலெழுப்ப
பதறியடித்தெழ வேண்டியதாயிற்று நாம்.

எழுந்து அவனை எதிர்கொள்ளத் தயாராகையில்
நீயுமுன்னை அவசரமாய் பொதிந்து கொண்டோடிப் போனாய்

இதோ!
வந்தவனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத்
துளித்துளியாய் மௌனப் பூத் தெளித்து
இந்த படுக்கையை தயார் செய்கிறேன் திரும்பவும்.



5. அழுக்கேறிய அரைக்கால் சட்டையுடன்
மலக்குழி சுத்தபடுத்தியவனின் பேரன்
குழாய் மாட்டிகொண்டு
வீதியில் நடப்பது பொறுக்காது
அவன் ஏவி விட்ட நாயிடமும்
நாய் ஏவி விட்ட அவனிடமும்
சிக்கிவிடாது தப்பியோடிய கிலியை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திணைகளை தூக்கிக் கொணரவில்லை யென
ரொம்பத்தான் சடைத்து கொள்கிறாய்.



6. எல்லாமும் சாத்தியம் தானெனினும்
எதையும் செய்யபோவதில்லை நான்
என்னை கீழாகவும் உன்னை மேலாகவும் காட்ட
எனக்கு பூட்டிய இழிமுகத்தை மட்டுமில்லாது
நீயணிந்து கொண்ட உயர்முகத்தையும்
கிழித்து கொண்டிருப்பது தவிர.



7. எவருமறியா உன் ஜட்டிக்கிழிசலை போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்.

சொல்ல துணிவுண்டா உனக்கு?
உன் அந்தரங்களில்
நீ ஒளித்து வைத்திருக்கும் எல்லாமும்
வேப்பமரத்தடி மணலில்
சூரியனுக்கு தெரியாமல்
நீ புதைத்து வைத்தமுதலாய் விழுந்த சிங்கப்பல்லை போல
ஒரு பாவமுமறியாதவையே என.




8. எத்தனையாவது முகம் இது?
சண்டாளனென என்னை வரையறுத்த
மனுவின் அழுகல் குறியை ஊம்பி
வல்லமை பெற்ற ஷத்திரியக் கைவாளின்
நினைப்பில் கருகிய முகங்களே அதிகமும்.
இருசக்கர வாகனமொன்றின் பின்னிருக்கையில்
முயக்கத்தில் தோன்றியகணம் கருகிய
இம் முகம் போலும் சில முகங்கள்.
ஒவ்வொரு முகம் கருகும்போதும்
மூர்சையாகிச் செத்தவள் போல் விழுபவள்
புதிது புதிதாய் முளைக்கும் முகங்களுடன்
எழுந்து என்னில் தழும்பி கொண்டிருக்கிறாள்.
முகமும் உருவமுமற்ற என்னுள் உறவாட
உயிர் ஊறிக் கொண்டிருக்கிறது என்னிலிருந்து.



10. பொருட்படுத்தாது நீ போன கணத்திலிருந்து
புழுத்து வீச்சமெடுத்துக் கொண்டிருக்கிறது.
நாசியைப் பிடித்துக் கொண்டு
வசைகளுடன் கடந்து போகிறவர்களை
சட்டை செய்யாது ஏந்திக் கொண்டிருக்கிறேன்.
வேறொன்றும் செய்திடலாகாது.
உனக்கு படையலிடவென்றே
கடைந்தெடுத்த அமுதமிது.


11.

அ.

என்னை நீ பார்பதென்பது
எப்போதும் என் பின்புறத்தைப்
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறாய்.
நீ மொட்டையாக்கிய இவ்வாலை
குலைக்கும் வேகத்தை,
ஊம் ஊமென குழறும் குழறலை,
உன் காலை மோந்து, நக்கி சுற்றிச் சுற்றி
வருமென் கால்களில் மிதியுண்டு கிடக்கும் நானை,
நீ வீசியெறிவதை நக்கி தின்னுமென் வேகம்
உன் திருப்திக்கு உத்திரவாதமளிப்பதாயிருப்பதை,
எல்லாவற்றையும்.
நக்கி தின்னும் வேளையில் ஓங்கி வயிற்றிலுதைபட்டு
ஊளையிட்டு இறைஞ்சி நிற்குமென் பசிபார்வையில்,
என் மழுங்கல்தனத்தை உறுதி செய்து
கடந்து போவதுன் வழக்கம்.


ஆ.

உன்னை நான் பார்பதென்பது
எப்போதும் எச்சில் ஒழுகும் உன் வாயை
பார்பதாகவே இருக்கிறது.

ஒவ்வொரு எதிர்படுதலிலும்
கவனமாய் அவதானிக்கிறேன்.
எல்லாவற்றையும் குரோதமுடன் நோக்கும்
உன் நிலையற்ற பார்வையை,
அருவத்தை குதறும் உன் குரைப்பை,
எதிர்படுமெல்லாவற்றிலும் மோந்து பார்த்துத்
தலைக்கேறித் ததும்பும் வெறியைச்
சேர்பிக்கத் தோதான உயிர் தேடி
ஓட்டமும் நடையுமாய்த் தொடரும் உன் அலைச்சலை,
அனைத்தையும்.
பாதுகாப்பான தொலைவு கடந்து வந்தபின்
உன்னை திரும்பி பார்பதென் வழக்கம்
பேச்சு மூச்சற்றுத் திகிலுடன்.



12.
முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.



13.
நமைச்சலெடுக்கும் குறிகள் மூணு
கூட இருக்கும் தெம்பில் குறிநீட்டி
எல்லை மீறுபவனுக்கெதிராய்
எதுவுஞ் செய்ய இயலாமல்
குறியைச் சுருட்டிக் கொண்டவனின்
கையாலாகாத்தனம்
அர்த்தமற்ற குத்தலுடன் குற்றபடுத்தும் உன்னை.
நாங்கள் சுமத்திய எங்கள் அகோரங்களை
அறியவும் அனுமதிக்கபடாமல்
நீட்டியவனுக்கும் சுருட்டியவனுக்குமிடையே
குறுகிக் கிடக்கிறாய் நீ.
முலையும் யோனியுமாய்
வெறும்
முலையும் யோனியுமேயாய்.



14.
அக்கா குருவியின் மெல்லிய குரல் லயமும்
சிறு சிறு மலர்களின் மௌனச் சுகமும்
எனக்கும்தான் பிடித்திருக்கிறது.
பிறகெதற்கு இந்த ஒப்பாரியும் கூப்பாடும்
என்கிறாயா?

தேவைகள் சமைத்த என் குரலைச் சலிக்காது
சற்றே பொறு நண்பனே,
என் காதலி உன்னையும்
உன் காதலி என்னையும்
தழுவி முத்தமிட எந்த தடையுமில்லாமற்பொகும்
உன்னதப் பொழுதுவரை




15.
தலைவாசலுக்கருகில் படுத்துகொண்டு
முகம் திருப்பி முதுகு கடித்து
அரிப்புக்கு பதில் சொல்ல
முயற்சித்துக் கொண்டிருக்கிறது
அது எப்போதும்.

சொறிந்து கொள்ளக் கைகளின்றி
அதுபடும் அவஸ்தை புரிந்தாலும்
என் கைகளை இரவல் கொடுக்க முடியாது
ஒரு போதும்.

வேதனையுடன் கழிக்கவென விதிக்கபட்ட
அதன் எஞ்சிய வாழ்வு குறித்து
அனுதாபம் நிறைய இருந்தாலும்
எதுவும் செய்யக் கூடவில்லை
இந்த இடத்தையும் அதற்கில்லையென
மறுக்கும் ஒற்றைக்கல்லை
இதுவரை வீசாமலிருப்பதை தவிர.


16.

அலையடித்து நுரைகக்கும் கரையை
மிகுந்த பிரயாசையுடன் கடந்து செல்லுமென்
கைகளில் புராதனத்தின் கிழிசல் மிக்கவொரு வலை.
ஆழங்களில் வீசி காத்திருந்து மீட்டெடுக்கையில்
மீன்களை வழிய விட்டுவிட்டுக்
கடற்தாவரங்களோடு கெக்கலிட்டுச் சிரிக்கிறது
அது அநேக நேரங்களில்.
பெருமீன் பிடிக்க லாயக்கற்றுக் கிழியுமிதைப்
புதுப்பிக்கும்வரை
திருப்தி கொள்ள வேண்டியதாயிருக்கிறது
குறுமீன்களோடு.

கிழிசல் வலையைப் பலவீனத்தோளில்
போட்டுக்கொண்டு மீண்டும் மீண்டும்
வரச் செய்வதாயிருக்கிறது கடலின் அழைப்பு.
விடாப்பிடியான தாகத்துடன் விரித்துகொண்டேயிருக்கிறேன்
மீன்களுக்கான வலையில்
நானே விழுந்து கிடப்பதை அறிந்தும்
அறியாதவனாய்.


17.

வருடிக் கொடுப்பதான பாவனை செய்யவல்ல
உன் வார்த்தைகளை மூலதனமாக்கிப்
பெற்றது உனதிந்த ஸ்தானம்.
கேள்விகளற்றுத் தலையாட்டலுடன் தொடர்ந்த
இத்தூரத்தின் முடிவில் மிச்சமாகியிருப்பது
உனக்குன் ஸ்தானமும்
எனக்குன் வார்த்தைகளும்.

ஸ்தானம் கொடுப்பது நிறைய
தனம் தானியம் அதிகாரம் கீர்த்தி என.
வார்த்தைகள் கொடுத்தது ஒன்று
நீண்ட மயக்கம்.

ஒரு நீர்கயிறாய் வலியின்றி பிணைத்திருக்கும்
உன் வார்த்தைகளிலிருந்து மீள
வேறென்ன வழி மீந்திருக்கிறது சொல்!
கனவு ததும்பும் உன் விழிகள் ஒளிர
பரிவு சுமந்துவரும் அவ்வார்த்தைகள் புறப்படும்
உனதந்த குரல்வளையை குதறுவதை தவிர.


18

அ.

கான் தள்ளும் கறுப்பு வளையல்காரிகளின்
கைகளில் வந்தாவது
சரியாய் இருக்குமா?

கிழிசல் உடை பரட்டைத்தலை
சக்கிலிய வீட்டு பிள்ளைகளைக்
குறிவைத்துத் துரத்தியடித்தே பழக்கப்பட்ட
வாத்திச்சிகளின் கைப்பிரம்பும்,

காக்கிக் குறிகள் ஒரு அபலையை
வெறிதீரக் குதறத் தோதாய்
செம்பருத்திப் படம் பார்க்கப் போன
பொறுப்பான பொம்பளப் போலீஸின் லத்தியும்.

ஆ.

பிரம்புகளும் லத்திகளும்
மொத்தமாய் எரியுண்ட
சாம்பல் மேட்டை நோக்கியே
துவக்க வேண்டியிருக்கிறது
இந்த பயணத்தின் முதல் அடியை.



19. மூச்சிரைத்து நுரைதள்ள
வெகுதூரம் வந்துவிட்டேன் உன்னை தொடர்ந்து.
இன்னுமெவ்வளவு தூரம் போக்கு காட்டி
இழுத்து போக உத்தேசித்திருக்கிறாய்?
அண்டி தெறிக்க குலைக்குமிவை
மேலே விழுந்து குதறும் நிமிடமும்
தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
வலுவும் வழியும் இல்லாவிட்டாலும்
திரும்பலை குறித்து யோசித்தாயிற்று பலமுறை.
கண்ணீரிலும் குரோதத்திலும் செய்த
கிடுக்கியோடு தொலைவில் காத்திருக்கிறது வீடு
என் விரைகளை நசுக்க.

20.

மௌனத்தின் அழுகையாய் உறுமியும்
வெறிக்கூத்தின் ஒலிபெயர்பாய் பறையும்
திகில் மந்திர புதிர்புதை மொழியில் உடுக்கையுமொலிக்கும்
மறைவெளி மண்டலங்களிலொன்றில்
பட்டைசாராயமும் பனங்கள்ளும்
மாந்திச் சிவந்த விழிகளுடன்
பன்னிக்கறியின் மெதனை படிந்த கைகளில்
கொடுவாளுடன் எதிர்பட்டானவன்.

கொடுவாளைக் கொண்டு மேனியை அடிக்கடி
அலுப்புடனும் கடுப்புடனும் வழித்துக் கொண்டிருந்தவன்
"ஓய்ந்து கொண்டிருக்கிறேன்
வழி நெடுக மேலே விசிறியடிக்கும்
சைவ அசைவ பீக்களை வழித்து வழித்தே"
யென்ற புகாருடன் அறிமுகப்படுத்திகொண்டான்
என் தொல்குடித் தெய்வமென்று தன்னை.
தெண்டனிட்டு வணங்கியெழுந்த போது
எனதேயான தன்முகம் மலர
வேண்டுவன கேளென்றான்
பூப்பறித்து விளையாடுவதாய் எம் தலையறுத்தாடும்
மெஜாரிட்டி கைகளில் சாதுவானவொன்று
பின் மெல்ல அறிவிக்கும்
எரிச்சலூட்டுவதாக
எங்கள் தலையின் எந்தப் பாகம் இருந்ததென்பதை
குறித்து நடத்தலாமிப்பொ
பொதுவிவாத மொன்றென்று.

தொல்குடித்தலைவா! வெட்டத் தளிர்க்கும் மரம் மாதிரி
எங்கள் மைனாரிட்டித் தலைகளும்
கொப்படித்துத் தளிர்க்க வேணுமென்றேன்.
பரிதாபமாய் பார்த்தவன் வேறென்னவென்றான்
அவ்வண்ணமே கூட்டமாய் வந்தவர்கள்
கிழிக்க முடியாவகையில் எம்குலப் பெண்களின் குறிகளை
உலோகக் குறிகளாய் மாற்றிதரவேணும்
முடிந்தால் கவர்சியான தங்கத்திலென்றேன்
அரண்டுபோனவன்
தன்னால் தரமுடிவதிதுதானென்று
பீ வழித்துக் கொண்டிருந்த கொடுவாளை
கூர்தீட்டிக் கையில் தந்து
ஊளையிட்டுப் போனானொரு காட்டுமிருகம் போல.



Post a Comment

30 Comments:

Blogger சன்னாசி said...

இருபது கழுமரங்களைப் நிறுத்திவைத்தது போலிருக்கிறது இருபது கவிதைகளும். புரிந்துகொள்ள முயலத்தான் முடிகிறது. அனுபவித்திராத நரகங்களைப்பற்றிப் படிக்கையில் வார்த்தைகளுக்குப்பதில் வேதனையும் வெறுமையும் மட்டுமே மிஞ்சுகிறது. அவற்றுக்குத் திங்கட்கிழமை காலைகள் ஒரு பொருட்டல்ல...

2/01/2005 12:38 AM  
Blogger சன்னாசி said...

This comment has been removed by a blog administrator.

2/01/2005 12:39 AM  
Blogger ROSAVASANTH said...

கருதுக்கு நன்றி மாண்ட்ரீஸர். மதிவண்ணன் குறித்து சின்ன அறிமுக குறிப்பு எழுத இருந்தேன். பிறகு அந்த வேலையை கவிதைகளே செய்யட்டும் என்று எதையும் எழுதாமல் விட்டுவிட்டேன்.

2/01/2005 12:59 AM  
Blogger Thangamani said...

Thanks Vasanth.
I will write you later.

2/01/2005 4:05 AM  
Blogger இளங்கோ-டிசே said...

ரோசாவசந்த்,
ம.மதிவண்ணனின் கவிதைகளை இங்கே பதிந்தற்கு நன்றி. அவ்வப்போது சிலவற்றை வாசித்திருந்தாலும், சேர்ந்து வாசிக்கும்போது அதன் வீர்யம் விளங்குகிறது. நெரிந்து புத்தகவெளியீட்டில் கூட சில பிரச்சினைகள் நிகழ்ந்தாய் வாசித்திருந்தேன். விபரம் தெரிந்தால் அது குறித்து எழுதினால் நல்லம்.

//விழிமலர் விரிப்பில் வீழ்ந்து
கொஞ்சு மொழிப் புதிர்ப் பொருளில் கிறங்கிக்
கிட்டே போகுங்கால்,
பாட்டன் தூக்கிய பீவாளியிலிருந்தொன்று
புறப்பட்டு வந்து பொறிகலங்கச் சென்னியிலறைய
நொண்டி புறமோடும்
உணர்வு நடுங்கலின் அதிர்வெண்ணும்//

என்ற வரிகள் நாம் இதுநாள் கட்டிவைத்துக்கொண்டிருக்கும் அழகியலை தலைகீழாக்கிவிடுகிறது.

//முகங்கள் தேவையற்றவையாய்ப் போய்விட்டன.
உனக்கும் எனக்கும் எவருக்கும்.
சுற்றியிருப்பவர் பாலுறுப்புகளை
விழுப்புடன் கண்காணித்திருப்பதோடு
முடிந்து விடுகிறது
சக மனிதர் மீதான அக்கறைகள்.//
வாசித்தவுடன் மனதில் சட்டென்று ஒட்டிக்கொண்டன இந்த வரிகள்.

2/01/2005 12:33 PM  
Blogger ROSAVASANTH said...

அன்பின் டீஜே, கருத்துக்கு நன்றி.

'நெரிந்து' வெளியீட்டு நிகழ்ச்சியில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. நான் வேறு ஊரில் இருந்தேன். ஆனால் நிகழவு குறித்து நண்பர் மூலமும், பின்பு மதி மூலமும் அறிந்தேன். எனக்கு தெரிந்து பிரச்சனைகள் எதுவும் நிகழவில்லை. சாரு மிக மோசமான கருத்துக்களை 'தைரியமாக' கூறியதாக அறிந்தேன். அது குறித்து பின்பு திண்ணையிலும் (ஜெயமோகனை திட்டி எழுதிய ஒரே ஒரு கட்டுரையில்) பெருமையாக சொல்லிகொள்கிறார். 'கவிதைகளை குப்பை' என்பதாகவும், 'தலித் எழுதிய ஒரே காரணத்தால் அது கவிதை ஆகாது' என்றும், ' தலித் வாழ்க்கை ஒரு கொண்டாட்டத்தை கொண்டது, அது இந்த கவிதைகளில் வெளிபடவில்லை' என்றும் ஏதோ கூறியதாக ஞாபகம்.

என்னை பொறுத்தவரை சாருவின் கருத்து மிக மோசமானது. நாலு செருப்படி விடத்தக்கது, அவர் பாணியில் சொன்னால் அதன் மேல் மூத்திரம் பெய்ய தக்கது. 'தொம்பர்' ஒருவருடன் தான் ஏதோ மேலோட்டமாய் தொடர்பு வைத்திருந்தாய், அதையும் ஒரு எக்சிஸ்டென்ஷியலிஸ பிரச்சனையாய் தன் ஃபேன்ஸி பனியனில் எழுதிகொண்ட, சாருவின் கருத்துக்கள் அயோக்கியதனமானவை, சாரு பொதுவாய் எதிர்பதாய் சொல்லும் இலக்கியவாதிகளின் அறிவிஜீவி பயங்கரவாதம் சார்ந்தது.

மற்றது குறித்து அறியும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் தன் கையிலிருக்கும் அளவுகோல் மற்றும் (வெளிப்படையாய் புலப்படாத அதிகாரம்) கொண்டு தீர்பளிக்கும் வன்முறையே இது.

தமிழில், தலித்களிலும் ஒடுக்கப்படும், அருந்ததி இனத்திலிருந்து எழுதிவரும் ஒரே கவிஞர் மதிவண்ணன். அந்த ஒரேகாரணத்திற்காக மட்டும் இந்த கவிதைகள் முக்கியத்துவம் பெறவில்லை. கவிதை தரும் அனுபவமும், (எதிர்)அழகியலும் தமிழில் வேறு எங்கும் இல்லாதது.

'தலித் வாழ்க்கையில் சிற்றின்பத்தைற்கும், கொண்டாட்டத்திற்கும் பெரிய இடமுண்டு' என்றாலும், அது பல பிரச்சனைகளோடு தொடர்புடையது. உதாரணமாய் குடிப்பது. அம்மாவும், அப்பாவும் சேர்ந்து குடிப்பது ஒரு பக்கம் சாருபார்வையில் 'நல்ல விஷயமாய்' பார்க்கமுடியும் என்றாலும், இன்னொருபக்கம் வேறு பரிமாணங்கள் உடையது. சாரு தான் விரும்புவது வெளிப்படவேண்டும் என்று விரும்புவதும், அதை வலியுறுத்தி கூறுவதும் ஒரு வன்முறையாகவே தெரிகிறது.

நெரிந்து தொகுப்பில் உள்ள கவிதைகள் ரவிகுமாரால் தேர்ந்தெடுக்க பட்டவை என்று அறிகிறேன். மதிவண்ணன் அங்கீகாரம் போன்றவை குறித்து எந்த கவலையும் இல்லாமல் வெளிப்படையாய் கருத்துகளை வெளிப்படுதுபவர். பெரியாரை 'காலி'பண்ணி, அங்கே அயோத்திதாசரை பிரதிஷ்டை பண்ணும் வேலை குறித்து மதி எதிர்த்து எழுதிய கட்டுரை, தலித் அறிவுஜீவிகள் மத்தியில் புறக்கணிப்பை பெருவதை கவனிக்க வேண்டும். அதை தட்டச்சு செய்ய ரொம்ப உந்துதாலாய் இருந்தாலும், அது சிண்டு முடிவதில் முடிந்துவிட கூடாது என்பதற்காய் இன்னும் செய்லாக்கவில்லை.

2/01/2005 3:46 PM  
Blogger Thangamani said...

வசந்த் மதியின் அந்தக் கட்டுரையை (பெரியார்) படிக்க ஆவலாய் உள்ளேன். அதை உங்கள் வலைபதிவில் வெளியிடமுடிந்தால் மிக்க மகிழ்சியும் நன்றியும். இணையத்தில் இருப்பின் சுட்டி ப்ளீஸ். வேலைபளுவோ அல்லது வேறு காரணங்களோ இருப்பின் ஒரு பிரதியை அனுப்பமுடியுமா?

2/01/2005 4:10 PM  
Blogger Thangamani said...

சாரு சொன்ன தலித் வாழ்க்கை கொண்டாடமுடையது என்பதை புரிந்துகொள்கிறேன். அதன் காரணத்தாலேயே பார்ப்பனசேரியைவிட பறைச்சேரியில் விடுதலை உணர்வும் நேர்மையும் ஒரு பயிற்சியாகவோ, கற்பிதமாகவோ அல்லாமல் இயல்பாக இருப்பதை சில் நேரங்களில் உணரவும் செய்திருக்கிறேன். ஆனால் சாருவின் கருத்தின் இடம்/பொருள் முழுவதும் தெரியாததால் அதுகுறித்து நான் இங்கு பேசவில்லை.

2/01/2005 4:14 PM  
Blogger ROSAVASANTH said...

தங்கமணி, சாரு ஒரு தனிப்பட்ட கருத்தாய் "தலித் வாழ்க்கை கொண்டாட்டமுடையது" என்று சொல்வது அல்லது நெரிந்து குறித்த ஒரு விமர்சனமாய் "அந்த கொண்டாட்டம் இந்த கவிதைகளில் வெளிப்படவில்லை" என்று கருத்து சொன்னால் கூட மன்னிக்கலாம். அவர் கூறியது 'கொண்டாட்டம் குறித்து பேசாததால்' அளிக்கும் நிராகரிப்பு. தான் விரும்புவதை, தான் அறிந்திராத தலித் அனுபவத்திடம், எதிர்பார்த்து நிர்பந்திக்கும் ஒரு வன்முறை.

மேலும் கொண்டாட்டம் என்பது என்ன? பீயள்ளுவதை தவிர வேறு எதற்கும் அனுமதிக்கப்படாத சமூகம், சாணிப்பால் போன்ற தண்டனைகளை எதிர்கொண்ளும் சமூகம், அதை எழுதகூடாது(அதாவது படிப்பவனுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்த கூடது), இந்தாள் கொண்டாட்டம் என்று புரிந்துகொண்டதை எழுத வேண்டும் என்பது, இந்த மாற்றுகலாச்சரம் மயிரு கலாச்சரம் பேசுபவனிடம் எத்தகைய வன்முறை வெளிப்படும் என்பதை கோடிட்டுகாட்டுகிறது.

மதி எழுதிய கட்டுரை பெரியார் பற்றியது அல்ல, அயோத்திதாசர் பற்றியது. பெரியார் குறித்தும் அவர் விமர்சனமாகவே எழுதியிருப்பார்,. அத்தகைய விமர்சனங்கள் வரவேண்டும் என்றே அவரும் (நானும்) கருத்து சொல்லியிருப்பார். அவர் எழுதிய விமர்சனம் பெரியாரை காலிபண்ணுவதையும், அயோத்திதாசரை அதற்கு முரணாய் கற்பித்து ஒரு பிம்பத்தை எழுப்புவதையும் பற்றியது.

இது இணையத்தில் கிடையாது. நான் தட்டச்சுதான் செய்யவேண்டும். இது ஒரு சிண்டு முடியும் விஷயமாக போககூடாது என்பதில் கவனமாய் இருக்கிறேன். எனக்கு அவசியம் என்று தோன்றினால், மதியிடம் அனுமதி பெற்றபின் அவர் விரும்பினால் இங்கே ஏற்றுகிறேன்.

2/01/2005 9:57 PM  
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

இருபது முத்துக்களையும் படிக்கத் தந்ததற்கு நன்றி.நெரிந்து வாங்கவேண்டிய ஒரு தொகுப்பு.

2/02/2005 5:59 PM  
Blogger Narain Rajagopalan said...

வசந்த், சி(ப)ல சமயங்களில் இதுப் போன்ற வார்த்தைகள் சாருவிடமிருந்து வரும். நீங்கள் சொல்வது சரியே. கொண்டாட்டத்தை முன்னிறுத்தவில்லை என்பதால், இந்த கவிதைகள் தரம் குறைந்தவைகள் அல்ல. அல்லாது, எல்லாக் கவிதைகளும், கொண்டாட்டங்களாக இருக்கவேண்டிய அவசியங்கள் இல்லை. ஒரு இனத்தின், சமூகத்தின் வெளிப்பாடாக படிக்க வேண்டிய கவிதைகள் இவை.

//அழுக்கேறிய அரைக்கால் சட்டையுடன்
மலக்குழி சுத்தபடுத்தியவனின் பேரன்
குழாய் மாட்டிகொண்டு
வீதியில் நடப்பது பொறுக்காது
அவன் ஏவி விட்ட நாயிடமும்
நாய் ஏவி விட்ட அவனிடமும்
சிக்கிவிடாது தப்பியோடிய கிலியை
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
திணைகளை தூக்கிக் கொணரவில்லை யென
ரொம்பத்தான் சடைத்து கொள்கிறாய்.//

இதில் தெரியும் குரூர வன்முறையை மாற்றாமல், கொண்டாட்டங்களைப் பற்றி பேசுதல், எழுதுவதற்கு வேண்டுமானாலும் (சில பேர்க்கு) நன்றாக இருக்கலாம். ஆனால், யதார்த்தம் வேறானது. மதிவாணன் சித்தரிக்கும் எதிர் அழகியலின் பின் இருக்கும் தன்மையும், அரசியலையும் புரிந்துக்கொள்ள முதலில் "மனது" வைக்கவேண்டும். அதுவன்றி, சொல்விளையாடல்களில் வெற்றிக் கொடி நாட்டுதல், நவீன தமிழலக்கியத்திற்கு (எதிர்/இந்து இலக்கியத்திற்கு?) வேண்டுமானால் தெம்பாக இருக்கும், மனிதத்தை ஒரு சேர குப்புறத் தள்ளி, அதன் குண்டியில் மிதித்து.

2/02/2005 6:21 PM  
Blogger ROSAVASANTH said...

ஈழநாதன், நாராயணன் கருத்துக்களுக்கு நன்றி.

இப்போதுதான் தமிழ்மணத்தில் பார்தேன். முதலில் தங்கமணியின் பதிவு, அடுத்து மதிவண்ணணின் (என்னுடையதல்ல) நெரிந்து! அநாதை சொன்னதுபோல் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.

2/02/2005 7:02 PM  
Blogger Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

//தொல்குடித்தலைவா! வெட்டத் தளிர்க்கும் மரம் மாதிரி
எங்கள் மைனாரிட்டித் தலைகளும்
கொப்படித்துத் தளிர்க்க வேணுமென்றேன்.
பரிதாபமாய் பார்த்தவன் வேறென்னவென்றான்
அவ்வண்ணமே கூட்டமாய் வந்தவர்கள்
கிழிக்க முடியாவகையில் எம்குலப் பெண்களின் குறிகளை
உலோகக் குறிகளாய் மாற்றிதரவேணும்
முடிந்தால் கவர்சியான தங்கத்திலென்றேன்
அரண்டுபோனவன்
தன்னால் தரமுடிவதிதுதானென்று
பீ வழித்துக் கொண்டிருந்த கொடுவாளை
கூர்தீட்டிக் கையில் தந்து
ஊளையிட்டுப் போனானொரு காட்டுமிருகம் போல//

அருமையான கவிதைத் தொகுப்பு. நன்றி ரோசாவஸந்.

2/03/2005 10:42 AM  
Blogger ROSAVASANTH said...

கருத்துக்கு நன்றி கேங்க்ஸ்!

அக்பர் பார்சாவின் பதிவில் நான் அளித்த பின்னூட்டம்.

http://suvatukal.blogspot.com/2005/02/blog-post.html

தொடர்ந்து எழுதுங்கள். நிச்சயம் கவனமாய் படிப்பேன்.

ஆனால் இஸ்லாத்தில் மாற்றம் குறித்த எந்த விவாதமும் தேவையில்லை என்ற முன்தீர்மானத்துடன் இருப்பது அடிப்படைவாதம்தானே!

அடிப்படைவாதி என்பது அடிப்படை தெரிந்தவர் என்ற அர்தத்துடன் சொல்லப்படுவதல்ல. அடிப்படைகள் மாறாதது என்று விடாப்பிடியாய் நம்புவதை குறிப்பிடுவது. இதை விஞ்ஞானத்துடன் நீங்கள் சொல்வது போல் ஒப்பிடமுடியாது. விஞ்ஞானம் என்பது முற்று முழுதாய் மாற்றம் தேவையில்லாததாய் நிலைத்துவருவது அல்ல. விஞ்ஞான அடிப்ப்படி தெரிந்தவரின் பார்வை மட்டுமல்ல, விஞ்ஞானத்தின் அடிப்படையே காலத்துக்கு காலம் மாறக்கூடியதே. மாறிக்கொண்டிருக்கிரது. அதை எல்லா காலத்துக்குமான வாழ்க்கை விளக்கம் சமுகத்துகான சட்டதிட்டங்கள் (ஆன்மீக விளக்கம் அல்ல) ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது, அதில் மாற்றம் தேவையில்லை என்று நினைக்கும் மத அடிப்படைவாதத்துடன் ஒப்பிடமுடியாது.

மேலே சொன்னது இந்த பதிவுடனான ஒரு முரண்பாடு மட்டுமே. மற்றபடி இந்த பதிவின் பொதுவான தொனியுடன் வெகுவாக ஒத்துபோகிறேன்.

2/03/2005 12:04 PM  
Blogger சன்னாசி said...

//ஆனால் இஸ்லாத்தில் மாற்றம் குறித்த எந்த விவாதமும் தேவையில்லை என்ற முன்தீர்மானத்துடன் இருப்பது அடிப்படைவாதம்தானே!//
இப்படித் தீர்மானிப்பது வெளிப்படையாகத் தெரியுமளவு இருப்பதால் அவர்கள்கூட ஓரளவு அப்பாவிகள்தான். அதே சுவடுகள் பதிவில் நான் கொடுத்துள்ள சுட்டியைப் பார்க்கவும்.

2/03/2005 12:59 PM  
Blogger ROSAVASANTH said...

மாண்ட்ரீஸர், நீங்கள் சொல்லவருகிறது புரிகிறது. ஆனாலும் ஒப்புதலும் உண்டு. மாற்றங்கள் எல்லா இடத்திலும் ஏதோவகையில் ஏற்கபட்டும், அனுமதிக்கபட்டும் வரத்தான் செய்கிறது. இந்த கட்டுரை ஆரோக்கியமான தொனியில் இருப்பதாக தெரிகிறது. அதே நேரம் ஒரு ஏமாற்ரும் தர்கத்தை வைத்து அடிப்படைவாதத்தை நியாயப்டுத்துவதால் எழுதினேன்.

ஏற்கனவே பல விவாதங்கள் நிலுவையில் உள்ளன. எதை மீண்டும் தொடங்குவது என்று தெளிவில்லை. இப்போதைக்கு சந்தர்பத்திற்கு ஏற்றவாறு ஜல்லியடிக்கவாவது வேண்டும் என்று எழுதினேன்.

2/03/2005 5:40 PM  
Blogger ROSAVASANTH said...

சொல்ல வெட்கமாயிருக்கிறது. சொல்லாவிட்டாலும் நன்றாய் இருக்காது. அதானால்...

நண்பர்களே! உங்கள் வாக்குகளை மதிவண்ணணின் 'நெரிந்து' கவிதைகளுக்கு அளித்து இந்த பதிவை முதலாம் இடத்திற்கு கொண்டு வர வாக்களித்த அனைவருக்கும் நன்றி! இதை பெரிதாய் சொல்ல எதுவுமில்லையெனினும் சந்தோஷமான விஷயம்தான்!

2/03/2005 5:45 PM  
Blogger ROSAVASANTH said...

பாம்புக்கு எழுதியதில் //ஆனாலும் ஒப்புதலும் உண்டு. ..//

இதில் எப்படி ஆனாலும் என்ற வார்த்தை வந்தது என்று தெரியவில்லை. ஏதோ பழக்க தோஷத்தில் வந்துவிட்டது போலும்.

2/04/2005 12:26 AM  
Blogger SnackDragon said...

ரோசா,
நெரிந்து கவிதைகளுக்கு நன்றி. தலித் பற்றிய சிந்தனைகள் சிறுவயதிலேயே இருந்து வந்ததுதான்.
ஆனால் அதை வார்த்தையில் பேசவோ , எழுதவோ தெரிந்திருக்கவில்லை. தலித் இலக்கியங்களை சமீப காலத்தில்தான் வாசிக்க ஆரம்பித்தே (அதுவும் மிகக் குறைவு). எனக்கு தலித் என்கிற குறியீடு கூட ஒரு விதத்தில் தவறாகவே படுகிறது. ஆனாலும் ஒரு குறியீடு அவசியம் என்றே நினைக்கிறேன்.
தலித் எழுத்துக்களை மற்றவர்கள் எழுதக்கூடது எனப்தில் எனக்கு ஏற்பில்லை. ஆனால் பிறரை விட தலித் எழுத்தாளர்களின் எழுத்தில் வீச்சு அதிகம் இருக்கமுடியும் என்று நம்புகிறேன். தலித் எழுத்தாளர்கள் கூட தலித்தின் தளத்தில் எழுதுவது கடினம். அவர்களது பிரச்சினை எழுத படிக்க கூட முடியவில்லை என்று இருப்பது தான் அவர்களை வெளிப்படுத்தவும் தடையாய் உள்ளது. மாற்றங்கள் நம்பிக்கை தருவனவாய் உள்ளன.

அவனுக்கும்
காய்ந்த பீய்க்கும் உள்ள
முக்கால வழக்கை
தீர்க்க நீதிமன்றங்கள்
நீதி மன்றங்கள் கிடையாது.

2/04/2005 4:14 AM  
Blogger ரா.சு said...

//எவருமறியா உன் ஜட்டிக்கிழிசலை போல்
நீ மட்டுமே அறிந்தவை
உன் மனசின் கசடுகள்//

வித்தியாசமான ...தீர்க்கமான வரிகள்..
மதிவண்ணனின் எண்ணங்களை இங்கே இட்டமைக்கு நன்றி, வசந்த் !

2/04/2005 9:00 AM  
Blogger ROSAVASANTH said...

நன்றி கார்திக், ரா.சு.

கார்திக், நான் அறிந்தவரை எவருமே தலித் பிரச்சனைகளை மற்றவர்கள் பேசக்கூடாது என்று சொன்னதில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் அப்படி எடுத்துகொண்டு ஒரு பதில் மட்டும் வந்துகொண்டிருக்கிறது. இதன் உளவியல் சுவாரசியமானது.

சாதிய முரண்பாட்டின் தீவிரத்தை ஒரு தலித் உணருவது போல் மற்றவர் உணரமுடியாது, ஒரு தலித் பார்பது போல் மற்றவர் பார்க்க முடியாது என்றவகையில் தான் (அதாவது நீங்களும் சொன்னதுபோல்) கருத்துக்கள் வந்திருக்கின்றன. அதற்கு வந்த எதிர்வினைகள் வேறு விடயத்தை சொல்கிறது.

இலக்கியத்தில் தலித் வாழ்க்கையை மற்றவர் எழுதும்போது சில பிரச்சனிகள் உண்டு. அதுவும் யதார்த்தவகை எழுத்தாக, ஒரு நம்பகதனமையுடன் சித்தரிக்கபடும்போது அது பல சிக்கலை கொடுக்கிறது. இதற்கு ஒரு உதாரணமாய் 'தகழி'யின் 'தோட்டி மகன்' நாவல் குறித்த மதியின் விமர்சனைத்தை இங்கே ஒரு முறை ஏற்றுகிறேன்.

இந்த பிரச்சனைகளை பேச புகுந்தால்(அல்லது பேசாமலிருக்கும்போதே), ஒவ்வொரு முறையும் "தலித் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்" என்று ஒரு பல்லவியுடன் ஒவ்வொருவரும் தொடங்குவது மிகுந்த எரிச்சலை தருவது. நான் பொதுவான மனோபாவம் குறித்து எழுதியுள்ளேன். நீங்கள் (கார்திக்) எழுதியதை மனதில் வைத்து அல்ல.

2/04/2005 12:34 PM  
Blogger SnackDragon said...

//ஒரு தலித் பார்பது போல் மற்றவர் பார்க்க முடியாது என்றவகையில் தான் (அதாவது நீங்களும் சொன்னதுபோல்) கருத்துக்கள் வந்திருக்கின்றன//

நான் அப்படி சொல்லவில்லை, அப்படி வாசிப்புக்கு எழுதியிருந்தால் மன்னிக்கவும். தலித்தின்
உட்தளத்தை , பிறர் எழுதுவதில் எந்த அளவு பிரச்சினையின் உண்மை நிலையை தொடமுடியும் என்ற சந்தேகம் இன்னமும் எனக்கு உள்ளது.

தகழியின் , தோட்டியின் மகன் கைவசம் உள்ளது, நீங்கள் அது பற்றி எழுதுங்கள், நானும் தொடர்ந்து என் கருத்துகளை முன் வைக்கிறேன்.

2/04/2005 11:09 PM  
Blogger SnackDragon said...

முக்கியமாய் சொல்ல நினைத்தது, பரிதாபப்படுதல் என்ற தளத்தில் இருந்து எழுதுவதை நான் இரண்டாம் பட்சமாகவே நினைக்கிறேன். முதல் தளம் பற்றி இன்னும் யோசிக்க வேண்டும்.
மதியின் விமரிசனத்தை படிக்க ஆவல்.

2/04/2005 11:12 PM  
Blogger ROSAVASANTH said...

கார்திக் உங்கள் பின்னூட்டத்திற்கு எதிர்வினையாய் எழுதவில்லை. பொதுவாய் எழுதினேன்.

தகழி நாவல் கைவசம் இல்லை. மதியின் கட்டுரை உள்ளது. பதிவேற்ற உத்தேசம் உள்ளது. ஆனால் நாளாகும். முதல் தளம் என்று எதை சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

2/04/2005 11:14 PM  
Blogger ROSAVASANTH said...

நன்பர்களே! கடந்த பதிவுகளில் பின்னூட்டமளிப்பவர்கள் அது குறித்த தகவலை முதல் பதிவில் இடுமாறு கேட்டுகொள்கிறேன். பின்னூட்டங்கள் எனக்கு மின்னஞ்சலில் வரும் எனினும், சில நேரம் அவை பல்க் மெயிலில் சேர்ந்துவிடுவதால் பார்க்கவிட்டு போய் விடுகிறது.

கேங்ஸ் பழைய பதிவின் பின்னூட்டதில் 'குட்டி பூர்ஷ்வா' குறித்து விசாரித்திருந்தார். பலருக்கும் தெரிந்திருக்கும் அதற்கான விளக்கம்.

பூர்ஷ்வா (Bourgeois) என்ற பிரஞ்சு வார்த்தையின் தோற்றம் குறித்து எனக்கு தெரியாவிடினும், மார்க்சிய பிரதிகளின் மூலமே அது பலருக்கும் அறிமுகமாயிருக்கும். உண்மை அர்த்தம் எப்படியிருப்பினும், பூர்ஷ்வா என்பவன் (பெண்பால் வார்த்தை பொதுவாய் பயன்படுத்த படுவதில்லை) மூலதனத்திற்கு (capital) சொந்தகாரனும், மூலதனத்தை கட்டுபடுத்துபவனையும், மார்க்சிய பொருளில் சுரண்டுபவனுக்கு பூர்ஷ்வா என்று பெயர். அதாவது சுரண்டபடுவன் பாட்டாளி. இவனுக்கு மூலத்தனத்தில் எந்த பங்கும், கட்டுபாடும் கிடையாது. நம்ம ஊர் ஆண்டைகள், நிலசுவாந்தார்கள், இன்னும் தொழிலதிபர்களை இப்படி குறிக்கலாம். அதாவது ஏதாவது வகையில் உழைப்பை விலைக்கு வாங்குபவர் இந்த பூர்ஷ்வாக்கள். பாட்டாளிகளுக்கு எதுவும் சொந்தம் இல்லாததால் அவர்களிடம் இருக்கும் ஒரே சொத்தான உழைப்பை விற்பவர்கள்.

இந்த பூர்ஷ்வாகவும் இல்லாமல், பாட்டாளியாகவும் இல்லாத ஒரு ஆசாமிதான் குட்டி பூர்ஷ்வா (pettite Bourgeois in Frence, petty Bourgeois in English). குட்டி பூர்ஷ்வாவும் ஒரு வகையில் சுரண்டுபவன்தான். (பாட்டாளிகளின்) உழைப்பு என்பதை விலைக்கு வாங்குபவன் என்ற அர்தத்தில் இவன் பூர்ஷ்வா. ஆனால் மூலதனத்தின் மீது எந்த உரிமையோ, கட்டுபாடோ இவனுக்கு கிடையாது. அதனால் இவன் உண்மையான அர்தத்தில் பூர்ஷ்வா இல்லை. உழைப்பை மேற்பார்வை பார்ப்வர்கள் என்று தொடங்கி பலரை இது குறிக்கும். குட்டி பூர்ஷ்வா சோசலிஸம் என்று ஒரு பிரயோகமே உண்டு. உதாரணமாய் ரஷ்ய புரட்சிக்கு முன்பு, நரேத்னிக்குகள் என்று (விவசாயிகள்) ஒரு கூட்டமும் புரட்சிக்கு தயாராய் இருந்தது. இவர்கள் அன்றய ஆண்டைகளுக்கு எதிரானவர்கள். ஆனால் லெனின் இவர்களை குட்டி பூர்ஷ்வாக்கள் என்றே குறிபிடுகிறார். ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நான் இது போன்ற எந்த கறாரான மார்க்சியர்களின் அர்தத்தில் பயன்படுத்த வில்லை. பொதுவாய் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் நல்ல சம்பளத்தில் வேலை பார்பவர்களையும், சமூகத்தின் எந்த பொருளாதார பிரசனைகளில் தீவிரத்தாலும் பாதிக்கபடாதவர்களையே இப்படி அழைக்கிறேன். நாம் எல்லோரும் குட்டி பூர்ஷவாக்கள்! இந்த விளக்கம் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன்.

2/06/2005 12:35 AM  
Blogger ROSAVASANTH said...

I am not sure whether I said it properly. I have written the above explanation, because Kangs asked me for that, in the comment of a previous post.

2/06/2005 2:56 AM  
Blogger SnackDragon said...

ரோசா,
தோட்டியின் மகனிலிருந்து சில பகுதிகளை தட்டச்சி என் பதிவில் இடுகிறேன். 2 3 நாட்களுக்குள் செய்கிறேன்.

2/07/2005 6:49 AM  
Blogger ROSAVASANTH said...

கார்திக், செய்யுங்கள் நன்றி.
அதைவிட முக்கிய்மாக என் தளத்திற்கான டெம்ப்ளேட் மாற்றங்களை செய்ததற்கு மிக மிக நன்றி!

ஒரு பிரச்சனை, தளமுகப்பில் மிக பெரிய வெற்றிடம், Bளாக் தலைப்பிற்கு முன் வருகிறது. நான் முயற்சித்தவரை அதை சரி செய்ய முடியவில்லை. நீங்கள் முயற்சிக்கவும்.

அடுத்து டெம்ப்ளேட் மாற்றத்திற்கு பின் மதிவண்ணன் கவிதைகளுக்கு ஒரு ஓட்டு குறைந்திருக்கிறது. இதற்கு டெம்ப்ளேட் மாற்றம்தான் காரணமா என்று தெரியவில்லை. நேற்று 21/21 ஆக் இருந்தது இப்போது 20/22ஆக மாறியிருக்கிறது. எப்படி என்று புரியவில்லை.

2/07/2005 4:32 PM  
Blogger Boopathy Ambedkar said...

அருமையிலும் அருமை...

6/09/2012 7:26 PM  
Blogger Boopathy Ambedkar said...

அருமையிலும் அருமை...

6/09/2012 7:27 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter