ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Saturday, February 12, 2005நிர்பந்திக்கபட்ட மனப்பதிவுகள்.நமது அரசியல் மற்றும் இலக்கிய சூழலை புரிந்து கொள்ள உதவும் வகையில் சில தகவல்களையும் குறிப்புகளையும் என் மேல் நிர்பந்திக்க பட்ட மனப்பதிவுகளாய் தருகிறேன். முதலில் 'காதல்' திரைப்படம் குறித்து நான் எழுதிய 1 + 1 = 2 பதிவுகளை ஒன்று சேர்த்து, சில வார்த்தைகளை மாற்றி, ஓரிரு வரிகளை சேர்த்து தட்ஸ்டமில்.காமிற்கு அனுப்பினேன். அனுப்பும் போதே கொஞ்சம் சந்தேகம்தான். அதனால் 'வெளியிடவில்லையெனில் தகவல் சொல்லவும்' என்று கேட்டிருந்தேன். வெளியும் வராமல், தகவலும் வராமல் மேலும் இரண்டு மின்னஞ்சல் அனுப்பி விசாரித்து பார்த்து, அதற்கும் பதில் வராமல், அவர்கள் வெளியிடப் போவதில்லை என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன். என் கட்டுரையில் 'பார்பனியம்' பற்றி கொஞ்சம் பேசியிருப்பினும் அது ஒரு பிரச்சனையாக இருக்க வாய்பில்லை, தட்ஸ்டமில்.காமில் பார்பனியம் குறித்து பேசும், இன்னும் சில தீவிர தமிழ் தேசிய ஆக்கங்கள் கூட வருகிறது. அதனால் மிக லேசாய் மனுதர்மம் போன்றவற்றை தொட்டு பேசியிருப்பதனால் வெளிவராமல் போக வாய்பில்லை. தேவர் ஜாதியை முன்வைத்த விமர்சனத்தினாலேயே வெளியிடப் படவில்லை என்று தெளிவாகவே தெரிகிறது. இன்று இது போன்ற விஷயங்களை பேசுவதுதான் கஷ்டமாக இருக்கிறது. இணையத்தில் இருக்கும் ஒரு இதழிற்கு தேவர்களிடமிருந்து வன்மிரட்டல் இருக்க வாய்பில்லை. தட்ஸ்டமில்.காம் தானாக கொண்டிருக்கும் சார்பினாலேயே வெளியிடவில்லை என்றே எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரம் தேவர் ஜாதியை சேர்ந்த ஒரு தமிழ் தேசியவாதிக்கு அது தொடர்ந்து இடமளிப்பதை காணலாம். இது இப்படி இருக்க இதை திண்ணை முன்பு (இன்றும்) என்னை தடை செய்தததுடன் ஒப்பிட முடியாது. ஏன் என்பதை திண்ணை விவகாரம் குறித்து பேசப்போகும் பதிவில் பார்க்கலாம். பதிவுகளுக்கு அதே கட்டுரையை அனுப்பி அது பதிவுகளில் வெளி வந்துள்ளது. தட்ஸ்டமில்.காமில் வெளியிட படவில்லை என்பதை அறிந்தே நண்பர் கிரிதரன் இதை வெளியிட்டுள்ளார். இதற்கு முன் திண்ணையால் அநியாயமாய் பொய் குற்றம் சாட்டப்பட்டு தடை செய்ய பட்ட என் கட்டுரையையும் அவர் வெளியிட்டதையும் மனதில் கொள்ளவேண்டும். கருத்து சுதந்திரத்திற்கு பதிவுகள் ஆசிரியர் தரும் இடம் நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. அவருக்கு என் நன்றிகள். அடுத்து ஆபிதீன் விவகாரம். கிட்டதட்ட இரண்டு வருடங்கள் முன்பு ஆபிதீனின் இணைய தளத்தை முதன் முதலில் பார்தேன். அதற்கு முன்னமே இந்த (சாரு திருடிய) விவகாரம் தெரியும் என்றாலும், என் அலுவலக கணணியின் ஃபாண்ட் பிரச்சனையால் பல மாதங்கள் கழித்தே பார்க்க முடிந்தது. அதற்கு பிறகு பதிவுகள் விவாதம் என்று தொடர்ந்து இந்த விவகாரத்துடன் எனக்கு தொடர்பிருக்கிறது. ஆபிதீனின் இணையதளத்தை பார்த்த அன்று ஏற்பட்ட கோபத்திற்கும், மன சஞ்சலத்திற்கும் அளவே கிடையாது. அதற்கு பிறகு சாருவிற்கு இரண்டு முறை -முதல் முறை கோபமாகவும், அடுத்த முறை கிண்டலாகவும்- இரண்டு மின்னஞ்சல் எழுதியிருக்கிறேன். இரண்டையும் சாரு கண்டு கொள்ளவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை. சாரு குறித்து எழுதிய பதிவு ஏற்கனவே பத்ரியின் பதிவிற்கு அளித்த பின்னுட்டத்தின் திருத்திய வடிவம் மட்டுமே. விஷயம் சாருவின் எழுத்து பற்றியது என்றாலும், சாருவின் எழுத்தை பற்றி பேசும்போது ஆபிதீனை பற்றி பேசாமலிருக்க முடியாது என்று நினைத்ததனாலேயே அது குறித்தும் எழுதினேன். பத்ரி பதிவில் அது விடுபட்டு போக மீண்டும் ஞாபகமாய் அது குறித்து எழுதி உள்ளிட்டேன். என் வாசிப்பின் அடிப்படையில் என் பார்வையை இப்படித்தான் முன்வைக்க முடியும். சதயஜித் ரேயின் 'சாருலதா'வை, காம்ரேட் சாரு மஜும்தாரை புகழ்ந்தால் கூட கோபம் வருமளவிற்கு ஆபிதீனிடம் நியாயமான காரணங்கள் இருக்கலாம். அதன் தீவிரம் மற்றவரிடமும் இருக்க வேண்டும் என்ற அசட்டுத்தனமான வெறி, அவருள் இருக்கும் எழுத்தாளனை காலி பண்ணிவிடும் என்பதை அவர் அறிந்து கொள்வது நல்லது. ரூமியின் பதிவின் மறுமொழியில் அவர் என்னை கடுமையாய் வசைப்பாடி (நான்தான் என்று தெளிவாய் தெரியும் விதத்தில் அதே நேரம் என் பெயரை சொல்லாமல் எழுதி) எழுதியிருந்ததை படித்த மறுநொடி, சாருநிவேதிதாவின் 'பேன்ஸி பனியன்கள்' நாவலில் ஒரு பாத்திரமாய் தொடங்கி பல விவாதங்களினூடே எனக்குள் எழும்பியிருந்த ஆபிதீன் குறித்த பிம்பம் நொறுங்கி சாக்கடையில் விழுந்தது. அதை படித்த உடனேயே தூக்கத்தை துறந்து பதிலடி கொடுக்க கை பரபரத்தது. சென்ற வருடத்தின் இறுதியில் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் தமிழ் இணையம் பக்கமே வராமல், தண்ணி, இசை, இணைய (ஆங்கில) இலக்கியம், சமையல் ஓயாமல் தினமும் 'கில்லி' என்ற அற்புதமான திரைப்படம் என்று இருந்த ஒரு அற்புத குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையின் போது இது போன்ற பரபரக்கும் உந்துதல்கள் குறித்து மிகவும் யோசித்திருந்தேன். (ஏற்கனவே பெயரிலியும், கார்திக்கும் இது போன்ற அஞ்ஞாத வாசத்திற்கு பிறகு தோன்றும் ஞானம் குறித்து எழுதியவைகள் இருக்கும்போது இதை அதிகம் வளர்த்த தேவையில்லை. கிட்டதட்ட அது போன்றவையே எனக்கு ஏற்பட்ட ஞானங்களும்.) ஆனால் தனித்திருந்து அடையும் முதிர்சியையும், முடிவுகளையும் பின் செயலில் காட்டுவது மிகவும் சவாலாக இருக்கிறது. செயல்பாட்டிலும் காட்டகூடிய முதிர்ச்சியை அடைந்துவிட்டதாய் நினைத்தே இந்த வலைப்பதிவை தொடங்கினேன். ஆனால் அது மிக அற்பமான முறையில் என் மீது அன்பு காட்டிய அநாதை ஆனந்தனுடனான சண்டையில் வெளிப்பட்ட போது எங்கேயும் போய் சேரவில்லை என்று உணர்ந்தேன். கை பரபரத்த அடுத்த வினாடி தட்ட தொடங்கியிருந்தால், அனாதைக்கு எழுதியதை விட பலமடங்கு தீவிரத்துடன் ஆபிதீனுக்கு பதிலடி கிடைத்திருக்கும். மிகவும் கஷ்டப்பட்டு தியானம் போன்ற பயிற்சியின் பின், நிதானத்திற்கு மனதை கொண்டுவந்து நாளை எழுதுவது என்ற முடிவுடன் தூங்க சென்றேன். நாகூர் ரூமி ஆபிதீன் எழுதிய தனிப்பட்ட கடிதத்தையே வெளியிட்டதாக சொல்லி தொடர்ந்து இறுதியில் பதிவையே நீக்கிவிட்ட நிகழ்வுகளுக்கு பின், முதன் முறையாய் பதிலடி கொடுக்கும் என் உந்துதலை கட்டுபடுத்தி வென்று, நான் எழுத நினைத்த விரிவான பதிலை எழுதவில்லை, அதற்கான தேவையும் இல்லை என்ற முடிவிற்கு வந்தேன். அதை கடந்த ஒரு நாள் பிறகான மனப்பதிவே இது. ஆபிதீனின் வசைக்கடிதம் நீக்கப் பட்டுவிட்டாலும் அது பலரால் படிக்க பட்டிருக்கிறது. அவர்கள் சாருவை முன்வைத்த என் பதிவை படித்து, ஆபிதீன் எழுதியதன் திரித்தல்களையும், அதில் வெளிப்படும் நியாயமற்ற கோபத்தையும், நான் சாருவை கடுமையாய் விமர்சித்திருப்பதையும் புரிந்து கொள்ளலாம். நான் விளக்க தேவையில்லை. எனக்கு இங்கே சுவாரசியம் அளிப்பது என்னவெனில் ஆபிதீன் ஒரு சாருவாக மாறுவதுதான். என்னை பொறுத்தவரை, சாரு ஆபிதீனிடமிருந்து கதையை தன் பெயரில் போட்டு வெளியிட்டது ஒரு சாதாரண நிகழ்வு. வாழ்க்கையில் இப்படி ஒரு தவறை ஒருவர் செய்ய நேர்வதல்ல எனக்கு பிரச்சனை. அதற்கு பிறகான விளைவுகளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதில்தான் சாருவின் கயமைத்தனம் வெளிப்படுகிறது. இப்போது அதே விதத்தில் ஆபிதீன் இந்த நிகழ்வை எதிர்கொள்கிறார். தனிப்பட்ட கடிதத்தில் என்னை திட்டுவது குறித்து சொல்ல எதுவும் இல்லை. அதை நாகூர் ரூமி (தவறுதலாகவே கூட) வெளியிட்ட பின், தாக்கப்பட்ட என்னிடம் அதற்கு விளக்கம் அளிப்பதுதான் நேர்மையாய் இருந்திருக்கும். சாருவின் பழைய நண்பரிடம் அதை எதிர்பார்பது அதிகமோ என்னவோ? ஆக ஆபிதீனின் தார்மீக கோபத்தில், திமுக போன்ற கட்சியில் ஸ்டாலினுக்காக ஒதுக்கப்படும் ஒரு அரசியல் தலையிடம் வெளிபடும் கோபத்தின் தார்மீகத்தை விட அதிகமாக எதுவும் இல்லை என்று தெரிகிறது. சாரு இவர் கதையை திருடாவிட்டால், அல்லது வேறு ஒருவர் கதையை திருடியிருந்தால், இந்த அளவு தார்மீக கோபம் ஆபிதீனுக்கு இருந்திருக்காது என்று புரிகிறது. இந்த புரிதல் வந்ததும் நல்லதற்கே! இது இப்படி இருக்க, விஜய் போன்றவ்ர்களும் மற்றவர்களும் இதை முன்வைத்து இலக்கியவாதிகளை அதன் விளைவாய் இலக்கியத்தையும் போட்டு தாக்குவது எனக்கு ஒப்புதலில்லை. இலக்கியவாதியின் போலித்தனத்தையோ, மற்ற நாம் எதிர்கும் தன்மையை வைத்தோ இலக்கியத்தை நிராகரிக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். இதன் பொருள் சாரு சொல்வது போல், 'எழுத்தையும், எழுத்தாளனையும்' பார்ட் பார்டாக கழட்டி தனியே பார்க்க வேண்டும் என்பதல்ல. எல்லாவற்றையும் எல்லாவற்றோடும் பொருத்தியே பார்க்க முடியும். அப்படி பார்த்த பின் ஒரு வாசிப்பில் கிடைக்க கூடிய எந்த உலகையும் நாம் நிராகரிக்க முடியாது என்பதே. வழக்கம் போல இது குறித்து விளக்கமாய் என் கருத்தை முன் வைப்பதை பிற்காலத்திற்கு தள்ளி போடுகிறேன். அதற்கு முன் ஏறகனவே சொன்னது "சாருநிவேதிதா என்ற மனிதன் சுய வாழ்க்கையில் செய்யும் சமரசங்கள், போலித்தனங்கள், நண்பர்களுக்கான துரோகங்கள் இதை மீறி இந்த முக்கியத்துவம் அப்படியே இருப்பதாக தெரிகிறது." அதே போல இப்போது ஆபிதீன் வெளிகாட்டிய (அல்லது ரூமியால் தவறுதலாக வெளிவந்த) அற்பத்தனத்தை மீறி, ஆபிதீனின் எழுதிற்கான முக்கியத்துவம் அப்படியே இருகிறது. அதைவிட முக்கியமாய் மீண்டும் நான் சொல்வது, நான் மிகவும் எதிர்க்கும் ஜெயமோகனின் எழுத்தின் முக்கியத்துவத்தையும், என் அரசியல் பார்வையை முன் வைத்து நிராகரிக்க முடியாது. |
38 Comments:
ரோசா,
நல்ல பதிவு. ஆபிதீனின் எழுத்துக்களை முதன் முதலில் அவருடைய இணையதளத்திலே
தெரிந்து வாசித்திருக்கிறேன். ஆபிதீனின் எழுத்துகள் மேல் பொதுவாகவே ஒரு மரியாதை இருந்துள்ளது.
//சாருவைப்போலவே இப்போதுஆபிதீன் // இந்த ரீதியில்தான் நானும் யோசித்தேன்.
உங்கள் சிம்புவைப்பற்றிய பதிவு மற்றும் சாருவின் மீதான விமர்சனம் ஆகியவற்றை, ஆபிதீன் வாசித்திருந்தாலோ, அதற்கு பத்ரியின் பதிவிலோ உங்கள் மறுமொழியில்
(குறைந்தது அநாமதேயமாகவாவது ;-) ) எதாவதோ எழுதியிருக்கலாம்.
எனக்கு மிகவும் உறுத்தியது, இப்படி எழுதி பகிர்ந்து கொள்ள முடியாத ஆபிதினீன் மனம்தான்.அது சாருவைப்பற்றியபோது என்றாகும்போது அவரது கோபத்தை ஓரளவி நியாயமான காரணமாய் பார்க்கமுடியும். ஆனால் சிம்புவைப்பற்றிய உங்கள் பதிவை இணைத்து ,தனிமடலில் எழுதுவது முழு அயோக்கியத்தனம்தான், இந்த வீரம் நேரே பதிவை/பின்னுட்டங்கள் எழுதும்போது/வாசிக்கும்போது எங்கே போச்சு! வாரே வா! சூப்பர் மாப்ளே!
அப்போதே கிழிக்கனும்போல தோன்றியது எனக்கும். கிழித்தும் இருப்பேன். இதை விட அருமையான வாய்ப்பு கிடைக்காதல்லவா! [அதற்காகவே ரூமி நீக்கியபின் ஆபிதீன் ஏதாவ்து பேசினால் , படிக்க வேண்டுமே என்று அவருடைய பதிலை சேமித்து வைத்துள்ளேன், அதுவும் வெளிப்படையாக இணையத்தில்தான்] ஒருவேளை
ஆபிதீனின் எழுத்தின் மேல் இருக்கும் மதிப்பும், இதில் நேரடியாய் சம்பந்தப்படவில்லை என்ற சுயநலமும் காரணமாய் இருந்திருக்கலாம். இத்தனைக்கும் எனக்கும் ஆபிதீனுக்கும் எந்த விதத் தொடர்பும் இருந்ததில்லை[கிழிக்க இதைவிட காரணம் தேவையா :)].
ஆனால் ருமிக்கு எழுதும் தனிமடலிலே இப்படி எழுதும்போது அவர் எடுத்துக்கொள்ளும்
சுதந்திரம் மிகவும் கயமைத்தனமானது. அப்படி எழுதியதால்தான் தேர்ந்த ஒரு எழுத்தாளரே இப்படி இந்த கதியா ? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதில் ஒரே நல்ல விஷயம் , அவர் மன்ப்போக்கு இப்படி இருப்பது நமக்கு தெரியவந்தது மட்டும்தான்.
ஆபிதீன் இல்லாமல், சப்ஜெக்க்டை தொடுவது, ஆபிதீன் எழுதிய கயமைத்தனத்துக்கு கொஞ்சமும் சளைத்ததாகாது என்பதால் அதைத் தொடமாட்டேன்.
நன்றி
இந்த பதிவூட்டம், உங்கள் மனநிலையை மதித்து மட்டுமே.
கார்திக் பின்னூட்டத்திற்கு நன்றி! குட்நைட்!
//மிகவும் கஷ்டப்பட்டு தியானம் போன்ற பயிற்சியின் பின், நிதானத்திற்கு மனதை கொண்டுவந்து நாளை எழுதுவது என்ற முடிவுடன் தூங்க சென்றேன்.//
Thich Naht Hanh என்ற வியட்நாமியத் துறவி எழுதிய புத்தகத்தை வெகுநாட்கள் முன்பு படித்தேன் : Old path white clouds என்பது அதன் பெயர். அதில் படித்தது: புத்தருக்குச் சீடனாயிருந்த அங்குலிமாலா, அதற்குமுன்பு ஈவிரக்கமற்ற கொள்ளைக்காரன்/கொலைகாரன். அவன் கொள்ளையடிக்கும் ஊரொன்றுக்கு புத்தர் யாசிக்க வருகையில் அவனும் வந்துவிடுகிறான். கதவு ஜன்னல்கள் படபடவென்று அடைபடுகின்றன. புத்தருக்குப் பின் வரும் அங்குலிமாலா, "ஏய், நில்" என்று உரக்கக் கூவுகிறான். புத்தர் நிற்காமல் நடந்துகொண்டே இருக்கிறார். மறுபடி "ஏய், நில்" என்று கூவுகிறான்.
புத்தர் சாந்தத்துடன் சொல்கிறார்: "நான் எப்போதோ நின்றுவிட்டேன், நீதான் இன்னும் நடந்துகொண்டிருக்கிறாய்"
அங்குலிமாலாவின் கையிலிருக்கும் வாள் வீழ்கிறது, புத்தரின் காலடியில் வீழ்ந்து, பின்னாட்களில் அவரது பிரதான சீடர்களில் ஒருவனாகிறான்.
வசந்த், ஆபிதீனுடைய சிறுகதைகளை, அவரது பதிவிலும், திண்ணையிலும் படித்திருக்கிறேன். ரூமியைப் போலல்லாமல் இவர் எந்த அடிப்படைவாத பாதிப்பும், அதை மறைக்கும் முலாம்களெல்லாம் இன்றி எழுதுவதாய் அவர்மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது.
சரி இதை விடுங்கள்.
என்ன தியானம் பண்றீங்க வசந்த்?
தமிழ்பாம்புவின் கதைக்கும் நன்றி!
/ரூமியைப் போலல்லாமல் இவர் எந்த அடிப்படைவாத பாதிப்பும், அதை மறைக்கும் முலாம்களெல்லாம் இன்றி எழுதுவதாய் அவர்மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. /
same goes here. also once he argued with someone against the islamic fundamentalism in rkk, i remember. that's what i got confused & shocked when I saw his 'input' on Rumi's log.
ரோசாவசந்த் உங்கள் மன உளைச்சல் புரிகிறது. திண்ணையில் வெளியேற்றப்பட்டபோது உங்களுக்குள் இருந்த மிருதுவான பகுதி தாக்கப்பட்டதை உங்களின் உள்ளிடுகைகளில் முன்னரே அறிந்திருந்தேன். சில தினங்களுக்கு முன்னர்கூட ஒருவிதமான ஆர்வக்கோளாறில் ஒன்று(இணையத்தில் அல்ல) செய்துவிட்டு இன்னும் அந்த உளைச்சல் போகாமல் நான் இருக்கின்றேன்.
//சென்ற வருடத்தின் இறுதியில் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் தமிழ் இணையம் பக்கமே வராமல், தண்ணி, இசை, இணைய (ஆங்கில) இலக்கியம், சமையல் ஓயாமல் தினமும் 'கில்லி' என்ற அற்புதமான திரைப்படம் என்று இருந்த ஒரு அற்புத குட்டி பூர்ஷ்வா வாழ்க்கையின் போது..//
என்று நீங்கள் எழுதியமாதிரி, எல்லோரும் போகின்ற அதே பாதையில் பிரச்சினையில்லாமல் பிந்தொடர்ந்து சென்றால் எந்தச்சோழியுமில்லை என்றுதான் நானும் அடிக்கடி நினைப்பதுண்டு.
//அதே போல இப்போது ஆபிதீன் வெளிகாட்டிய (அல்லது ரூமியால் தவறுதலாக வெளிவந்த) அற்பத்தனத்தை மீறி, ஆபிதீனின் எழுதிற்கான முக்கியத்துவம் அப்படியே இருகிறது. //
என்றவரிகளில் ரோசாவசந்த் இன்னமும் நிதானம் தவறவில்லை என்பது நிம்மதியாய் இருந்தது.
ரோசாவசந்த் என்று நினைத்தாலே அவருடைய ஆக்ரோஷமும், தில்லான பதிவுகளும்,பின்னூட்டமும் தான் ஞாபகத்திற்கு வரும்.இந்த மாதிரி டென்ஷன்களால் உடல்நலனோ சுற்றமோ பதிக்கப்படாதா வரையில் ரோசா அதே ஆக்ரோஷத்துடன் திகழ்வது தான் தனி சிறப்பு.
ரோசா அந்தப் பின்னூட்டத்தை ஆபிதின் தான் எழுதினாரா என்பதை அவரிடமே கேட்கலாமே இல்லை எனக்கொரு சந்தேகம்.
மற்றும் படி தியானம் அது இது என்று உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் பீப் சுக்காவும் வைனும் சாப்பிட்டுவிட்டு அடுத்த பதிவைப் போடுங்கள்
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
மாண்ட்ரீஸர் (முன் கேட்டிராத) கதைக்கு நன்றி! தமிழ், குறிப்பாய் சிறுபத்திரிகை சூழலில் பிரச்சனையே கோபம் என்பதை கேவலமாகவும் மூர்க்கம் என்பதாகவும் பார்பதுதான். இங்கே கோபத்தின் தேவையை வலியுறுத்தும் கதைகளையே முதலில் சொல்லவேண்டும்.
மந்தம் என்பதற்கும் நிதானம் என்பதற்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது அல்லவா! நாம் சூழலின் அவலம், மந்தம் நிதானமாகவும் முதிர்சியாகவும் ஞானமாகவும் கொண்டாடபடுவதுதான். ஆகையால் கோபம் ஆக்ரோஷம் எல்லாம் கொண்டபின் நிதானத்தை நோக்கிய தேடலை துவங்கலாம் என்று தோன்றுகிறது.
பல சிறுபத்திரிகயாளர்கள் அரசியல் பேசுவதையும், கோபம் கொண்டு குரல் கொடுப்பதையும் ஒரு பாவமாகவே பார்பவர்கள். வழக்கம் போல ஜெயமோகனுக்கு இதில் மாறுபட்ட வேடம். கிட்டதட்ட இந்த கருத்திற்கே உந்துபவர் என்றாலும், எல்லாவித அரசியலையும் எதாவது ஒரு (மௌனம் உட்பட்ட)அணுகுமுறையில் தொடுபவர். இந்த சிக்கலை பின்னூட்டத்தில் விவாதிக்க முடியாது.
தங்கமணி, தியானம் எல்லாம் ஒரு எழவும் இல்லை. மூச்சு பயிற்சி போன்ற ஒன்றை அவ்யப்போது கைகொள்ளுவது வழக்கம். உங்களுக்கும் தெரிந்திருக்கும். மூச்சுவிடுவதை முடிந்தவரையில் முழு பிரஞ்ஞையையும் குவித்து கண்காணிப்பதுதான். இதில் 'தீடா நிலை' அது இதென்று பல கிரேக்க எழுத்துக்களை கொண்டு (ஏனோ?) குறிக்கும் பல நிலைகளை கேள்விபட்டிருக்கிறேன். அதில் எதையும் அடைந்தது கிடையாது. வேறு எதற்கு உதவுகிறதோ இல்லையோ, மனதை திசைதிருப்பி சாந்தபடுத்தி கொள்ளவும், சிந்தனை சஞ்சலத்தில் தூக்கபிரச்சனை வருவதிலிருந்து விடுபடவும் உதவுகிறது. ஓஷோவை அதிகமாய் படித்துள்ள உங்களுக்கு இன்னும் தெரியும் என்று நினைக்கின்றேன்.
பெயரிலி, டீஜே, விஜய் நன்றி!
ஈழநாதன், அதை ஆபிதீந்தான் எழுதினார் என்பதை ரூமி சொலவ்தாலும், ஆபி மறுப்பு தெரிவிக்காததாலும் நம்பவேண்டியுள்ளது. வைன், பீஃப் அத்தோடு தியானம் எல்லாமே கலப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒஷோ புத்தரையும் Zorbaவையும் சேர்த்து எழுதியது மாதிரி. பெயரிலி கூட புத்தரையும் 'சே'வையும் சேர்த்து யோசித்து பெயர் வைத்துகொண்ட மாதிரி.
மீண்டும் பின்னூட்டமிட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி!
Medha Patkar arrested
http://www.hindu.com/2005/02/13/stories/2005021308361000.htm
...........
Ms. Patkar said she was also manhandled by the police and dumped into a van and taken to the Chirag Nagar police station, along with other activists. They had not been given any food since 10 a.m., she added.
..........
//பல சிறுபத்திரிகயாளர்கள் அரசியல் பேசுவதையும், கோபம் கொண்டு குரல் கொடுப்பதையும் ஒரு பாவமாகவே பார்பவர்கள்.//
ஜனரஞ்சக இதழாளர்கள் மழுப்பலாக எழுதுபவற்றை ஆணித்தரமாக எடுத்து வைப்பவர்களும் எதையும் மிகத்துணிவோடு எழுதுபவர்களும் சிறுபத்திரிகையாளர்கள்தான். அரசியலை காரமாக விமர்சிக்கவும் சிறுபத்திரிகையாளர்கள் அளவிற்கு துணிந்தவர்கள் வேறில்லை. அவை தான் சிறுபத்திரிகையாளர்களின் பலமும் பலவீனமும். அந்தத் துணிவும் உறுதியும் பல நேரங்களில் திசைமாறி தனிநபர் தாக்குதல்களாக மாறிவிடுவதே அவை பலவீனமாக மாறிவிடுகிற தருணங்கள். சிலநேரங்களில் தனிநபர்களை விமர்சிக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இருக்கின்றன. ஆனால் அவை பங்காளிப் பகை அளவிற்கு நீண்டு போகும்போது கருத்துமோதல்கள் பின்னுக்குத் தள்ளப் பட்டு வீணான வாக்குவாதங்களில் வந்து முடிகிறது. என் போன்ற சில சிறுபத்திரிகையாளர்கள் இதையே தவிர்க்க நினைக்கிறோமே தவிர அரசியல் பேசுவதையும், கோபம் கொண்டு குரல் கொடுப்பதையும் பாவமாக பார்ப்பவர்கள் அல்ல! உண்மையில் அவையே சிறுபத்திரிகையாளர்களின் அடையாளங்கள்.!
Zorba என்றவுடன் தான் Zorba the Greek-ஐ நீண்டநாளாக படிக்காமல் ஒத்திபோட்டிருப்பது நினைவில் வந்தது. நன்றி, படிக்கணும். (ஓஷோ, தனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டது இது!)
அனுராக் சொல்வது ஒரு பகுதி உண்மை மட்டுமே! ஒட்டுமொத்தமாய் சிறுபத்திரிகைகளுக்கான ஒற்றை அடையாளம் என்று எதுவும் இருப்பதாக நிச்சயம் சொல்லமுடியாது. அவர் துணிந்து அரசியலை விமர்சிப்பதாக யாரை எல்லாம் சொல்கிறார் என்று தெரியவில்லை.
சிறுபத்திரிகைகளில் அரசியல் பேசபடுவதேயில்லை என்று நான் சொல்லவரவில்லை. எத்தனையோ அரசியல்கள் பேசப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பலரை மட்டுமே நான் அவ்வாறு குறிப்பிட்டேன். 'depoliticising' என்பதையே அரசியல் பேசாமை என்பதாக குறிப்பிட்டேன். இலக்கியம் நம் அரசியல் பார்வை உதவாத தளங்களில் பயணிக்க வேண்டுமே ஒழிய, இருக்கும் அரசியல் உணர்வை மழுங்கடிக்க கூடாது. ஒரு 'முற்போக்கு இலக்கியதிற்கான' அளவுகோள்களாய் இடதுசாரிகள் பேசி வந்த அபத்தமான பொருளில் இதை சொல்லவில்லை.
சிறுபத்திரிகை இலக்கியம், கவிதை என்று அலைய தொடங்கிய பின் நிறைய இளைஞர்கள், இருக்கும் கொஞ்ச நஞ்ச அரசியல் உணர்வுகளையும் கரைத்துகொண்டு விடுகின்றனர். கோணங்கி, நாகார்ஜுனன், சித்தார்தன் இன்ன பிற இதை போன்றவர்களால் உந்தப்படும் சிந்தனைகளையே நான் குறிப்பிடுகிறேன். இங்கே கூட எஸ்.ராமகிருஷ்ணண் எழுதியதிலிருந்து இதை உருவிகாட்ட முடியும்.
அரசியல்ரீதியாய் சிந்திப்பதற்கும், எதிர்வினையாற்றுவதற்கும் எதிராய் ஒரு சிந்தனைபோக்கை உருவாக்குவதையே இவ்வாறு குறிப்பிட்டேன். இதற்கு சரியான உதாரணமாய் பெரியார் குறித்த இவர்களின் இத்தனையாண்டு அணுகுமுறையை குறிப்பிடலாம். (மீண்டும் ஒரு சிலரை மட்டுமே குறிப்பிடுகிறேனெ ஒழிய, சிறுபத்திரிகை தளத்திலேயே பெரியார் குறித்த புதிய வாசிப்புகளும், இன்று ரவிக்குமார் போன்றோரால் மறுவாசிப்புகளும், விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன.) இன்றும் அத்தகைய அரசியல் சுய உணர்வு அற்றே பலரும் இருப்பதை காணமுடியும். ஜெயமோகன் போன்றவர்கள் பல அரசியல் சிந்தனைகளையும் உள்வாங்கி மேலெழும்பி வந்தவர்கள். அவர் (முன் வைக்கும் இந்துதவ அரசியல் நீங்கலாக) பார்வையும் இந்த அரசியல் நீங்கிய பார்வைக்கு இயைபானதுதான். இத்தகைய ஒரு பாதிப்பையே நான் குறிப்பிட்டேன்.
ஆபிதீன் இந்த விஷயம் குறித்து நாகூர் ரூமியின் பதிவில் எழுதியுள்ளது.
"சகோதரர்கள் அனைவருக்கும் என் அஸ்ஸலாமு அலைக்கும்.
முதலில் நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும். சத்தியமாக என்னுடைய பதில் நண்பர் ரோஸா வசந்தை குறிவைத்து எழுதப்பட்டதல்ல. ரூமிக்கு நான் தனிப்பட்டு எழுதிய மடல் அது. ரூமியின் புதிய நாவலுக்காக (நட்சத்திரங்களின் இதயம்) என் அபிப்ராயம் தெரிவிப்பதில் ரொம்ப நாளாக தாமதாகிக் கொண்டிருந்தது. அதை எழுதும்போது, எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வெறித்தனமான மின்னஞ்சல்களால் (சிலவற்றுக்கு , அனுப்பியவரின் பெயரே வராத வினோதம்!) பாதிக்கப்பட்டு சேர்த்து எழுதினேன். ரூமி போன்ற நெருங்கியவர்களுக்கு (மட்டும்) அப்படி ஒரு கச்சடா பாஷையில் எழுதுவது என் வழக்கம்தான். இன்னும் மோசமாகவும் வரும்! ஊரின் இயல்பென்றில்லை, நண்பனிடம்தானே அப்படி உரிமையாக எழுத முடியும்? பொதுஇடமென்று வரும்போது நாகரீகம் பேணுவேன் கண்டிப்பாக. அங்கே யாரையும் நான் காயப்படுத்தியதில்லை இதுவரை. ·பிக்ரூக ·பீக யக்·பிக ( உன்னை உணர்; அது உனக்குப் போதும்) என்பதில் நம்பிக்கை கொண்டு என் சமூகத்துக் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பவன். இதனால் 'கா·பிர் என்று சில வெறியர்களால் இகழப்பட்டும் தொடர்ந்து என் வேலையைச் செய்கிறேன்.
அது இருக்கட்டும், எனது மடலை அப்படியே - எனக்குக் கூட தெரியப்படுத்தி அனுமதி வாங்காமல் - அனுப்பிய உடனே இங்கே சேர்த்தது ரூமியின் இங்கிதமின்மை. பரவாயில்லை. அதுவும் நான்தானே. என் இருண்ட பக்கங்கள் தெரியட்டும். தவறில்லை. ஆனால் அதில் இரண்டு வாக்கியங்கள் (குறி வெட்டுவது மற்றும் தாய் சம்பந்தமானது) நண்பர் ரோஸாவசந்த்தை அது தனக்கான எதிர்வினை என்பதாக கருத இடம் கொடுத்து விட்டது. அப்படியில்லை , அவர் பதிவிலிருந்த 'வெட்டுவதை' அதிகபட்ச கோபத்தைக் காட்டக் கூடிய வார்த்தையாகவே எடுத்துக் கொண்டு - அது எனக்குப் பிடித்தும் இருந்ததால் (வெட்டுவது அல்ல!) - ரூமிக்கு பதில் எழுதினேன். அவ்வளவுதான். 'தாய்' விஷயம் பொருத்தவரை அது ரவி அண்ணனின் (சாரு) விசிறியொருவர் எனக்கு எழுதிய மின்னஞ்சலுக்கான பதில். (தாய்மை பற்றிய என்னுடைய அபிப்ராயம் 'தினம் ஒரு பூண்டு' கதையில் இருக்கிறது)
சரி, சிற்றிதழ் சூழலிலுள்ள 'மடையன்' என்பதெல்லாம் யார் யார் என்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால் முதலில் என் பெயர்தான் வர வேண்டியிருக்கும் ! அதெல்லாம் வேண்டாம். அது கண்டிப்பாக நண்பர் ரோஸா அல்ல. அவருடைய எழுத்தை நான் மதிக்கிறேன். நான் விரும்பிப் பார்க்கும் வலைப்பதிவுகளில் அவருடைய பெயர் நீண்ட நாளாக - எனது தளத்திலுள்ள link பகுதியில் இருக்கிறது (இந்த 'பெயரிலி' மட்டும் இப்போது எங்கே இருக்கிறார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. சேர்க்க வேண்டும்). 'சாரு' பற்றி எழுதும்போதெல்லாம் எனது பிரச்சனையை அவர் அங்கே எழுப்பியிருப்பதைக் கண்டு நெகிழ்ந்திருக்கும்போது அவரை ஏன் நான் திட்டப் போகிறேன்? வேடிக்கெ வாப்பா...!
என்னைத் தவறாக புரிந்து கொண்ட அத்தனை உள்ளங்களிடமும் - நான் காயப்படுத்தியிருந்தால் - இதன் மூலம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அப்படியே , 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' மாதிரி இருக்கும் மேலேயுள்ள புகைப்படத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்!
அனைவருக்கும் நன்றிகள்.
- ஆபிதீன் -
13.02.2005 / துபாய் "
இதற்கு நான் எழுதிய பதில்..
"ஆபிதீனின் பதிலுக்கு நன்றி.
நாகூர் ரூமியால் வெளியிடபட்ட அவர் தனிகடித்ததை படித்து கிட்டதட்ட இரண்டு நாட்கள் கழித்து, ஆபிதீன் பதிலளிக்க போவதில்லை என்று முடிவுக்கு வந்தே என் பதிவை எழுதினேன். அதில் ஆபிதீனை சாருவிடம் ஒப்பிட்டிருந்தேன். ஆபீதீன் இப்போது எழுதியுள்ள பதிலை முழுமையாய் ஏற்றுகொள்வதா என்பதல்ல எனக்கு பிரச்சனை. அவர் சாருவை போல் மௌனம் சாதிக்காமல், மனம் திறந்ததை ஒரு பின்னூட்டமாய் என் பதிவில் இடுகிறேன். இது குறித்து பேசியிருப்பதனால் அதை அங்கே இடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். "
//Zorba the Greek//
தங்கமணி - படிக்கவில்லையெனில், படிக்க முயலவும்! கஸாந்த்ஸாக்கிஸின் இந்தப் புத்தகம், கிட்டத்தட்ட Forrest Gump படம் போன்றது, நெகிழவைக்கும் கதை. ஸோர்பா த க்ரீக், படமாகக்கூட வந்திருக்கிறது.
நல்லது மாண்டி (நானும் இப்படி கூப்பிடுகிறேன், மன்னிக்கவும்). நன்றி. நான் படிக்கிறேன். நண்பர்களும் இதைச் சொன்னார்கள்.
Kosatheru Kuppan சொன்னது:
Dear Rosa,
//நான் தவறாக அனுமானிக்கவில்லை என்று எனக்கு தெரியும்.//
// என்னை பற்றி சொன்னது என்று நன்றாக தெரிந்தே அது குறித்து எழுதினேன்//
Rumi Rightly said " அவர் உங்களைப் பற்றித்தான் சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் முடிவு செய்து கொண்டீர்களென்றால்...."
I think it is fair that you admit openly that you misjudged the whole incident.
Abidheen stands tall with his open letter.
kosatheru Kuppan.
P.S : Kosatheru is the home street of Charu.
ரோஸாவசந்த் சொன்னது:
கொஸத்தெரு குப்பன்,
எல்லாவற்றையும் சேர்த்து வைத்து படித்து பார்க்கவும்.
இப்போதைக்கு என்னால் 'fair'ஆக செய்ய முடிவது மேலே இதை இழுத்துகொண்டு போகாதிருப்பதும், ஆபிதீனின் மறுமொழியை என் பதிவில் அனைவருக்கும் படிக்க தருவதும்தான். அதை செய்திருக்கிறேன்.
If I get convinced that I misjudged anything, I will admit that openly immediately. அதை தட்டச்சு செய்யும் நேரம் மட்டுமே 'admit' செய்வதற்கு எனக்கு ஆகும். நன்றி!
சென்ற பதிவின் முதல் (என்னுடைய) பின்னூட்டத்தைத்தான் மீண்டும் எழுத வேண்டும்.
கார்திக் அன்பு நண்பா, இனி வேறு ஏதாவது பிரச்சனைகள் எங்காவது தென்பட்டால் எனக்கு அது தெரியாமலே இருக்கட்டும். நன்றி!
http://puluthi.blogspot.com/2005/02/blog-post_14.html
இங்கே வலைப்பதிவிலேயே, முதிராமை போன்ற காரணங்கள் இல்லாமல், மன்மதன் படம் சுயநினைவுடன் நியாயபடுத்த பட்டதை கவனிக்க வேண்டும். 'குற்றவாளி தண்டனி பெறவேண்டும் என்றெல்லாம் நியாயம் கற்பித்து முடிக்காதது சிறந்தது' என்று விமரசனமே வந்துள்ளது. இவர்களிடம்(இன்னொருவர் பெயர் கொஞ்சம் சந்தேகம், ஒருவர் பெயர் மீனாக்ஸ்) வெளிப்படும் நோய்கூறு மனநிலை சிம்புவின் பார்வையைவிட மோசமானது.
இதில் வேறு சிலர் 'பரபரப்பையும் கவனைத்தையும் பெற ஆண்குறியை வெட்டவேண்டும்' என்று எழுதுவதாக எழுதியிருந்தார்கள். ஒரு பேச்சுக்கு அப்படியே வைத்து கொள்வோம். அதாவது வலைப்பதிவில் படிக்கும் சுமார் 100பேரின் கவனத்தை கவர அப்படி தலைப்பு வைத்ததாக வைத்துகொள்வோம். ஆனால் அப்படி எழுதுபவர்களுக்கு, ஒரு படம் ஓடவும் பணம் பண்ணவும் பெண்களை கொல்லவேண்டும் என்ற கருத்தை தர்மமாய் வலியுறுத்தும் படத்தை விமர்சனமாய் சொல்ல எதுவும் இல்லை. (படத்தை பற்றி விமர்சனமாய் எழுதிய சிலரும், இந்த பிரச்சனையை விட்டுவிட்டு நடிப்பு போன்ற மற்றதையே விமர்சித்திருப்பதை கவனிக்க வேண்டும்.)
என்னை பொறுத்தவரை நோய் சிம்புவைவிட இவர்களிடமே உள்ளது. சிம்புவிற்கு படம் ஹிட்டாவதும் பணமுமே முக்கியம். ஒருவேளை 'ஆண்களை ஏமாற்றி பெண்கள் கொல்வதை' வைத்து கதை எழுதினால் ஓடும் என்றால் அதை கூட அவர் எடுக்க கூடும். உண்மையில் அவர் கருத்து கூட வேறாக இருக்கலாம். நமது பாதி நட்டிகர்களும், இயக்குனர்களும் தங்கள் பார்வைக்கு மாறாகவே நடிக்கிறார்கள். அதனால் நோய் வலைப்பதிவிலும் மற்ற இடத்திலும் படத்தை பாராட்டியோ விமர்சனமில்லாமலோ சுய நினைவுடன் எழுதியவர்களிடமே உள்ளது. அதில் சிலரின் குறியை அறுப்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ரோசா, ஏற்கனவே படித்திருந்தாலும், பின்னூட்டங்களின் வழியே இப்போது தான் படித்தேன். உங்களின் கோவம் நியாயமானதூ என்பதும், உங்களை நீங்களை கட்டுப்படுத்தி எழுதாமல் அடக்கிவைப்பதும், சில தேவையற்ற பதிவுகள் நேர்மையானவை என காட்ட வழிவகுக்கும். எல்லோரும், எல்லோர்க்கும் நல்லவனாய் இருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றுதான் தோன்றுகிறது.
சுபாஷ் சந்திர போஸினைக் கூட தீவிரவாதியாய் பார்த்த நாடு இது. ஆகவே உங்களின் தார்மீக கோவத்தை கைவிட்டுவிடாதீர்கள். தமிழ் இலக்கியபரப்பின் விவரிப்பை வெவ்வெறு காலகட்டங்களில் வந்த, கோவமும், சமூகப் பார்வையும் கொண்ட போர்மனம் கொண்ட படைப்பாளிகள் தான் மாற்றியமைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் உங்களின் கோவம் உங்களுக்கு முக்கியமில்லாமல் போனாலும், இலக்கிய பரப்புக்கு தேவைப்படுகிறது.
There are people, who rub you on the wrong part. Let's not give up on those who are about to do.
டிசே தமிழன் சொல்லியதுபோல், உங்களின் மிருதுவான பகுதிகள் பாதித்ததின் வலி தெரிந்திருந்தாலும், ரோசாவசந்தின் வலிமை அது அல்ல. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் வசந்தாய் இருந்துவிட்டு போங்கள். எங்களுக்கு, நுண்பார்வையும், கோவமும், ஆக்ரோஷமும் உள்ள ரோசாவசந்தை விட்டு விட்டு செல்லுங்கள்.
மாண்டீ, மன்னிக்கவும். இன்றைய தமிழ்சூழலில், விசயஞானமும், உலகளாவிய பார்வையும், பெறுவாசிப்பும், தார்மீக கோவமும் உள்ள படைப்பாளிகளையும், விமர்சகனையும் பார்ப்பது அரிது. அப்படியிருக்கையில் அப்படி இருக்கும் மனிதனுக்கு சாந்தத்தையும், கோவப்படாமல் இருப்பதையும் கற்றுக்கொடுத்து, அவனை ஒரு வெளிநாட்டு குமாஸ்தா ஆக்கிவிடாதீர்கள். உங்கள் மீது எனக்கு கோவமில்லை. ஆனால், வசந்தின் மீதுள்ள மதிப்பும், மரியாதையும் அதிகரித்து வருவதனாலேயே
இது.
கொஞ்சம் கோவத்துடனும், நிறைய யோசிப்புடனும் எழுத வேண்டியது இது, காலையில் வந்தவுடன் தட்டிக்கொண்டிருப்பதால், மீண்டும் வந்து பதிகிறேன்.
நாராயண், நான் இட்ட கதை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதோ என்னவோ. ஒருபோதும் ரௌத்திரம் பழகு/சாந்தம் பழகு என்று நான் எவரிடமும் சொல்லநினைத்ததில்லை!! கையில் ஐந்து கட்டைவிரல்கள் இருப்பது என்ன உபயோகம்? உபதேசங்களில் எனக்கு நம்பிக்கையுமில்லை. இந்தப் பதிவின் இப்போதைய மனோநிலைக்குச் சொன்ன உபகதை (anecdote) மட்டுமே அது - அதை ஒரு adjuvantஆகக் கருதலாமே தவிர, மருந்தாக அல்ல என்பது என் அபிப்ராயம்!!
/கையில் ஐந்து கட்டைவிரல்கள் இருப்பது என்ன உபயோகம்? /
:D
/ஐந்து கட்டைவிரல்கள்/
:O
அன்புள்ள நாரயணண்,
வெளியே போகவேண்டி வந்ததால் இப்போதுதான் பார்தேன். இப்படி எழுதுவது எனக்கு சொரியப்படும் சுகத்தை பழக்கமாக்கிவிட கூடும்! அதனால் கொஞ்சம் ஜாக்ரதையுடன், உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
மாண்ட்ரீ ரௌத்திரபடுவதற்கு எதிராய் கருத்து சொன்னதாய் எனக்கும் படவில்லை. அவரவர் வாசிப்புக்கு வகைசெய்யும் முகமாகவே அவர் கதை இருந்தது. நானும் அவருக்கு பதிலளிப்பதாய் சொல்லவில்லை. பொதுவாய், அவர் போல கருத்தையும் இலக்கியத்தனமாய் பல வாசிப்புக்கு வழி செய்யும் வகையில் சொல்ல தெரியாததால், பொதுவாக நேரடியான மொழியில் சில கருத்துக்களை சொன்னேன்.
நிற்க! நீங்கள் குறிப்பிடும் ரௌத்திரம் எல்லாம் தேவைதான். அதில் மாறுபடவோ, மாற்றிகொள்ளவோ எதுவுமில்லை. பிரச்சனை அதுவல்ல. சில நேரம் பதிலடி கொடுக்கவும், நாக்கை பிடுங்குவது போல் ஏதாவது சொல்லிவிட வேண்டும் என்று ஒரு பரபரக்கும் உந்துதல் வருகிறதே! அதைத்தான் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். கோபத்தையும் நிதானமாய் காண்பிக்க முடியும், காண்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
மற்றபடி வலியெல்லாம் பெரிதாய் எதுவும் ஏற்படவில்லை. நாம் போட்டுதாக்கும் போது தவறாக எங்காவது பாயநேரகூடும்.அப்படி நேரும் போது மன்னிப்பு கேட்பதை தவிர செய்ய அதிகமில்லை. அத்தகைய சாத்தியம் இருப்பதால் நம் மீது வரும் தாக்குதலையும் சாதாரணமாக எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்!
பின்னூட்டங்களுக்கு நன்றி!
மாண்டீ, உங்கள் கதையை நான் தவறாக படிக்கவில்லை , ஆனாலும் கோவம் என்பதும் ஒரு உணர்வு, அதனை காட்டவேண்டிய காலத்தில் காட்டவேண்டியதே. உங்களை சங்கடப்படுத்தியிருப்பின் மன்னிக்க. அத விடுங்க, இங்கு இப்போது தான் விசாரித்தேன், Motorcycle Diaries கிடைக்கிறது. பார்த்து விட்டு பதிகிறேன்.
வசந்த், சத்தியமாய் சொரிவதற்கு எழுதவில்லை. எனக்கு தோன்றியதை தான் எழுதியிருந்தேன். சரி அதை விடுங்கள்.
//சில நேரம் பதிலடி கொடுக்கவும், நாக்கை பிடுங்குவது போல் ஏதாவது சொல்லிவிட வேண்டும் என்று ஒரு பரபரக்கும் உந்துதல் வருகிறதே!//
எனக்கும்தான். சில நேரம் மெளனமே சாஸ்வதம்.
http://womankind.yarl.net/archives/002362.html
நா.., நன்றி! நீங்கள் சொரிவதாய் நான் சொல்ல வரவில்லை. சில நேரங்களில் நாம் உத்தேசிக்காமல் கூட சில விளைவுகள் இருக்குமல்லவா! அதனால், ஜக்கிரதை!
கார்திக், 'தேவை அனதர் பெரியார்!' ஏற்கனவே படித்துவிட்டேன், இரண்டாம் பாகத்தையும். நண்பர்கள் ரவி ஸ்ரீனிவாஸ் முதல் சுவ வரை சந்தோஷப் பட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு எனக்கு சந்தோஷம் எல்லாம் வரவில்லை. அதே நேரம் சில விமர்சனங்களை வைக்கவும் தேவை என்று தோன்றவில்லை. இப்படி எல்லாம் பேசப்படுவது, பேசிகொண்டிருப்பதே ஆரோக்கியமான விஷயம்தான் என்று தோன்றுகிறது.
நீங்கள் என்ன காரணமாய் இங்கே சுட்டியை சுட்டியிருந்தாலும்! நன்றிகள்!
http://thatstamil.indiainfo.com/visai/feb05/aadhavan.html
மாயவரத்தானுக்கு பதில் கொடுக்கும் ரவியைப் பார்த்து பரிதாபம் வந்தது ;
அதனால் தான் நீங்களும் பார்ப்பீர்களே என்று!
காலையில் தூங்கிகொண்டிருக்கும் போது, நில நடுக்கத்தில் வீடு ஆடிய ஆட்டத்தில் விழித்து, ஆட்டம் கொஞ்சம் ஓவராய் இருக்க பாத்ருமை அண்டி, வெளியே ஓடிவிடலாம என்று யோசித்து, அடுத்த பத்து நிமிடத்தில் எதுவும் நடக்காததில் மீண்டும் தூங்கிபோனேன். எழுந்து இணையத்தில் மேலோட்டமாய் தேடியும் ஒரு செய்தியையும் காணோம். யாராவது பார்த்தீர்களா? டோக்கியோவில் நிலம் நடுங்குவது எல்லாம் செய்தியில்லை என்று முடிவுக்கு வந்துவிட்டார்களா?
கடந்த பத்து நாட்களில் இது மூன்றாவது முறை. இதுவரை அனுபவித்தது ஒரு 25முறையாவது இருக்கும். ஆனாலும் இன்று காலை ஆடிய ஆட்டம் அனுபவித்ததிலேயே அதிகமானது என்பதால்...
யோவ்,
அபத்தமா எழுதினியானா எல்லாந்தான் ஆடும், அதுவும் உனக்கு மட்டும். போக போக பாரு இன்னும் என்னென்ன நடக்கும்னு. திருந்தர வழியப்பாரும் ஓய். வைன் அப்புறம் பீப் கருமாந்தரமெல்லம் ஒழியும். ஒம் பாவத்தினால லோகத்தை இம்சிக்காதேயும்.
நல்ல கருத்து! சொற்சுவையும், பொருட்சுவையும் பிரமாதம்! சொல்லப்பட்ட துணிவும், திறனும் பாராட்டத் தக்கது!
நன்றி - அபத்தமாய் எழுதுவதை தவறாமல் தினமும் வந்து படிப்பதற்கும்!
ஜப்பானுக்கு சுனாமியும், நிலநடுக்கமும் சகஜமப்பா... அதான் யாரும் கண்டுக்கலன்னு நினைக்கிறேன். அதுனால நாங்களும் கண்டுக்கல. நிலம ரொம்ப மோசமாச்சின்ன எப்படியோ தப்பிச்சிகோங்க :-) :-)
ரோசாவசந்த்,
இப்போதுதான் உங்களின் உள்ளிடுகையைப் பார்த்தேன். ஆத்மாநாம்மையும் ஜப்பானுக்கு அழைத்திருக்கின்றீர்கள். அவர் கொஞ்சம் பயப்பிடப்படுவார் போலத்தான் தெரிகிறது உங்களின் இந்தக்குறிப்பைப் பார்க்கும்போது. ஏற்கனவே சொன்னதுபோல, கொஞ்சம் pre-cautionயாய் இருங்கள்.
அன்புடன்,
டிசே
அல்வா நன்றி! கொஞ்சம் அளவு அதிகமா (பொதுவா 4, 4.3ஐ தாண்டாது) இருக்கும் போல தெரிந்ததால, எவ்வளவு என்று தெரிந்துகொள்ள செய்தியை தேடினேன். ஒன்றும் அகப்படவில்லை.
டீஜே நேற்றய அனுபவத்திற்கு பிறகு ஜாக்கிரதையாக இருக்க முயற்சிக்கிறேன். குறைந்த படசம் தயாராய்! அக்கறைக்கு நன்றி!
இப்பத்தான் இந்த பதிவெல்லாம் பார்த்தேன் வசந்த். நல்ல எழுதுங்க தொடர்ந்து. இந்த மாதிரி ஆடத்தானே இருக்கோம்!
நன்றி தங்கமணி, சரியா புரியலைன்னாலும்(அவசரமா எழுதினீங்க போல)!
Post a Comment
<< Home