ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Monday, June 25, 2012ஞாநத்தின் fallacy!
ஜெயமோகனின் தளத்தை தினமும் வாசிப்பதன் வழியாக பல புதிய பார்வைகளும் கருத்தாக்கங்களும் தமிழ் வாசகர்களுக்கு அன்றாடம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் கருத்தாக்கங்களை தவறான உதாரணங்களுடன் பொருத்தி குழப்பி, எதிர்கொள்ளவே முடியாமல் செய்வதில் இந்த அளவிற்கு தீவிரத்துடன் வேறு யாராவது செயல்படுகிறார்களா என்று சந்தேகமாக உள்ளது. இதன் எதிர்விளைவாக நியாயமான உதாரணங்களில் கூட இந்த கருத்தாக்கங்களை நாம் பொருத்தி பார்க்கமுடியாமல் போக நேரிடுகிறது; மிகுந்த அரசியல் தூய்மையும், மேலோட்டமான கறார்தன்மையும் கொண்ட தமிழ் அறிவு சூழலில், இந்த கருத்தாக்கங்களை பேசுவதே கூட நிலைமைகளை திரிப்பதற்காகவும், திசை திருப்புவதற்காக செய்வதாகவும் பல சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொள்ளப்பட நேரிடுகிறது. இன்றய ஷ்பெஷல் ஞாநி பற்றிய பதிவு. இளையராஜா சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் எனக்கு உண்டாகும் தனிப்பட்ட ஆர்வம் தவிர, வெகு காலமாக அரசியல் நேர்மைக்கும், அறிவு நேர்மைக்கும் இடையேயான உறவு குறித்து யோசித்தும் எழுதியும் வருவதால் இதற்கு எதிர்வினை செய்கிறேன். மெயின் பிக்சரில் வேறு தீவிர பிரச்சனைகள் ஓடுவதால், சந்தடி சாக்கில் இது விமர்சனமின்றி ஒப்புகொள்ளப்படும் ஆபத்து இருப்பதாலும் என் கருத்தை பதிவு செய்கிறேன்.
இளையராஜா பற்றிய ஞாநியின் முன்முடிவும் விமர்சனமும் என்ன? ஞாநி இளையராஜா செய்யும் பல செயல்களை அற்பமானதாக பார்க்கிறார். சமூகத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையை முன்வைத்து இளையராஜாவை ஞாநி தாக்கவில்லை. வழக்கமான ட்ரெண்டுகளில் ஒன்றான, தலித் அரசியல், மதவாத எதிர்ப்பு, பார்பனிய எதிர்ப்பு என்று கூட எதுவுமில்லை; தனிப்பட்ட நேர்மை சார்ந்த பிரச்சனையும் இல்லை. இளையராஜா யாருக்கும் காசு தராமல் ஏமாற்றியதாகவோ, கஞ்சத்தனம் செய்ததாகவோ, இன்னாது கூறி யாரையாவது புண்படுத்தியதாகவோ, இதை எல்லாம் ஒத்ததாகவோ கூட காரணங்கள் எதுவுமில்லை. ஞாநி இளையராஜா பற்றி தனிப்பட்ட முறையில் கேள்விப்பட்டு தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் முன்முடிவுகள் சார்ந்து, என்னென்னவோ காரணங்களை சமைத்து தருகிறார். அப்போது யாரேனும் நேரடியான ஆதாரங்களை தந்து முழுமையாக மறுத்தாலும், ஞாநி நேர்மையாக அதை பரிசீலிப்பதில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஞாநி இளையராஜா மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், தாக்குதல்கள் எதுவும் குறிப்பிட்ட அரசியல் கருத்தியலின் அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. 'இளையராஜா நரசிம்மனை விழாவிற்கு கூப்பிடவில்லை; பெயர் போடவில்லை, முகம் கொடுத்து பேசவில்லை, சிரிக்கவில்லை' என்று ஒரு அற்பமான தளத்திலே ஞாநியின் விமர்சனங்கள் உள்ளன.
உதாரணமாக அ.மார்க்ஸ் 'இளையராஜா சநாதனத்தை அசைத்தாரா, இசைத்தாரா?' என்று ஒருகட்டுரை போட்டார். அந்த கட்டுரை (என்னை பொறுத்தவரை) அபத்தமானது என்றாலும், அது அ.மார்க்ஸின் அரசியல் கருத்தியலின் ஒரு பகுதியாக, அந்த பார்வையில் இருந்து ஒரு விமர்சனமாக வெளிப்பட்டது. ஞாநி இளையராஜா மீது செய்துள்ள தாக்குதல் எதிலும் இத்தகைய அரசியல் கருத்தியலிலின் பின்னணி கிடையாது; முழுக்க தனிப்பட்ட முன்முடிவுகள் சார்ந்து, சமூகப்பிரச்சனைகளுடன் எந்தவிதத்திலும் தொடர்பில்லாத விமர்சனங்கள் கொண்டதாகவே ஞாநி இளையராஜா பற்றி எழுதியவை உள்ளது. இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது: ஞாநியின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்று ஆதார பூர்வமாக நிறுவப்படும் போது, ஞாநி தன் வாழ்க்கை பயணமாக கொண்டுள்ள எந்த அரசியல் கருதியலும் அடிவாங்கப் போவதில்லை. 'இளையராஜா நரசிம்மனை விழாவிற்கு அழைத்தார்; இளையராஜா கேஸட்டில் நரசிம்மனின் பெயரை போட்டுள்ளார்' என்பதன் நேரடி ஆதாரத்தை அளிப்பதன் மூலம் பொய்யாகும் ஞாநியின் கூற்றுக்கள் எந்த அரசியலை முறியடிக்க முடியும்? அதற்கு பின் அரசியல் இருந்தால்தானே அதை முறியடிக்க முடியும். ஆகையால் அரசியல் செய்லபாடு, fallacy என்று விளக்கி ஜெயமோகன் ஞாநியின் நேர்மையின்மைக்கு தரும் விளக்கங்கள் வெறும் சப்பைக்கட்டுக்கள் மட்டுமே.
மாறாக ஜெயமோகன் தரும் விளக்கம் இன்னொரு உதாரணத்தில் மிக நன்றாக பொருந்தி போகும். அண்மையில் நடந்த இன்னொரு பிரச்சனையில், அ.மார்க்ஸ் காலச்சுவடை பற்றி உதயக்குமார் சொன்னதாக ஒன்றை சொல்கிறார். உதயக்குமாரின் கனிமொழிக்கான மறுப்பை காலச்சுவடு வெளியிடவில்லை என்று அ.மார்க்ஸ் எழுதுகிறார். ஆனால் காலச்சுவடு மறுப்பை வெளியிட்டிருக்கிறது என்றவகையில் ஆதாரம் அ.மார்க்ஸிற்கு எதிராக உள்ளது. இதில் யார் குழப்பியிருந்தாலும் சொதப்பியிருந்தாலும் அ.மார்க்ஸ் எழுதியதில் இரண்டு தீவிர பிரச்சனைகள் உள்ளன. ஒன்று அவர் தந்த தகவல் தவறு; தவறான தகவலுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இரண்டு சர்ச்சைக்குரிய ஒன்றை அச்சில் எழுதும் முன் உதயக்குமாரிடம் அ.மார்க்ஸ் அனுமதி கேட்டிருக்க வேண்டும்,. அது நடந்ததாக தெரியவில்லை. தற்போது, அ.மார்க்ஸ் காதால் கேட்டதாக சொல்லும் ஆதார தகவலையே உதயக்குமார் மறுக்கும் நிலையில், அ.மார்க்ஸ் அதை அச்சில் எழுதியதற்கு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். இவை இரண்டும் என் விமர்சனம். ஆனால் இதை செய்யாததால் அ.மார்க்ஸை பொய்யராக நேர்மையில்லாதவராக என்னால் காண முடியவில்லை. அறிவு நேர்மை என்று ஒன்றை அ.மார்க்ஸ் முன்வைத்து தன் பிரச்சனைகளை ஒப்புகொண்டு பேசாவிட்டாலும், தன் அரசியலுக்கு நேர்மையாக இருக்கிறார்.
தனது அரசியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த 20 வருடங்களாக தீவிர காலச்சுவடு எதிர்ப்பை அ.மார்க்ஸ் முன்வைத்து வருகிறார். அ.மார்க்ஸும் அவரை சார்ந்தவர்களும் முன்வைப்பது போன்ற எதிர்ப்பை, காலச்சுவடை வெவ்வெறு காலகட்டங்களில் பல காரணங்களுக்காக விமர்சித்த வேறு யாரும் இவ்வளவு தீவிரத்துடன் செய்ததில்லை. இது சரிதானா என்பதும், இதற்கான தேவை என்ன என்பதும் வேறு கேள்விகள். ஆனால் இந்த அரசியலை அ.மார்க்ஸ் ஒருவித அரசியல் நேர்மையுடன் செய்வதையும், இதன் ஒரு பகுதியாகவே சமீபத்திய சர்ச்சையும் காணமுடியும். இங்கே தனது சொதப்பலை அறிவு நேர்மையுடன் அணுகினால், அதன் மூலம் அ.மார்க்ஸின் அரசியல் அடிவாங்கும். அரசியல் செய்வது என்று வந்த பின் தாங்கள் சொல்வதெல்லாம் முரணற்றதாக இருப்பதை நிறுவுவதிலேயே நிறைய சக்தி செலவழிக்கப்படுகிறது. அ.மார்க்ஸ் எழுதியது காலச்சுவடிற்கு எதிரான செயல்பாட்டில், அந்த அப்செஷனில் நடந்த ஒரு செயல். அதில் நியாயம் காலச்சுவடு பக்கம் இருப்பதாக முடிந்தாலோ, தான் சொதப்பியதாக ஒப்புகொண்டாலோ, அ.மார்க்ஸ் இத்தனைக் காலம் முன்வைத்து வரும் அரசியலுக்கு ஊறு நேரிடும். அந்த வகையில் தனது அரசியலுக்காகவே அ.மார்க்ஸ் நேரடியான ஆதாரத்தை ஒப்புக்கொண்டு, தனது அறிவு நேர்மையை நிலைநாட்ட முடியாமல் போகிறது. ஜெயமோகன் சொல்லும் faallacy என்பது இந்த உதாரணத்தில் அ.மார்க்ஸிற்குதான் சரியாக் பொருந்துகிறது.
மாறாக, ஞாநியின் இளையராஜா மீதான விமர்சனத்திற்கு தனிப்பட்ட முன்முடிவுகளால் அல்லது வேறு காரணங்களால் உருவான வெறுப்பு தவிர, அரசியல் பரிமாணம் என்று எதுவும் இல்லை. குறிப்பாக சொல்லவேண்டுமானால், கே..ஏ. குணசேகரன் மீது இளயராஜா வழக்கு தொடர்ந்த நிகழ்விற்கு பின்னர், இங்கே இளையராவை விமர்சிக்கும் எதிர்ப்பு அரசியல் ஒன்று உருவாகியுள்ளது. (நான் அதை எதிர்க்கிறேன்.) அந்த இளையராஜாவிற்கு எதிரான, ஒரு பார்பனிய எதிர்ப்பரசியலாக சொல்லப்படுவதன் ஒரு பகுதியாக, ஞாநியின் தாக்குதல் வெளிப்படவில்லை. அவ்வாறு கொள்வதற்கு ஞாநியின் எழுத்துக்களில் ஆதாரம் எதுவும் இல்லை. அது தவிர்த்தும் கூட ராஜாமீதான விமர்சனத்தில் ஞாநிக்கு அரசியல் என்று எதுவும் இல்லை; சமீபத்திய பிரச்சனையில் மிக நிச்சயமாக இல்லை. ஆனால் ஜெமோ வலிந்து ஞாநிக்கு அதை பொருத்துகிறார். மாறாக அ.மார்க்ஸ் தனது அரசியல் வயப்பட்டு செய்யும் ஒன்றை, பொய்யாக செய்யும் அவதூறாக சொல்கிறார்.
இங்கே இன்னொரு விசித்திரமான ஒன்றையும் ஜெயமோகன் சொல்கிறார். ஞாநியை விமர்சிக்க ஞாநி போன்று ஒரு சமூக செயல்பாடு நமக்கு இருக்கவேண்டுமாம். சமூகத்திற்கு பங்களிக்கும் ஞாநியின் களப்பணிகள் என்னவென்று எனக்கு முழுமையாக தெரியாது; ஞாநியை விமர்சிப்பவர்களுக்கு சமூக செயல்பாடு எதுவுமே இல்லை என்று எவ்வாறு அறிந்தார் என்பதும் தெரியாது. அது எப்படி இருந்தாலும், கூடங்குளம் விவகாரத்தில் ஞாநியை விமர்சிக்க அப்படி ஏதாவது தேவை என்றால் ஒப்புகொள்ளலாம். இளையராஜாவை ஒரு 'அற்பமான மனிதன்' என்று ஞாநி தன் முன்முடிவுகளால் சொன்னதை விமர்சிக்க, இளையராஜா ரசிகர்களுக்கு என்னவகை சமூக செயல்பாடு, என்ன காரணத்திற்கா இருக்கவேண்டும்? என்ன யோசித்தும் இதன் தர்க்கம் விளங்கவில்லை.
மாறாக அ.மார்க்ஸ் தொடர்ந்து செய்துவரும் மனித உரிமை சார்ந்த பணிகளை எடுத்துக் கொள்வோம். சமீபத்தில் அவர் பதிவில் இடம் பெற்ற அறிக்கைகள் கூட முக்கியமானவை, வேறு யாரும் முன்னெடுக்காதவை. அவை எல்லாவற்றையும் அன்னிய நிதி சார்ந்து இயங்குவதாக அவதூறு செய்ய ஜெயமோகன்தான் கொஞ்சமும் தயங்கவில்லை. அதற்கான ஆதாரம் எதையும் அவர் இதுவரை முன்வைக்கவில்லை. நீளமாக என்னனென்னவோ சொல்கிறார்; ஆனால் நேரடியாக குற்றம் சாட்ட. ஒரு ஆதாரம் இல்லை. மனித உரிமை சார்ந்த பிரச்சனைகளில் அ.மார்க்சின் தீவிர பங்களிப்பு அளவிற்கு ஒருவேளை நமக்கெல்லாம் தெரியாமல் ஜெமோவிற்கும் இருக்கிறது என்று கூட வைத்துக் கொள்வோம். ஒன்றுமே செய்யாமல் ஒரு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழும் சில ஜெமோ ஆராதகர்கள் அ.மார்க்ஸை பொய்யன் என்பதை எல்லாம் தாண்டி எவ்வளவோ சொல்கிறார்களே; அதையெல்லாம் ஜெயமோகன் கண்டிக்கிறாரா?
நான் ஞாநியை பொய்யன் அயோக்கியன் என்று எதுவும் சொல்லவில்லை; கடுமையான வார்த்தையில் சொல்லும்போது மடத்தனம் என்றுதான் சொல்கிறேன்; அவரது அறிவு நேர்மையின்மையும் அவரது மூர்க்கமான மடத்தனத்தின் ஒரு பகுதி. ஞாநியின் மூர்க்கமும் மடத்தனமும் (காசு வாங்குவது போன்ற) சமூக நேர்மையின்மையை விட ஆபத்தானது என்பதுதான் என்கருத்து. இந்த குறிப்பிட்ட ராஜா சார்ந்த பிரச்சனையில், அதற்கு பின் எந்த அரசியலும், சமூக பிரச்சனையும் கூட இல்லை. ஞாநியின் அறிவு நேர்மையின்மை அவரது அரசியல் நேர்மையின் fallacy அல்ல. அரசியல் என்று இருந்தால்தானே அதில் அரசியல் நேர்மை என்று ஒன்று இருக்க. ஆனால் அவரை விமர்சிக்க நமக்கு சமூக பங்களிப்பு வேண்டுமாம்; மிகுந்த சமூக பங்களிப்பு கொண்ட அ.மார்க்ஸின் அரசியல் சார்ந்த fallacyகளை மட்டும் அதற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் என்னவும் சொல்லலாம் என்றால், நகைச்சுவையின் நோய்கூறுக்கு ஒரு வரம்பில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
|