ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Sunday, May 08, 2016கொள்கை அடையாளம்
தேர்தல் என்பது நம் ஆதர்ச அரசை அதிகாரத்தில் அமர்த்த, வாக்களர்களின் கருத்தை முத்திரைக் குறியாக பெற்று, அதை பிரதிநிதப்படுத்தும் ஒரு ஜனநாயக வழிமுறை போல் தோன்றினாலும் அப்படியல்ல; அதிகாரத்திற்கு அங்கீகாரம் கேட்டு நிற்பவர்களால், நம் அங்கீகாரத்தை ஒரு பிரதிநிதிக்கான முத்திரை மூலம் அடையாளப்படுத்திய பின், கூட்டுத்தேர்வுகளின் அதிர்ஷ்டம் சார்ந்த சாத்தியங்களால், ஒரு அரசு உருபெறும் வழிமுறை. தேர்தல் சார்ந்து பரந்த அளவில் பொதுவாகவும், உள்ளூர் அளவில் குறிப்பாகவும் பல கேள்விகள் இருக்கும்; எல்லாவற்றிற்கும் பதிலாக ஒரே ஒரு வாக்கு மட்டுமே அளிக்க முடியும்.
ஊழலும், எதேச்சதிகாரமும், கோட்டிக்காரத்தனமும் தவிர வேறு எந்த செயலுமற்ற தற்போதய அரசு தொடரவேண்டுமா என்கிற கேள்வி அறிவாளிகள், சான்றோர்கள் மற்றும் போராளிகள் பலருக்கும் அவ்வளவு முக்கியமான கேள்வியாக தெரியவில்லை போலும்; வேறு எதை எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமானது என்று நினைப்பதால் நாமும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப எத்தனை முறை பேசுவது என்று வேறு விஷயங்களை இந்த பதிவில் பேசுகிறேன்.
தேர்தல் சாரா அரசியல் இயக்கங்களுக்கும், தனிப்பட்ட மனிதர்களுக்கும் கூட, கொள்கை என்பது நடைமுறை சமரசங்களுக்கு ஆட்பட்டதுதான்; சமரசங்கள் செய்வதால் மட்டும், கொண்டிருக்கும் அரசியல் கொள்கையற்றது என்றாகிவிடாது. கூட்டணி இன்றியமையாததாக ஆகிவிட்ட இன்றய சூழலில், சமரசம்தான் தேர்தல்சார் அரசியல் கட்சியின் கொள்கையையே தீர்மானிக்கும் நிலை வந்திருக்கிறது.
அவ்வகையில் கொள்கை என்பது நடைமுறை செயல்பாட்டை முற்றிலும் தீர்மானிக்கும் காரணி அல்ல; அதை சமரசம்தான் தீர்மானிக்கப் போகிறது. சமரசங்களையும், துரோகம் என்று சொல்லப்படுபவற்றையும் மீறி, ஒரு அடையாளமாக படிவது கொள்கை. கொள்கை என்பது ஒரு கட்சியின் சொல்லாடல்களுக்கான அடையாளம் மட்டுமே. ஆனால் அது மிக முக்கியமானது என்பதுதான் வரலாறு சொல்லும் பாடம். நடைமுறையில் அதன் பாதிப்புகள் நுண்மையாக பல தளங்களில் இருக்கும்; அதை எளிதாக மேலோட்டமான பார்வையில் முடிவு செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை.
இன்று கொள்கை அடையாளமே இல்லாத ஒரு கட்சி என்றால் அது தேமுதிகவும், அதற்கு பின் அதிமுகவும் ஆகும். அதிமுகவிற்காவது வரலாற்றின் வழியாக ஒட்டிக்கொண்ட கொள்கை பாவனைகள் உண்டு.; அது சார்ந்த கருத்துதிர்ப்புகள் உண்டு. (முரண்நகையாக, பாவனை செய்யப்படும் அந்த கொள்கைகளுக்கு நேரெதிரான நிலைபாடுகளை கொண்டவர்களால் கொள்கைரீதியாக ஆதரிக்கப்படும் கட்சி அதிமுக.)
தேமுதிகவிற்கு கோமாளித்தனத்தை தவிர வேறு எந்த கொள்கை அடையாளமும் இல்லை. ஒருவேளை தேமுதிகவை பெருமளவு வாக்காளர்கள் அங்கீகரித்து, அந்த கட்சி தமிழக அரசியலில் தீவிர பாதிப்பை எதிர்காலத்தில் ஏற்படுத்துமானால், அதன் கேடான விளைவுகள், இந்த கொள்கை அடையாளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் வகையில் சிறந்த உதாரணமாகும் என்பது என் கணிப்பு.
திமுக தீவிர கொள்கை அடையாளத்தை கொண்டது. பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் சார்ந்த அரசியல், பிராந்திய அரசியல், நாத்திகம், இந்து மத எதிர்ப்பு போன்ற அதன் கொள்கை அடையாளத்திற்காகவே, ஆதரிக்கப்படுவதை விட, பலரால் தீவிரமாக எதிர்க்கப்படுகிறது; அதற்காக ஜெயலலிதா அரசின் எந்த சீரழிவையும் நியாயப்படுத்தும் அளவிற்கு செல்லக்கூட திமுக எதிர்ப்பாளர்கள் தயங்குவதில்லை. இதன் சிறந்த உதாரணம் அறம் சார்ந்த அரசியலின் குறியீடாக ஒரு சாராரால் முன்வைக்கப்பட்ட சோ மற்றும் அவரது ஆதாரவாளர்களின் ஜெ ஆதரவு நிலை.
ஆனால் திமுகவின் கொள்கை அடையாளம் எதுவோ, அதையே தங்களின் தீவிர கொள்கையாக சொல்லிக் கொள்ளும் பலரும் கூட திமுகவை தீவிரமாக எதிர்க்கின்றார்கள். தங்களுக்கு எதிரான கொள்கை அடையாளம் கொண்ட ஆட்சியில் இருக்கும் அதிமுகவை ஒரு சமாதானத்திற்கு எதிர்த்துவிட்டு, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திமுக எதிர்ப்பையே பிரதானமாக முன்வைக்கின்றனர். இதற்கு சொல்லும் காரணம் திமுக தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்துவிட்டது என்பது; துரோகி எதிரியை விட மோசம் என்கிற தர்க்கத்தின் வரலாற்று வன்முறை புரியாமல் இந்த வாதத்தை முன்வைக்கிறார்கள்.
திமுக தன் கொள்கை அடையாளத்திற்கு இழைத்த துரோகங்கள் நிதர்சனமானவை; அதானால் அதன் கொள்கை அடையாளம் வேறு என்றாகிவிடாது. அதன் கொள்கை அடையாளத்தின் ஒரு நடைமுறை வெளிபாடுதான் சமத்துவபுரம், உழவர் சந்தை, அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு, அர்ச்சகர் சட்டம், தமிழ் வழி கல்விக்கான ஆணை என்று பலவற்றை அடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்கும், பெயர்பலகை தமிழில் இருப்பது போன்றவைகளுக்கான முன்னெடுப்புகள் ஜெயலலிதா ஆட்சியில் நடந்திருக்காது. சமரசங்களையும் துரோகங்களையும் தாண்டி கொள்கை அடையாளம் நடைமுறையை பாதிக்கும் என்பதற்கு, தீவிரமாக ஆய்ந்தால் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும். துரோகம் என்று சொல்லப்படுவது அதிகாரத்திற்காகவும், ஊழலை முன்வைத்தும் செய்யபடுபவை. ஊழல் மிக முக்கியம் என்றாலும் அதுவே எல்லாவற்றையும் தீர்மானிப்பது அல்ல; அது தீர்மானிக்காத சந்தர்ப்பங்களில் கொள்கை அடையாளமே நடைமுறைக்கு உகந்தது. மேலும் கொள்கை அடையாளத்தை வேஷமாக கொள்வதாக சொல்லப்படும் திமுக/அதிமுகவே இன்று பாசிச சக்திகள் அதிகாரத்திற்கு வராமல் தமிழகத்தை காத்து வருகிறது.
கொள்கை அடையாளத்தை தீவிரமாகவும், அதிக நம்பகத்தனமையுடனும் கொண்ட கட்சிகள் என்றால் அது பாமக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, மற்றும் பாஜக. இதில் கொண்ட கொள்கை அடையாளத்திற்காகவே அரசியலில் இருந்தே புறக்கணிக்கப்பட்டு அப்புறப்படுத்த வேண்டிய கட்சி பாமக.
சாதி அமைப்பு என்பது கொடூர ஒடுக்குமுறை சார்ந்தது என்றாலும், ஏதோ ஒருவகையில் பல நெகிழ்வுகளையும், சாதிகளுக்குள்ளான உறவாடல்களும் கொண்டது. சாதியமைப்பில் உள்ள பகைமுரண் இன்னொரு சாதியை, முற்றிலும் அழித்தொழிப்பதை நோக்கமாக கொண்டதல்ல. சாதிகளுக்குள்ளான முரண் என்பதும் இடைநிலை சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்குமான பகை மட்டும் அல்ல. உதாரணமாக நான் பள்ளியில் படித்த காலத்தில், திருநெல்வேலியில் தேவர்களுக்கும் கோனார்களுக்குமான பகை பிரபலம். தலித்களை பொது சமூக பங்கெடுப்புகளில் இருந்து அன்னியப்படுத்தி வைத்தாலும், தலித்களின் இருப்பையே அழிக்கும் தீவிரத்துடனானது அல்ல; தலித்களின் இருப்பும் சாதிய சமூகத்திற்கு தேவை. அந்த வகையில் சாதியமைப்பை பாசிசம் என்று வரையறுக்க முடியாது.
ஆனால் நவீன சாதிய அரசியல் என்பது பாசிசமாக பரிணமிக்கிறது; அது தலித்களுக்கு எதிராக ஒன்றுபடுவது, அவர்களை சமூக நடவடிக்கைகளில் இருந்து முற்றிலும் ஒதுக்கி அவர்களின் இருப்பையே அழிப்பது என்கிற நோக்கில் இயங்குவது. இந்த பாசிச அரசியலில் தமிழகமே தற்போது முன்னணியில் நிற்கிறது. இதை முன்னெடுத்து உலகமே காறித் துப்பும் நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தது பாமக. குரூர சாதி அடக்குமுறையின் யதார்த்தத்தில், தலித் அல்லாத எல்லா சாதிகளையும் தலித்களுக்கு எதிராக ஒருங்கிணைத்தது போன்ற பாசிசம் வேறு இருக்க முடியாது; அதை ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் முன்னெடுப்பது போன்ற வக்கிரம் இருக்க முடியாது. சேட்டுப்பையன் மாதிரி தமிழில், வளர்ச்சி பற்றி பேசும் அன்புமணியின் நவீன முகமுடியில் மயங்கி, இந்த சாதிய பாசிசத்தை இன்று தன் கொள்கை அடையாளமாக கொண்ட கட்சியை வெற்றி பெற வைத்து அங்கீரிப்பது என்றைக்குமான வரலாற்றுக் களங்கமாக தமிழகத்திற்கு இருக்கும்.
ஏற்கனவே சாதி வெறி சார்ந்த பல களங்கங்கள் தமிழகத்தின் அடையாளமாகிவிட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகளை பரவலாக வெற்றி பெற வைப்பது இதற்கு எதிரான நடவடிக்கையாக கருதிக் கொள்ளலாம். சாதிய பாசிச எதிர்ப்பை, தன் கொள்கை அடையாளமாக கொண்ட கட்சியாக விடுதலை சிறுத்தைகளும், திருமாவும் இன்று உருப்பெற்றுள்ளனர். அருந்தியர்கள் மீதான தாக்குதல் என்கிற சம்பவ நடைமுறைகளை மீறி இந்த அடையாளம் படிந்திருக்கிறது. சம்பவங்கள் சார்ந்த விமர்சனங்களை முன் வைக்க மறக்காமல், இந்த சாதிய எதிர்ப்பு அடையாளம் சார்ந்து திருமாவை ஆதரிக்க வேண்டியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை பரவலான கவனத்தை பெற்றது. தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் என்பதே பாசிசம் என்பதாக ஒரு கருத்து இங்கே சில அறிவுஜீவிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. நான் அப்படி நினைக்கவில்லை. இந்திய அரசியலில் மட்டுமின்றி, இடதுசாரி அறிவுஜீவி அராஜகத்தாலும் தமிழர்களுக்கேயான பிரத்யேக பிரச்சனைகள் இனவெறி முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றன; இவைகள் தவிர்க்க இயலாமல் தமிழ் சார்ந்த அரசியலுக்கு நியாயம் வகுக்கின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியின் உதிர்ப்புகள் அனைத்தும், இந்த பிரச்சனைகளை மேலும் தீவிரமாக்கும் பாசிச அரசியலை கொண்டது. இதனால் தமிழர்களின் பிரச்சனைகள் மேலும் சிக்கலாகும் என்பதை விரிவாக வேறொரு சந்தர்ப்பத்தில்தான் அலச வேண்டும். சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறை, மணல் கொள்ளையை தடுப்பது போன்ற வாயளவிலான உதிர்ப்புகளை விட, இவர்கள் அதிகாரத்திற்கு வந்தால் பாசிச அரசியலே முன்னிலை வகிக்கும். அந்த வகையில் பாமகவிற்கு அடுத்து புறக்கணிக்கப்பட வேண்டிய கட்சி நாம் தமிழர். பாஜக என்கிற ரொம்ப காலமாக மேலே தொங்கிக்கொண்டிருக்கும் எப்போதைக்குமான ஆபத்தை பற்றி இந்த தேர்தலில் பெரிதாக கவலைப்பட சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை என்று தோன்றுகிறது. ஆகையால் விடுதலை சிறுத்தைகள் பரவலாக வென்று, திமுக தலைமையில் அதிகாரம் வருவதே இருக்கும் தீமைகளுக்குள் குறைந்த தீமை கொண்ட சாத்தியமாக தெரிகிறது; அப்படி நடந்தால் அடுத்த ஐந்து வருடங்களில், மீண்டும் அதிலிருந்து தப்பிக்க, பெருந்தீமையை தேர்ந்தெடுக்காமல், நிஜமான மாற்றை தேடலாம்.
நம் காலத்தின் தலையாயதும் மிக அவசரமான அக்கறை கொள்ளவேண்டியதுமான பிரச்சனை சுற்றுச்சூழல்தான். மீண்டு வரவே முடியாத அழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருப்பது கண்ணெதிரே உள்ள நிதர்சனம். உலகமே அதை நோக்கி செல்வதால், அது இயல்பானது என்று கருத வேண்டிய மனநிலை வாய்க்கிறது. எந்த கட்சிக்கும் இது குறித்து உண்மையான அக்கறை மட்டுமல்ல, போலியான அக்கறை கூட இல்லை. அதை பற்றி பேசக்கூடிய ஒரே கட்சியாக, அதையே தனது கொள்கை அடையாளமாக முன்வைக்கக்கூடிய கட்சியாக வந்திருப்பது ̀பச்சை தமிழகம்’. உதயக்குமார் போராளி என்கிற நிலையில் இருந்து கட்சித்தலைவராக, தேர்தல் அரசியலில் ஒரு வழி நடத்துபவராக பரிணமிக்க நிறைய மாற்றங்களை கொள்ள வேண்டியிருக்கிறது; அதை வரலாறு கற்றுக்கொடுக்கலாம். கூடங்குளம் மட்டுமின்றி தமிழகம் முழுவதற்குமான சூழலிய பிரச்சனைகளை கையிலெடுக்கும் கட்சியாக வளர்தெடுக்க வேண்டும். எல்லோரும் இன்னமும் வளர்ச்சி பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது, இன்றய அதி முக்கியமான பிரச்சனையை பேசக்கூடிய ஒரே கட்சியின் வேட்பாளரான உதயக்குமார் வெல்வது எதிர்கால தமிழகத்திற்கு மிக முக்கியமானது.
|