ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, November 10, 2006

இளயராஜாவின் அடிமை தன்னிலை!

ஞானராஜசேகரன் எடுத்து வரும் பெரியார் படத்திற்கு தன்னால் இசையமைக்க முடியாது என்று இசைஞானி மறுத்துள்ளார். அதற்கு அவர் அளித்த காரணத்தை படித்தால், நியாயம் போலத்தான் தோற்றமளிக்கிறது. பெரியார் மீது தனக்கு பெரிய மரியாதை இருப்பதாகவும், இன்றும் கூட பெரியாரின் பல கருத்துக்கள் பொருத்தமானதாக இருப்பதாகவும் சொல்கிறார்; ஆனால் தனது வாழ்வும் எண்ணங்களும் பெரியாருக்கு முற்றிலும் எதிராக இருப்பதால், தன்னால் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாது, தான் அதற்கு பொருத்தமானவன் இல்லை என்றும் கூறுகிறார். முன்பு இதே போல 'ஹேராம்' படம் கோட்சேயை போற்றுவதாக இருப்பதால், அதற்கு இசையமைக்க முடியாது என்று முதலில் இளயராஜா மறுத்தாராம். அதனால் கமல் எல்.சுப்ரமணியத்தை இசையமைக்க தேர்ந்தெடுத்தாகவும், பின்னர் கமல் திரைக்கதை முழுவதையும் விளக்கிய பின்னர் இளயராஜா மனம் 'தெளிவாகி' (இதற்குள் எல்.சுப்பு வேறு காரணங்களால் விலக) இசையமைக்க ஒப்பு கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. இதையெல்லாம் பார்த்தால், இசையை தனது வாழ்வாய், ஆன்மீக தேடலாய் கொண்டுள்ள இளயராஜா மீது, எல்லாவற்றிலும் இசைவு கொண்டபின்னரே இசையமைக்கும் அவரது பண்பு மீது மீது சிலருக்கு மரியாதை வரலாம். வேறு சிலர் தான் ஒப்புகொள்ளாத எண்ணவோட்டங்கள் கொண்ட கதையமைப்புக்கும் இசையமைக்க முடியும், அவ்வாறு செய்வதுதான் சவாலானது என்றும் கருதி, இளயராஜா செய்ததை முட்டாள்தனம் என்றும் சொல்லலாம். இப்படி பேச இன்னும் பல இருக்கிறது. ஆனால் தமிழின் 'ஆபாச' பாடல்கள் உள்ளிட்ட மற்ற எல்லாவற்றிலும் அவர் மன இசைவுடன் இசையமைத்தாரா என்று கேட்பது நியாயமில்லை என்றே நினைக்கிறேன். அதில் அவருக்கு பிரச்சனை இருந்திருக்கலாம்; இல்லாமலும் இருந்திருக்கலாம்; வணிகக் கட்டாயத்திற்காக செய்திருக்கலாம். ஆனால் அதில் உள்ளது உணர்வு மட்டுமே; இசை எல்லாவகை உணர்வுகளுக்கும் இடமளிக்க வேண்டிய ஒன்று. சரச காட்சிகளும் அதில் அடக்கம். அதனால் 'பெரியாரு'க்கு இசையமைப்பது போன்ற பிரச்சனை அதில் இல்லாமலிருக்கலாம்.

எனக்கு பிரச்சனை என்னவென்றால், பெரியார் படத்துக்கு இசையமைப்பதில் இசைவு கொள்ள முடியாத இளயராஜாவிற்கு, 'தேவர்மகன்' படத்திற்கு இசையமைக்கும் போது எந்த இடத்திலும் நெருடலே ஏற்படவில்லை என்பதுதான். படத்தில் எத்தனை இடங்களில் தேவர் பெருமைகளை துக்கி பிடிக்கும் காட்சிகளுக்கு பிண்ணணி இசையமைக்க வேண்டியிருந்தது. அதைவிட எல்லாம் 'போற்றி பாடடி பெண்ணே!' என்று தன் சொந்த குரலில் பாடும்போது, இளயராஜாவிற்கு எங்குமே நெருடவில்லை என்பதுதான். வணிக நிர்பந்தம் காரணமாய் மட்டும் இசையமைத்திருந்தால் அது வேறு விஷயம். ஆனால் கோடிரூபாய் அளித்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க முடியாதவருக்கு, தேவர் காலடிமண்னை (தேவர் சமூகம் ஒரு பெரிய வன்முறையை தலித் சமுதாயம் மீது அவிழ்த்து விட்ட காலகட்டத்தில்) போற்றி பாடும்போது, எந்த நெருடலும் இல்லாமல் இசைவு கொள்ள முடிகிறதென்றால் அதை என்ன சொல்லலாம்?! ஒரு விமர்சனமற்ற முழுமையான அடிமை மனோபாவத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். நமது சாதிய சமூகம் ஏற்படுத்தி இருக்கும் அடிமை தன்னிலைகள் அளவிற்கு, ஆழமான கருத்துலக வன்முறை வேறு இருப்பதாக தெரியவில்லை. அதற்கான முக்கியமான உதாரணம் இளயராஜா.

பிகு: இளயராஜவை முன்வைத்து முன்பு தெரிவித்த எந்த கருத்துக்களிலும் இப்போதும் மாற்றமில்லை.

Post a Comment

---------------------------------------
Site Meter