ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Monday, August 29, 2011

நம் கூட்டுக் கொலை.

செப்டம்பர் 9 அன்று முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட சாத்தியங்கள் அதிகமாக‌ இருக்கின்றன. அது நிறைவேறினால் அரசதிகாரமும், நீதிமன்றமும், சமூகத்தின் பொதுப்புத்தியும் சேர்ந்து, பகுத்தறிவினால் நிதானமாக நிர்ணயிக்கப்பட்டு நிகழ்த்திய ஒரு கொடூரமான கூட்டுக் கொலையாக அது இருக்கும்.

நம் சமூகத்தில் எத்தனையோ அநீதிகள் அன்றாடம் நடக்கிறது; நாம் ஒப்புக் கொள்ளாத, நம்மால் சகிக்க முடியாத அநீதிகள் எல்லாவற்றிற்கும் நாம் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதுமில்லை; கொடுக்கும் குரலின் அழுத்தமும் கோபமும், அநீதி மற்றும் அது நிகழும் தரப்புக்கும் ஏற்ப வேறுபடத்தான் செய்கிறது; அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் அதற்கான தேர்ந்தெடுப்பும், அந்த தேர்ந்தெடுப்பிற்கு காரணமான கொள்கைசார்புகளும் இருக்கின்றன. இதற்கு விதிவிலக்காக எந்த தரப்பும் இருப்பதாக தெரியவில்லை.

அநீதிகள் என்று எதுவுமே நடக்காத சமூகத்திற்கான சட்டகத்தை நாம் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது. அநியாயம் என்று நாம் நினைக்கும் ஒன்றை தன்னளவில் எதிர்கொள்ளாமலும், மற்றவருக்கு அது நிகழ்வதை எல்லா சந்தர்ப்பங்களில் கேள்வி கேட்டுக் கொண்டும் இருக்க‌ முடியாது. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லையாக, 'என்ன காரணத்தாலும் நாம் இதை பொறுக்க முடியாது' என்று சுய அறத்தால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று நமக்கு இருந்தாக வேண்டாம். அதை சமூகமும், அரசும், அதன் நீதியும் அறிவித்து, எல்லா ஏற்பாடுகளையும் நிதானமாக செய்து நிறைவேற்றுமானால் நம்முடைய இருப்பின் மிக பெரிய‌தொரு தோல்வி அது; வாழ்வதன் அர்த்தத்தையே கேள்விக்குரியாக்கும் நிகழ்வு அது.

நான் மரண தண்டனை என்பது நாகரீக சமூகத்தில் ஒப்புக் கொள்ள முடியாத விஷயமாக கருதுகிறேன். குறிப்பாக இந்த பிரச்சனையில் பேரறிவாளனுக்கான தண்டனையை, எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள‌ முடியாத அநியாயமான விஷயமாக, நம் இருப்பையே கேள்விகுறியாக்குவதாக கருதுகிறேன்.

மரண தண்டனையை, அதாவது எல்லாவித மரணதண்டனையையும், ஏன் எதிர்க்கிறேன் என்று விளக்கமாக எழுத இந்த இக்கட்டான நிலை சரிபடவில்லை. இந்த பழைய பதிவில் என் அன்றய புரிதலை எழுதியிருக்கிறேன். சுருக்கமாக சொல்வதானால், செய்த எந்த குற்றத்தையும் விட மரணதண்டனை கொடூரமானது. மிக அல்பமான உதாரணத்தை யோசிக்கலாம். ப்ளேடினால் ஒருவன் நம்மை எதிரபாராத சமயத்தில் கீறிவிட்டால் அது சாதாரண விஷயம்; பதிலுக்கு குறிப்பிட்ட நேரத்தை நிச்சயித்து, அந்த ஒருவனுக்கு அதை அறிவித்து, கையை சுத்தமாக கழுவி, அவனை எல்லாவகையிலும் தயார் செய்து, கையை குறிப்பிட்ட நிலையில் வைத்து, தயாராக வைக்கப்பட்ட ப்ளேடினால் கையில் கீறுவது, அதை விட பல மடங்கு கொடுமை நிறைந்தது. இது எந்த தண்டனைக்கும் பொருந்தும்; ஆக எல்லாவித தண்டனையும் குற்றத்தை விட கொடுமையானதுதான். ஆனால் மரண தண்டனை என்பது, ஒருவேளை வலியற்று நிறைவேற்ற முடியும் என்று ஒரு நிலை வந்தாலும் கூட, மனிதன் நிகழ்த்த கூடிய எல்லா குற்றங்களையும் விட கொடூரமானது; செய்த குற்றங்களை விட அநீதியானது. கடவுளின் இடத்தை சில மனிதர்கள் எடுத்து, நம் அனைவர்களின் பெயராலும் நிறைவேற்றப் பெறுவது.

நிகழ்ந்த குற்றம் என்பது மனித பைத்தியக்காரத்தனத்தின் வன்முறை; மரண தண்டனை அரசதிகாரத்தின் நீதியும் பகுத்தறிவும் சேர்ந்து நிகழ்த்தும் பயங்கரம். தூக்கு தண்டனை, அதை நிகழ்த்தும் பணியாளர்கள் உட்பட பலருக்கும், எவ்வளவு பயங்கரமான அனுபவம் என்பது பக்கம் பக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்த பயங்கரம் செப்டம்பர் 9இல், நாம் இட்ட இத்தனை கூக்குரலுக்கு பிறகும் நடக்கப் போகிற‌து என்றால், நம் சமூகத்தில் இயங்குவது குறித்த ஆழ்ந்த அவ நம்பிக்கையையே கொள்ள முடியும். குறிப்பிட்ட அரசியல் தரப்பின் மாறாத காழ்ப்பையும், வெறுப்பையும் விமர்சிக்கும் (ஏற்கனவே இல்லாத) அருகதை இனியும் எந்த பக்க அறிவுலகமும் கோர முடியாது.

இந்த பகுத்தறிவும், நீதியும் சார்ந்த பயங்கரவாத கொலையை, தன்னிச்சையாக எதிர்த்து கொதிக்தெழும் அளவிற்கு, நம் சமூகத்தின் பொதுப்புத்தி நாகரீகம் கொள்ளவில்லை. இப்போது இரு வாரங்களுக்கு குறைவான நாட்களே கைவசம் இருக்க, மிக இக்கட்டான நிலையில் இருக்கிறோம். நமது எதிர்ப்பை மீறி இந்த பயங்கரம் நடக்காமல் இருக்க ஒரே நம்பிக்கை, மனமிரங்கி ஜெயலலிதா செயல்பட்டு இதை தடுப்பதுதான். ஜெயலலிதா தன் எண்ணம் என்ன வென்று சின்ன சமிஞ்ஞை கூட கொடுக்காத நிலையில், இந்த பயங்கரத்தை நிறுத்த வைப்பதற்கு, அவரை நிர்பந்திக்க‌, இந்த மரணதண்டனைக்கு எதிராக பெரும் வெகுமக்கள் எதிர்ப்பு இருப்பதாக காட்டுவதும், உண்மையிலேயே அதை உருவாக்குவதுமே.

அத்தகைய வெகுமக்கள் எதிர்ப்பை உருவாக்குவதற்கு பேரறிவாளனை முக்கியமான‌ உதாரணமாக முன்வைத்து, அவர் மீதான தண்டனை மிக அநியாயமானது என்கிற வாதத்தையும் மக்களிடம் கொண்டு செல்வதுதான்; அதுதான் உண்மைக்கு அருகில் வருவதும் கூட. அந்த நியாயமான வேலையைத்தான் தமிழ்தேசிய பார்வை கொண்டவர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள்.

இத்தகைய முன்னெடுப்பிற்கு எதிராக‌ ஷோபாசக்தி, ஜெயமோகன், பத்ரி போன்றவர்கள் (நான் வாசித்த வரையில்) எழுதியுள்ளனர். ஷோபாசக்தியின் வாதம் அவரது அரசியல் அப்செஷன் என்று நான் கருதுகிறேன். அதை விரிவாக எழுதுவது இன்றய சூழலில் தேவையில்லை என்று நினைக்கிறேன். பத்ரியும், ஜெயமோகனும் இந்த‌ மரண தண்டனையை எதிர்ப்பதாக‌ சொன்னாலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். மேலும் அவ்வாறு பிரச்சாரம் செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள். எப்படி என்று எனக்கு புரியவில்லை.

'பேரறிவாளன் ஒரு சதித்திட்டக் குற்றவாளிதான், ஆனால் மரண தண்டனை கூடாது என்பத‌னால் அவருக்கான தண்டனையை எதிர்க்க வேண்டும்' என்று ஒரு பிரச்சாரத்தை மட்டும் செய்து, அவர் அப்பாவி என்பதை சொல்லாமல் மக்களிடம் சென்றால் என்னவகையில் அது நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்? இன்னமும் போலிஸ் என்கவுண்டரை ஆதரிக்கும், குற்றவாளிகள் அடித்து கொல்லப்படுவதை ஆதரிக்கும் மனம் கொண்டவர்கள் நம் வெகுஜன மக்கள். தர்மபுரி வழக்கு தீர்ப்பில் மக்கள் மன நிலை என்ன? 'தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று அஇஅதிமுகவினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது இனிப்பு வழங்கிக் கொண்டாடிய தமிழர்களையும் நமக்குத் தெரியும்.' என்று பத்ரியே எழுதுகிறார். ஆனால் 'குற்றத்தில் பங்கு உண்மைதான், மரண தண்டனை மட்டும் கூடாது' என்று பிராசாரம் செய்யவேண்டும், அதுதான் நேர்விளைவுகளை தரும் என்று வலையுறுத்துவதில் என்ன லாஜிக் வைத்திருக்கிறார்?

தர்மபுரி வழக்கில் கூட ஒருவேளை மக்கள் வேறு மாதிரி யோசிக்கலாம்; தேசிய உணர்வு, ராஜீவின் பிம்பம், அந்த கொடூர பயங்கரவாத செயல் தமிழகம் முழுக்க பரப்பிய அதிர்வின் நினைவுகள், எல்லாம் சேர்ந்து மக்கள் கருத்தை இன்னமும் எதிர்மறையாகவே ஆக்கும். மேலும் பேரறிவாளனுக்கான தண்டனை அநீதியானது என்கிற போது அதைத்தான் ஆதாரங்களுடன் முன்னெடுக்க வேண்டும். ஜெயமோகனும் பத்ரியும் பேரறிவாளன் குற்றவாளிதான் என்று நினைப்பதற்கான வாதம் எதையும் தனியாக தரவில்லை. மற்றவர்களை ஆதாரபூர்வமாக எழுதவில்லை என்று குறை சொல்பவர்கள், பேரறிவாளனின் பங்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்து எழுப்பப்படும் கேள்விகளை பொருட்படுத்தவில்லை. 'நீதி மன்றம் தீர்ப்பளித்திருப்பது, அதில் மேல் மட்டத்தில் ஊழல் இருக்காது' என்பது மட்டுமே ஜெமொ வாதம். பத்ரி ரகோத்தமன் வேறு மாதிரி சொல்கிறார் என்று ஒரு வாதத்தை சொல்கிறார். அது என்ன வேறு மாதிரி என்பதை சொல்வதில்லை. எத்தனையோ பேர்களை பத்ரியும், ஜெயமோகனும் வாதங்களையும், ஆதாரங்களையும் தராமல் ஒப்பேத்துவதை சாடுவார்கள். முக்கியமான ஒரு விஷயத்தில் இவர்களுக்கு மட்டும் அந்த பொறுப்பும், கட்டாயங்களும் கிடையாது. போகிற‌ போக்கில் எதையாவது சொல்வதும், நீதிமன்றம் சொன்னால் சரி என்கிற வாதம் போதுமானது. உண்மையிலேயே மனசாட்சி நெருடவில்லையா?

இப்போதய சூழலில் இது குறித்த விவாதத்தில் இறங்குவது தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் தமிழ் தேசியவாதிகள் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது ஒரு துவக்கம் மட்டுமே; தமிழ் தேசிய சொல்லாடல்களை ஏற்காதவர்களும் இந்த மரணதண்டனைக்கு எதிரான குரலையும் ஒலிக்கும்போதுதான் இதற்கான நியாயம் வலுப்பெறும் என்று ஜெயமோகனை போலவே நானும் நினைக்கிறேன். குறிப்பாக ஜெயலலிதா மனமிரங்க நிர்பந்தம் வரவேண்டுமானால், தீவிர தமிழ் தேசியவாதிகள் தவிர, மற்ற பலர் தங்கள் குரலை ஒலிக்கவேண்டும். அப்படி யாரும் தீவிரமாக ஒலிக்காத‌ நிலையில், பேசாதவர்களை குற்றம் சொல்லாமல், தமிழ் தேசியவாதிகள்தான் அதற்கும் காரணம் என்கிற வழக்கமான விநோதமான தர்க்கத்தில் ஜெயமோகன் இறங்கியிருக்கிறார்.


கோயம்பேடு உண்ணாவிரதப் போராட்டம், ஊடக கவனத்தை பெற்று வரும் வேளையில் இது போன்ற‌ கருத்துக்கள்தான் உண்மையாக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். வேறு சிலரும் இதே போல பேசத்தொடங்கிய நிலையில் பொதுக்கருத்தை உருவாக்குவதில் என் சிறிய பங்காக, இந்த பிரச்சனையில் கடமை என்று நினைத்து இந்த எதிர்வினை. 8000 பேர்கள் ஜெயமோகனை வாசிக்கிறார்கள் ஒரு 200 பேராவது என் பதிவை வாசிக்க மாட்டார்களா?

இந்த மரண தண்டனை நிகழக்கூடாது என்பதுதான் இவர்களின் முக்கியமான அக்கறையாக இருக்கும் பட்சத்தில், அதை எதிர்க்கும் காரணங்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும். ஜெயமோகன் பதிவில் முன்னிலைபடுத்தப்படும் கருத்து என்னவென்று வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும். எனக்கும் தமிழ் தேசியவாதிகள் மீது மட்டுமின்றி, அவர்கள் போரட்டத்தை முன்னெடுப்பதிலும் விமர்சனம் உண்டு. நமது முக்கிய நோக்கமான மரணதண்டனைக்கு எதிரான கருத்தை உருவாக்குதல் என்ற நோக்கத்திற்கு தீங்கிழைக்காதவரை அந்த விமர்சனங்கள் இப்போதைக்கு முக்கியமனவை அல்ல. நான் மட்டுமல்ல, தமிழரல்லாத‌ மனித உரிமையாளர்கள், முன்னாள் மும்பை நீதிபதி சுரேஷ் இந்த தண்டனையை தாங்கள் எதிர்ப்பதற்கான வாதங்களை முக்கியப்படுத்தி பேசினார்களே ஒழிய, எதிர்ப்பதை ஒரு பாயிண்டாக சொல்லிவிட்டு, தங்களுக்கு தமிழ் தேசிய‌த்துடன் இருக்கும் பிரச்சனைகளை பேசவில்லை. தமிழ்தேசியவாதிகள் ஒரு தீவிர அரசியலை கோஷ்டிகானமாக ஒலிக்கும்போது பல பிரச்சனைகள் நமக்கு இருக்கத்தான் செய்யும். (ஷோபாசக்தி போல் 'சாத்தியமற்ற அரசியலை' பேசாமல்) நடைமுறை அரசியலை தொடர்ந்து வலியுறுத்தும் பத்ரிக்கு மரணதண்டனை எதிர்ப்புதான் முக்கியம் என்றால், பிரச்சனைகளை விடுத்து விளைவுகளில்தான் கவனம் இருக்க வேன்டும்.

ஆயிரம் முறையாவது சொல்லியாகிவிட்டது; பேரறிவாளன் மீது சாட்டப்பட்ட குற்றம் அவர் 'பேட்டரி வாங்கி கொடுத்தது'; அதற்கான ஆதராம் அவரே தடா சட்டத்தின் நடைமுறையில் கொடுத்த போலீஸ் வாக்குமூலம். இதற்கு மேல் அவர் மீது குற்ற நிரூபணத்திற்கு வேறு ஏதாவது ஆதாரம் இருப்பதாக தீர்ப்பிலோ, வேறு வகையிலே தெரிந்தால் பத்ரியும், ஜெயமோகனும் முன்வைக்க வேண்டும். அதை செய்யாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டதால் சரி என்பது என்னவகை அறிவு பூர்வமான அணுகுமுறை? அல்லது தடாசட்டத்தின் கொடூரமான நடைமுறையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை ஆதாரம் என்கிறார்களா? 'சோ'வாக இருந்தால் தயங்காமல் அதை சொல்லுவார். ஒரு அப்பாவி பாதிக்கப்பட்டாலும், பயங்கரவாதம் குறித்த பிரச்சனைகளில் நாம் கடுமையாக இருப்பதுதான் சரியான அணுகுமுறை என்று நினப்பவர் அவர்; மரணதண்டனையின் இருப்பிற்கும் தீவிர ஆதரவாளர் அவர். அதே போல ஜெமோவும், பத்ரியும் பேசிவிட்டால் எனக்கு பிரச்சனையில்லை. (பிரச்சனையில்லை என்றால் அவர்களை எதிர்கொள்ளும் பிரச்சனை இல்லை.) மாறாக மனிதாபிமானமும், மனித உரிமையும் சேர்த்து பேசுவதால்தான் பிரச்சனை. ஆகையால் ஜெமோவும், பத்ரியும் நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மட்டும் உண்மை என்றும், ரகோத்தமன் என்னிடம் தனிப்பட்ட சொன்னார் என்று போகிற போக்கில் சொல்லாமல், பேரறிவாளனை ஏன் குற்றவாளிகளாக கருதுகிறார்கள் என்று சொல்வதுதான் நேர்மையாக இருக்கும். சொல்லும்பட்சத்தில் என் கருத்தை பரிசீலிக்க தயராக இருக்கிறேன். எழுத்தில் நேர்மையாக இல்லாமல் இருப்பது அவர்கள் உரிமை. ஆனால் நாளை இடதுசாரிகள், தமிழ்தேசியவாதிகளின் அறிவுநேர்மை குறித்து பாடம் எடுக்க மட்டும் கூடாது.

அடுத்தது பேட்டரி வாங்கி கொடுத்தது உண்மையாகவே இருந்தாலும், சதி திட்டத்தை தெரிந்து பங்குவகித்ததான முடிவுக்கு வரமுடியாது. அப்படி ஒரு முடிவுக்கு வந்தாலும் குற்றத்துடன் வகித்த பங்கின் தீவிரம் சார்ந்துதான் தீர்ப்பளிக்க முடியும். எந்தவகையில் பார்த்தாலும், மரண தண்டனையை ஒப்புக் கொள்ளும் சட்டகத்திலேயே கூட, இதற்கு மரண தண்டனை அதீதமானது, அநியாயமானது என்பதைத்தான் எந்த அறிவு நேர்மை கொண்டவரும் முடிவிற்கு வரமுடியும். மாறாக பயங்கரவாதம் தொடர்பான பிரச்சனைகள் இப்படி நியாயம் பேசக்கூடாது என்று நினைத்தார்களானல் அதை தெளிவாக சொல்ல வேண்டும். அடைப்படையில் மனிதாபிமானம்தான் எழுத்தோட்டமாக உள்ளதாக காண்பித்துக் கொள்ளக் கூடாது.

உயர் மட்ட நீதிபதிகளின் தீர்ப்பு நியாயமானதாக இருக்கும் என்பதற்கு ஜெயமோகன் சொல்லும் காரணம் அங்கே ஊழலின்மை; ஆனால் ஊழல் என்பதல்ல முக்கிய பிரச்சனை. நீதியின் கடவுள்தன்மை கொண்டிராத மனிதர்களான நீதிப‌திகளின் மனச்சாய்வும், அவர்கள் கொண்டிருக்கும் முன்னபிப்பிராயம், நம்பிக்கைகள், வழக்கின் அரசியல் பின்னணியும், மைய இந்திய அரசும் அங்கீகரிக்கும் கொள்கை எல்லாம் தீர்ப்பை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. யாரும் நீதித்துறையின் ஊழல் காரணமாக இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளதாக இதுவ‌ரை சொல்லவில்லை. சாயப்பட்டரை வழக்கு முதல் ஸ்பெக்ட்ரம் வரை நியாயமான ஊழலற்ற தீர்ப்பு வந்தால் கூட‌, ராஜிவ் போன்ற ஒரு அரசியல் கொலை வழக்கில் எல்லாம் நீதியுடன் இருக்கும் என்பது ஒரு வாதமே இல்லை. , 'மக்களின் வெகுஜன உண‌ர்வை திருப்தி செய்ய வேண்டிய கட்டாயத்தை ஒரு காரணமாக சொல்வதையும் கவனிக்க வேண்டும். சட்டமே நியாயமற்று இருப்பது என்று ஒரு யதார்த்தம் இருக்கக்கூடும் என்பது போல, நேர்மை என்பதாக பயன்படுத்தப்படும் நீதியே கூட அநீதியாக இருக்க முடியும்.
.
"அப்சல் குரு போன்று பாராளுமன்றத் தாக்குதலில் எளிய மக்களை கொன்று குவித்த தேசவிரோதச் சதிகாரர்களைக்கூட உச்சநீதிமன்றம் வரை எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பின்னரும் இந்திய அரசு தண்டிக்க தயங்குகிறது" என்று மனசாட்சியே இல்லாமல் எழுதுகிறார் ஜெமோ. பின்னணி எதுவும் புரியாத வாசகர் வாசித்தால், அப்சல் நேரடியாக பாராளுமன்ற தாக்குதலில் பங்கெடுத்தது போல தோன்றும். ஆனால் அவர் சதித்திட்டத்தில் பங்கு உள்ள‌தாக கூட நேரடி ஆதாரம் கிடையாது. ஒரு செல்போன் உரையாடல் என்கிற சந்தர்ப்பவாத சாட்சியம் மட்டுமே அவரை சம்பந்தப்படுத்துவது; பேரறிவாளன் விஷயத்தில் அதுவுமில்லை.

ஜெயமோகனை போல நானும் தமிழ்தேசியம் பேசாத அறிஞர்கள், சான்றோர்கள், பிரமுககர்கள் இந்த மரணதண்டனையை எதிர்த்து குரல் எழுப்பவேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். 'தமிழ் தேசியவாதிகள் முன்னெடுக்கிறார்கள்; அதனால் மற்ற‌வர்களால் பேசமுடியவில்லை' என்பது நியாயமான வாதம் அல்ல.

கடைசியாக ஜெயமோகன் என்ற எழுத்தாளர் மீது மிச்சமிருக்கும் மரியாதையால் சொல்கிறேன். 'ஓர் எழுத்தாளனாக அவரது எளிய சொற்கள் எந்த பொதுக்கருத்தை உருவாக்குகிறது என்று மனசாட்சியுடன் சொல்லட்டும். ஜெயமோகனின் பதிவை படித்து மரண தண்டனை கொடூர‌மானது என்ற முடிவுக்கு வந்து பொதுக்கருத்து உருவாகி எதிர்க்குமா, அல்லது உண்மையில் சதியில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்தான் தண்டிக்கபடுகிறார்கள் என்ற மனச்சமாதானம் கிடைக்குமா?

எதிர்வினை முடிந்து மீண்டும் பதிவிற்கு வருகிறேன். மரண தண்டனை நாகரீக சமுதாயத்தில் ஏற்கமுடியாது என்ற அடிப்படையில் இந்த மூவருக்கான தண்டனையை எதிர்த்தாலும், அநீதியான மரண தண்டனையை அனுமதிப்பது நம் சமூகத்தின் கூட்டுக் குற்றம் என்றவகையில், பேரறிவாளனின் தரப்பை தூக்கிபிடிப்பது முக்கியமாகிறது. பேரறிவாளனுக்கு தண்டனை குறைப்பு நடந்தால், அது மற்றவர்களின் தண்டனை குறைப்பிற்கு சாதகமாகும்; பின் மற்ற மரணதண்டனை கைதிகளுக்கு சாதகமாகும். இப்போதைக்கு நம்பி காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை.தொடர்புடைய மற்ற பதிவுகள்:

மரணதண்டனைக்கு எதிராக‌.


அரசியல் தூய்மையும், அரசியல் செயல்பாடும், உரையாடலும...

மரணதண்டனை குறித்து சில துளிகள்.


Post a Comment

---------------------------------------
Site Meter