ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, March 16, 2012

ஜெயமோகனின் வாக்குமூலம்.

(ஃபேஸ்புக்கில் 'ஜெயமோகனின் வாக்குமூலம்' என்ற தலைப்பில் ராஜன்குறை எழுதிய மூன்று பதிவுகளை, அதன் முக்கியத்துவம் கருதி, பரந்த வாசக வாசிப்பிற்காக இங்கே தருகிறேன். ஜெயமோகன் எழுதிய பதிவு "ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை” )

பதிவு -1.


சில வருடங்களுக்கு முன் ஒரு முறை தற்செயலாகத் தொலைக்காட்சியில் ஒரு கேம் ஷோ பார்த்தபோது பங்கெடுத்த மத்தியதர வர்க்க குடும்பத்தலைவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “விமான விபத்தில் இறந்து போன இந்திய பிரதமரின் மகன் யார்?” அவர் மிகவும் பரிதாபமாகப் பார்க்கவும் நிகழ்ச்சி நடத்துபவர் ஒரு க்ளூ தந்தார். “அவர் பெயர் காந்தி என்று முடியும்.” அப்போதும் மிகவும் தர்ம சங்கடமாகப் பார்த்த பங்கேற்பாளர் பல நொடிகள் கடந்ததும் திடீரென்று முகம் மலர “ராஜீவ் காந்தி” என்று சொன்னார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவர் ஒரு அரசுத்துறை ஊழியர் என்று நினைவு.

எல்லோரும் எல்லா தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. வாழ்வை புரிதலுடன் வாழ தகவல்களும், புள்ளி விவரங்களும் தேவையில்லை. படிப்பறிவும் நவீன வாழ்வு குறித்த தகவலறிவும் இல்லாத முதிய விவசாயிகள் உயர்ந்த பண்போடும் வாழ்வின் விழுமியங்களை புரிந்தவர்களாகவும் இருப்பதை 35 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குக்கிராமத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் ஊடகங்களுடன் தொடர்புள்ள அரசு ஊழியர், நவீன ஆடைகள் அணிந்தவர் சமகால நிகழ்வுகள் (current affairs) குறித்த குறைந்தபட்ச தகவல்கூட இல்லாமல் இருக்கிறார் என்றால் அவர் சுத்தமாக வாசிப்புப் பழக்கமும், உலக விவாகரங்களில் அக்கறையும் இல்லாமல் இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களாலான சமூகத்தில் எப்படி பொதுக்கருத்துக்கள் உருவாகும், மக்களாட்சி சிறப்பாக நடக்கும் போன்ற சந்தேகங்களும் எழத்தான் செய்தன. அதனால்தான் எனக்கு என்ன சமூகம் இது என்று சங்கடமாக இருந்தது.

அதைப்போன்ற ஒரு சங்கடம்தான் ஜெயமோகன் இரு தினங்களுக்கு முன் எழுதியுள்ள “ஏன் பொதுப்பிரச்சினைகளைப் பேசுவதில்லை” ஒரு குறிப்பை பார்த்தபோதும் தோன்றியது.

ஜெயமோகனிடம் ஜெய்சன் சாமுவேல் என்பவர் கேட்கிறார். என்னத்தான் நீங்கள் நேரமே போதாமல் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தானார் ஆனாலும் வேளச்சேரியில் ஐந்து பேரை போலீஸ் கொன்றுவிட்டதே, அதைக்கண்டிக்க வேண்டாமா என்று. அதற்கு என்ன பதில் தரலாம் ஒரு மனிதர்? ஒரு வரி போதும்: “போலீஸ் அத்துமீறலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து கேட்டதற்கு நன்றி”. அது நாகரீகம். அத்தோடு முடிந்தது பிரச்சினை. அல்லது அதற்கு மேலும் சென்று ஏன் கேள்வி கேட்கும் வரை பேசாமல் இருந்தீர்கள் என்றும் மேலும் ஒரு கேள்வி வரும் என்று யோசித்தால் கூடுதலாக இரண்டு வரி சொல்லலாம். “என்னைப்பாதிக்கும் எல்லா பிரச்சினைகளையும் பற்றி நான் உடனே கருத்துச் சொல்லத் தொடங்கினால் என் இலக்கிய ஆக்கங்கள் பாதிக்கப்படும். படைப்பெழுத்தின் மூலமாகத்தான் நான் உலகை எதிர்கொள்ள விரும்புகிறேன். சில சமயங்களில் என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் கருத்துச் சொல்கிறேன். வேளச்சேரி பிரச்சினையில் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துதான் என்னுடையதும்.” இதையும் யாரும் குறை கூறப் போவதில்லை.

ஆனால் அறியாமை அகம்பாவமாய் பேயாட்டம் போடும் இருள் சூழ்ந்த மனம் எப்படி எளிமையாகப் பேசும்? பொய்யும், போலித்தனமும், அபத்தமுமாய் உளறிக்கொட்டுகிறது.

முதலில் டிஸ்க்ளெய்மர்:" பொதுவாக நான் சமூகப் பிரச்சினைகளில் கருத்துச் சொல்வதில்லை".
என்ன அபத்தம் இது? இவர் அளவு சமூகப் பிரச்சினைகளில் கருத்து சொல்பவர்கள் தமிழகத்தில் வேறு யாரும் இல்லை என்பதுதானே பிரச்சினை? மருத்துவம், மாந்திரீகம், கார்பரேட் சாமியார், கார்பரேட் உண்ணா விரதம். கார்ப்பரேட் சமூக இயக்கம், அணு உலை, அப்துல் கலாம் என்று இவர் சொல்லாத கருத்து ஏதாவது உண்டா? உலகிலேயே கருத்து கந்தசாமி என்ற பட்டத்திற்கு உரியவர் இவர்தான். ஞாநி, மார்க்ஸ் போன்ற கருத்தாளர்கள் கூட இவர் அளவுக்கு தினமும் அருள்வாக்கு சொல்வதில்லை. புனைவெழுத்தாளர்கள் யாரும் இவருடன் ஒப்பிட்டால் பத்து சதம் கூட கருத்து சொல்வதில்லை. கோணங்கி எந்தப்பிரச்சினை பற்றியாவது எழுதுகிறாரா? பா.வெங்கடேசன் எழுதுகிறாரா? கட்சி சார்புள்ள தமிழ்ச்செல்வன், சு.வெங்கடேசன், ஆதவண் தீட்சண்யா கூட இவ்வளவு எழுதவதில்லை. பிறகு எதற்கு “பொதுவாக நான் சமூக பிரச்சினைகளில் கருத்து சொல்வதில்லை” என்று ஒரு அபத்த டிஸ்க்ளெய்மர்? பம்மாத்து.

இதைத்தொடர்ந்து வெவ்வேறு தர்க்கங்களுடன் ஏன் புனைவெழுத்தார் கருத்து சொல்வதில்லை, சொல்லக்கூடாது என்றெல்லாம் அறிவுரைகள். நடுவில் இன்னொரு பம்மாத்து: “குறைந்தபட்சம் அவை சூடாக நிகழும்போதாவது முற்றாக அமைதி காக்கிறேன்.” அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் உலையில் கொதிக்கும்போதே மாய்ந்து மாய்ந்து எழுதியது எவ்வளவு நாட்கள் முன்னால்? இப்படி ஒரு அம்னிஷியாவா?

இப்படியாக 269 வார்த்தைகள் எழுதிய பிறகு விஷயத்திற்கு வருகிறார். அதன் துவக்கம் “சரி, நீங்கள் சொன்ன விஷயத்தையே பேசுவோம்.” அதை முதலிலியே செய்யவேண்டியதுதானே? இங்கே நடப்பது என்னவென்றால் அட்டெண்டன்ஸ் போடுதல். பின்னால் யாராவது கேட்டால் நானும் கண்டித்திருக்கிறேன் என்று சொல்லலாம். பின்னர், தன் வாசகர்களிலேயே மனித உரிமை பற்றி உணர்ச்சி வசப்படும் டைப்பெல்லாம் இருக்கும். அவர்களையும் விட்டுக்கொடுக்க முடியாதல்லவா? அதற்காக ஒரு பத்தி. 54 வார்த்தைகள். அதன் இறுதியில் ஒரு உணர்ச்சி ஸ்டேட்மண்ட்: “ஆக்கபூர்வமான சமூகத்தில் இன்று மனித உரிமை, சூழியல் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை ஆகிய மூன்றுக்காகவும் எப்போதும் ஒருங்கிணைந்த குரல் எழுந்துகொண்டிருந்தாகவேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதற்காகப் போராடும் ஒவ்வொருவரையும் நான் மதிப்புடன் வணங்குவேன்."

எவ்வளவு அருமையான மனிதர். ஏன் புனைவெழுத்தார்கள் சமூகப்பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் கருத்துக் கூற முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு மனித உரிமை போராளிகளை மதிப்புடன் வணங்குவேன் என்று சொல்லும்போது இவர் கண்ணீர் மல்க கரம் கூப்பி நிற்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இத்துடன் முடிந்திருந்தால்கூட பிரச்சினையில்லை. விடுமா ஆணவப்பேய்? முறுக்கிக் கொள்கிறது. “ஆனால் இவர்களில் ஒருவனாக என்னுடைய குரலை இணைக்கமுடியாது. ஏனென்றால் நான் இவர்களில் ஒருவனல்ல. நான் எழுத்தாளன்.” என்ன தோழர் பிரச்சினை? இப்போதுதானே மதிப்புடன் வணங்கினீர்கள்? வேறென்ன உங்களை உண்மை அறியும் குழுவுடனா போகச் சொல்கிறார்கள்?

பிரச்சினை என்னவென்றால் மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு ஒற்றை நோக்கு இருக்கிறதாம். இலக்கியம் ஒற்றை நோக்குடன் செயல்பட்டால் தட்டையாக இருக்குமாம். அதாவது இவருடைய புரிதலில் இலக்கியம் மனித உரிமைக்காக பேசவேண்டும். அதைப் பறிப்பதை நியாயப்படுத்தவும் வேண்டும் என்று சொல்கிறார் போலிருக்கிறது. இங்கேதான் அறியாமை பேயாட்டம் போடத்துவங்குகிறது.

முதலில் இலக்கியம் பன்முகம் கொண்டு இயங்குவது என்பதும் அறமற்ற கொலைகளை நியாப்படுத்துவதும் ஒன்றல்ல. இலக்கியம் நிச்சயம் போலீஸ்காரர்களின் நிர்ப்பந்தங்களை பேசும். அவர்களின் வக்கிரங்களை பேசும். இயலாமையை பேசும். ஆளுவோரின் மனநிலையை பேசும். இறக்கமற்ற அரசியல் தர்க்கத்தை பேசும். ஏன் திருடர்களின் கொடூர முகங்களையும் பேசும். ஆனால் ஒரு போதும் இலக்கியம் அதிகாரம் கொலைகளை அறங்கேற்றுவதை மெச்சாது. அதன் அவலத்தை, மானுட தோல்வியைத்தான் அது பேசும். தால்ஸ்தோய், தாஸ்தாவ்ஸ்கி முதல் கார்லோஸ் ஃபூயண்டஸ், மரியோ வர்காஸ் லோஸா வரை, சால் பெல்லோ முதல் கர்ட் வொன்னகட் வரை யாருடைய ஆக்கத்தை வேண்டுமானால் எடுத்து வாசிக்கலாம். மறுபக்கதின் மறுபக்கத்தின் மறுபக்கம், பூனையின் பசி, புலியின் ரத்த வெறி எதை பேசினாலும் இலக்கியத்தின் இயக்கம் மனிதனின் ஆன்ம வேட்கையை தூண்டுவதுதான். அதிகாரத்திற்கு சாமரம் வீசுவது அல்ல.

ஆனால் நம்மாளின் பிரச்சினையே வேறு. அவர் என்ன புரிந்துகொள்கிறார் என்றால், பாவம் போலீஸ்காரர்கள்தான் வேறு என்ன செய்வார்கள். திருட்டு அதிகமானால் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் வரும். எல்லா திருட்டையும் போலீஸால் தடுக்க முடியாது (திருட்டுப் பசங்க என்ன சொல்லிட்டா திருடராங்க?). பல நிர்ப்பந்தங்களுக்கு நடுவில் ஐந்து பேரை சுட்டுக்கொல்லச் சொன்னால் முடியாது என்றா சொல்ல முடியும்?

அதனால் என்ன செய்கிறார், “குடிமகனாகவும்” “எழுத்தாளனாகவும்” உண்மையை விசாரிக்கிறார். “இந்தத் துப்பாக்கிச்சூடு விஷயத்தில் ஒரு சாதாரணக் குடிமகனாகவும், எழுத்தாளனாகவும் நான் உண்மையை அறிந்துகொள்ள முயன்றேன்.” அடேயப்பா! மனித உரிமைக்காரர்களெல்லாம் பத்து பேராகப் போய் போலீஸிடம் வாதாடி பொதுமக்களிடம் விவாதித்து ஏதேதோ செய்வதை இப்படி எழுத்தாளன் சும்மா உட்கார்ந்தமானிக்கு செய்கிறார் என்று பாருங்கள் (கொஞ்சம் மாமல்லன் பாதிப்பு வருகிறது). அப்படி அவர் என்ன உண்மையை கண்டு பிடித்தார்?

வங்கிக் காமிராவில் காவல் துறையின் ரகசிய பதிவுகளில் உள்ள ஒரு முகம் பதிவாகியுள்ளது. அதை வெளியிடுகிறது. அநேகமாக ஒரு பாலியல் தொழிலாளியிடமிருந்து துப்பு கிடைக்கிறது. போலீஸ் சென்று அவர்களை கைது செய்து கூட்டிச்செல்கிறது. அப்போது மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. “திருப்பிக் கொண்டுவந்து அறைக்குள் குப்புற வீழ்த்தி சுட்டுத்தள்ளியது. இந்தச் சித்திரம் உண்மையாக இருக்கலாமென நான் நினைக்கிறேன்.” இப்படியாக முடிகிறது உண்மையறிதல்.

இதுதான் உண்மையென்றால் அற உணர்வு பொங்கி எழவேண்டாமா இந்த அநீதிக்கு எதிராக? பாங்கில் பணம் திருடியதற்காக உயிரையே பறிக்க முடியுமா என்று ஒரு நாகரீக மனம் பதற வேண்டாமா? சேசே. அதெல்லாம் ஒற்றைப்பார்வையாளர்களின் உணர்ச்சிகள். எழுத்தாளன் மறுபக்கம் பார்ப்பவனல்லவா. பார்க்கிறார் ஜெயமோகன்,

காவல்துறையால் திருட்டுகளை மொத்தமாக தடுக்க முடியாது. அதனால் திருடர்களுக்கும் காவல்துறைக்கும் புரிதல் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் கூட ஒரு புரிதல் இருக்கிறது. இந்த அளவு சட்டத்தை மீறிக்கொள்ளுங்கள். நாங்கள் விட்டுவிடுவோம். அவ்வப்போது எங்களுக்கும் சில ஆட்களை பிணையாகக் கொடுங்கள். நாங்கள் அதை வைத்து எங்கள் வேலைக்குக் கணக்குக் காட்டிக்கொள்கிறோம். இந்த உடன்படிக்கையில் சிக்கல் எப்போது வருகின்றது என்றால் எல்லைகள் மீறப்படும்போது. இந்த பீஹார் திருடர்கள் அடிக்கடி திருடத் தொடுங்குகிறார்கள். அவர்களை முறைப்படி கைது செய்து வழக்குப் போட்டால், ஜாமீன் வாங்கிக்கொண்டு தப்பித்து பீஹார் போய்விடுவார்கள். அங்கே போய் பிடிக்க முடியாது, அந்த தைரியத்தில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக திருடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கவேண்டுமென்றால் வேறு என்ன வழி? ஐந்து பேரை சுட்டுத்தள்ளினால்தான் மற்ற பீஹார் திருடர்களுக்குப் புரியும். தமிழ்நாட்டில் திருடக்கூடாது என்று. “அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்.”

இப்படி யதார்த்தத்தை புரிந்துகொள்வதுதான் இலக்கியம். அதைவிட்டுவிட்டு மனித உயிரின் மதிப்பு, சமூக ஏற்றத்தாழ்வு, சுரண்டலின் மீது எழுப்பப்படும் சொத்துரிமை, போலீஸ்காரர்களை வேட்டை நாய்களாக்கும் ஆளும் வர்க்கம் இதையெல்லாம் குறித்து யோசித்தால் இந்த மறுபக்கத்தின் மறுபக்கம் புரியுமா? “ஓர் எழுத்தாளனாக நான் என்ன செய்யவேண்டும்? எது சரி எது தவறு என சொல்வதற்கு முன்னால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அல்லவா புரிந்துகொள்ளவேண்டும்? மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா? நான் இந்த தர்மசங்கடப்புள்ளியை முதலில் முன்வைக்கவேண்டும். அதில் இருந்து மேலே செல்லமுடிந்தால் செல்லவேண்டும். மாறாக, இந்த மனித உரிமையாளர்களின் மேலோட்டமான வாதங்களை ஏற்று நானும் கோஷமிட்டால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆனால் அதற்கு எழுத்தாளனாகிய நான் எதற்கு? அதைத்தான் அவர்களே செய்கிறார்களே?”

சரி, இப்போது எழுத்தாளினின் சிறப்பான இடத்தையும், இலக்கியத்தின் புனிதப் பணியையும் கூறியாகிவிட்டது. போலீஸ் எப்படித்தான் பீஹாரிகள் திருடுவதை நிறுத்த முடியும்? நாலு பேரை கொன்றால்தான் என்ற “தர்ம-சங்கடத்தை” புரிந்துகொண்டு மேலே செல்லவேண்டியது இலக்கியம். அதற்கு மேற்படியில் எதற்கும் நாலு பீஹாரிகளை அவ்வப்போது தர்ம அடிபோட்டு கொன்றால் திருட மாட்டார்கள் என்ற தர்ம-சங்கடத்தையும் இலக்கியம் சந்திக்கும். இப்படியெல்லாம் சொன்னால் போலீஸ் சுட்டது நியாயம் என்று சொல்கிறீர்களே என்று மனித உரிமை கும்பல் திட்டினால் என்ன செய்வது? எனவே கடைசியில் முன் ஜாமீன். அதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். அதன் பிறகு யார் ஜெயமோகனை விமர்சித்தாலும் அவர்கள் “இலக்கியத்தின்” நுட்பம் தெரியாதவர்கள் ஆகிவிடுவார்கள் அல்லவா?

“உண்மை முக்கியம் என நினைத்து நான் இதில் உள்ள உண்மையைப் பேசப்போனால் அது மனித உரிமையாளர்களால் விரும்பப்படாது. நான் ’பிற்போக்கானவன்’, ‘சமூக அமைப்பின் குரலாகப் பேசுபவன்’, ‘மனிதாபிமானமில்லாதவன்’ என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கெல்லாம் விளக்கம் அளித்தே நான் ஓய வேண்டியிருக்கும்.
இந்தக் கட்டுரையில் நான் ஒற்றைப்படை நிலைப்பாடு எடுக்காத காரணத்துக்காகவே என்னென்ன வசைகள் வருகின்றன என்று கவனியுங்கள். இங்கே எழுத்தாளனை அவனுடைய படைப்புகளை வாசிக்காத ஒரு பெரும் கும்பல் எப்போதும் வசைபாடிக்கொண்டே இருக்கிறது.”

நானும், இதைப்படித்து லைக் போடும், ஆதரித்து கமெண்ட் போடும், பகிர்ந்து கொள்ளப்போகும் அனைவரும் எழுத்தாளனை, படைப்புகளை புரிந்துகொள்ளாத கும்பலில் சேர்ந்துவிடும் மோடி மஸ்தான் வித்தையும் நிகழ்ந்துவிட்டது.

இலக்கியம் எந்த காலத்திலும் இவ்வளவு கேவலப்பட்டதில்லை!

யூமா வாஸுகி ஒரு சிறந்த எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல நல்ல படைப்புகளை தந்தவர், லெளகீக வாழ்க்கையில் சகல வசதிகளையும் அதிகரித்துக்கொண்டு இலக்கியமும் செய்யும் சாமர்த்தியம் இன்றி இலக்கியத்தின் அழைப்புக்காக லெளகீக வாழ்க்கையை புறந்தள்ளி அலையும் தீவிர மனநிலை கொண்டவர். அவர் வேளச்சேரி கொலைகளுக்கு நிகழ்த்திய எதிர்வினையை அ.மார்க்ஸின் வார்த்தைகளில் படியுங்கள். அவர் தொலைபேசியில் மார்க்ஸைக் கூப்பிட்டு அழுதிருக்கிறார். அவருக்கெல்லாம் இன்னமும் “இலக்கியம்” புரியவில்லையோ?


பதிவு-2

ஜெயமோகனின் வேளச்சேரி கொலைகள் பற்றிய கட்டுரையை படித்ததில் நானும் உணர்ச்சிவசப்பட்டு, நான் அதற்கு முந்தைய குறிப்புகளில் சொன்னபடி உரையாடல் போக்கை கடைபிடிக்காமல் கோபமாக எழுதிவிட்டேன் என்று ஒரு நண்பர் சொன்னார். அதில் என் நடை சோபிக்கவில்லை என்றும், இல்லை தெளிவாகத்தான் இருக்கிறது என்றும், நானும்கூட இப்படிப்பட்ட எதிர்நிலை அணுகுமுறையை (polemical approach) மேற்கொள்ளக் கூடாது என்றும் எதிர்வினைகள் வந்தன. அங்கு வந்த சில கேள்விகளும் சில விஷயங்கள் தெளிவாகக் கூறப்படவில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின. சரி மீண்டும் ஒருமுறை வேறுமாதிரி எழுதிப்பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இதோ ஜெயமோகனின் வாக்குமூலம்- Take-2. (அவசியமிருந்தால் அடுத்த டேக்கிற்கும் போகலாம்.)

பல படைப்பாளிகளும் சுட்டிக்காட்டியிருப்பதுபோல, ஜெயமோகனும் தான் இரண்டு தளங்களில் இயங்குவதை சுட்டுகிறார். 1) குடிமகன், 2) எழுத்தாளன். ஒரு குடிமகன் என்ற தளத்தில் அவருக்கு குடியுரிமை, மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் அவர் மனித உரிமைகளுக்காக போரிடுபவர்களை வணங்கி நிற்கிறார். ஆனால் எழுத்தாளன் என்ற முறையில் அவர்களைப் போன்றே அவர் நிலைபாடு எடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு கூடுதலாக கடமைகள் இருப்பதாக அவர் நினைக்கிறார். அது எந்த ஒரு பிரச்சினையிலும் மறுதரப்பை பார்ப்பது என்பதுதான் அது. மறுதரப்பின் மறுதரப்பின் மறுதரப்பு என்று அது எல்லையற்று நீள்கிறது.

பொதுவாக இந்த குடிமகன்/ எழுத்தாளன் பிரிவை எப்படிப் பார்ப்பார்கள் என்றால் குடிமகன் குடியுரிமை, சட்டம், சமூக ஒழுங்கு என்ற அளவில் நின்றுவிடுவான். எழுத்தாளன் அல்லது இலக்கியம் அதையும் கடந்து அதிருப்தியின் களங்களில் இயங்குவது இயல்பு. அதாவது குடிமகன் உடனடி லெளகீக ஏற்பாடுகளின் பாதுகாப்பில் திருப்தியுறுவான். எழுத்தாளனோ இலட்சியங்களை அடுத்து கட்டத்திற்கு எடுத்துச் செல்பவன் அதனால் அவன் சுலபத்தில் திருப்தியடைய முடியாது. இதை சிறப்பாக விளக்கும் கட்டுரை ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், சுசி தாரு என்ற கல்வியாளர்/விமர்சகர் எழுதிய “Citizenship and its Dicontents” என்ற கட்டுரையை சொல்லலாம். இது
A Question of Silence: The Sexual Economies of Modern India, Edited by Mary E. John and Janaki Nair என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் சரோஜ் பதக் என்ற குஜராத்தி எழுத்தாளரின் வாழ்வையும், எழுத்தையும் இந்தக் கோணத்தில் பரிசீலிக்கிறார். நான் ஒரு தமிழ் கட்டுரையில் இதை குடியுரிமைப் பிரக்ஞை x அதிருப்திப் பிரக்ஞை என்று எழுதியிருந்தேன். பார்க்க: http://www.shobasakthi.com/shobasakthi/?p=556

வேளச்சேரி சம்பவத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், போலீஸ்காரர்கள் எப்படி இரக்கமின்றி கொலை செய்தார்கள் என்பதை மட்டுமே பேசுவார்கள். அதற்கான நீதி வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை தண்டிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள். ஆனால் இலக்கியவாதியின் பணி அதைவிட சிக்கலானது. அவன் அந்த போலீஸ்காரர்களின் நிர்ப்பந்தங்களையும் புரிந்துகொள்வான்; அவர்களுக்குக் கட்டளையிடும் ஆட்சியாளர்களின் மனோவியலையும் புரிந்துகொள்வான். அதனால் அவனுக்கு இந்தப் பிரச்சினையின் தீர்வு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தண்டிப்பதுடன் நின்றுவிடாது; அதையும் தாண்டி சமூகத்தில் புரையோடியிருக்கும் பிரச்சினைகளை குறித்து அதிருப்தி கொள்ளும் மனம் செயல்படத் துவங்கும். அவனுடைய புதினத்தில் போலீஸ் கான்ஸ்டபிள், துப்புக்கொடுக்கும் பாலியல் தொழிலாளி, பீஹார் தொழிலாளர்கள் மற்றும் திருடர்கள், அவர்கள் சமூகப் பின்னணி, போலீஸ் உயரதிகாரி, வணிகர்கள், ஊடக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகார வர்க்கம் அனைவரது பார்வைக்கோணங்களும் பலங்களும், பலவீனங்களும் விரியும். அவனுடைய புதினம் இந்தக் கொலகளின் பின்னே இயங்கும் சமூக இயந்திரத்தின் கொடூர அம்சங்களை இருள்வெளிகளை கண்டறியும். அதிகாரத்தையும், சொத்துக்களையும் நோக்கி மனிதனை செலுத்துவது எது? அந்த விசைகள் சமகாலத்தில் எந்த வடிவங்களில் இயங்குகின்றன என்பதை அவன் புதினம் அலசிப் பார்க்கும். இச்சையின் எத்தகு மாய வடிவங்கள் அதிகார வெறிக்கும், சொத்து குவிப்பிற்கும் இட்டுச்செல்கின்றன என்றெல்லாம் ஆராயும். யோசாவின் Conversation in the Cathedral படித்திருக்கிறீர்களா? அதை யாரும் தமிழில் மொழிபெயர்க்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது.

தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை எடுத்துக்கொள்ளுங்கள். ராஸ்கோல்நிக்காவ் முதலில் என்ன முடிவு செய்கிறான்? உண்மையான தேவையுள்ள, மேம்பட்ட குணங்களுடைய சமூக மனிதன் அவன் தேவைக்காக அனாவசியமாக செல்வத்தை பதுக்கி வைத்திருக்கும் கீழ்மைக் குணமுடைய ஒருவரை கொன்றுவிட்டு செல்வத்தை கைப்பற்றலாம் என்று நினைக்கிறான். தத்துவரீதியாக இந்த செயல் நியாயமானது என்று நம்பத் தொடங்குகிறான். ஆனால் அந்தக் கொலையை செய்த பிறகு அவன் மனம் அதன் குரூரத்தை உணர்கிறது. குற்ற உணர்ச்சி அவனை பீடித்து ஆட்டுகிறது. நாவல் கலையின் சிகரமென போற்றப்படும் அந்த நாவலில் மறுபக்கத்தின் மறுபக்கத்தின் மறுபக்கம் விரியும் விதத்தில் படிக்கும் வாசக மனம் நெருப்பில் புடம்போடப்பட்டு விகசிக்கும் அற்புதம் அல்லவா இலக்கியத்தின் மேன்மை? கேரளாவில் நக்ஸலைட் போராளி வர்கீஸை மேலதிகாரிகளின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்ற ராமச்சந்திரன் நாயர் இருபத்தியெட்டு ஆண்டுகள் மனம் புழுங்கி பின் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மேலதிகாரிக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்தாரே, அங்கேதானே செயல்படுகிறது இலக்கியத்தின் தார்மீகம்?

சுருக்கமாகச் சொன்னால் சட்டம், குடியுரிமை, மனித உரிமை சொல்லாடல்களுக்கும் இலக்கியத்திற்கும் வேறுபாடு இங்கேதான் இருக்கிறது. அவற்றினால் மனித உரிமைகளை மீறும் போலீஸ்காரர்களுக்கு தண்டனை வாங்கித்தரத்தான் முடியும். இலக்கியத்தால் அதிகார வர்க்கத்தின் மனோவிகாரங்கள், சமூக அமைப்பில் உறைந்திருக்கும் வன்முறை ஆகியவற்றையும் வெளிப்படுத்தி அந்த போலீஸ்காரர்களுக்கு பின்னாலும் அதே குடியுரிமை, சொத்துரிமை நலன்கள்தான் செயல்படுகின்றன என்ற முரண்பாட்டை சுட்டிக்காட்ட முடியும். மனித உரிமை ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் பிரியும் எல்லை பரிகாரம் என்ன என்பதை சிந்திப்பதில்தான், அதில் மனித உரிமை வாதிகள் உடனடி எல்லையுடன் நிற்பார்கள். இலக்கியவாதிகள் குற்றத்தின் அடி ஆழத்திற்கு சென்று ஆன்ம பரிசோதனை செய்வார்கள்.

ஆனால், தோழர்களே, நன்றாக கவனியுங்கள். காவலர்கள் திருடியதாக கூறப்படுபவர்களை விசாரணையின்றி நேரடியாக சுட்டுக்கொல்வதை மனித உரிமைக்காரர்கள், இலக்கியவாதிகள் இருவருமே கண்டிக்கத்தான் செய்வார்கள். அதற்கு என்ன தீர்வு என்பதில்தான் இருவரும் வேறுபடுவார்கள்.

“கொல்வதைத்தவிர வேறு வழியில்லை” என்ற மறுபக்கம் இலக்கியம் விசாரணை செய்யும் மறுபக்கம் அல்ல. பாமரத்தனமும், சர்வாதிகார இச்சையும் வாசம் செய்யும் பக்கம் அது (ஜெயகோகன் வாசகர் நிர்மல் எவ்வளவு பணிவாக, அழகாக அதை சுட்டிக்காட்டியுள்ளார் என்பதை இந்த சுட்டியில் பாருங்கள்: http://www.jeyamohan.in/?p=25885 . அந்த டீக்கடை பேச்சின் சாத்தியம் (“இவனுகள போட்டுத்தள்ளுனாதான் அடங்குவாங்க”) மானுட நாகரீக மேம்பாட்டிற்கு எதிரான பக்கம். அங்கே இலக்கிய வேட்கை செத்துப்போன அதிகார மமதை நிறைந்த சாணக்கிய மனம்தான் போகும். நல்லவர்கள் போகமாட்டார்கள். எனவே “விசாரணையின்றி கொல்லக்கூடாது என்ற இலட்சியத்திற்கும்” “விசாரணையின்றி கொன்றாகவேண்டும் என்ற யதார்த்திற்கும்” இடையில் ஜெயமோகன் கட்டி எழுப்பும் முரண்பாடு அல்லது இருமை எதிர்வும், அதில்தான் இலக்கியம் வாசம் செய்கிறது என்பதும் இதுவரை உள்ள இலக்கியக் கோட்பாடுகளில் கேள்விப்படாதது. வேண்டுமானால் இன்று தமிழகம்/கேரளா/இந்தியா அல்லது உலகில் உயிருடன் இருக்கும் பெரும் படைப்பாளிகள், விமர்சனக் கோட்பாளர்கள் அனைவருக்கும் எழுதிக்கேட்போம். இதற்கென்று ஒரு குழு அமைப்போம். நிதி திரட்டி சர்வதேச அளவில் பேட்டிகள் எடுப்போம். ஜெயமோகனும், அவர் வாசகர்களும் தயாரா?

அடுத்து ஒரு குடிமகன் என்ற அளவிலாவது கொல்லத்தான் வேண்டும் என்ற “யதார்த்தவாத நிர்ப்பந்தத்தை” ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று பரிசீலிப்போம். இங்கேதான் பிரச்சினை மிகவும் மோசமாக இருக்கிறது. பீஹாரிலிருந்தும், பிற வட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் தமிழக்த்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல தமிழர்களும் பல மாநிலங்களில் இருக்கலாம். இவர்கள் ஏன் இப்படி மாநிலம் விட்டு மாநிலத்திற்கு ஏற்றுமதி/இறக்குமதி செய்யப்படுகிறார்கள் என்றால் மொழி வித்தியாசம் காரணம். அவர்களுக்குத் தெரியாத ஊரில் ஆடு மாடுகளைப் போல கொட்டில்களில் அடைபட்டு வாழ்வது சுலபம். ஒரு ghetto போல அவர்களை வைத்துவிட்டால் வேலை வாங்குவது சுலபம், அதிக நேர உழைப்பு, குறைந்த ஊதியம் இதில்தானே முதலீட்டியத்தின் ஆதார மூச்சு இருக்கிறது. இதற்காகத்தான் இந்த ஏற்றுமதி இறக்குமதி நடக்கிறது. அதே சமயம் அவர்கள் குற்றத்தில் ஈடுபடக்கூடியவர்கள் என்ற பீதியை ஏற்படுத்தி உள்ளூர் சமூகத்திலிருந்து அவர்கள் அந்நியப்படுத்தப்படுகிறார்கள். அதனால்தான் வேளச்சேரி கொலைகளுக்குப் பிறகு அவர்களைப் பற்றிய கணக்கெடுப்பும், கண்காணிப்பும் நிகழ்கிறது.

ஜெயமோகன் ஒரு குடிமகனாக இதைப்பற்றி பேசுவதில்லை, அதற்குப் பதிலாக திருச்சி ராம்ஜி நகரில் இருந்த கும்பல் போல பீஹாரிலும் உள்ள தொழில்முறை திருட்டு சமூகங்களைப் பற்றி பேசுகிறார். இவர்களது செயல்முறை வித்தியாசமானது. இவர்கள் எந்த ஊரிலும் தங்க மாட்டார்கள். ஒரு கொள்ளையினைச் செய்துவிட்டால் உடனே கிடைத்த வாகனங்களில் ஐநூறு கிலோமீட்டராவது தள்ளிச் சென்று விடுவார்கள். இவர்கள் ஒரு வங்கியை சென்னை புறநகரில் கொள்ளையடித்தால் அடுத்த நாள் பெங்களூரில்தான் இருப்பார்கள். குறைந்த பட்சம் ராம்ஜி நகர் அணுகுமுறை அதுதான் என்று நான் விசாரித்த அளவில் சொல்ல முடியும். வீடு எடுத்து தங்கி சுற்றுப்புறத்தில் ஒவ்வொரு வங்கியாக கொள்ளை அடித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

எப்படியோ, தொழிலாளர்களோ அல்லது தொழில்முறை திருடர்களோ. போலீஸ் அவர்களைப் பிடித்தால் என்ன செய்யும்? விசாரணை. போலீஸ் விசாரணை என்பது மரணத்தை விட கொடுமையானது என்பது குழந்தைக்கும் தெரியும் (எத்தனை படங்களில் பார்க்கிறார்கள்). அந்த விசாரணையில் உண்மையிலேயே திருட்டுக்கும்பலாக இருந்தால் வேறு எத்தனை குழுக்கள் கிளம்பி வந்துள்ளன போன்ற தகவல்கள் கிடைக்கும். எப்படியும் ஒரு குழுவை பிடித்த உடனேயே மற்றவர்கள் ஓடி விடுவார்கள். சிறுது காலம் வர மாட்டார்கள். தமிழகத்தில் எத்தனை வங்கிக் கிளைகள் செய்ல்படுகின்றன? ஒரு ஆண்டில் எவ்வளவு திருட்டு நடக்கிறது? நிலமை என்ன கட்டுக்கடங்காமலா போய்விட்டது? மேலும் பதினான்கு இலட்ச ரூபாய் திருட்டு என்பதெல்லாம் என்ன நாட்டையே சீர்குலைத்து விடுமா? வங்கியில் நடக்கும் ஊழலே ஆயிரக்கணக்கான கோடிகளை எட்டுமே? அது தவிர விஜய் மல்லையாக்கள் வேறு இருக்கிறார்களே? அதிலெல்லாம் சீர்குலையாத பொருளாதாரமா இந்தச் சிறு கொள்ளையர்களின் சில்லறைத் திருட்டினால் நிகழப்போகிறது? கொள்ளை நடந்தவுடனேயே எல்லா செய்தித்தாள்களிலும் வங்கிகளின் பாதுகாப்பில் காட்டப்படும் மெத்தனப் போக்கு சுட்டிக்காட்டப்பட்டதே? ஒரு குடிமகனாக ஜெயமோகன் அதையெல்லாம் படிக்க வேண்டாமா? எந்த அடிப்படையில் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வருகிறார்?

இங்குதான் எனக்கு ஜெயமோகனை எப்படி பகுப்பது என்பதில் சிக்கல் வருகிறது. அவருக்கு படைப்பெழுத்தில் உள்ள கணிசமான திறமை அனைவரும் அறிந்தது. மாடன் மோட்சம் கதையின் பலவீன்ங்களை விமலாதித்த மாமல்லனின் விமர்சனம் நிறுவிய பிறகும், அவரது எழுத்துக்களில் ஆங்காங்கே தென்படும் படைப்பாற்றல் புறக்கணிக்கத்தக்கதல்ல. எந்த காரணத்தினால் பேச மாட்டேன், பேச மாட்டேன் என்று கூறிக்கொண்டே அரசியல் பேசுகிறார்? அறியாமையால் அகம்பாவம் பிடித்து எதையாவது எழுதி மாட்டிக்கொள்கிறாரா? அல்லது இப்படியெல்லாம் பிற சிந்தனையாளர்களை சீண்டிவிட்டால் தன்னைப்பற்றி எழுதுவார்கள் என்ற மனச்சிக்கலுக்கு ஆட்பட்டிருக்கிறாரா? சிறு குழந்தைகளை சிறுது நேரம் கவனிக்காமல் விட்டால் கவனத்தை ஈர்ப்பதற்காக அழுவார்கள், எதையாவது போட்டு உடைப்பார்கள். அது போன்ற மனோபாவத்தினால் தான் தொடர்ந்து சர்ச்சைக்கு ஆட்பட வேண்டும் என்று நினைக்கிறாரா? அல்லது ஏதோ வலதுசாரி/ அரசு நிறுவனங்களில் தொடர்பு வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் எழுதினால் எவ்விதமான எதிர்வினைகள் வருகின்றன, மனித உரிமைகளுக்காக எத்தனை பேர் பேசுகிறார்கள் என்பதை புள்ளிவிவரம் சேகரித்துத் தருகிறாரா? காமடி பீஸா, வில்லனா? உண்மையிலேயே விவாதத்திற்குரியது அது.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியா முழுமையாக தன்னை கட்டற்ற முதலீட்டிய ஆட்டத்திற்குள் ஈடுபடுத்திக்கொள்ள தயாராக இருக்கிறது. அதற்கு இங்குள்ள இயற்கை வளங்களையும், மனித ஆற்றலையும் மிகக் குறைந்த விலையில் சுரண்டி எடுப்பது அவசியம். இச்செயல்பாட்டிற்கு பெரிய தடையாக இருப்பவர்கள் மனித உரிமை ஆர்வலர்கள், மாவோயிஸ்டுகள் போன்ற இடது சாரி அமைப்புகள்/சிந்தனையாளர்கள், தன்னார்வ குழுக்கள். அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள சவால் வசதியான நகர்புற, படித்த சுதந்திரவாதிகளும் இவர்களுக்கு ஆதரவாக செயல்படத் துவங்குவார்களா என்பதுதான். மனித உழைப்பும், பழங்குடியினர் இருப்பிடம் போன்ற ஆதார வளங்களும் நியாமின்றி சுரண்டப்படக்கூடாது என்பதற்காக படித்த நகர்புற சுதந்திரவாதிகளும் போராடும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அருந்ததி ராய், அ.மார்க்ஸ், ஞாநி உள்ளிட்ட என் போன்றோரின் நிலைபாடு. அப்படி நடக்கக்கூடாது நவீன முதலீட்டிய இந்தியாவின் வளர்ச்சிக்காக ஆதிவாசி/உழைக்கும் மக்கள் தொகுதிகள் தியாகம் செய்யப்படவேண்டும் என்று நினைக்கும் வலதுசாரி மனோபாவத்திற்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ், பிஜேபி, சிதம்பரம், நரேந்திர மோடி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஜெயமோகன் போன்ற வலதுசாரி தேசியவாதிகளும் செயல்படுகிறார்கள் என்றும் தோன்றுகிறது.

இலக்கியத்தின் பேரால் இலக்கியத்திற்கு தொடர்பற்ற அரசியல் தர்க்கத்தை ஜெயமோகன் நியாயப்படுத்துவது சாதாரணமாக புறக்கணிக்கத்தக்க விஷயமல்ல. இது ஒரு முக்கியமான வரலாற்றுத் தருணம். அவர் ஏதோ இலக்கியவாதி என்று நம்பி, அவர் கதைகளை படித்து புல்லரித்து அவர் பின்னால் செல்லும் தோழர்கள் அவருடைய சிந்தனைகளின் பாதையின் இறுதியில் மனித உரிமைகளையும், குடிமை உரிமைகளையும் முற்றிலும் மறுக்கப்போகும் ஏதேச்சதிகாரம் காத்திருப்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவ்வளவு சொன்ன பிறகும் இது தனி மனித விரோதம், அவர் மேல் காழ்ப்பு, இடது சாரி பிறழ்வு என்றெல்லாம் நினைத்துக் கொள்பவர்களுக்கு எதிர்காலம் அனைத்தையும் புரிய வைக்கும். ஜெயமோகனே தெரியாத்தனமாக வீம்பிற்காக இதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தால் பேசாமல் உண்மையான இலக்கியவாதியாக மாறி இந்த அரசியல் எல்லாம் வேண்டாம் என்று செயல்பட்டால் காலத்தின் பழியிலிருந்து தப்பிக்கலாம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

(இந்தக்கட்டுரையில் குடிமகன், எழுத்தாளன் போன்ற சொற்களிலும் வேறு வினைமுற்றுகளிலும் ஆண்பால் விகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றைத் தவிர்க்க முயற்சிப்பேன் என்றாலும், ஜெயமோகன் எழுத்தை ஒட்டி எழுதுவதால் இவற்றை பயன்படுத்தியுள்ளேன்)


பதிவு-3


(நண்பர்களே! “விடுங்கள் ராஜன்-ஏன் இதையே எழுதிக்கொண்டு” என்று ஆயாசமடையாமல் படியுங்கள். எழுத, எழுதத்தான் தெளிவு பிறக்கும்; பேச பேசத்தான் தீர்வு வரும். ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரை 4000 வார்த்தைகளாவது இருக்கவேண்டும். என்னுடைய மூன்று குறிப்புகளும் சேர்த்தாலும் அவ்வளவு வராது. இந்த மூன்றாவது குறிப்பை தங்கள் ஆதர்ச எழுத்தாளருக்காக, அவர் சிந்தனைகளை ஏற்காத பலர் பங்குகொள்ளும் திரியில் வந்து, புனை பெயரிலும், நிஜப்பெயரிலும் கருத்துக்களை பதித்த உரையாடல் மாண்பிற்காக, ஜெயமோகன் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த குறிப்பின் அணுகுமுறை தர்க்கம் சார்ந்தது என்றாலும் எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்; ஆனால் கவனமாக படிக்கவேண்டும் ஜெயமோகனின் வரிகள் இட்டாலிக்ஸில் தரப்பட்டுள்ளன)

தமிழில் தர்க்கம் என்பது தமிழ் சினிமா நகைச்சுவைக்காட்சிகளில்தான் சிறப்பாக வெளிப்படுகிறதோ என்று தோன்றுகிறது. வாழைப்பழ ஜோக்கில் “ஒன்றும் இதுதான், இன்னொன்றும் இதுதான்” என்று சாதிப்பது எவ்வளவு சுவாரசியமான தர்க்கச்சிக்கல்! மற்ற பல சமயங்களில் உணர்ச்சி தர்க்க செயல்பாட்டை தடுத்துவிடுகிறது. ஜெயமோகனுக்கு தர்க்கம் சரியாக வருவதில்லையென்றாலும், மிகவும் பிடிக்குமென்று நம்புகிறேன். விஷ்ணுபுரம் இரண்டாவது சர்க்கமான ஞானசபை விவாதத்தை எவ்வளவு சுவாரசியமாக எழுதியிருப்பார். படிக்க, படிக்க தெவிட்டாத அற்புதமான பக்கங்கள்.

மூன்று வியக்திகளில் இருப்பை அணுகுவோம். முதலாவது, அனுமானம். இது போதுமான நேரடி புலன் அனுபவமின்றி செய்யும் யூகம் அல்லது கொள்ளும் மனச்சித்திரம். இரண்டாவது பிரத்யட்சம். இது நம் புலன்களுக்கு அகப்படுவது. மூன்றாவது தர்க்கம். நம் சிந்தனை மற்றும் செயல்களை வழிநடத்துவது.

இந்த இடத்தில் விஷ்ணுபுரம் ஞானசபையில் செய்வது போல எனது பிடகங்களை கூறிவிட வேண்டும். பெயர் உதிர்க்கிறேன் என்றோ, என்னை பெரிதுபடுத்திக் காட்டிக்கொளவதற்கோ என்று நினைக்காதீர்கள். நாலு புத்தகம் படித்ததால் யாரும் பெரிய ஆளாகிவிடமுடியாது. என்ன எழுதுகிறார்கள், எப்படி எழுதுகிறார்கள், எப்படி செயல்படுகிறார்கள் என்பதில்தான் அவர்கள் வாசிப்பு துலக்கமுறவேண்டும். இல்லாவிட்டால் ஒருவர் எத்தனை நூல்கள் படித்துள்ளார் என்பதற்கும், எத்தனை உள்ளாடைகள் வைத்துள்ளார் என்பதற்கும் சமூகரீதியாக ஒரே அளவிலான முக்கியத்துவம் அல்லது முக்கியமின்மைதான் இருக்க முடியும். என்னுடைய எழுத்துக்கள் எல்லாமே சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ் என்ற அமெரிக்க தத்துவியலாளர், குறியியக்கத் தத்துவத்தின் மூல ஆசானின் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாவது. நான் பிற ஐரோப்பிய தத்துவ சிந்தனையாளர்களை பர்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் அணுகுவதால் உருவாவது. இவை எவ்வளவு பழையவை அல்லது புதியவை என்பது முக்கியமல்ல. இந்த சிந்தனைகளின் அடிப்படையில் நாம் எப்படி நம்முடைய பிரச்சினைகளை அணுகப் போகிறோம், செயல்படப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

மீண்டும்: மூன்று வியக்திகளில் இருப்பை அணுகுவோம். முதலாவது, அனுமானம். இது போதுமான நேரடி புலன் அனுபவமின்றி செய்யும் யூகம் அல்லது கொள்ளும் சித்திரம். இரண்டாவது பிரத்யட்சம். இது நம் புலன்களுக்கு அகப்படுவது. மூன்றாவது தர்க்கம். நம் சிந்தனை மற்றும் செயல்களை வழிநடத்துவது.

இப்போது ஒரு நகைச்சுவை காட்சியை பார்ப்போம். “காதலில் சொதப்புவது எப்படி?” என்ற படத்தில் வந்தது. அமலா பால் சித்தார்த்திற்கு முகப்புத்தகத்தில் நிறைய பெண்கள் சிநேகிதிகளாக இருப்பதை பார்த்து சந்தேகம் கொள்கிறார். சித்தார்த் ஒருமுறை அமலா பாலின் அலைபேசியை பார்த்து அதில் நிறைய ஆண் நண்பர்களின் பெயர்கள் இருக்க, அவர்களுடன் அமலா பால் சுற்றுவதாக நினைக்கிறார். அதை அமலா பாலிடம் கேட்க இருவருக்கும் பெரிய சண்டை வருகிறது. மத்தியஸ்தத்திற்கு ஒரு நண்பனிடம் போகிறார்கள். நண்பன் ஒவ்வொருவரது பிரச்சினையையும் கேட்டு அறிவுரை கூறுகிறான். அமலா பால் சித்தார்த்தின் முகப்புத்தக நட்புகளை சந்தேகப்படக் கூடாது. சித்தார்த் அமலா பாலின் அலைபேசியை எடுத்துப் பார்த்ததும், சந்தேகப்பட்டதும் தவறு; அவ்வாறு செய்யக்கூடாது. ஒரு வழியாக ராசி ஆகும் நேரத்தில் நண்பன் இன்னொரு அறிவுரை சொல்கிறான். அமலா பால் கண்ட பசங்களுடன் சுத்தக் கூடாது. இருவரும் சேர்ந்து அவனை அடிக்கப் பாய தியேட்டரில் ஒரே சிரிப்பு.

ஏன் சிரிக்கிறோம்? அவன் சொன்ன அறிவுரையில் தவறு இல்லையே? கண்ட பசங்களுடன் சுத்தக்கூடாது என்றுதானே கூறுகிறான்? இப்படி புரிந்து கொள்வோம். ஒரு பெண் கண்ட பசங்களுடன் சுத்தக் கூடாது என்பது ஒரு சமூக நடைமுறைத் தர்க்கம். அதை பொதுவாக கூறலாம். ஆனால் அப்போது பேசப்படும் குறிப்பிட்ட பிரச்சினையில் அது அனர்த்தமானது. காரணம் என்னவென்றால் அங்கே ஆண், பெண் இருவருக்குமே அனுமானம் சந்தேகம் என்ற வடிவில் இருக்கிறது. அதற்கு பிரத்யட்ச ஆதாரங்கள் முகப்புத்தக, அலைபேசி பெயர்கள். அந்த பிரத்யட்சத்தையும், அனுமானத்தையும் இணைத்து அவர்கள் குணசித்திரத்தை பற்றி தர்க்கரீதியான முடிவுக்கு வரக்கூடாது என்பதுதான் பிரச்சினை. அந்த பிரத்யட்சங்கள், அனுமானங்களை ஆதரிப்பதாக்க் கொள்ள முடியாது என்பதால் அங்கே எந்த தர்க்க ரீதியான முடிவும் சாத்தியமில்லை. இதை உணர்ந்ததும் சண்டை முடிந்தது. ஆனால் மத்தியஸ்தம் செய்யும் நண்பன் இந்த இடத்தில் பொது தர்க்கத்தை சொல்லும்போது அமலா பால் கண்ட பசங்களுடன் சுத்துவது பிரத்யட்சம் என்ற குறிப்பான அர்த்தம் வந்து விடுகிறது. விவஸ்தை கெட்ட நண்பனை நினைத்து சிரிக்காமல் இருக்க முடியுமா?

இப்படி ஒரு வாக்கியத்தை யோசித்துப் பாருங்கள்: “நீ என் நல்ல நண்பன். பல உதவிகள் செய்துள்ளாய் (என்பதனால்) நான் உன்னை இன்று “xxxxx” என்று திட்டினால் தவறில்லை, அது நியாயம் (என்றாலும்) நான் திட்டமாட்டேன்.” நண்பன் திட்டியதாக எடுத்துக்கொள்வானா? திட்டவில்லை என்று நினைப்பானா? திட்டுவது என்பது பிரத்யட்சம். திட்டுவதற்கான நியாயம் இருக்கிறது என்பது தர்க்கம். தர்க்கம் சரியாக இருக்கிறது என்று சொல்லும்போதே பிரத்யட்சம் நிகழ்ந்தது போலத்தான். மீண்டும் தனியாக திட்ட வேறு வேண்டுமா?

இப்போது வேளச்சேரி பிரச்சினைக்கு வருவோம். “ஜெயமோகன் ஒற்றைப்பட்டையாக நிலைபாடு எடுக்க முடியாது என்றுதானே சொல்கிறார். அவரை ஏன் மனித உரிமைகளுக்கு எதிரானவர் என்று சொல்கிறீர்கள்? அவர்தான் மனித உரிமை ஆர்வலர்களை மதிப்பதாக சொல்கிறாரே?” என்பதுதான் அவர் ஆதரவாளர்கள் குழப்பம்.

வேளச்சேரியில் என்ன நடந்தது எனபதற்கு காவல்துறை ஒரு விளக்கம் தருகிறது. அந்த விளக்கம் உள்முரண்களாலும், சில பிரத்யட்ச தடையங்களாலும் முழுவதும் ஏற்கும்படியாக இல்லை. மனித உரிமை ஆர்வலர்கள் காவலர்கள் திருடர்களென சந்தேகத்திற்கு உள்ளான ஐந்து பேரை விதிமுறைகளை மீறி சுட்டுக் கொன்று விட்டார்கள் என்று ஐயப்படுகிறார்கள். ஐயத்திற்கான ஆதாரங்களை திரட்டுகிறார்கள். விசாரணை தேவை என்கிறார்கள். ஐயம் வலுப்பெற, வலுப்பெற சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என்ற அனுமானம் பிரத்யட்சமாகவே கருதப் படுகிறது. அதனால் மனித உரிமைகளில் அக்கறை கொண்டோர் பதறுகிறோம்.

ஜெயமோகன் பிரத்யட்சத்திற்கும், அனுமானத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருக்கிறது என்பதால் காவல்துறையை ஒரேயடியாக ஏச வேண்டாம் என்று விகடன் தலையங்கம் போல கருத்து சொன்னால் அது பெரிய பிரச்சினையில்லை. ஏனெனில், அதுதான் பொதுவாக வலதுசாரிகள் சொல்வது.

ஆனால் ஜெயமோகன் சொல்வது வித்தியாசமானது. அவரே சில புலன் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் காவல்துறை அவர்களை குப்புறப்படுக்கவைத்து சுட்டுக்கொன்றதுதான் பிரத்யட்சம் என்று நம்புகிறார். நடந்தது சட்டத்தை, மனித உரிமைகளை மீறியது என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த இடத்தில் அவரால் காவல்துறையை கண்டிக்க முடியாததற்குக் காரணம் அவர் தர்மத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு தர்க்க முரணை காண்கிறார்.

“மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா? இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா?”

இந்த வரிகள் மிக முக்கியமானவை. அதாவது இந்த இரண்டு தர்க்கங்கள் மோதும் தர்மசங்கடம்தான் அவரது பிரச்சினை. இலக்கியம் (அதாவது எழுத்தாளர் ஜெயமோகன்) அந்த தர்மசங்கடத்தை எதிர்கொண்டு மேலே செல்ல வேண்டும். அந்த தர்க்கங்களை இந்த இரண்டு வரிகள் சொல்கின்றன. புரிந்துகொள்ள முயல்வோம்.

தர்க்கம் ஒன்று: “மனித உரிமைக்காகத் திருட்டை அனுமதிக்க முடியுமா?” அதாவது மனித உரிமைகளை காவல்துறை மீறக்கூடாது என்று பார்த்தால் திருட்டை அனுமதிக்க வேண்டிதான் வரும். இதற்கு அடிப்படையாக இருப்பது ஏற்கனவே அவர் புலன் அறிந்ததன் அடிப்படையில் கண்ட இன்னொரு பிரத்யட்சம் “அதாவது பிகாரி கொள்ளையர்களை தண்டிக்கவேண்டுமென்றால் சுட்டுக்கொலைசெய்யவேண்டும், வேறு எதுவுமே நடைமுறையில் சாத்தியமல்ல. இதுவே யதார்த்தம்”

இது மீண்டும் உலக அளவிலும், இந்திய அளவிலுமான பிரத்யட்சங்களால் சில பாராக்கள் கடந்து தர்க்க விதியாக மாறுகிறது.

“இதுதான் நானறிந்தது. உண்மை இதற்கு நெருக்கமாக எங்கோ உள்ளது. உலகம் முழுக்க ஆயுதமேந்திய அமைப்புசார் வன்முறையானது அரசுகளால் ஆயுதம் மூலமே எதிர்கொள்ளப்பட்டு வருகிறது என்பது ஓரு யதார்த்தம். அதை சட்டநடவடிக்கைகள் மூலம் ஒன்றும் செய்ய முடியாது. அதிலும் மாநிலங்கள் தனி நாடுகளாகவே செயல்படும் இந்தியாவில் வேறு ஒன்றுமே சாத்தியமில்லை என்பது காவலர் தரப்பு.”

தர்க்கம் இரண்டு: “இல்லை, நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்துசெய்யமுடியுமா?” அதாவது பீகாரிகளை சுட்டுக்கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பது நடைமுறைத் தேவை. இதற்காக மனித உரிமைகளை பாதுக்காக்கும் சட்டத்தை “ரத்து” செய்யவேண்டி இருக்கிறது.

இந்த வரிகளிலிருந்து தர்க்கக் கட்டமைப்பை வடித்தெடுப்போம். கொஞ்சம் கவனமாக பாருங்கள், ஜெயமோகன் கூறுவதன் நுட்பமான பரிமாணங்கள் எதுவும் தொலைந்து போகிறாதா என்று பாருங்கள்:

மனித உரிமைக்காக திருட்டை அனுமதிக்க முடியுமா? இதன் பொருள் மனித உரிமைகளை பார்த்தால் திருடு நிகழும்.
நடைமுறைத் தேவைக்காக சட்டத்தை ரத்து செய்யமுடியுமா? இதன் பொருள் திருட்டை தடுக்க மனித உரிமைகளை “ரத்து’ செய்ய வேண்டும் அல்லது மீற வேண்டும்.

இன்னம் சுருக்கினால்

திருட்டா அல்லது மனித உரிமைகளா
சொத்துரிமையா அல்லது குடிமை/மனித உரிமைகளா

“இலக்கியம்” சந்திக்கும் தர்மசங்கடமான இந்த தர்க்கத்தை ஜெயமோகன் கண்டடைந்த முறை மிகவும் பழுதுபட்டது என்பதுதான் இங்கே பிரச்சினை. அவர் கொடுக்கும் சில பிரத்யட்சங்கள் அனுமானங்களே என்றால் மறுபரிசீலனை செய்வாரா? காவலர் தரப்பை உண்மைக்கு மிக நெருக்கமானது என்று அவர் ஏன் ஏற்றுக் கொள்கிறார்?

1.இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை வங்கிகள் பீகாரிகளால் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன என்று புள்ளி விவரம் தர முடியுமா?

2. கொல்வதற்குப் பதிலாக விசாரணை செய்தால், கோர்ட்டில் சென்று விசாரணைக் கைதிகளாக ரிமாண்ட் செய்து இவர்களைச் சேர்ந்த முழுக்கூட்டத்தையும் பிடித்த பிறகுதான் குற்ற அறிக்கை தாக்கல் செய்வோம் என்று சொன்னால் கோர்ட் அதெல்லாம் முடியாது என்றா சொல்லிவிடும்? ஜாமீன் கொடுத்தால் தடையங்களை மறைப்பார்கள், கூட்டாளிகளை காப்பாற்றுவார்கள் என்றால் கோர்ட் ஜாமீன் மறுக்காதா? கனிமொழிக்கே ஆறுமாதம் ஜாமீன் மறுக்கப்படவில்லையா? எத்தனை பேர் விசாரணைக் கைதிகளாகவே ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை ஜெயமோகன் அறிவாரா?

3. பீகார் திருடர்களை தண்டிப்பதற்கு அவர்களை கொல்வதுதான் ஒரே வழி என்று ஜெயமோகன் சொல்கிறார். தண்டித்தால்தான் திருட்டை தடுக்க முடியுமா? எவ்வளவு அபூர்வமான காந்தியவாதி ஜெயமோகன். அவரை விட “இன்றைய காந்தி” நூல் எழுத தகுதியானவர் யாராவது இருக்க முடியுமா? திருட்டை ஒழிக்க தண்டிக்க வேண்டும்; வேறு தண்டனை சாத்தியமில்லையென்றால் சட்டத்தை மீறி கொன்று போட வேண்டும். எப்படிப்பட்ட ஒரு யதார்த்தம் அவருக்கு எப்படி பிரத்யட்சம் ஆகிறது என்பதை அவர் வாசகர்கள் யோசிக்கவேண்டும்.

4. நான் சென்ற கட்டுரையிலேயே சொன்னபடி வங்கிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் இருப்பது இந்தக் கொள்ளைகளின் மூல காரணம் அல்லவா?

இத்தனைக்கும் மேலாக முக்கியமான விஷயம் ஜெயமோகன் சந்திக்கும் தர்க்கச்சிக்கல் நடைமுறை தர்க்கம் சார்ந்தது. இலக்கியம் நடைமுறைத் தர்க்கங்களை தீர்ப்பதற்காக எழுதப்படுவதல்ல. அதன் தர்க்கம் அழகியல் சார்ந்த்து. பிரத்யட்சங்கள் குறித்த அனுமானங்களிலிருந்து தனக்கேயுரிய தர்க்கங்களை வடிவமைத்து மேலும் புனைவுச் சூழல்கள், அனுமானங்கள், தர்க்கங்கள் என்று பயணித்து பிரத்யட்சத்தின் மீது தன் அபூர்வ ஒளியை பாய்ச்சுவது இலக்கியம். அதுதான் அழகியலின் தர்க்கம். சிந்தனையின் தர்க்கமும் பிரத்யட்சத்திற்கும், அனுமானத்திற்கும் இடையில் ஒயாது சலித்துப் பயணித்து கோட்பாடுகளை உருவாக்குவது. அரிஸ்டாட்டில் ஒரு துவக்கமாக ஜான் லாக் கடந்து ஜான் ரால்ஸ் கடந்து ழாக் தெரிதா கடந்து இன்று வரை பல நூற்றாண்டுகளாக சலிக்காமல் மானுட சிந்தனை இதை செய்து வருகிறது (உங்களுக்குத் தெரிந்த இந்தியப் பெயர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்). இதன் பிரச்சினையும் நடைமுறைச் சிக்கல்களை உடனடியாகத் தீர்ப்பது அல்ல. விழுமியங்களின் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்குவது. இதெல்லாம் நடக்கவில்லையென்றால் இன்னம் சாணிப்பால், சாட்டையடி “தர்மம்”தான் தமிழகத்தில் நிலவிக்கொண்டிருக்கும்.

“ஆயுதம் தாங்கிய வன்முறையை, அரசு ஆயுதம் கொண்டுதான் அடக்கும்” என்ற தர்க்கத்தை ஏன் ஒற்றப்பட்டையை தவிர்க்க விரும்பும் ஜெயமோகனின் பார்வை கூறுகிறது? இதற்கு பின்னால் உள்ள அனுமானங்கள் என்ன? பிரத்யட்சங்கள் என்ன? அப்படியே ஆயுதம் கொண்டு அடக்கினாலும் சிறையில்தானே ஐயா போடவேண்டும்? கொன்றா போடவேண்டும்? ஜெயமோகன் நண்பர் அரங்கசாமி கூறியிருப்பது போல இலங்கை மனித உரிமை மீறல் பிரச்சினைக்கும் இதையேதான் கூறுவார்களா? தமிழ்நாட்டில் திட்டுவார்களே என்ற அச்சம்தான் கட்டுப்படுத்துகிறதா? “என்ன செய்வது பிரபாகரன் மகனை உயிருடன் வைத்திருந்தால் அவன் சிறுவன் என்பதால் சில காலம் கழித்து விடுதலை செய்யவேண்டும். அவன் பின்னால் மீண்டும் தமிழர்கள் அணிதிரண்டு போராடத் துவங்குவார்கள். மீண்டும் ஆயுதம் கூட ஏந்துவார்கள். அதனால் அவனை கொல்வதுதான் அமைதியை நிலைநாட்ட ஒரே வழி” என்று ராஜபக்சே அரசு சொன்னால் அந்த மறுபக்கத்தையும் இவர்கள் பார்த்து “மனித உரிமை என்றால் அமைதி கிடையாது, அமைதி வேண்டுமென்றால் மனித உரிமைகள் கிடையாது” என்ற தர்ம சங்கடத்தை புரிந்து கொண்டு இந்தக் கருத்தை நாங்கள் சொல்வோம், ஆனால் ஏன் சொல்லமாட்டோம் என்றால் தமிழ் உணர்வாளர்கள் திட்டுவார்கள் என்று எழுதுவார்களா?

மனித உரிமைகள், அவை சார்ந்த கோட்பாடுகள் நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கப் பிறந்தவை அல்ல. அவை விழுமியங்கள். எத்தனை நடைமுறைச் சிக்கல் வந்தாலும் அவற்றைக் கடைபிடிப்பதில்தான் மானுட உயர்வு என்பது இருக்கிறது. இலக்கியம் என்பதும் நடைமுறைச் சிக்கல்களை பாடப் பிறந்ததல்ல. அந்த சிக்கல்களை உருவாக்கும் மானுட செயல்பாடுகளை, உந்துதல்களை அகழ்ந்து பார்க்கப் பிறந்தது. காவலர்களின் நடைமுறைச்சிக்கல்களை தன்னுடையதாகப் பார்க்கும் இலக்கியம் இலக்கியமல்ல. தின மலர் செய்தித்தாள்.

Post a Comment

---------------------------------------
Site Meter