ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, April 29, 2021

சங்கி!

 இன்று தமிழ் சூழலில் ̀சங்கி’ என்ற முத்திரை குத்தல் எந்த காரணத்திற்காகவும், யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் நிலைமை. ஒருவர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக என்கிற கட்சிக்கோ, இந்துத்வம் என்கிற கருத்தியலுக்கோ ஆதரவோ, தர்க்க நியாயமோ சேர்ப்பாரெனில், அப்போது சங்கி என்ற சொல்லாடல் பொருத்தமானதாக இருக்கலாம். ஆனால் இன்று திமுகவை பற்றி என்ன விமர்சனம் வைத்தாலும் வைத்தாலும், பொது கும்பல் மனப்பான்மையில் இருந்து விலகி வேறு மாதிரி பேசினாலே சங்கி என்று ஒருவர் அழைக்கப்படுவார்.

உதாரணமாக கொரோனா இரண்டாம் அலையின்போது வடக்கே நடப்பதை எல்லாம் பார்த்து மனம் பதைத்து, அதே நேரம் தமிழ்நாட்டில் நடப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து, எடப்பாடி அரசு இதை மேலாக கையாள்கிறது என்று ஒரு பொதுஜனம் நினைப்பது சகஜமானது; பொதுப்புத்தி அப்படி யோசிக்கவே வாய்ப்புண்டு. கொஞ்சம் சிந்திக்கும் ஒருவர், இதற்கு முந்தய எல்லா அரசுகளும் சேர்ந்து உருவாக்கிய கட்டுமானமும், இந்த அரசின் செயல்பாடும் சேர்ந்து காரணம் என்றும் நினைக்கலாம். மாறாக, இது முற்றிலும் தவறு, இருபது ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் இந்த நாட்டை கற்காலத்தில் வைத்திருந்தது, இன்னொரு 20 ஆண்டுகாலம் ஆட்சி செய்த திமுக மட்டுமே தமிழகத்தை நவீனமாக்கி எல்லா கட்டமைப்புகளையும் உருவாக்கியது, 32 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அதை தொடர்ந்து சீரழித்து மட்டுமே வந்தது, கடந்த 10 ஆண்டுகாலமாக சீரழிந்ததையும் மீறி எல்லாம் இவ்வளவு மேலானதாக இருக்கிறது என்றும் ஒருவர் நினைக்க, அதை பகர நிச்சயம் இடம் உண்டு. ஆனால், திமுக மட்டுமின்றி, எல்லா ஆட்சிக்கும் இந்த முன்னேற்றத்தில் பங்கிருக்கிறது என்று நினைப்பவரிடம் சங்கித்தனம் என்ன இருக்கிறது? அவரை சங்கி என்று சொல்வது ஒரு கருத்தியல் சகிப்பின்மை அன்றி வேறென்ன? உண்மையில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த வரலாற்றை பற்றி பேசினால் கூட, அதையும் சங்கித்தனம் என்று அழைப்பார்கள் என்பதுதான் இன்றய ஆபாச யதார்த்தம்.
இன்னொரு அராஜக உதாரணமாக, மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்றவர்கள் நீலச்சங்கி என்று அழைக்கப் படுவது. (தலித் அரசியலின் விமர்சனங்களை சகிக்காமல் நீலச்சங்கி என்பதும், பாப்பானாகிவிட்டன், உங்களை எல்லாம் பேச வச்சதே நாங்க என்று சொல்வதெல்லாம் வரலாற்றின் பின்னணியில் எவ்வளவு அருவருப்பான ஒரு சாதிய உளவியல் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்போம்.) மாரி செல்வராஜ் 95/97 பிரச்சனையில் செய்தது தவறு என்று வைத்துக் கொண்டாலும் கூட, அது திமுகவிற்கு எதிரான ஒன்று, அவ்வளவுதானே, அதில் சங்கித்தனம் என்ன உள்ளது? அவரது திரைப்படத்தில் இந்துத்வ கருத்தியலோ, அதற்கு சாதகமான நியாயமோ எங்காவது வெளிபடுகிறதா? ரஞ்சித் தொடர்ந்து இந்துத்வ கருத்தியலுக்கு எதிராகத்தான் பேசிவருகிறார். அவரது காலா திரைப்படம் ரஜினி ரசிகர்கள் பலரையுமே கடுப்பாக்கியது என்பதுதான் உண்மை. இதில் சங்கித்தனம் எங்கு வருகிறது? அதாவது திமுகவினருக்கு உவப்பாக இல்லை என்றால் அது சங்கித்தனம் என்பதுதான் இங்கே லாஜிக்.
இந்த காரணங்களால் இவனுங்க என்ன யோக்கியமா என்ற அளவில் கேள்வி எழுப்பாமல், இப்படி எல்லாம் மானாங்கண்ணியாக சங்கி முத்திரை குத்திக்கொண்டிருந்தால் மட்டும் பாஜகவிற்கு அரசியல் செய்ய இங்கே இடமே இல்லாமல் போய்விடுமா என்று கேட்டு பார்க்கலாம். அது பேக் ஃபயர் ஆவது சாத்தியம் என்பது ஒரு பக்கம் இருக்க, திமுகவே மீண்டும் எதிர்காலத்தில் பாஜகவுடன் உறவு கொண்டால், இந்த சங்கி ஹோலியாட்டத்துடன் சேர்ந்து ஆடி, ஒட்டுமொத்த இந்துத்வ எதிர்ப்பு அரசியலும் நாசமாக போகும் என்பதுதான் நிஜமான பிரச்சனை. அதனால் திமுக பாஜகவுடன் உறவு கொண்ட வரலாறு என்ன, அதற்கு ஏதாவது நியாயம் வரலாற்றில் உள்ளதா, இப்போது திமுக ஆட்சி அமைந்தால் அத்தகைய உறவிற்கான சாத்தியம் உள்ளதா என்று பார்ப்பது முக்கியமாகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், திமுக ஆதரவாளர்களில் -அறிவுஜீவிகள், பொருளாதார அறிஞர்கள், மானுடவியலாளர்கள் என்று- யாரும் ‘பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஒரு வரலாற்றுப் பிழை’ என்று அவ்வளவு பெரிய அரசியல் சறுக்கலை ஒப்புக்கொண்டு விமர்சித்துக் கொள்வதில்லை. கூட்டணி வைத்ததற்கு புதுப்புது நியாயங்களையே கற்பித்து திரும்ப திரும்ப முன்வைக்கிறார்கள். திமுக மீண்டும் அத்தகைய உறவிற்கு முனைந்தாலோ, உறவு ஏற்பட்டாலோ, மீண்டும் வாந்தி வரவழைக்கும் புதிய நியாயங்களையே முன்வைப்பார்கள் என்பதை மின்னம்பலம், முரசொலியில் பப்ளிஷ் ஆகும் மானுடவியல் ஆய்வு பேப்பர்களை வாசித்தால் அறியலாம். இப்படி ஒரு விசித்திர விமர்சன வீர்ய சிந்தனா மரபு உருவாகியிருப்பதாலும் இதை பற்றி பேச வேண்டியுள்ளது.


அன்றய திமுக-பாஜக உறவிற்கான முக்கிய நியாயமாக கூறப்படுவது - வாஜ்பாய் ஆட்சிக்கு பல்வேறு வழிகளில் ஜெயலலிதா குடைசல்கள் கொடுத்துக் கொண்டிருந்த நேரம், சுப்பிரமணிய சுவாமி சதி செய்ய, காங்கிரஸ்-அதிமுகவால் திமுக ஆட்சிக்கு பெரியதொரு நெருக்கடி நேர்ந்தது என்பதுதான். இதைத்தான் ‘டீ பார்ட்டி’ என்று ஏதோ செப்டம்பர் 11 சதித்திட்டத்திற்கு இணையாக தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். `டீ பார்ட்டின்னா என்னன்னு தெரியுமா?’ என்று இன்றய தலைமுறையை நோக்கி படு சீரியசாக கேட்பதன் பின்னுள்ள தர்க்கம் என்னவெனில், அன்று திமுக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது, அதனால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் உறவு கொண்டது என்பது. இந்த பிரச்சனைக்கு பிறகு வருவோம். உண்மை என்னவெனில் திமுக அதற்கு முன்பே பாஜகவுடன் உறவுக்கு தயாராக இருந்தது என்பதுதான். அந்தந்த சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படையாகவும் கூறியது.
1991-96 காட்டாட்சிக்கு பிறகு, ஜெயலலிதாவின் அதிமுக சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலிலும் முற்று முழுதாக தோற்கடிக்கப் பட்டது. தமிழ் மாநில காங்கிரஸ் 20 இடங்களிலும், திமுக 17 இடங்களிலும் வென்றது. முடிவுகள் வந்த சில மணி நேரங்களிலேயே, எல்லா சாத்தியங்களுக்கும் தாங்கள் கதவுகளை திறந்து வைத்திருப்பதாக கூறிய முரசொலி மாறன், ‘நாங்கள் எந்த தளத்திலும் தீண்டாமையை பேணுவதில்லை’ என்று அறிவித்தார். மிக தெளிவாக பாஜகவுடனும் சேர எங்களுக்கு தயக்கங்கள் எதுவும் இல்லை, அந்த சாத்தியத்தையும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் இதன் ஒரே பொருள். அவ்வாறே எல்லோராலும் அன்று அது புரிந்து கொள்ளப் பட்டது.
அப்போது, திமுக-ரஜினி- தமாகா என்கிற ̀மாயத்தை நிகழ்த்திய’ பின், திமுக-தமாகா அரசியல்வாதிகளுடன் ̀சோ’ நல்ல உறவில் இருந்தார். அவர் பாஜக-திமுக பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய தயாராக இருந்தார். ̀திமுக தயாராக இருக்கிறது’ என்று துக்ளக்கில் வெளிப்படையாகவே எழுதினார். யாரும் மறுத்ததில்லை. (சோ அப்போது மட்டுமல்ல, பிறகு 97இல் ஜெயலலிதா பாஜகவுடன் முதன் முதலில் கூட்டணி வைத்த போதும், ̀பாஜக அவசரப்பட்டுவிட்டது, திமுகவும் கூட்டணிக்கு தயாராக உள்ளது’ என்று எழுதினார். 2000ல் வீரப்பன் ராஜ்குமாரை கடத்தும்வரை அவர் திமுக ஆதரவாளராகவே இருந்தார்.)
இன்னமும் பல மாநில கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராகாத நேரம் அது. ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயிடு கூட ‘பாஜகவுடன் எந்த உறவும் சாத்தியம் இல்லை’ என்று உடனடியாக சொன்ன காலகட்டம் அது. அப்போது தீவிர பாஜக எதிர்ப்பை தன் கருத்தியலின் அடிப்படையாக வைத்திருந்த திமுக, எல்லா கதவுளையும் திறந்து பாஜகவுடனும் பேச தயாராக இருந்தது என்பது தெளிவு.
தீண்டாமை என்ற வரலாற்றின் மிகப் பெரிய கொடுமையை குறிக்கும் சொல்லை, தங்களின் சுய லாபம் சார்ந்து பயன்படுத்திய குதர்க்கமான சாதூர்யம், திமுகவின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை மிகச் சரியாக வரலாற்றில் சாராம்சப் படுத்துகிறது எனலாம். இத்தகைய rhetoric தர்க்கத்தை திமுகவினர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியுள்ளதை காணலாம்.
திமுக எப்போதுமே அரசியல் லாபத்திற்காக பல்டி அடிக்க தயராகவே இருந்தது. டிஸ்மிஸ் செய்யப்பட்டு தனக்கு பல கொடுமைகளை இழைத்த இந்திரா காங்கிரஸுடன் 80ல் கூட்டணி வைத்தது மட்டுமல்ல; எம்ஜியார் இறப்புக்கு பின், அதிமுக உடைந்து திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, அதுவரை நாளாந்திரம் திட்டி வந்த காங்கிரசுடன் உறவின் முறைகளை நல்லபடியாக மாற்றிக் கொண்டதும் இன்னொரு உதாரணம். ஒரு கட்டத்தில் கலைஞர் தேசிய முண்ணனியில் இருந்து விலகி, ஜெயலலிதாவை காலி செய்ய, காங்கிரசுடன் சேருவார் என்று பேசப்பட்டது. என் திமுக நண்பர்கள் அதை ராஜ தந்திரம் என்று சொன்னார்கள். மருங்காபுரி, மதுரை கிழக்கு தேர்தல் முடிவுகளினாலும், சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதனால் மக்களிடம் உண்டான உணர்வுகளினாலும், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸிற்கு கணிப்பு இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்த கணிப்பு நிஜமாகி திமுகவும் அந்த தேர்தலில் பூஜ்யம் வாங்க நேர்ந்தது.
96 பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பில்லை என்று சில நாட்களிலேயே தெரிந்து விட்டதால், திமுகவும் திறந்திருந்த கதவுகளை மூடி, ஐக்கிய முன்னணியிலேயே ஐக்கியமாகி, தேவகவுடா, பின் குஜ்ரால் அரசுகளில் பங்கு வகித்தது. ஜெயின் கமிஷன் அறிக்கை ராஜிவ் கொலை தொடர்பாக திமுகவை குற்றம் சாட்டியதை முன்வைத்து, காங்கிரஸ் குஜ்ரால் அரசை கவிழ்த்தது.
அப்போது திமுகவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டுமே காங்கிரஸ் முன்வைத்தது. திமுகவை கழட்டி விட்டிருந்தாலோ, நிலைமையை காரணம் காட்டி திமுகவை வேறு சமரசத்திற்கு உட்படுத்தியிருந்தாலோ, குஜ்ரால் அரசு பிழைத்திருக்கலாம். ஆனால் அன்று ஐக்கிய முண்ணனி காங்கிரஸின் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து, திமுகவிற்காக (வரலாற்றில் தமக்கு இன்னொரு முறை கிடைக்கப் போகாத) ஆட்சியை தியாகம் செய்தது. இந்த தகவலுடன் இந்த ̀டீ பார்ட்டி’ சார்ந்த தர்க்கங்களை அணுகுகிறேன்.



பாரதிய ஜனதா என்ற பெயரே பரவலாக தெரியாத தமிழகத்தில், அந்த கட்சியுடன் பாமக, மதிமுக போன்றவற்றை சேர்த்து கூட்டணி அமைத்து, தமிழகத்தில் அதற்கு ஒரு இருப்பையும், அடையாளத்தையும் ஜெயலலிதா உருவாக்கி தந்தார். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு நிகழ்வின் தயவால் அந்த கூட்டணி அமோக வெற்றியும் பெற்றது. அந்த வெற்றியால் கிட்டிய மத்திய அதிகாரத்துடன் திருப்தி கொள்ளாத ஜெயலலிதா, திமுக ஆட்சியை கலைக்க விரும்பினார். ஆனால் அதற்கு சாக்கு சொல்ல போதுமான காரணங்கள் இல்லை.
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பும், அதை தொடர்ந்து மத்தியில் பாஜக ஆட்சியும் வந்தவுடன், திமுக சுதாரித்து, இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது கறாரான நடவடிக்கைகள், இஸ்லாமிய மக்கள் மீதும் அடக்குமுறைகள், பொடா போன்ற ஜனநாயக விரோத சட்டங்கள் என்று மத்திய பாஜக அரசின் கண்காணிப்பிற்கு நல்ல பையனாக நடந்து கொண்டது; அதற்கான சரியான சர்டிஃபிகேடாக இடதுசாரி, ஜனநாயக, மனித உரிமை சக்திகளால் திமுக விமர்சிக்கப்பட்டது. அப்போது சென்னை வந்திருந்த வினோத் மிஸ்ரா ‘பொடா திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள கள்ள உறவில் பிறந்த கள்ளக் குழந்தை’ என்றார். ஜெயலலிதாவின் எல்லா கெடுபிடிகளுக்கும் ஈடுகொடுத்த வாஜ்பாய், திமுக ஆட்சியை கலைக்க மட்டும் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் ஜெயலலிதா மத்திய ஆட்சிக்கு கொடுத்து வந்த பல்வேறு குடைசல்களின் ஒரு பகுதியான அவரது ஒரு டெல்லி பயணத்தின் போது சுப்பிரமணிய ஸ்வாமி ஒரு டீ பார்ட்டி வைத்தார்.
வாஜ்பாய், ஜோஷி உட்பட்ட பல பாஜககாரர்களும் வந்து ஜெயலலிதாவை தாங்கு தாங்கென்று தாங்க, ஊடக கேமாராக்கள் முன்னால், திமுகவிற்கு எதிராக என்ன பெரிய சதித்திட்டம் அந்த பார்ட்டியில் தீட்டப்பட்டது என்று ஆய்வாளர்களிடம்தான் கேட்கவேண்டும். அந்த பார்ட்டியில் ஜெயும், சோனியாவும், சுப்ரமணியசாமி அருகிருக்க சில நிமிடங்கள் பேசிக் கொண்டார்கள் என்பதுதான் ஒரே முக்கிய செய்தி. ஆனால் அதற்கு பிறகு நிறைய பேசியிருப்பார்கள்தான். அடுத்த மாதம் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஜெயலலிதா தன் ஆதரவை வாபஸ் வாங்கியதும், தயாராக இருந்த திமுக (6 சீட்டுடன்) பாஜகவிற்கு ஆதரவளித்தது.
இந்த தருணத்தில் திமுக அரசிற்கு என்ன ஆபத்து இருக்கிறது, அதை சமாளிக்கக் கூடிய என்ன சக்தி அவர்களிடம் இருந்தது என்று பார்ப்போம். ஜெயலலிதாவின் கெடுபிடிகளுக்கு பணிந்து வாஜ்பாய் திமுகவை ஆட்சி நீக்கம் செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. இதை அவர் திமுகவின் ஆதரவை ஒரு ரகசிய நிபந்தனையாக பெற்ற பின் செய்திருப்பார் என்று கொண்டாலும் கூட, திமுக ஆதரவினால் வாஜ்பாய் ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை. அதிமுகவின் ஆதரவை இழந்தபின் பாஜகவிற்கு எண்ணிக்கை இல்லை. அவர்கள் கவிழ்ந்துதான் ஆகவேண்டும். இன்னொரு பக்கம் அதிமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கவும் எண்ணிக்கை பலம் இல்லை. அடுத்த பெரிய கட்சி என்ற தகுதியில், கே ஆர் நாராயணன் அழைத்தபோது காங்கிரஸ் அதற்கு முயற்சி செய்யவே இல்லை. அதனால் காங்கிரஸ் அப்போது திமுகவை டிஸ்மிஸ் செய்யக் கூடிய வாய்ப்பே இல்லை. ஆகையால், அதுவரை ஜெயாவின் மிரட்டல்களால் தொங்கிக் கொண்டிருந்த கத்தி இப்போது கீழே விழுந்து விட்ட நிலையில், அந்த குறிப்பிட்ட தருணத்தில் திமுக ஆட்சி மீது எந்த கத்தியும் இல்லை.
ஒரே ஒரு உள்ளடக்க தர்க்கமுள்ள வாதத்தை கற்பிக்க முடியுமென்றால், ஜெயலலிதாவின் அழுத்தங்களுக்கு பணிந்து அநியாயமாக டிஸ்மிஸ் செய்யாத வாஜ்பாய்க்கு நன்றி கடன் இருந்தது, அதனால் ஆதரித்தார்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். இந்த ஒரு நன்றி கடனுக்காக, கவிழப்போகும் அரசுக்கு ஆதரவு மட்டுமின்றி, அடுத்த தேர்தலில் கூட்டணி, இந்துத்வாக்களுக்கு உவப்பான பல நடவடிககைகள் (ஆர் எஸ் எஸ் ஷாகா ஒன்றில் கே என் நேரு கலந்து கொண்டதுடன், அவர்களின் அடையாள சல்யூட் அடித்த புகைப்படம் அன்று வெளிவந்தது ), தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பாஜகவிற்கு அறிமுகம், குஜாராத் குறித்த மௌனம் என்று அடுத்த நான்கு ஆண்டுகளை கழித்தார்கள் என்று சிலர் நம்பலாம். ஆனால் அப்படி திமுக நன்றியுள்ளவர்களாக யாருக்குமே நடந்து கொண்ட வரலாறு இல்லை. உதாரணமாக தங்களுக்காக ஆட்சியையும், எதிர்காலத்தையும் தொலைத்த ஐக்கிய முன்னணிக்கு அப்படி ஒரு நன்றியை திமுக காட்டவில்லை. அன்றும் ஐக்கிய முன்னணி குற்றுயிராயினும் உயிருடன் இருந்தது. 99 தேர்தலுடன் அதற்கு சமாதி கட்டப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவை ஐக்கிய முன்னணிக்குள் இழுக்க முயற்சி செய்ததாக எம் எஸ் எஸ் பாண்டியன் ஒரு இந்து கட்டுரையில் குறிப்பிட்டிருப்பார். அதை அவர்கள் கடுமையாக மறுத்திருப்பார்கள். பதிலுக்கு (ஜோதி பாசு பேசியதாக என்று நினைக்கிறேன்) ஒரு பழைய செய்தியை போட்டு பாண்டியன் ‘வாசிப்பவர்கள் அவரவர் முடிவுக்கு வந்து கொள்ளலாம்’ என்று பதிலளித்திருப்பார். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வாய்பில்லாத அந்த செய்தியை பாண்டியன் சேமித்து வைத்து அளித்தது ஆச்சரியத்திற்கு உரியது. ஆனால் அதன் மூலம், மார்க்சிஸ்டுகள் ஜெயலலிதாவை இழுத்தார்கள், அதனால் ஒதுக்கப்பட்ட திமுக வேறு வழியின்றி பாஜகவிடம் போய் தஞ்சம் அடைந்தது என்று ஒரு மானுடவியல் ஆய்வுக்கட்டுரையில் வேண்டுமானால் முடிவுக்கு வர முடியலாம்; கறாரான தர்க்கத்துடன் முடிவெடுப்பவர்கள் அதை ரொம்ப சந்தேக கேஸாக பார்ப்பார்கள். (திமுக பாஜக பக்கம் போக தயாராக இருந்ததால் கூட அப்படி பேசியிருக்கலாம்.)
ஆனால் வாஜ்பாய்க்கான நன்றி கடனாக நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்ததோடு, ஜெயலலிதா ஒதுக்கியதை விட 2 அதிகமாக்கி 7 இடங்களை ஒதுக்கி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, 99 பாராளுமன்ற தேர்தலை திமுக சந்தித்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில் திமுக காட்டும் தாராள் மனோபாவத்தை அனைவரும் அறிவர். மேலும் அப்போது மட்டுமல்ல, அதற்கு அடுத்த இருபது வருடங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் பாஜக 7 சீட்டிற்கு தகுதியான எந்த மக்களாதாரவையும் பெற்றுவிடவில்லை. இப்போதுகூட அதிமுக 20 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியதை பலர் கிண்டலடிக்கின்றனர்.
கவனிக்க வேண்டியது இப்போது திமுக ஆட்சிக்கு என்ன ஆபத்து இருக்கிறது? ஒருவேளை ஜெயலலிதா கணிசமாக வென்று, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் அப்படி ஒரு ஆபத்து உருவாகலாம். இதெல்லாம் எப்பவும் இருக்கும் ஆபத்துதான். அதை எப்படி மக்கள் ஆதரவே இல்லாத பாஜகவுடன் தமிழகத்தில் கூட்டணி அமைத்து முறியடிக்க முடியும்? கூட்டணி அமைக்காமல், தேர்தலுக்கு பிறகு ஒரு வேளை தேவைப்பட்டால் கூட ஆதரவளித்திருக்கலாம். (தெலுகு தேசம் கட்சி அப்படி செய்தது.)
இதை விட முக்கியமாக அடுத்து வந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தன் தலை மீது மண்ணை வாரி போட்டுக் கொண்டது என்றும் சொல்லலாம். (பாஜகவிற்கு முதல் முதலாக 4 சட்டமன்ற உறுப்பினர்களை அளித்த தேர்தல் அது.) 1996ல் ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் அமைத்த கூட்டணியை எதிர்த்து, திமுகவுடன் சேர்வதற்காகவே பிறந்த தமாக கட்சி, 2001 தேர்தலில் திமுக எவ்வளவோ முயன்றும் கூட்டணிக்கு மறுத்துவிட்டது. திமுகவுடன் கூட்டணி வைக்காததற்கு -திமுகவின் சில உள்ளடி வேலைகளும் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும்- பாஜகவுடனான கூட்டணிதான் ஒரே வெளிப்படையான காரணமாக இருந்தது.
இப்போதய மோடி ஆட்சி போல இல்லாவிட்டாலும், அன்றய பாஜக ஆட்சியிலும் கிரிஸ்தவர்கள் மீது தாக்குதல், வரலாற்றை இந்துத்வபடுத்தல என்று மதசார்பின்மை பேசுபவர்கள் எதிர்க்கும் பலவேறு சமாச்சாரங்கள் நடந்தன. அவற்றோடு சில மாதங்கள் நீடித்த குஜராத்தின் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் எல்லாவ்ற்றிற்கும் திமுக அமைதி காத்தது. என்ன கரணமடித்து யோசித்தாலும் திமுக ஒரு desperate modeல் இருந்து கொண்டு வேறு வழியின்றி சிவசேனா போன்ற கட்சிகள் இருக்கும் பாஜக கூட்டணியில் சேர்ந்து, ஆட்சியில் பங்கு பெற்று, 2004 தேர்தலுக்கு சில காலம் முன்பு, காங்கிரஸுடன் கூட்டணி கனிந்து வரும்வரை இதையெல்லாம் பொறுத்துக் கொண்டிருந்தது என்று நம்ப ஆதாரம் எங்கும் இல்லை.
அன்று ஜெயலலிதா உருவாக்கிய பாஜகவுடனான பாமக, மதிமுக கூட்டணி கச்சிதமாக இருந்தது. அதில் அப்படியே அதிமுகவிற்கு பதில் போய் அமர்வது திமுகவிற்கு அரசியல்ரீதியாக லாபமாக இருந்தது. மற்றபடி மத்தியில் கிடைத்த அமைச்சரவை பதவிகள் மட்டுமே ஒரே காரணமாக இருந்தது. இவையன்றி வேறு நெருக்கடிகளும், நிர்பந்தமான காரணங்கள் எதுவும் கிடையாது.




ஒரு அரசியல் கட்சி, அரசியல் லாபங்களுக்காகவும், அதிகாரத்திற்காகவும், கட்சி மூலவர்களின் வளங்களுக்காகவும் சமரசம் செய்வது இயல்புதானே என்று தோன்றலாம். தேர்தல் அரசியலின் அடிப்படை பண்பே சமரசம்தான். வாக்கு சதவிகிதத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் இல்லாமல், தொகுதிகளின் வெற்றி எண்ணிக்கை அதிகாரத்தை தீர்மானிக்கும் நிலையில், கூட்டணியும், அதற்கான சமரசமும் தேர்தல் அரசியலின் முக்கிய நிர்பந்தம் ஆகிறது. ஆனால், எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், நம் பார்வையில் எந்த ஒரு அடிப்படை காரணத்திற்காக ஒரு கட்சியை ஆதரிக்கிறோமோ, அந்த காரணத்தையே காட்டிக் கொடுத்த பின்னும், இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா என்று சொல்வதானால், அரசியல் என்பதன் அர்த்தம் என்ன என்று யோசிக்க வேண்டும். அப்படியானால் எதிர்தரப்பை நோக்கி எழுப்பப்படும் கூச்சல்களுக்கு என்ன அர்த்தம்? குறிப்பிட்ட கொள்கை அடையாளம் கொண்ட கட்சிக்கே அதன் அடிப்பாடை கொள்கையை காக்கும் கடப்பாடு இல்லையெனின் எதிர்தர்ப்பை பற்றி பேச என்ன முகாந்திரம் உள்ளது? மேலும் அவனை விட அதிக கட்ப்பாடு கொண்டவனை முத்திரை குத்துவது அயோக்கியத்தனம் இல்லையா?
திமுக பாஜகவுடன் சேர்ந்ததற்கு மத்திய மந்திரிசபை அதிகாரங்கள்தான் காரணம் என்று கடந்த பதிவில் வாதிட்டேன். ஒரு பேச்சிற்கு ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளத்தான் பாஜகவுடன் கூட்டணி அமைந்தது என்று வைத்துக்கொள்வோம். ஆட்சிக்கு உருவான ஒரு நெருக்கடியை சமாளிக்கத்தான், திமுக பாஜகவுடன் சேர்ந்திருந்தால் கூட அதை நியாயப்படுத்துவது மட்டும் யோக்கியமானதா என்று யோசிக்க வேண்டும். அது நியாயம் என்றால், அந்த நியாயத்தை எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும் கூட தரலாமே. நன்றாக யோசிக்க வேண்டும், அவர்களும் ஆட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளத்தானே பாஜகவிற்கு அடிபணிந்தார்கள். சசிகலா சோனியா காந்தியை போல கட்சியையும், ஆட்சியையும் கட்டுப்படுத்திக் கொண்டு, பன்னீர் ஒரு பொம்மை முதல்வராக தொடர முடிந்திருக்கும் என்றால் அவர் ஏன் புரட்சி செய்யப் போகிறார்? தினகரன் எடப்பாடியை இறக்கிவிட்டு, தான் உட்கார்ந்து கொள்ள முயலவில்லை எனில், எடப்பாடி ஏன் பாஜகவிடம் போய் சரணடைய போகிறார்? உண்மையில் 1999 திமுகவை விட இவர்களுக்குதான் உண்மையான நெருக்கடி இருந்தது. எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நியாயம் சொல்வது மோசம் என்று நினைத்தால், அந்த மோசமான நியாயம் கூட திமுக பாஜகவுடன் சேர்ந்ததற்கு இல்லை என்பதை உணர வேண்டும். மேலே உள்ள தர்க்கம் எடப்பாடி, பன்னீர் ஆதரவாக தமிழ் சூழலில் திரிக்கப்படுமே ஒழிய, அது சுட்டும் அடிப்படை முரணை எதிர்கொள்ளும் அளவிற்கு கூட அறிவார்த்த சூழல் இங்கில்லை.
நிச்சயமாக திமுக அதிமுகவில் இருந்து வித்தியாசமான கட்சி; அந்த வித்தியாசத்தை எவ்வாறு துல்லியப்படுத்துவது என்பதும், துல்லியப்படுத்துகிறேன் பேர்வழி என்று தத்துவ நாடகங்களை அரங்கேற்றுவதும், அங்கே தத்துவங்கள் விதூஷக பாத்திரம் கொள்வதும்தான் பிரச்சனை.
எவ்வளவு மோசமான சமரசங்கள் செய்தாலும் திமுக தீவிர கொள்கை அடையாளம் கொண்ட கட்சி; அதிமுகவிற்கு திமுக எதிர்ப்பு என்பதை தவிர வேறு கொள்கை அடையாளமே கிடையாது. என்ன நடந்தாலும் திமுகவை ஆதரிப்பது என்ற ஒரு அரசியல் நிலைபாட்டை பொய்மை, பாசாங்கு, கபடம், போலித்தனமின்றி, வெளிப்படையாக பேசி நடைமுறை அரசியலில் எடுக்க முடியும். அதன் போக்கில் கடந்த காலத்தை பேசாமல் இருப்பது கூட பிரச்சனையில்லை; கடந்த காலத்திற்கும், வரலாற்றில் அது மீள நிகழும்போதும் என்ன வகையான தர்க்க நியாயங்கள் முன்வைக்கப்படுகிறது, என்னென்ன உளறப்படுகிறது, அதன் சுயமுரண்கள் என்ன என்பதுதான் பிரச்சனை.
அத்துடன் சில்லுண்டிகள் ரொம்ப சவுண்டு விட்டால், பார்க்கிறவனை எல்லாம் சங்கி என்று சொன்னால், அவர்கள் யோக்கியதையை வசையரசியல் தளத்தில் பேசாமல் இருக்க முடியாது. அந்த போக்கிற்கு எதிர்வினையாகத்தான் இந்த பதிவுகளை எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
தேர்தல் அரசியல் மிக விநோதமானது. கடந்த கால தியாகங்கள், கடப்பாடுகள் மீது இரக்கமற்றது. நடைமுறை நிர்பந்தங்கள் மிக விவஸ்தையற்றவை. விசித்திர முரண்களை கொண்டது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்காதவர்கள், வைக்கப்போகாதவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. திராணாமுல் காங்கிரஸ் பிறந்தவுடன் பாஜகவுடன் கூட்டணிக்கு போன கட்சி. ஆனால் இன்று வங்காளத்தில் பாஜக வருவதற்கு வழி செய்ததும், செய்துகொண்டிருப்பதும் மார்க்சிஸ்டுகள்தான்; அங்கு மமதாதான் இப்போது பாஜக எதிர்ப்பு முகம். ஆகையால் ரொம்ப கறாரான கன்சிஸ்டன்சியை நிலைபாட்டில் கொள்வதும், எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லை.



இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்க, திமுக மீண்டும் பாஜகவுடன் சேருமா என்றால், அதற்கு இதுவரை தர்கித்தது போல் அல்லாமல், வரலாற்று தடயங்களை வைத்து ஊகமாகத்தான் பதில் சொல்ல முடியும். நிச்சயமாக திமுக ஆட்சிக்கு வந்த (வந்தால்!) அடுத்த நொடி, தனது போராளி கெட்டப்பை எடுத்து விட்டு, தொனியை அப்படியே மாற்றிக் கொள்ளும். மம்தா பானர்ஜி காட்டுவது போன்ற முரணான முரண்டு அணுகுமுறையை திமுக கொள்ளாது. அதுதான் நாற்பதாண்டுகால மரபு.
இவ்வாறாக நடுவண் அரசுடன் அனுசரணையாக நடந்து கொள்வதை தாண்டி உறவு கொள்ள தயாராகுமா என்றால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். 1996க்கு பின், இடையில் ஓராண்டு தவிர்த்து, திமுக மத்திய அதிகாரத்தில் 2014வரை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. மாநில ஆட்சியை விட மத்தியில் பகிர்ந்து கொண்ட அதிகாரம், திமுக கட்சி மூலவர்களின் வளத்திற்கு முக்கிய காரணியாக இருந்து வந்திருக்கிறது. ஏழு ஆண்டுகளாக நிகழ்ந்துள்ள இந்த வேலையிழப்பை சரி செய்ய எந்த சமரசமும் செய்வார்கள் என்பதுதான் என் கணிப்பு.
ஆனால் திமுகவை சேர்த்துக் கொள்ளும் மனநிலையில் பாஜக கொஞ்சம்கூட இல்லை என்பதுதான் தற்போதய நிலை. தமிழகத்தில் தேவைப்படும்வரை அதிமுகவுடன் சேர்ந்து அரசியல் செய்வது, முடிகிறபோது தனியாகவே திமுகவை எதிர்த்து அரசியல் செய்வது என்ற அணுகுமுறைதான் தங்களது எதிர்காலத்திற்கு நல்லது என்று பாஜகவிற்கு தெரியும். திமுக எதிர்ப்பு அரசியல் வெளியை முழுவதும் கைப்பற்றுவதுதான் அதன் நோக்கம். அதனால் இவங்க ரெடியானாலும் அவங்க ரெடியாக இருக்கப் போவதில்லை.
90களை போல கூட்டணிகளை நம்பி பாஜக இப்போது இல்லை. எதிர்காலத்திலும் திமுக போன்ற கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்த பாஜக விரும்பாது. திமுகவிற்கும் காங்கிரஸுடனும் மற்ற எதிர்கட்சிகளுடனும் சேர்ந்து, யாருக்கும் பெரும்பான்மை இல்லாத, தன்னை நம்பியுள்ள ஒரு ஆட்சியில் இருப்பதுதான் மரியாதையாக இருக்கும். அதைத்தான் விரும்பும். ஆனால் அந்த நிலை வர அப்படி ஒரு பலமான கூட்டணி அமைந்து வெற்றி பெற வேண்டும். அதற்கான அறிகுறிகள் இப்போது தெரியவில்லை.
சென்ற பாஜக ஆட்சியில் பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் தீவிர துன்பங்களை அனுபவித்தார்கள். ஆனால் அதை ஒரு உன்னத நோக்கத்திற்காக அனுபவித்ததாக, நாட்டிற்காக செய்த தியாகமாக கருதிக் கொண்டார்கள். தேசியவாத அரசியலில் தங்கள் பங்கு அது என்று நினைத்தார்கள். (பாஜக வெற்றி பெற்றதை அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.) இப்போது கரோனா தொற்று தொடங்கிய பின் அனுபவிக்கும் கணக்கற்ற கொடுமைகள் அனைத்தும் தீவிர கோபத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும்.
இந்நிலையில் 2024 தேர்தலில், முழுமையாக தோற்காமல், தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று பாஜக வெற்றி பெற்றால், ஆட்சியமைக்க வெளியில் இருந்து வரும் ஆதரவு மிக இன்றியமையாததாக இருக்கும்போது, அதை அளிக்கும் அளவு எம்பிக்கள் திமுக கையில் இருக்கும்போது, நிச்சயமாக கூட்டு சேர்வார்கள் என்பதற்குதான் வரலாறு சான்று பகர்கிறது. மத்தியில் கிடைக்கும் அதிகாரம் என்பதை தவிர்த்து அதற்கு வேறு எந்த காரணமும் இருக்காது. ஈழத்தில் அந்த பக்கம் இறுதி அழிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே, இந்த பக்கம் பேரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, எந்த கருத்தியல் முட்டுக்கட்டையும் இருக்காது. ஆனால் மீண்டும் அந்த கூடா நட்பிற்கு பல வரலாற்று, சமூகவியல், நிர்பந்தவியல் காரணங்கள் கண்டு பிடிக்கப் படும். 67இல் ராஜாஜியுடனான கூட்டணியில் துவங்கும் இந்த வரலாற்றை அவதானித்து நினைவில் வைத்த நேர்மையாளர்களுக்கு இது நன்கு தெரியும்.





Post a Comment

---------------------------------------
Site Meter