| ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | ||
|
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, October 20, 2026கத போல தோணும்..!நிர்வாணமும் ஆடையும்-- ரோஸாவசந்த் தோற்றுவாய்: கீழ்கண்ட கதையை பலரும் வேறு வேறு வடிவங்களில் வாசித்திருக்கக் கூடும். “மெய்யும் பொய்யும் ஒரு நாள் ஒரு கிணற்றடியில் சந்தித்துக் கொண்டன. அன்றுதான் முதன்முதலாக அவை நேருக்கு நேர் பார்த்துக் கொள்கின்றன. பொய் மெய்யிடம் "இன்றய நாள் இனிமையானது, எவ்வளவு அழகாக இருக்கிறது!” என்றது. மெய் சுற்றிலும் பார்த்தது. பொய் சொன்னது போலவே சுற்றி எல்லாமே அழகாக இருந்தன. நீலவானமும அற்புதமாகக் காட்சியளித்தது. "ஆம்” என்று ஒப்புக் கொண்டது. மெய்யும் பொய்யும் நீண்ட நேரம் உரையாடின. பொய் மெய்யிடம் "கிணற்று நீரும் நன்றாக இருக்கிறது, நாமிருவரும் இறங்கிக் குளிப்போம” என்றது. எப்பொழுதும் பொய்யை சந்தேகப்படும் மெய், சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கிணற்று நீரைத் தொட்டுப் பார்த்தது, அது உண்மையிலேயே இதமாக இருந்தது. இருவரும் கிணற்றில் இறங்கிக் குளிக்கத் தொடங்கினார்கள். சிறிது நேரம் கழித்து, ஜல உரையாடலின் இடையே திடீரென வெளிவந்த பொய், மெய்யின் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு ஓடிவிட்டது. அவசரமாக ஆடைகளின்றி வெளிவந்த மெய்யின் கண்களில் பொய் தட்டுப்படவேயில்லை. பொய்யின் ஆடைகளை அணிய மனமில்லாத மெய் ஆடை ஏதுமின்றி நிர்வாணமாகவே ஊருக்குள் நடக்கத் தொடங்கியது. ஆடைகளற்ற மெய்யைப் பார்த்த உலகம் வெறுப்புடனும் கோபத்துடனும் தன் பார்வையைத் திருப்பி மெய்யைத் தவிர்க்கத் தொடங்கியது.” கதை இங்கேயே முடிந்து விட்டதாக புரிந்து கொண்டது வாசகர் யாருடைய தவறும் அல்ல; அது எழுதியவனின் தவறு. கதைகள் ஒரு முடிவோடுதான் முடிய வேண்டும் என்ற வாசக எதிர்பார்ப்பின் மீது வேண்டுமானால் குற்றம் சொல்ல வாய்ப்புண்டு. கதை: மெய் ஆடைகளின்றி நின்றது, உலகம் முகத்தைத் திருப்பிக்கொண்டது, இதெல்லாம் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் காலம் செல்ல செல்ல நிலைமையில் சிறிது சிறிதாக சில மாற்றங்கள் உருவாகி, மெய்யை ஏதோ ஒருவகையில் ஒரு சிலர் எதிர்கொள்ளத் துவங்கினர். எல்லோரும் மெய்யை பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளவில்லை. கல்லெறிந்தவர்கள் பலர் உண்டு என்றாலும், சிலர் மெய்யைப் பார்த்துச் சிரித்தார்கள். ஒரு சிலர் அதன் நிர்வாணத்தைப் புகைப்படம் எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார்கள். இணையத்தில் மிக சிறுபான்மை எண்ணிக்கையில் சிலர் மெய்யை மெய்யென அங்கீகரித்தனர். தன்னை தத்துவவாதி என்று நினைத்து கொண்டிருக்கும் பூவை இளவேனிலன் ஃபேஸ்புக்கில், “மெய் என்பது அதன் இயல்பில் நிர்வாணமாகத்தான் இருக்கும், புனைவுகளில் அதற்கு பொய்களின் ஆடைதான் அணிவிக்கப்படுகிறது. அதனால் மெய்யின் ஆடைகள் சரியான இடத்திற்குதான் போய் சேர்ந்திருக்கிறது” என்று எழுதினார். ஆனால் பிரபல புனைவு எழுத்தாளர் (அவர் புனைவல்லாதவற்றையும் புனைவுகளின் இலக்கியத்தரத்துடன் எழுதக்கூடியவர்), மெய் நிர்வாணமாக இருப்பதற்குப் பின்னால் வெளிநாட்டுச் சதி இருப்பதாகக் கூறினார். மெய்யிடம் ஒருவன் கேட்டான்: “ஏம்பா.மெய்யி... உன் ட்ரெஸ்ஸை பொய் சுட்டுனு போய்ட்டுதாமே? மெய்யாலுமா?” “ஆமாம், அதுதான் உண்மை.” “உண்மை கிடக்குது, அதான் உன் டிரஸ்ஸுன்றதுக்கு என்ன ஆதாரம்?” மெய் திகைத்து, “எனக்குத் தெரியும்” என்றது. அவன் சிரித்தான். “உனக்கு தெரிஞ்சத வச்சு நாக்கு வளிக்கவா? ப்ரூஃப் வேணும்பா ப்ரூஃப்!” அவன் பத்திரிகையாளன் என்று தெரிந்தது. அவனுடைய சட்டையில் பத்திரிகையின் பெயருக்கு கீழே ̀உண்மை உடனுக்குடன்’ என்று எழுதப்பட்டிருந்தது. இதற்கிடையில் மெய்யின் ஆடைகளை அணிந்துகொண்ட பொய், ̀ஏ மெஹ்லோன்… ஏ தக்தோன்.. ஏ தாஜோன்..கி… துனியா..’ என்ற ̀பியாஸா’ பட பாடலை பாடியபடி நகரை சுற்றி வந்தது. மெய்யின் ஆடைகள் நல்ல தரமானவை. நீண்ட வரலாறு அவற்றுக்கு இருந்தது. வரலாறு நெடுக தலைமுறை தலைமுறையாக மக்கள் அவற்றை மெருகேற்றியிருந்தார்கள். அதை ஒருவர் அணிந்திருந்தாலே, அது யாராக இருந்தாலும், அவரை மெய் என்று ஏற்றுக்கொள்வதற்கு உலகம் தயாராக இருந்தது. பொய்யின் அந்த உருவத்தை மெய்யாக உலகம் அடையாளம் கண்டு, அதன் பிரபலம் நாளுக்கு நாள் பரவலாகி, விரைவிலேயே அது ஒரு பெரிய செலிபிரிடியாகவிட்டது. ஒரு நாள் பொய்க்கு விழா எடுக்க முடிவு செய்யப்பட்டது. கோலாகலமான பெரிய வரவேற்பு அளிக்கப்பட்ட பின், பொய் மேடையேறியது. இதற்குள் கிட்டதட்ட முகமத் ரஃபி போலவே குரலை மாற்றி பாட பழகிவிட்ட மெய், ̀துனியா அகர் மில் பி ஜாயேதோ க்யா ஹை’ என்ற பியாஸா பட பாடலின் முதல் சில வரிகளை பாடி தன் உரையை துவங்கியது. மக்களுக்கு இந்தி தெரியாததோடு, பியாஸா படம் ̀பாபி, ஆராதனா..’ போன்று தமிழகத்தில் ஓடிய படங்களில் ஒன்றல்ல என்பதால், அந்த பாடலின் முரண் பொருத்தப்பாடு மக்களுக்கு விளங்கவில்லை. ஆனால் எதுவும் அவர்களை உறுத்தவில்லை. ஒரு மேடைபேச்சின் மிக வித்தியாசமான ஆரம்பம் அவர்களை கவர்ந்ததுடன், பாட்டின் இனிமையும் அவர்களை ஆட்கொண்டது. மக்கள் பெரும் ஆராவாரம் செய்தனர். பொய்யின் மேடை பேச்சு மக்களை வசீகரித்து கட்டி போட்டது. பேச்சின் இடையே அடிக்கடி “நான் மெய் பேசுகிறேன்!” என்று அழுத்தி சொல்லிக் கொண்டது. “உண்மையைத்தான் மட்டும்தான் நான் பேசுவேன்… நான் சொல்வதனாலேயே அது உண்மையாகிறது ” என்ற தர்க்கத்தில் ஆரம்பித்து பலத்த கைதட்டல்களின் போக்கில் “என் எதிரிகள் அனைவரும் பொய்யர்கள், ஏனெனில் அவர்கள் மெய்யாகிய என்னை எதிர்ப்பவர்கள்’ என்ற கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் நிறுவியது. பொய்யின் சொற்பொழிவு முடிந்தவுடன் கூட்டமே எழுந்து நின்று மரியாதை செய்தது. இதை தொடர்ந்து ஏராளமான கூட்டங்கள் பல்வேறு மட்டங்களில் நடந்தன. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் யூ ட்யூபர் ஒருவன் சந்தேகத்துடன், “ஐயா, உங்கள் குரல் மட்டும் கொஞ்சம் பொய்யைப் போல இருக்கிறதே?” என்று கேட்டான். பொய் புன்னகைத்து, “அவ்வாறு தெரிவது உன் புலன்களின் கோளாறு. உன் புலன்களின் தன்மைக்கு ஏற்பவே நான் உனக்கு தெரிவேன். உனக்கு பலவாறாக தெரிவதே என்னுடைய தனித்துவம்!” என்றது. கூட்டம் ஆர்பரித்தது. கேள்வி கேட்டவனை யாரும் அதற்கு பிறகு கவனிக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின் பொய் தான் அணிந்திருந்த ஆடையின் ஏராளமான நகல்களை தயாரித்து, அதை அணிந்த ஒரு தொண்டர் படையை தனக்கென உருவாக்கி கொண்டது. அவை மெய்யின் பல முகங்களாக விளப்பரப்படுத்தப் பட்டன. ஒரு நாள் பொய் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது, “மெய் என்று தனித்துவமான ஒன்று இதுவரை இருந்தததற்கு எந்த ஆதாரமும் இல்லை.” மறுநாள் எல்லாப் பத்திரிகைகளிலும் அது தலைப்புச் செய்தியாக வந்திருந்தாலும், மக்கள் அதை பொருட்படுத்தி ஒரு விஷயமாக விவாதிக்கவில்லை. ஆனால் அந்த செய்தி பலரால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு பொதுப்புத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. இன்னொரு பக்கம், தன்னை நிரூபிக்கும் முனைப்பிலேயே முப்பொழுதும் இருந்த மெய், தான் சொல்வதை செவி மடுக்க கூட பெரிய அளவில் யாரும் முன்வராத நிலையில், தனக்கு அவசர தேவை ஆடைகள்தான என்பதை உணர்ந்தது. ஆனால் யாரும் மெய்க்கு ஆடைகளை விற்க தயாராக இல்லை. கடையின் உள்ளேயே அனுமதிக்கவில்லை. “உன்னுடைய ஆதார் அட்டை எங்கே?” “என்னிடம் எந்த அடையாள அட்டையும் இல்லை.” “அப்படியானால் நீ யார்?” “நான்தான் மெய்.” கடைக்காரர் தலையசைத்தார். “மன்னிக்கவும். மெய் என்ற பெயரில் ஏற்கெனவே ஒருவர் பதிவு செய்து, அதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு ஆதார் அட்டையும் அவர் வைத்திருக்கிரார். வாக்காளர் அட்டையும் அவரிடம் உள்ளது. அவரே இந்த நாட்டின் அதிகாரபூர்வ மெய்.” “ஆனால் உண்மையில் அவன் பொய்!” கடைக்காரர் மெய்யை வெளியே தள்ளி கதவை மூடினார். அவ்வாறாக பல இடங்களில் நிராகரிக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் மெய் கதை ஆரம்பித்த இடத்திற்கே வந்து அந்த கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது. நீர் அமைதியாக இருந்தது. “நீரே... இங்கேதான் குளித்தபடி என் ஆடைகளை இழந்தேன். நீயாவது என்னை அடையாளம் காண்கிறாயா?” நீர் பதில் சொல்லவில்லை. ஒருவேளை நீர் பதில் சொல்லியிருக்கலாம். சோகத்திலும், விரக்தியிலுமே நாம் அஃறிணை பொருட்களுடன் பேசுகிறோமே ஒழிய, நீரும், மண்ணும், வானும் நம்முடன் உரையாடக்கூடிய சாத்தியத்தை நாம் உணர்ந்ததில்லை. மெய் மட்டும் விதி விலக்கா என்ன! நீரின் மொழியை புரிந்து கொள்ளும் அகராதியோ, பிரஞ்ஞையோ அதனிடமும் இல்லை. மெய் குனிந்து தன் முகத்தைப் கிணற்று நீரில் பார்த்தது. ஒரு கல்லை எறிந்ததும் எழுந்த அலைகளில் அதன் முகம் பல துண்டுகளாக உடைந்தது. ஒரு துண்டில் மெய் அழுதுகொண்டிருந்தது. இன்னொரு துண்டில் மெய் சிரித்துக்கொண்டிருந்தது இவ்வாறாக அன்பு, துக்கம், ஆத்திரம், கோபம், பயம், அருவருப்பு என்று மற்ற ரசங்களும் ஒவ்வொரு துண்டிலும் தெரிய, ஒரு துண்டில் மெய் அமைதியாக, “உண்மையில் நான்தான் மனமுவந்து எனது ஆடைகளை பொய்க்கு கொடுத்து விட்டேன்” என்று ஒப்புக்கொண்டது. மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த மெய் திடுக்கிட்டுப் பின்வாங்கியது. அந்த ஒப்புதல் யாருடையது? நீருனுடையதா? நீரில் தன் ஆழ்மனதின் பிரதிபலிப்பா? அல்லது இந்தக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதகனுடையதா? “அயோக்கியப்பயலே... எழுத்தாளன்னு உன்னையே ஏமாற்றி கொண்டிருக்கும் பதரே! கடைசியில் இது எல்லாம் உன் வேலைதானே?” “மெய் குறித்தும், பொய் குறித்தும் இருக்கும் குழப்பங்களை வைத்து மொழியின் மூலம் விளையாடவே இந்த கதையை எழுத ஆரம்பித்தேன். புத்திசாலித்தனமாக கதையை நகர்த்தினாலும், மெய் நல்லது, பொய் கெட்டது என்பதை வாசிப்பவர்கள் இறுதியில் புரிந்து கொள்வார்கள், புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், இப்போது எனக்கே சந்தேகமாக இருக்கிறது. பொய் மெய்யின் ஆடைகளைத் திருடியது தவறுதான். ஆனால், அந்த ஆடைகளை மெய் எங்கிருந்து பெற்றது? அதற்கு முன்னால் யார் அதை அணிந்திருந்தார்கள்? ஆடைகளுக்கு உண்மையான உரிமையாளர் என்று யாராவது உண்டா? நிர்வாணம்தான் மெய்யின் இயல்பென்றால், ஆடைகளை இழந்ததற்காக அது ஏன் துயரப்பட வேண்டும்?” இந்த கதையின் முதல் பிரதியை வாசித்துக் கொண்டிருந்த நண்பர் இந்த இடத்தில் கடுப்பாகிவிட்டார். “யோவ்... நீ கதையைச் சொல்ல வந்தயா? கேள்வி கேட்டு குழப்பி கழுத்தறுக்க வந்தயா?” “ரெண்டும் ஒண்ணுதானே?” முதல் வாசகர் புத்தகத்தை மூடி, “இந்தா நீயே பத்திரமா வச்சிக்க… யார் கிட்டயும் காட்டிராதே!” என்று பிரதியை திரும்ப கொடுத்தார். வாசகர்தான் கதையை படைக்கிறார் என்கிற கோட்பாடு ஒருபக்கம் இருந்தாலும், வாசகர் வாசிக்க மறுத்து பிரதி மூடப்பட்டு விட்டால், கதை என்பது இல்லாமல் ஆகிவிடுமா என்ன? குறைந்த பட்சம் கதை அத்துடன் முடிந்து விடுமா என்ன? வாசகர் புத்தகத்தை வாசிக்க மறுத்து புத்தகத்தை மூடுவதும் கதையிலேயே அதன் ஒரு பகுதியாக எழுதப்பட்டிருந்தால்? பல ஆண்டுகள் கழித்து, பொய் ஏற்கனவே புகழ்பெற்ற, ஆனால் காப்புரிமை செய்யப்படாத ஒரு பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியது. அந்த நிறுவனம் உண்மையான மெய்யை அறியும் கருவியைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. கருவியின் முன் நின்று ஒரு வாக்கியத்தைச் சொன்னால், அது மெய்யா பொய்யா என்ற பதில் உடனடியாக அறுதியிட்டு தெரிந்துவிடும். எல்லா அரசாங்க நிறுவனங்களும் அதை வாங்கின. நீதிமன்றங்களும் கூட அதை பயன்படுத்தின. தொலைக்காட்சி விவாதங்களில் அதற்கு நிரந்தர இடம் எப்போதும் இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் அந்த கருவியின் முன் பொய் நிற்க வேண்டியதானது. “நான் மெய்!” கருவி பச்சை விளக்கை எரியவிட்டது. கூட்டம் ஆரவாரம் செய்தது. கடைசி வரிசையிலிருந்து ஓர் இளைஞன் எழுந்து, “எனக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.” என்றான். அவனிடம் ஒலிவாங்கி கொடுக்கப்பட்டது. “ஒருவேளை இந்த கருவி பொய் சொன்னால் என்ன செய்வது?” அரங்கம் அமைதியானது. பொய் புன்னகைத்தது. “அப்படியொரு சாத்தியம் இல்லை. மெய்யை மட்டுமே அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.” இளைஞன் கேட்டான், “அதைச் சொல்வது யார்? உருவாக்கியவர் மேனிபுலேட் செய்திருக்கலாம் அல்லவா? ஒருவேளை மேனுஃபேக்சரிங் டிஃபெக்ட் ஏதாவது இருந்தால்?” பொய் அங்கே எந்த பதிலையும் அளிக்கவில்லை. அடுத்த நாள் அந்த இளைஞன் மனநலப் பிரச்சினையால் அவதிப்படுவதாகச் செய்தி வெளியானது. இன்னொரு செய்தி அவன் ஒரு வெளிநாட்டு அமைப்பின் கைக்கூலி என்று அறிவித்தது. அப்படியொரு கேள்வியே கேட்கப்படவில்லை என்ற மறுப்பும் வெளியானது. ஆனால் அவனுடைய கேள்வி பல இடங்களில் ஒலித்து பல மானுடவியல் ஆய்வுத்தாள்களில் -அவன் பெயர் குறிப்பிடப்படாமல்- பதிவானது. ஆயினும் பொய்யின் அந்தஸ்து குறையவில்லை. ஓரிரவு நகரத்தின் எல்லையில் ஒரு நிர்வாண மனிதன் நடந்து சென்றதாகச் சிலர் சொன்னார்கள். ஒரு சிறுவன் அவனைப் அணுகி, “ஸார், நீங்க யாரு?” என்று கேட்டான். மனிதன் ரொம்ப நேரம் யோசித்துவிட்டு, “எனக்குத் தெரியாது” என்றான். சிறுவன் அவன் கையைப் பிடித்துக்கொண்டு, “வெரி ஸ்வீட்… எனக்கும் என்னை யார் என்று தெரியாது.” இருவரும் நடந்தார்கள். இங்கே ̀முற்றும்’ என்று போட்டுவிடலாம். ஆனால் கதை ஒருவேளை இங்கேதான் தொடங்குகிறதோ என்னவோ! அல்லது அதே கிணற்றில் துவங்கிய வேறு ஒரு கதையும் இருக்கலாம். |