ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, April 01, 2006

இன்னும்...!

இன்னும் எத்தனை காலம்தான்...??!!

மீண்டும் டெகான் கொரோனிகிளில் இருந்து இன்று காலையில் படித்த செய்தி. இந்து பத்திரிகையின் இணையதளத்தில், என்னளவில் 'பினாயில் ஊற்றிகொண்டு' தேடுதேடென்று தேடியும், என் மானுடக் கண்களுக்கு இந்த செய்தி புலப்படவில்லை. மீறி வந்திருந்தால் மன்னிக்கவும். வரவில்லையெனில் செய்தியை படித்த பின், வெளிவராததன் காரணம், ஒருவேளை சிலருக்கு விளங்கலாம். அல்லவெனின் அதற்கான காரணத்தை அவரவர்களின் அரசியல் அகராதிப் படி மனதிற்குள் கற்பித்து கொள்ளவும்.

நாம் இதுவரை ஒரு 500 முறையாவது கேள்விப் பட்டது போல், மீண்டும் ராமேஸ்வரத்து மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நிகழ்தியிருக்கிறது. இரண்டு படகுகளில் இருந்த மீனவர்களைக் காணவில்லை என்று செய்தி சொல்லுகிறது. கச்சத்தீவு அருகில், இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாக சொல்லப்படும், ராமேஸ்வரத்திலிருந்து வந்த மீனவர்கள் நிறைந்த 300 படகுகளை 'விரட்டுவதில்' தொடங்கி, அவர்களை இந்திய கடற்பரபிற்குள் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது.

ஒரு படகு இலங்கை படையினரால் தீக்கிரையாக்கப் பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த அந்த படகிலிருந்த மீனவர்கள், படகு மூழ்கும் முன், நடுக்கடலில் குதித்து, நண்பர்களால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள். இன்னொரு சம்பவத்தில், ஒரு படகிலிருந்த மீனவர்களை தண்ணீரில் தள்ளிவிட்டு , அந்த படகை தங்களுடன் எடுத்து சென்றிருக்கிறது. இந்த மொத்த நிகழ்வில் இரண்டு படகுகளும் எட்டு மீனவர்களும் காணாமல் போயிருப்பதாக செய்தி சொல்லுகிறது.

இந்த செய்தியில் வந்த கடைசி பத்தி கவனத்திற்குரியது. மூன்று நாட்கள் முன்பு விடுதலை புலிகள் ஒரு சிங்கள கடற்படை கப்பலை வெடித்து தள்ளினார்கள். அதனால் இலங்கைப் படையினர் தங்களின் கண்காணிப்பை அதிகரித்திருக்கிறார்களாம். 'இதனால் இலங்கை கடற்படையினர் தமிழகத்து மீனவர்களை விரட்டியடிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதாக' போலிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்த சம்பவம் மீண்டும் மீண்டும் எழுப்பும் பல கேள்விகளை பின்னர் தள்ளிவைத்து ஒரு அடிப்டை கேள்வியை கேட்போம். இலங்கை கடற்பரப்பில், மீன் படித்ததாக கூறப்படும் மீனவர்களை, இலங்கை கடற்படை இந்திய கடற்பரப்பில் தனுஷ்கோடி கடற்கரை வரை துரத்தியிருக்கிறது. அங்கே மீனவர்கள் அலறி கூச்சலெழுப்பினால் கேட்கக் கூடிய தூரத்திலோ, அல்லது இந்த செய்தி போய் சேர்ந்து, உடனே நடவடிக்கைக்கு தயாராக இருக்கக் கூடிய இந்திய கடற்படை என்ன புடுங்கி கொண்டிருந்தது?

இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் நுழைந்ததாகவே வைத்துகொள்வோம். முற்றிலும் தண்ணிராய் இருக்கும் கடலில் இந்திய எல்லையையும், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பையும், சாதாரணப் படகுகளில் சென்ற மீனவர்கள் எப்படி அடையாளம் காண முடியும்? தவறி போனவர்களை (அல்லது இந்தி(ரா)யாவால் தாரை வார்க்கப் பட்ட, இலங்கை கடற்பரப்பில் மட்டுமே மீன் வளமாக சிக்கும் என்று போனவர்களை) கைது செய்வது, நடைமுறையாக இருக்கலாம். தாக்குதல் நடத்தவும், சுட்டு கொல்லவும், அதை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இதையே வழமையாய் செய்வதையும், இந்தியா அனுமதிப்பதும், சுனமி போல, கடலில் உள்ள எத்தனையோ ஆபத்துக்களைப் போல, இதையும் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாய் அந்த மீனவர்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்திய கடற்பரப்பில், அதன் இறையாண்மைக்கு சவால்விடும் வகையில், தன் உறுப்பை நுழைக்கும் அந்நிய நாட்டின் கடற்படை பற்றி, இந்திய கடற்படை எந்த அலட்டலும் காட்டவில்லை என்றால், இராமேஸ்வரம் கடற்கரை பக்கம் ரோந்துக்கு நிற்பது இந்திய கடற்படையா அல்லது இலங்கையின் கூலிப்படையா?

இதுவரை எத்தனை முறை நிகழ்ந்தாயிற்று என்று யாராவது புள்ளிவிவரம் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. என் கணிப்பின் படி ஒரு 500 மீனவர்களாவது இலங்கை கடற்படையினரால், இதுவரை கடந்த 15 ஆண்டுகளில் கொல்லப் பட்டிருப்பார்கள். உலகின் நான்காவது வலிமையான ராணுவம் வைத்திருப்பதாக சொல்லப் படும், இந்தியாவின் கடற்படை நிலைகொண்டு, கவனமாய் கண்காணித்து வரும் ஒரு பகுதியில், இந்தியாவுடன் ஒப்பிட்டால் ஒரு சுண்டைக்காயான ஒரு பக்கத்து நாட்டு ராணுவம் இத்தனை வெறியாட்டம் ஆடியிருக்கிறது. பாகிஸ்தான், சீனா என்றால் அதன் சதிவேலைகளை முன்வைத்து கூச்சல் வருவதாக கொள்ளலாம். (ஒரு பேச்சுக்கு) பூடான் ராணுவம் வந்து அடிக்கடி இந்திய எல்லையில் உள்ளவர்களை சுட்டுவிட்டு போனால், இங்கே எப்படி ஒரு கிளர்ச்சி நடக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

புலிகளின் கப்பல் ஒன்று, இந்திய கடற்பரப்பிலோ, அல்லது அப்படி பிறகு செய்தியில் சொல்லப்படும் அகில உலக பரப்பிலோ, போனால் அதை தடுத்து அதில் உள்ளவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல் நடத்தும். அதில் உள்ளவர்களை கைது செய்யும். நியாயம்தானே! அங்கே ஆயுதம் கொண்டு செல்வது இலங்கை அரசுக்கு மட்டுமே ஊறு விளைவிக்க கூடும் என்றாலும், ஒரு பொறுப்புள்ள இந்தியப் படை அதை எப்படி அனுமதிக்க முடியும்? ஆனால் இந்திய கடற்பரப்பில் நுழைந்து, அன்னிய நாட்டுப் படை இந்தியக் குடிமகன்கள் மீதும், அவர்கள் உடமைகள் மீதும் தாக்குதல் நிகழ்தி அட்டகாசம் செய்தாலும், காந்திய பாதையில் செல்லும் இந்தியப் படைக்கு அலட்டிகொள்ள எந்த தேவையும் வராது. இந்திய எல்லைக்குள் உறுப்பை நுழைப்பது, இலங்கை படைக்கு இது முதன் முறை அல்ல. இதற்கு முன் பலமுறை நுழைத்திருக்கிறது. ஒரு முறை இந்திய கடல் எல்லையில் இருந்த விடுகளின் சுவர்களில், குண்டுகளால் தடம் பதிக்கும் அளவிற்கு ஆட்டமாடி விட்டு திரும்பியிருக்கிறது. (யாரேனும் விரும்பினால் செய்திக்கான சுட்டியை சற்று சிரமம் எடுத்து தேடி எடுத்து போடமுடியும்.)

புலிகள் யாழ்பாணத்தை முற்றுகையிட்ட போது, எல்லா உடமைகளையும் இழந்து, இலங்கை ராணுவத்தால் ரத்தம் உரிஞ்சப்பட்டு (உவமை அல்ல, தங்கள் மருத்துவ தேவைக்காக ரத்தம் எடுத்த பின் நாட்டை விட்டு செல்ல அனுமதிக்கபடும்) ஈழத்தமிழ் மக்களை, நடுகடல் மணல் திட்டில், சோறு தண்ணி இல்லாமல் குழந்தைகளுடன் தவிக்க விட்டது. தமிழகத்து கடற்கரையில் நிலைகொண்டிருக்கும் கடற்படையின் ஏதோ ஒரு அட்மிரலோ, கமாண்டரோ, ஒரு வடக்கத்தியான், 'நாங்கள் எதற்காக அவர்களை மனிதாபிமான அடிபடையில் அனுமதிக்க வேண்டும்?' என்று டீவியில் தர்க்கபூர்வமாய் கேட்க, இங்கே ஆட்சியில் இருந்த திமுக அரசு தன் மாபெரும் துரோகத்தை மௌனத்தின் மூலம் நிகழ்திக் காட்டியது. இவ்வாறு புலிகளானாலும், நிராதரவான மக்களானாலும், இத்தனை கடுமை காட்டும் இந்தியா, தன்னுடன் எந்த விதத்திலும் ஒப்பிட இயலாத, தன்னைப் பார்த்து பயப்பட வேண்டிய நிலையிலுள்ள ஒரு அன்னிய ராணுவம், வெறியாட்டம் ஆடும் போதெல்லாம், கடற்கரையிலேயே நங்கூரமிட்டு வாளாவிருப்பதன் பிண்ணணி என்ன? வெறியாட்டம் நிகழ்ந்த பின்னும், நடவடிக்கை மட்டுமில்லாமல், அதை மீண்டும் தடுக்கும் கண்காணிப்பில் கூட இது வரை ஈடுபடுவதாய் பாவனை செய்யும் செய்தி கூட கிடையாது.

இந்தியப்படை ஏன் சும்மாயிருக்கிறது என்ற கேள்வியை விடுவோம். எது ஒரு சுண்டைக்காய் இலங்கைக்கு இத்தனை தைரியம் கொடுக்கிறது? இந்தியப் படைக்கு தெரிந்தே, அல்லது அதன் அனுமதியுடன் செய்யாவிட்டால், கோபத்தில் தும்மினால் கூட இலங்கையே காணாமல் போகக்கூடிய வலிமை கொண்ட ஒரு படை, தன்னை ஒன்றும் செய்யாது என்ற தைரியம் ஒரு சுண்டெலிக்கு எப்படி வருகிறது?

இந்தியாவில் பயங்கரவாத சதிச் செயல்களால் உயிரிழப்பு நேரும் போதெல்லாம், தொடர்ந்து சில நாட்களுக்கு எல்லா ஊடகங்களிலும் கூச்சலாக இருக்கிறது. என்னவோ இந்திய உளவு நிறுவனங்கள் எல்லாம், மனித உரிமை பேசுபவர்களின் சாட்டைக்கு பயந்து, சர்கஸ் காட்டுவது போல், 'தீவிரவாதத்தை நசுக்க வேண்டும், பொடா வேண்டும், போட்டு தள்ள வேண்டும்' என்று ஒரே கூச்சல். ஏதோ எங்கோ ஊடகங்களின் மூலையில் 'நட்டு கழண்டு போய்' நாலு பேர் மனித உரிமை, அரச பயங்கரவாதத்தின் மற்ற விளைவுகள் பற்றி பேசினால், இந்தியாவில் தீவிரவாதிகள் மீது வேட்டை நடக்காமலா இருக்கிறது? அதை மீறி அரசினால் முடிந்தது அவ்வளவுதான்! இந்த கூச்சலை எழுப்பும் யாராவது, இத்தனை முறை, ஒரு சுண்டைக்காய் ராணுவம் இந்திய குடிமக்களை சுட்டு கொன்ற நிகழ்வுகளை பற்றி வாயை திறந்து ஏதாவது சொல்லியிருக்கிறார்களா? கார்கில் தொடங்கி இன்றுவரை எழுப்பப் பட்ட கூச்சல்கள் என்ன? கார்கிலுக்கு நிதியளிப்பதில் முதலிடம் வகித்த தமிழகத்திலாவது ஒரு திடகாத்திரமான ஒரு குரல் ஒலித்திருக்கிறதா? சும்மா வெட்டி தலையங்கங்கள் தவிர்த்து, இந்திய அரசை இதை தடுக்கும் நடவடிக்கைக்கு நிர்பந்திக்க, எந்த வடிவத்திலாவது போராட்டம் நடந்திருக்கிறதா? சம்பந்த பட்ட மீனவர்கள், மற்றும் சில தமிழ் தேசியவாதிகளை தவிர மற்றவ்ர்கள் ஏன் சக இந்தியர்கள் கொல்லப் பட்டதை பற்றி வாய் திறக்கவில்லை?

இன்னும் எத்தனையோ கேள்விகளும், அதை முன்வைத்த புரிதல்களும் உள்ளன. இப்போதைக்கு (இந்த பதிவை எழுத மட்டுமே வேலையிடத்தில் தங்கி, நேரமும் ஆகிவிட்டதால், நிறுத்தி) இங்கே இந்த பதிவை முன்வைக்கிறேன். பின்னூட்டங்கள் மட்டுறுத்தலில் இருப்பதால் திங்கள் வரை இங்கே வெளிவர வாய்பில்லை. அதனால் எனது 'கூத்து' பதிவில் மட்டுறுத்தலை நீக்கியிருக்கிறேன். அங்கே பின்னூட்டமிட்டால் உடனடியாய் எல்லோரும் படிக்கவும், மேலே விவாதிக்கவும் சாத்தியமாகும். (பின்னூட்டங்கள் வந்தால்) தொகுத்து என் கருத்தை சேர்த்து பிறகு இடுகிறேன்.

Post a Comment

23 Comments:

Blogger சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

தமிழந்தானே என்ற இளக்காரம் மட்டுமல்ல. இலங்கையிடம் பயந்தான்.இல்லாவிடில் அவர்கள் சீனா பக்கம் சார்ந்து விடுவார்களாம்! ரீசண்டா நேப்பாளம் விடயத்தில் இதுதான் நடந்த்து.

4/01/2006 3:20 AM  
Blogger Machi said...

பல விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று. இது சிறிய முக்கியமான கடற் பகுதி இதை கூட பாதுகாக்க முடியாவிட்டால் எப்படி பரந்துவிரிந்த கடற்பகுதியை பாதுகாப்பார்களோ? ஆனா பேசுவது என்னமோ "Blue Navy".
மலாக்கா நீர்ச்சந்தியில் போகிற கப்பல்களுக்கு பாதுகாப்பை தர இந்திய கடற்படை, அதற்கான பேச்சு. முருகா! மன்னார் குடாவில் சொந்தநாட்டு மக்களை காப்பாற்ற முடியாதவர்கள் எப்படி மலாக்கா நீர்ச்சந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு தருவார்களோ.

4/01/2006 9:09 AM  
Blogger ROSAVASANTH said...

சிவா, குறும்பன் நன்றி.

பின்னூட்டங்கள் வந்து குவியாவிட்டாலும், ஓரளவிற்கு வரும் என்று எதிர்பார்த்து இன்று வேலையிடத்திற்கு வந்தேன். மிகுந்த ஏமாற்றம்தான். பலருக்கு இந்த பிரச்சனை குறித்து கருத்து இருக்கும், ஏனோ இப்போது அதை வெளிப்படுத்தவில்லை என்று எடுத்து கொள்கிறேன்.

ஒரு பக்கம், மற்ற பிரச்சனைகளுக்கு தார்மீக கூச்சல் போடும் ஹிபாக்ரடிக்குகள், இங்கே வாய்மூடியிருந்தால் பிரச்சனை இல்லை. அப்படி இருப்பது இயற்கையானது மட்டுமின்றி நல்லதும் கூட. வாயை மூடி இருப்பது அவர்களின் முக்கியமான அணுகுமுறைகளில் ஒன்று. அதையே இந்த பிரச்சனை குறித்து உண்மையான அக்கறை கொண்டவர்களும் செய்யகூடாது, வாயை திறந்து, தமிழன்/மீனவன் அல்லது ஏதோ ஒரு அரசியல் காரணத்திற்காக, குறிப்பிட்ட இந்திய குடிமகன்களின் உயிரை இந்திய கடற்படை காப்பாற்றாமல் துச்சமாக மற்றவர்கள் பறிக்க அனுமதிப்பதையும், அது ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் மற்றவர்கள் இருப்பதையும் வன்மையாய் கண்டித்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். நன்றி.

4/02/2006 3:16 AM  
Blogger நியோ / neo said...

ரோசா அவர்களே

இந்தப் பிரச்சனை குறித்து மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவரும் இங்கே எழுதியிருக்கிறார்:

சிங்கள மீனவர்கள் நமது கடல் எல்லையில் எத்தனை வேண்டுமானாலும் நுழையலாம்; அவர்களைக் கைது செய்தாலும் உடனே காப்பாற்றுவதற்கு இந்திய வெளியுறவுத்துறை இருக்கிறது!

இது வடவர்களின், இந்தியப் பார்ப்பனீய 'அரசாங்க இயந்திரத்தின்' ஆதிக்க மனோபாவத்தையும் தமிழைனத்தின் மீதான வெறுப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் கொள்ளத்தான் வேண்டும்.

சேதுக்கால்வாய்த் திட்டம் முடிவடைந்து செயல்படத் துவங்கி விட்டால், இந்தியத் தென் எல்லையில் இலங்கைக் கடற்படையினரை உள்ளே வரவிடாமல் செய்ய இந்தியக் கடற்படை செயலாற்றும் என்று சொல்லப்பட்டாலும், அதில் அரசியல் முன்னெடுப்புகளும் அவசியம் எனத் தோன்றுகிறது.

செய்யக் கூடிய சில விஷயங்கள் :

1. தமிழக மீனவர்கள் செத்தால் கூடப் பரவாயில்லை என வேண்டுமென்றே இந்திய கடற்படை மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயல்படுகிறது எனவும், இந்த நிலை நீடித்தால் அது உள்நாட்டுக் குழப்பத்தை உண்டாக்கிவிடும் என்பதையும் வலியுறுத்தி இந்திய நாடாளுமறத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரவேண்டும்

2. இலங்கைக் கடற்படைக் காடையர்களுக்கு எதிராக தமிழக மீனவர்கள் பாதுகாப்புப் படை என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதற்கு ஆயுதம் வழங்கி - (இந்திய அரசை செயல்படத் தூண்ட ) ஒரு அச்சுறுத்தல் போலச் செய்யலாம்!

3. முக்கியமாக - 1970-களில் கச்சத்தீவை இலங்கை அரசின் வசம் ஒப்படைத்ததை நிராகரித்து மீண்டும் இந்திய நாட்டினோடு கச்சத்தீவையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - இது தமிழக தென் கரையோர மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

4. சேதுக் கால்வாய் நிறைவேறியபின் - கொழும்புவின் வர்த்தகத்தை முற்றாக ஒழித்துக் கட்ட எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து - இலங்கை அரசை இந்த மீனவர் - மீன்பிடி விஷயத்தில் பணியச் செய்யுமாறு Strategy வகுக்க வேண்டும்.

5. தமிழக மினவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்கள், எண்ணையும், டீசலும் கடத்தித் தருபவர்கள் - ஆகவேதான் இலங்கைக் கடற்படை அவர்களைக் குறிவைக்கிறது - என்பது போன்ற எச்சித்தனமான அயோக்கிய வாதங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்திபோலவும் , செய்தி அலசல் போலவும் போடுகிற தமிழக-இந்திய கோயபல்ஸ் இதழ்களை/இதழாளர்களை நடுத்தெருவில் வைத்து செருப்பால் அடித்துத் திருத்துவது! ( வேறென்ன செய்ய அதுகளை?!) :)

4/02/2006 4:45 AM  
Blogger SnackDragon said...

ரோசா,
உங்கள் ஆதங்கம் புரிகிறது. இவ்விடயத்தில் கவனிக்கப்பட வேண்டியது இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இருக்கும் உறவைப்பொறுத்துதான் எதுவும் நடக்கும். மத்திய அரசின் நிலைப்பாடு புலிகள் விடயத்தில் எதுவாகிலும் , மீனவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தவிர்க்கபடவேண்டியது. அரசு அளவில் இந்த செயல் பாட்டை பெற்றுத்தர தமிழகத்தில் இருந்து ஒரு குரலோ,அழுத்தமோ தேவைப்படுகிறது. திருமாவோ, அல்லது வேறு யாரின் உதவியாலோ இது வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம்.

4/02/2006 8:10 AM  
Blogger Muthu said...

தமிழ், தமிழர் என்றெல்லாம் பேசுவது ஆபாசம் என்ற கட்டமைப்பை இதுவரை கொண்டு வந்து நிரவிய மக்களைத்தான் இதற்கு குற்றம் சாட்ட வேண்டும்.

இலங்கை தமிழனோ, இந்திய தமிழனோ மீன் பிடிக்க போன இடத்தில் குருவியை போல் சுட்டு தள்ளப்படும்போது அவர்கள் இலங்கை கடற்பகுதியை தாண்டி போனதினால் சுடப்பட்டார்கள் என்றும் அவர்கள் பெட்ரோல் கடத்தினார்கள் என்றும் கூசாமல எழுதுபவர்களை என்ன சொல்லுவீர்கள்?

இலங்கையில் உள்ள தமிழர்கள் உண்மையில தமிழர்களே இல்லை என்று சில பத்திரிக்கைகளில் எழுதினார்கள்..

இங்கு தமிழ் மீனவர்களை பற்றி நீங்கள் எழுதி உள்ளீர்கள் என்றால் சாரி..தமிழனுக்கு சுரணை கெட்டு ரொம்ப நாள் ஆகிறது.அதையும் கிண்டல் செய்து சிரிக்க ஆரம்பித்து பலநாள் ஆகிறது.

4/03/2006 3:31 PM  
Blogger Muthu said...

இலங்கை,பங்களாதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள் முதற்கொண்டு இந்திய நாட்டை கிள்ளுகீரையாக எண்ணாத ஏதாவது ஒரு நாடு நம் அருகில் உள்ளதா? சொல்லுங்கள் பார்ப்போம்.

4/03/2006 3:32 PM  
Blogger ஜோ/Joe said...

மீனவன் என்றால் இந்தியாவில் ,அதிலும் தமிழகத்தில் அரசுக்கு கிள்ளுக்கீரை .அன்னிய நாட்டிடமிருந்து தன் நாட்டு மீனவனை காப்பாற்ற வக்கில்லாத அரசு ,இதுல வல்லரசு கனவு வேற..கேவலம்

4/03/2006 3:40 PM  
Blogger ஜோ/Joe said...

மீனவர்கள் நீண்ட கடற்கரையில் நீளவாட்டில் வசிப்பது அரசியலில் அவர்கள் சாபக்கேடு .உதாரணமாக அதிகமான மக்கள் இருந்தாலும் அவர்கள் தொகுதி ரீதியாக சமமாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள் .உதாரணமாககுமரி மாவட்டத்தில் லட்சத்துக்கு அதிகமான மீனவ ஓட்டுக்கள் இருந்தாலும் ,அவை 4 சட்டமன்ற தொகுதிகளில் பிரிக்கப்பட்டுள்ளன..இதனால் அவர்கள் பிரதிநிதிகளாவது கணிசமாக தவிர்க்கப்படுகிறது .இது மீனவர்களின் சாபக்கேடு.

4/03/2006 3:51 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா அவர்களே ,இப்பதிவிற்கு சம்பந்தமில்லா பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் .சமீபத்திய தேர்தலில் உங்கள் நிலைப்பாடு ,ஆதரவு குறித்து ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

4/03/2006 3:53 PM  
Blogger ROSAVASANTH said...

எல்லோருடைய பின்னூட்டங்களுக்கும் நன்றி.

ஜோ, நானும் எழுத நினைத்திருந்தேன். ஒரு பக்கம் முந்தய தேர்தல்களை போல அவ்வளவாய் ஆர்வம் இப்போது இல்லை. அது தவிர மற்றவர்கள், குறிப்பாய் தமிழ் சசி, குழலி, மாலன் என்று பலர் நல்லபடியாய் எழுதியிருக்கிறார்கள். உங்களின் கலைஞர் பற்றிய பதிவில் நடந்த விவாதங்களும் முக்கியமானவை, குறிப்பாய் சுமுவின் ஆங்கில பின்னூட்டம். ஏற்கனவே பலர் நானும் எழுத நினைத்தவைகளை (இன்னும் நன்றாக) சொல்லிவிட்டதால் எழுதவில்லை. எனினும் நீங்கள் கேட்டுகொண்டதால், தேர்தல் வரும் முன், நிச்சயமாய் ஒரு பதிவு எழுதுகிறேன். கேட்டுகொண்டதற்கு மிகவும் நன்றி.

4/03/2006 4:10 PM  
Blogger ஜோ/Joe said...

ரோசா அவர்களே!
மிக்க நன்றி.உங்களுக்கு வசதிப் படும் போது கண்டிப்பாக எழுதுங்கள் .அதில் பயனுள்ள கருத்துக்கள் இருக்கும் என்பதால் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

4/03/2006 4:18 PM  
Blogger இராம.கி said...

அன்பிற்குரிய ரோசாவசந்த்,

இந்தியா என்பது பலதேசங்கள் நிறைந்த ஒரு நாடு (multinational country) என்ற கருத்தை இன்றைய அரசியலாரில் பலரும் ஒப்புக் கொள்ளவில்லை. பேராயம் (congress), பாரதிய சனதா, இன்னும் அந்தக் கால சனதாவின் இந்தக் கால உதிரிக் கட்சிகள் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் எனப் பலவும் (பொதுவுடைமையர் சிலர் வறட்டு வாதம் பேசி இது பற்றி ஓடி வரலாம்.) ஏற்றுக் கொண்டதில்லை. தேசிய இனங்களை முன்னிறுத்தும் திராவிடக் கட்சிகள், அகாலி தளம், அசோம் கண பரிசத் போன்ற கட்சிகளும் ஒரு தெளிவில்லாமல், அதிகாரத்தில் பங்கு கிடைத்தவரை சரி என்றே இருந்து வருகிறார்கள். எல்லாமே வணிக அரசியல் என்று ஆகிவிட்டது. இந்தியா ஒரு தேசியக் குடியரசு (national republic) என்றே இன்றைய நடுவண் அரசு சொல்லிவருகிறது. இந்தியாவின் அதிகார வருக்கம் (bureaucracy) அரசியலாருக்கு அதைத்தான் பாடமாகச் சொல்லி வருகிறது. இவர்களும் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள்.

இந்தச் சிந்தனை மாறாத வரை தமிழ்நாட்டிற்குத் தெற்கே நடக்கும் சிக்கல்களை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாது. கால காலமாய் சிங்கள அரசிற்குச் சார்பாகவே இந்திய அரசு நடந்து வந்திருக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில் ஈழப் போராளிகள் தமிழ்நாட்டில் வந்து போர்ப் பயிற்சி பெற்றதும் பின் இங்கிருந்து மீண்டும் அங்கே விடுதலைப் போரில் போராடப் போன போதும் நடந்தது ஒரு புறனடையாகத் (exeception) தோன்றியது; அவ்வளவுதான். உண்மையில், இவர்கள் இந்திய அரசிற்குக் கூலிப் படையாக இருப்பார்கள் என்றே இந்திய அரசாங்கம் நினைத்தது. அதனால் தான் ஆதரவும் பயிற்சியும் கொடுத்தது. ஆனால் போராளிகள் தங்களுக்கென்று சொந்தச் சிந்தனை உண்டு என்ற வகையில் இந்தியத் தடந்தகை(strategy)க்கு உடன்படாமல் போனார்கள். பின்னால் நிலைமை மாறி இந்தியப் பெரும்படையே ஈழப் போராளிகளோடு போரிடும் நிலை ஏற்பட்டது.

இப்படி நடந்து சூடு கண்ட காரணத்தால், இந்திய அரசு, இன்றைய நிலையில் சிங்களப் பேரினவாதத்திற்குச் சார்பாகவே நிலையெடுக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதில் நாற்பது என்ன நாலாயிரம் இந்திய மீனவர்கள் இறந்தாலும் இந்திய அரசாங்கம் அதைக் கண்டு கொள்ளாது. இந்திய அரசின் தடந்தகை தன்னைச் சார்ந்தது; தன்னுடைய கடற்புறத்தில், அதாவது அரபிக் கடலில் குசராத் தொடங்கி, சுற்றிவந்து இந்துமாக் கடலும், பின் கிழக்கில் வங்கக் கடலில் வங்காளம் வரைக்கும் வல்லரசுகள் யாரும் வந்துவிடாவண்ணம் வல்லாண்மை காட்டுகிறது; அந்தத் தடந்தகையில் அருகில் உள்ள நாடுகள் யாரும் தன்னோடு முரண்பட்டு தனக்குப் பகைநிலை எடுத்துவிடக் கூடாது; அப்படி எடுத்தால் அதில் அமெரிக்காக்காரன் வந்து உட்கார்ந்து கொள்ளுவான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

சிங்கள அரசின் கப்பற்படையோடு இந்தியக் கப்பற்படை சண்டைக்குப் போனால், சிங்கள அரசு உறுதியாக அமெரிக்கா, பாக்கிஸ்தான் என்று ஒரு வகை ஆழமான உறவில் போய்விடும் (இப்பொழுது அவர்களுக்கு இடையே இருப்பது ஒரு ஆழமில்லாத உறவே) என்ற ஒரே சிந்தனையில் தான் சிங்கள அரசை இந்திய அரசு எதிர்ப்பதும் இல்லை; ஈழம் மலர்வதை விழைவதும் இல்லை; கச்சத்தீவைப் பெறுவதும் இல்லை; தமிழ்நாட்டு மீனவர் அவ்வப்பொழுது சுடப்படுவதையும், படகுகளை வாரிக் கொண்டு போவதையும், அவ்வப்போது மீனவரைப் பிடித்து மன்னாருக்குக் கொண்டுபோய் அலைக்கழித்து ஆறுமாதம், ஓராண்டு கழித்து விடுவதையும் கண்டுகொள்ளவும் இல்லை.

பொதுவாக, இந்திய நாடு விடுதலையானதில் இருந்து நடந்துவரும் நிகழ்வுகளை தடந்தகைக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஒரு கண்ணில் வெண்ணெய், இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலை புலப்படும். கென்யாவில், உகாண்டாவில், சாம்பியாவில் குசராத்திகள் போன்றோர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கும், பர்மாவில், மலேசியாவில், இலங்கையில் தமிழர் அடிபட்டால் இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்டதில்லை; சும்மா பேருக்கு ஏதேனும் செய்யும்; பின்னால் தன் வேலையை நிறுத்திக் கொண்டுவிடும். இவற்றை எல்லாம் எழுதப் போனால், சொல்பவனைக் குறுகல் புத்தி என்று சாடுபவர்கள் தான் மிகுந்து நிற்பார்கள். தமிழன் ஏமாளியானது பல்லாண்டு கால வரலாறு. இப்பொழுது நீங்கள் அந்தப் புலனத்தை மீண்டும் எடுக்கிறீர்கள்.

என் கோவமெல்லாம் நடுவண் அரசின் அரசியலாரிடமோ, அதிகார வருக்கத்திடமோ கிடையாது; நமக்கென்று வாய்த்திருக்கிறார்களே ஒரு சில தலைவர்கள்; அவர்களைப் பற்றித் தான். உள்ளே கிடக்கும் முரண்பாடுகளைத் தீர்க்காமல், இந்தக் குமுகாயத்தை அணிதிரட்டாமல் வெளிமுரண்பாடுகளைப் பற்றித் தமிழ்க் குமுகாயம் பேசி என்ன பலன்?

மீனவர்களுக்காக வருந்தத்தான் முடியும்.

அன்புடன்,
இராம.கி.

4/03/2006 6:02 PM  
Blogger ROSAVASANTH said...

//இலங்கை,பங்களாதேஷ், பர்மா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு, நேபாள் முதற்கொண்டு இந்திய நாட்டை கிள்ளுகீரையாக எண்ணாத ஏதாவது ஒரு நாடு நம் அருகில் உள்ளதா? சொல்லுங்கள் பார்ப்போம். //

முத்து சொல்வதை ஏற்றுகொள்ள முடியவில்லை. இந்தியாவை சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்குமே-பாகிஸதான் உட்பட- இந்தியாவின் ராணுவபலம் பற்றிய பயம்தான் இருக்கிறது. பாகிஸ்தான் சீனா பல சதிவேலைகளில் ஈடுபடலாம். அது வேறு விஷயம். சீனாவிற்கு இந்தியாவிடம் பயம் இல்லாமலிருக்க காரணம் இருக்கலாம். பாகிஸ்தானின் பலம் இந்தியா அளவிற்கு இல்லாவிட்டாலும், அணுகுண்டு இருப்பதால் நேரடிப் போர் என்றென்றைக்கும் தவிர்க்கப்படும் நம்பிக்கை இருக்கலாம். மற்றபடி மற்ற நாடுகள் இந்தியாவை பார்த்து பயப்பட்டமலிருக்க காரணமில்லை. அது இந்தியாவின் தன் இருப்பு சார்ந்த அணுகுமுறை மற்றும், தன் குடிமக்கள் (என்று சொல்லிகொள்பவர்கள்) பற்றிய அக்கறையின்மை மட்டுமே காரணம்.

4/03/2006 6:09 PM  
Blogger ROSAVASANTH said...

இராம.கி ஐயாவின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்கள் சொல்வதை நிச்சயமாய் பொதுவாய் ஏற்றுகொள்கிறேன்.

ஈழம் மலர்வதிலும், ஈழதமிழர் விஷயத்திலும் கண்ணில் சுண்ணாம்பு கொண்டு இந்தியா இருப்பதற்கு, பொதுவாய் (கேள்விகள் இல்லாத ஏக)இந்திய தேசியத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களால் பல நியாயங்களை கற்பித்து சொல்லமுடியும். இந்த விஷயத்தில் அப்படி எதையும் சொல்லமுடியாததை முன்வைத்தே இந்த பதிவு.

அடுத்து, அமேரிக்கா பாகிஸ்தான் சீனா பக்கம் இலங்கை போய்விடுமோ என்ற அச்சத்தில்தான் இந்தியா வாளாவிருக்கிறது என்று சொல்வதும் நியாயமானதாய் எனக்கு தோன்றவில்லை. அந்தப் பக்கம் இலங்கையை போகவிடாமல் இலங்கையை தாஜா செய்துகொண்டே, மீனவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கும் குறைந்த பட்ச வேலையையாவது இந்தியாவால் நிச்சயம் செய்யமுடியும். மேலும் இந்த வாதம் உண்மையிலேயே வலுவுள்ளதா என்று தெரியவில்லை. இந்த இந்த நாடுகள் எதிரணிக்கு போயிவிடக் கூடாது என்பதற்காக அமேரிக்கா யாருக்கும் பல்லக்கு தூக்கியதாகவோ, தனது நலன்களில் சமரசம் செய்ததாகவோ தெரியவில்லை. இதன் அடிப்படை பிரச்சனை தமிழர் பிரச்சனைகள் குறித்த மிகப் பெரிய அலட்சியம் மட்டுமே. நீங்கள் சொல்வது போல நிச்சயமாய் நமது தலைவர்களும், எந்த முனகலும் எழாத தமிழ் சூழலும் இதற்கு காரணம். குறைந்த பட்சம் முனகும் வேலையாவது நாம் செய்யவேண்டும். கருத்துக்கு நன்றி.

4/03/2006 6:28 PM  
Blogger Srikanth Meenakshi said...

வசந்த், படித்த உடனேயே பின்னூட்டமிட நினைத்தேன், ஆனால் கடைசி பத்தி சற்று குழப்பி விட்டது...

இந்த விஷயம் என்னிடத்திலும் மிகவும் கோபத்தை உண்டு பண்ணும் விஷயம்தான். உண்மையில் இப்படி நிகழ்வதற்கு என்ன காரணங்கள் என்று தெரியவில்லை - சரியான காரணங்கள் இருக்கவே முடியாது என்றாலும், அயோக்கியத்தனமான காரணங்களாகவே இருந்தாலும் அவை என்னவாக இருக்கும் என்று கூட ஊகிக்க முடியவில்லை.

இந்த விஷயத்தில் குரல் கொடுக்க வேண்டிய நாற்பது பேரும் என்னத்தைப் "பறித்து"க் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.

மிகவும் விசனப்படுத்தும் இச்செய்தியைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

ஸ்ரீகாந்த்

4/04/2006 2:00 AM  
Blogger Vassan said...

துயர் தொடரும் நிகழ்வுகள். வருத்தமாய் உள்ளது. எங்கோ உட்கார்ந்து கொண்டு வேறு என்ன செய்ய முடியும்..?

மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணுவது, இந்திய நாட்டின் அதிபர், இராமேசுவர கடற்கரைக்காரர் என்பது.. நல்லவர், எளிமையானவர், விஞ்ஞானி, இதெல்லாம் ரொம்ப சரி.. ஆனால் என்ன பயன்..

முழு அதிகாரம் இல்லாத பதவி வகிக்கிறவர் என்றாலும், முனைந்தால் இலங்கை தூதுவரை கூப்பிட்டு மரியாதையாக எச்சரிக்கை செய்ய முடியாதா.. கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் போய் நட்பு உண்டு பண்ணுகிற தலைவர் இவர்.

காலகாலமாய் ஏழ்மையிலும், இன்னற்களிலும் செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் இந்திய/தமிழ் மீனவர்கள் பாதுகாப்பிற்காக ஒன்றும் செய்யாத ஏ.பி.ஜே பற்றி நினைத்தால் வெறுப்பாய் இருக்கிறது..

4/04/2006 10:41 AM  
Blogger ROSAVASANTH said...

ஸ்ரீகாந்த், வாசன் நன்றி.

இன்னும் மூன்று நாட்களுக்கு வேலை அதிகம். சில நாட்களில் வந்து விரிவாய் மீண்டும் எழுத உத்தேசம்.

மிக எதேச்சையாக வந்தியத்தேவன் எனக்கு எழுதிய (http://vanthiyathevan.blogspot.com/2006/04/1.html) எதிர்வினையை பார்த்தேன். இந்த பிரச்சனை விவாதிக்கப் பட துவங்குவதே ஒரு நல்ல விஷயம்தான் என்று நான் பார்கின்ற வகையில், இது ஒரு நல்ல அறிகுறிதான். ஆனால் வந்தியத்தேவனின் பதிவை நான் தவறவிட்டிருக்கக் கூடும். வந்தியதேவனுக்கு என் பதிவில் ஒரு பின்னூட்டமிட்டு, தன் எதிர்வினை குறித்த செய்தியை தருவதில் மனச்சங்கடங்கள் ஏதாவது இருக்கலாம். அப்படி இல்லாதவர்கள், இந்த பிரச்சனை குறித்து எழுத நேரும்போது ஒரு வரி என் பதிவில் தட்டிவிட்டால் நன்றியுடையவனாக இருப்பேன்.

4/04/2006 6:30 PM  
Blogger Vanthiyathevan said...

ரோஸா,

//வந்தியதேவனுக்கு என் பதிவில் ஒரு பின்னூட்டமிட்டு, தன் எதிர்வினை குறித்த செய்தியை தருவதில் மனச்சங்கடங்கள் ஏதாவது இருக்கலாம்.//

அப்படியெதுவும் எனக்குக் கிடையாது. எனது எதிர்வினையை வெளியிட்டவுடன், தங்களின் கூத்து வலைப்பதிவில் எனது பதிவின் சுட்டியோடு பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

உங்களது இப்பதிவினில் பின்னூட்டம் விட வேண்டாம்; கூத்து பதிவில் பின்னூட்டமிட கேட்டுக் கொண்டதால் அங்கே பின்னூட்டமிட்டேன். மேலும் இடுகையின் கீழிருக்கும் தேதியின் மீது கிளிக்கினாலே உங்களது பதிவின் பின்னூட்டங்கள் தெரிய வருகின்றன. நான் நீங்கள் (குறிப்பிட்ட இப்பதிவில் பின்னூட்டம் விட வேண்டாம் என்று கூறிவிட்டு) பின்னூட்டப் பெட்டியினை "Diable" செய்துள்ளதாய் குழப்பமடைந்தேன்.

இதை பற்றி விரிவாக விவாதிக்கவே விரும்புகின்றேன். இது குறித்து நான் மேலும் எழுதும்போது எங்கு பின்னூட்டமிட்டு உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று சொல்லுங்கள்.

எனது முந்தைய பின்னூட்டம்:
http://www.blogger.com/comment.g?blogID=23575560&postID=114405854863662330

நன்றி.

4/05/2006 12:20 AM  
Blogger ROSAVASANTH said...

நேற்று நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டத்தை நான் எழுதி, வேலையை விட்டு செல்லும்வரை,'கூத்து' பதிவில் உங்கள் பின்னூட்டம் வந்ததாக தெரியவில்லை. மின்னஞ்சலிலும் இன்றுதான் பார்த்தேன். அதனால்தான் அப்படி எழுதினேன். மற்றபடி 'எழுதப் போகிறேன்' என்று தகவல் சொல்லியபின், உங்கள் பதிவில் வந்து எட்டி பார்த்து தெரிந்து கொள்வதில் எனக்கு பிரச்சனையில்லை. மற்றபடி இது போன்ற விஷயங்களில் அடுத்தவர் சொல்வதை, அப்படியே ஏற்றுகொள்வதுதான் என் வழக்கம். அதனால் தகவலுக்கு நன்றி.

4/05/2006 3:56 PM  
Blogger Vanthiyathevan said...

ரோஸா,

விடுபட்டது:

பதிவு 4: http://vanthiyathevan.blogspot.com/2006/04/4.html

நன்றி.

4/06/2006 8:45 PM  
Blogger Vanthiyathevan said...

இறுதியாக:

http://vanthiyathevan.blogspot.com/2006/04/5.html

நன்றி.

4/06/2006 10:13 PM  
Blogger ROSAVASANTH said...

வந்தியத்தேவனுக்கு கடைசியாய் எழுதியது. அடுத்தவாரம் மொத்தமாய் எல்லவற்றை பற்றியும்...

வந்தியதேவன்,

ஏற்கனவே குறிப்பிட்டபடி நிறய பல விவரங்களுடன் எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு(இருப்பதாக நீங்களே சொல்லும்) அனுபவமும் எனக்கு கிடையாது. என் முதல் பதிவும் சரி, தொடர்ந்த பதிவுகளும் சரி, மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சனைகள் குறித்த விபரபூர்வமாக இல்லை என்பதை ஒப்புகொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பிரச்சனை குறித்து பேசும் பலருக்கும் அவையெல்லாம் தெரிந்திருக்கிறதா என்பதும் சந்தேகமே.

வழக்கம் போல பலர் செய்வது போல், இப்படி மொட்டையாக, பல குற்றச்சாட்டுக்களை கூறி செல்லாமல், ஓரளவிற்காவது நான் எழுதியதை நீங்கள் எதிர்கொண்டிருந்தால் நிச்சயம் மனமுவந்து என் கருத்தை மற்றி கொண்டு, உங்களை பாராட்டுவதில் எனக்கு எந்த மனத்தடையும் இருந்திருக்காது.

திரிப்பது, உள்நோக்கம் கற்பிப்பது இவற்றில் யார் முண்ணணியில் நிற்கிறார்கள் என்று நீங்களே பரிசீலித்து கொள்ளலாம். நான் ஒரு தர்க்கத்திற்கு கேட்ட கேள்வியை திரித்து, என்னை புலிகளின் ஆதாரவாளன் என்றும், 'இதுதானா உங்கள் பிரச்சனை?' என்று திரித்தது நீங்களா நானா? நான் தமிழ்தேசியம் என்பதை எதிர்பதற்கு பல ஆதாரங்கள் என் பதிவிலேயே இருக்கும் போது, அந்த சிமிழில் அடைத்தது என்ன விவாத நேர்மை?

சரி, நான் என்ன திரித்து விட்டேன் என்று எடுத்துக் காட்டமுடியுமா? சில நேரங்களில் ரோசா போல சில மனிதர்கள் எழுதுவதற்கு எதிர்வினையாய் எழுத வந்தீர்களா அல்லது, மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு கொதித்து எழுந்து எழுத வந்தீர்களா? முதலில் மனதை தொட்டு சொல்லிப் பாருங்கள்.
உங்களின் முதல் பதிவை முன்வைத்து பேசலாம், நான் என்ன வகையில் திரித்திருக்கிறேன் என்பதை. இந்தியா மீதான என் தாக்குதலை முன்வைத்துதான் எழுத வந்தீர்கள் என்பதை உங்கள் பதிவின் வரிகளை வைத்து பேசுவது மிக எளிது. என்ன திரித்திருக்கிறேன் என்று உங்கள் பதிவை வைத்தே நீங்கள் பேசலாமே!

அடுத்து நீங்கள் இத்தனை பதிவுகளில் நீங்கள் அதிகமாய் பேசிய பிரச்சனை இலங்கை மீனவர்களுக்கும், தமிழகத்து மீனவர்களுக்கும் உள்ள ஒரு பிரச்சனை. நான் அதை பற்றி பேசுவது (இந்த பிரச்சனையின் போது) திசை திருப்பல் என்கிறேன். ஈழத்தமிழ் மீனவர்களின் மீன் பிடிதொழில் பாதிக்கும் காரணத்திற்கும், இலங்கைப் படை தமிழகத்து மீனவர்களை தாக்குவதற்கும் தொடர்பிருந்தால் இதை பேசுவதில் பொருள் இருக்கும். ஈழத்து மீனவர்கள் மீன் பிடிக்க தடையிருந்த காலத்திலும், இதே தாக்குதல்கள் நடந்தனவே. மேலும் இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கும், இந்திய எல்லையில் நடந்த தாக்குதல்களுக்கும், இந்திய எல்லையில் நுழைவது குறித்து இந்தியா அலட்டி கொள்ளாதது பற்றியும் மட்டுமே நான் மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறேன். எனக்கு பதில் சொல்வதாக உள்ள இரண்டு பதிவுகளிலும் அதற்கு உருப்படியான பதில் இல்லை என்பதை, நீங்களே நிதானமாய் வாசிக்க நேர்ந்தால் புரிந்துகொள்ள கூடும்.

என் பதிவில் காட்டமான வார்த்தைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுனோடு கூடவே விஷயம் பற்ற்றியும் பேசியுள்ளேன். வார்த்தைகளை மட்டும் பிடித்து கொண்டு தொங்குவீர்கள் என்பது தெரியும் என்றாலும், அப்படி எழுதாவிட்டாலும் விஷயத்தை யாரும் பிடித்து தொங்கப் போவதில்லை என்பதால், உங்களுக்கு அப்படி உதவுவதில் எனக்கு பிரச்சனையில்லை. ஏதேனும் ஒரு இடத்தில் என் வார்த்தைகளை விட்டுவிட்டு, பேசிய விஷயத்தை/தர்க்கதை பிடித்திருந்தால், என்னை பற்றி மட்டும் விமர்சிக்கும் இந்த பதிவில் ஒரு இடத்திலாவது நான் எழுப்பியவைகளுக்கு ஏதாவது ஒரு பதில் இருந்திருந்தால் உங்கள் வாதங்களில் தார்மீகம் இருந்திருக்கும்? trawler என்ற வார்த்தை தெரியவில்லை, கூகிளில் தேடவில்லை என்று நீங்களாக, உங்களுக்கு வேறு சில விவரங்கள் தெரிந்ததை சாதகமாக்கி மட்டம் தட்டியதும், ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட்களாக பேசியுள்ளதையும் தவிர இந்த பதிவில் வேறு என்ன இருக்கிறது?

மேலும் சில விஷயங்கள் என் பதிவில். நன்றி.

4/07/2006 12:10 AM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter