ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Sunday, April 26, 2009

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் தோற்கும் என்றுதான் தோன்றுகிறது என்றாலும், 40திலும் படுதோல்வி அடைய வேண்டும் என்ற அளவில் ஈழப்பிரச்சனை சார்ந்த கரிசனம் கொண்ட பலரும் ஆத்திரமாக இருக்கிறார்கள். இருந்தாலும் ஜெயலலிதாவை ஆதரிக்க அவர்களில் பலருக்கு இன்னும் மனம் வரவில்லை; பலர் மொட்டையாக திமுக- காங்கிரஸ் தோற்கவேண்டும் என்றும், சிலர் 49ஓ எதிர்ப்பு ஒட்டு போடலாம் என்றும் கூறுகிறார்கள். எனக்கும் இடையில் -எவ்வளவு கேவலமாக இருந்தாலும்- விஜயகாந்தை முன்மொழிய வேண்டும் என்று கூட தோன்றியது. இவை அனைத்தும் வேலைக்காவாதது என்று இப்போது தெளிவாக தோன்றுகிறது.

திமுக-காங்கிரஸ் தோற்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே வழி அதிமுக கூட்டணியை ஆதரிப்பது. தேர்தல் ஜனநாயகம் நமக்கு அளிக்கும் ஒரே வாய்ப்பு இதுதான். பிரச்சனை என்னவென்றால் தர்க்க பூர்வமாக சிந்தித்தால் இப்போதும் ஜெயலலிதாவே பெரிய எதிரியாக தோன்றும். அது உண்மையாகவே கூட இருந்தாலும், தேர்தல் ஜனநாயகம் என்பது நமக்கு அளிக்கும் குறிப்பிட்ட உரிமை மற்றும் வாய்ப்பு குறித்த தெளிவில்லாததால் இந்த குழப்பம் என்று நினைக்கிறேன்.

தேர்தலில் வாக்கு மூலமாக நாம் பிரதிநிதிக்கும் கருத்து என்பது நம் முன்னிருக்கும் சாய்ஸ்களில் யார் பரவாயில்லாதவர் என்று நம் அரசியல்/ சமூக மற்றும் சுயநல பார்வையின் மூலம் முடிவுக்கு வந்து தெரிவிப்பது அல்ல; அப்படி முடிவெடுத்தால் ஒரே ஒரு முடிவைத்தான் காலாகாலத்துக்கும் நாம் எடுக்க முடியும்; இந்த பலவீனத்தை வைத்தே கருணாநிதி தன் அரசியலை உயிருடன் வைத்திருக்கிறார். அப்போதய நமது கோபத்தை, அதிருப்தியை தெரிவிப்பது, குறிப்பாக அண்மைய கோபத்தில் தண்டிப்பதுதான் தேர்தல் மூலம் முன்வைப்பது; அந்த வகையில் ஜெயலலிதா எவ்வளவு மோசமாக இருந்தாலும், திமுகவை தோற்கடிக்க நாம் அதிமுக கூட்டணியைத்தான் முழுவதுமாய் ஆதரிக்க வேண்டும். ஜெயலலிதா தான் ̀ஈழம் பெற்று தெருவேன்' என்பது வெத்து சவடால் நாடகம் என்றாலும், அந்த சவடாலுக்காகவாவது நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதுதுதான் தேர்தல் சார்ந்த அரசிலாக இருக்கும்.

ஈழப்பிரச்சனை மட்டுமில்லாது, ஊழலையும், ஊழல் சார்ந்த மிரட்டலையும் மட்டும் சார்ந்து -தங்கள் பகையை மறந்து -கூட்டு கொள்ளையடிக்க சேர்ந்துள்ள கருணாநிதியின் குடும்ப கொள்ளை தமிழகத்தையே ஒட்டு மொத்தமாக விழுங்குவதை, தார்மீகம் என்று எதுவுமே இல்லாத நிலைக்கு இட்டு செல்வதை தடுக்கவும் திமுகவை தோற்கடிக்க வேண்டும். அதற்கு அதிமுகவை வெற்றி பெற வைப்பதை தவிர வேறு சாத்தியம் இல்லை. . கவலையே வேண்டாம், இதன் விளைவாக இந்த ஆட்சியே கவிழும்! அந்த தேர்தலில் அன்றய சூழலுக்கு ஏற்றாற் போல யோசிக்க வேண்டியதுதான்!

Post a Comment

---------------------------------------
Site Meter