ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, October 28, 2010

தீர்ப்பு அரசியல்.

முன் குறிப்பு: தமிழ் பேப்பரில் ஐந்து பாகங்களாக வந்ததை, எதிர்கால வசதி மற்றும் விவாதம் கருதி ஒரே பதிவாக இங்கே இடுகிறேன்.

இந்த கட்டுரையிலுள்ள என் கருத்துக்கள் அனைத்தும் விவாதத்திற்கும், பரீசீலனைக்கும், பின் மாற்றத்திற்கும் உரியவை. அரசியல் பேசி நிலைபாடுகளை அடைவதற்கும், அரசியல் செய்வதற்குமான முரண்களை நான் என்னளவில் சில காலமாக யோசித்து வருகிறேன். அரசியல் நேரின் வன்முறை குறித்தும் பின்னூட்டங்களிலும், ட்விட்டரிலும் பேசியிருக்கிறேன். போராடுதலுக்கும் வன்முறைக்குமான தொடர்புகளையும் பிரச்சனைகளையும், நான்கு ஆண்டுகள் முன்னால் 'நர்மதா தரும் செய்தி' என்று ஒரு பதிவில் மேலோட்டமாக தொட்டிருக்கிறேன். பதிவாக்காமல் பல கருத்துக்களை என்னிடமே வைத்திருந்திருக்கிறேன்; நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். அதன் தொடர்சிதான் இந்த கட்டுரை.

சிலருக்கு நான் இவ்வாறு எழுதுவது பிரச்சனையாக இருப்பதாக தெரிகிறது. மேலோட்டமான கூட்டல் கழித்தல் சார்ந்த எளிய கேள்விகளை தவிர, தீவிர பிரச்சனைகளை யாரும் இன்னமும் எழுப்பியதாக எனக்கு படவில்லை. சற்று காலம் எடுத்தேனும் கிளப்பினால், அதை கருத்துக்களாக விவாத வடிவில் அளித்தால் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இந்த கட்டுரை குறித்து ஏற்கனவே எனக்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ( தமிழ் பேப்பரில் எழுதுவதில் உள்ளதாக சொல்லப்பட்ட பிரச்சனைகள் உட்பட), மற்றும் இந்த பதிவுக்கும் தீவிர நிலைபாட்டுடன் வரும் பின்னூட்டங்களையும், (ஒருவேளை வந்தால்,) தனிப்பதிவில் எதிர்கொண்டு என் பதில்களை தருகிறேன். இனி கட்டுரை.

தமிழ் பேப்பரில் பின்னூட்டங்களுடன் வாசிக்க.
பகுதி 1. பகுதி 2. பகுதி 3. பகுதி 4. பகுதி 5.
தீர்ப்பு அரசியல்.

--- ரோஸாவசந்த்.கடந்த வாரங்களில், (தமிழ்ச் சூழலுடன் தொடர்பில்லாத) எனக்குத் தெரிந்த சில இடதுசாரிச் சிந்தனைச் சாய்வுள்ள நண்பர்களுடன் உரையாட நேரும்போதெல்லாம், ‘அயோத்தி தீர்ப்பு’ குறித்து அவர்கள் கொதிப்புடன் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. இந்தக் கொதிப்புக்கான நியாயங்களை அடுக்குவதும், அந்த நியாயங்களைப் புரிந்துகொள்வதும் கடினமல்ல; என்றாலும் என்னால் அவர்களுடன் உணர்வுபூர்வமாக இந்தக் கொதிப்பைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லை.

கடந்த 18 ஆண்டுகளாக, பணி நிமித்தம் தமிழ்ச் சூழலுக்கு வெளியே வசிக்கும் இடதுசாரி நண்பர்களுடன் அரசியல் பேசுவதும், அவர்களுடன் கருத்து மற்றும் உணர்வுரீதியாகப் பகிர்ந்துகொள்வதையும் ஒரு பழக்க தோஷமாகக் கொண்டிருப்பதால், நான் இவ்வாறு சொல்வதற்கு ஓர் உள்ளர்த்தம் ஏற்படுகிறது.

இரண்டு வருடங்கள் முன்பு, மாதக்கணக்கில் தினமும் செய்திகளுடன் தொடர்ந்த இலங்கைப் போரின் இன அழிப்பின்போது, இவர்கள் எல்லோரும் ரொம்ப சாதாரணமாக, அப்படி ஒன்று நடந்துகொண்டிருப்பது குறித்த பிரக்ஞைகூட இல்லாமல் இருந்ததை, மிகுந்த ஆத்திரத்துடன் அன்றாடம் கவனித்து வந்திருக்கிறேன். நடந்துகொண்டிருந்தவை குறித்து அவர்கள் முற்றிலும் அறியாமல் இல்லை; நேர்ப்பேச்சிலும், மின்னஞ்சல்களிலும் நானே (சில குதர்க்கக் கேள்விகள் உட்பட) சில இடையீடுகள் செய்து, பின் பயனில்லை என்று நிறுத்தியிருக்கிறேன்.

பல்லாயிரம் அப்பாவி மக்கள் அன்றாடப் பயங்கரத்தின் இடையே கொல்லப்பட்ட கொடூரம் இங்கிருந்து சில நூறு கிலோமீட்டர் தொலைவில் நடந்தபோது இல்லாத கொதிப்பை, ஒரு நிலரீதியான ஆக்கிரமிப்பை, மூன்றில் இரண்டு பங்கு அநியாயத்துடன் அங்கீகரிப்பதாகக் கருதக்கூடிய ஒரு தீர்ப்புக்கு, அதனால் பாதிக்கப்பட்டவர்களைவிட அதிகமாகக் கொதிநிலைக்குச் செல்வதைப் பார்த்து, சிரிக்கலாமா கூடாதா என்கிற அரசியல் குழப்பம் என்னுள் நிலவுகிறது. (தீர்ப்பு குறித்து தமிழ்ச் சூழலுக்குள் ஆத்திரமடைபவர்களைப் பற்றி இங்கே பேசவில்லை.)

நான் அவர்கள் நடிப்பதாகவோ, மிகைவினை செய்வதாகவோ நினைக்கவில்லை. ஆனால் எனக்கு இந்தக் கொதிப்பெல்லாம் ஒருவகை அரசியல் obsessionஆக மட்டும்தான் தெரிகிறது. முஸ்லீம் சமுதாயத்தின் நலன், உரிமை என்கிற அக்கறைகளினால் உந்தப்படுவதாக இல்லாமல், இவர்கள் தர்க்கப்படுத்தி, பின் நம்பிக்கைகள் ஆக்கிக்கொண்ட அரசியல் நிலைப்பாடுகளினால் உந்தப்படுவதாகவே இதைக் கருத முடிகிறது.

தனிப்பட்ட முறையில் அயோத்தி தீர்ப்பு வருவது குறித்துப் பெரிய அக்கறைகள் எதுவும் இல்லாத நிலையில்தான் நான் இருந்தேன். இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய படுகொலைகளும் இன அழிப்பும் ஈழத்தில் நடந்தேறியபோது, அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதான ஒரு நினைவை, தமிழரல்லாத அனைத்திந்திய மனம் உருவாக்கிக்கொண்டிருப்பதற்கு எதிராக, தமிழ் நாட்டைப் பெரிதாக பாதிக்கப் போகாத ஒரு பிரச்னை குறித்து விவாதிப்பதைத் தவிர்ப்பதும் ஓர் அரசியல் என்று கருதி வருகிறேன். குறைந்தபட்சம் எல்லா விவாதங்களிலும், ஈழத்து இன அழிப்பால் தீவிரமான மனப்பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள் இவ்வாறு சிலமுறையாவது சொல்லவாவது வேண்டும் என்று நினைக்கிறேன். அயோத்தி போன்ற ஒரு பிரச்னை வெடித்து, வட இந்தியாவில் எல்லோரும் ‘அடித்துக் கொள்ளட்டும்’ என்று யாரேனும் கருத்து சொன்னால்கூட, அதை வக்கிரம் என்று நான் சொல்ல மாட்டேன். ஈழத்தில் நடந்தவை குறித்து மௌனம் சாதிப்பதும், அதை மறுப்பதும், பொய்யான ஏமாற்று விஷயங்களைப் பேசுவதும் பேசியதும்தான் வக்கிரமே தவிர, ஒரு கோபத்தைக் குறிப்பதற்கு இவ்வாறு சொல்ல மட்டும் செய்வதில் எந்த வக்கிரமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

2000-த்தின் தொடக்கத்தில், அலகாபாதில் ஒன்றரை வருடம் வாழ்ந்தபோது, இந்துத்துவத்தின் தீவிர முகத்தைப் பார்த்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து வேறுபட்ட பார்ப்பனியத்தின்/சாதியத்தின் தீவிர முகத்தை எதிர்கொண்டிருக்கிறேன். சற்றும் எதிர்பாராத ஒரு நாளில் ஷியா-சுன்னி கலவரம் மூண்டு, அதன் வெறித்தனத்தையும் உணர்ந்திருக்கிறேன். இந்தப் பிரச்னைகள் சார்ந்த நம் அரசியல் பார்வையினால், நிரடலான உணர்வை அனுபவிக்காமல் அங்கே இருக்க முடியாது.

ஆனால் இத்தனையும்மீறி நாம் நேசிக்கக் கூடிய ஒரு வெகுமனம் அங்குள்ள மக்களிடம் இருப்பதை உணரமுடியும். இத்தகைய முரண்பாட்டை இந்தியச் சமுதாயத்தில் பல சந்தர்ப்பங்களில் காணலாம். தேவர் சாதியைச் சேர்ந்த மூதாட்டியின் ஒரு வெறித்தனமான பேச்சுக்கு எந்த நியாயத்தையும் வழங்கமுடியாது; அதே நேரம் அவரிடம் இருக்கும் ஒரு புனிதமான வெகுமனத்தை வெறுக்க முடியாது என்கிற பக்குவத்தை நான் அடைந்துவிட்டேன். (இதை பார்ப்பன சாதியைச் சேர்ந்த மூதாட்டியை வைத்தும்கூட உதாரணிக்கலாம்.)

இந்த நிலையில், அயோத்தி பிரச்னையின் காரணமாக ‘அவர்கள் அடித்துக்கொண்டு சாகவேண்டும்’ என்று எனக்கு ஒரு நினைப்போ, நடக்காததில் நிராசையோ உண்மையில் இருக்கமுடியாது; இருந்ததில்லை. தவிர, தொடர்ந்து ஒரு அரசியல் நிலைப்பாடாக மட்டும், குறிப்பிட்ட நிகழ்வுகள் பற்றிப் பேசாமலும் சிந்திக்காமலும் ஒரு வீம்பைத் தொடர்வதும் சாத்தியமில்லை. குறிப்பிட்ட பிரச்னை குறித்து சிந்திப்பதும், கருத்து சொல்வதும், அந்தப் பிரச்னையின் தீவிரம் மற்றும் அக்கறை என்பதற்கு நாம் கற்பிக்கும் காரணங்களைவிட, புற உலகம் தொடர்ந்து நம்மைச் சிந்திக்கவும், கருத்துகளை (நேராகவோ, உருமாற்றியோ) பிரதிபலிக்க வைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த வகையிலும் அயோத்தி குறித்து எனக்கான கருத்துகளை வந்தடையாமல் இருக்கவியலாது. அவ்வாறு வந்தடைந்த கருத்துகளை மேல்பரிசீலனை கருதி இங்கே பதிவு செய்கிறேன். என் கருத்துகள் பரிசீலனைக்குரியவை, மாறக்கூடியவை.

0

அயோத்தி தீர்ப்பு இந்துத்துவத்துக்குச் சாதகமான தீர்ப்பா என்று ஒரு கேள்வியாகக் கேட்கக்கூட எந்த நியாயமும் இல்லை. எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் இந்துத்துவத்துக்கு ஆதரவான, இதுவரை இந்துத்துவவாதிகள் முன்வைத்து வந்த வாதங்களை அங்கீகரிக்கும் தீர்ப்புதான். இதன் நடைமுறை ஆதாரமாக இந்துத்துவவாதிகள் தெளிவாக, தீர்ப்பு சார்ந்த தங்களின் சந்தோஷத்தையும் நிறைவையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் உரிமையாகக் கோரியதில் முழு வெற்றியில்லை எனினும், எதிர்பார்த்திருந்ததற்கு அதிகமாகப் பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.

முஸ்லீம்கள், தீர்ப்பு சார்ந்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினாலும், பெரிய கோபமோ ஆத்திரமோ அவர்களிடம் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. தீர்ப்பு வெளிவந்து சில மணி நேரங்களுக்கு, ஏதோ ஒரு முஸ்லீம் பிரதிநிதியின் கருத்தைக்கூடத் தொலைக்காட்சி ஊடகங்கள் பதிவு செய்து நான் அறியேன். தொலைக்காட்சிகள் தொடர்புகொள்ள முயன்றும், யாரும் கருத்து சொல்ல முன்வரவில்லையா, அல்லது யாரேனும் ஒரு முஸ்லிமின் கருத்தையாவது உடனடியாகப் பதிவு செய்வது அவசியம் என்று ஊடகங்கள் நினைக்கவில்லையா என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் பொதுவாக இந்தத் தீர்ப்பை ஊடகங்கள் கொண்டாடியதிலும், ஒரு சமரசத் தீர்ப்பாகக் கருத்து பிம்பத்தை உருவாக்கச் செய்த பிரயத்தனத்திலிருந்தும், இதை ஒரு நினைவுடன் கூடிய பாரபட்சமாகத்தான் கருத முடிகிறது.

என்றாலும் இந்தத் தீர்ப்பை உடனடியாக எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவியதாகக் கருதமுடியும் . தங்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வந்து, அதன் மூலமாக எதிர்கொள்ளவேண்டிய மேற்படி பிரச்னைகள் குறித்த பயத்தில் இருந்ததாலோ, அல்லது முற்றிலும் எதிர்மறையாக வரும் என்று எதிர்பார்த்ததாலோ, இப்படி ஒரு எதிர்பாராத (மூன்றில்) ரெண்டும் கெட்டான் தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று ஒரு உடனடித் தெளிவின்மை இருந்ததாக ஊகிக்க முடிகிறது. ஓரிரு நாட்கள் கழித்தே அதிருப்தியை ஊடகங்களில் தெரிவிக்க முடிந்தது.

இன்னமும்கூட வட இந்திய மைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளில், முஸ்லிம்களின் அதிருப்தியை நான் காணவில்லை; எல்லோருக்கும் நிறைவான தீர்ப்பு என்கிற பிரசாரம் மட்டுமே கேட்கிறது. (அவுட்லுக்கில் வந்தது மற்றும் இணையத்தில் வாசித்த சில கட்டுரைகள் தவிர.) தமிழ் சேனல்களிலும் விளிம்பு நிலையில் இருப்பது போன்றிருக்கும், ‘மக்கள்’, ‘இமயம்’, ‘வின்’ டீவிக்களில்தான் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததைக் காணமுடிந்தது. அதே நேரம் பல முஸ்லிம்கள் இந்தத் தீர்ப்பை அப்படியே ஏற்று, வேறு பிரச்னைகளை கவனிக்க விரும்பியதாகச் சொன்னதையும் – குறிப்பாக அயோத்திவாழ் முஸ்லிம்கள் சிலரும் ஷியா அமைப்புகளும் சொன்னதையும், சிலர் இதை இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கான வாய்ப்பாக வர்ணித்ததையும் நான் மறந்துவிட்டுப் பேச முடியாது.

ஆனால் முஸ்லிம்கள் தீர்ப்பில் அதிருப்தி கொள்வதும், மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதும் இயல்பான எதிர்வினையாக உள்ளது. இதற்கு நேர்மாறாக, வன்முறை கலந்த பிரச்னைகள் எதுவும் வெடிக்காததில் பெருமூச்சு விட்டு, இதை இப்படியே ஏற்கவேண்டும் என்று சில முஸ்லீம்கள் சொல்வதும் இயல்பாக உள்ளன.

இதற்கு மாறாக, வழக்கம்போல இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும் முஸ்லிம்களுக்குகூட இல்லாத கோபத்துடனும் ஆத்திரத்துடனும் எதிர்வினை செய்கின்றனர். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த உளவியலும் புரிந்துகொள்ளக்கூடியதே. அதைப் புரிந்துகொள்வது அல்லது விமரிசிப்பதைவிட, பிரச்னையின் தீர்வு என்று ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தோமானால் அதற்கு என்ன வகையில் இந்த எதிர்வினைகள் உதவ முடியும் என்று பார்க்கவேண்டியதே முக்கியம் என்று நினைக்கிறேன். அது குறித்துப் பின்பாதியில் வருகிறேன்.

இந்த தீர்ப்பு நியாயமா என்று, நமக்கான நியாயங்களை வைத்து, ஆய்ந்து உறுதியான முடிவுக்கு வர, தீர்ப்பின் 1,000 பக்கங்களையும் படிக்க வேண்டும். அந்த அளவுக்குக் கறார்த்தனம் கொண்ட மிக நிச்சயமான முடிவு தேவை என்று எனக்கு தோன்றாததால், சாராம்சமாக அறிந்ததையே எடுத்துக்கொள்கிறேன். அப்படி நோக்குகையில் இந்துத்துவச் சார்பு அரசியல் உடையவர்களைத்தவிர, மற்ற எல்லோருக்குமே இந்தத் தீர்ப்பு ஏதோ ஒருவகையில் நியாயமற்ற தீர்ப்பாகவே தோன்றமுடியும் என்றே நினைக்கிறேன். இந்த நியாயமற்ற தன்மை ‘அயோக்கியத்தனம்’ என்று ஆத்திரப்படுவதிலிருந்து, நிதானமாக விமர்சனம் செய்வதுவரை அவரவர் அரசியல்/அற/அறிவு நிலைப்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடும். இந்தத் தீர்ப்பு குறித்த விமரிசனங்களைப் பலர் முன்வைத்துவிட்ட நிலையில், என் பார்வையில் தோன்றுவதைச் சுருக்கமாக இங்கே தொகுக்கிறேன்.

0

நீதிமன்ற விசாரணை கோரி இருந்த விஷயம் சொத்தின் சட்டபூர்வமான உரிமை குறித்தது. அதில சுன்னி வக்ஃப் போர்டு தவிர்த்து, இப்போது மூன்றில் ஒரு பங்கு வழங்கப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கு சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லை என்பது தெளிவான யதார்த்தம். நீதிமன்றம் வக்ஃப் வாரியத்துக்கும் சட்டப்பூர்வமான உரிமை இல்லை என்கிறது. இங்கே ஒரு குறிப்பிட்ட புனிதத் தலத்தின் சட்டப்பூர்வமான உரிமை என்பது என்ன என்பதும், அதை நிர்ணயிக்கும் வழிமுறை பற்றியும் எனக்குச் சற்று குழப்பம் நேர்கிறது.

நூற்றாண்டுகளாக இருக்கும், தொழுகைத் தலத்துக்கான சட்டபூர்வ உரிமை, நாம் மனை நிலம் வாங்கியதன் பத்திரம் போன்ற வலுவான வடிவத்தில் ஆதாரமாக இருக்க முடியாது என்கிறபோது, சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு உரிமை இல்லை என்று கறாரான சட்டப்பூர்வக் காகித ஆதாரங்களை கொண்டு முடிவுக்கு வரமுடியுமா என்பது முதல் சந்தேகம்.

ஒருவேளை அவர்களுக்கு உரிமை இல்லை என்றால், முஸ்லீம்களுக்கு வேறு ஏதாவது உருவில் உரிமை இருப்பதான முடிவுக்குதான் சட்டப்பூர்வமாக வரமுடியும் என்பதே இயல்பாக தோன்றுவது. அது மசூதி அல்ல ஏதோ கும்மட்டம் என்கிறார்கள் இந்துத்துவர்கள். 1949-ல் அந்த விக்கிரகங்கள் உள்ளே யாரும் அறியாமல் (அதாவது திருட்டுத்தனமாக) வைக்கப்படுவதற்கு முன்னால், அதன் மூலம் ‘வில்லங்கம் ஏற்பட்டு’ அரசாங்கத் தடை வருவதற்கு முன்னால், தொழுகை நடைபெற்ற இடத்தை மசூதி என்றுதான் சொல்லமுடியும் என்று தோன்றுகிறது. 1949-ல் நடந்த ஆக்கிரமிப்பையும், 1992-ல் நடந்த கும்பல் இடிப்பு அராஜகத்தையும் அங்கீகரிப்பதாகவே இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

சமூகத்தின் நம்பிக்கையை மதித்து ஏற்று, அதன் அடிப்படையில் நீதிமன்றம் இயங்க முடியுமா? அதுவும் முரணான நம்பிக்கைகள் எதிர்ப்பக்கம் வாதாடும்போது, ஒரு பக்க நம்பிக்கையை முன்வைத்து செயல்படமுடியுமா? இந்தக் கேள்வி ஒரு பக்கம். ஆனால் ராமர் அயோத்தியில் பிறந்தாரா என்கிற நம்பிக்கையை அல்ல, அந்த ‘கும்மட்டங்களுக்கு’ கீழேதான் பிறந்தார் என்கிற நம்பிக்கையை ஏற்பதாகத் தீர்ப்பு சொல்கிறது. ராமரைக் கடவுளாக ஏற்கும், அவர் அயோத்தியில் (அதாவது இந்த அயோத்தியில்தான்) பிறந்ததாக நம்பும் மக்கள் கூட்டம் மொத்தத்துக்கும் இப்படி ஒரு நம்பிக்கை தொன்றுதொட்டு இருப்பதாகத் தெரியவில்லை. உத்தரப் பிரதேசத்தில்கூட எத்தனை ராம பக்தர்கள் இப்படி ஒரு நம்பிக்கையை – இந்துத்துவ அரசியல் தோன்றும்முன் – கொண்டிருந்தார்கள் என்று எதேனும் புள்ளிவிவரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இப்படி ஒரு நம்பிக்கையை (ராமர் அயோத்தியில் பிறந்ததை அல்ல, அந்த dome-களுக்கு இடையே பிறந்ததான நம்பிக்கையை) அங்கீகரிப்பது இந்த நீதிமன்றத்தின் தெளிவான இந்துத்துவச் சார்புக்கு உதாரணம். (வெறும் இந்துமதச் சார்பு அல்ல.) ஒரு பக்கம் மிகக் கறாரான சட்டபூர்வ உரிமை குறித்துப் பேசி, சுன்னி வக்ஃப் போர்டுக்கு உரிமை இல்லை என்பதும், மறு பக்கத்துக்கு நம்பிக்கைகளையும், பலரால் தீவிரமாக விமரிசிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வின் சான்றுகளையும் ஆதாரமாகக் கொள்ளுதல் (வக்ஃப் வாரியத்துக்கு நம்பிக்கை மட்டுமில்லாமல், யதார்த்தமான அனுபவ பாத்யதை சார்ந்த பலனைக்கூடத் தராமல்) என்று மிகுந்த பாரபட்சத்துடன்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ‘தொல்லியல் ஆய்வுகள்’ குறித்து பலத்த விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. தீர்ப்புக்குப் பல ஆண்டுகள் முன்னால் இருந்தே இருக்கின்றன. (உதாரணமாக ஒன்று, இன்னொன்று ); இல்லை, எல்லாம் நல்லபடியாக நடந்தது என்றும் சொல்கிறார்கள். இந்த விமர்சனங்கள் மற்றும் சான்றிதழ்கள் குறித்து உறுதியான முடிவு எதுவும் எனக்கு இல்லை.

இந்த இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் 2003 அறிக்கையின் முடிவுகளை மூன்று நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். தீர்ப்பின் முக்கிய ஆதாரமாகவும், நீதிமன்ற நியாயத்தைத் தர்க்கப்படுத்தவும் இந்த அறிக்கை முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் 2003-ன் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஆதாரமாக, விமரிசனம் இன்றி ஏற்றுக்கொண்டால்கூட, இரண்டு முக்கியக் கேள்விகள் எழுகின்றன. முதலில் தொல்லியல் ஆய்வுகள் தரும் ஆதாரங்கள்மூலம் முன்வைக்கப்படும் முடிவுகள், எவ்வளவு நேர்மையும் கறார்த்தனமும் கொண்டிருந்தாலும், அதைச் சோதித்து தெளியும் அறிவும் திறனும் நீதிபதிகளிடம் இருந்தாலும், அது ஒரு வரலாற்று முடிவு மட்டுமே. வரலாறு என்பது சாட்சியங்களாக ஏற்கும் தேர்வு பெற்ற உண்மை அல்ல. உண்மையின் ஒரு பக்கமாக வேண்டுமானால் அதைப் பார்க்கலாம். அது, நடந்த நிகழ்வுகள் பற்றி, குறிப்பிட்ட சாராரால் எழுதப்படும் ஒரு கதையாடல். அதே ஆதாரங்களைக் கொண்டு சமானமான நேர்மையுடன், கறார்த்தனம் கொண்டு, (நேர்மாறாக இல்லாவிடினும்) இணையான ஒரு வரலாற்றை எழுத முடியும்.

இவ்வாறான சாத்தியங்கள் உள்ள நிலையில், இந்த ஆய்வுகளுக்கு ஆணையிட்டு, மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிட்ட வரலாற்று முடிவுகள் எழுதப்பட்டு, அதை ஒரு நீதிமன்றம் ஏற்பதும், அதை முன்வைத்து நீதி நல்குவதும் முறையா என்பது முதல் கேள்வி. அடுத்தது, இந்த வரலாற்று முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால்கூட, அதன் அடிப்படையில் பல நூற்றாண்டுகளுக்குமுன் நடந்த நிகழ்வுகளை முன்வைத்து, இன்றைய காலகட்டத்துக்கான நியாயத்தை உருவாக்குவதை ஏற்கமுடியுமா? மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு கோவிலின் அமைப்பு இருந்ததாக அறிக்கை சொல்வதை ஒருவேளை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், வரலாற்றின் போக்கில் நியாயம் வழங்குவதோ, 500 ஆண்டுகளுக்கு முந்தைய உரிமையாக ஒன்றைக் கற்பித்து, அதை இன்று உரிமை கோரும் வேறு ஒரு அமைப்புக்கு வழங்குவதும் மிக விநோதமான பாரபட்சம்.

இப்படி எத்தனை பிரச்னைகளில் ‘நீதி’ செயல்படத் தயராக உள்ளது? அதற்கு அமைப்புரீதியாகத் தேவைப்படும் சட்டரீதியான வேலைகளும், சட்ட விரோதமான வேலைகளும், அரசியல் அலைகளும் என்னவென்று விவாதிப்பதற்கு இந்தத் தீர்ப்பு மோசமான முன்னுதாரணம். இன்னமும் இந்தத் தீர்ப்பின் நியாயமற்ற தன்மை குறித்துப் பேச நிறைய உள்ளது. பலர் பேசியுள்ளார்கள். அவற்றைப் பொதுவாக நான் ஏற்கிறேன். இங்கே அதை விரிவாகப் பேசுவதல்ல என் நோக்கம் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சி இத்தனை காலமாகச் செய்துவந்த அரசியலுக்கும், அதனால் அடைந்த அரசியல் லாபங்களுக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு வெகுஜன அங்கீகாரத்தைத் தருவதுதான் இந்தத் தீர்ப்பின் மோசமான பின்விளைவு. கணிசமான உயிர்பலி கொண்ட அத்வானியின் ரதயாத்திரை, நீதிக்கான ஒரு யாத்திரைதான் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இந்துத்துவ சக்திகள் தங்களுக்கான நியாயங்களைத் தர்க்கப்படுத்திக்கொள்ள இந்தத் தீர்ப்பு புதிதாக உதவப் போவதில்லை. அவர்கள் ஏற்கெனவே அதைத் மிகத் திறமையாகச் செய்பவர்கள். ஆனால் அதைப் பொதுவான மதச்சார்பற்ற இந்திய மனம் முழுவதும் ஏற்றுக்கொண்டதில்லை; இந்துவாகத் தன்னை அடையாளம் கண்டுகொண்டாலும், தமிழகம் போன்ற பகுதிகளின் பொது வெகுமனம், இந்துத்துவா முன்வைக்கும் வாதங்களை தங்களுக்குள் கரைத்துக்கொண்டதில்லை. இனி இந்துத்துவாக்கள் பக்கம் நியாயம் இருப்பதாக இந்த வெகுமனம் கருதக்கூடும் என்ற அளவில் இந்தத் தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு மிக முக்கியமான வெற்றி.

இவ்வாறு எல்லாவகையிலும் எதிர்மறையாகவே தோன்றும் இந்தத் தீர்ப்பின் ஒரே பொதிவான தன்மையாக, அதன் ஒரே ஒரு முக்கியப் பரிமாணம் மட்டும்தான் தெரிகிறது. ஒரு மிகப் பெரிய வன்முறை கலந்த பிரச்னையை நாடு மொத்தமும் எதிர்பார்த்துவந்த திகிலை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது இந்தத் தீர்ப்பு. வேறு எந்த வகையில் இந்தத் தீர்ப்பு வந்திருந்தாலும் எதிர்ப்புகளையும், மோதல்களையும், இயன்றால் ரத்த ஆற்றையும் உருவாக்கியிருக்கும். இந்தத் தீர்ப்பின் சூட்சுமமே அப்படி எதுவுமே நிகழாமல் செய்ததுதான். இதைப் புரிந்துகொள்ள, தீர்ப்புக்குமுன் எல்லோரும் மொத்தமாக எதிர்பார்த்திருந்த தயார் நிலையை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும்.

ஆனால் இதை, தீர்ப்பு எழுதியவர்கள் பிரக்ஞைபூர்வமாக நிகழ்த்தினார்களா என்று உறுதியாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

0

வன்முறையும் சமூக மோதலும் நடப்பதைப் பற்றிக் கவலைப்படுவது அத்தனை முக்கியமல்ல; தாங்கள் அரசியல்ரீதியாகச் சரி என்று நினைப்பது அதைவிட முக்கியமானது என்று ‘மதச்சார்பற்ற’ பலரும் கருதுகின்றனர். இவ்வாறு வன்முறையின்றிக் கடந்துபோனது குறித்து பெருமூச்சு விடுவதையும், ஒரு விஷயமாகப் பொருட்படுத்திப் பேசுவதையும் பொதுப்புத்தி அல்லது பூர்ஷ்வா மனநிலை என்பதாகவெல்லாம் சிலர் சொல்கிறார்கள். எப்படி என்று எனக்குப் புரியவில்லை. அடிப்படையில் ஒரு புண்ணாக்கும் இல்லாத ஒரு பிரச்னைக்காக, யாரும் அடித்துக்கொண்டு சாகக்கூடாது என்று நினைப்பதுதானே எல்லாவற்றையும்விட முக்கிய அக்கறையாக இருக்க முடியும்? அதை எப்படி இவ்வாறு முத்திரை குத்தமுடியும் என்று புரியவில்லை.

தம் அரசியல் நோக்கங்களின் வெற்றிக்காக அதற்கு எதிரான அரசியலிடம் பணிவது அல்லது இடையில் ஒரு புள்ளியில் சமரசம் செய்வது ஆகியவை குறித்தெல்லாம் விழிப்புணர்வுடன் இருப்பது அரசியல் செயல்பாட்டுக்கு இன்றியமையாதது. ஆனால், அவற்றையெல்லாம்விட அக்கறை கொள்ளவேண்டியது, பயனற்ற வன்முறைகளை தவிர்ப்பது என்று நான் இன்று நினைக்கிறேன். அதற்காக எந்த அநியாயத்தையும் பொறுத்துக்கொள்வதா என்ற கேள்வி எழுவது நியாயமானது. அந்தக் கேள்விக்கு அடுத்து வருவோம். அதற்குமுன், வன்முறையைத் தவிர்ப்பதை உள்ளார்ந்த முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறதா என்பது சிறு சிடுக்கல் கொண்ட கேள்வி.

வன்முறைகளைத் தவிர்ப்பதைத் தனது அடைப்படை நோக்கமாக இந்தத் தீர்ப்பு கொண்டதாக அவ்வளவு நிச்சயமாகச் சொல்லமுடியாது; குறைந்தபட்சம் தனது தர்க்கமாக அதனை இந்தத் தீர்ப்பு எந்த இடத்திலும் கொள்ளவில்லை. ஆனால் நிச்சயம் அதை ஒரு இறுதி அக்கறையாகக் கொண்டிருக்கிறது. தீர்ப்பின் உள்தர்க்கமாக அல்லது தீர்ப்பின் பின்விளைவுகளாக, வன்முறையை தவிர்ப்பது பற்றி இந்தத் தீர்ப்பு நேரடியாகப் பேசவில்லை. (மேலோட்டமாக அறிந்தவரையில்) தீர்ப்பின் ஒரு சமாதான நோக்கமாக, வன்முறையை தவிர்ப்பதற்காக இப்படி மூன்றில் ஆளுக்கு ஒரு பங்கு என்ற தீர்ப்பை வந்து அடைந்ததாக எந்த இடத்திலும் தர்க்கிக்கவில்லை.

இன்னொரு புறத்தில், 1992-ல் நடந்த வன்முறை குறித்து, தீர்ப்பு பிரபஞ்ச மறதியில் நிலைத்து, எந்தக் குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கு சொத்து சார்ந்த சிவில் வழக்கு என்கிற பட்சத்தில், 1992 சம்பவம் குறித்த கிரிமினல் வழக்குடன் சம்பந்தம் இல்லாததாக இருக்கலாம். ஆனால் சொத்துப் பிரச்னையைத் தாண்டி வேறு பல விஷயங்களைப் பேசும் இந்தத் தீர்ப்பு, இந்த 1992 நிகழ்வு குறித்து கண்டனமாக ஒரு கடமைக்குக்கூடச் சொல்லவில்லை என்பது வெறும் உறுத்தல் மட்டுமல்ல. மேலும் 1992 சம்பவம், பாஜகவும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ‘அந்தக் கட்டடத்துக்குத் தீர்ப்பு வரும்வரை எந்தப் பாதிப்பும் நிகழாது’ என்று அளித்த வாக்குறுதிக்குச் செய்த துரோகம். அந்த வகையில் (இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்கு சாராமல்) இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு நீதிமன்ற அவமதிப்பு. ஆனால் அதைச் சுத்தமாகக் கண்டுகொள்ளாதது ஒரு பக்க அநியாயச் சாய்வன்றி வேறில்லை.

அதே நேரம் தனது உள்தர்க்கத்துக்கு முரணாகத்தான் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. வக்ஃப் வாரியத்துக்கு சட்டரீதியான உரிமை இல்லை என்று முடிவெடுத்தபின், மூன்றில் ஒரு பங்கு நிலத்தை வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கவேண்டிய காரணமும், தர்க்கமும், கட்டாயமும் என்ன? அல்லது மற்றவர்களுக்கும் சட்டரீதியான உரிமை இல்லாதபோது அவர்களுக்குத்தான் அந்த இடத்தை அளிப்பதற்கான தர்க்கம் என்ன? பிரச்னையில் எங்கோ திருப்தி கொள்ளவேண்டிய புள்ளியை அமைத்து, சமாதானமாகச் செல்லும் வாய்ப்பை அளிப்பதுதான் அது. இந்தச் சமரசம், சம்பந்தப்பட்ட தரப்புகள் நீதிமன்றத்துக்கு வெளியே முயன்றிருந்தால் எட்டியிருக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் உரையாடலுக்கே வாய்பில்லாத முரண்பட்ட அரசியல் சக்திகள், இத்தகைய முயற்சிக்கு வந்து சேருவதே சாத்தியமில்லாத நிலைதான் இருந்தது. அந்நிலையில் இப்படி ஒரு சமரசத்தை, சட்டத்தின் கான்க்ரீட் சுவர்களுக்கு இடையேயும், தீர்ப்பின் உள்தர்க்கத்தின் உள்ளும் கறாராகக் கையாளாமால், இந்தத் தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்துத்தனமாக முன்வைக்கிறது. சில நேரங்களில் கட்டப்பஞ்சாயத்து சமரசம், sophisticated நியாயத்தைவிட, சமூக அமைதியைப் பேணுவதாக இருக்கக்கூடும்; அத்தகைய சமரசத்துக்கு முரண்பட்ட சக்திகளை நீதிமன்றம் தன் நீதி அதிகாரத்தின்மூலம் கட்டாயப்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் முக்கியமான விஷயம்.

இந்தத் தீர்ப்பு மேல் முறையீட்டுக்குச் செல்லும் என்றுதான் இப்போதைக்கு இருக்கும் நிலைமை. சுப்ரீம் கோர்ட் இறுதித் தீர்ப்பளித்தாலும் அதற்குப் பிறகும் மறு பரிசீலனைக்கான முறையீட்டுக்கு வாய்ப்புள்ளது என்று அறிகிறேன். இந்த வகையில் சட்டரீதியான தீர்ப்புகளும் தீர்வுகளும் எப்படிப் பயணித்தாலும், தங்கள் அறுதி நிலைப்பாட்டிலிருந்து கீழிறங்கி, ஏதோ ஒரு சமரசத்தை சம்பந்தப்பட்ட சக்திகள் ஏற்பதற்கு மனத்தைத் தயார்ப்படுத்தும் முதல் படியாக இந்தத் தீர்ப்பு உள்ளது.

இவ்வாறான சமரசத்தை ஏற்காமல் அறுதி நியாயம் என்பதாக ஒன்றை முன்வைப்பதுதான் அரசியல் நிலைப்பாடு என்பது. அரசியல் நிலைப்பாடு என்பது, இணையத்தில் சும்மா எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றவர்கள்கூட, பிரச்னையின்றி மிகத் தீவிரமாகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ‘லட்சிய’ நிலைப்பாடு; மாறாக அரசியல் செயல்பாடு என்பது போராடி, பேரம் பேசி, வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி, நிர்பந்தத்தை ஏற்று ஒரு சமரசப் புள்ளியில் தாற்காலிகமாகவேனும் நிறைவுகொள்வது. நேரடியாகக் களத்தில் செய்யும் அரசியல் செயல்பாடுகள் அனைத்துமே இத்தகையதாகவே உள்ளன. இதற்கு பெரியாரும், அம்பேத்கரும், காந்தியும், இந்துத்துவவாதிகளும்கூட விதிவிலக்கல்ல. (மாறாக அரசியல் லட்சியத்தின் முழுமையான வெற்றி என்பது யதார்த்தத்தில் ஒருவகையில் வன்முறையாகவே உருவெடுக்கக்கூடும் என்பதும் இன்னொரு விஷயம்.)

பலதரப்பிலிருந்தும் தங்கள் அரசியலால் பூதாகாரப்படுத்தப்பட்டுள்ள அளவுக்கு, உண்மையிலேயே எந்த மக்கள் கூட்டத்துக்கும் ஒரு வாழ்வா சாவா பிரச்னையாக அயோத்திப் பிரச்னை இல்லை. மாறாக ஓர் இனக்குழுவின் இருப்பையும் அழிவையும் நிர்ணயிக்கும் அளவுக்கு மிகத் தீவிரமான ஈழப் பிரச்னையிலும், பாலஸ்தீனப் பிரச்னையிலும்கூட, பேரங்களால் ஆன சமரசப் புள்ளியில் நிறைவுகொள்வதையே இன்று அனைவரும் தீர்வாக முன்வைக்கின்றனர். பாலஸ்தீனத்துக்குத் தொடர்ந்து தார்மீக ஆதரவு தருபவர்களால், கடந்த பத்தாண்டுகளில் முன்வைக்கப்பட்ட எந்தத் தீர்வை ஒப்புக்கொண்டாலும், அது, இஸ்ரேலின் ஆக்ரமிப்பை, அத்துமீறல்களை, அடக்குமுறைகளை, மேலும் பல வரலாற்று அநியாயங்களை குறிப்பிட்ட அளவுக்கு லெஜிடிமைஸ் செய்வதாகவே இருக்கும். (ஆனால் நடைமுறையில் அத்தகைய, ஏதோ கிடைத்த நியாயம் போதும் என்கிற அளவிலான ஒரு சமரசப் புள்ளியில்கூட, ஒரு தீர்வு உருவாக முடியாமல் இருக்கிறது என்பது வேறு விஷயம்.) ஒருவகையில் இஸ்ரேல் இந்த யதார்த்தத்தை நீண்ட காலமாக மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது. எந்த அத்துமீறலையும், எதிர்ப்புகள் குறித்த அலட்சியத்துடன் முதலில் செய்துவிடுவது; பிறகு அதிலிருந்து பின்வாங்க நேரிடினும், தான் செய்த அத்துமீறலின் பெரும் பகுதி அங்கீகரிக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் உருவாகிவிடும் என்று இஸ்ரேல் புரிந்துகொண்டிருக்கிறது.

ஈழத்தை பொருத்தவரை ‘தனி ஈழம்’ என்பதற்கு எல்லாவகை நியாயங்களும் இருக்கின்றன. ஈழப்பிரச்னை குறித்து அக்கறை கொண்ட யாராலும் அந்த நியாயங்களில் எதையும் மறுக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் பலர் தனி ஈழத்தை மறுப்பதற்கான முக்கியக் காரணம், அது சாத்தியமில்லை என்பதும், அதை முன்வைத்து இன்னும் உயிர்பலிகளையும் பேரழிவுகளையும் எதிர்கொள்ள முடியாது என்பதும்தான். காஷ்மீர், அயோத்தி போன்ற பிரச்னைகளில் முழு நியாயம் என்பதான தீவிர அரசியல் நிலைப்பாட்டை வைக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள்கூட, ஈழப் பிரச்னையில் யதார்த்தத்தைக் கணக்கில் கொண்டு தனி ஈழம் கோரிக்கை கைவிடப்படவேண்டியது என்கிறார்கள். ஆகையால் பாலஸ்தீனமானாலும் ஈழமானாலும் முழு நியாயம் என்று நம் அரசியலால் முடிவெடுக்கக்கூடிய ஒன்றிலிருந்து கீழிறங்கி, ஒரு சமரசத்தை ஒப்புக்கொள்வதுதான் யதார்த்தத்தைக் கணக்கில் கொள்ளும் விவேகமாக இருக்க முடியும்.

பாலஸ்தீனம், ஈழத்திலாவது முழு நியாயம் என்று ஒன்றைப் பேசுவதில் கொஞ்சமாவது விவேகம் இருக்கக்கூடும். தென்னமெரிக்க, வட அமெரிக்கக் கண்டங்களில், முற்றாக இனம் அழிக்கப்பட்ட பூர்விகக் குடிகளில் எஞ்சியிருப்பவர்களுக்கு எந்த நியாயத்தை நாம் இன்று பேசமுடியும்? அவர்களுக்கு ஆதரவாக நாம் பேசும் எந்த விஷயத்திலும் தீர்வு, நியாயம் செய்தல் என்கிற சொல்லே மிக அபத்தமாக இருக்கும். வட அமெரிக்கா மட்டுமின்றி, இடது சாரி அரசியலைக் கொண்டிருந்த பல தென்னமெரிக்க தேசங்களிலும் பூர்வீக இந்தியர்களுக்கான நியாயங்களைப் பேசும் அரசியல் இல்லை. சிலேயில் எஸ்பானியர்களுடன் மிகத் தீவிரமாக நூற்றாண்டுக் கணக்கில் போரிட்டு, ஒரு கட்டத்தில் முழுமையாகத் தோற்ற மபூச் இனத்தவர்கள் இன்று சிதறலாக, சிறு கூட்டங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் உருவான சில குழுக்கள், சில இடங்களில், கலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலே அரசாங்கம் அவர்களை பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது; பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் கொண்டு அவர்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்தப் பிரச்னையில் மபூச் இனத்தவர்களின் நியாயங்களைப் பேசுவது என்பது தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மபூச் இன மக்களின் இருப்புக்கு ஆதரவாகவும் பேசுவது. அவ்வாறு பேசும்போதுகூட மபூச் மக்களின் பல கலக நடவடிக்கைகளை (மக்களைக் கடத்துவது, வெடிகுண்டு வைப்பது) வெளிப்படையாக அங்கீகரிக்க முடியாது. எஸ்பானியர்கள் செய்த அனைத்து அயோக்கியத்தனங்களாலும் விளைந்த யதார்த்தத்தை ஏற்று அங்கீகரிப்பதாகக்கூட நமது நியாயமான நிலைப்பாடு இருக்கலாம்.

இந்த இடத்தில் மிக மிக அபத்தமான ஒரு முரணைச் சந்திக்கிறோம். அடக்குமுறையின், அநியாயத்தின் தீவிரம் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ, அந்த அளவுக்கான நேரெதிர் தீவிரத்துடன், நாம் ஒரு கொள்கை அடிப்படையில், யதார்த்தத்தில், நியாயமான தீர்வைப் பேச முடிகிறது. அடக்குமுறை மிகக் கச்சிதமாக நடைபெறும் நிகழ்வில், நாம் நியாயம் என்று எதையும் குறைந்தபட்சமாகப் பேசக்கூட யதார்த்தம் வாய்ப்பு அளிப்பதே இல்லை.

ஆகையால் நாம் மிகத் தீவிரமாக நியாயமும் தீர்வும் பேச இடம் இருக்கிறது என்றால், அதில் அத்தனை தீவிரமாக அடக்குமுறை நிகழவில்லை என்பதுதான் பொருள்.

0

மதச்சார்பற்ற அரசியல் கொண்டவர்களுக்கு, அயோத்தி உண்மையில் எந்தப் புண்ணாக்கும் இல்லாத ஒரு பிரச்னை. சென்ற நூற்றாண்டில், 1949 ஆக்ரமிப்பையும் 1992 கும்பல் அராஜகத்தையும் தொடர்ந்த ஒரு வெறுப்பு கலந்த பிரசாரத்தை இந்துத்துவ சக்திகள் செய்தன; மற்றபடி அடிப்படையில் இது முரணான மத நம்பிக்கைகள் மோதிக்கொள்ளும் ஒரு பிரச்னை மட்டுமே. எந்த இடத்திலும் அறிவியல் அடித்தளம் கொண்டிராத இந்த மோதலில், வெற்றி/தோல்விக்கான பாதையில் வீணான அழிவை தவிர வேறு எதுவும் கிட்ட வாய்ப்பில்லை. அதைவிட முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, இந்தப் பிரச்னையில் முஸ்லீம்களும், இந்துத்துவ வாசிப்புகளை ஏற்கும் இந்துக்களும் தவிர மற்றவர்களுக்கு ஈடுபாடு காட்ட, தங்கள் நம்பிக்கைகள், அரசியல் சார்ந்த லாப நஷ்டங்கள் என்று எதுவும் இல்லை.

குறிப்பாக இடதுசாரி அரசியல் என்பதாக அடையாளம் கண்டுகொள்ளும் அனைவருக்கும், அரசியல் ஆர்வம் கொள்ளக்கூடிய லாபநஷ்டங்கள் என்று அயோத்திப் பிரச்னையில் எதுவும் இல்லை; ஆனாலும் அவர்கள் தங்களின் ஆதார அக்கறை சார்ந்த பிரச்னையாகக் கருதி, மிகுந்த கோபதாபத்துடன் இந்தப் பிரச்னையை அணுகுகிறார்கள். முஸ்லீம்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது என்று நினைக்கும் இடதுசாரிகள், முஸ்லீம்களின் போராட்டங்களுக்கு தார்மீக ஆதரவு தருவது என்பது இயல்பானது. ஆனால் தார்மீக ஆதரவு என்பதை மீறிய தீவிரத்துடன் பெரியாரிஸ்டுகளும் இடதுசாரிகளும் இதை அணுகுவதற்கான அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு. இவ்வாறாக ஒன்றின் மீதான எதிர்ப்பின் காரணமாக தீவிர நிலைப்பாடு எடுப்பதில் இயல்புக்கு மாறாக எதுவும் இல்லை எனினும், இந்த அரசியலின் எல்லைகள், தமது ஈடுபாட்டினால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவை குறித்த தெளிவுகள் இருக்கவேண்டும். யதார்த்தத்தில் இந்த வகையாக, நேரடி அரசியல் லாப நோக்கின்றி, இந்துத்துவ எதிர்ப்பு என்கிற ஒரு அரசியல் காரணமாக முஸ்லீம்களின் அரசியலை – சிலசமயம் அவர்களை விட – தீவிரமாகக் கைக்கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளன. (இந்தச் சிக்கல் இந்தப் பிரச்னையில் மட்டுமின்றி, உதாரணமாக ஈழப்போராட்டத்தின் அரசியலை வாழ்வா, சாவா தீவிரத்தோடு தமிழ்நாட்டில் இருந்து கைக்கொள்வதிலும் உள்ளதுதான்.)

இந்த இடத்தில் இடதுசாரி/பெரியாரிய அரசியலின் இந்துத்துவ எதிர்ப்புக்கும், முஸ்லீம்களின் அரசியலுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கவனிக்கவேண்டியது முக்கியமானது. இந்துத்துவ அரசியல், முஸ்லீம்களின் இருப்புக்கு நெருக்கடி அளிக்கிறது என்கிற வகையில், முஸ்லீம் நலன் சார்ந்த எந்த அரசியலும் இந்துத்துவ அரசியலுக்கு எதிரானதாகிறது. ஆனால் அது மோதலும், பேரமும், சமரசமும், சில நேரம் உரையாடலும் கொண்ட ஒரு நேரடி அரசியல்; மாறாக இடதுசாரிகளின்/பெரியாரிஸ்டுகளின் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் என்பது இந்துத்துவவாதிகளுடன் எந்த வகை உறவும் உரையாடலும் அற்ற, அவ்வாறான உறவையே பாவம் என்று நினைக்கும் இறுக்கமான அரசியல். உதாரணமாக தமிழகத்தில் இடதுசாரியாகவும் பெரியாரிஸ்டாகவும் அடையாளப்படுத்திக்கொள்பவர் அ.மார்க்ஸ். (அவரை பின்நவீனத்துவர் என்று சொல்ல ஏனோ மனம் வரமாட்டேன் என்கிறது.) ஈழத்துப் படுகொலைகளின்போது அதற்கு எதிரான ஒரு கூட்டத்தில் திருமாவளவனும் இல.கணேசனும் ஒரு அனைத்துக் கட்சி மேடையைப் பகிர்ந்துகொண்டதை, அ.மார்க்ஸும் அவரைப் பின்பற்றுபவர்களும் ஒரு மாபெரும் பாவமாகத் திரும்பத் திரும்பச் சொல்வதைக் கவனிக்கவேண்டும். (ஷோபாசக்தியும் இதைச் சில முறை சொல்லியிருக்கிறார்.)

மாறாக முஸ்லீம்கள் பா.ஜ.க.வுடன் மோதுவது மட்டுமின்றி, உரையாடுவதையும், கட்சியில் சேருவதையும், கூட்டமாக சில இடங்களில் ஓட்டு போடுவதையும்கூட தம் அரசியலின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு இந்துத்துவத் தலைவரும் ஒரு முஸ்லீம் தலைவரும் சேர்ந்து தோன்றுவது என்பது பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிக்கான குறியீடு. தவிர இஸ்லாமிய அடிப்படைவாதம் பல நேரங்களில் இந்துத்துவ அரசியலுடன் கைகோர்க்கத் தயங்கியதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். சானியா மிர்ஸாவுக்கு எதிர்ப்பு, ‘ஃபயர்’ படத்துக்கான எதிர்ப்பு ஆகியவை இவற்றுக்கான சில உதாரணங்கள். ‘வாட்டர்’ திரைப்பட எதிர்ப்புக்கான கூட்டமைப்பில் (வேறும் அறிக்கை சார்ந்த ஆதரவு அல்லாமல்), ஒரு இஸ்லாமிய அமைப்பும் அலாகபாத்தில் நேரடியாகப் பங்குகொண்டதைக் கண்டிருக்கிறேன். (தமிழ்ச் சூழலில் இஸ்லாமிய இதழ்களில் அ.மார்க்சுக்கு முன்பே ஜெயமோகன் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.) இவை தீவிர உதாரணங்களாக ஒருபுறம் இருக்க, இந்துத்துவ அரசியலுக்கு எதிரான முஸ்லீம்களுக்கான அரசியல் செயல்பாடு என்பது இந்துத்துவத்துடன் உரையாடும் கட்டாயத்தில் இருப்பதும், இடதுசாரிகள் அப்படிப்பட்ட கட்டாயத்தில் இல்லாது இருப்பதுமட்டுமின்றி, அதை ஒரு பாவமாகத் தவிர்ப்பதும், இந்த இரண்டு அரசியலுக்குமான முக்கிய வித்தியாசங்கள்.


இந்த வித்தியாசத் தன்மையைப் புரிந்துகொள்ளும் இன்னொரு உருவக உதாரணமாக அப்துல் கலாமைச் சொல்லலாம். இடதுசாரிகளும், பெரியாரிஸ்டுகளும் அப்துல் கலாமை ஒரு இந்துத்துவ விளைபொருளாகக் கருதித் தீவிரமாகத் தாக்குகின்றனர். மாறாக, பல முஸ்லீம்கள் கலாமைத் தங்கள் அடையாளத்தின் ஒரு பகுதியாக, தங்களின் ஒரு பிரதிநிதியாகத்தான் கருதுகின்றனர். (பெரியாரிஸ்டுகளுடன் உறவைப் பேணும்) தமிழக முஸ்லீம்கள்கூட, கலாமைத் தங்களவராகக் காணுகிறார்களே தவிர, அவரை மற்றவராக, தங்கள் எதிரியாக, ஒரு வில்லனாகக் காணவில்லை. இந்த வித்தியாசங்களை உணர்த்த மட்டுமே இந்த உதாரணங்கள்; இன்னும் பல வித்தியாசங்களையும் அடுக்க முடியும்.

இந்த வித்தியாசங்களின் பின்னணியில் இடதுசாரிகளும் பெரியாரிஸ்டுகளும், முஸ்லீம்கள் வெளிப்படுத்தியிராத அளவைவிட அதிகமான கோபத்துடன் இந்தத் தீர்ப்புக்கு எதிராக எதிர்வினை ஆற்றுவதன் பிரச்னையை அணுகவேண்டும் என்று நினைக்கிறேன். ஊடகங்கள் மூலம் அறிந்தவரையில், அதிருப்தியும் கோபமும் இருந்தாலும், செப்டம்பர் 30 தீர்ப்பு வந்ததும், முஸ்லீம்களின் தொடக்க எதிர்வினை, வன்முறை எதுவும் இல்லாதது குறித்த பெருமூச்சாகவே இருந்தது; மாறாக முலாயம் சிங் உட்பட்ட அரசியல்வாதிகள் ஆனாலும் சரி, இடதுசாரி அறிவுஜீவிகள் ஆனாலும் சரி, அவர்களுக்கு வன்முறை இன்றிக் கடந்து சென்றமை ஒரு பொருட்படுத்தக்கூடிய விஷயமாகவே இல்லை. இதில் முலாயம் சிங் போன்றவர்கள் செய்வது அப்பட்டமான அரசியல் மட்டுமே; ஆனால் மற்ற இடதுசாரி, பெரியாரிஸ்டுகளின் எதிர்வினைகளை நேர்மையின்மையாக, ஹிபோக்ரசியாக நான் காணவில்லை. அது முழுக்க முழுக்க அவர்களின் இந்துத்துவ எதிர்ப்பு சார்ந்த அரசியல் நிலைப்பாட்டினாலும், மேலே குறிப்பாகச் சுட்டிக்காட்டிய வித்தியாசங்களினாலும் விளைவது. ஆனால் இங்கே பிரச்னை, ‘தீர்வு’ என்று ஒன்றைத் தேர்வு செய்து, அதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினால், இந்த இடதுசாரி/பெரியாரிஸ்ட் அணுகுமுறை அதில் முஸ்லீம்களுக்கான நியாயங்களுக்கு ஒரு கருத்தியல்ரீதியான தார்மிக ஆதரவாக இருக்குமே ஒழிய, நடைமுறையில் இடையூறாகவே இருக்கும்.

அடிப்படையில் பாபர் மசூதிப் பிரச்னை இந்துத்துவாக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயானது. அதில் இத்தனை வருட இந்துத்துவ அரசியல், மற்றும் அவர்களின் ஆக்ரமிப்பு அத்துமீறலுக்குப்பிறகு, இந்துத்துவாவும் முஸ்லீம் அமைப்புகளும் உரையாடாமல், எந்தத் தீர்வை நோக்கியும் பயணிக்க வாய்ப்பில்லை. அராஜகத்துடன் உரையாட முடியாது என்று சும்மா சொல்வதில் பயனில்லை. அதாவது அத்துமீறல், ஆக்ரமிப்பின் காரணமாகவே உரையாடல் தேவைப்படுகிறது; இவ்வாறு சொல்வது ‘அயோக்கியத்தனம்’ என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால் யதார்த்த நடைமுறை நோக்கு அதுதான் என்பதற்குதான் பல உதாரணங்களை முன்னே குறிப்பிட்டேன்.

புறநகரில் ஒரு மனை வாங்கினால் நாம்தான் வேலி போட்டு, பட்டா வாங்கி, தொடர்ந்து கண்காணித்து, நம் நிலத்தைப் பாதுகாக்கவேண்டும். எதிராளி யாரேனும் அத்துமீறி ஆக்ரமித்துவிட்டால், அந்தக் காரணத்துக்காகவே நாம் அந்த எதிராளியிடம் உரையாடலில் இறங்குவதுதான் நடைமுறை யதார்த்தம். அல்லது எதிரியை விரட்டும் பலம் இருக்கவேண்டும். மாறாக கோர்ட்டில் நீதியைத் தேடுவது என்பது, காலதாமதத்தின் காரணமாகவே அநியாயமாக முடியக்கூடும். அல்லது நில ஆவணங்களை manipulate செய்வதன்மூலம் அல்லது மற்ற தில்லுமுல்லுகள் மூலம், இழுபறி காரணமாகவும் சட்டரீதியாகக்கூட நியாயம் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு. அந்த வகையில் ஆக்ரமிப்பின் தீவிரம் மற்றும் நமது சக்தியின் எல்லைகளைத் தெரிந்துகொண்டு, எதிராளியிடம் உரையாடுவதுதான் நடைமுறை விவேகமானது.

அயோத்தி பிரச்னையும் அவ்வாறுதான் என்று இந்த தீர்ப்புக்குப் பிறகாவது தெளிவதுதான் விவேகமானது. இத்தனை ஆண்டுகாலமாக இந்துத்துவா செய்துவரும் அரசியலுக்கும், முனைப்புகளுக்கும், போராட்டங்களுக்கும் ஒரு விலை கொடுக்காமல் தீர்வு என்பதை நோக்கி நகர முடியாது. இவ்வாறு பேசுவதை இந்தப் பிரச்னையில் தீவிர நிலைப்பாட்டைத் தொடர்ந்து எடுத்துப் பழக்கப்பட்டுவிட்டவர்களால் யோசித்துக்கூடப் பார்க்கமுடியாது. ஆனால் பிரச்னையின் மிக எளிதாகப் புரியக்கூடிய பரிமாணம் ஒன்றை யோசித்துப்பார்க்குமாறு அவர்களை வேண்டுகிறேன்.

‘ராம ஜென்ம பூமி’ என்பதாக இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் அரசியலின் முக்கிய விளைச்சல் பலன் அவர்கள் அயோத்தியில் அடையப்போகும் சதுர அடிகளிலும், அங்கு கட்டப்போகும் கோவிலிலும் அல்ல. இத்தனை காலமாக அவர்கள் அடைந்துவரும் அரசியல்ரீதியான லாபங்கள்தான் முக்கியமான விளைச்சல் பலன்கள். விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு குறித்து 1970-களின் இறுதியில், 1980-களின் தொடக்கத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? 1990-களின் தொடக்கத்தில் அவர்கள் மைய அரசியலில் பெற்றிருந்த பாத்திரமும் அரசியல் வெளியும் என்ன? பாஜக பெரிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றதற்கும், பல திருப்புமுனைகளுக்கும், இந்த ராமர் பிரச்னை முக்கியக் காரணம். ராமர் கோவில் பிரச்னை மட்டுமே ஒரு தொடர்ந்த அரசியல் வெற்றிக்கு உதவாது என்று அறிந்துகொண்ட பாஜக, இன்று வேறு அரசியல் மேடைகளையும் பாத்திரங்களையும் வகிக்கிறது. ஆனால் எதுவும் உதாவாத ஒரு விரக்தி கணத்தில், இந்த அயோத்திப் பிரச்னையும் தீர்வுக்கு வாய்ப்பில்லாமல் முரண்பட்ட இழுப்புக்குச் செல்லும் நிலையில், அதை ஒரு வாய்ப்பாகவே பாஜக கையில் எடுக்கக்கூடும். அந்த வகையில் ஏதொ செட்டில்மெண்டில் இந்தப் பிரச்னையை முடிக்காமல் இருப்பது பாஜகவுக்குத்தான் பலனளிக்கும். தொடர்ந்து சொதப்பலான நிலைப்பாடுகளால், இந்துத்துவத்துக்கான வெளியைப் புதிது புதிதாக உருவாக்கித் தருவதை இனியும் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், இதைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். (மேலும் ஒரு சிலருக்கு இந்தப் பிரச்னை தொடர்வது, வருவாய் தரும் விஷயமாக இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன்.)

அந்த வகையில் முஸ்லீம்கள் தங்கள் அதிருப்தியுடனேயே இந்தத் தீர்ப்பிலேயே சமாதானமாகப் போக விரும்பினால் அது மிக நல்ல விஷயம் என்றுதான் நினைக்கிறேன்; மாறாக இதை மேல் முறையீட்டுக்கு எடுத்துச்செல்வதும் பிரச்னை இல்லை. ஆனால் எதோ ஒரு கட்டத்தில் சமரசமின்றி இதற்கான தீர்வை அடையமுடியாது. அதற்கான சாத்தியங்களை அவர்கள் கருத்தியல் நிர்பந்தங்கள் இன்றித் தேர்வு செய்வதற்கு, மற்ற ‘மதச்சார்பற்ற’ சக்திகள் அனுமதிக்கவேண்டும். அல்லது மற்ற மதச்சார்பற்ற சக்திகள் பேசிக்கொண்டு மட்டும் இருக்க, அவர்களின் பேச்சைக் கண்டுகொள்ளாமல், தேவையானால் இந்துத்துவ சக்திகளுடன் உரையாடி ஒரு சமரசத்துக்கு முஸ்லீம்கள் வருவதுதான் நல்லது.

0

இந்தத் தீர்ப்பின் வெற்றியை ‘அடக்கி வாசிக்கவேண்டும்’ என்பதாக இந்துத்துவ சக்திகள் அறிவித்துக்கொண்டாலும், கொண்டாடுவது வெளிப்படையானது; அதற்கான காரணம் தீர்ப்பின் விளைவாக அவர்கள் பெற்றதைவிட, தீர்ப்பின் மூலம் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளும், இத்தனை காலச் செயல்பாடுகளும் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றிருப்பதுதான். கொண்டாடுவது இயல்பானது என்றாலும், இந்த வெற்றி எந்தப் பொறுப்புணர்வையும் அவர்களுக்கு தரவில்லை. இந்த இடத்தில் 1992 அத்துமீறலுக்கு பொதுவாகவும், குறைந்தபட்சம் அதனால் புண்பட்ட முஸ்லீம்களிடம் ஒரு வார்த்தைக்காகவாவது இந்துத்துவவாதிகள் மன்னிப்பைக் கேட்பது, இந்தப் பிரச்னையில் முஸ்லீம்கள் சமரசத்தை ஏற்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும். ஆனால் திமிராக, 1992 செயலுக்குக் கிடைத்த அங்கீகாரமாக அவர்கள் இதை எடுத்துக்கொள்கிறார்கள்.

தமிழ்ச் சூழலில் விவாதத்தை கிளப்ப வந்த, ‘இந்துத்துவ அறிவுஜீவி’யாகப் பலரால் முன்வைக்கப்படும் அரவிந்தன் நீலகண்டன், ‘இடித்ததில் தவறில்லை’ என்கிறார். அதற்கு, பல சால்ஜாப்பு வாதங்கள். இந்தக் கட்டுரையில் இந்துத்துவ எதிர்ப்பு அரசியல் பேசுபவர்களை முன்வைத்து, அவர்களின் அரசியல் சார்ந்த விமரிசனமாகவும் பரிந்துரைகளாகவும் சில கருத்துக்களை முன்வைத்துள்ளேன். இந்துத்துவாவுக்கு, பொறுப்பாக நடப்பது பற்றியும், சமரசத்தை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் பரிந்துரைகளாக ஏதும் நான் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. காலத்தின் போக்கில், இரு தரப்பினரும் சமரசத்தை நாடி உரையாடித்தான் ஆகவேண்டும் என்கிற நிலை வந்தால், இந்தப் பொறுப்பை அவர்கள்தான் உணரவேண்டும்.

என் தனிப்பட்ட பார்வையில், தீர்ப்பின் போக்கில் சொல்லப்பட்ட மற்ற விஷயங்களை விடுத்து, ஒருவேளை மூன்றில் இரண்டு பங்கு, அல்லது பாதியேனும் முஸ்லீம்களுக்கு அளித்திருந்தால் நான் தெளிவாக இந்தத் தீர்ப்பை வரவேற்றிருப்பேன். ஏனெனில் நாம் இந்துத்துவாவின் இத்தனை வருடச் செயல்பாட்டுக்கும், முனைப்புக்கும், அவர்கள் கொடுத்த விலைக்கும் பதிலாக ஒரு விலை கொடுக்காமல், இந்த பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். அந்த நிர்பந்தத் தளைகளை மனத்தில் கொண்டு, இந்தத் தீர்ப்பை அல்லது இதே போன்ற ஒரு சமரசத் தீர்ப்பை பின்னாளில் மற்ற இந்திய நீதியதிகாரங்களும் வழிமொழியக்கூடும் எனில், அதில் ஏதாவது ஒன்றில் சமரசம் கொள்வதுதான் விவேகம் என்று நினைக்கிறேன்.

அடுத்து, இந்தத் தீர்ப்பை முன்வைத்து முஸ்லீம்கள் இரண்டாம்தரப் பிரஜைகள் ஆக்கப்பட்டதாகவும், முஸ்லீம்களுக்கு நியாயம் என்பது கிடைக்க இங்கே வாய்ப்பே இல்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் பல நியாயமற்ற தன்மைகள் என்பதாகக் கருதும் விஷயங்களுக்கு ஒரு கோப எதிர்வினையாக, கொஞ்ச நாட்களுக்கு அவ்வாறு சொல்வதால் பரவாயில்லை என்றாலும், அதைத் தீவிரமாக நம்பத் தொடங்குவது யாருக்கும் நன்மை செய்யும் என்று தோன்றவில்லை. இந்தத் தீர்ப்பு ஒரு முஸ்லீம் நீதிபதியின் பார்வைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை மறக்க முடியாது; அது ஒருபுறம் இருக்க, ஒரு குறிப்பிட்ட வழக்கில், ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அநியாயமாக கருதும் காரணத்துக்காக இந்தியாவில் நியாயம் கிடைக்கவே வாய்ப்பில்லை என்கிற பரப்புரையில் நியாயமில்லை என்பது மட்டுமல்ல; அது, இருக்கும் ஜனநாயக வாய்ப்புகளையும்கூடப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இட்டுச்செல்லும்.
ஒருவேளை இந்தியாவை ‘இந்து நாடு’ என்று சொன்னால் அது எந்த அர்த்தத்தில் சொல்லப்படுகிறது என்கிற தெளிவு வேண்டும். நிச்சயமாக சட்டத்தில் கிடைக்கும் சுதந்தரம் மற்றும் அனுபவிக்கும் உரிமைகளின் அடிப்படையில், இந்தியாவை பாகிஸ்தான், பங்காளாதேசம், அரபு நாடுகள் போல ஒரு மதத்தின் நாடாகச் சொல்லமுடியாது என்பதை மறைத்துவிட்டுப் பேசுவது நேர்மையில்லை; அவ்வாறு சொல்வதனால் அடையக்கூடிய பயனும் ஏதுமில்லை.

இந்தியா விடுதலை அடைந்த பிறகான பல புள்ளிவிவரங்களை வைத்து, முஸ்லீம்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாகப் பலர் காட்டுகிறார்கள். (அண்மையில் அ.மார்க்ஸ் வழக்கம்போல ஒரு பேட்டியில் அதைச் சொல்லியிருக்கிறார். அதில் சில இடங்களில் அறிவுரீதியான கறார் நேர்மை இல்லை என்பதை வேறு சமயத்தில் அணுக விரும்புகிறேன்.) முஸ்லீம் மக்களை அநீதி இழைக்கப்பட்டவர்களாக நிறுவும் நிஜமான புள்ளி விவரங்களை என்னாலும் திரட்ட முடியும் என்றுதான் நினைக்கிறேன். பிரச்னை என்னவெனில் முஸ்லீம்கள் மட்டுமின்றி, இந்தியாவின் எந்த ஒரு சமூக/இனக்குழு/சாதியினரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து, சுதந்தர இந்தியாவில் இதுவரை அவர்களுக்கு அநீதி மட்டுமே இழைக்கப்பட்டு வருவதான புள்ளிவிவரங்களை அளிக்கமுடியும் என்றுதான் தோன்றுகிறது. மேலும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக ஏதோ ஒருவிதத்தில் கருதாத ஒரு சமூகக் கூட்டமும் (பார்ப்பனர்கள் உட்பட) இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

இதில் பிரச்னை என்னவென்றால், இந்தப் புள்ளிவிவரங்கள் பொய்யாக இருக்கவேண்டிய தேவையில்லை என்பதுதான். முஸ்லீம்களுக்கு அநீதி நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் விவரங்களை நான் மறுக்க வரவில்லை. அதை மீறி இந்தியாவில் அரசியல் செய்யக்கூடிய சாத்தியமும் அதற்கான வெளியும் இருக்கிறது என்பதைத்தான் சொல்ல விளைகிறேன். (இத்தகைய சாத்தியமும் வெளியும் தற்போதும், இதற்கு முன்னாலும் இல்லாத நாட்டுக்கான உதாரணமாக இலங்கையையும், தமிழர்களின் இருப்பு சார்ந்த பிரச்னையையும் குறிப்பிட முடியும். இந்திய ஜனநாயகம் அத்தகையது அல்ல என்பதையே இங்கே குறிப்பிடுகிறேன்.)

அதே நேரம் இந்தியப் பொதுமக்களின் வெகுமனம், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த வெகுமனம் (சாதியரீதியாக ஒரு நோய்க்கூறு மனநிலை கொண்டதெனினும்), மதரீதியில் சகிப்புத்தன்மையுடனான ஒரு பரந்த மனப்பான்மை கொண்டது. முஸ்லீம்கள் குறித்து சில முன்முடிவுகள் உண்டு; எனினும் அது இந்துத்துவக் கருத்தியலில் கரைத்துகொள்ளாத, முஸ்லீம்களின் இருப்பை ஒப்புக்கொள்ளும் பரந்த மனப்பான்மை கொண்டது. இதற்குப் பல நடைமுறை உதாரணங்களை அடுக்க முடியும். அவை தவிர, 2004 நாடாளுமன்றத் தேர்தலில், தொடர்ந்த பல பிரசாரங்களைத் தாண்டி, சோனியா காந்தியைப் பிரதமராக்கும் ‘மகேசன் தீர்ப்பை’ வழங்கியதை மறக்க முடியாது. பெருமளவு தாராள மனப்பான்மை கொண்ட ஐரோப்பிய நாடுகள் எதிலும்கூட, பக்கத்து நாட்டிலிருந்து குடியேறிய ஒருவரை, அது குறித்த பிரசாரத்துக்கு இடையே, நாட்டின் முதல் பதவிக்கு மக்கள் அனுப்புவது நடக்கும் என்று தோன்றவில்லை.

ஒரு அறிவு நேர்மை கருதியே இதைச் சொல்கிறேனே அன்றி, எனக்கு இந்தியா என்கிற கட்டமைப்பின்மீது புனிதமான ஈர்ப்பும் பிடிப்பும் எதுவும் இல்லை; ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு குறித்த ஆத்திரம் மட்டுமே உண்டு; அதற்கு ஏதேனும் வகையில் இந்தியா விலை கொடுப்பதை மனதார விரும்பவும் செய்கிறேன். அதே நேரம் இந்தியக் கட்டமைப்புக்குள் கிடைக்கும் ஜனநாயக அரசியல் வெளியை, அதில் இயங்கும் சாத்தியம் இருக்கும்வரை பயன்படுத்திக்கொள்வதே இழப்புகளை ஆகக் குறைவாக்கும் உத்தியாக தோன்றுகிறது. (ஆதிவாசிகள்/மாவோயிஸ்ட் போராட்டம் போன்றவற்றில் அப்படி ஒரு சாத்தியம் இல்லாமல் இருக்கலாம் என்பது வேறு விஷயம்.)

முஸ்லீம்களால் மறக்க முடியாத உச்சபட்ச வடுவாகவும் அநீதியாகவும், குஜராத் தாக்குதலும், அதில் யாருமே தண்டிக்கப்படாததும் இருக்கிறது. ஆனால் இந்திய ஊடகங்கள் குஜராத் முஸ்லீம்கள்மீதான தாக்குதலை கிட்டத்தட்ட முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளன; ஏராளமான அறிவுஜீவிகள் அது குறித்து எழுதியுள்ளனர்; புத்தகங்கள் வந்துள்ளன. இதற்கு நேர்மாறான ஓர் உதாரணம் உண்டு. குஜராத் அளவுக்குத் தீவிரம் அல்லாவிடினும், கர்நாடகாவில் 1992-ல் நடந்த தமிழர்மீதான தாக்குதல் ஓரளவு தீவிரமானது. குறிப்பாக அதன் பிறகான இந்த 18 ஆண்டுகளில், மெல்ல மெல்ல கர்நாடகாவில் தமிழர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு, அவர்கள் அடையாளமே அழிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து எந்த நியாயமான ஆவணமும் பதிவும் கிடையாது. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள்மீதான தாக்குதல்களை ஆவணப்படுத்த, தமிழகத்தில் இருந்து சென்றுவந்த அ.மார்க்ஸோ, மக்கள் சிவில் உரிமைக் கழகமோ, 1992-க்குப்பிறகு கர்நாடகாவில் தமிழர் இருப்பில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து எதையும் ஆவணப்படுத்தும் எண்ணத்தில்கூட இறங்க மாட்டார்கள். இவர்களே செய்ய நினைக்காத ஒன்றை, மற்ற இந்திய அறிவுலகம் செய்யப் போவதும் இல்லை. இதுதவிர, தொடர்ந்து நடக்கும் அயோக்கிய அவல நாடகமான தமிழ் மீனவர்கள்மீதான இலங்கைப் படையின் தாக்குதல், அதற்கு இந்தியா உடந்தையாக இருக்கும் பாத்திரத்தை வகிப்பது, மற்றும் ஈழப்பிரச்னை என்று பேசப் பல உள்ளன.

ஆனாலும் தமிழ் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் விரக்தி அடைந்து விபரீத முடிவுகள் எடுப்பதைவிட, இந்தியக் கூட்டமைப்பினுள் தங்கள் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவதே விவேகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியக் கூட்டமைப்பை உடைக்க நினைக்கும் முயற்சிகள் மிகப் பெரிய அரச வன்முறையையும் அடக்குமுறையையும் மக்கள்மீது ஏவுவதற்குக் காரணமாகும் என்பது ஒரு காரணம்; இன்னமும் இந்தியக் கூட்டமைப்புச் சட்டகத்தில் – ஆயிரம் கோளாறுகளுக்கு நடுவில் – பிரச்னைகளை எழுப்பவும், தீர்வு நோக்கி நகரவும், நகர்த்தவும் ஒரு ஜனநாயக அரசியல் வெளி இருக்கிறது என்பதும் ஒரு காரணம். தமிழர்களைவிட முஸ்லீம்களுக்கு இன்னும் சாதகமான வெளி இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.

போராளித்தனமாக என்ன பேசினாலும், இந்த வெளியை நடைமுறையில் சாதுர்யமாகப் பயன்படுத்துவதுதான் விவேகமான அரசியல் செயல்பாடாக இருக்கும் என்று தோன்றுகிறது.

Post a Comment

---------------------------------------
Site Meter