Tuesday, June 28, 2005
கதார்!
என் பதிவுகளில் இன்று வரை படம் எதுவும் காட்டாததற்கு, நான் எழுத்திலேயே படம் காட்டுவது மட்டும் காரணம் அல்ல. படம் காட்டுவது எப்படி என்று தெரியாததுதான் முக்கிய காரணம். நேற்றுதான் மதி தமிழ்மண மன்றத்தில் அளித்த தகவலை வைத்து தெரிந்துகொண்டு அளிக்கும் முதல் முயற்சி இது. எழுதாத நேரத்தில் பெயரிலியை முன்னுதாரணமாய் வைத்து இப்படி படப்பதிவாவது போடுவதாய் இருக்கிறேன்.
மேலே இருப்பவர் PWGயின் புரட்சி பாடகர் கதார். (கூட இருப்பவரின் பெயர் என் அசிரத்தை மற்றும் பெயர்களை நினைவு வைத்துகொள்வதில் எனக்கிருக்கும் பலவீனம் காரணமாய் நினைவிலில்லை.) கதாரின் பாடல்களை கேஸட்டில் கேடிருக்கிறேன்.என் குறைந்த பட்ச தெலுங்கு அறிவில் அதை முழுமையாய் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், கதாரின் பாடல்கள் நரம்புகளில் ஏற்றும் உணர்ச்சியை அனுபவித்திருக்கிறேன். மேலே தெரியும் அத்தனை பெரிய கூட்டத்துடன் பெரிய வெளியில் என்ன உணர்வினை தரும் என்று கற்பனை செய்ய முடிகிறது.
இரண்டு படங்களும் இணையத்திலிருந்து இறக்கி என் கணணியில் போட்டு பல காலமாகிறது. கதாரின் படம் இந்து பத்திரிகையிலிருந்தும், ராஜாவின் படம் ராகாகி படத்தொகுப்பிலிருந்து எடுத்ததாக நினைவு. அவர்களுக்கு அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு நன்றி.
Post a Comment
---------------------------------------
21 Comments:
ஆஹா!!! முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் ரோசவசந்தா? இனிமே நிறைய படம் காண்பிப்பீர்கள் அல்லவா?
இளையராஜாவின் படம் மிக மிக அருமை. கதார் எனக்கு புதிய செய்தி. கூகிலித்து பார்க்கிறேன் அவரைப்பற்றி. நன்றி.
http://kavithai.yarl.net/archives/001747.html
ரோசா கத்தாரைப் பர்றிக் கேள்விப்பட்டபின் அவரைப் பற்றி மேலும் அறிந்துகொள்வதற்காக ஒரு பதிவை என்னுடைய வலைப்பதிவில் இட்டேன் யாருமே தகுந்த பதிலளிக்கவில்லை.முழுமையாகத் தெரிந்தால் அவரைப் பற்றி எழுதுங்களேன்
எனது பதிவுக்குச் சுட்டி இங்கே
http://kavithai.yarl.net/archives/001747.html
நான் கதாரைக்கேட்டதில்லை. ஆனால் அந்த நக்ஸல் இயக்கப்பாடகரின் ஆளுமையைப் பற்றி படித்திருக்கிறேன். அவர் மீது தாக்குதல் நடந்து அதிலிருந்து அவர் உயிர் பிழைத்து வந்தபோது எனக்கு மகிழ்வாயிருந்தது.
ஒரு மக்கள் பாடகர். எனக்கு இளையராஜாவிடம் ஒரு ஏமாற்றம் உண்டு. அவரது மேதமையைக் கொண்டு நாட்டுபுற இசையை மீட்டு அதை முற்றும் முழுதாக ஒரு பாரதி கவிதையில் செய்ததுபோல புதிய உயிகொடுத்து ஒரு பீடத்தில் அமர்த்தி மக்களின் இசையாக ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடாதா என்று! ஆனால் அவர் ஒரு சமரசவாதியாக தன்னை ஆக்கிக்கொண்டது என்னளவில் ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. ஏனெனில் அதற்கான மேதமை அவரிடம் இருந்தது. ஆனால் அப்படி அவர் சமரசமற்றும் அதே சமயம் கத்தார் போன்று எந்த இயக்கச் சார்பும் நெருப்பும் இன்றி இருந்திருந்தால் அவர் தமிழகத்தில் வெளித்தெரிந்திருக்க முடியுமா என்பதும் சந்தேகமே!
பெருமூச்சு விடச்செய்த படங்கள். கத்தாரின் படத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாகப்போட முடிந்தால் அந்த மக்கள் திரளை நன்கு காணமுடியும்.
நன்றிகள் வசந்த்.
ரோசா, ஈழநாதன்:
மிக்க நன்றி!!!
நேர்த்தியாய் பதிவுகள் எழுதி வந்த ரோசாவசந்தையும் சீரழித்தாயிற்றா? பதிவுகளுக்கிடையில் படம் போடுவது பிரச்சினையில்லை. தனிய படம் மட்டும் போட்டுவிட்டு பதிவுகள் எழுதாமல் இருக்காமல் விட்டால் சரி. இப்படிப் பலரும் படம் போட உந்துசக்தியாயிருக்கும் பெயரிலியை இந்தக்கணத்தில் கண்(ண)டிக்கின்றேன்.
//நான் எழுத்திலேயே படம் காட்டுவது மட்டும் காரணம் அல்ல.//
இனிமேல் டபுள் ஃபிலிமா? ;-)
கதாரின் தாக்கம் பெரும்பாலும் தெலுங்கானா பகுதியில் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன். நான் சிறிதுகாலம் வேலைபார்த்த ராயலசீமா பகுதியில், வேலை காரணமாகச் சென்ற பக்கத்து நகரமொன்றில் கதாரைப் பார்க்க நேர்ந்தது - அப்போதுக் இதே போலப் பெரும் கூட்டம்தான். பொதுவாகச் சில என்றால்: அங்கும் எனக்குத் தெரிந்தே எத்தனையோ நிலக்கடலை விவசாயிகள் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் - நான் அங்கே இருந்தபோது, அதற்கு ஐந்து வருடங்கள் முன்பு வரை ஒரு சொட்டு மழை கிடையாது - நிலக்கடலையில் லாபம் அதிகம் என்பதால், மழையில்லாக் காலங்களில் பயிரை மாற்றுமாறு விவசாயத்துறை அதிகாரிகள் கிராமம் கிராமமாகப் போய்ச் சொன்னாலும் பெரும்பாலான விவசாயிகள் மாற்றுவதில்லை - ஒரு கிராம சர்பாஞ்ச்சைப் (பஞ்சாயத்துத் தலைவர் மாதிரி) பார்க்க ஜீப்பில் போனால், எதிர்த்த faction தான் கிராமத்துக்குள் ஜீப்பில் வருகிறதோ என்று சர்ரென்று மலையேறிப் போய்விட்டார். பிறகு விஷயத்தைச் சொல்லி கீழே வரச்சொன்னால், இடுப்பில் ஒரு ரிவால்வர் சொருகியிருந்தது (தற்காப்புக்கு என்று நினைக்கிறேன்)! சமீபத்தில் கொலைசெய்யப்பட்ட பெனுகொண்டா ரவி என்ற தெலுகு தேசம் எம்.எல்.ஏ (சாதாரண எம்.எல்.ஏ), தனது காரில் remote control jammer உட்பட வெகு நவீன பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்தியிருந்ததாக அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதைய தேர்தல்களில், கிராமங்களில் கதவை மூடிக்கொள்ளும் வீடுகளின் ஜன்னல்களைத் திறந்து, தெலுகு தேசம் சேலையையும், காங்கிரஸ் வளையல் பாக்கெட்டுகளையும் வீடுகளுக்குள் எறிந்து ஓட்டுப்போட வருமாறு வற்புறுத்திவிட்டுப் போவதையும் பார்த்திருக்கிறேன். தென்மாவட்டங்களில் சித்தூர் தவிர கடப்பா, கர்நூல், அனந்தபுரம் மாவட்டங்களில் பெருமளவிலான விவசாய நஷ்டங்களும் வேலைவாய்ப்பின்மையும், பொதுவாகவே குறைவான படிப்பறிவும் (தமிழ்நாட்டில் யாராவது மாடுமேய்க்கும் சிறுவனை அழைத்துக் கேட்டால்கூட குறைந்தபட்சம் 'அஞ்சாவது வரை படிச்சிருக்கேன், அதுக்கு மேல படிக்க வசதியில்லை' எனும் வாய்ப்புக்கள்தான் அதிகம் - ராயலசீமா பக்கத்தில் அதுகூடக் கிடையாது), பெரும்பாலும் ரௌடிகளை வைத்து அரசியல் நடத்தும் காங்கிரஸ் - தெலுகு தேசம் கட்சிகளின் இம்சையும் எனக்குத் தெரிந்தவரையில் அப்பிரதேசத்தை பெருமளவு சீரழித்து விட்டிருக்கிறது. இருப்பினும், மழைநீர் சேகரிப்புக்கு சந்திரபாபு நாயுடு செய்த சில திட்டங்கள் (அன்னா ஹஸாரே மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்ட watershed projects), food for work திட்டங்களில் போட்ட கிராமத்துச் சாலைகள் அனைத்தும் கட்சித் தலைகள் பணத்தை விழுங்காமல் செய்திருப்பார்களேயாயின் மிக உபயோகமாகத்தான் இருந்திருக்கும். தெலுங்கானா பகுதிகளுக்குச் சிலசமயங்கள் போயிருந்தாலும், மக்களைப்பற்றிப் பெரிதாகப் பரிச்சயம் ஏற்படுமளவு அங்கே தங்கியதில்லை. கோஸ்தா மாவட்ட மக்கள் ராயலசீமாவையும் தெலுங்கானாவையும் ஒரு பொருட்டாக மதிப்பதேயில்லை என்பது அங்குள்ளவர்களே கூறும் குறை!!
மேலதிக தகவல்களுக்கு நன்றி. அதுவும் அன்னா ஹாசரேயின் மேற்பார்வையில் நடந்ததாக சொல்லப்படும் பணிகள், அது பயனளிக்கவில்லையா என்பதைபற்றியும் அறிய ஆவல்.
ரோசா வசந்,வணக்கம்.நானும் படம்போடும் அறிவைத் தேடியலைகிறேன்,அந்த விளக்கத்தை(மதியின் விளக்கம்) அறிவதற்குச் சுட்டியைத் தந்துதவமாட்டீர்களா?
ஆவலுடன் காத்திருக்கும்
ஸ்ரீரங்கன்
Sri Rangan, follow this link:
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=433#433
OR go this link directly...
http://help.blogger.com/bin/answer.py?answer=324
வஸந்த் - சுவாரசியமான, முக்கியமான, தகவல். இசை எப்பொழுதுமே மக்களின் (அதுவும் ஏழை மக்களின்) இதயத்திற்கு அருகில் இருப்பது. ஏழை மக்களைப் போலவே குழந்தைகளும் இசைக்கு எளிதில் கட்டுப்படுவார்கள். அந்த வகையில் கதார் தலித்துகளின் நெஞ்சைத் தொட்டு எழுப்பியிருப்பார் என்று தோன்றுகிறது. இசையுடன் சேர்ந்த கதைப்பாடல்களுக்கு அடிமையாகாமல் இருப்பவர்கள் அடிப்படையில் உளவியல் குறைகொண்டவர்கள் என்பது என் அபிப்பிராயம். அது கதாகாலட்சேபமாக இருந்தாலும் சரி காத்தவராயம் கழுவேற்றமாக இருந்தாலும் சரி.
கட்டாயமாகக் கேட்டாக வேண்டும். பிறருக்கும் அறியத் தரவேண்டும். உங்களிடமிருக்கும் ஒலிநாடாவை எம்பி3 ஆக்க முடியுமா?
http://halwacity.blogspot.com/2005/06/blog-post_29.html
அல்வா, அந்த அசாமியின் இந்த விளையாட்டால், தற்காலிக குழப்பத்தை தவிர, அவர் நினைக்கும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. ஆனால் திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது. இந்த ஆசாமியின் கயமைத்தனமான வேலையால் இது போன்ற சில உண்மைகள் மழுங்கி போகக்கூடும். இதைக்கூட உணராத முட்டாளாய் அவர் இருக்கிறார்.
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி. பிறகு வந்து பதிலளிக்கிறேன்.
வசந்த், ஈழநாதன் - பதிவுகளுக்கு நன்றி.
80களின் இறுதியில் இரண்டு முறை கத்தரின் ஜன நாட்டிய மண்டலியின் நிகழ்ச்சியினைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. கறுப்புப் போர்வையை சுற்றிக் கொண்டும், பறையை ஒலித்துக் கொண்டும், துள்ளிக் குதித்துக் கொண்டும் கணீர் குரலில் கத்தர் பாடிய "மனுசங்கடா, நாங்க மனுசங்கடா, உன்னப்போல, அவனப்போல எட்டுசாணு உடம்பு உள்ள மனுசங்கடா" என்ற இன்குலாப்பின் பாடல் காட்சி இப்பொழுதும் பல நேரங்களில் என் மனதில் தோன்றி மறைவதுண்டு. முதல் முறை சென்னை பெரியார் திடலில் அவருடைய நிகழ்ச்சிக்குச் சென்ற பொழுது உட்கார இடமில்லாமல் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நின்று கொண்டிருந்தோம். நாட்டுப்புற இசையை மக்கள் விடுதலைக்கான ஒரு நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கொந்தளிப்பாகப் பார்த்தது அன்று தான் வாழ்வில் முதல் முறை.
இணையத்தில் கூட ஒரு முறை அவர் மாபூமி என்ற தெலுங்குத் திரைப்படத்திற்குப் பாடிய பாடலைக் கேட்டிருக்கிறேன். எந்தத் தளம் என்று இப்பொழுது நினைவில்லை. இப்பொழுது சென்னையில் சில இடங்களில் குறுந்தட்டில் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. மார்க்ஸிய - லெனினிய இயக்கப் பத்திரிகைகளில் தகவல் இருக்கலாம்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
//கத்தர் பாடிய "மனுசங்கடா, நாங்க மனுசங்கடா, உன்னப்போல, அவனப்போல எட்டுசாணு உடம்பு உள்ள மனுசங்கடா" என்ற இன்குலாப்பின் பாடல் காட்சி இப்பொழுதும் பல நேரங்களில் என் மனதில் தோன்றி மறைவதுண்டு.//
சங்கர பாண்டி, இது எனக்கு புதிய செய்தி. 'மனுசங்கடா!' பாடலை கே.ஏ.குணசேகரன் (அதே உச்சஸ்தாயில், நரம்புகளில் உணர்ச்சி ஏற்றி) பாடியுள்ளதை கேஸட்டிலும் நேரிலும் கேட்டிருக்கிறேன். கதார் அதை பாடியுள்ளதையும், சொல்லப் போனால் தமிழில் பாடியுள்ளதையும் இப்போதுதான் கேள்விபடுகிறேன். மேல் விவரங்கள் தரமுடியுமா? (நீங்கள் எதையும் குழப்பிகொள்ளவில்லை என்று நம்புகிறேன்.)
வசந்த்,
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைக்கு நிறையப் தமிழ்ப் பாடல்களை பாடினார்கள். "வாளை எடு என் தோழா - போர் வாளை எடு என் தோழா", "கம்யூனிஸ்டுகள் நாங்கள் புரட்சியாளர்கள், சொன்னாலும் மறுத்தாலும்..." போன்ற பாடல்களும் உள்ளடக்கம். அவர் மட்டுமல்லாமல் அவரது முழுக் குழுவும் பாடி, ஆடினார்கள். ஒருவேளை அன்றைக்கு அவர்களில் கே. ஏ. குணசேகரன் இருந்தாரா இல்லையா என்று தெரியாது. அது சில மார்க்ஸிய-லெனினிய அமைப்புக்கள் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி.
நீங்கள் சொல்வதும் சரி, கே. ஏ. குணசேகரனும் அதே பாடலைப் பாடியிருக்கிறார். சிகாகோ அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாடு ஒன்றிலும் அவர் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்.
நன்றி - சொ. சங்கரபாண்டி
நன்றி சங்கரபாண்டி.
நன்றி சங்கரபாண்டி.
விஜய் நன்றி.
ஈழநாதன், உங்கள் பழைய பதிவை தவறவிட்டிருக்கிறேன். விகடன் பேட்டி குறித்து ஒருவர் பொடிச்சியின் பதிவில் சொல்லியிருந்தார் உங்கள் பதிவின் மூலமே படித்தேன். நன்றி. மற்ற கருத்துக்கள் இப்போது வேண்டாம். பிறகு எழுதுகிறேன்.
தங்கமணி, இளயராஜா மீது உங்களுக்கு ஒரு வருத்தம். வேறு பலருக்கு வேறு பல வருத்தங்கள். எனக்கும் சில உண்டு. எல்லாவற்றையும் நிறைவேற்றும் கடமையை அவரிடம் எதிர்ப்பார்பதும், அது நிறைவேறாத கோபத்தில் பேசுவதும் நியாயமல்ல. நீங்கள் அப்படி சொல்லவில்லை. ஆனால் பலருக்கு தங்கள் அரசியல் பார்வைக்கு ஏற்ப இளயராஜ இயங்காத கோபம் உள்ளது. அது வெளிப்படும்போது அது அவர்களைதான் அடையாளம் காட்டுகிறது. (உங்களை சொல்லவில்லை)
ஆனாலும் நீங்கள் சொன்னது எனக்கு ஒப்புதலாயில்லை. இளசு நாட்டுபுற இசைக்கு பல மீள்வடிவம் கொடுத்திருப்பதாகவே நினைக்கிறேன். இளையராஜாவிடமிருந்து நாட்டுபுற இசையை பிரிக்கவே முடியாது. அது அவரின் சிம்ஃபனி இசையிலும் இருக்கும். திருவாசக இசையிலும் இருக்கும். nothing but wind, how to name it லேயும் உண்டு. ஆனால் கதார் போல அவர் மக்கள் இசைஞன் அல்ல. கதார் வேறு, இளயராஜா வேறு. இருவரையும் ஒப்பிடாமல் இருவருமே நமக்கு தேவை என்பதுதான் என் கருத்து. விரிவாய் என் கருத்தை மீண்டும் எழுதுகிறேன்.
கருத்துக்கு நன்றி.
கண்ணன், டீஜே நன்றி.
மாண்ட் வழக்கம் போல சத்துள்ள பின்னூட்டத்திற்கு நன்றி.
ஸ்ரீரங்கன் டீஜே உங்களுக்கு பதில் தந்துள்ளார். நன்றி.
வெங்கட், சென்னையில் நான் தங்கியிருந்த விடுதியில் ஒரு பெங்காலி நண்பனின் அறையில் தெலுங்கு எழுத்துக்களை கொண்ட கேஸட்டை பார்த்து அது கதாருடையது என்று அறிந்தேன். அவனிடன் கடன் வாங்கி கேட்டதுதான். ஆனால் உங்கள் வேண்டுகோளை இந்தியா சென்றபின் என்னால் நிச்சயம் நிறைவேற்ற முடியும். அதற்கு முன் எம்பி3யாக மாற்றுவது குறித்து அறியவேண்டும். கருத்துக்கு நன்றி.
ஏற்கனவே பொடிச்சியின் பதிவில் முன்பு நான் எழுதியது.
சென்னையில் நான் தங்கியிருந்த கல்வி நிலயத்தின் விடுதியில் கதார் 4 நாட்கள் தங்கியிருந்தார். அவரை பார்த்தாலும், அவர் கிளம்பி சென்ற பிறகே அது கதார் என்று தகவல் தெரிந்தது. அப்போது கதாரை அங்கே தங்க வைத்த நண்பரை, ஒன்றரை ஆண்டுகள் முன்னால் இத்தாலியில் சந்தித்தேன் -உல்லாச பயணமாய் வந்திருந்தார். அமேரிக்காவில் ஒரு வேலையிலிருந்து, இன்னொரு வேலைக்கு தாவும் இடைவெளியில் இப்படி ஒரு சுற்றுலா. கதாரை பற்றி கேட்டேன். அது போன்ற விஷயங்களுடன் தொடர்புவிட்டு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொன்னார்.
வசந்த், நான் சொல்லவிரும்பியது என்னவெனில் ராஜா நாட்டுப்புற இசையை ஒரு நிறுவனமயமாக்கி அதை நவீன வாழ்க்கைமுறை, கலை வடிவில் ஒரு பாரம்பரியமாக்கி இருக்கலாம் என்பதைத்தான். ருக்மணி அருண்டேல் சதிராட்டத்தை பரதநாட்டியமாக மீட்டெடுத்து அதை நவீனமாக்கி, நிறுவனப்படுத்தி, மக்களுக்குத் தந்ததைப்போல. பாரதி தமிழ்க் கவிதை, உரைநடைமரபை மாற்றி எளிமையும், நேர்மையும், ஆழமும் கொண்டதாக மாற்றியதைப்போல.
அவருக்கு அந்த மேதமை இருக்கிறது என்று நான் நினைத்ததால் அப்படி நினைத்தேன். அதைச் செய்யாததற்காக நான் அவரைக் கோபிக்க, கண்டிக்க முடியாது. நான் அடைந்தது ஏமாற்றமே. இன்றும் அவர் தமிழர்களின் இசை ரசனைக்குறைவைப் பற்றி பேசுவதைக்கேட்கும் போதெல்லாம் 'இவர் அதைச் செய்திருக்கலாம் என்று தோன்றும். பாரதி எழுதியதைப்போல நமது சமூகம் (தனிநபர்கள் அல்ல) சங்கீத ஞானத்தை முற்றாக இழந்துபோனது போலத் தெரியும். அதற்கும் பாரதி வழி சொல்லியிருப்பார், அதாவது நமது மக்கள் பாடல்கள், கும்மிப்பாட்டு, நலுங்கு, அம்மானைப்பாடல்கள், தெம்மாங்குப்பாடல்கள் இவற்றை மீளுருவாக்கம் செய்யவேண்டும் என்று. அதை ராஜா செய்திருக்கலாம் என்பது என் எதிர்பார்ப்பு. வேறு யாரிடம் எதிர்பார்க்க முடியும்?
சினிமாவில் அவர் தமிழிசையை, நாட்டுப்புற இசை வடிவை நன்கு பயன்படுத்திக்கொண்டாரே தவிர அதை மீளுருவாக்கம் செய்தார் (முன்பு குறிப்பிட்டவர்கள் போன்று) என்று எண்ணவில்லை.
அவர் இனிமேலும் அப்படி எதையாவது செய்யலாம். அல்லது பாரதி போன்று தன்னில் சுயாதீனம் மிக்க, ஆளுமை கொண்ட (authority), ஆழமான ஞானமும், தனித்து நிற்பதற்கான அதிகாரமும் கொண்டவராக ராஜா இல்லையோ என்னவோ!
நான் நீங்கள் என்னை தவறாக புரிந்துகொண்டதாக எண்ணி இதை எழுதவில்லை. நீங்கள் மறுபடியும் இதுகுறித்து பிறகு எழுதும் போது நீங்கள் இதைக்குறித்து எதையாவது சொல்லக்கூடும் என்றே எழுதுகிறேன். நன்றி.
Post a Comment
<< Home