ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, April 22, 2005

சந்திரமுகி!

வலைப்பதிவில் எழுதி குவிக்கப்பட்டு அலுத்தும் விட்டது. 'சந்திரமுகி' பற்றி எழுதும் எந்த நோக்கமும் படம் பார்க்கும் வரை, பார்த்து முடிக்கும் வரை இல்லை. பார்த்த பின் படக்கதையில் சாத்தியமாகும் இரண்டு வாசிப்புகள் மூளையில் தாக்கிய பின்பே எழுத தோன்றியது.

மணி சித்திரத்தாழ் நான் பார்க்கவில்லை, பார்க்கும் வாய்ப்பும் இப்போதைக்கு இல்லாததால் மூலத்துடன் ஒப்பிட்டு பேச முடியவில்லை. எப்படியாயினும் மணி சித்திரத்தாழ் என்ற கதைச்சத்து மிகுந்த மலையாளப் படத்தின் தழுவல், (நெடு நாளைக்கு பிறகான)ரஜினி படம் என்ற வகையில் ரசிக உற்சாகத்திற்கான தீனி என்ற சிக்கலான ரெட்டை குதிரை போட்டியில் வாசு வெற்றி பெற்றிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

ஒரு சீரிய சினிமாவை பார்ப்பது போன்ற பார்வையில் பார்த்தால் முதல் பாதியில் பலவும், அடுத்த பாதியில் நோண்டி எடுத்து சிலவும் என்று பல சொதப்பல்களை சொல்ல முடியும். ஆனால் ஒரு ரஜினி படம் என்ற சட்டகத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் அர்த்தமிழந்து போவதுடன், சொல்பவரிடம்தான் பிரச்சனை (ஒரு ரஜினி படத்தை கூட பார்த்து அனுபவிக்க இயலாத இவர்கள் வேறு எதை சாதிக்க போகிறார்கள்) என்றும் தோன்றுகிறது.

தொடக்கமே மிஸ்டர் பரத் பாணியில் காண்ட்ராக்ட் விவகார சண்டையில் தொடங்கி ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து ரஜினியை விரைவிலேயே அறிமுகப்படுத்துகிறது. ரஜினி ஷூவில் தொடங்கி, காட்டப்படும் காட்சியில் அவர் காலை வைத்திருக்கும் நிலையில் என் காலை வைத்து பாலன்ஸ் செய்ய முயன்றேன், முடியவில்லை. வருடங்கள் காத்திருந்து, ரஜினியை பார்க்கும் அறிமுக ஸீன், ரஜினி ரசிகரின் உடலின் எல்லா திரவங்களின் அழுத்தத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தியேட்டரில் ரஜினி ரசிகர்களின் உற்சாகத்தை பார்த்தவுடனேயே எனக்கும் எக்குதப்பாக அழுத்தம் ஏறி தமிழகத்தில் இல்லாத விதியை நொந்தேன். ரஜினி காலை சுற்ற காற்றும் சுற்றி சறுகுகளை சுழற்ற, அவர் நிறுத்த எல்லாம் நிற்கிறது. சண்டையில் அறிவியல் விதிகள் மதிக்கப் படவில்லை என்று வலைப்பதிவில் கவலைப் பட்டிருந்தார்கள். நாம் வாழும் யதார்த்த உலகம் முழுக்க முழுக்க அறிவியல் விதிப்படி நடக்கும் அவலத்தை நாம் என்னேரமும் எதிர் கொண்டிருக்க, ரஜினி படத்தின் சண்டைகூட அறிவியல் விதிப்படி நடக்க வேண்டும் என்ற குரூர எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்று புரியவில்லை. இருந்தாலும் ஒரு படையப்பா பாடல்கள் போல், 'ஒருவன் ஒருவன் முதலாளி', 'ஆட்டோக்காரன்' பாட்டுக்கள் போல் அல்லாமல் 'தேவுடா, தேவுடா' சாதாரணமாக போய்விட்டதாய் தோன்றியது. ஒரு வேளை தியேட்டரில் பார்த்திருந்தால் வேறு மாதிரி தோன்றியிருக்கலாம்.இடைவேளை வரை அலுக்காமல் சென்ற படம், இடைவேளைக்கு பிறகு இன்னும் விறுவிறுப்பாய் போகப்போவது தெரிந்தது. ரஜினி ராம்கியின் தொந்தரவால் இணையத்தில் படம் பார்க்க முடியாமல், இரண்டு நாட்கள் தலைவெடிக்கும் ஏக்கத்துடன் கழிந்து பார்த்ததில் ஏமாற்றவில்லை.

இடைவேளைக்கு பிறகான படம் ரொம்ப ஆழமாய் கதைக்குள்ளே இறங்கி ரசிக மனத்தை காயடித்து விடாமல், அதே நேரம் மீண்டும் ரஜினிப்பட ரசனைக்கான சட்டகத்திற்குள்ளேயே, அதன் மேலோட்டத்துடனேயே ஆழமான கதையை இறக்கியிருந்தது. இரண்டாம் பாகத்தின் மிக பெரிய பலம் இசை. வித்யாசாகர் புகுந்து விளையாடியிருக்கிறார், குறிப்பாய் 'ராரா, ஸரசகு ராரா' பாடலிலும் அதை தொடர்ந்த பிண்ணணியிலும், இசையே அந்த காட்சிகளின் மிக பெரிய பலம். ஜோதிகாவின் இப்படி ஒரு நடிப்பை இப்போதுதான் பார்கிறேன். இதை மிகை நடிப்பு என்று யாரேனும் சொல்லக்கூடும். நடிப்பு என்பதே மிகை கலந்ததுதான். மேலும் அது யதார்த்ததையே மிகைப்படுத்துகிறது. அதுவும் நமது இந்திய குறிப்பாய் தமிழ் சினிமாவின் சட்டகத்தில் மிகையில்லாமல் நடிப்பு இல்லை. நமது சட்டகத்திற்கு எதிரான மேற்கு சார்ந்த சிந்தனையின் தாக்கத்திலேயே இந்த மிகை நடிப்பு பற்றிய புலம்பல் வருகிறது. படத்தை துய்ப்பதற்கு தேவையான சமனை குலைத்து எரிச்சலை கிளப்பாதவரை மிகை நடிப்பினால் எந்த பிரச்சனையும் இருப்பதாய் தெரியவில்லை. எலீட் ரசனை சார்ந்த யதார்த்தவாதியின் கலைப்பட வரட்டுத்தனத்தையே அது உறுத்தும். அப்படியல்லாத பார்வையில் ஜோதிகா அற்புதமாய் வெளிப்பட்டிருப்பது புரியும்.

ரஜினியை பற்றி நல்லதும் கெட்டதுமாய் பேசும் அனைவரும் சொல்லி வருத்தப்படும் விஷயம், அவர் தனது 'முள்ளும் மலரும்' போன்ற படங்களின் நடிப்பு திறனை தொடரவில்லை என்பது. ரஜினியிடம் இரண்டுவகை நடிப்பு பாணி ஒன்றுடன் ஒன்று பகிர்ந்துகொண்டு வெளிப்பட்டிருப்பதை காணமுடியும். ஒன்று அவரது ஆக்ஷன் பாணி. ரஜினியை கோடி ரசிகர்களின் நாயகனாய் மாற்றிய இந்த பாணியை இன்னோரு பக்கம் எலீட் கூட்டம் கேவலமானதாகவும், கீழதரமான ரசனையாகவும் முன்வைத்து வருகிறது. ஜெயமோகன் அதை பொறுக்கித்தனமாய் பார்க்கிறார். தன்னால் அடையாளம் காணமுடியாததை முட்டாள்தனமாகவும், கேவலமானதாகவும் பார்க்கும் எலீட் வன்முறையாகத்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இங்கே வெளிப்படுவதும் ரஜினியின் திறன் மிகுந்த, அவரிடம் மட்டுமே வெளிபட வாய்த்த தனிதன்மையான நடிப்புதான். முள்ளும் மலரும் பாணிவகை நடிப்பு இன்னொரு பாணி. இந்த இரண்டு பாணியிலேயுமே பிரித்து பார்க்க முடியாமல் கலந்திருப்பது ஒரு 'வில்லன்தனமான' இயல்பை கொண்ட நடிப்பு பாணி. அந்த பாணியில் ரஜினி வெளிப்படும் போதெல்லாம் பிரமாதமாய் கலக்கி வந்திருக்கிறார். சந்தரமுகியில் கடைசி இருபது நிமிடங்களில், ரஜினி வேட்டய ராஜாவாய் வரும் சில நிமிடங்கள், எங்கேயோ கொண்டு சென்று விட்டார். 'நெற்றிகண்' வில்லன் அப்பாவை நினைவுபடுத்தும் தோரணையுடன், வந்து 'லக்க லக்க லக்க' என்று சொல்லும் ஒரு காட்சி போதும், "அந்த கட்டத்துக்குதான்யா காசு!" படம் வெளிவரும் முன் தமிழ்நாட்டில் பயித்தியம் பிடித்து 'அரே அரே அரேஅரே' என்று சொல்லி கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன். ஏன் 'லக்க லக்க லக்க லக்க' என்று சொல்லுவார்கள் என்று இப்போது புரிகிறது!

படத்தில் ஒரு விஷயம் கயிறு மேல் நடக்கும் கவனத்துடன் கையாளப்பட்டிருக்கிறது. சுஜாதா தன் புனைவுகளில் பலமுறை கையாண்ட 'விஞ்ஞானமா, பைசாசமா?' என்ற கேள்விதான் அது. 'கொலையுதிர் காலம்', 'மலை மாளிகை' போன்ற கதைகளில் விஞ்ஞானத்தை அதற்கு எதிரான சிந்தனைகளுடன் மோதவிட்டு, ஒரு முடிவு சொல்லாமல், இரண்டு சாத்தியக் கூறையும் கலக்கி ஒரு ரெண்டு கெட்டான் முடிவை தருவார். சுஜாதா ரெண்டுகெட்டான் முடிவு தந்தாலும் வாசிப்பவருக்கு ஒரே ஒரு வாசிப்பு மட்டுமே சாத்தியமாகும். அதாவது 'விஞ்ஞானமா, பைசாசமா என்ற கேள்விக்கான பதிலை ஒரு நாளும் அறுதியிட்டு அடையமுடியாது' என்பதே அந்த வாசிப்பாக இருக்கும். ஆனால் 'சந்திரமுகி' இந்த இரண்டையும் கலந்து, இரண்டு வகை வாசிப்புகளையும் சாத்தியமாக்கியிருக்கிறது. ஒரு பக்கம் ஜோதிகாமேல் சந்திரமுகியின் ஆவி வந்து உட்கார்ந்து கொண்டதாகவும், அதன் தொடர்ச்சியாய் மொத்த கதையையும் கடைசி வரை பார்க்கமுடியும். இடையில் ரஜினி தரும் 'பிளவாளுமை விளக்கங்கள்', மனோதத்துவ ரீதியான சிகிச்சை என்று சொல்லப்படும் காட்சிகள் அந்த வாசிப்பில் எந்த இடையூறையும் ஏற்படுத்துவதில்லை. அதே நேரம் ரஜினி தரும் மனோதத்துவ விளங்கங்களை ஏற்றுகொண்டு, பேய்கதையை நம்பாமல் முழுப்படத்தையும் பார்க்க முடியும். ஜோதிகா கடைசி காட்சியில் சக்கரத்தில் உட்கார வைக்கப்படுவதோ, அந்த சாமியாரின் இருப்போ இந்த வாசிப்பில் இடையூறு செய்வதில்லை. இந்த இரண்டு வாசிப்பும் வேவ்வேறு வகை பார்வையாளருக்கு கிட்டியிருக்கும், படம் அவ்வாறு வாசிக்கப் பட்டு மக்கள் கூட்டத்தால் பார்க்கப் பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது. மேலும் இந்த வாசிப்புகளை சாத்தியமாக்கும் படக்கதை (ரஜினிக்கு மூட நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பாக படக்கதை அமைக்கப் படுவதில் தனிப்பட்ட ரீதியில் பிரச்சனையிருக்கலாம் என்ற பரிமாணம் இருந்தாலும்) முன் திட்டமிட்டு புனையப் பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

பி.கு.: பெண்களை கேவலப்படுத்தும் வழக்கமான ரஜினி பட காட்சிகள் மிகவும் குறைவு. இல்லாமலே போய்விட்டால் திருஷ்டி பட்டுவிடும் என்றோ, நயனதாராவிடம் ரஜினி வம்பிழுக்க அதன் காரணமாகவே அவர் காதலிக்கும் காட்சிகளும் சேர்க்கப் பட்டிருக்கலாம்.

Post a Comment

---------------------------------------

Wednesday, April 06, 2005

மசாக்கிஸ்ட்!

அசோகமித்திரனின் வாக்குமூலத்தை படித்த போது தமிழ் எழுத்து சூழலில் ஒரு முக்கிய இலக்கியவாதி எவ்வளவு நோய்கூறு மனநிலையுடன் இருக்க முடியும் என்று இதுவரை கருதி வந்ததற்கு இன்னோரு உதாரணம் கிடைத்ததாக மட்டும் எடுத்துகொண்டேன். ஏற்கனவே தமிழ் இலக்கிய சூழல் குறித்து அத்தகைய ஒரு புரிதலையும், அதன் மூலம் கிடைத்த சமன்பாட்டையும் கொண்டிருந்ததானால் இது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் நான் மிகவும் மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்த நண்பர்கள் இதற்கு தந்த எதிர்வினைகள்தான் தாள முடியாமல் இருக்கிறது. முழுவதும் ஒருவருடன் உடன்படுவதும் ஒத்துப்போவதும் நிச்சயமாய் சாத்தியமில்லாதது. அப்படி நிகழ்ந்தால் ஏதோ பிரச்சனை என்றுதான் எண்ண வேண்டும். ஆனால் ஒரு பச்சையான இனவாத வாக்குமூலத்தை தமிழின் மூத்த முதிர்ந்த எழுத்தாளன், முக்கிய பத்திரிகையில், அகில இந்திய வாசகர்களின் முன்வைக்கும்போது, குறைந்த பட்ச கண்டனம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, அதை நியாயபடுத்திக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு நம்பிக்கையை கொண்டிருந்ததற்காக என்னை நானே செருப்பால் அடித்து இன்புருவதை தவிர வேறு வழி தெரியவில்லை.

இது குறித்த என் கருத்தை சொல்லிவிட்டேன். அசோகமித்திரன் சொல்லியது பச்சையான இனவாத கருத்து. தங்களை 'சாமி' என்று இன்றும் கூட பல இடங்களில் (திருநெல்வேலி வாங்கய்யா காட்டறேன்) அழைக்கும், அரசியல், கருத்தியல், வலைப்பதிவு உட்பட்ட அனைத்து ஊடகங்களில் தங்களுக்கு விசுவாசமான ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை மிக மோசமான முறையில் கேவலப்படுத்தியுள்ளார். இது குறித்து எழுதுவதல்ல என் நோக்கம். ஆனாலும் அருள் சொன்ன ஒரு கருத்தை போன்றுதான் அசோகமித்திரனின் எழுத்துக்களை அணுகுகிறேன்.

"அவர் இப்போது சொன்ன கருத்துகள் அவரைப்பற்றிய என் இலக்கியம் சார்ந்த மதிப்பை மாற்றிவிடப் போவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சை பிராமணீய விழுமியங்களைக் கொண்டவராக அறியப்படும் மௌனி இன்னொரு பிடித்த எழுத்தாளர். இவர்கள் கதைகளையெல்லாம் படிக்கும்போது எனக்கு அவர்கள் பிராமணீய வாழ்க்கையைப்பற்றியே எழுதினாலும் அது ஜாதி சார்ந்த்த எழுத்து என்று என்றும் பட்டதில்லை. இலக்கியத்துக்கு ஒரு தன்மை உண்டு. ஒரு சிறு இனக்குழுவினைப் பற்றிய பிரச்சனைகள், வாழ்வியல் துக்கங்கள் இவற்றைப்பற்றி மிகநுணுக்கமான விவரணைகளுடன் எழுதப்படும் புனைவுகள் மானுடத்தின் பொதுமைகளை தம்முள்ளே வியக்கத்தக்க வகையில் கொண்டிருக்கும். The more particular you get, the more general it becomes. இவ்வகையில் ஜாதிசார்ந்து, வட்டாரம் சார்ந்து எழுதப்படுபவை மிகுந்த வலிமையான ஆக்கங்களாக முழு மானுடத்தைக் காட்டுபவைகளாக மாறுகின்றன. "

அருள் பிராமணியம் என்று சொன்னதை நான் பார்பனியம் என்று சொல்லியிருப்பேன். மற்றபடி இதை ஒத்த ஒரு அணுகுமுறையே கிட்டதட்ட எனக்கும் உண்டு. எனினும் இது எந்த விதத்திலும் விமர்சன பூர்வமாய் அசோகமித்திரனின் எந்த பிரதியையும் அணுகுவதில் பிரச்சனையாய் இருக்காது. பிரதியுடன் அடையாளம் கொண்டு வாசித்த பின், அசைபோடுதலில் எல்லா விமர்சனத்தையும் பிரயோகித்த பின்பும், இத்தகைய அணுகுமுறையில் கிடைக்கும் எந்த உலகையும் இழக்கமுடியாது என்பதே என் பார்வை. இதை பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த பார்வை "அமி என்பதால் ஸ்பெஷலாக எதிர்ப்புக் காட்டவேண்டாம்" என்று ஒரு சலுகையையோ, "ஒரு பலகீனமான எழுத்தாளனை நமக்கு தைரியமாக கேட்கமுடியுமென்பதற்காக கண்டனம் செய்வது நாம் அப்பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள நம்மில் ஒருவரை பலிகொடுக்க முனையும் தந்திரமேயன்றி வேறேன்ன? " என்று தங்கமணி போல அபத்தமாகவோ என்னை யோசிக்க வைக்கவில்லை.

குறைந்த பட்சம் ஒரு விஷயத்தையாவது அருள் (நேரடியாய் இல்லாவிடினும்)கண்டித்திருக்கிறார். அருள் பதிவிலும், பின்னூட்டங்களிலும் ஆனந்தின் கைவண்ணம் குறித்த சந்தேகத்தினை வரிசையாக பலர் கேள்வி எழுப்பியது மட்டுமே உறுத்தியது. அசோகமித்திரன் எழுதியதாய் ஒரு 'full text' வந்துள்ளது. அதில் திரிக்கப்படிருக்குமோ (என்ன வகையில் அது நிகழ்ந்தாலும்) என்ற சந்தேகம் வர, இவர்கள் அமி மீது வைத்திருக்கும் அபிமானத்தை தவிர வேறு காரணம் கிடையாது. அதற்கு ஆனந்தை சந்தேகப்படுவது எரிசலாய் இருந்தது. (ஆனந்த் மீது விமர்சனம் எனக்கும் உண்டு, சுமு போல் நானும் எதையாவது (அல்லது அதையே) கேள்வி பட்டிருக்கிறேன். இந்த பிரச்சனனயில் கூட அசோகமித்திரனின் இந்த பேட்டியை போடுவதன் அவர் நோக்கம் குறித்த கேள்விகள் உண்டு. ஆனால் இங்கே அவர் திரித்திருக்க கூடும் என்று சந்தேகம் வர என்ன அடிப்படை என்பதுதான் முக்கியம்.)

வெங்கட் தன்னால் முடிந்த அளவு விமர்சனமாய் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் விமர்சிப்பதாய் நினைத்து அமிக்கு 'மனிதன்' சர்டிஃபிகேட் தந்திருக்கிறார். தன் சாதியை மட்டும் முன்னிறுத்தி, அதன் பெருமைகள் குறித்த ஏக்கத்துடன், மற்ற அனைத்து சாதியினர் மீதும் அபாண்ட பழிபோடும் ஒருவரை விமர்சிக்கும் பதிவிற்கு, 'அசோகமித்திரன் என்ற மனிதன்' என்ற தலைப்பு சூட்டுவது குறித்து பேசினால் என்னிடம் விதண்டாவதமும், வக்கிரமும் இருப்பதாக சிலருக்கு தோன்றலாம். யாருக்கு தோன்றுகிறதோ இல்லயோ, எனக்கு இந்த பிரச்சனையையே பேசி கொண்டிருப்பதும் நோண்டி கொண்டிருப்பதும், மிக மிக அலுப்பானதாக, குமட்டலை உண்டு பண்ணுவதாக நிச்சயம் இருக்கிறது. இந்த வலைப்பதிவை தொடங்கியபோது, 'பார்பனியம்' என்ற வார்த்தையையே பயன்படுத்த கூடாது என்ற முடிவுடன்தான் தொடங்கினேன். அது குறித்த கட்டாயம் மீண்டும் மீண்டும் எதிர்வினையாய் மற்றவினைகளாலேயே எனக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த சூழலில் இந்த அளவிற்கு சுய விமர்சனம் செய்துகொள்ளும் வெங்கட்டை பாரட்டத்தான் எனக்கு தோன்றுகிறது, கிறேன்.

தங்கமணிதான், தான் மட்டுமில்லாமல் சும்மா எல்லோரையும் கூண்டோடு எங்கேயோ கூட்டிகொண்டு போய்விட்டார். முதலில் தங்கமணி எழுதியது புரியவில்லை. கிண்டலாகவோ, விளையாட்டாகவோ சொல்கிறாரோ என்று நப்பாசை கொண்டிருந்தேன். நான் உலகை பார்க்கும் வகையில், அணுகும் விதத்தில், எதிர்க்கும் தளத்தில், கண்டிக்கும் தோரணையில் மற்றவர்கள் செய்ய வேண்டியதில்லை. நிச்சயமாக தங்கமணி எழுதியதை நான் கொச்சைப் படுத்தவில்லை. " இன்னும் தோதான சமயங்களில் இப்பெருமைகள் வெளிப்படுத்தும் கோரமுகங்களைத்தான் குஜராத்தில் சமீபத்தில் கண்டது. இப்படிப்பட்ட பெருமைகளுக்கு தார்மீகமான அடிப்படை ஏதேனும் இருக்கிறதா? இன்னொருவனை சிறுமைப்படுத்துகிற ஒன்றின் மேல் கட்டப்பட்ட ஒன்று உண்மையில் பெருமையா? அதை இழப்பது என்பது ஒரு இழப்பா? " என்கிறபோது பழைய தங்கமணிதான் என்று தெரிகிறது. இதைமீறி அவர் வேறு வார்த்தைகளில் அமியை நியாயபடுத்துவதையும், வக்காலத்து வாங்குவதையுமே எதிர்கிறேன்.

முதலில் தங்கமணியுடன் முரண்(மட்டும்)படும் இடம். அசோகமித்திரன் 'நேர்மையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதற்கு பாராட்ட அல்லவா வேண்டும்' என்கிறார். இப்படி ஒரு கருத்தை பல இடங்களில் கேட்டிருகிறேன். நேர்மையாய் தன்னை வெளிப்படுத்துவதற்கு பாரட்ட வேண்டும் என்றால் ஹிட்லரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். நான் ஹிப்பாகரஸியை எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனையாக பார்க்கவில்லை. ஒரு காலத்தில் சாதி நேரடியாக பேசப்பட்டது. சாதிய வசையை, சாதிய பெருமையை நேரடியாக சொல்வார்கள். இன்று வீட்டினுள் வெளிப்படையாகவும், வெளியில் பூடகமாகவும் பேசுகிறார்கள். இதை போலித்தனம் என்று பார்க்கமுடியவில்லை. ஆரோக்கியமான சமுதாயம் நோக்கிய பயணமாகத்தான் தெரிகிறது. சமூகத்தில் அத்தனை பேரும் திருந்தி சாதியை துறப்பதோ, மறப்பதோ நிகழக்கூடியதல்ல. சட்டம் மற்றும் சமூக நிர்பந்தங்கள் காரணமாய் நிகழும் மாற்றங்கள் போலித்தனமானவை என்று கருத முடியாது. இப்படித்தான் அடுத்த கட்டத்திற்கு போக முடியுமே ஒழிய எல்லோரும் தன்னை விடுதலை செய்துகொண்டு அல்ல. "சாதி என்பதைப்பற்றிய நமது போலியான புரிதல், நாகரீகம் என்ற புனையப்பட்ட ஆடையைக் கிழித்து வெளிப்பட்டதற்காக அதிர்ச்சி அடைகிற நாம் அந்த போலித்தனத்தைக் குறித்து ஏன் அதிர்ச்சி அடைவதில்லை?" என்று கேட்கிறார் தங்கமணி. என் பார்வை இப்படி கேட்பதற்கு எதிரானது. வெளிப்படையாய் பேசாமலிருக்கும் போலித்தனம் என்பது நோய் பரவாமலிருக்க அணியும் முகமுடி மாதிரி அவசியமானது. அதனால் தங்கமணி போல் அசோகமித்திரனின் 'வெளிப்படையை' ஆரோக்கியமானதாக அல்லாமல், நோய் பரப்பும் தன்மையாயகவே பார்கிறேன். இது தங்கமணியுடம் முரண் மட்டும் படும் இடம்.

அடுத்து இதை போல வெறும் முரண் மட்டும் பட இயலாமல் தெளிவாக எதிர்ப்பது.

"...அவர் நம்புகிற பெருமிதத்தை, நம்பிக்கையை, அது சோதனைக்குள்ளாகும் போது அடைகிற வலியை அவர் சொல்லக்கூடாதா? நான் இதைக் கேலிக்காக கேட்கவில்லை. ...... அசோகமித்திரன் பார்பனர்களின் சமூக நிலையை, பார்ப்பன மதிப்பீடுகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் பேசுகிறார். அது பார்ப்பன அரசியலைப் பேசுவதுதான். பா.ம.கவையும், திருமாவையும் சாதி அரசியலைப் பேசுவதாக கருதும் போது, நாம் வெற்றிகரமாக சாதியைக் கடந்துவிட்டதாக எண்ணினோமே, இப்போது ஏன் அதிர்ச்சி அடைகிறோம்."

என்ன சொல்ல வருகிறார் என்று தலை கால் மட்டுமல்ல, நகம், மயிர், சதை, ரத்தம் எதுவும் புரியவில்லை. சாதிய பெருமிதம் பேசுவதிலும், அதன் இழப்பை புலம்புவதிலும் எந்த பிரச்சனையும் இல்லையா? அதில் என்ன தப்பு என்கிறாரா? வேறு என்ன எழவுக்கு நாம் இத்தனை காலமாய் புலம்பி கொண்டிருக்கிறோம். அதில் தவறு எதுவும் இல்லையெனில் எதற்கு "இன்னொருவனை சிறுமைப்படுத்துகிற ஒன்றின் மேல் கட்டப்பட்ட ஒன்று உண்மையில் பெருமையா? " என்று ஏன் கேட்கிறார். இல்லை, எனக்குத்தான் புரியவில்லையா?


சாதி பெருமை, அதற்கான ஏக்கம் எங்கே எப்படி வெளிப்பட்டாலும் அதை விமர்சிப்பது அல்லவா நம் அணுகுமுறையாய் இருக்க முடியும்? "கொண்டாடப்படும் அறிவாளிகள், நெடுஞ்சாண் கிடையாக நிறுவப்பட்ட மதபீடங்களின் முன் விழுந்து எழுந்து வேதக்கல்வி பற்றி கூச்சமில்லாமல் பேசும் விஞ்ஞானிகள், ஜனாதிபதிகள், இடதுசாரிகள், ஆன்மீகவாதிகள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள், போலிஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் ஆத்மார்த்தாகவும், ஆணித்தரமாகவும் நம்புகிற பெருமையை " நாம் கேள்வி கேட்காமல் ஏற்கிறோமா? அதை பற்றி வாய்கிழிய பேசுவதுதானே நம் வேலை! சந்தர்ப்பம் எதற்கு ஏற்படுகிரது என்பதுதானே பிரச்சனை. எழுத்தாளன் செய்தால், படைக்கப்படும் பிரதியில் அது வெளிப்பட்டால் அதை இன்னும் அதிகமாய் விமர்சனம் செய்துதானே ஆகவேண்டும். விஞ்ஞானி கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலேயோ, கணிதவியலாளன் நிறுவிய தேற்றத்திலோ கொண்டிருக்கும் ஜாதிய உளவியல் வெளிப்படாது. எழுத்தாளனிடம் அது வெளிப்படும் என்பதால் அதைத்தானே அதிகம் விமர்சிக்க வேண்டும்! தங்கமணிக்கு எங்கேயிருந்த இந்த போதி ஞானம் வருகிறது என்று புரியவில்லை.

பாமக, திருமா ஜாதி பேசுவதையும் அசோகமித்திரன் பேசுவதையும் ஒப்பிடமுடியுமா? பொத்தாம் பொதுவாய் இணையத்து அம்பிகள் கேட்கும் மட்டையடி கேள்விகளை கேட்கும் அளவிற்கு தங்கமணிக்கு என்ன கட்டாயம் அல்லது அறிவொளி வந்தது என்று புரியவில்லை. கேட்கிறார். "ஒரு சாதியின் சுய பெருமிதம் (பிறப்பை வைத்து இருக்கும் இன்றைய சூழலில்) இன்னும் அனேக சாதியினரை மிக இயல்பாக தாழ்த்துகிறது என்பதைத் தான். எனவே அவர் தமது சாதியின் பெருமைகளை (அது இழந்துவிட்டதாகவே இருக்கட்டுமே) பேசும்போதே மற்ற அனைவரையும் தாழ்த்துகிறார். இதே மனநிலையை நமது சமூகத்தில் இருக்கும் அனைவரும் கொண்டிருக்கையில் அசோகமித்திரனை மட்டும் கண்டிப்பதில், குறை சொல்வதில் என்ன இருக்கிறது? "

உதாரணமாய் ஒரு தேவன் தன் சாதி பெருமையை பேசுவதென்பது, தன்னை 'சிங்கமாக' உருவகிப்பது, தன் வீரம் இன்ன பிற வீச்சரிவாள் குணங்களை கொண்டாடுவது. இந்த சாதிபெருமை தலித் மீதான வன்முறையாய் வெளிப்படுகிறதே அன்றி இது எந்த விதத்தில் பார்பனர்களை தாழ்த்துகிறது. இது போல ஒவ்வொரு சாதியின் பெருமையும் அதற்கு கீழே கற்பிக்கப்பட்டுள்ள மற்ற சாதிகளை தாழ்த்துமே ஒழிய மேலே கற்பிக்கப்பட்டுள்ளதை எப்படி தாழ்த்த முடியும்? சொல்லப் போனால் ஒருவன் தனது சாதி பெருமையை பேசும்போது, தனக்கு மேலே உள்ளதன் கீழே தான் இருப்பதையும் ஒரு வகையில் உறுதிபடுத்தி ஒப்புகொள்கிறான். தான் அடிதடிக்கும், தலித்தை கண்காணிக்கவும் பிறந்ததை ஒப்புகொள்வதுதானே தேவர் ஜாதி பெருமை. இதற்கு எதிராக பேசுவதோ, பெருமைகொள்வதையோ சாதிய பெருமை என்று சொல்லமுடியுமா?

சமஸ்கிருத மயமாக்கலுடன் இயைந்துபோவதை சாதி பெருமையாய் கொள்வது இதில் இன்னொரு போக்கு. இதுவும் பார்பன சாதியை இன்னும் பெருமை படுத்துமே ஒழிய சிறுமைபடுத்தவோ தாழ்த்தவோ செய்யாது. உதாரணமாய் தங்களை தேவேந்திர குலமாகவும், அருந்ததி இனமாகவோ கற்பிப்பித்து கொள்வதால் எந்த விதத்திலும் ஆதிக்க சாதிகள் தாழ்ந்து போக போவதில்லை. தங்களை சாதி ரீதியாய் பெருமை கொள்வதை எல்லாம் ஒழித்து கட்டிவிட்டு, இந்த எழவை மொத்தமாய் ஒழிப்பதுதான் சரியான வழி என்றாலும், பல காரணக்களுக்காக இப்படி சமஸ்கிருத மயமாக்க பெருமை தேவைப்படுகிறது. 'சக்கிலியர்' என்பதை விட அருந்ததியினர் என்று சொல்வது மரியாதையாய் இருக்கிறது. "ஒரு சாதியின் சுய பெருமிதம் (பிறப்பை வைத்து இருக்கும் இன்றைய சூழலில்) இன்னும் அனேக சாதியினரை மிக இயல்பாக தாழ்த்துகிறது என்பதைத் தான்." என்று பொத்தாம் பொதுவாக தங்கமணி சொன்னது அபத்த குவியலாகவே எனக்கு தெரிகிறது. அம்பிகளுக்கு இப்படி தர்கிப்பது தேவையானது. தங்கத்திற்கு என்னானது என்று முடியை பிய்த்துகொண்டிருக்கிறேன்.

இதை யெல்லாம் கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஏதோ அசோகமித்திரன் பேசியது வெறும் சாதி பெருமிதம் அல்லது அதை இழந்ததன் ஏக்கம் *மட்டும்தான்* என்று வர்ணிப்பதைத்தான் தாங்கமுடியவில்லை. தெளிவாக "நாங்கள் யூதர்கள் போல' எனும்போது மொத்த பார்பனரல்லாத தமிழ் மக்களால் தாங்கள் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதாக சொல்கிறார். பேட்டியின் அவர் திராவிட இயக்கம் பற்றி மட்டும் அவர் குறிப்பிடவில்லை. (திராவிட இயக்கத்துக்கு அது பொருந்துமா என்பது வேறு விஷயம்.) ஒரு காலத்தில் சங்கரமடத்தின் ஆலோசனைப்படி செயல்பட்ட ஜெயலலிதா, யாருக்குமே முழுவதும் புரியாத காரணத்தால் நடத்திய ஜெயேந்திரர் கைதை கூட விசாரனையின் ஒரு பகுதியாய் பார்கிறார். அவரை ஆதர்சமாக கொண்ட வாசகர்கள் உள்ளிட்ட எல்லா தமிழ் மக்களையும் நோக்கி கையை நீட்டுகிறார்.பொதுவான பிராமண உளவியலுடன் ஒத்து திமுகவை மீண்டும் மீண்டும் தோற்கடித்த பெரும்பான்மை மக்கள் கூட்டம் பற்றி கூட அவருக்கு பேச எதுவும் இல்லை. மீண்டும் மீண்டும் தங்களுக்கு வக்காலத்து வாங்கிய எந்த இலக்கிய/அரசியல்வாதி, பத்திரிகையாளர் யாரும் அவருக்கு நினைவுக்கு வரவில்லை. தங்கமணி சொல்வதுபோல அவர் தனது சாதிய பெருமிதம் பறிபோனது பற்றி பேசவில்லை. தாங்கள் அவமானப்படுத்த பட்ட போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மாறியது குறித்து பேசுகிறார். குடுமி வைக்க முடியாமல் போனதையும், பார்பனரல்லாதவர் போல் மீசை வைத்துகொள்ள கட்டாய நிலைக்கு வந்ததையும் பேசுகிறார். அவர் மிக நேரடியாக முன்வைத்த ஒரு வாக்கியம் மட்டுமே அருள் சுட்டிகாட்டியது.

அமி பேசியது வெறும் சாதிய பெருமிதம் மட்டும்தான் என்று நினைக்கும் அளவிற்கும் (அதிலும் என்ன தப்பு என்று கேட்கும் நிலையில்) நான் மதித்த நண்பர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை.

அருள் சொல்கிறார் " உங்கள் பதிவும் பார்த்தேன். அதுவும் சரிதான்."

சுந்தர்மூர்த்தி "தங்கமணி நீங்கள் எழுதியிருப்பது மெத்த சரி." என்ன சரி?
அசோகமித்திரன் "நம்பிக்கையையோ, அவருடைய குலப் பெருமைகளையோ, அவற்றின் இன்றைய நிலைக்கு அவர் வருந்துவது குறித்தோ, அந்த நிலைக்கான காரணமாக ஒரு நூற்றாண்டு தமிழக அரசியலை சுட்டிக்காட்டுவதையோ" மட்டும்தான் பேசுகிறார் என்பதா, அல்லது அதிலும் தவறு எதுவும் இல்லை என்று வக்காலத்து வாங்குவதா?

அடுத்து நாராயணண் "இதையே தான் நானும் சொல்ல வருகிறேன்."

என்னய்யா விளையாட்டு இதெல்லாம்?

தமிழின் சமீபத்தில் கொண்டாடப் பட்ட எழுத்தாளன் தமிழ்நாட்டின் அத்தனை பார்பனரல்லாத மக்களையும் குற்றவாளியாக்கி அபாண்டமாய் ஒரு பொய் குற்றசாட்டை சொல்கிறார். அம்பிகள் மாமாக்கள் அதை கொண்டாடினால் பொறுத்துகொள்ளலாம். (அதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள்.) நம் சூழலின் மேல் நம்பிக்கை வர வைத்த நண்பர்கள் எல்லோரும் எதையோ பினாத்திகொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கே போய் முட்டிகொள்வது. இப்படி ஒரு நம்பிக்கை வைத்த என்னையே செருப்பால் அடித்துகொள்வதை தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

அருளுக்கு ஒரு விஷயத்தையாவது குற்றம் சொல்ல தோன்றியிருக்கிறது. வெங்கட் தன்னால் முடிந்த அளவு விமர்சித்திருக்கிறார். சங்கரபாண்டி தனது பாணியில் நிதானத்துடன் நேர்மையாய் தனது கருத்தை சொல்லியிருக்கிறார்.

அனாதை மட்டுமே இதன் இனவாத்தைத்தை சரியாய் எடுத்து "இவரைப் போன்ற்றொரை ஆதர்சமாகக் கொள்ளும் பார்ப்பனரல்லாதவர்களின் முகத்தில் அடித்த மலம்" என்றிருக்கிறார். நான் என் பாணியில் முன்வைத்ததை அவர் பாணியில் சொல்லியிருக்கிறார். அதற்கு பாராட்டுக்கள். ஆனால் நான் அனாதையுடன் முரண்படுவதை இந்த பதிவின் தொடக்கத்தில் அருள் எழுதியதை மேற்கோள் காட்டி எழுதியதை படித்தால் புரிந்துகொள்ள முடியும். தன்னுடய அரசியலை முன்வைத்து, அசோகமித்திரனிடமிருந்து எடுத்து கொள்வதும், முழுவதும் நிராகரிப்பதும் அனாதையின் தனிப்பட்ட உரிமை. நான் அந்த விஷயத்தில் அவருடன் வேறுபடுகிறேன். அவ்வளவுதான்.

ஜெயின் கமிஷன் ராஜிவ் காந்தியின் கொலைக்கு மொத்த தமிழ் மக்களையே குற்றவாளியாக்கியதன் இனவாத தன்மையை புரிந்துகொள்ளக் கூட நமது சூழலில் பலருக்கு நாதியில்லாமல் இருந்தது. அந்த நிலமையை கடந்து ஆரோக்கியமான வலைப்பதிவு சூழலுக்கு வந்துவிட்டதாய் நினைத்தேன். ஜெயினை விட பல மடங்கு வீரியத்துடன் மொத்த தமிழ் மக்களின் மீது இனவாதமாய் குற்றம் சாட்டியதை நியாயபடுத்தும் நண்பர்களை நம்பியதற்கு என்னையே அடித்து கொள்கிறேன்.

பின் குறிப்பு:

1. தங்கமணியின் பதிவு பிடித்திருந்தாக என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் முதலில் சொல்லியிருப்பேன். அது அவர் முதலில் எழுதிய கவிதை. பிறகுதான் மற்ற பதிவை பார்க்க முடிந்தது.

2. இவ்வளவு சொன்னாலும் இன்னும் தமிழ் சூழலை ஆரொக்கியமானதாக, திரவிட இயக்கத்திற்கு ஒரு பாதிப்பு இருப்பதாகவும்தான் நினைக்கிறேன். அதை மற்ற மாநில சூழலுடன் ஒப்பிட்டும், அசோகமித்திரனின் கட்டுரைக்கும் அவுட்லுக்கில் வந்த மறுமொழிகளை முன்வைத்தும் உறுதிப் படுத்தி கொள்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Friday, April 01, 2005

நான் பார்பனியத்தின் எதிரி!

இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை குறித்து ரொம்ப நாட்களாவே எழுத ஆசை. இப்போது டோண்டு 'நான் இஸ்ரேல் ஆதாரவாளன்' என்று தலைப்பு வைத்து எழுதிவருவதற்கு பதிலாகவே இப்படி ஒரு தலைப்பு (இந்த பதிவிற்கு மட்டும்) தந்திருக்கிறேன். மற்ற படி இங்கே எழுத போவதற்கும் பார்பனியத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதாவது டோண்டுவின் இஸ்ரேல் ஆதரவையும், அதில் கொள்ளும் வெளிப்படையான பெருமையையும் ஒரு பார்பனிய பண்பாக பார்கிறேன். ஹிட்லரை ஒரு ஆதர்ச மனிதராய் பார்த்த ஒரு சிந்தனையின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறேன். இதை ரொம்ப விளக்க கேட்டு முரண்டு பண்ணாதிர்கள். அதுவும் டோண்டு எழுதும் மட்டையடிகளையும், ஸ்வீப்பிங் கருத்துக்களையும், எந்த ஆதாரமும் தராமல் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்ததாக சொல்லி முன்வைக்கும் பல செய்திகளையும் அப்படியே எடுத்துகொள்ளும் யாரும் என்னிடம் ஆதாரம், விளக்கம் கேட்டு வம்பு பண்ணாதீர்கள். மற்றவர்கள் புரிந்தால் புரிந்துகொண்டு, புரியாவிட்டால் பின்னூட்டத்தில் ஒரு தட்டி தட்டிவிட்டு போங்கள். 'நிலமெல்லாம் ரத்தம்' என்று பாரா எழுதிவருகிறார். இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் பிரச்சனையின் வேர்களில் தொடங்கி எழுதிவருகிறார். அதைபோல அல்லாமல் சில மட்டையடிகளை தருவதே என் நோக்கம். நிச்சயமாய் டோண்டு சொல்வதைவிட நம்பகதன்மையுடன் இருக்கும் என்று மட்டும் சொல்லிகொள்கிறேன் -அதில் எந்த பெருமையும் இல்லை எனினும். தொடங்கிவிட்டால், தொடர்ந்து எழுத ஒரு கட்டாயம் இருக்கும் என்று நினைத்து இப்போது தொடங்கிவிட்டேன். எனக்கிருக்கும் நேரம், ஆர்வம், சக்தி இதை பொறுத்து இதை தொடர்வேன். நேரநெருக்கடி காரணமாய் பின்னூட்டங்களில் பதில் சொல்லி விவாதிக்கும் நோக்கம் இல்லை. அவைகள் கணக்கில் எடுத்துகொள்ளப் பட்டு பின்னர் அது குறித்தும் எழுதப்படும். ஆர்வமுள்ளவர்கள் கிரிஸ்டோபரின் பதிவில் வரும் 'நிலமெல்லாம் ரத்தம்' தொடரையும் படிக்கவும்.

பேசப்போகும் பிரச்சனை உலகின் மிக சிக்கலான இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சனை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் anti-semitism என்ற யூத வெறுப்பு கருத்தியல் ஒர் தொற்றுவியாதியை போல ஐரோப்பாவை, குறிப்பாய் ரஷ்யாவை தழுவியிருந்த காலம். சரித்திரம் மீண்டும் மீண்டும், அவல நாடகமாய், ஒரே காட்சியை நிகழ்வேற்றுவது போல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் இந்த ஜுரம் மீண்டும் பரவலாயிற்று. கிட்டதட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் இதன் பாதிப்பை அனுபவித்து வந்த யூதர்களுக்கு, இந்நிலையிலிருந்து விடுதலை அடையும் ஒரே வழியாக, தங்களுக்கேயான ஒரு தனி நாட்டை உருவாக்குவது மட்டுமே பாதுகாப்பை தர முடியும் என்ற முடிவுக்கு வந்து ஜியோனிஸத்தை சில யூதர்கள் வழிமொழிந்தார்கள். உண்மையில் இந்த ஜியோனிஸத்தை எல்லா யூதர்களும் அப்போது ஏற்றுகொண்டார்கள் என்று சொல்லமுடியாது. பல யூதர்கள் யூதவெறுப்பு கருத்தியலையும், அது வெளிப்படும் அரசியலையும் நேரடியாய் எதிர்த்து போரடவே விரும்பினார்கள். பல பழைமைவாத யூதர்கள் யூத அரசு, மனிதர்களால் அல்லாமல் கடவுளால் மட்டுமே நிறுவமுடியும் என்று தீவிரமாய் நம்பிவந்தார்கள். ஆனால் ஜீயோனிசத்தை ஏற்றுகொண்டவர்கள் நாட்டிற்கான இடம் தேடுவதில் ஈடுபட்டனர். முதலில் அப்படி இப்படி பார்த்துவிட்டு பின்னர் தங்கள் பார்வையை பாலஸ்தீன மண்ணின் மீது செலுத்தினர். இதற்கு அவர்கள் காலகாலமாய் பின்பற்றிவரும் பாலஸ்தீனத்திலிருந்து வந்ததான நம்பிக்கைகளும், பல விவிலிய காரணங்களும் உண்டு. அப்போது பாலஸ்தீனை பற்றி அவர்கள் முன்வைத்த கோஷம் " நிலமில்லாத மக்களுக்காக, மக்கள் இல்லாத இல்லாத நிலம்' (a land without people for a people without land). ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பாலஸ்தீனம் மக்கள் இல்லாத வெற்று நிலமாக இல்லை.

இஸ்ரேல் மற்றும் பல வகையான இஸ்ரேல் ஆதரவாளர்கள் பரப்பி வரும் பல புளுகு கதைகளில் ஒன்று, 'பெரும்பாலான பாலஸ்தீனர்கள் 1917க்கு பிறகு அங்கே நுழைந்தவர்கள்' என்பது. இது குறித்து வந்த புத்தகங்களும், பிரச்சாரங்களும் பொய் என்று நிறுவப்பட்டுள்ளன. டோண்டு எடுத்து போட்ட மாதிரி ஜியோனிஸ அழைப்பை செவிமடுத்து யூதர்கள் " ...எல்லா விதமாகவும் வந்தனர். சிலர் நடந்து வந்தனர். சிலர் கப்பல்களில் வந்தனர். சிலர் விமானங்களில் வந்தனர். சிலர் சைக்கிளில் வந்தனர். அவர்கள் 64 நாடுகளிலிருந்து வந்தனர்". ஆமாம், அந்த பெரும் வருகைக்கு முன் அங்கே வெற்றிடம் இல்லை. அங்கே இஸ்லாமியர்களை பெருமளவிலும், சிறுபான்மையினராக யூதர்களையும், கிருஸ்துவர்களையும் கொண்ட மக்கள் கூட்டம் அங்கே வாழ்ந்து வந்தது. ஜியோனிஸ யூதர்கள் வரத்தொடங்கிய போது ஒரு தெளிவான பாலஸ்தீன அடையாளத்தை வரித்து கொண்டு அங்கே இஸ்லாமிய, கிரிஸ்த்தவ சமூகம் வாழ்ந்துகொண்டிருந்தது.

பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மையாக்கும் (அதாவது பெரும் யூத அழிப்பை மேற்கொண்ட ஹிட்லர் கொண்டிருந்த) அணுகுமுறையுடன் ஜியோனிஸ்டுகளும், அவர்களை தீவிரமாய் ஆதரிப்பவர்களும் சொல்வது என்னவெனில் "தங்களின் பிதுரார்ஜித நிலத்தில் உரிமை கோரும் விதமாய் யூதர்கள் 19ஆம் நூற்றாண்டில் பாலஸ்தீன மண்ணுக்கு வந்தார்கள். நேர்மையான முறையில் நிலங்களை வாங்கி, ஒரு யூத சமூகத்தை ஸ்தாபிக்க விரும்பினார்கள். அதற்கு யூதவெறுப்பியலை(anti-semitism) கொண்டிருந்த அரேபியர்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதை எதிர்ப்பை சமாளிக்க வேண்டியும், தங்களை காத்துகொள்ளவும் *நிர்பந்திக்கப் பட்டு* எதாவது ஒரு வகையில் போராட நேர்ந்து அதுவே இன்று வரை வறாலாறாக இன்றுவரை தொடர்ந்து வருகிறது" என்பதுதான். அவிழ்த்துவிடப் பட்ட எத்தனையோ ஜியோனிஸ புளுகுகளை போல ஒரு அப்பட்டமான புளுகுதான் இது.

ஆவணங்களும், வறல்லாற்றாய்வுகளும் சொல்லும் கதை வேறு வகையானது. ஜியோனிஸ்டுகள் நோக்கமே ஒரு யூத நாட்டை, யூதர்களுக்கு மாத்திரமான ஒரு நாட்டை நிறுவுவது மட்டுமே. அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த மண்ணில் வாழ்ந்து வரும் அரபு இன மக்களின் நிலங்களை தங்கள் வசமாக்கி அவர்களை ஆண்டியாக்குவதாகத்தான் இருந்தது. இந்த காரியத்தில் பொதுவாகவே வல்லவர்களான யூதர்கள், அதில் பெற்று வந்த வெற்றி அரேபியர்களை பயத்தில் ஆழ்த்தியது. உலகின் பரவியிருந்த யூதர்களிடம் இருந்து உருவான 'யூத தேசிய நிதி'யில், யூதர்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்களை அரேபியர்களுக்கு விற்பதில்லை, ஒத்திக்கு கூட விடப்படுவதில்லை என்ற நியதியும் (இன்றுவரை) தொடர்கிறது.

ஜியோனிஸ்டுகளின் நோக்கங்களை புரிந்துகொண்ட அரேபியர்கள் அதற்கு மேலும் தொடர்ந்த யூத குடியேற்றத்தை எதிர்ப்பதிலும், நிலத்தை யூதர்களுக்கு விற்பதை தடுப்பதிலும் ஈடுபட தொடங்கினர். அரேபியர்களின் உயிர்வாழ்தலுக்கும், இருத்தலுக்கே ஆபத்தாகவும், சவாலாகவும் யூத குடியேற்றம் விளங்கியதாலேயே இதை செய்ய நேர்ந்தது. இந்த எதிர்ப்பின் காரணமாய் ஜியோனிஸ்டுகள் பிரிடீஷ் அரசின் (ராணுவ) ஆதரவு இல்லாமல் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்ற நிலை வந்தது. இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் கிட்டதட்ட 1200 ஆண்டுகளாக ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பாலஸ்தீன மண்ணின் பெரும்பான்மை மக்களாக அரேபிய இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான்.

சுருங்க சொல்லவேண்டுமெனில் ஐரோப்பாவிலும் உலகமெங்கும் தங்கள் உயிர்வாழ்தலுக்கும், இருப்புக்கும் ஏற்பட்ட அச்சுறுத்தலின் காரணமாக பாலஸ்தீனத்தைல் தங்களுக்கேன நாடு ஒன்றை ஸ்தாபிக்க சென்ற யூதர்களின் கொள்கை எல்லா காலனி ஆதிக்கத்தை போல, அவர்களை ஓட ஓட விரட்டிய ஐரோப்பிய யூதவெறுப்பியலை போல, அங்கே ஏற்கனவே இருந்த மண்ணின் மைந்தர்களின் உரிமையையும், இருப்பையும் துச்சமாகவே நினைத்தது. அதற்கு அவர்கள் கூறிய நியாயம் ஐரோப்பாவில் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப் பட்ட இன அழிப்பு. மீண்டும் மீண்டும் இஸ்ரேல் ஆதரவாலர்கள் இந்த நியாயத்தையே முன்வைக்கின்றனர். டோண்டு சொல்வதை கூட பார்க்கலாம்.

"இஸ்ரேலை உலகப் படத்திலிருந்தே ஒழிப்பதுதான் என்றுக் கூறும் கூட்டத்தை அடக்குவது இஸ்ரேலின் கடமை. அதை அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் அதைத் தீவிரமாகத்தான் கையாள வேண்டும், கையாளுகிறார்கள். 1933-ல் பதவிக்கு வந்தப் பைத்தியக்காரன் உளறியதை சீரியசாக எடுத்துக் கொள்ளாததால் 60 லட்சம் பேரைப் பறி கொடுத்த இனம் யூத இனம். மக்கள்தொகையின் விகிதப்படிப் பார்த்தால் இது இந்தியாவில் 70 கோடியினர் இறப்பதற்குச் சமம்.

2000 வருட அடக்குமுறையின் போது யூதர்கள் எல்லாவித சமாதான முயற்சிகளையும் செய்துப் பார்த்து விட்டார்கள். அவர்கள் என்ன செய்தாலும் உதைக்கப்பட்டார்கள். உச்சக் கட்டமாக ஹிட்லர் யூதர்களை - பலர் வேறு மத்ங்களுக்கு சிலத் தலைமுறைகள் முன்னமே மாறியவர்கள் - சகட்டு மேனிக்குக் கொன்றான். உலகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆகவே இப்போது அவர்கள் மற்றவர்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. நல்லப் பெயர் வாங்கும் முயற்சியை விட்டு விட்டனர். உலகத்தாருக்கு இது புதிது. ஆகவே குதிக்கிறார்கள். "

இதற்கும் பேசப்படும் பாலஸ்தீன பிரச்சனைக்கும் என்ன தொடர்பு? இதைத்தான் இத்தனை ஆண்டுகளாய் ஜியோனிஸ்டுகள் பேசி வருகிறார்கள். ஜெர்மனியில் அவர்கள் வாங்கிய அடிக்கு பாலஸ்தீன மக்கள் என்ன செய்ய முடியும் என்பதுதானே எந்த முட்டாளுக்கும் தோன்றும் நியாயமான கேள்வியாய் இருக்கும். இந்த இடத்தில்தான் உலகின் புத்திசாலிகளான ஜியோனிஸ்டுகள், டோண்டுத்தனமான பதிலை மீண்டும் மீண்டும் சொல்லுவார்கள்.


இங்கே கவனிக்க வேண்டியது. அரேபியர்களின் ஜியோனிஸத்திற்கான எதிர்ப்பு ஐரோப்பா கொண்டிருந்த யூத வெறுப்பு கருத்தியலை போன்ற anti-semitic கருத்தாக்கம் அல்ல. தங்கள் உடமைகளும், உரிமைகளும், இருப்பும், நிலமும் பறிபோய்விடுமோ என்ற நியாயமான பயத்தில் வந்த பயம்.

ஆமாம், 'நிலமில்லாத மக்களுக்கான, மக்களில்லாத நிலம்' என்ற புளுகு கோஷத்தில் பேசப்பட்ட நிலம் 700,000 பாலஸ்தீன மக்களின் தாயகம். இங்கேதான் இந்த பிரச்சனையின் வேர்கள் நீளுகின்றன.

(சாவகாசமாய் எப்போது முடியுமோ அப்போது தொடரும்)

Post a Comment

---------------------------------------
Site Meter