ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, November 19, 2009

கடற்கரை.

இரவின் ரத்தச்சோகை
நிலவின் குடித்த மப்பு
மணற்சாம்பல் அலம்பல்
படகின் தனிமை
காற்றின் போதை
வெளியின் விஷம்
வெறுமையின் குற்ற உணர்வு
கூட்டத்தின் இசை
இரைச்சலின் கரைந்த வண்ணம்
இரையும் அலை அமைதி
நண்டுகளின் அறவுணர்வு
வானின் நிழல்
நடுக்கடல் சர்ப்பம்
போதையின் வெளிச்சம்
உணர்தலின் நடிப்பு
நிஜத்தின் மாயம்.

Post a Comment

---------------------------------------

Wednesday, November 11, 2009

சுய இன்பம்.

எழுதுவதற்காக மட்டுமே எழுதிகொண்டிருக்கும் வரியை
எழுதிக் கொண்டிருப்பதை எழுதிகொண்டிருக்கும் போது,
விளக்கணைந்து இரவை சல்லாபிப்பதாக
கற்பனை செய்து சுய இன்பத்தில் ஆழ்வதாக
கற்பனை செய்து பார்தேன்.
காலம் ஒரு கணம் அசையாதது போல மயக்கம்.
காலம் அசையாமல் கணமா?
சுவர்கள் மூடிக்கொள்ளப் போவதுபோல் நடிக்க,
சிறுவயதில் தனித்து நடந்த இரவின் காலடிகளை
இங்கிருந்து கேட்கும்போது
வரிகள் மட்டுமே நிஜம் போல தோன்றுகிறது.

Post a Comment

---------------------------------------

Friday, November 06, 2009

மறதி.

கார்களுக்கிடையே கடந்து போனவனுக்கு
கார்களுக்கிடையே கடக்கும் கர்வம்.
கார்களுக்கிடையே ஓடிய நாய்க்கு
கார்களுக்கிடையே ஓடும் பீதி.
கார்களுக்கிடையே பறந்த தட்டானுக்கு
கார்களை பற்றிய பிரஞ்ஞையில்லை.

தட்டான் குறித்த நம் கற்பிதம்,
பறப்பதன் அற்புதம்,
turbulenceஇன் மர்மம்,
காலங்காலமாக கைமாற்றி காத்து செல்லும் ரகசியம்
எது குறித்தும் தட்டானுக்கு பிரஞ்ஞையில்லை.
turbulenceஐ முழுசாய் விளக்க
நூற்றாண்டாய் தூக்கம் கெட்டவனுக்கு
தட்டானைப் போல பறக்க வைக்க தெரியவில்லை.

கனவில் தட்டானாய் மாற தெரியாத எனக்கு
கார்களுக்கிடையே கடந்து போனவனின்
கர்வம் மறக்கவில்லை

Post a Comment

---------------------------------------
Site Meter