ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Friday, August 19, 2005

தொலைவு!

மதிவண்ணணின் கவிதைகள் குறித்து திண்ணையில் லதா ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவர் விமர்சித்துள்ள 'நெரிந்து' தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்த சில கவிதைகளை என் பழைய பதிவொன்றில் தந்திருந்தேன். இப்போது லதாவின் கட்டுரை மூலம் மதிவண்ணணின் அடுத்த தொகுப்பு வெளிவந்துள்ள செய்தியை அறிகிறேன். இந்தியா அடுத்தமுறை போகும்போதுதான் படிக்க முடியும். லதாவின் கட்டுரை தயவில் அவர் தனது இரண்டாம் நூலை பெரியாருக்கு சமர்ப்பணம் செய்திருப்பதை அறிய முடிகிறது. அதை சொல்லவே இந்த பதிவு.

தலித்களுக்கு பெரியாரே முக்கிய எதிரி என்பது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தர்க்கம் ஜெயமோகனில் தொடங்கி, ரவிகுமாரால் தார்மீகப்படுத்தப் பட்டு, இன்று சரளமாய் ஆங்காங்கே பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வேண்டுமென்றே அதற்கு எதிர்வினையாகவே, மற்ற தலித் அறிவுஜீவிகளை விட இன்னும் வலியும், கோபமும் கொண்ட குரலை ஒலிக்கும் மதிவண்ணன், வலிந்து பெரியாருக்கு நூலை சமர்ப்பித்திருப்பதாய் ஊகிக்கிறேன். 'அயோத்திதாசரை' விமர்சனத்திற்கு அப்பால் வைக்கும், அவரை பெரியாருக்கு எதிரியாக சித்தரிக்கும் அரசியலை தொடர்ந்து மதிவண்ணன் கட்டவிழ்த்து வருகிறார். ''வார்த்தைகளுக்குள் கொடுக்குகளை ஒளித்து வைக்கும் வித்தையை படிப்பித்த என் குடியின் முதல் சுயமரியாதைக்காரன் ஈ.வே.ரா'வுக்கு ' என்று பெரியாருக்கு நூலை சமர்பித்த வரிகளே என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது.

பூணூலின் வெண்மை நிறத்தை கூட இழக்கத் தயாராயில்லாதவனெல்லாம் தார்மீக கூச்சலிடும் சூழலலிருந்து,

'எப்படி ஒன்றாய்
வளர்க்கப் போகிறோம்
இந்த முற்றத்தில்
சோறு போடும் பன்றிகளையும்
நீ கொண்டு வரும்
முல்லைச் செடியையும்?'

என்ற கேள்விக்கான பதிலை திரிபுநோக்கமின்றி அடைய முயற்சி செய்யத் தொடங்கவே இன்னும் வெகு தொலைவு போகவேண்டியுள்ளது.

Post a Comment

---------------------------------------

Saturday, August 13, 2005

சாருவின் திரித்தல், மற்றும்...

திருவாசக இசைதட்டு வெளிவந்த பின்னர் இளயராஜா மீது, (நானும் பகிர்ந்து கொள்ளும்) ஒரு குறிப்பிட்ட வகை அரசியல் பேசும் கூட்டத்தின் ஆத்திரம் மிகையாக பாய்ந்து வருகிறது. இதற்கான குறிப்பிட்டு சொல்ல கூடிய provocation எதுவும் இருப்பதாக, என்னளவில் நன்றாய் பரிசீலித்து பார்த்தும், எதுவும் தெரியவில்லை.

உதாரணமாக அசோகமித்திரன் அளித்ததாக வெளிவந்த அவுட்லுக் 'பேட்டி' போலவோ, ஜெயகாந்தனின் 'நாய் பேச்சு' போலவோ எதுவுமே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் திருவாசக சிம்ஃபனிக்கு கிடைத்த அளவுக்கு மீறிய விளம்பரமும், சற்றே மிகையாகிப்போன பாராட்டுக்களும், சிலரின் உணர்ச்சி வசப்படுதல்களும் காரணமாய் இருக்கலாம். அப்படியில்லாமல் ஆத்திரத்திற்கான ஒரு நியாயமான காரணமாய், குணசேகரன் மீது இளயராஜா சில வருடங்களுக்கு முன்பு வழக்கு தொடுத்த முந்தய நிகழ்வு, சிலருக்கு தோன்றலாம்.(அதுவும் இப்போது மீண்டும் ஆத்திரத்துடன் பெரிதுபடுத்தப் பட்டு மொட்டையாக பலர் கேள்விபடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.) ஆனால் அதுவும் மேலே சொன்ன அமி 'பேட்டி', நாய் பேச்சு போன்றதன்று. ஒரு கலைஞன் தன்னை எவ்வாறு அடையாளம் காண விரும்புகிறான் என்பதும், அப்படி காணும்போது மற்றவர்களுக்கு தான் அரசியல்ரீதியாய் சரி என்று நம்புவதுடன் பொருந்தி வராத போது ஏற்படக்கூடிய ஒரு ஆதிக்க திமிர் கலந்த ஆத்திரமாகவே எனக்கு தோன்றுகிறது. அது குறித்து இந்த பதிவின் இறுதியில் பார்போம்.

இளயராஜாவின் இசை குறித்த எனது பார்வை, அதன் அரசியல், சனாதனதுடனான அதன் உறவு, மீறல், பணிதல், இயைதல் இவற்றை முன்வைத்தும், இன்று அவர் மீது காட்டபடும் ஆத்திரத்தின் பிண்ணணி அரசியல் உளவியல் மற்றும் வேறு பரிமாணங்கள் இவற்றை பற்றி விரிவாய் எழுத நினைத்து தள்ளி போடப்பட்டு, வழக்கம் போலவே அது எழுதப்படாமல் போகும் ஆபத்து இருப்பதால், இப்போதைக்கு சில மறுப்புக்களையாவது இங்கே முன்வைப்பது மட்டுமே இந்த பதிவின் நோக்கம்.

இளயராஜா குறித்து பொருட்படுத்த தக்க, எதிர்கொள்ள வேண்டிய விமர்சனத்தை அ.மார்க்ஸ் சில வருடங்கள் முன்னால் தீராநதியில் எழுதியிருந்தார். இளயராஜா மீதான 'பெரியாரிஸ்டுகளின்' ஆத்திரத்திற்கான துவக்கப்புள்ளியாக இந்த கட்டுரைதான் எனக்கு தென்படுகிறது. 'இளயராஜா சனாதனத்தை அசைத்தாரா, இசைத்தாரா?' என்ற கேள்வியை தலைப்பாக கொண்ட அந்த கட்டுரை, ஆய்வைவிட 'இசைத்தார்' என்ற முன்முடிவையே அடைப்படையாக கொண்டது என்பது தெளிவாக தெரியும் வகையில் எழுதப்பட்டது என்றாலும், 'இசைஞாநி' வரம்பின்றி கொண்டாட மட்டுமே பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் மிகவும் தேவைப்பட்ட ஒரு விமர்சனத்தை தந்தது. அதுவரை (ஒரு தலித் என்ற முறையிலும், சில புனிதங்களை உடைத்தவர் என்று கருதுவதினாலும், நாட்டுபுற மற்றும் டப்பாங்குத்து இசைக்கான ஒரு இடத்தை அளித்தவர் என்றும், மற்றும் பல காரணங்களுக்காகவும் அதுவரை) பொதிவாகவும், தங்கள் அரசியலுக்கு தோதானவராகவும் தெரிந்த இளயராஜாவை, ஒரு எதிரிலக்காக கொண்டு பலரால் தாக்குலிட முகந்திராமாய் அந்த கட்டுரையே இருந்தாலும், ஒரளவு ஆய்வு பூர்வமாய் அணுகுவதாகவும், அதைவிட முக்கியமாய் இளயராஜாவின் இசையை முன்வைத்து அணுகுவதாகவும் அந்த கட்டுரை இருந்தது. அப்படியில்லாமல் ராஜா அளித்த பேட்டியிலிருந்து ஒருவரியை உருவியும், அதை திரித்தும், இன்னும் தன் விருப்பத்திற்கேற்ப கண்டதையும் ஒரு வாதமாய் அடுக்கி தர்க்கப்படுத்தியும் ஆத்திரத்தை மட்டும் கக்கும் கட்டுரைகளாக சாருநிவேதிதா மற்றும் ஞாநியின் கட்டுரைகள் வந்துள்ளது. அ.மார்க்ஸின் கட்டுரையை எதிர்கொள்ளும் உருப்படியான வேலையை பிறிதொரு சந்தர்ப்பத்திற்கு தள்ளிவைத்து விட்டு, இந்த குப்பைகளை கிளரும் கோழிவேலையை மட்டும் இப்போதைக்கு செய்ய உத்தேசம்.

ஞாநி எழுதி குவித்த குப்பைகளிலேயே அழுக்கானதாக இளயராஜாவின் திருவாசகம் குறித்த கட்டுரை எனக்கு தெரிகிறது. விவாதிப்பதற்கோ விமர்சனத்திற்கோ எந்த வித தகுதியும் இல்லாத, காழ்ப்புணர்வு மட்டுமே வெளிப்படும் அந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத எனக்கு இருக்கும் ஒரே காரணம், அது நான் பகிர்ந்து கொள்ளும் அரசியலை பேசும் பலருக்கு உவகையை அளித்திருப்பதுதான். இன்னும் பரவலாக ஒரு கழகக் கண்மணிக்கு கருணாநிதியின் பேச்சு ஏற்படுத்தும் கிச்சு கிச்சு மூட்டலை ஏற்படுத்தியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த ஆபத்தின் காரணமாய், கொஞ்சமாவது நான் கலந்து கொள்ளும் கோஷ்டிகானத்திலிருந்து விலகி, இதை மறுக்கவேண்டிய ஒரு சூழலின் கட்டாயத்தில், அதை அடுத்து வரும் பதிவுகளுக்கு தள்ளிவிட்டு, சாரு நிவேதிதாவின் கட்டுரையின் இரண்டு முக்கிய திரித்தல்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறேன். அதற்கு முன் சாரு சில வருடங்களுக்கு முன்னால் விகடன் கோணல் பாக்கங்களின் இளயராஜா(வின் இசை) குறித்து விமரசனமாய் எழுதிய கருத்துக்களுடன் எனக்கு ஒரளவு ஒப்புதல் உண்டு என்பதையும், அது குறித்த எனது கருத்துக்களையும் ஏற்கனவே இகாரஸுடன் நடத்திய வறலாற்று சந்திப்பில் சொல்லியிருக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டு, மீண்டும் அந்த உருப்படியானதை பற்றி பேசுவதை தள்ளி வைத்து விட்டு குப்பையை மட்டுமே, 'கொண்டிருக்கும் அன்பிலே அக்கரை காட்டாமல்', கிளறுகிறேன்.

சாருநிவேதிதாவின் கட்டுரை பல முக்கிய தகவல்களை கொண்டுள்ளது. பாப் மார்லே குறித்தும், ஹாரா குறித்தும் தமிழில் இதுபோல் எழுதப்படுவது முக்கியமானது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதை எழுதுவதற்கான காரணமாக சாரு சொல்வது இளயராஜா 'அவுட்லுக்கில் அளித்த பேட்டி'. அது இல்லாவிட்டால் அவர் எழுதியிருக்கவே மாட்டாராம். சாரு சொல்கிறார் " ..outlook பேட்டியாளர் இளயராஜாவிடம் எடுத்த பேட்டியில் ... குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து நம் கவனத்திற்குரியது. பாப் மார்லே, பாப் டைலன், இளயராஜாவின் சகோதரர் பாவலர் வரதராஜன் குறித்து ... கருத்து கேட்டபோது இளயராஜாவின் பதில், "அந்த குப்பைகளுக்கு எல்லாம் நான் அப்பாற்பட்டவன்." இந்த வாக்கியத்தை மட்டும் அவர் கூறியிருக்காவிட்டால் இந்த கட்டுரையையே நான் எழுதியிருக்க மாட்டேன்." அப்புறம் உணர்ச்சிபூர்வமாய் 'பாப் மார்லே யார்?' என்ற கேள்வியுடன் கட்டுரை தொடர்கிறது.

முதலில் தெரியவேண்டியது (நான் சற்று முயற்சித்து தெளிவு படுத்திகொண்ட வரையிலும்) அவுட்லுக்கில் இளயராஜாவின் பேட்டி எதுவும் வரவில்லை. அசோகமித்திரன் மனம் திறந்ததாய் வந்தது போன்ற வடிவத்தில் கூட எதுவும் இல்லை. அதில் வந்ததும், சாரு குறிப்பிடுவதும் ஆனந்த் என்பவர் எழுதிய ஒரு சிறு கட்டுரையை(அதாவது column). அந்த கட்டுரையில் இளயராஜா சொன்னதாய் மொத்தமாய் வருவது ஒரே ஒரு வரி. மேலே உள்ள "I am beyond such garbage," என்பது மட்டுமே. சாருவின் தமிழ் கட்டுரையை (அவுட்லுக் படிக்காமல்)படிப்பவருக்கு ஒரு சம்பிரதாய பேட்டியில் இளயராஜா சொன்ன ஒரு கருத்து போலவே இது அறியத்தரபடுகிறது. சாருவின் கட்டுரையின் தொடக்கமே இதை பேட்டி என்று திரித்தே தொடங்குகிறது. இந்தியாடுடே பேட்டி முகஸ்துதியாகவும், அதற்கு மாறாக அவுட்லுக் 'இளயராஜாவிடம் எடுத்த பேட்டியில் மேற்கண்ட sycopancy விவகாரங்கள் எதுவும் இல்லை' என்கிறார். அதாவது ஆனந்த் தன் தனிப்பட்ட கருத்துக்களை எழுதிய கட்டுரை பேட்டியாகிறது. ஆனந்த் பேட்டியாளராகிறார். எடுக்காத பேட்டிக்கு அவருக்கு பாராட்டு வேறு. ஆனந்தின் கட்டுரையில் என்ன கேள்வி இளயராஜாவிடம் கேட்கப்பட்டது என்று கூட தெளிவாய் குறிப்பிடப்படவில்லை. ஆனந்த், குணசேகரன் நூலிற்கு இளயராஜா காட்டிய எதிர்ப்பை (திரித்து)முன்வைத்து, தன் இஷ்டத்திற்கு சில கருத்துக்களை சொல்லிகொண்டே போகிறார். முடிவில் "So why does Ilayaraja, having waltzed past many social obstacles, hate being reminded of his past? Outlook asked Ilayaraja about Bob Marley, Bob Dylan, Gaddar, his communist brother Varadarajan and even the recent Live-8 performances where music became a mode of protest. "I am beyond such garbage," was his curt reply." என்று சொல்லி முடிக்கிறார்.

கட்டுரையின் தொனியிலும் சரி இளயராஜா சொன்னதிலும் சரி அவர் குப்பை என்று சொல்வது பால்மார்லேயையோ, கதாரையோ, வரதராஜனையோ அல்ல. தனது சாதி பற்றி பேசப்படுவதும், அதன் அடையாளத்தை முன்வைத்து கேட்கப்படுவதுமான கேள்வியின் அரசியல் உள்ளடகத்தையே, எதிர்ப்பின் வெளிப்பாடாய் இசை அமைவது பற்றிய கருத்துக்கள் என்று கேட்கப்படும் அரசியல் கேள்விகளையே அவர் குப்பை என்று குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.

இளயராஜா ஒருபோதும் எந்த இசையையும் குப்பை என்று இதுவரை சொன்னதே கிடையாது. மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாமே, தேவா கூட(தன் தனிப்பட்ட சாதனையான கானா பாட்டு குறித்து பேசும்போது), சினிமாவில் 'தரம் தாழ்ந்த இசையை' தரவேண்டிய சமரசம் குறித்து பேசியதை காட்டமுடியும். இளயராஜா மட்டுமே தொடர்ந்து எல்லா இசையையும் ஒரே தளத்தில் வைத்து பார்ப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிவருவதை காண முடியும். சிந்துபைரவிக்கும், 'கட்டைவண்டி ..கட்டவண்டி..' பாடலுக்கும், How to name it?, Nothing but windற்கும் தான் ஒரே மனநிலையில் இசையமைப்பதாக பலமுறை இளயராஜா சொல்லியிருக்கிறார். இதே போன்ற பல பொதுவான இசை குறித்த புனிதங்களை உடைப்பதாகவே அவரது பல பேட்டிகளும், பேச்சும் இருந்து வந்துள்ளன. இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான விஷயமும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்னால் 'குதிரை வீரன் பயணம்' என்ற சிறுப்பத்திரிகையில், சாருநிவேதிதா கோணல் பக்கங்கள் என்பதை எழுதத்தொடங்கிய காலத்தில், இளயராஜா "நாயின் குரைப்பிலும், தியாகராஜரின் கீர்த்தனையிலும் ஒரேவகை இசையையே காண்பதாக" சொன்னதை மேற்கோள் காட்டி எழுதியிருப்பார். ஆனால் அப்போது சாருவின் இலக்கு வேறு ஒன்றாக இருந்ததால், தாக்குவதற்கு இளயராஜாவின் வரி பயன்படுத்தப்பட்டு இப்போது மறந்துவிட்டது.

இத்தனை வருடங்களாய் தன் அண்ணன் பாவலர் வரதாராஜன் பற்றி மிக மரியாதையாய் பேசியுள்ள இளயராஜா இப்போது திடீரென அவரை குப்பை என்று எப்படி சொல்லுவார்? சமீபத்தில் ஜெயகாந்தனுக்கான பாராட்டு விழாவில் இளயராஜா பேசிய பேச்சு சிவக்குமாரின் வலைப்பதிவில் கிடைக்கிறது. அதில் நீண்ட நேரத்திற்கு பாவலரை பற்றி, அவர் திறமைகள் பற்றி பேசிக்கொண்டே போகிறார். ஆனால் ஏற்கனவே அமி விவகாரத்திலும். 'dalits reversed' கட்டுரையிலும் சாயம் வெளுத்துப்போன அவுட்லுக் 'பேட்டியாளருக்கு' மட்டும் ஷ்பெஷலாக 'குப்பை' என்று தொலைபேசியில் சொல்லியனுப்புவார் என்றே வைத்துகொண்டாலும், அவர் குப்பை என்று சொல்வது கதாரையோ, பாவலரையோ, பாப் மார்லேயையோ அல்ல. இது போன்ற கேள்விகள் தொடர்ந்து தன்னை நோக்கி கேட்கப்படுவதன் பின்னுள்ள அரசியல் உள்ளடக்கத்தையே குறிக்கிறார். (இந்த கருத்தை பத்ரியும் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது குறிப்பிட்டார்.)

சாருவை திரிக்கிறார் என்று ஏன் நினைக்கவேண்டும், இளயராஜா சொன்னது புரியாமல் அவர் தவறாய் எடுத்து கொண்டிருக்கலாம் என்று சிலருக்கு தோன்றும். அப்படி சந்தேகத்தின் பலனை அளிப்பதுதான் நியாயம் என்று தோன்றினாலும், ஆனந்தின் கட்டுரையை பேட்டி என்று திரித்து, ஆனந்தின் மொட்டை மேற்கோளை அடிப்படையாய் வைத்து, எந்தவித சந்தேகத்தின் பலனையும் இளயராஜாவிற்கு தராமல் கட்டுரை எழுதிய சாருவிற்கு மட்டும் சந்தேகத்தின் பலனை தருவது எனக்கு நியாயமாய் தோன்றவில்லை. மேலும்..

நாரயணன் தயவில் சென்னையில், ஒரு பாரில் இகாரஸுடன் சாருவிடம் பேசிக்கொண்டிருந்த போது, இளயராஜா பற்றி தவிர்க்க முடியாமல் போய்கொண்டிருந்த பேச்சின் இடையே சாரு கோபமாய், "கத்தாரை குப்பைன்றான், அப்புறம் என்னய்யா?" என்று மேஜையை தட்டினார்.

"எப்ப சொன்னார்?" என்றேன் நான்.

"இவரை கேளுங்க!" என்று அருகில் இருந்த, இளயராஜாவை மாத்ருபூமிக்காக பேட்டி எடுத்த (தமிழ் பேசும்) மலையாள எழுத்தாளர் ராமகிருஷ்ணன் என்பவரை காண்பித்தார்.

"கதாரை குப்பைன்னு சொன்னாரா?"

"குப்பென்னா அப்படி குப்பைன்னு ஸ்ட்ரெய்டா சொல்லேலை. அத பத்தி எல்லாம் பேசவேண்டாம்! வேற எதாவது கேளுங்கோ'ன்னார். அத பாத்தா குப்பென்னு சொன்ன மதிரித்தான் இருந்தது"

எப்படி இருக்கு கதை? (கூட இருந்தவர்கள் இகாரஸ் பிரகாஷ் மற்றும் நாராயணன்.)

ஆக தன்னிடம் தொடர்ந்து கேட்கப்படும் ஒரு கேள்விக்கு இளயராஜா காட்டும் எரிச்சல்தான் 'குப்பை' என்பதாக அவரால் விவரிக்கப் படுகிறது. பாவலரை பற்றி பலமுறை புகழ்ந்து பேசும் இளயராஜா, நினைவுகூறும் போதெல்லாம் அவருடன் கம்யூனிஸ்ட் கட்சி பாடல்களுக்கு மெட்டமைத்ததை குறிப்பிடும் இளயராஜா, ஒவ்வொருமுறையும் தனக்கு அந்த அரசியலில் ஈடுபாடில்லை என்பதையும் தெளிவாக சொல்லுகிறார். இவ்வாறு அரசியலை மறுக்கும் இளயராஜாவை தாராளமாய் அவரவர் பார்வையில் விமர்சிக்கலாம். ஆனால் அவர் சொன்னதை தனக்கு சாதகமாய் திரிப்பது என்ன நியாயம்?

அடுத்து இந்தியா டுடே பேட்டி. நானும் அதை படித்தேன்(ஆனால் இப்போது கைவசம் இல்லை). அதில் படித்த எல்லாம் நினைவில் இருந்தும் சாரு குறிப்பிடும் "சினிமா இசை மூளையை மழுங்கடித்துவிடும்" என்ற மேற்கோள் மட்டும் எனக்கு நினைவு இல்லை. யாராவது அந்த பேட்டி கைவசம் இருப்பவர்கள் முழு மேற்கோளையும் கேள்வியுடன் எடுத்து போட்டால் நல்லது. ஆனால் அதே பேட்டியில், சினிமா இசைக்கு மாற்று இசையை இளயராஜா போன்றவர்கள் உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி பேட்டியாளர் கேட்க, " சினிமா இசைக்கு ஏன் மாற்று இசை உருவாக வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி கேட்டு சினிமா இசையை அங்கீகரித்து இளயராஜா பேசியது மட்டும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. இது தவிர்த்து, மேலே சொன்ன ஜெயகாந்தன் விழா பேச்சிலும், எல்லா இசையையும் ஒரே தட்டில் வைத்து அதன் முக்கியத்துவம், குறிப்பாய் சினிமா இசையை கேவலமாக கருதமுடியாதது பற்றி பேசுகிறார். சமீபத்திய குமுதம் பேட்டியிலும் அதையே பேசியுள்ளார். (வலைப்பதிவிலும் ஒருவர் அதை எடுத்து போட்டார்.) இதுவரை எத்தனையோ பேட்டிகளில் சொல்லுகிறார். அதெல்லாம் கண்ணில் படாமல், என் 'கண்ணில் பட்டு' நினைவில் நிற்காத வரி மட்டும் சாருவிற்கு மேற்கோளாகிறது.

வெறும் காழ்புணர்வுடன் எழுதியதாக யாரும் கருதிவிடக்கூடாது என்பதற்காக இளயராஜா பற்றி நல்லதாக கொஞ்சம் சொல்கிறார், "இசையில் இளயராஜா செய்த மாற்றங்களை நான் மறுக்கவில்லை. குறிப்பாக ரீரெகார்டிங்கில் அவர் செய்த சாதனை விஷேஷமானது." அடப்பாவி! இதற்கு இளயராஜா இசையமைத்தது எல்லாம் குப்பை என்று சொன்னால் கூட பராவயில்லையே. அதே சந்திப்பில் என்னிடம் சாரு,"எல்லா ம்யூசிக் டைரக்டரையும் பெரிய ஆள்னு சொல்றீங்க. ஆனா இளயராஜா மட்டும் யாருமே செய்யாதத செய்ததா சொல்றீங்க. புரியலியே, கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்டார்.

பலவகை இசையுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு எனினும், இசைக்கான கலைச்சொற்கள், பல இசைகருவிகளின் பெயர்கள் கூட எனக்கு தெரியாது. இளயராஜா இசை குறித்த என் பார்வையை நிச்சயமாய் பாடல்களை அருகில் போட்டு, பாயிண்ட் பாயிண்டாக விளக்கி அதன் தனித்தனமையை நிகழ்த்திக் காட்டமுடியும். ஆனால் ஒரு தண்ணியடிக்கும் சந்திப்பில் இசையின் முக்கியத்துவம் பற்றி வார்த்தைகளை மட்டும் வைத்துகொண்டு ஒரு தனிப்பட்ட கருத்தை எப்படி விளக்குவது? கொஞ்சம் நிதானித்து, வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தேடி, இளயராஜாவின் அத்தனை இசையும் மற்ற யாரிடமும் வெளிப்படாத ஒரு ஓட்டத்தை (flow)வை கொண்டிருப்பதையும், அதன் அந்த கணத்தில் தோன்றிய உதாரணங்களாக 'செந்தூரப்பூவே'யின் துவக்க இசையின் மற்றும் பாடலின் அடிநாதமாய் நாட்டுபுற மெட்டும், ஆனால் அதன் அமைப்பு மேற்கத்திய தன்மையில் இருப்பது, அதே படத்தின் இன்னொரு பாடலான 'செவ்வந்தி பூ முடித்த..' பாடலில் இரண்டாவது இடையீட்டில் திடீரென ஆனால் மிக இயற்கையாய் வந்து கலந்து பிரியும் மேற்கத்திய இசை, 'ராக்கம்மா கையத்தட்டு, பாடலின் துவக்கம், மற்றும் முழுக்க மேற்கத்திய தன்மையுடய பாடலில் பிரிக்க இயலாமல் கர்நாடக மற்றும் நாட்டிசை கலந்திருப்பது, 'தென்றல் வந்து தீண்டும் போது..' பாடலில் பல பரிமாணத்தில் விரியும் இசை, 'மயிலே மயிலே' பாடல் ஹம்ஸத்வனி என்ற கர்நாடக ராகத்தில் இருந்தாலும் தொடக்கம் முதல் அதன் அமைப்பு மேற்கத்திய இசைதன்மையை கொண்டிருப்பது, ராஜாபார்வை படத்தில் அவர் அளித்த ஒரு கம்போஸிஷன், how to name it? ஆல்பத்தில் how to name it? Chamber welcomes Thiyagaraja என்ற இரண்டு துண்டுகளும் fusion என்ற வார்த்தையை தாண்டி பிரித்து அடியாளம் காண இயலாத வகையில் கர்நாடக தன்மையும் மேற்கத்திய தன்மையும் கலந்திருப்பது, எல்லா இசைக்கும் முன்னோடி இருப்பது போல், இளயராஜாவின் மேற்சொன்னவற்றிற்கெல்லாம் முன்னோடியே இல்லாமலிருப்பது என்று என்னால் முடிந்தவரையில் நீளமாக சொன்னதை எல்லாம் பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்து விட்டு சொன்னார்.

"நிறய சொல்றீங்க. எனக்கு இதெல்லாம் அப்பீல் ஆகலீங்க!"

நான் சொல்வது அப்பீல் ஆகாவிட்டால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இளயராஜாவின் சாதனைகளை ஒரு ரீரெகார்டிங்கில் செய்த மாற்றங்களாய் குறுக்குவது என்ன நேர்மை? இசையை பற்றி தெரியாவிட்டால் பிரச்சனையில்லை. இசையை பற்றி தெரியாதாவர்கள் எதற்காக அதை பற்றி தீர்ப்புகளை அளிக்க வேண்டும்? (இதில் சாரு முன்வைத்த இன்னொரு அபத்தம் எல். சுப்பிரமணியத்துடன் ஒப்பிட்டு, திருவாசக இசையை fusion (மட்டும்) என்பதாக சொல்லி, இதில் புதிதாய் என்ன இருக்கிறது என்று ஒளரிக்கொட்டியது.)

இது தவிர சாரு கேட்கும் ஆய்வு பூர்வமான கேள்வி, 'திருவாசக இசையமைக்க பணம் இல்லை என்பவர் சம்பாதித்த பணத்தை என்ன செய்தார்? மூகாம்பிகை கோவிலுக்கு வைரநகைகள் ஏன் தரவேண்டும்?'. இதை படித்ததும், சாருவை படித்த அனைவருக்கும் பொத்துகொண்டு நினைவுக்கு வரவேண்டியது, அவர் இதுவரை பணப்பிரச்சனை என்று சொல்லி மாய்ந்து மாய்ந்து கோணல் பக்கங்களில் எழுதிய புலம்பல்கள். அதை சொன்ன அடுத்த நாள் முந்தய நாள் லெதர் பாரில் ஆயிரக்கணிக்கில் பில்வரும் வகையில் தண்ணியடிப்பதும் , ஆட்டோவில் மட்டும் போவேன் என்பதும், தாய்லாந்து சிங்கப்பூர் உல்லாசபயணம் போவதும். இது குறித்து எனக்கு எந்த கேள்வியும் கிடையாது. ஒரு இலக்கிய வாதிக்கு பட்டினி கிடந்தாலும், யாசித்தாலும் தாய்லாந்து போய் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசிப்பது முக்கியமாய் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாத ஒரு சாதாரண 'ஆன்மீக' மனம் படைத்த இளயராஜாவிற்கு வைரநகை மூகாம்பிகை கோவிலுக்கு போடுவது மிக முக்கியமானதாய் இருக்கலாம். திருவாசகத்திற்கு மக்களிடம் பிரித்த பணத்தில் மட்டுமே இசையமைக்க கூடியதாய் மனது இருக்கலாம். அதையெல்லாம் மீறி சாரு சொல்வதை நியாயமாய் எடுத்துகொண்டாலும் கூட, ஒரு எலீட் சமூகத்தில் வாழநேர்ந்த பின் தவிர்க்கவியலாமல் சேரும் ஒரு ஹிபாக்ரசியை மீறி இதில் வேறு என்ன இருக்க முடியும்? அதை கண்டுபிடித்து இத்தனை பெரிய கட்டுரை எழுத ஒரு கலக எழுத்தாளன் தேவையா?

இவ்வாறாக இளயராஜா மீதான ஆத்திரத்திற்கு எல்லாம் முதல் தர்க்கத்தை அளித்த அ.மார்க்சின் கட்டுரைக்கு முகாந்திரமாக, குணசேகரன் மீது இளயராஜா வழக்கு தொடுத்த சம்பவம் இருந்தது. அது குறித்து தாராளமாய் விமர்சிக்கலாம் என்றாலும் தொடர்ந்து அந்த சம்பவம் திரிக்கப்படுகிறது. சாருவும் தன் பங்கிற்கு இளயயராஜாவின் தலித் பிண்ணணியை குறிப்பிட்டதற்காக மானநட்ட வழக்கு தொடர்ந்ததாக எழுதுகிறார். இதே பொய்யை ஆனந்தும் சொல்லி, 'Ilayaraja is uncomfortable with the truth of his origins' என்று தன் இஷ்டத்திற்கு திரிக்கிறார். இன்னும் சில இடங்களிலும் இதை கவனிக்கிறேன்.

குணசேகரன் புத்தகம் வெளிவந்த அதே காலகட்டத்தில் ப்ரேம்-ரமேஷ் இளயராஜா பற்றி எழுதிய புத்தகமும் வெளிவருகிறது. அந்த புத்தகம் முதல் வரியிலேயே இளயராஜாவின் தலித் பிண்ணணியிலேயே தொடங்குகிறது. இந்தியாவின் புறக்கணிக்கவியலாத அறிவுஜீவிகளில் இருவராக அம்பேத்காரையும், இளயராஜாவையும் பற்றி சொல்லி அவர்களின் தலித் அடையாளத்தை முன்வைத்தே துவங்குகிறது. அறிவுடமை என்பதை தங்கள் தனிச் சொத்தாக கருதி வரும் இந்திய பார்பனிய சிந்தனைக்கு எதிர் உதாரணமாய் இருவரும் இருப்பதை பற்றி பேசுகிறது. புத்தகம் முழுவதும் இளயராஜாவின் தலித் அடையாளம் பேசப்படுகிறது. நிச்சயம் இளயராஜா அதை எல்லாம் படித்திருப்பார். அவருடய பேட்டியும் அதே புத்தகத்தின் இறுதியில் உள்ளது. அவரை மேடையில் வைத்தே புத்தகமும் வெளியிடப்பட்டது. பிறகு எதற்கு குணசேகரன் மீது மட்டும் வழக்கு தொடர்ந்தார்? ஒரு வேளை குணசேகரன் தவறாக ஏதாவது எழுதினாரா என்றால் அவரும், ப்ரேம் -ரமேஷைப் போலவே இளயராஜாவை தலையில் வைத்து கொண்டாடுகிறார். அப்படியானால் இளயராஜாவிற்கு என்ன அட்சேபம்? அதில் குணசேகரன் எழுதிய வரிகள் (பழைய குமுதத்தில் இளயராஜாவின் ஆட்சேபத்திற்குரிய வரிகளாய் தனித்து குறிப்பிட்டு காண்பிக்கப் பட்டிருக்கிறது), என் ஞாபகத்திலிருந்து கீழே.

"தமிழகமும் தமிழ் மக்களும் இளயராஜாவை நினைவில் வைத்திருக்கப் போவதில்லை, கொண்டாடப்போவதில்லை. இந்த சமூகம் அவரை மறந்துவிடும். ஆனால் தலித் மக்களின் நினைவில் மட்டுமே இளயராஜா வீற்றிருப்பார். அவர் புகழை தலித் மக்கள் மட்டுமே காலாகாலத்துக்கும் கொண்டாடி கொண்டிருப்பார்கள்." (நினைவிலிருந்து எழுதப்படுகிறது. வரிகள் மாறியிருப்பினும் பொருள் இதுதான்.)

ஆக தன் தலித் பிண்ணணியை பற்றி எழுதுவது அல்ல பிரச்சனை. தன்னை தலித் என்ற அடையாளத்தில் குறுக்குவதுதான் இளயராஜாவிற்கு பிரச்சனை. இதற்காக குணசேகரன் மீது வழக்கு தொடர்ந்ததை நான் ஆதரிக்கவில்லை. அது குறித்து விமர்சனமாய் நிச்சயம் எழுதலாம். ஆனால் அதை நேர்மையின்றி திரித்து ஒரு மாபெரும் கலைஞனை காலிபண்ண முயல்வது கயமைத்தனம் அல்லாமல் வேறு என்ன?

சாருநிவேதிதாவின் கட்டுரையே இப்படி சில திரித்தல்களின் மீது கட்டப்பட்டிருப்பதுதான் எனக்கு பிரச்சனையே ஒழிய, பாப் மார்லேயையும் இளயராஜாவையும் ஒப்பிட்டு ஒருவர் கட்டுரை எழுதினால் அதில் கண்டிக்க பெரிதாய் எதுவுமில்லை. ஆனால் ஒருவகையில் அதுவும் நியாயமாகாது. பொதுவாய் திரை இசையமைப்பாளர்களை ஒப்பிட்டு வேண்டுமானால் எழுத முடியும். பாப்மார்லேயின் இசை தமிழ் சினிமாவில் கொச்சை படுத்த படுவதை (அகிலா, அகிலா!) எழுதலாம். அல்லது ஒரு தலித்தான இளயராஜா 'பாப்மார்லேயாக பரிணமிக்காதது' குறித்து ஆராயலாம். அப்படி ஆராயும் போதும் எனக்கு ஒரு பாப்மார்லே உருவாவதை அனுமதிக்காத சூழல்தான் நினைவுக்கு வருமே ஒழிய, அதன் பழியை ராஜாமீது போடமாட்டேன். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தோன்றவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதையெல்லாம் மீறி ராஜா நிச்சயமாய் பேட்டிகளில் எதையாவது உளரக்கூடும். அச்சுபிச்சுத்தனமாய் ஏதாவது செய்யலாம். அதனால் என்ன? அவர் ஒரு அறிவுஜீவி கிடையாது. அவருடய செயலும், சாதனைகளும் கருத்தியல் தளத்தில் அல்ல. அவரை பற்றி பேச அவர் இசையை பற்றி பேசவேண்டுமே ஒழிய அவர் பேட்டியில் சொன்னதையும், திருவிழாவில் பேசியதையும் சர்ச்சையாக்குவது அபத்தம்.

கோமல் தனது பறந்த போன பக்கங்களில் ஒருமுறை எழுதியது. எம். எஸ். விஸ்வநாதன் கண்ணதாசனுடன் ரஷ்யாவில் இசை நிகழ்ச்சிக்கு போனபோது, கண்ணதாசன் ரஷ்ய சமூகம் பற்றி, அதன் புரட்சி மற்றும் அரசியலமைப்பு பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது எம்.எஸ்.வி. கேட்டாராம்.

"அண்ணே கம்யூனிஸம்னா என்ன?"

விரிவான விளக்கத்தை கேட்கவில்லை, குண்ட்ஸாக கூட கம்யூனிஸம் என்றால் என்னவென்று எம்.எஸ்.வி.க்கு தெரியவில்லை என்று அறிந்து, "இப்படியும் ஒருத்தன் இருப்பானா?" என்று வியந்து போய் கண்ணதாசன் சொன்னாராம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இசை மட்டுமே மொழி, வாழ்க்கை, கல்வி, தத்துவம் எல்லாம்! இசையை தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. அப்படிப்பட்ட இன்னொரு மேதைதான் இளயராஜா. அவருள் ஊறிகொண்டிருக்கும் இசையில், சமய சந்தர்ப்பத்தை பொறுத்து சில துளிகள் மட்டுமே சிதறலாய் நமக்கு கிடைத்து, அதையும் இன்னும் நாம் சரியாய் புரிந்துகொள்ளவில்லை. இந்நிலையில் தங்கள்(இவர்களே மாற்றிக்கொள்ளப் போகும்) அரசியல் சட்டகத்தை வைத்து, ஒரு மாபெரும் இசைக்கலைஞனை எந்த provocationஉம் இல்லாத சமயத்தில் நிராகரிக்க முயல்வது, நானும் பகிர்ந்து கொள்ளும் அரசியலின் அழுகலான ஒரு பகுதியாகவே எனக்கு தெரிகிறது.

பின் குறிப்பு: ராஜாவின் திருவாசகத்தை இப்போது பல முறை கேட்டாகி விட்டது. என் பார்வையிலும் (என் எதிர்பார்ப்பிற்கு) ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. எந்த வித சந்தேகமும் இல்லாமல், எளிதில் முழுமையாய் உள்வாங்க இயலாத, ஒரு complex இசையை, மிகுந்த உழைப்பின் பலனாய் தந்திருகிறார். நிச்சயமாய் ஞாநிபோல் 'இரண்டு பாடல்கள் மட்டுமே தேறுகிறது' என்ற தீர்ப்பை ஒரு வாரத்திலேயே உளறிக் கொட்ட முடியாது. ஆனால் அவருடய பழைய சாதனைகளை இது எந்தவிதத்திலும் தாண்டவில்லை என்றே நானும் கருதுகிறேன். ஞாநிபோல திருவாசகம் குறித்து தீர்ப்பு தர இதை சொல்லவில்லை. மாறாக அவரது பழைய சாதனைகள் மீது இன்னும் மரியாதை இருப்பதனால் தனிப்பட்ட அவதானிப்பாய் சொல்கிறேன்.
சரியாக சொல்லவேண்டுமானால் சிம்ஃபனி என்று பட்டியல் போடக்கூடிய, உடனடியாய் நினைவுக்கு வரக்கூடிய, எந்த 25 உதாரணங்களின் அருகில் கூட இது வரமுடியாது என்று நினைக்கிறேன். (ஆனால் திருவாசகத்திற்கு இசையமைக்கும் கட்டாயத்தை கணக்கில் கொண்டால் மேலே சொன்னது அபத்தமான கருத்தாகவும் இருக்கலாம்.) இது குறித்து விரிவாய் எழுத ஆசைதான். அதற்கு முன் ஞாநி கழித்ததை சுத்தம் செய்யும் அரசியல் கடமை இருப்பதால் எப்போது முடியும் என்று பார்போம்.

Post a Comment

---------------------------------------

Thursday, August 11, 2005

லாஜிக்!

`அம்மா', `அப்பா' எனும்போது ஒரே ஒருமுறை மட்டுமே ஒட்டும் உதடுகள், `மாமா' எனும்போது இரு முறை ஒட்டுகிறது. அதனால் 'நாம்' என என்னால் கூறித் திரியமுடியாமல் போனது போல.....

'நாம்' எனும்போது 'நான்' கரைந்து போவதால், வேறு வழியின்றி பேசாதிருக்க முடிவு செய்தேன். 'இருள் என்றால் குறைவான ஒளி' என்று மாகவிஞன் சொன்னதுபோல், பேசாதிருத்தல் என்றால் சிலவற்றை தேர்ந்தெடுத்து பேசாதிருத்தல் அல்லது தேர்ந்தெடுத்து பேசுதல். பேச்சின் அலைகளிலே படகு ஓட்டவும், கப்பல் விடவும், உப்பெடுக்கவும், மீன்பிடிக்கவும், விட்டால் வைரமுத்து வாலி துணைகொண்டு விண்மீன்களை வலைவீசி பிடிக்கவும் பகைவர்கள் முயலும்போது, போராட்ட சூழலும், போராளி மனநிலையும் கடத்தி செல்லப்படுவதை அனுமதிக்காமலிருக்கும் வண்ணம், பேசாதிருத்தலே பொதுக்குழு மறைமுடிவாய் எனக்கு வாய்க்கப் பெறுகிறது. பேசாதிருத்தல் என்பது என் தேர்விற்காக மட்டும் பேசுதல். அதிகாரத்தின் விசாரணையற்ற குட்டி பூர்ஷ்வா விவாதத்தில், பேசாதிருக்க மௌனமாய் இருந்தால் போதுமானது. ஆனால் பேசுவதற்கு வாக்கியங்கள் அமைக்க வேண்டும். அதற்கு வார்த்தைகளை தேர்ந்தெடுத்து செதுக்க வேண்டும். அதன் பொருளை பகைவர்கள் கொந்திச் செல்லாவண்ணம் பதுங்கு குழிகளிலே அமைக்கவேண்டும். பேசியபின்னும் பாதையிலே பாதிப்பை கவனிக்க வேண்டும். அதனால் பேசாதிருத்தலிலே காட்டும் கவனம் பேசுவதிலே சாத்தியமில்லை. இயன்றாலும் கவனமின்மை குறித்த பாவனை இன்றியமையாதது. என் கவனமும் கவனமின்மையும் கவனிக்கப் படும் போது, நான் கவனத்தையும் கவனமின்மையையும் கவனமாகவே கடைபிடிக்க வேண்டியிருக்கிறது. எதிரியின் கவனத்தை கண்காணிக்க வகையில்லாத பின்தொழில்நுட்ப யுகத்தில், பேசாதிருத்தலே எனக்கு பணிக்கப் படுகிறது. பேசாதிருத்தல் என்றால் மற்றதை பேசாதிருத்தால். முடிந்தால் எனக்கு மற்றதாகிப் போனவற்றினுள்ளே மற்றதின் மற்றதை பற்றி மட்டும் பேசுதல். பேசா பொருளை புணரத் துணிந்தவர்கள் பன்றி பிடிக்கும் வளையங்களுடன் வலம் வந்து, பேசா வார்த்தைகளை இரவுகள் எல்லாம் ஊளையிட வைப்பார்கள் என்று யாரேனும் அறிவுறுத்தினாலும், 'பேசாதிருந்தாலே புரட்சி சித்திக்கும்' என்ற பொதுகுழு சிந்தனையை மீறும் துரோகத்தை செய்வதில் நேர்மையை தவிர வேறு பிரச்சனையில்லை. அதனால் பேசாதிருப்போம். பேசாது திரியும்போது பேச நேர்ந்தால், "கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை என்று ஒப்புக்கொள்!" என்ற பாடலை ஒருமுறை பாடிக்கொள்வோம்.

Post a Comment

---------------------------------------
Site Meter