ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, October 07, 2015

இந்து அடையாளமிலி-4


(முந்தய பகுதிகள்: இந்து அடையாளமிலி-3 ,  இந்து அடையாளமிலி-2,  இந்து அடையாளமிலி-1 )


அடையாளம் சார்ந்த எந்த அரசியலுக்கும் ஒரு பாசிச பரிமாணம் இருந்தே தீரும்; ஏதோ வகையில் ஒடுக்கப்படும் ஓர் அடையாளம் சார்ந்து அந்த அரசியல் கட்டமைக்கப்படும் போது, ஒடுக்குமுறையின் தீவிரத்திற்கு ஏற்ப, இந்த பாசிசப் பரிமாணம் மழுக்கடிக்கப்படும். பெரும்பான்மை மக்களின் அடையாளம் சார்ந்த தேசியம், உள்முரண்களால் தடைபடாதபோது, பாசிசமாகப் பரிணமிக்கவே தவிர்க்க முடியா சாத்தியங்களிருக்கும். அவ்வாறான திராவிட இயக்கம், அதிகாரத்தில் இருந்தும், சில உதிரி சம்பவங்கள் தவிர்த்து, பாசிசமாகப் பரிணமிக்காத வரலாற்றை, இன்னொரு கட்டுரையில்தான் அணுகவேண்டும்.

புறக்கணிக்கப்படுவதாகத் தங்களைக் கருதும் பெரும்பான்மை மக்கள், தங்களுக்கான அரசியலை உருவாக்குதல் தேவையா என்றால் - சிறுபான்மையினரின் அதிகாரம் ஜனநாயகமற்ற முறையில் இல்லாத நிலையில், தேர்தல் ஜனநாயகம் மூலம் பேரம் பேசுவதன்றி ஒட்டுமொத்த அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றச் சாத்தியமில்லாத நிலையில் - தேவையில்லை என்பதே பதில். இந்தபாதிக்கப்படுவதுஎன்கிற கற்பிதமே பல சந்தர்ப்பங்களில் பொய்யானது. உதாரணமாக ஷா பானு வழக்கின் தீர்ப்பை பாராளுமன்றத்தின் மூலம் காங்கிரஸ் செல்லுபடியற்றதாக்கி, இஸ்லாமிய மதவாதத்திற்குச் சார்பாக நிலை எடுத்ததில், பாதிக்கபடுவது இஸ்லாமியப் பெண்களே தவிர பெரும்பான்மை இந்துக்கள் அல்ல; இஸ்லாமியப் பெண்களுக்கு நிகழ்ந்த அநியாயம், இந்துக்களுக்கு நிகழ்ந்த பாரபட்சமாக அரசியலாக்கப்பட்டது. அண்மையில் அல்லோல கல்லோலப்பட்ட வீரமணி பேட்டியில் 'தாலியை பற்றிப் பேசும் நீங்கள் பர்தாவைப் பற்றி பேசுவீர்களா?' என்று கேட்டதை மாபெரும் பாயிண்டாக இணையத்தில் பேசினார்கள். பெண் விடுதலை பேசும் ஒருவர், தாலியை பற்றிப் பேசி பர்தாவைப் பற்றிப் பேசவில்லையெனில், அதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், அவர் இந்துப் பெண்களின் விடுதலை பற்றி மட்டும் பேசுகிறார், முஸ்லீம் பெண்களுக்காக பேசத் தயராக இல்லை என்று மட்டுமே அர்த்தப்படும். இதில் பாரபட்சம் நிகழ்வது இஸ்லாமிய பெண்களுக்கே ஒழிய இந்துக்களுக்கு அல்ல; இந்தக் கேள்விகளை முன்வைப்பவர்கள் தந்தை வழிச் சமூக மதிப்பீடுகளைத் தீவிரமாகக் கொண்டவர்கள் என்பதால், இந்துக்களுக்கு எதிரானதாக அவர்களால் பொய்யாகக் கற்பிக்கப்படுகிறது. 'இந்து மதத்தின் அநீதிகளை மட்டும் கேள்வி கேட்கிறாயே, மற்ற மத அநீதிகளைக் கேட்பதில்லையே' என்று இந்துமத அநீதிகளை எதிர்க்கும் ஒருவரால் கேட்கமுடியாது. அன்னிய நிதி சார்ந்த மதமாற்றம் போன்ற உதாரணங்களில், இந்துக்களுக்கு அநீதி நிகழ்வதாகக் கருதினால், அதை நேரடியாக அடையாளச்சுமை இன்றியே எதிர்க்க முடியும்; அதற்கான எதிர்வினையாக இந்து அடையாளம் சார்ந்த அரசியலைக் கையில் எடுக்கும்போதே, எதிர்க்கும் தார்மிகம் விட்டுப்போகிறது. இந்து அடையாளத்தை அரசியல்படுத்திக் கொள்ளாத காந்தி, மதமாற்றத்திற்கு எதிராகவே நிலைபாடு கொண்டிருந்ததும், எதிர்வினை ஆற்றியதும் கவனத்திற்குரியது. ஆனாலும் இடதுசாரிகளும், பெரியாரியர்களும் மற்ற மத அடிப்படைவாதத்தை விமர்சிக்காமல், சில சந்தர்ப்பங்களில் நியாயத்தையும் அதற்கு அளிப்பது, இந்துத்வ அரசியல் பலம் பெறவே உதவும். மற்ற மத அடிப்படைவாதத்தை நிராகரித்துக் கருத்துச் சொல்ல, நாம் சொந்த மத அடையாள அரசியலைத் தழுவ வேண்டிய தேவையும் இல்லை

தமிழகத்தில் இந்துத்வம் வலிமையற்று இருப்பதற்கு திராவிட அரசியல் காரணமாயினும், தனிப்பட்ட ஓர் இந்து தனக்கான மத அடையாள உணர்வற்று இருப்பது முக்கிய காரணம். இந்துக் கடவுள்களை நம்பும் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம், திராவிட அரசியலை மனத்தடையின்றி ஆதரித்து வந்ததற்கும், வருவதற்கும் கூட, இந்து அடையாள உணர்வின்மை ஓர் அடிப்படை காரணம். இந்து அடையாள உணர்வு, மற்ற மத இருப்பின் எதிர்பிரஞ்ஞை சார்ந்து உருவாவது; தமிழகம் போலல்லாது, வட இந்தியாவில் பெருமளவு இந்துக்களின் பிரஞ்ஞையில் இந்து என்ற அடையாளவுணர்வு கலந்திருப்பதற்கு, நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டிருந்த அவர்களின் வரலாறு முக்கிய காரணம். தமிழகம் முழுவதும் பரவலாக இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தாலும், அவர்களை இன்னுமொரு சாதியாகவே - குறிப்பாக கிராமப் பகுதிகளில் - கருதி, உறவு கொண்டிருந்ததை அறியலாம். மற்றொரு சாதி மற்றொரு கடவுளை வணங்கி, வேறு சடங்குகளைக் கொண்டிருப்பது பழகி ஏற்றுக்கொண்ட ஒன்று என்பதால், மற்ற மதத்தவரின் இருப்பு இந்து என்ற அடையாள உணர்வைக் கிளறுவதில்லை. தமிழகத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதியான இந்துத்வ அரசியல், நீண்ட பிரயத்தனத்திற்கு பின் 90களில் வலுபெற்று, இந்து அடையாள உணர்வை ஊட்டி வருகிறது. ஆயினும், கோயம்புத்துர் வெடிகுண்டு போன்ற சம்பவங்கள் நடந்த பின்னும், இந்துத்வம் எதிர்பார்த்த அளவு தமிழக மக்களை தங்களுடன் அணிசேர்க்க முடியவில்லை.  

ஒரு தனிப்பட்ட தமிழ் இந்து தனது பிரஞ்ஞையில் கொண்டிருந்தது சாதிய அடையாளம். பரம்பரை வரலாற்றுச் சொல்லாடல்களால் கையளிக்கப்படும் அந்தச் சாதிய அடையாளம் பழமைவாதத்தன்மையைக் கொண்டது; சாதியமைப்பில் தன் படிநிலைக்கு ஏற்ப ஆதிக்க உணர்வையும், கீழ்படிதல் உணர்வையும் ஒருங்கே கொண்டது. திராவிட இயக்கப் பாதிப்பில் கீழ்படிதலில் இருந்து விடுபட்ட, ஆனால் ஆதிக்க உணர்வை தக்கவைத்துக் கொண்ட இடைநிலை ஜாதிகள், சாதிய அடையாளத்தை காலத்திற்கு ஏற்ப நவீனபடுத்திக் கொண்டது. இந்த நவீனமான சாதிய அடையாளம், இந்துத்வத்தன்மை கலந்தது; பழமையான அடையாளத்தில் இல்லாத பாசிசதன்மையைக் கொண்டது. இந்தச் சாதிய அடையாள அரசியல், தொண்ணூறுகளில் தொடங்கி இரண்டாயிரத்திற்குப் பிறகு தீவிரம் அடைகிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ எதிர்ப்பின் மூலம் இந்துக்களைத் தங்களுடன் அணி சேர்க்க முடியாத இந்துத்வம், இந்தச் சாதிய அரசியலுக்கு உறுதுணையாக இருந்து, அந்தந்த சாதியின் இருப்பை உறுதி செய்வதன் மூலம், இந்துக்களைத் தன்னுடன் அணிதிரட்ட முயன்று வருகிறது

துவக்கத்தில் ஆதிக்க சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களை உதிர்த்த பாமக இதில் அகப்படவில்லை; சாதியத்தை எதிர்த்த முற்போக்கினர் பாமகவை ஆதரிக்கும் வரலாற்றுத் தவறும் நிகழ்ந்தது. தலித்களுக்கு எதிராக எல்லா இடைநிலைச் சாதிகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சியை பாமக 2013இல் முதன்முறையாக நடத்தவில்லை; 2000த்தின் துவக்கத்திலேயே நடந்தது. அதற்குப் பின்னான அரசியல் ஆட்டத்தினிடையில் விடுதலைச் சிறுத்தைகளுடன் சமரசமாகி இணைந்து உருவாக்கிய தமிழ் சார்ந்த அரசியலில் இது மறந்து போனது; மற்ற முற்போக்குகளுடன் தமிழ்த் தேசியத்தையும் பேசிய சிலர் மீண்டும் இந்த அரசியலை ஆதரித்தனர். இப்போது எல்லா வேஷமும் கலைந்து, தூய சாதியப் பாசிசமாக பாமக தன்னை வெளிப்படுத்திய பின், இந்துத்வம் தன் ஆளுகைக்குள் கொணர எல்லா வாயில்களும் திறந்துள்ளன

நீண்ட கால பிரயத்தனங்கள் எதிர்பார்த்த பயன்களைத் தராததால், இந்துத்வம் இப்போது கொண்டிருக்கும் நம்பிக்கை, இந்தச் சாதிய அடையாள அரசியல் சார்ந்த இந்து ஒருங்கிணைப்பு. இதனால்தான் ̀இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி' என்ற பெயரில் வெளிப்படையாகக் சாதிகளின் கண்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்துத்வத்தின் இந்த முன்னெடுப்பும் அதன் அணிச்சேர்க்கைக்குப் பயனற்று போகும் என்று நான் கணித்தாலும், இந்த அரசியல் சமூகத்தில் ஏற்படுத்தப் போகும், ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாதிப்புகள் சாதரணமானதல்ல.  

தொடரும் சாதியமைப்பு, அதன் ஏற்றத்தாழ்வு இசைவுகளுக்கு எதிராக காலமாற்றத்தால் அழுத்தப்படும் நிர்பந்தங்களுக்கு எதிர்வினையாக, பெரும் வன்முறைகளை இந்தியா முழுக்க நிகழ்த்தி வருகிறது; சாதி அரசியல் தேர்தல் அரசியலுடன் பிணைந்தும் உள்ளது. ஆனாலும் தமிழ்நாட்டில் தற்போதய நேரடிச் சாதிய அரசியல் அமைப்புரீதியாக பூதாகாரமாகி, அதன் கண்காணிப்புகளும் வன்முறைகளும் அனுதினமும் வெளிபடுவது போன்ற மோசமான நிலைமை, இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாகத் தோன்றவில்லை. கருத்து வெளியில் இந்த அரசியலின் சில வெளிபாடுகளாக ̀மாதொரு பாகன்' நாவல் பிரச்சனையாக்கப்பட்டது; கண்ணன் என்ற எழுத்தாளரின் முழு நூலகமும் எரிக்கப்பட்டது; தலித் எழுத்தாளர் துரை குணா சமூக ஒதுக்கம் செய்யப்பட்டார். இந்த அரசியலுடன் இயல்பான தோழமையாய் இப்போது இந்துத்வமும் இணைந்திருக்கிறது


இந்துத்வ அறிவுத்தரப்பு ̀ஆன்மிகச் சேவை கண்காட்சி'யில் ̀விமர்சனத்துடன்' பங்கெடுத்தது போல், ̀மாதொரு பாகன்' பிரச்சனையிலும் விமர்சனங்களுடன் பங்கெடுத்துக் கொண்டது.  ̀மாதொரு பாகன்' நாவலில் ஒரு பகுதியில் விவரிக்கப்படும் திருவிழா நடைமுறை, அதன் மற்ற பகுதில் வரும் விவரிப்புகளைப் போலவே, இந்துச் சமூகத்தின் ஒரு பகுதிதான். ஆழமான கற்பு மதிப்பீடுகளை கொண்ட அதே மக்களால்தான், ஒரு மீறலாக இதுவும் அங்கீகரிக்கப்பட்டது; பழைமைவாத மனம் கொண்ட ஓர் இந்துவிற்கு - குறிப்பாகத் தனக்கு அதனுடன் நேரடி சம்பந்தமில்லாத போது - அந்த நடைமுறை அடையாளம் சார்ந்த நெருடலை ஏற்படுத்துவதில்லை; திண்ணையில் உட்கார்ந்து கிசுகிசுப்பதற்கு மேல் அதில் எதுவுமில்லை. இந்து என்ற அடையாளமிலி தொலைந்து, இந்துத்வம் கலந்த சாதிய அரசியல் அளிக்கும் அடையாளத்தின் தூய்மைக் கற்பிதம் சார்ந்தது இந்தப் பிரச்சனை.

Post a Comment

1 Comments:

Blogger ROSAVASANTH said...

நிறைவுற்றது.

10/07/2015 4:31 PM  

Post a Comment

<< Home

---------------------------------------
Site Meter