ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Saturday, September 10, 2005

பத்து யென் = 1 ஜென்

(கச்சையை கண்டும் தமிழ் மணம் இல்லையென நிராகரித்துவிட்டதால் மீண்டும்.

இந்த தலைப்பு பெயரிலி தந்தது.)'என்ன விலை அழகே!' பாடலை கேட்க!

Post a Comment

---------------------------------------
என்ன விலை அழகே!


Post a Comment

---------------------------------------

Thursday, September 08, 2005

மரியா.

சற்று முன் மார்க்வெஸின் 'மரியா' என்ற அற்புதமான சிறுகதையை திண்ணையில் படித்தேன். நான் தவறவிட்டிருந்த மார்க்வெஸின் பல மாணிக்கங்களில் ஒன்று. இனி ஒரு முழு நாளாவது வேறு எதையும் படிக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த அனுபவம் நண்பர்களுக்கும் நேர இங்கே பரிந்துரைக்கிறேன். இதுவும் பாலியல் தொழிலாளியினுடைய கதைதான். ஆனால் தமிழுலகத்தில் ஒரு நாளும் சாத்தியமாகாத யதார்தத்தை கொண்டது. ராஜாராமின் மொழிபெயர்ப்பு வாசிப்பில் எந்த நெருடலும் ஏற்படுத்தாத வகையில் நேர்த்தியானது. கதை சாவை பற்றியது மட்டுமல்ல என்பது என் அபிப்ராயம்.

Post a Comment

---------------------------------------

Wednesday, September 07, 2005

கொடுமையிலும் கொடுமை!

(பொதுவாய் இங்கே எதையும் மறுபதிப்பு செய்வதில்லை. திண்ணையில் பழைய சிறுகதைகளை மேய்ந்துகொண்டிருந்த போது, ஜி. நாகராஜனின் நிமிஷக் கதைகள் (மீண்டும்) கண்ணில் பட்டது. தற்சமயத்தின் பொருத்தம் கருதியும், பகிர்ந்துகொள்ளவும் இங்கே பதிகிறேன். திண்ணைக்கு நன்றி. மேலே தலைப்பு நான் தந்தது.)


அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

"பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன?" என்று எழுத்தாளன் கேட்டான்.

"என்ன? ... கெட்ட நிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம்" என்றாள் விபச்சாரி.

"இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!" என்றான் எழுத்தாளன்.

"கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே" என்றாள் விபச்சாரி.

"கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை?"

"யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு"

"மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா?"

"அப்படியா?"

"பின்பு?"

"சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?"

"ஊம், இருக்கு"

"நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே? .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க"

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

Post a Comment

---------------------------------------

Saturday, September 03, 2005

வாயு!

< "உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும், பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம், என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள் அதாவது குழந்தைகளை பயமுறுத்த பெரியவர்கள் 'பூச்சாண்டி' 'பூச்சாண்டி' என்பதுபோல இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்து ஒரு பெரும் சூழ்ச்சியாகும்.

எப்படி குழந்தைப் பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அது போலவே தான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்க முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது.

உண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய என்றும் சொல்வதனால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டிருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும். "


--பெரியார், பகுத்தறிவு மலர். 3,இதழ் 9, ஜனவரி 1, 1938.

மாறன்: இன்னொரு கேள்வி. இப்போ காலத்திலே ஒழுக்கம் குறைஞ்சு வருது, அப்படின்னு எல்லோரும் சொல்றாங்க. அரசாங்கத்தின் தண்டனைக்குப் பயமிருக்கணும்; அல்லது ஒருவிதமான ஆண்டவன் நம்பிக்கையிருந்து பயப்படணும். இந்த ரெண்டும் இல்லாமப் போயிட்டதே இப்போ. இந்த ஒழுக்கம் நல்லா இருக்கிறதுக்கு என்ன வழி?

பெரியார்: மன்னிக்கணும், அய்யா. இதை ஒன்றும் கட்டுப்படுத்த முடியாது, இனிமேல் எந்தக்காரணம் சொல்லியும் மக்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. ஒரு மட்டம் தாராளமாக போயி, மறுபடியும் அவங்க ஏதாவது இதுக்கு என்ன பண்றதுன்னு திரும்பினா உண்டே தவிர, இப்ப ஒழுக்கமா, நாணயமா, நேர்மையா மனுசன் யாராவது சிந்திக்க இப்ப வாய்ப்பு இல்லை எல்லோருக்குந்தான். அரசியலில் ஒழுக்கமா இருக்க முடியலே. எவனாயிருந்தாலும் மதத்திற்குக் கூட, காட்டிக்க முடியுதே தவிர, தத்துவப்படி நடக்க எவனாலும் முடியலே. ஒழுக்கம்'னு இன்னொருத்தனுக்கு சொல்றமே தவிர, அந்த வாய்ப்புக் கிடைச்சா நாமும் அந்தத்தவறு பண்ணத் தயாராயிருக்கோம். அனுபவத்திலே சொல்றேன். நான் அப்படி இருக்கும்போது சும்மா ஒழுக்கம்னு சொல்லி இன்னொருத்தனை ஏமாத்தறதிலே என்ன இலாபம் சொல்லுங்க.

மாறன் : சமுதாய நலவாழ்வுக்கு.

பெரியார் : என்ன நல்வாழ்வு? சமுதாயத்துக்கு என்ன நல்வாழ்வு வரும்'? நீங்க பணக்காரன்' நான் ஏழை. இவங்களுக்கு நல்வாழ்வு எங்கே வரும்? இதையெல்லாம் காப்பாத்துறதா இருந்தா அதைத்தான் ஒழுக்கம்னு நினைக்கிறோம். உங்ககிட்டே பணம் திருடக்கூடாது நான், நீங்க வியாபாரி, என்னை மோசம் பண்ணி பணம் சேர்த்துடலாம்னு நினைக்கிறீங்க. அப்ப எப்படி ஒழுக்கம் வரும்?


(5-1-1970ல் திருச்சி வானொலி ஒலிபரப்பு).பல மாதங்கள் முன்பு 'குமட்டல் வாரம்' என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அது ட்சுனாமி பேரழிவு தாக்கியிருந்த நேரம். ட்சுனாமி பயத்தில் வாழ்வு குறித்த பீதியுடன் தன் வீட்டை காலி செய்து, மாமியார் வீடு வரை சென்று திரும்பி வந்த கதையை, யதார்த்தமான நேர்மையான வார்த்தைகளில் முன்வைத்தவர், அந்த அனுபவத்தில் (அதாவது உயிர்பயத்தில்) தான் அடைந்ததாக கற்பித்து கொண்ட 'ஞானத்தை' தந்ததற்காக, சுனாமிக்கு நன்றி சொன்ன வக்கிரத்தை கொண்டுபோய் அசோகனின் கலிக்கத்து போருக்கு பின் ஏற்பட்ட மனமாற்றத்துடன் ஒப்பிட்டும், வைரமுத்து ஒரு கவிதை மூலம் கோடிக்கணக்கான மக்களின் சோகத்தை ஆபாசப்படுத்தியதை 'கவிஞ'னின் 'கடமை' 'உயற்வு நவிற்சி' என்றெல்லாம் ஜல்லியடித்து, எல்லா மனித சமுதாயத்திற்கும் இயற்கையாய் இருக்கக் கூடிய மனிதாபிமானம் தார்மீகம் எல்லாவற்றையுமே வலைமாமணிகள் ஆபாசப்படுத்திகொண்டிருந்த நேரம் அது. 'சுனாமி வந்ததால் சாப்பிடவில்லையா, ஒண்ணுக்கு போகவில்லையா?' என்றெல்லாம் தர்க்கபூர்வமாய், சில அச்சுபிச்சுக்கள் மட்டுமின்றி, நான் மரியாதை வைத்திருந்த சிலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ட்சுனாமி வந்தால் பட்டினி கிடக்க வேண்டும் என்றோ, நியூ இயர் கொண்டாடக் கூடாது என்றோ, குறைந்த பட்சம் 'வசந்த் பேச்சுலராகவே இருப்பான்' என்று மீனாக்ஸ் பதிவு போடக்கூடாது என்றோ கூட நான் ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அப்படி சொன்னதாக மற்றவர்களால் திரிக்கப்பட்டதாக சொல்லமாட்டேன். மக்களின் வாசிக்கும் முறையே அப்படித்தான் இருக்கிறது. ஆனால் நான் என் பதிவில் -வெங்கடேஷ், வைரமுத்துவை முன்வைத்து -எழுதியிருந்தது, ஒரு போலி அறிவுஜீவி பாவனையால் வார்த்தையிலும் எழுத்திலும் வெளிப்படும் வன்முறையை பற்றியும், அதன் வக்கிரமான வெளிபாடு பற்றியும். மீண்டும் மீண்டும் என் நிலைபாட்டை விளக்குவதும் ஒருவகையில் நடந்த சோகத்தை ஆபாசப்படுத்திக் கொண்டிருந்ததால், குமட்டலை பொறுத்துகொண்டு அது குறித்து பேசுவதை நிறுத்தி வேறு விஷயத்திற்கு சென்றேன். அதற்கு பிறகு இப்போது மீண்டும் அப்படி ஒரு வாரம் சித்தித்திருக்கிறது. இந்த முறை இருக்கும் ஒரே பிரச்சனை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கும் வேலையின் நெருக்கடியும், அதன் நிச்சயமின்மை நேரமின்மை மட்டுமே. எத்தனை நெருக்கடி அவசரங்கள் இருந்தாலும், வாயுவை அதுவும் துர்நாற்றம் தரக்கூடிய வாயுவை உள்ளேயே வைத்திருப்பது போன்ற அவஸ்தை வேறு உண்டா? அதனால் இங்கே திறந்து விடுகிறேன்.

ஜெயபாரதன் திண்ணையில் மதிவண்ணன் கவிதைகள் பற்றி லதா ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை கடித்து துப்பிய 'கடிந்துரை' , மற்றும் நாகூர் ரூமி நவீனத் தமிழோவியம் வரைய உடைத்த 'அழுகிய முட்டை', இரண்டையும் முன்வைத்தும், மாலன் நாராயணன் பதிவில் தொடுத்த கேள்விகளினூடே சில பழைய பிரச்சனைகள் என்று கொஞ்சம் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் எழுத நினைத்ததை, சென்ற வார ட்ரெண்டில் ஆபாசத்தின் உச்சத்திற்கு கொண்டுபோய், நாம் எத்தனை கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டிருக்கும் சில அற்ப தமிழகத்து புழுக்களின் செயலால் கைவிட்டுவிட்டு, வழக்கமான வசைப்பதிவு போட வேண்டியதாகிவிட்டது. என் பின்னூட்டத்தை எம்.கே. குமார் நீக்கிவிட்டு, அதை முன்வைத்து வந்த கண்டனங்கள் மற்றும் அப்படட்டமான வசைகளை நீக்காமல் வைத்திருக்கும் நேர்மையின்மை மட்டுமல்ல. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும் சில கருஞ்சட்டை பேர்வழிகள் (முக்கியமாய் காஞ்சி ஃபிலிம்ஸ்) சங்கரமடத்து சிஷ்யர்களிடம் கூட இல்லாத கேவலமான சிந்தனைகளை கொட்டியிருப்பது பெரியாரை மிகவும் கேவலப்படுத்திக் கொண்டிருப்பதனாலும் இந்த பதிவை நீட்டி முழக்கி எழுத வேண்டியிருக்கிறது.

தமிழில் மிகவும் நம்பிக்கை அளித்த இயக்குனரான மகேந்திரனின் படங்களை பார்த்து ஏற்பட்ட பிம்பத்தை வைத்துக் கொண்டு, அவர் துக்ளக்கில் ஒரு முறை, தீபா மேத்தாவின் 'வாட்டர்' படபிடிப்பில் இந்துத்வ குண்டர்கள் கலாட்டா செய்து முடிவில் படத்தையே கைவிட செய்ததை பற்றி, "அப்படி அடித்தது சரிதான்!" என்று பேசியதை படித்தால் அதிர்ச்சியில் பலருக்கு பைத்தியம் தெளிந்துவிடும். அந்த உரையாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் 'தீபா மேத்தா செய்தது தவறு', 'அவர் படத்தை நீதி மன்றம் மூலம் தடை செய்யக் கோரலாம்', 'ஆனால் வன்முறை கண்டிக்கதக்கது' என்று சோ இந்துத்வ வன்முறையை தொடர்ந்து 'கண்டித்து' கொண்டிருக்க, மகேந்திரன் அவரை மறுத்து அளவுக் கதிகமாய் ஊத்திக் கொண்டவர் போல் "அடித்தது சரிதான்" என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பார். சிந்தனையுடன் படிப்பவனுக்கு தலை சுற்றாமல் இருக்காது. ஆனால் இந்த அவல நாடகத்தை சமூகத்தின் பல தளங்களில் பார்த்துணர்ந்தவனுக்கு சூட்சுமம் புரியாமல் போகாது. இதற்கும் தங்கர் பச்சான் விவகாரத்துக்கும் எந்தவகையில் எல்லாம் தொடர்பு என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கு விட்டுவிட்டு எனது ஆட்டத்தை ஆரம்பிக்கிறேன்.

தங்கர் பச்சன் உருவாக்கிய விவகாரம் குறித்து நான் எங்கேயுமே இன்னும் கருத்து சொல்லவில்லை. எத்தனையோ விஷயங்களில் கருத்து சொல்லாமல் இருப்பது போல், இது குறித்தும் நான் அதிகம் ஆர்வம் காட்டவில்லை, அல்லது அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. நான் எழுதியது எம்.கே. குமார் என்ற பச்சையான ஒரு ஷாவினிஸ்ட்ற்கு வைத்த உடனடி - நாக்கை பிடுங்குவது போல் கேட்க தோன்றியதால் எழுதிய - எதிர்வினை மட்டுமே. இந்த பதிவிலும் முக்கியமாய் எழுதப்போவது அதை பற்றி மட்டுமே என்றாலும் சில வரிகள். (தங்கமணியும் மற்றவர்களும் சொன்னதுபோல்) எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தங்கர் தமிழின் நம்பிக்கை தரும் ஒரு இயக்குனர். அவருடய ஒரு மேடை பேச்சை கேட்டவன் என்ற வகையில், தங்கர் பச்சான் செய்கைகள், பேச்சுக்கள் எனக்கு மிகவும் ஆச்சரியமளித்தது. அவரால் எப்படி அப்படி பேசியிருக்க முடியும் என்று இன்னமும் புரியவில்லை. ஆனால் யோசித்து பார்த்தால், கோபத்தில் அந்த கணத்தில் தனக்கு ஒப்புதலில்லா காரியங்களை எத்தனையோ மேதைகள் செய்திருப்பதை பார்க்கும் போது, தங்கர்பச்சானை பார்த்து ஆச்சரியப்பட எதுவும் இல்லைதான். தனிப்பட்ட அளவில், தங்கர்பச்சான் வருத்தம் தெரிவித்ததை மீறி, தனது வாக்கியத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கேட்டதை மீறி, இதில் பேச எனக்கு எதுவும் இல்லை. அதாவது இதை பற்றி பேச மற்றவர்களுக்கு நியாயங்கள் இருக்கலாம். எனக்கு தனிப்பட்ட அளவில் இல்லை. தவிர விஜய்காந்த் போன்றவர்கள் தங்கள் திரைப்படங்களில் கட்டமைத்து முன்வைக்கும் மதிப்பீட்டின் மூலம் பெண்களை கேவலப்படுத்தியதை விட, தங்கர் தன் கோபத்தில் வந்த சில வார்த்தைகளில் செய்ய முடியாது என்பது என் கருத்து. முக்கியமாக ஒரு விஷயம் யாருடைய நினைவுக்கும் வரவில்லை. இந்த விஜயகாந்த் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளை பற்றி சில ஆண்டுகள் முன்னால் (இதே வார்த்தைகளில்) கேவலமாய் பேசியது இப்போது நினைவு படுத்தப்பட்டு, தங்கருக்கு வக்காலத்து வாங்குபவர்களால் கூட, பிரச்சனையாக்கப் படாமல் இருப்பது, பொதுவான கூட்டு அம்னிசியாவை மட்டும் காட்டவில்லை. பலருக்கு அது உண்மையிலேயே பெரிய பிரச்சனையில்லை என்பதுதான். மேலும் பத்திரிகை கிசுகிசுக்களில், கவிதைகளில், பல பத்திரிகையின் கேள்விபதில்களில், நக்கீரன் போன்ற பத்திரிகைகளின் தொடர்களில் நடிகைகளை கேவலப்படுத்திய மனோபாவம் தங்கரின் கணநேர கோபத்தை விட இன்னும் அதிக விஷத்தன்மை வாய்ந்தது. சில ஆண்டுகள் முன்னால் ரோஜாவிற்கு எய்ட்ஸ் என்று ஒரு வதந்தியை இதே பத்திரிகைகள் கிளப்பியது, ஒரு நடிகை என்பதற்காக மட்டுமே அந்த பெண்மணி கேவலமாக கிசுகிசுக்க பட்டதற்கு, சின்ன அறிக்கை அளவிற்கு கூட யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது தவிர குழலி தன் வழக்கமான பாணியில் 'தர்கிப்பது' போல் இதில் வேறு ஏதாவது உள்குத்து அரசியல் இருந்தாலும் இருக்கலாம். (குழலிக்கு தங்கரை முன்வைத்து எழுத வெளிகுத்து அரசியலும் இருக்கலாம்).

ஆனால் ஒவ்வொரு அரசியலுக்கு பின்னும் இப்படி எதையாவது அடுக்கிக்கொண்டே போக முடியும். சமூகத்தில் அத்தனை மாற்றங்களும் இது போன்ற பிரச்சனைகளுடனேயே இதை மீறித்தான் நடக்க முடியும். பல்வேறு நிர்பந்தங்களுக்காக, அதிகாரம் வேறு கைகளில் இருந்த காரணத்தால் இதற்கு முன்னால் தாங்கள் பாதிக்கப் பட்டபோது, கேவலப்படுத்தப் பட்டபோது நடிகைகளால் பேசமுடியவில்லை. இப்போது சூழலும் அதிகாரமும் சாதகமான சந்தர்ப்பத்தில் பேசமுடிகிறது. உலகில் எல்லாமே இந்த நியதிப்படித்தானே நடக்கிறது? அதனால் அத்தனை பிரச்சனைகளையும் மீறி, தங்கர் பேசியது நியாயப்படுத்த முடியாததாகவும், அதற்கு ஏற்பட்ட கொதிப்பு நியாயமானதாகவும் வரவேற்கப்பட வேண்டியதாகவுமே எனக்கு படுகிறது. எப்படியிருப்பினும் அது குறித்து பேசுவதல்ல என் நோக்கம். இந்த விவகாரத்தை முன்வைத்து இங்கே வலைப்பதிவில் பேசப்பட்ட விஷயங்கள் நாம் எத்தனை கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறது. நம் தமிழ் சமூகத்தின் அழுகிபோன மதிப்பீடுகள் தெரிந்ததுதான் என்றாலும், கொஞ்சம் வெளிநாடுகளில் வசிக்க நேர்ந்த பின், உலகின் மற்ற சமுதாயங்களை பார்க்க நேர்ந்த பின்னும் இத்தனை அற்ப புழுக்களாக தமிழ் வாசகர்களும் வலைபதிவர்களும் இருப்பார்கள் என்று உண்மையிலேயே நான் நினைத்து பார்த்திருக்கவில்லை.

தங்கர் பச்சான் தான் சொன்னதற்கு வருந்தி, மன்னிப்பு கேட்டபின்பு, தங்கர் திரும்ப பெற்ற வாக்கியத்தை நியாயப்படுத்தி, 'நடிகைகள் எல்லோருமே விபச்சாரிகள்தான்' என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி இதுவரை ஒரு இருபது நாய்களாவது எழுதியிருக்கும். இவர்களிடம் தர்க்கபூர்வமாய் எதாவது சொல்ல முடியுமா? எதையாவது கேட்கும் மனநிலை இவர்களிடம் இருக்கிறதா? இந்த கணம் வரை எவனுக்காவது அணுவளவு சுய விமர்சனம் இருக்கிறதா? சொன்னால் மீண்டும் மீண்டும் இன்னும் அதிகமாய் (நம்முடய மர்ம ஸ்தானத்தில் உதைப்பதாய் நினைத்துகொண்டு) சொன்னதையே சொல்வார்கள். இவர்களுக்கு நாக்கை பிடுங்குவது போல் எதையாவது சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் அம்மாவை பற்றி பேசினால் மட்டுமே உறைக்கும். அதைதான் குஷ்பு செய்தார். (நான் செய்தது அதுவல்ல).

'உன் அம்மாவை போய் விபசாரி என்று சொல்' என்று குஷ்பு சொல்வது போல் சொன்னால்தான் இந்த (தங்கருக்கு அல்ல, குஷ்புவை கேவலமாய் வலைப்பதிவில் எழுதிய, 'நடிகைகள் விபச்சாரிக்கு ஒப்பானவர்களா?' என்று தொடர் எழுதும்) நாய்களுக்கு உறைக்கும். (நான் அப்படி சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்). இவர்களின் மதிப்பீடுகளை வைத்துத்தான் இவர்களை அடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இப்படி ஒன்றை எதிர்க்க இன்னொரு பெண்ணை கேவலப்படுத்த வேண்டுமா என்று கேட்கப்படுகிறது. நண்பர் சுந்தரமூர்த்தியும் அது என்ன நியாயம் என்பதாக கேட்டிருந்தார். என்னை கேட்டால் நியாயமில்லை என்றுதான் சொல்வேன். எந்த கட்டத்திலும், நிதானம் இழந்தால் கூட நான் அப்படி கேட்கமாட்டேன், கேட்கவும் இல்லை. ஏனேனில் நானும் சுந்தரமூர்த்தியும் மற்றவர்களும் பிரச்சனைக்கு வெளியே, நியாயம் நியாயமற்றது என்று தர்க்க பூர்வமாய் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறோம். ஆனால் பதிக்கப் பட்டவர்களுக்கு சில இடங்களில் சில தர்க்கம் உதவாது. உதாரணமாய் கூவாகத்தில் அலிகள் ஒரு அளவிற்கு மேல் நம்மை போல் 'ஒழுங்காய்' பிறந்தவர்களின் தொந்தரவிற்கு ஆளாகும் போதெல்லாம், அம்மாவைத்தான் இழுத்து வசவு வைப்பார்கள். நம் சமூகத்திலும் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் 'உன் ஆத்தாளுக்கும் இதே தாண்டா இருக்கு!' என்று சொல்வதை கேட்கமுடியும். பாலியல் தொழிலாளர்களும், தாங்கள் அளவுக்கு மீறி தொல்லைப் படுத்தப் படும் போது 'ஆத்தாளை'த்தான் இழுக்கிறார்கள். அதே போல ஒரு அர்தத்தில்தான் குஷ்புவிடமிருந்தும் வருகிறது. மேலும் அவர் சும்மா இருந்த ஒருவரை கேட்கவில்லை. தன் மீது பெய்யப்பட்ட ஒரு வசவிற்கு பதில் வசவாகவே கேட்கிறார். மதிப்பீடுகளை நாம் துறந்தாலும், சுற்றியிருக்கும் சமுதாயமும் சூழலும் கொண்டிருக்கும் மதிப்பீடுகள்தான் நம் மீதான பாதிப்பையும், தாக்கத்தையும் நிர்ணயிக்கின்றன. தனிப்பட்ட அளவில் மதிப்பீடுகள் இல்லை என்பதால், என்னை போல, 'குஷ்புவிற்கு பிறந்தவன்' என்று எந்த இழிந்த பிறவியாவது திட்டினால் அதை துடைத்து கொண்டு போக எல்லோராலும் முடியாமல் போகலாம். அதனால் நண்பர் சுந்தரமூர்த்தி அலிகளையும், கரகாட்ட காரர்களையும் நோக்கி 'அப்படி பேசுவது நியாயமா?' என்று கேட்காவிட்டால், குஷ்புவிடமும் கேட்கமுடியாது என்றே எனக்கு தோன்றுகிறது.

இப்போது திருமாவளவனும் 'தர்க்க பூர்வமாய்' 'பம்பரத்தை' வைத்தெல்லாம் கேள்வி கேட்டதாக அறிகிறேன். (தன்னிடம் உள்ள சொந்த ஆணாதிக்க கருத்துக்களையே திருமா சொல்வதாக எடுத்து கொள்வோம். நமது பெண்ணிய தோழர் ரவிக்குமார், நேரடியாய் முடியாவிட்டாலும், மனதிற்குள்ளாவது தனது எதிர்ப்பையும் முரண்பாட்டையும் சமரசமில்லாமல் தெரிவிப்பதாக நம்புவோம்.) இவரிடம், 'பம்பர சீனில் நடிக்க ஒரு நடிகைக்கு உரிமை உண்டு. ஆனால் அதை பற்றி கேவலமாய் பேச யாருக்கும் உரிமை கிடையாது' என்று லாஜிக்கலாக பேச முடியுமா? ஒரு பக்கம் மற்ற பிரச்சனைகளில் மிகவும் முற்போக்கான கருத்துக்களை கொண்டிருக்கும் இவர்கள் பெண்கள் சம்பந்த மதிப்பீடுகள் சிவசேனாவுடன் எந்த விதத்திலும் வேறுபடாதவர்களாகவே இருக்கிறார்கள். திருமாவிடமே எடுபடாத லாஜிக் வலைப்பதிவில் அதை எடுத்து போடும் லூஸிடம் பேசினால் எடுபடுமா? தலித் பிரச்சனையில் கூட இப்படியெல்லாம் 'லாஜிக்கலாய்' பேச முடியும் என்று எடுத்து சொன்னால் கூட, நாடு முழுவதும் போஸ்டரும், வழக்கும் அல்லவா பறக்கும். அம்பேத்கார் என்ற ஒரு தலித் அதிகாரத்தில் இருந்ததால் தீண்டாமை தடை சட்டம் வந்தது. ஜெயலலிதா பிரதமாரானால் ஒரு வேளை இதற்கும் சட்டம் கொண்டுவர தோன்றலாம். நடிகை என்பதால் இவரை விட வசவு வாங்கியவர் வேறு யாரும் இல்லாததால் அவருக்கு ஒரு வேளை தோன்றலாம். மற்றபடி இங்கே லாஜிக்கலாய் பேசி என்ன பயன்? பதில் வசை மட்டுமே சொல்ல முடியும். அதற்கான நியாயத்தை புரிந்து கொள்வதில்தான் எந்த விடுதலைக்கான தத்துவத்தின் அடிப்படையும் இருக்க முடியும்.


ஆனால் நான் எம்.கே.குமாரின் பதிவில் குஷ்பு சொன்னது போல் சொல்லவில்லை. அவர்களுக்கு உறைக்க வேண்டுமே என்பதற்காக கூட என்னால் இப்படி சொல்ல முடியாது. ஏனெனில் இப்படி சொல்வதும் பாலியல் தொழிலாளர்கள் குறித்த மதிப்பீட்டை ஏற்றுகொள்வதாய் ஆகிறது.

எம்.கே.குமாரின் பதிவில் நான் எழுதிய நான்கு வரிகளை கண்டித்து ஒரு பத்து பின்னூட்டமாவது வந்திருக்கும். மூன்று மிக நேரடியாக என் பிறப்பையும், மனைவியையும் பற்றிய வசைகள். பேசிய எவனுக்கும் குமாரின் பதிவு எத்தனை கேவலமானது என்றோ, அதில் உள்ள வார்த்தைகளை விட அதிகமாக நான் என்ன சொல்லிவிட்டேன் என்றோ தோன்றவில்லை என்பது மட்டுமல்ல. அத்தனை பேருக்கும் (குமாரை சேர்த்து, anniyan, SADHAYAM, காஞ்சி பிலிம்ஸ, Kuzhali இன்னும் சில) மீண்டும் 'நடிகைகள் எல்லாம் கேவலமானவர்கள்' என்று வலியுறுத்துவதாகவும், ஆமோதிப்பதாகவும் எழுதியிருந்தார்கள்(குழலி நேரடியாய் சொல்லாவிட்டாலும், மௌனத்தின் மூலம், குமாரை ஆதரிப்பதன் மூலம், என்னை திட்டுவதன் மூலம் ஆமோதித்தார்).

சிந்தனை என்பதே இல்லாதவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் எல்லோரும் போய் நான் எழுதியதை படித்து விட்டு, நான் எழுதியதன் பொருள் என்ன வென்று சொல்லவும். (குமார் பதிவில் நீக்கப்பட்ட இரண்டாவது பின்னூட்டம் என் பதிவிலும் இடப்படவில்லை. அதில் கேட்டிருந்த கேள்வி 'எந்த விதத்தில் உன் அம்மா பாலியல் தொழிலாளர்களை விட மேலானவள், அல்லது அவர்கள் கீழானவர்கள்' என்பது.) நடிகைகள் அளிக்கும் புலனின்பத்தை 'ஸ்வீட்' என்று அவர் உருவகப்படுத்துவாரெனில், அந்த 'ஸ்வீட்'தான் அவர் அம்மாவிடம், உலகில் எல்லா பெண்களிடமும் இருக்கிறது என்பதுதான் நான் சொன்னது. இதில் என்ன இல்லாததை, அல்லது பொய்யை, அல்லது இழிவானதை சொல்லிவிட்டேன். எவனாவது, வசைகளை தவிர்த்துவிட்டு தர்க்கபூர்வமாய் விளக்கட்டுமே! என்னை 'குஷ்புவிற்கு பிறந்தவன்' என்று ஒருவன் இரா.முருகன் பெயரில் போலி பின்னூட்டம் அளித்தது போல், இன்னாருக்கு பிறந்தவன் என்பதாக இவர்கள் யாரையாவது சொன்னேனா? எம். கே. குமார் தன் பதிவிலும், பின்னர் கடைசியாகவும் மீண்டும் வலியுறுத்தியும், இன்னும் மற்ற பலரால் மீண்டும் மீண்டும் 'விபச்சாரி' என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டது போல், எங்கேயாவது யாருடய அம்மாவையாவது 'விபச்சாரி' என்று சொன்னேனா?

இந்த குமாரே மீண்டும் என்னை பற்றி எழுதியுள்ளதை படியுங்கள். "பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை கேவலப்படுத்தினேன் என்று இவருக்கு கோபம் வந்ததால், 'இவரும் ஒரு பாலியல் தொழிலாளி என்றோ அங்கிருந்து பிறந்து வந்தவரென்றோ'... எழுதிவிட்டுப்போவதற்கு எவ்வளவு நேரமாகும் எனக்கு?"

இப்படி எதையாவது எழுதியிருக்கிறேனா? இத்தனை முறை கேட்பதற்கு காரணம், ஒரு இருபது மரமண்டைகள் (அதில் ஒரு பதினைந்தாவது 'நடிகைகள் விபசாரிகள்தான்' என்று அழுத்தி வலியுறுத்திவிட்டு) நான் ஏதோ அசிங்கமாய் எழுதியுள்ளதாய் கண்டித்திருக்கிறது. நான் கேட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான். நடிகைகளை விட, பாலியல் தொழிலாளர்களை விட மற்ற பெண்கள் எந்த விதத்தில் புனிதமானவர்கள்? உங்களுக்கு உறைக்கும்படி குறிப்பாய் சொல்ல வேண்டுமானால் உங்கள் அம்மா எந்த விதத்தில் புனிதமானவள்? திருமண பந்தம் மூலம் நடைபெறும் புலனின்பத்திற்கும், பாலியல் தொழிலாளியிடம் அடையும் புலனின்பத்திற்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை அய்யா! அதைத்தான் சொன்னேன். (வித்தியாசம் பல பல உண்டு. அது தவிர இரண்டிலுமே வன்முறை வேறு வேறு வகைகளில் உண்டு. நான் இங்கே புனிதம் என்ற கருத்தாக்கத்தை வைத்து மட்டுமே வித்தியாசம் இல்லை என்கிறேன்.)

'கருத்து வேறுபடுவதில் ஒரு நாகரீகம்' வேண்டுமாம்! அடங்கொப்புரானே, எது கருத்து - அதுவும் நாகரீகமான கருத்து? "நடிகைகள் எல்லாம் விபசாரிகள்' என்று ஒரு பதிவு போடுவதா? அப்படியென்றால் (அந்த நாகரீகமான கருத்தால் பாதிக்கப் பட்ட) குஷ்பு 'உன் அம்மாவை போய் விபச்சாரி என்று சொல்' என்று சொல்வது எந்த விதத்தில் அநாகரிகமான கருத்து? முன்னது எந்த விதத்தில் நாகரீகமானது, பின்னது எந்த விதத்தில் அநாகரிகமானது என்று குமாரின் பதிவை அமோதித்து எழுதிய இழிந்த பிறவிகள் வந்து இங்கே பின்னூட்டத்தில் விளக்கட்டும். மேலும் நான் குஷ்பு கேட்டதை கூட கேட்கவில்லையே! நான் கேட்ட கேள்விக்கு ஏதாவது ஒரு பதில், என்னை கன்வின்ஸ் செய்ய வேண்டிய அவசியமே இல்லை, எதாவது ஒரு பொருட்படுத்தத் தக்க ஒரு வாதத்தை முன்வைக்கட்டும். நான் மன்னிப்பு கேட்கிறேன். இல்லையெனில் அவர்கள் அத்தனை பேரும் அவர்கள் தாய் எந்த பாலியல் தொழிலாளியைவிடவும் புனிதமானவள் அல்ல என்று ஒப்புகொண்டதாக நாம் எடுத்துகொள்வோம். (நான் அதை பகிரங்கமாக என் எழுதுக்களில் பலமுறை அறிவித்துள்ளேன். அதனால் கிடுக்கிபிடி போட்டு கேட்பதாய் நினைத்துகொண்டு ஈனத்தனமாய் என்னை நோக்கி கேட்க வேண்டாம். ஆனால் ஆத்திரத்தை தணித்துகொள்ள எதை வேண்டுமானாலும் கேளுங்கள். எனக்கு பிரச்சனை இல்லை.) மேலும் இவர்கள் யாரும் தங்கள் கருத்தை மாற்றிகொள்ளவில்லை என்பதைவிட குறைந்த பட்ச பரிசீலனைக்கு கூட தயாராயில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

இதில் காஞ்சி ·பிலிம்ஸ் என்று ஒரு கருஞ்சட்டை, சங்கராச்சாரியை திட்டவே காஞ்சி ஃபிலிம்ஸ் என்று ஒரு பெயரை போட்டுகொண்டு, பெரியார் பெயரையும் சொல்லி எழுதி வருகிறது. அவருக்கு தெரிந்த ஒரே பெரியார் 'கடவுள் இல்லை' என்று சொன்னவர். ஒரு மத அடைப்படைவாதியை விட கேவலமாய் அந்த ஒரு விஷயத்தை மட்டும் பிடித்து, 'சமாதி இருப்பது கூட காட்டுமிராண்டித்தனம்' என்பது போல ஒளரிகொண்டு இருப்பவர். இந்த காஞ்சி மலம்ஸ் மட்டுமல்ல, பெரியார் பெயரை சொல்லிகொண்டிருக்கும் பெரும்பாலான பேர்வழிகள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஒரு சங்கரமடத்தை சேர்ந்தவரை விட கேவலமான ஆணாதிக்க, ஒழுக்கவாத கருத்துக்களை கொண்டவர்கள் இவர்கள். (சிறுபத்திரிகை சூழலை மீறி, பரவலாய் எழுத தொடங்கிய அ.மார்க்ஸ் போன்றவர்களின் எழுத்துகளின் பாதிப்பில் ஒரு பெரும் கூட்டம் இன்று பெரியாரின் பல பெண்ணிய, மாற்றுகலாச்சார கருத்துக்களை கொண்டிருப்பினும், நான் இங்கே ஒரு சம்பிரதாய திகவினரை பற்றிதான் குறிப்பிடுகிறேன்.)

சமூகத்தின் அத்தனை ஒழுக்கவாத கருத்துக்களையும், கற்பு போன்ற கற்பிதங்களையும் உடைத்து எரிந்தவர் பெரியார். ஆனால் பெரியார் பெயரை சொல்லும் ஒரு கருஞ்சட்டை சொல்கிறது, "பணத்துக்காகவும் புகழுக்காகவும் தங்களின் மார்பையும் வயிற்றையும் வெட்கமில்லாமல் ஆட்டிக்காட்டும் கேவலமான பிறப்புகள்' என்று நடிகைகளை சொல்கிறது. அது மட்டுமல்ல, 'திருமண பந்தத்தில் காணும் காமக்களிப்பும் 'விபச்சாரத்தில்' ஈடுபடும் ஒரு பெண்ணின் குமுரலையும்' வேறுபடுத்த வேண்டுமாம்? எந்த விதத்தில் உடலை காட்டும் நடிகைகள் கேவலமானவர்கள்? திருமண பந்தம் மூலம் வரும் காமக்களியாட்டம் புனிதமானது, பாலியல் தொழிலாளி(அதாவது அவரது பாஷையில் 'விபச்சாரி')யிடம் கிடைக்கும் இன்பம் கீழானது? காஞ்சி மலம்ஸ் பகுத்தறிவு பூர்வமாய் விளக்கட்டுமே! (கவனிக்கவும், இந்த விஷயத்தில் டோண்டு கூட முற்போக்கான கருத்துக்களை சொல்லியிருக்கிறார்.)

உலகத்துக்கே சுதந்திரத்தின் உன்னதத்தை கற்றுதந்த ஃபிரன்சில் வேறு இவர் வசிக்கிறார். ஒரு பிரஞ்சு பத்திரிகையில் இவர் இந்த கருத்தை சொல்லி பார்க்கட்டும். சோதித்து பார்க்க வேண்டுமானால் Le Mondeக்கு ஒரு வாசகர் கடிதமாய் இதை எழுதி பார்க்கட்டும். பிரஞ்சு பெண்கள் எல்லாம் தங்கள் (பயன்படுத்திய) ஸானிடரி நாப்கினாலேயே அடித்து நாற அடிப்பார்கள். ஸிமொன் தி போவா (Simon de Beauvoir) ஆய்ந்து எழுதுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த புரட்சி கருத்துக்களை சொன்ன பெரியாரை, தன் ஆதர்சமாய் சொல்லும் ஒரு கருஞ்சட்டையின் பார்வை இத்தனை கேவலமாய் இருக்கிறது.

படிப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் காஞ்சிக்கும் ஒரு சந்தேகம் வரும். காஞ்சி ஃபிலிம்ஸ் பாலியல் தொழிலாளர்கள் மீது மிகுந்த இரக்கம் கொண்டு அவர்கள் மீது பரிதாபமாகத்தானே பேசியிருக்கிறார் என்று. என்னை பொறுத்தவரை அதுதான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இவர் கருத்துப்படி பாலியல் தொழிலாளர்கள் மிகவும் கேவலமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் கேவலமானவர்கள்தான். ஆனால் சந்தர்ப்பவசத்தால் அந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதுதான் அவர் காட்டும் இரக்கம். சாதியத்தை ஒத்த கேவலமான சிந்தனைதான் இது. (ஒப்பிட்டு பாருங்கள்!)

பாலியல் தொழிலாளர் மீதான வன்முறை, பலவந்தம் இவற்றை பேசுவது என்பது வேறு, இப்படி போலிக்கண்ணீர் சிந்துவது வேறு. முதலில் தேவை அவர்கள் எந்த விதத்திலும் இழிந்தவர்கள் அல்ல என்று ஒப்புகொண்டு அவர்களின் இருப்பை அங்கீகரிப்பது. பாலியல் வன்முறைக்கு ஆளானவளை 'அய்யோ பாவம் எந்த படுபாவியோ கெடுத்துவிட்டானே!" என்று சொல்வதும் ஒரு வன்முறைதான். நாம் சொல்ல வேண்டியது பாதிக்க பட்ட நபர் மீது நிகழ்ந்தது ஒரு உடல்ரீதியான வன்முறையே அன்றி வேறு எதுவும் அல்ல, குறிப்பாய் அவர் எந்த விதத்த்லும் 'கெட'வில்லை என்பதுதான். 'விபச்சாரிகள் கேவலம்தான், ஆனால் அய்யோ பாவம், சந்தர்ப்பவசத்தால் கேவலமானார்கள்' என்பது போல் சொல்வது சாதியத்தை ஒத்த ஒரு அயோக்கியதனமான கருத்து மட்டுமே. மேலும் துக்ளக்கில் கேள்வி பதிலில் கேட்டுப் பாருங்கள். இதை ஒத்த கருத்தைத்தான் சோவும் பதிலாய் தருவார். அவ்வளவு ஏன், சங்கராச்சாரியிடம் கேட்டால் கூட 'அதுகளும் பாவம்தான்..! அவாளும் நன்னா இருக்கணும்!' என்று இதே போலிக்கண்ணீரை சிந்துவார். காஞ்சி மலம்ஸின் இரக்கம் இதிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல.

அடுத்து குழலி பற்றி மற்றும் அவர் எழுதிய சில விஷயங்கள் குறித்து எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஏற்கனவே இந்த பதிவு அலுப்பாகிவிட்டதாலும், அதை ஓரளவு என் பழைய பதிவின் பின்னூட்டத்திலும், அதை தொடர்ந்து அவர் பதிவிலும், முகமுடி பதிவிலும் சொல்லியிருப்பதாலும், மேலே சொல்லிக்கொண்டே போக எவ்வளவோ இருந்தும் இந்த விஷயம் குறித்து பேசுவதை இங்கே நிறுத்திகொள்கிறேன்.

வேறு ஒரு விஷயம். ஒரு வெகுதளத்தில் இயங்கும் இந்த விவகாரத்தின் இதே உளவியல்தான், வேறு ஒரு தீவிரமான தளத்தில் சமீப காலமாய் பெண்கவிஞர்கள் மீதான அறிஞர்களின் தாக்க்குதலாய் நிகழ்ந்துவருகிறது. நடிகைகள் பற்றி கேவலமாய் பேசிய இந்த அற்பபுழுக்களின் உளவியலோடு இயைந்ததுதான் பெண்கவிஞர்கள் மீதான தாக்குதலும். என்ன அங்கே பெண்விடுதலை என்றெல்லாம் ஜல்லியடிக்கப் படும். சில பெண் கவிஞர்கள் குறித்து கூக்குரலிட்ட திலகபாமா, மாலன் போன்றவர்கள் இது குறித்து எந்த எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அப்படி அவர்கள் குரல் எழுப்பினாலும் அது இந்த திண்ணை கட்டுரை போல இருக்குமே ஒழிய, நடிககைகளின் இருப்பை அங்கீகரிக்கும் வகையில் நிச்சயம் இருக்காது. சில பெண்கவிஞர்களின் கவிதைகளின் உள்ளடக்கம் குறித்து இவர்களுக்கு முரண்பாடு இருக்கலாம். ஆனால் பெண் கவிஞர்களை, ஈவ்டீசிங் செய்யும் காலிகள் பாணியில் ஒரு சிறு பத்திரிகைகளில் ('ஒரு வேளை அவர்கள் சின்ன முலை உடையவர்களாய் இருக்கலாம்,... அப்படியெனறால் நாயுடு ஹால் போய் ஏதாவது உருப்படியொன்றை போய்...' என்றெல்லாம்) தாக்கப்பட்ட போது கூட இவர்கள் வாயை திறந்ததில்லை. தங்கள் கருத்தை முன்வைத்து முரண்பட்டபடியே, சினேகிதன் பழனிபாரதியை கண்டிக்கும் வேலையை கூட இவர்கள் செய்யவில்லை. மாறாக சினேகிதனின் வேலையை இவர்கள் செய்தார்கள். பெண்கவிஞர்களை பற்றி (ரூமி சல்மா குறித்து சொன்னதைவிட) கேவலமான கருத்துக்களை புதிய மாதவி, திலகபாமா போன்ற அச்சு பிச்சு கவிஞர்கள் சொன்னார்கள். அதை திசைகள் வெளியிடவும் செய்தது. இவர்கள் இப்போது நடிகைகளுக்காக குரல் கொடுப்பார்கள் என்று கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

இதுவரை எழுதியது அத்தனையுமே வெட்டி polemics அன்றி வேறு எதுவும் இல்லை. உண்மையான அறிவு பூர்வமான விவாதம், இது போன்ற தளங்கள் சாத்தியமாகாத வேறு வெளியில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் இந்த பதிவின் தொடக்கத்தில் சொன்னது போல் உண்மையில் தமிழகம் குறித்து மிக கேவலமாக நான் நினைக்கவில்லை. ஏனெனில் இங்கேதான் ஒரு நடிகையை முதல்வராக்கும் சாதனை நிகழ்ந்திருக்கிறது. என்னை பொறுத்தவரை பாலியல் புரட்சி நிகழ்ந்த அமேரிக்காவில் கூட இது சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. ஜெயலலிதா முதல்வரான நிகழ்வுக்கு பின்னால் எத்தனையோ கேவலமான மதிப்பீடுகளும், கற்பிதங்களும் இருக்கலாம். நிச்சயமாய் ஒரு பார்பனிய அரசியல் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் மீறி தமிழ் சமூகத்தின் கற்பு மதிப்பீட்டை தகர்க்கும் நிகழ்வும் இருக்கிறது. ஜெயலலிதாவின் கற்பும், அவரது சொந்த வாழ்க்கையும் திமுக மேடைகளில் பேசப்பட்டது போல் வேறு யாரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க மாட்டார்கள். (இது ஏதோ ஒரு லூஸு மேதாவித்தனமாய் வலைப்பதிவில் முதலில் எழுதியது அல்ல.) தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்களால் தெருமுனையில் பேசப்பட்டது அல்லாமல், போஸ்டரில் தொடங்கி, சட்டசபையில் மார்ச் 25இல் மைக்கை பொத்தி கருணாநிதியால் வசையப் பட்டதான குற்றச்சாட்டை அவர்கள் மறுக்கவில்லை. நேரடியாகவே பத்திரிகை பேட்டியில் நாஞ்சில் மனோகரன், 'அமேரிக்காவில் கூட தனி மனித ஒழுக்கம் அதிபர் தேர்தலில் முக்கியமாய் போற்றப்படுவதை' சுட்டிக்காட்டி 'நியாயம்' கேட்டார். அதையெல்லாம் மீறி ஷாவினிஸ திமுகவை மக்கள் தோற்கடித்தார்கள். திமுக ஜெயலலிதாவிடம் இரண்டு முறை தோற்றதற்கு பின்னால் எத்தனையோ காரணக்களும் நான் எதிர்க்கும் அரசியலும் இருந்தாலும், அவை மேற்சொன்ன கற்பு மதிப்பீட்டை தாண்டியே நிகழ்ந்துள்ளது. பாலியல் புரட்சி நடந்த அமேரிக்காவில் ஒரு பெண் (அதாவது மனித 'ஒழுக்கம்' உடைய பெண்) அதிபராகக்கூட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை. தமிழகம் அங்கே நடக்க சாத்தியமே இல்லாத புரட்சியை நிகழ்த்தியதில் எனக்கு நிச்சயம் பெருமை உண்டு. ஒரு பக்கம் மிக கேவலமான கற்பு மதிப்பீடுகள் உள்ள தமிழ்நாட்டில் இது நிகழ்வதையும், அமேரிக்காவில் இது என்றுமே நிகழமுடியாததாய் இருப்பதன், முரண்பாட்டின் பிண்ணணியை விவாதிக்கும் சாத்தியங்கள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தமிழ் சூழலில் எனக்கு தெரியவில்லை. ஏதாவது அமேரிக்க பல்கலைகழகத்தில் அந்த விவாதம் அறிவுபூர்வமாய் நடைபெறலாம்.


பின் குறிப்பு: இது குழலி ஸ்டைல் உதார் எச்சரிக்கை அல்ல. வெறும் பின் குறிப்பு மட்டுமே. இந்த பதிவின் பின்னூட்டத்தில் யார் வேண்டுமானாலும், தங்கள் ஆத்திரத்தை தணித்துகொள்ளும் வகையில் என்ன வேண்டுமானாலும் என்னை திட்டி எழுதலாம். எந்த பின்னூட்டமும் நீக்கப்பட மாட்டாது. எதுவும் எந்த விதத்திலும் என்னை சிறிய அளவில் கூட காயப்படுத்தவும் முடியாது. தமிழில் சாத்தியமாகும் எல்லா வசை வார்த்தைகளும் எனக்கு தெரியும் என்றாலும், அது எதையும் நான் திருப்பி சொல்ல மாட்டேன். ஆனால் கருத்து ரீதியாய் இல்லாமல், என்னை தவிர மற்றவர்களை திட்டுவதும், குறிப்பாய் நடிகைகளை கேவலமாய் வர்ணித்து எழுதும் பின்னூட்டங்களும் நீக்கப்படும். யாருடைய எழுத்து உரிமையையும் நான் எந்த விதத்திலும் பறிக்கவில்லை. தாராளமாய் ஒரு Bளாகர் கணக்கு தொடங்கி தமிழ்மணத்தில் அடுத்த பதிவில் அவர்கள் அதை செய்யட்டும். ஒரு கொள்கைரீதியில் அதை என் பதிவில் அனுமதிக்க முடியாது.

தங்கரை நண்பர்கள் தங்கமணி, பெயரிலி, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட சிலர் மென்மையாய் கண்டித்திருக்கிறார்கள். தங்கரை கண்டிப்பது அத்தனை பெரிய பிரச்சனையாய் எனக்கு தோன்றவில்லை. ஆனால் வலைப்பதிவில் இத்தனை அசிங்கங்கள் எழுதியதை யாருமே கண்டிக்கவில்லையே! எழுதி என்ன பயன் என்று நினைப்பது சரியாய் இருக்கலாம். ஆனால் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவாவது வேண்டாமா? இந்நிலையில் என்னை தவிர தீவிரமாய் குரல் கொடுத்த முகமுடியை, பல முரண்பாடுகளுக்கிடையில் பாராட்டுகிறேன்.

பின்னூட்டங்களை படிப்பேன். ஆனால் வாயு வெளியேறி கலகலப்பாய் இருப்பதால் இப்போதைக்கு பதில் எதுவும் எழுத மாட்டேன். நன்றி!

Post a Comment

---------------------------------------
Site Meter