ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Thursday, December 22, 2005

குவாண்ட உளரல்!

இது ஒரு அவசர பதிவு. சற்று முன்னர் மோகன்தாஸ் குவாண்டம் கம்ப்யூட்டிங் பற்றி 'ஜல்லியடித்திருந்ததை' படித்தேன். நேரடியாய் இல்லாமல் 25வாசகர் பரிந்துரையின் மூலமாய் சென்று படித்தேன்.

ஜல்லி என்பது ஒரளவாவது விஷயத்துடன் பொருந்தி வந்து, ஒரு ஆழமான புரிதல் இல்லாமல் மேலோட்டமான வாதங்களையாவது முன்வைப்பது. உதாரணமாய் 'நாம இப்ப உபயோகிக்கிற கிளாசிக்கல் கம்ப்யூட்டரைப்பார்த்து சிரிக்கும் நிலைமை நிச்சயமா ஏற்படும், இந்த குவாண்டம் கம்ப்யூட்டிங்கால' என்பது ஒரு ஜல்லியடித்தல். ஏனெனில் குவாண்டம் கணணிகளால் ஒருக்காலத்திலும் இப்போதுள்ள கணணி வகைகளை பதிலீடு செய்ய முடியாது. (உதாரணமாய் 'no cloning principle' என்பதன் காரணமாய் குவாண்டம் கணணியில் 'back up' என்பதும் நகல் செய்வதும் வாய்பில்லை). வேறு காரியங்களுக்கு குவாண்டம் கணணிகள் (பயன்பாட்டுக்கு வந்தால்) பயன்படுமே ஒழிய, இன்றய வகை கணணிகள் அப்படியேதான் தொடரும் - அதன் எதிர்கால தொழில் நுட்பங்களுடன்.

மாறாக மோகன்தாஸ் எழுதியது முற்றிலும் தவறான தகவல்களுடன், ஒளரலாக மட்டுமே உள்ளது.

'குவாண்டம் கணணி' என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய வெங்கட் பதிவை ஒழுங்காய் படித்தாரா என்று தெரியவில்லை. படித்துவிட்டு பாராட்டியிருந்தால் ரொம்பவே கஷ்டம்தான். ஒழுங்காய் படித்திருக்க மாட்டார் என்று மிகவும் நம்புகிறேன். (அதனால் படிக்காமல் பாராட்டியிருந்தால் கொஞ்சம் குறைவான கஷ்டம் மட்டுமே).

மோகன்தாஸின் ஆர்வம் பாராட்டுக்கு உரியது. ஆனால் ஆர்வக்கோளாரால் அரைவேக்காட்டுடன் வந்தால் கூட பிரச்சனையில்லை. தவறான தகவல்களை தருவதும், அதை சரி பார்க்காமல் இத்தனை பேர்கள் பாராட்டுவதும் மிக மோசமான நடைமுறை. யாரையும் தர்மசங்கடப்படுத்த இதை தனிப்பதிவாய் எழுதவில்லை என்று நான் நினைத்துகொண்டாலும், அப்படி தர்மசங்கடப்பட்டாலும் கூட பிரச்சனையில்லை, இதை எழுதுவது முக்கியம் என்று நினைக்கிறேன். அதனால் அபஸ்வரத்துக்கு மன்னிக்கவும்.

பில்டப் முடிந்து மோகன்தாஸ் 'குவாண்டம் கம்ப்யூட்டிங்கல இருக்குற அட்வான்டேஜை மட்டும் சுலபமாய்' சொல்வது

//ஆனா குவாண்டம் கம்ப்யூட்டிங்ல இந்த 0 வும் 1 ம் மட்டுமில்லாம இன்னொரு ஸ்டேட்டையும் நாம சேமிக்கலாம் அதாவது ஆன் ஆப் மட்டும் இருக்குற எலக்ட்ரானிக் சிக்னலை பயன்படுத்தாம நாம குவாண்டம் சிக்னலை பயன்படுத்தினா அதில ஆன் ஆப் மட்டுமில்லாம நியூட்ரலாவும் ஒரு சிக்னலை பயன்படுத்திக்க முடியும். //

எந்த கட்டுரையை படித்து இந்த புரிதலை அடைந்தார் தெரியவில்லை. அவர் 'படித்த' கட்டுரையிலும் அப்படி சொல்லப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. (அதை நான் படிக்கவில்லை.) ஏனெனில் அவரது மேற்கோளிலிலேயே 'This arrangement is known as quantum superposition, and can be exploited to create a unit of information known as a "qubit" (or quantum bit)' என்று (சரியாக) வருகிறது. மோகன் சொல்வது போல் குவாண்டம் கணணியில் பயன்படுத்தப்போவதாக உள்ள qubit என்பது 0,1 என்பதுடன் இன்னொரு '1/2'வையும் 'நியூட்டரலாக' கொண்டது அல்ல. ஒரு தொடர்ச்சியான வாய்ப்பை கொண்டது. அதை இப்படி குண்ட்ஸான வார்த்தைகளில் சொல்லவே முடியாது. உண்மையில் அவர் சொல்வது போல் இன்னொரு மூன்றாவது வாய்ப்பை மட்டும் கொண்டது என்றால் அதனால் பெரிய பயனும் இருக்க முடியாது. இன்னும் கூடுதலான பைட்களை பயன்படுத்தி அதை நிவர்த்தி செய்ய முடியும். இதற்காக குவாண்டம் கணணி தயாரிக்க மண்டையை இத்தனை பேர் உடைக்க எந்த தேவையும் இல்லை.

க்யூபிட் என்பது 0, அல்லது 1 என்ற இரண்டு வாய்ப்புகளில் ஒன்றில் இருப்பது அல்ல, இரண்டுக்கும் நடுவிலும் இருப்பதும் அல்ல. மாறாக இரண்டிலுமே இருக்க கூடியது. இரண்டு ஸ்டேட்களிலும் இருப்பதற்குமான ஒரு நிகழ்தகவை கொண்டது. அதை ஒரு வெக்டராக மட்டும் குறிக்க முடியும். பொதுவான சிந்தனைக்கும் தர்க்கத்திற்கும் இப்படி சொல்வது அகப்பட சிறிது கடினமாய் இருக்கும் . ஆனால் குவாண்டம் இயற்பியலின் தயவில் இப்படி ஒரு சாத்தியம் சாத்தியமாகிறது. இதை விளக்குவது கடினமாயிருக்கலாம். (வெங்கட் தனது குவாண்டம் கணணி கட்டுரையில் இதை சுவாரசியமான முறையில் சொல்லியிருப்பார்.) ஆனால் 1, 2 மட்டுமில்லாமல் இன்னொரு வாய்ப்பு என்பது அப்பட்டமான உளரல்.

அடுத்த பத்தியில் வருவது இன்னும் கூடுதல் உளரல்.

//பைனரி பிட் அப்படின்னு சொல்லப்படுற இந்த 0 மற்றும் 1 யை பயன்படுத்துவதால் நமக்கு இரண்டே இரண்டு ஆப்ஷன்தான் உண்டு வேறென்ன இந்த 0 வும் 1 ம். ஆனால் இதே குவாண்டம் பிட்டைப் பயன்படுத்தினால் நமக்கு மொத்தம் நாலு அப்ஷன் கிடைக்குது அது 00, 01, 10, 11 இதை வைச்சிக்கிட்டே இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட அதிவேகமாக சிந்திக்கிற (அதாவது கணக்கு போடுற) கம்ப்யூட்டரை தயாரிக்க முடியும்.//

அதற்கு முந்தய பத்தியில் சொல்லப்பட்டதுடன் கூட பொருந்திவராமல் எழுதப்பட்டுள்ள உளரல் இது. (அவர் சொன்ன்படி பார்த்தால் மூன்று ஆப்ஷன்ஸ்தான் வரவேண்டும், நாலு எப்படி வந்தது என்று புரியவில்லை.) ஒரு பிட்டில் 0, 1 என்று இரண்டு வாய்ப்புகள் இருக்கும். இரண்டு பிட் இருந்தால் போதும் 01, 11,10, 11 என்று நாலு கிடைக்கும். இதற்கும் qubit என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. மாறாக எந்த விஷயத்தை இப்படி தவறாக புரிந்துகொண்டிருப்பார் என்று யோசித்து பார்த்தால், அது குயூபிட்கள் தரும் exponential சாத்தியம் பற்றியதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை இந்த சந்தர்ப்பத்தில் விளக்குவது எனக்கு சாத்தியமில்லை. மோகன் எழுதியது ஒளரல் என்று மட்டும் சொல்வது கடமையாகிறது.

அடுத்து வரும் வரிகளில் உள்ள உளரல் மற்றும் தகவல் இரண்டையும் முழுவதும் பிரிப்பது எனக்கு இப்போது மிகவும் கடினமான வேலை. மேலும் 'ஒளியின் வேகத்தை குறைப்பது' என்பதாக அவர் சொல்வது குறித்து எனக்கு சரியான புரிதல் இல்லை. ஆனால் //இந்த குவாண்டம் பிட்டு தான் மூன்று நிலைகளை(ஸ்டேfடை) தன்னுள் அடக்கிக்கொள்ளும் திறமை வாய்ந்தது. அது எப்படின்னா நிறுத்தி வைச்ச அந்த ஒளியில் எல்லா அணுக்களுக்கும் இருக்கும் போட்டான் என்னும் ஒரு விஷயமும் இருக்கும். இப்ப இந்த போட்டானில் உள்ள நியூக்ளியர் சுற்றில்தான் அந்த 00, 01, 10, 11 என்ற தகவலை சேகரிப்பாங்க.// என்று சொல்வது தவவல் கலப்பற்ற அப்பட்டமான உளரல்.

//இதுல என்ன அற்புதம்னா 200 இலக்க உள்ள ஒரு ப்ரைம் நம்பரையும்( 7 ஒரு ப்ரைம் நம்பர் ஏன்னா ஏழை ஒன்னாலையும் பின்னாடி அதே ஏழாலையும் மட்டும் தான் வகுக்க முடியும்.) இன்னொரு 200 டிஜிட் உள்ள இலக்க நம்பரால பெருக்குறதுங்குறது அப்படிங்கிறது இப்ப நம்ம கம்ப்யூட்டரால முடியாத விஷயம். ஆனா இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் உதவியால இத பண்ண முடியுங்கிறது மட்டுமில்லை சீக்கிரமாவும் பண்ணிவிடலாம். இதனால நாம இப்ப உபயோகித்துக்கொண்டிருக்கும் கிரிப்டோகிராபித் தத்துவங்கள் அடிபட்டுப்போகும் நாம் உபயோகப்படுத்தும் அத்தனை என்கிரிப்ஷன் முறைகளும் அடிபட்டுப்போகும். //

முற்றிலும் தவறான ஒளரல். கீழே ஆங்கிலத்தில் உள்ள வாக்கியத்தில் உள்ளது ஒழுங்காக மொழிபெயர்க்க பட்டுருக்கிறதா என்று கூட பார்க்காமல் பாராட்டுபவர்களை பார்த்து சிரிப்புதான் வருகிறது. factoring என்றால் பெருக்குவது அல்ல, பகுப்பது. நம் கைவசம் உள்ள கணணியில் இரண்டு 200 இலக்க எண்களை பெருக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நிச்சயமாய் பெருக்க முடியும். கொஞ்சம் நேரம் பிடிக்கலாம். அவ்வளவுதான். மேலும் பெருக்குவதில் பகு எண்ணாய் இருந்தால் என்ன, பகா எண்ணாய் இருந்தால் என்ன, அதனால் என்ன எழவு பிரச்சனை? என்ன தொடர்பு? (எந்த தொடர்புமில்லை.)

விஷயம் என்னவெனில், சில அதிக இலக்கம் கொண்ட எண்களை பகுப்பது என்பது நம் கைவசம் இருக்கும் கணணிகளில் சாத்தியமில்லை. சாத்தியமில்லை என்றால் அதற்கு ஆகக்கூடிய நேரம் இந்த அகிலத்தின் வாழ்நாளைவிட அதிகமாய் போகலாம். அதற்கான ஒரே காரணம் எண்களை அதன் அடிப்படை பகா எண்களாக பகுக்க, நம் கையில் உள்ள தீர்வுமுறைகள்( algorithms). தற்சமயம் தெரிந்தவரையில் நம் கையில் உள்ள தீர்வுமுறைகளால் கணணி மூலம் பகுப்பது என்பது ஒவ்வொரு சாத்தியத்தையும் வரிசையாய் (சில்வற்றை விலக்கி) சோதித்து விடை காண்பது. இதனால் ஒரு 200 இலக்க எண்ணை (அது ப்ரைம் நம்பராய் இருக்க தேவையில்லை அண்ணா!) பகுக்க இன்று தொடங்கினால், நம் 200வது பேரன் காலத்தில் கூட அது இயலாமல் போகும். ஆனால் ஒரு குவாண்டம் கணணியில் இது சாத்தியமாகும். இந்த விஷயத்தை அழகாய் ஆங்கிலத்தில் கீழே எழுதிவிட்டு மேலே தொடர்பில்லாமல் உளருவதும், அதை இத்தனை பேர் புரியாமலேயே பாராட்டுவதும் (இது விசில் கூட அல்ல நண்பர்களே) எங்கே போய் முட்டுவது என்று புரியவில்லை.

வெங்கட்டின் 'குவாண்டம் கணணிகள்' கட்டுரை மீது எனக்கு தீவிரமான ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் அதை எழுத வேண்டும் என்பது மிகவும் அவசியமானது அல்ல. தமிழில் வந்த நல்ல முயற்சியில் ஒன்று அது. அதனால் விமர்சனமின்றி பாராட்டினால் கூட தவறு இல்லை. 'அண்னாத்தே இன்னாமா அள்ளு விடரார்பா!' என்று மட்டுமே வரும் விமர்சனங்களினால் (மற்றும் சில வெறுப்பு மட்டுமே சார்ந்த விமர்சனங்களினால்) மட்டும் என் விமர்சனத்தை விரிவாய் வைக்க நினைத்து ஒரு பத்தி எழுதி அப்படியே இருக்கிறது.

வெங்கட் தனது கட்டுரையில் குவாண்டம் கணணிக்கான அவசியத்தை பற்றி எழுதிச் செல்லும்போது, கணணியின் வேகமும் அதன் சிறிய அளவும், அதிவேகத்தில் மாறும் புள்ளீயியல் காரணமாய், ஒரு கட்டத்தில் அது அணுவடிவின் அளவையும் வேகத்தையும் பெறவேண்டியதன் அவசியத்தை சொல்கிறார்(வதாக நினைவு). ஆனால் நான் அறிந்தவரை அதுவல்ல உண்மையான நெருக்கடி. மோகன்தாஸ் தவறான வாசிப்பிற்கு பின், ஆங்கிலத்தில் சரியாக மேற்கோள் காட்டியுள்ளபடி எண்களை பகுப்பதுதான் உண்மையான பிரச்சனை.

இன்றுவரை குவாண்டம் கணணிக்கான ஆராய்சிகளை நியாயப்படுத்தும் வாதமாகவும் இந்த எண்களை பகுக்கும் தீர்வுமுறை மட்டுமே முக்கியமானதாக இருக்கிறது. பீட்டர் ஷார் என்பவரால் தரப்பட்ட இந்த shor algoritham மூலமாய் ஒரு exponential நேரத்தில் எண்களை குவாண்டம் கணணியில் பகுக்க முடியும் என்பதே முக்கிய காரணம். ஷார் தீர்வுமுறை குறித்த ஒரளவு எளிய மேலோட்டமான அறிமுகத்துடன், வெங்கட் கட்டுரை குறித்தும் எழுத நினைத்ததை இறைவன், சாத்தான் மற்றும் பற்றற்ற இயற்க்கையின் அருள் இருந்தால் எதிர்காலத்தில் பார்க்கலாம். முற்றிலும் உளரலான ஒரு பதிவிற்கு 13 வாக்குகளும், பாராட்டுக்களும் வந்துள்ளதால், ஒரு கடமையாய் இந்த பதிவு எழுதப்பட்டுய்ள்ளது. விரிவாய் பின்னூட்டத்தில் ஒருவேளை பார்க்கலாம்.

Post a Comment

---------------------------------------

Thursday, December 08, 2005

பாகிஸ்தான் பூகம்பம்...

இந்திய எல்லையில் ஏற்பட்டதை விட, 'பாகிஸ்தானில் உள்ள காஷ்மீர பகுதிகளில்' ஏற்பட்ட பூகம்ப அழிவு பல மடங்கு கொடுமையானது என்று அனைவருக்கும் தெரியும். அங்கிருக்கும் அரசு அதிகார இயந்திரமும் இந்தியாவை போல திறன் வாய்ந்ததும் அல்ல. வந்துவிட்ட, இன்னும் வரபோகும் கடுங்குளிரில் தகுந்த உறைவிடம் இல்லாமல் இன்னும் எத்தனை பலிகள் ஏற்படகூடும் என்று அஞ்சிய நிலையில் சில ஆறுதலான செய்திகள் வந்துள்ளன. Quaid-e-Azam Universityயின் இயற்பியல் துறையை சேர்ந்தவர்கள் செய்துள்ள மிக தீவிரமான மீட்புபணிகள் குறித்த அறிக்கைகள் மூன்றூ எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது. யாரேனும் பெற விரும்பினால் மின்னஞ்சலில் அனுப்ப முடியும். மீட்பு பணிகளுக்கு உதவும் எண்ணம் உள்ளவர்கள்,இந்த பதிவின் முடிவில் உள்ள வழிமுறையை காணவும். மீண்டும் சொல்வதானால் ஒரு அரசாங்கத்திடம் செல்வதை விட இங்கே அளிப்பதன் மூலம் உங்கள் பணம் முழுமையாய் மீட்பு பணிக்கு மட்டுமே செலவிடப்படும். இதல் ஈடுபடும் அனைவரும் அதற்கான தீவிரக் கடப்பாடு உடையவர்கள். சில காரணக்களால், இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணி குறித்த அறிக்கைகளை இங்கே வெளியிடவில்லை. மின்னஞ்சலில் தரமுடியும். நன்றி.


பாகிஸ்தான் - இந்திய பூகம்பம் குறித்த முந்தய பதிவு.


1. Please make CHECKS payable to " EAF - EARTHQUAKE RELIEF FUND "

2. Please PRINT OUT, SIGN and MAIL the following form, along with yourcheck :
Enclosed is a donation of ________ to the EAF - Earthquake Relief Fund. I understand that this money will be used solely for the purpose ofpurchasing and distributing earthquake relief and rehabilitation suppliesin Pakistan.

Name (please print):_________________________________________

Signature: _________________________________________________ Address :

3. Please mail your check and this form to:
Eqbal Ahmad Foundation
P.O. Box 222
Princeton, NJ 08542
US


The Eqbal Ahmad Foundation is a tax-exempt organization under section501(c)(3) of the internal revenue code. Therefore, your donation is taxdeductible. If you wish to receive a letter acknowledging your donationfor tax purposes, please include your mailing address. For tax purposes, all donation over $250 must include your name andmailing address. Should you have any questions about how to make or send a donation, pleasecontact the Foundation's Vice President, Zia Mian, at zia@princeton.edu

INSTRUCTIONS FOR DEPOSIT IN PAKISTAN: Please make your cheque out to:Eqbal Ahmad Memorial Education Foundation and mail to: Pervez Hoodbhoy,Professor of Physics, Quaid-e-Azam University, Islamabad 45320, Pakistan.

Post a Comment

---------------------------------------

Tuesday, December 06, 2005

சட்டி சுட்டதடா!

(சென்ற வாரத்திற்கு முந்தய வார வெள்ளி அன்று எழுதத் தொடங்கியது. பாதி எழுதி முழுவதும் முடிக்க இயலாததால், ஊறவைத்து இன்று முடித்து உள்ளிடுகிறேன். அதற்குள் பிரச்சனைகள் பழசாய் போயிருக்கலாம். பழசை மறக்காதவர்களை மனதில் கொண்டு...)


1. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மழையில் பல கிராமங்கள் முற்றிலுமாக மூழ்கியிருக்கும் காட்சிகளை தொலைகாட்சியில் மட்டும் பார்த்துகொண்டிருக்கிறேன். அது குறித்து பதற்றம் கொள்வதாக நினைத்துகொண்டிருக்கும் போது, வேறு ஒரு ஊரில் இருக்கும் பெற்றோரின் வீட்டு வாசலில் உள்ள தண்ணீர் எந்நேரமும் உள்ளே வரகூடிய செய்தி மட்டுமே, நிலைமையின் உக்கிரத்தை கொஞ்சமாவது உணர்த்துவதாய் உள்ளது. மனம் என்னவோ திருமாவளவன் மக்களின் துயரத்தை முன்வைத்து கேட்கும் நேர்மையின்மை நிறைந்த கேள்வியால்தான் அதிகம் பாதிப்படைகிறது. நான் அறிந்து இதுவரை ஒரு ஐந்து இடங்களிலாவது கேட்டிருக்கிறார். முதலில் சுகாசினியை பார்த்து கேட்டார். இப்போது சற்று தாமதமாகவேனும் இந்த கலாச்சார பாசிசம் பற்றி முணுமுணுக்க துணிந்துள்ள பத்திரிகையாளர்களை பார்த்து கேட்கிறார், " நாட்டில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு அவதியுறும்போது, அது பற்றிய கவலை இல்லாமல் நீங்கள் குஷ்பு சுகாசினிக்கு ஆதரவாக கூடியிருக்கிறீர்களே!".

திருமா அண்மையில் உச்சரித்து அறியாத, சில வருடங்கள் முன்பு திருமா உதிர்க்கும் எல்லா வாக்கியத்திலும் ஒரு முறையாவது இடம்பெறும், 'புரட்சியாளர் அம்பேத்கார்' வேறு சந்தர்ப்பத்தில் சொன்னதைத்தான் திருமாவிற்கு சொல்லவேண்டும், "சுயநலமாய் சிந்திக்கும் போது அறிவு வேலை செய்யாது!". புத்திசாலித்தனமாய் பேசிவிட்டது போல் தனக்கு மட்டும் தோற்றமளிக்கும், ஆனால் மற்ற அனைவருக்கும் அதன் முட்டாள்தனம் புரியும். எல்லோரும் திருமாவளவன் ராமதாஸ் கூட்டத்தை பார்த்து கேட்கவேண்டிய ஒரு கேள்வி! மழையில் சென்னை நகரம் தத்தளித்த போது சுகாசினியின் பேச்சை கண்டித்து நாடு முழுக்க துடப்பக்கட்டை, செருப்பு ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி, கொம்பு படம் போட்டு சுகாசினியின் படத்தை வேலைமெனெக்கிட்டு அச்சடித்து பின் எரித்து மறியல் செய்து, குஷ்பு நீதி மன்றம் செல்லும் போதும் ஆர்பாட்டம் செய்துவிட்டு சுகாசினியை பார்த்து கேட்கிறார். ஏதோ யோசனை இல்லாமல் ஒருமுறை பேசலாம். மீண்டும் சன் டீவியிலும், இரண்டு நாட்கள் கழித்து வெள்ளத்தில் கிராமங்கள் மூழ்கி கொண்டிருக்கும் போது, அது குறித்து ஒரு வார்த்தை பேசாமல் தமிழ் பண்பாட்டை பாதுகாக்க ஒரு பால்தாக்கரே பாணி பண்பாட்டு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசும் பாசிஸ்டுகள் நடுவேயும், இப்படி ஒரு கேள்வியை கேட்க திருமாவிற்கு எவ்வளவு சுரணையின்மை தேவைப்படும்! (ஆனால் பால்தாக்கரே இப்படி போலியாய் கேட்கவும் மாட்டார். "நானும் பெண்ணியவாதிதான்" என்று திருமா போல பொய் சொல்லவும் மாட்டார்.) திருமா பண்பாட்டு இயக்கத்தை துவக்கி வைத்து உதிர்த்த பல முத்துக்களில் இரண்டு,

" சுகாசினி மட்டுமில்லாமல், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போரும் கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது"

"தமிழ்நாடாய் இருக்க துடப்பத்தையும், செருப்பையும் காட்டினார்கள், ஈழத்தில் துப்பாக்கியால் பதில் சொல்லியிருப்பார்கள்"

அடுத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றியும், அதிகாரம் உண்மையிலேயே கையில் இருந்தால் என்ன வெல்லாம் செய்யக் கூடும் என்பது பற்றிய பகிரங்கமான ஒப்புதல் இது. இது ஏதோ வாய் தவறி 'ஒரு பேச்சுக்காக' சொன்னதாக எடுக்க முடியாது. தொடர்ந்து திருமா இந்தவகையிலேயேதான் பேசி வருகிறார். ஏற்கனவே 'சுகாசினியை நடமாடவிடக் கூடாது' என்று சொல்லியிருக்கிறார்.
2. எழுதப் புகுந்தாலே விரக்தியும் சோர்வும் வந்து சேர்வதாக கற்பித்து கொண்டிருக்கும் சமயத்தில், சன் டீவி பார்பதை மட்டும் தவிர்க்க இயலாமல் போகும் பழக்க தோஷத்தின் போலித்தனம் எதை தின்றால் தெளியும் என்று தெரியவில்லை. எதையாவது இங்கே தட்டினால் மட்டுமே ஒரு இளைப்பாறுதல் கிடைக்கும் போல் தெரிவதால் இந்த பதிவு. எழுதுவதால் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு, எனக்கு பிடித்த விஷயமாய், ஜெயஸ்ரீ கேட்டுகொண்டபடி தலைவரின் 'என்றென்றும்' நிகழ்ச்சி பற்றி எழுத முயன்றால், வாக்கியங்கள் எல்லாம் சொத சொதவென ஊறிபோய் பிறக்கிறது. நடந்த மறுநாளே சுட சுட எழுதியிருக்க வேண்டும். இப்போது எனக்கே போரடிக்கிறது. நடந்த/நடக்கும் அசிங்கமான சம்பவங்களை முன்வைத்து எல்லாவற்றையும் சேர்த்து நீளமாய் எழுத நினைப்பதை வழக்கம் போல எழுத முடியாமலே போய்விடுமோ என்று தோன்றுவதால், அரிப்பை சொரிந்து கொள்ளவாவது வேண்டும் என்ற உந்துலில்.

கருத்துரிமையை தமிழ்நாட்டு பாசிஸ்டுகளிடமிருந்து மீட்டெடுக்க, என் ராம் தலைமையில் தொடங்கப் பட்டுள்ள முயற்சி பற்றி நிறையவே விமர்சனம் இருக்கும். ஆனால் அதை சொல்ல கூடிய நிலைமையில் சூழல் இல்லை. ஒருவேளை ஜெயலலிதா என்.ராம் மற்றும் இந்து கும்பல் மீது தாக்குதல் தொடுத்து, அதனால் 'பத்திரிகா தர்ம'த்திற்கு கேடு விளைய கூடுமென்றால், 'நீ மட்டும் ரொம்ப யோக்கியமா?' என்ற கேள்வியை, வாட்ச் பண்ணி வைத்ததையெல்லாம் முன்வைத்து கேட்கமுடியும். இப்போது இருக்கும் அவல நிலையில் என் ராம் மற்றும் சிபிஐ(எம்) சார்ந்தவர்களின் மெல்லியதாகவாவது ஒலிக்கும் குரலை நிபந்தனையின்றி ஆதரிக்க மட்டுமே முடிகிறது. யாராவது பேசவேண்டுமே என்று மட்டுமே தோன்றுகிறது. மேலும் இவையெல்லாம் ஒற்றை வார்த்தைகள் தரும் சட்டகத்தில் அடங்க கூடியதும் அல்ல. ஈழப்பிரச்சனையில் அயோக்கியத்தனமாய் எழுதும் இந்துப் பத்திரிகைதான் குஜராத் கலவரம் பற்றி பல உண்மைகளை வெளிகொணர்ந்தது, பல முக்கிய கட்டுரைகளை வெளியிட்டது.

ஞாநி தன் வழக்கமான நேர்மையுடன் எழுதியுள்ளார். வலையில், நான் வேறு விஷயங்களில் மிகவும் எதிர்க்கும் முகமுடி எழுதியது கூட எனக்கு பெருமளவு ஒப்புதலாக, ஆறுதலாகத்தான் இருந்தது. இவ்வாறு அவர் எழுதுவதற்கு பின்னால் இருக்கும் வேறு அரசியல் குறித்து பேசும் திராணி இல்லை. அப்படி ஒரு அரசியல் இருக்கலாம். ஆனால் அது மட்டும்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது சிலருக்கு சனி நீராட உதவுமே ஒழிய, பிரச்சனையின் கால்தடத்தை புரிந்துகொள்ளக் கூட உதவாது. திருமா/பாமக பற்றி வெறுப்பு வெளிப்படையாய் தெரியும் மொழியில் அவர் ஏற்கனவே எழுதியிருந்தாலும், அதன் நீட்சியாக மட்டும் அவரது பதிவை என்னால் பார்க்க முடியவில்லை. இப்போது பல கட்டுரைகளில் மேடை டீவி பேச்சுகளில் தோலுரிந்து போன பெரும்பான்மை பெரியாரிஸ்டுகளையும் விட, கற்பு குறித்து முற்போக்கான கருத்துக்களை அவர் உண்மையிலேயே கொண்டிருப்பதும் ஒரு அடிப்படை காரணமாய் எனக்கு படுகிறது. ஏனெனில் ஒரு குருமூர்த்தியால் திருமாவை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் கூட இப்படி எழுத முடியாது.

சிலர் திடீரென 'முற்போக்கு வேடம்' போடுவதையும், இவர்கள் பேசுவதன் பின்னுள்ள் அரசியலையும் கட்டுடைக்கும் முன்னால் இந்த வாய்ப்பை அவர்களுக்கு கொடுத்தவர்களை பற்றி பேசுவதல்லவா இன்னும் முக்கியமானது. அரசியல் பேரலையில் பாசிஸ்டாய் உருமாறிப்போன திருமாவளவன் மட்டுமில்லாது, ஒரு பெரிய பட்டியலில் அடங்கும் எல்லா பெரியாரிஸ்டுகளும் அல்லவா இந்த பொன்மேடையமைத்து கொடுத்திருக்கிறார்கள். ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலாவது நாம் உச்சி முகர்ந்திருக்க கூடிய அறிவுமதி, பாமரனின் எழுத்துக்கள் எல்லாம் இத்தனை கேவலமாய் இருக்கக் கூடும் என்றால், அவர்களை விட ஆரோக்கியமாய் இருப்பவர்களின் மூலங்களை நோண்டுவதில் நியாயம் மட்டுமில்லாது அறிவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
3. NDTVயில் நடந்த கலந்துரையாடலை என்னால் பார்க்க முடியவில்லை. சாருஹாஸன் அருமையாய் பேசியதாய் கேள்விப்பட்டேன். அதற்கு எதிர்வினையாய் சன் நியூஸ் விவாதம் என்ற பெயரில் ஒரு அசிங்கத்தை நடத்தியதை, என்னால் முடிந்தவரை பாதிக்கு மேல் பார்த்தேன். அரை மணி நேரத்திற்கு மேல் அதை தாங்கிகொள்ள முடியவில்லை.

நடு நிலமை என்பதை பாவனை செய்ய குஷ்பு/சுகாசினிக்கு ஆதரவாய் பேசும் சுதா ராமலிங்கம், அஜிதா என்று இரு பெண்களை அழைத்திருந்தனர். இருவரும் (என்னை பொறுத்தவரையில்) பலவீனமான முறையில் தங்கள் கருத்தை முன்வைத்தனர், அல்லது பல ஆண் தடிமாடுகள் போட்ட காட்டுக் கத்தலில் பலவீனமாகவே தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது. கொஞ்சம் பலம் பொருந்திய தர்க்கத்துடன் பேச முனைந்த போதெல்லாம், மற்றவர்கள் இடைமறித்து கூச்சலிட்டத்தில் அமுங்கி போனது. பேச கூட விடாமல் தன் 'கருத்தை' அழுத்தி அழுத்தி கத்தியதில் முதலிடம் வகித்தவர் விழுந்த நட்சத்திரம் திருமாவளவன். குறைந்த பட்ச சகிப்புதன்மையை ஒரு தொலைக்காட்சியில் வரும் உரையாடலில் கூட காட்ட இயலாதவராய் இருந்தார். அதற்கு பிறகு வருவோம்.

அஜிதா அவர்கள் கொஞ்சம் கூட திருமா மீது வெறுப்பு கலக்காமல் பேசியது என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொருமுறையும் திருமாவை (மட்டும்) 'நண்பர் திருமாவளவன்' என்று விளித்தார். சொல்வதை விளக்க முயன்ற போதெல்லாம், திருமாவுக்கு விளங்கும் வகையில் தலித் சார்ந்த ஒரு இணை உதாரணத்தை தர முயன்றார். ஆனால் அதெல்லாம் மண்டையில் ஏறாத ஒரு போதையில் திருமா இருந்தது தெரிந்தது. எல்லாவற்றையும் அராஜகமான முறையிலேயே எதிர்கொண்டார்.

இது தவிர இன்னும் இரண்டு பெண்கள். ஒருவர் தீர்க்கமான குங்கும போட்டுடன் ஒரு சாமியாரினியோ என்று ஐயம் கொள்ளும் வகையில் வந்திருந்தார். ஆனால் மருத்துவர் என்று பெயர் போட்டார்கள். (குமரி அனந்தன் மகள் என்று பின்னால் அறிந்தேன்.) கற்பின் பெருமை பற்றியும், அதன் காரணமாக மட்டும் இந்தியநாட்டின்/இந்திய கலாச்சாரத்தின் (கவனிக்கவும், தமிழ்நாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை) பெருமை பற்றியும் நீண்ட விளக்கம் கொடுத்தார். "விவேகானந்தர் வெளிநாடுகளுக்கு சென்று பார்த்தபின், 'இன்னும் இந்தியாவை முன்பு போலவே போற்றுகிறீர்களா?' என்று ஒருவர் கேட்டபோது அவர் சொன்னார், 'முன்பு இந்தியாவை போற்றினேன், இப்போது வணங்குகிறேன்' " என்று தொடங்கி, பிஜேபி கட்சி உறுப்பினரிடம் கேட்க கூடிய ஒரு சிற்றுரையை அவர் நிகழ்த்திய போது, அஜிதாவின் பேச்சின் இடையே புகுந்து பேசவிடாமல் காட்டு கூச்சல் போட்ட திருமா அதை கேட்டவிதமும், காட்டிய மௌனமும் சம்மதத்திற்கான அறிகுறியாகவே இருந்தது. (அதில் ஆச்சரியமடைய ஏதுமில்லை, ஏற்கனவே குருமூர்த்தி மற்றும் திருமா இருவரும் எழுதிய ஒத்த வரிகளை ஒருவர் பட்டியலிட்டுருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தவரை திருமா குருமூர்த்தியையும் மிஞ்சிவிட்டதாகவே தோன்றுகிறது. அதற்கு இன்னொரு பதிவில் வருவோம்.)

இன்னொரு பெண் திராவிடர்கழக அருள் மொழி. விவாதத்தின் அபத்தக் காமெடி ட்ராக் இவருடையது. அவருடய நிலைபாட்டின் oxymoron தன்மைகளை புரிந்துகொள்ள, தர்க்கத்தின் எல்லா முரணியல் தன்மைகளையும் பிரயோகிக்க வேண்டியிருக்கும். தெளிவாக பெரியார் வழியில் கற்பை நிராகரிப்பதாகவும், பெண்களுக்கான பாலியல் தேர்வை ஆதரிப்பதுமாக சொன்னார். ஆனால் அதை செய்யும் பெண் அதற்கான முதிர்ச்சியையும் அறிவையும் பெறவேண்டும் என்று கூடுதலாக சொன்னார். அதாவது கிட்டத்தட்ட குஷ்பு சொன்னதுதான், ஆனால் அதற்கான வயது ஆகவேண்டும் என்கிறார். (அது என்ன முதிர்ச்சி, அதை பெற்றுவிட்டதாக எப்போது கருத முடியும் என்ற சிக்கலான கேள்விகளுக்குள் போகாமல், குறிப்பிட்ட வயதாகவேண்டும் என்பதாக கொள்கிறேன்.) அது என்ன வயது என்று அவர் சொல்லவில்லை என்பதால் ஒரு பேச்சுக்கு 25 என்று வைத்துகொண்டால், 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரு பெண் உறவு கொள்ளலாம், கன்னிதனமையை பாதுகாக்க தேவையில்லை, அதாவது குஷ்புவின் கருத்தைத்தான் சொல்கிறார், ஆனால் அதற்கு வயது நிபந்தனை மட்டும் விதிப்பதாக கொள்ளலாம். அப்படி சொன்னவர் மிக அயோக்கியதனமாய் பேசிய, 'ஊர் மேய்வது' என்ற வார்த்தைகளை பயன்படுத்தி, நடிகைகள் பெண்ணியவாதிகள் உள்ளிட்ட பல பெண்களை ஒருமையில் மீண்டும் மீண்டும் பேசிய ஆண் கூட்டத்துடன் தன்னை அடையாளம் கண்டு கொண்டார். இந்த போராட்டம் நியாயமானது என்கிறார். 'ஒருவேளை தங்கருக்காகத்தான் இது தொடங்கியது என்றால், அதில் தவறு ஒன்றும் இல்லை. யாராவது ஒருவர் தங்கருக்கு ஆதரவாக பேசவேண்டும் அல்லவா?' என்றார். அதாவது தங்கர் ஆதரிக்கப் படவேண்டியவர். நடிகைகளை பற்றி சொன்னதையோ, சொல்லாமல் வெளிவந்ததையோ, சொல்லாமலேயே மன்னிப்பு கேட்டதயோ விட்டுவிடுவோம். "நமது சமுதாயத்தில் ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். ஆனால் பெண்களால் இப்படித்தான் வாழ முடியும் என்பதைத்தான் எனது திரைப்படங்களில் நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். தமிழ்ப் பெண்களுக்கென கலாச்சார¬ம், ஒழுக்க நெறியும் உண்டு." என்று பேசிய தங்கர் ஆதரிக்க வேண்டியவர். வன்முறை கலந்த ஒரு தெருப்போராட்டத்தை நடத்தும் இரண்டு கட்சிகளை தன் பின்னால் வைத்திருக்கும் தங்கர் பாவம், ஆதரவே இல்லாமால் தவிக்கிறார். அவருக்கு அதரவு தருவது என்பது செருப்பு துடப்பக்கட்டை முட்டை தக்காளியுடன் குஷ்பு மீது தாக்குதல் நடத்துவது. சகோதரி அருள்மொழி தனது பெண்ணிய பெரியாரிய பார்வையில் புல்லரிக்க வைத்துவிட்டார். மேலும் பழ.கருப்பைய்யா, சீமான், திருமா இவர்கள் மிக கேவலமாய் பேசிய பேச்சுகளை எல்லாம் அவர் மௌனத்தால் ஒப்புகொண்டதாக(குறிந்த பட்சம் சகித்து கொண்டதாக)வே கொள்ளவேண்டும். மௌனமாய் இருந்தது மட்டுமில்லாது சுகாசினியின் 'தமிழ் வெறுப்பு' பற்றி பேசும் போது, கூட்டத்துடன் அவரும் ஒரு கோவிந்தா போடுவதை பார்த்தால் அந்த முடிவுக்குதான் வரமுடியும். ஆக பார்பன, வட இந்திய எதிர்ப்பு என்பதை மூர்க்கமான வெறுப்பாய் கொள்ளும்போது, ஆணாதிக்கம் எவ்வளவு கேவலமாய் வெளிப்பட்டாலும் இவர்களுக்கு பிரச்சனையில்லை.

நிகழ்சியை நான் பார்க்கத் தொடங்கிய போது, 'மக்கள் தாங்களாகவே வெகுண்டெழுந்து தெருவில் இறங்கி போராட்டத்தில் குதித்தார்கள், இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை' என்று திருமா அண்டப்புளுகு புளுகிக் கொண்டிருந்தார். வழக்கு தொடர்ந்த நபர்களின் சார்புகள், 'போரட்டம் தொடரும்' என்று மீண்டும் மீண்டும் திருமா, ராமதாஸ் விட்ட அறிக்கைகள், அதைவிட 'மக்கள் இப்படி எத்தனை பிரச்சனைக்கு கொதித்தெழுவார்கள்' என்று எந்த மரமண்டையும் கேட்கும் லாஜிக்கலான கேள்விகளை எல்லாம் விட்டு விட்டு, என் யோசனைக்கு வருவது பாப்பாபட்டியும் கீரிப்பட்டியும்தான். 'ஓவ்வொரு தேர்தலிலும் தலித்கள் தாங்களாகவேதான் முன்வந்து போட்டியிடாமல் இருக்கிறார்கள். போட்டியிட்டவ்ர்களும் தாங்களாகவேதான் ராஜினாமா செய்தார்கள்' என்ற தேவரிய புளுகிற்கு இணையான வேறு ஒரு புளுகை சுட்ட வேண்டுமானால் அது திருமா இங்கே சொல்வதுதான்.

நக்கீரன் கோபால், "தன்னைப் போல் பிறரை நேசி என்று சொல்வார்கள். குஷ்பு தன்னைப் போல் பிறரை யோசி என்பதாக பேசியிருக்கிறார்" என்று தொடங்க, பழ. கருப்பய்யா என்ற தடிமாடு குலுங்கி குலுங்கி சிரித்தது. வேறு சிரிப்பொலிகளும் கேட்டது. ஆனால் திருமாவும் சிரித்தாரா அல்லது எப்படி சிரித்தார் என்பதையும், அருள்மொழியின் முகபாவத்தையும் கேமிரா கோணம் காரணமாய் பார்க்க முடியவில்லை. முகபாவம் எப்படியிருந்தாலும் ஒரு பெண்ணின் கருத்தை எதிர்கொள்ள, நிலவும் மதிப்பீடுகளின் பிண்ணணியில் அவர் சொந்த வாழ்க்கையை தாக்குவதன் மூலம் எதிர்கொள்வது குறித்து, 'கற்பை நிராகரிக்கும்' அருள்மொழிக்கு குறைந்த பட்ச மாற்றுக் கருத்தாய் சொல்லக் கூட எதுவுமில்லை என்று தெரிகிறது. மற்றபடி கோபால் பேசியது பற்றி சொல்ல என்ன இருக்கிறது! குஷ்பு பிரச்சனை ஒரளவு அணைந்துபோனபின் ஒரு நக்கீரன் வாங்கி படித்தேன். நடிகை ஒருவரின் பிண்னணி வாழ்க்கை பற்றி ஒரு சுக்கு காப்பித்தனமான ஒரு தொடர். நடிகையின் படத்தில் முகமுடி போட்டு முகத்தை மறைந்தாலும், படிக்கும் அனைவருக்கும் அவர் யார் என்று தெளிவாக தெரியும். (ஒரு ஆணாய் இருக்க கூடிய) எழுதுபவரின் பெயர் கண்ணகி. (இவர்களே எழுதியிருக்க கூடிய) ஒரு வாசக கடிதம் , ' தமிழ் பெண்கள் கற்பை கேவலப்படுத்தினாலும், குஷ்புவின் புடவை அணிந்த படத்தை போட்டு நக்கீரன் கண்ணியம் காத்திருப்பதாக' சொல்கிறது. ஆனால் அதே பத்திரிகையில் ஒரு நடிகையின் சொந்த வாழ்க்கையை முன்வைத்து ஆபாசத்தொடர், இன்னொரு பக்கத்தில் நவ்யா நாயர் குளிக்கும் படத்தை போட்டு, 'தங்கர் விவாகாரத்துக்கு பிறகு ஃபேமஸ் ஆகிவிட்டதாய்' கமெண்ட்.

இதில் இன்னொரு ஜோக் என்னவெனில், வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமியின் பேட்டி ஒன்றின் முடிவில், 'இவ்வாறு பேசிய முத்துலெட்சுமியின் கையில் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்ற புத்தகம் இருந்தது', என்று நிறைவுறுகிறது. பதிவிரதை தன்மைகளின் எல்லா கற்பிதங்களையும் உடைத்து பேசும் பெரியாரின் புத்தகத்திற்கும், வீரப்பனை கடவுளாய் பேசும் முத்துலெட்சுமியின் பேச்சுக்கும், அவர் (நக்கீரனுக்கு உவப்பானதாய் முன்வைக்கும்) தமிழ் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை 'கற்பின் மேன்மையை பேசும் பத்திரிகையில், சம்பந்தமே இல்லாத இடத்தில் பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' பற்றிய குறிப்பு. இவர்களை எல்லாம் ஏதோ மெண்டல்கள் என்று அலட்சியபடுத்த முடியாது. (காக்கைப் பாடினியாரை அப்படி அலட்சியப் படுத்தலாம்.) தமிழ் சமுதாயத்தின் மிக பெரும் சிந்தனைக்கான வெளியை இவர்கள் ஆக்கரமித்திருக்கிறார்கள்.

பழ. கருப்பய்யா பேசியதை கேட்கவேண்டுமானால், கிராமத்தில் தின்று கொழுத்த ஏதேனும் ஒரு ஆண்டையை பிடித்து இந்த பிரச்சனை பற்றி கருத்து கேட்டால் போதும். ஒருவேளை கொஞ்சம் முற்போக்காய் ஏதேனும் கருத்து கிடைக்கலாம். சும்மா மிகைபடுத்துவதற்காக சொல்லவில்லை. ஏனெனில் பழசு தீவிர தமிழ் தேசியவாதி, மற்றும் பண்பாட்டு காப்பாளர். அதனால் அவர் ஒரு கிராமத்து ஆண்டையைவிட இன்னும் கேவலமாய் பேச எல்லா சாத்தியமும் உண்டு. நடிகைகளை, குஷ்பு பேசியதை, ஒரு இடத்தில் பெண்ணியவாதிகளை 'ஊர் மேய்வது' போன்ற வார்த்தைகளை போட்டு அவர் பேசியதல்ல பெரிய விஷயம். அதையே கிட்டதட்ட திருமாவும் பேசியதுதான் விசேஷம்.

திருமாவளவன் பேச்சுக்களை செய்தியாய்/பேட்டியாய்/கட்டுரையாய் பலமுறை படித்திருந்தாலும், அவர் பேட்டியை நேரடியாய் சில ஆண்டுகளுக்கு முன்னால் (பாமக கூட்டுக்கு எல்லாம் முன்னால்) விண் டீவியில் கேட்க நேர்ந்தது. மிக நிதானமாக, பொறுமையான குரலில், முதிர்ச்சியுடன் பேட்டி அளித்திருப்பார். அதற்கு பிறகு இப்போதுதான் ஒளி/ஒலி வடிவில் அவர் பேச்சை கேட்கிறேன். இப்போது அவர் திடீரென பால்தாக்கரேயாக மாறிவிட்டால் கூட பெரிய பிரச்சனையில்லை. ஆனால் அவர் இன்றும் ஒடுக்கப் பட்ட மக்களின் குரலாக, ஒரு திருவுருவாக திகழ்கிறார். சென்னைச் சுவர்களில் எல்லாம் திருமாவளவனின் உருவம். இதற்கு முன் எந்த தலித் தலைவரும் தமிழக அரசியலில் அடைய முடியாத இடத்தை பிடித்திருக்கிறார். இப்படி பட்ட முகத்துடன் அவர் பாசிசமாய் பேசுவதென்பதுதான் தாங்கக் கூடியதாக இல்லாத சிக்கல்களை உருவாக்குகிறது.

சரத்குமார் மீண்டும் மீண்டும் குஷ்பு பேசியது 'ஒரு அத்துமீறல்' என்பதாக குறிப்பிட்டு கொண்டிருந்தார். தமிழ்நாடெங்கும் "அடங்க மறுப்போம், அத்துமீறுவோம்' என்று போஸ்டர் அடிக்க காரணமான தலைவனின் முகத்தில், அந்த வார்த்தை எதாவது ஒரு உணர்சியை தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறதா என்று கவனித்தேன். அந்த வார்த்தையின் அரசியல்ரீதியான பிரச்சனையே அவர் மண்டையில் ஏறியதாக தெரியவில்லை.

அஜிதா மிக மென்மையான குரலில், ஒரு வேண்டுகோளாய் திருமாவிடம் பெண்ணியவாதிகளை பற்றி கேவலமாய் பேசவேண்டாம் என்று கேட்கிறார். அப்படிப்பட்ட மென்மையான வேண்டுகோளை ஒரு ஒதுக்கப்பட்ட சமுதாயத்தை பிரதிபலிக்கும் ஒருவர், எப்படி இத்தனை அராஜகமாய் ஒதுக்க முடியும் என்பது இன்னமும் புரியவில்லை. மித மிஞ்சிய (அரசியல்/அதிகார) போதையின் காரணமாய் ஏற்படும் வெறியில் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. ('பெண்ணியம் பேசுபவர்கள் எப்படியும் அலையட்டும், மற்றவர்களிடன் அதை பிரசாரம் செய்யவேண்டாம்' என்பது போன்ற தொனியில் திருமாவின் கருத்து இருந்ததாய் நினைவு.) அஜிதா வேண்டுகோள், பெண்ணிய வாதிகளின் செயல்பாடுகள் எல்லாம் ஒரு பாலியல் வேட்கையால் மட்டுமே உந்தப்படுவதாக சொல்வது நியாயமாகாது, அப்படிப்பட்ட கருத்துக்களை 'நண்பர் திருமாவளவன்' தயவு செய்து வெளியிடவேண்டாம் என்பதாக இருந்தது. தான் ஒரு மேட்டிமை சூழலில் இருப்பதாலும், திருமா ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாய் இருப்பதாலும் அஜிதா தேவையற்ற ஒரு மென்மையுடன் அந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். அந்த கருத்தை முழுமையாய் கூட சொல்லவிடாமல், பெண்ணியவாதிகளை எல்லாம் மிக மோசமாய் காய்ந்து தள்ளிவிட்டு, முடிவில் திருமா சொன்னார்,"நாங்களும் பெண்ணியவாதிகள்தான்!".

இந்த கலந்துரையாடலில் பழ.கருப்பைய்யாவின் பேச்சே மிக ஆபாசமானதாக பலருக்கு தோன்றகூடும். என்னை பழசின் பேச்சு அத்தனை பாதிக்கவில்லை.

நம் சமுதாயத்தின் பொது புத்தி, அதன் நார்மலான சிந்தனையோட்டமே தலித் மக்களின் இருப்புக்கு எதிரானவை. தலித் சார்பான சிந்தனைகளை கேவலபடுத்தும் சொல்லாடல்களை கொண்டவை. ஆரோக்கியமாய் தோற்றமளிக்கும் பார்வை என்று சொல்லப்படுவது உள்ளே மிகவும் அழுகிபோனவை. மிக எளிதாக பொது மதிப்பீட்டை வைத்து ஒரு தலித்தை ஒரு பொது மேடையில் குற்றமுள்ளவராய், குறைபாடு உள்ளவராய் உணரவைத்து கேவலப்படுத்த முடியும். அப்படிப்பட்ட யதார்த்தத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர், அதே போன்ற யதார்த்தம் பொருந்த கூடிய பெண்ணியவாதிகளை பற்றி, 'கேவலமாய் பேசவேண்டாம்' என்ற மென்மையான ஒரு வேண்டுகோளை மிதிப்பதுதான் உச்சக் கட்ட ஆபாசமாய் தெரிகிறது. திருமா இனி ஒரு காலத்திலும் திரும்பி வருவார் என்று எனக்கு நம்பிக்கையில்லை.

இது தவிர சில நகைச்சுவைகள் உண்டு. இயக்குனர் சீமான் சுகாசினி 'கிழித்துவிடுவேன்' என்றதை 'அது எவ்வளவு பெரிய வன்முறை' என்பதாக பேசிக்கொண்டே போனார். ஒரு பெண்ணின் மீது முப்பது வேறு வேறு இடங்களில் வழக்கு தொடுத்து இழுத்தடித்து, செயல்படவிடாமல் தடுப்பதும், ஒடிப்போக சொல்வதும் வன்முறை இல்லை, 'நானாக இருந்தால் கிழித்திருப்பேன்' (அதன் அர்த்தம் அனைவருக்கும் தெரியும்) என்று சொல்வது வன்முறையாம். சரத்குமார் இன்னும் ஒரு படி மேலே போனார். 'கோர்டில் சந்தித்து கொள்கிறேன்' என்று சுகாசினி இரவு பத்துமணிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியது வன்முறையாம். இதில் இன்னொரு ஆபாசம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர்கள்/நடுவர்கள் என்று இரு சன் டீவி வேலையாட்கள். அவர்களும் சேர்ந்து மற்ற ஆண்தடிமாடுகளுடன் சேர்ந்து கத்தியது இருக்கட்டும். கடைசியாக முடிவுரை வாசிக்கும் போது, குற்றப்பட்டியலில், எஸ். எம்.ஸ் அனுப்பியதையும் மற்ற குற்றத்துடன் ஒன்றாக சேர்த்துகொண்டார்கள்.

சரத்குமார் சொன்ன ஒரு விஷயத்தை பார்வையாளர்கள் பலர் கவனித்து இருக்க மாட்டார்கள். தனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் குற்றப் பிண்ணணியை விளக்கும்போது, "நான் ஒரு படிச்சவன், எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு, ஒரு கம்யூனிட்டி பேக்கிரவுண்ட் இருக்கு.." என்று சொல்லிகொண்டு போனார். வாய் தவறி சொல்லிவிட்டது புரிந்ததோ என்னவோ, அடுத்தமுறை சொல்லவில்லை. "கம்யூனிடி பேக்கிரவுண்ட்" என்பது ஜாதியை குறிக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அங்கே கூடியிருந்த பெரும்பான்மையானவர்க்கு ஒரு கம்யூனிடி பேக்கிரவுண்ட் உண்டு. அது இல்லாத பெண்களின் மென்மையான வேண்டுகோள் நிராகரிக்கப்படும். கம்யூனிடி பேக்கிரவுண்ட் உள்ளவ்ர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி "கோர்டில் பார்த்துகொள்கிறேன்" என்று சொன்னால் அது கிரிமினல் குற்றம். அந்த கம்யூனிடி பேக்கிரவுண்ட் இல்லாதவர்கள், அல்லது கம்யூனிடி பேக்ரவுண்டுக்கு ஒத்து வராமல் தங்கள் கருத்தை பேசினாலோ, தங்கள் மீதான அவதுறுக்கு சற்று அளவுக்கு மீறி குதித்தாலோ, அவர்கள் மீது தமிழகமெங்கும் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்படும். அது வன்முறையல்ல என்பது மட்டுமல்ல, அது ஒரு கலாசார செயல்பாடும் ஆகும் என்பதுதான் இந்த ஆபாச நிகழ்ச்சியின் மூலம் நாமெல்லாம் அறியக்கூடிய பாடம்.
4. சற்று காலம் தாழ்த்தி வந்த எதிர்ப்புகள் மட்டுமில்லாது, தொடர்ந்து (புத்திசாலித்தனம் என்று நினைத்து) தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட காட்சிகளின் பாதிப்பில் பொதுவாகவே மக்களின் 'இரக்க மனம்' காரணமாகவும், திருமா நடந்த கலாச்சார பாசிச நிகழ்வுகள் பற்றிய செய்திகளினால் சிறிதளவு கலங்கியிருப்பதாக தெரிகிறது. அதன் ஒரு விளைவுதான் 'மக்கள் தாங்களே போராட்டத்தில் குதித்ததாகவும், தங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை' என்று கைககழுவும் புளுகு. அதே போல பல பத்திரிகை அலுவலகங்களை தானே நேரடியாய் திருமா தொடர்பு கொண்டதாகவும் தெரிகிறது. ஒரு தலித் பெண்கள் அமைப்பு (Dalit women Federation) திருமா ராமாதாஸ் கலாச்சார பாசிசத்தை கண்டித்து வெளிப்படையாய் ஒரு கண்டன பேரணி நடத்த இருந்ததாகவும், திருமாவின் பலத்த முயற்சிக்கு பிறகு அது தடுக்கப் பட்டதாகவும் தெரிகிறது.

பலருக்கு அலுப்பை தரக்கூடும் என்றாலும், பல காரணங்களுக்காக நான் இந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இங்கே எழுத இன்னும் நிறைய இருக்கிறது.
5. ராமதாசும், திருமாவும் இணைந்ததால் அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை/பாதிப்புகளை பற்றி, நேரமும் முயற்சியும் எடுத்து விரிவாக, எழுதுவதாக சொல்லி, குழலி ஒரு பதிவு போட்டார். வழக்கம் போல அதை வரவேற்று பாராட்டி கொஞ்சம் உணர்ச்சியும் கலந்து ஏகப்பட்ட பின்னூட்டங்கள். வட மாவட்டம் குறித்த பல செய்திகள் எனக்கு இரண்டாம் கை, மூன்றாம் கை தகவல்களாகவே மட்டும் கிடைக்கிறது, அல்லது கிடைக்கவே இல்லை என்ற அளவில் இந்த முயற்சியை, சில முதற்கை தகவல்களுடன் அவர் எழுதுவார் என்ற நம்பிக்கையில் நானும் வரவேற்கிறேன்.

குழலியின் பதிவுகள் பொதுவாக எனக்கு ஆர்வமளித்தது கிடையாது. அவரின் தர்க்கமுறை குறித்து நல்ல அபிப்ராயமும் கிடையாது. அதை தர்க்கம் என்பதை விட வேறு ஒரு வார்த்தையால்தான் என்னால் அழைக்கமுடியும். குஷ்பு பிரச்சனைக்கு பின் அவரின் பல பதிவுகள் குமட்டலூட்டுபவை. ஒப்புகொள்ளாவிட்டாலும் கூட வீரவன்னியனிடம் இருக்கும் போர்குணம் கூட இவர் எழுத்துக்களில் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

என்றாலும் இப்படிப்பட்ட முயற்சியில் அவர், தனக்கிருக்கும் தொடர்புகளை வைத்து இறங்கினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர் எழுதப் போகும் எல்லாவற்றையும் யாரும் முழுமையாக ஏற்றுகொள்ளப் போவதும் இல்லை. ஒரு அன்னத்தை போல(அல்லது யதார்த்தமாய் எலுமிச்சை சாறு போலவோ) பாலையும் தன்ணீரையும் நம்மால் பிரித்தெடுக்க இயலாவிட்டாலும், விமர்சனபூர்வமான ஒரு அணுகுமுறையின் வெளிச்சத்தில் பலவற்றை கழித்துவிட்டும், வகுத்துவிட்டும் நம்மால் வாசிக்க இயலும், என்பதால் அவரது சுய சார்புகளினால் ஆபத்து எதுவும் நேர வாய்பில்லை.

ராமதாஸ்-திருமா இணைந்தது பல வகை மற்றங்களை நிச்சயமாய் கொண்டு வந்திருக்கும். ஒரு கிராம அளவில் இரு சமூகங்களுக்கிடையே/இயக்கங்களுக்கிடையே ஏற்படக்கூடிய முரண்கள், மேலிடத்தில் அது ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை முன்னிட்டாயினும் சுமுகமாய் தீர்த்துவைக்கும் முயற்சிகள் நடக்கும், நடந்திருக்கும். முன்பு போல் முரண்களை பிரச்சனையாக்குவதற்கு தயக்கம் ஏற்படும். திருமா தலைமையிலான தலித் எழுச்சிக்கு பின்பு, சில நடைமுறைகளும், மாற்றங்களும் தங்கள் உரிமைகள் என்ற விழிப்புணர்வு வந்த பின்பு, இந்த இணைவின் காரணமாய் சில வன்கொடுமைகள் தடுக்கப் பட கூடிய வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இந்த இணைப்பை தமிழக அரசியலில் ஒரு மைல்கல் என்று முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். உண்மையிலேயே அப்படி ஒரு மாற்றம் வந்திருக்கிறதா, எந்த அளவில் மாறியிருக்கிறது, சமரசம் யாரால் அதைகமாய் பெறபெற்றிருக்கிறது என்பதெல்லாம் மிகவும் ஆராய்ச்சிக்குரியது. அது குறித்த ஒரு முயற்சியாய் குழலி எழுதுவதாய் அறிவித்ததை வரவேற்பதில் பிரச்சனையில்லை.

ஆனால் சிறிதளவு கூட விமர்சனப் பார்வையின்றி வரும் பாராட்டுக்களும் பின்னூட்டங்களும்தான் நெளிய வைக்கின்றன. தங்கமணி ஒரு படி மேலேபோய் 'ஆபத்தான காரியத்தில் இறங்க போகிறீர்கள், உண்மையை சொல்ல போகிறீர்கள்' என்று எட்டு போட்டு புல்லட் ஒட்டுகிறார். குழலி எழுதியுள்ள பதிவின் மொழியில் இருக்கும் ஆதாரப்பிரச்சனை அவருக்கு *கூட* புலப்படாமல் போனதேன்?

பதிவு முழுக்க குழலி மையப்படுத்துவதுபோல் வன்னியர்கள் தலித்துகளுக்கிடையிலான பிரச்சனையை 'இனப்பகை', 'புரிதல் இல்லாபகை' போன்ற வார்த்தைகளினால் குறிப்பிடமுடியுமா? குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடந்த தாக்குதலை, 'மதகலவரம்' என்ற வார்த்தையால் விளக்குவது நியாயமாகுமா? அது கூட ஒருவேளை பொருந்திவரலாம். தென்மாவட்டங்களில் தலித்கள் மீது நடந்த வன்முறையை 'சாதிக் கலவரம்' என்று குறிப்பிடுவது எவ்வளவும் பெரிய அயோக்கியத்தனம்? அந்த நேர்மையின்மையை பல பத்திரிகைகள் பல காரணங்களுக்காக கடைபிடித்தது. 'தனித்தொகுதி ஏற்படுத்திய காரணத்தினால்தான் பாப்பாபட்டியிலும் கீரிப்பட்டியிலும், காலம் காலமாய் தாயாய் சகோதரனாய் பழகிய மக்கள் அடித்துகொள்வதாய்' ஒரு 'மாணிக்கம்' வலைப்பதிவில் எழுதியது. இந்த சொல்லாடல்கள் பல சாதிய நடைமுறைகளை போலவே, சில சந்தர்ப்பங்களில் அதைவிட வன்முறையானவை (ரத்தத் தெறிப்பு இல்லாத வன்முறைதான்!)

சாதிய நடைமுறை அமுலில் இருக்கும் சமூகத்தில் மாமுல் வாழ்க்கை, அமைதியான சூழல் இவையெல்லாம்தான் உண்மையான வன்முறைகள். அமைதியான சமூகத்தில் சாதிய நடைமுறை, சாதிய ஒழுங்கு மீறப்படாமல் இருக்கிறது. அவை கேள்வியின்றி ஏற்றுகொள்ளப் படும்போது, எல்லாம் நன்றாக இருப்பதாக, நன்றாய் நடப்பதாக தோற்றமளிக்கிறது. இதில் பிறழ்வு நேரும் போது, இதை மீறி செயல்படும்போது, ஆதிக்க சாதிகளிடமிருந்து வரும் கண்மண் தெரியாத வன்முறைதான் 'சாதிகலவரம்' என்ற பெயரால் பொதுபுத்தியால் அழைக்கப் படுகிறது. தலித் அல்லாதவர்கள் பெரும்பான்மை வகிக்கும் சமுகத்தில், தலித் ஒரு தனித்தொகுதி மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படமுடியும் என்ற யதார்தத்தில், தலித் நகராட்சி தலைவராவது சாதிய நடைமுறையிலிருந்து ஒரு பிறழ்வு. அந்த பிறழ்வின் காரணமாய் தலித் மீது ஏவும் வன்முறைதான், 'தாயாய் சகோதரனாய் பழகியவர்கள் அடித்துகொள்வதாய்' நாகரீகமாய் போன மாணிக்கங்களால் சொல்லப்படும் 'பகை'.

அதே போலத்தான் படையாச்சிகளின் சாதிய மேலாண்மையும் அவர்கள் நிகழ்த்திய வன்கொடுமைகளையும் 'புரிதல் இல்லாத பகை' என்ற ஒற்றை சொல்லாடலில் குழலியால் குறுக்கப்படுகிறது. ஒரு சொட்டு ரத்தம் இல்லாமல் வெறும் சொற்களால் அந்த வன்முறையை நிகழ்த்தும் அவர், விவேக வேடம் பூண்டு, ஆராய்ந்து எழுதப் போவதாய் சொல்கிறார். மகாஜனங்கள் கைதட்டுகிறார்கள், கண்ணை கசக்குகிறார்கள். இதற்கு முன்னமே கூட 'பாமக எந்த வன் கொடுமையையும் எந்த காலத்திலும் நியாயப்படுத்தியதில்லை' என்று கூசாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் ராமதாசே தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்கக் கோரி பேட்டியளித்தது எல்லாம் பத்திரிகைகளில் (ஒரு உதாரணம் 'துக்ளக்') பதிவாகியுள்ளது. இந்நிலையில் அவர் நடுநிலைமை என்ற ஒரு பாவனைக்காகவேனும் சுயவிமர்சனம் செய்துகொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, ஏற்கனவே சொன்ன காரணங்களின் நம்பிக்கையில் அவரின் முயற்சியை வரவேற்பதில் எந்த தயக்கமும் இல்லை. ஆனால் விமர்சனம் என்பது துளிகூட இல்லாத ஒரு விசிலடிச்சான் சூழலில், இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.
6. திருமா ராமதாஸ் இணைவு என்ற புதிய 'மைல்கல்லை' அடைவதற்கு முந்தய காலகட்டத்தில், தலித்-பிற்படுத்த பட்டவர்கள் மோதல் உச்சத்தில் இருந்த போது, பிற்படுத்த ஜாதிகளுக்கிடையே 'ஒற்றுமை'யையும், அவர்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு ஒரு பொதுத்தளம் அமைக்கும் முயற்சியாய் சில கூட்டங்கள் நடைபெற்றது யாருக்காவது நினைவு இருக்கலாம். சேதுராமன் போன்றவர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டிய 'அவசியத்தை' பலமுறை வலியுறுத்தியும், பாமக அதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியது பற்றியும் குறைந்த பட்சம் ஒருமுறையாவது கருத்து சொல்லியிருப்பார். அத்தகைய முயற்சிகளின் போது ஒலித்த கருத்துக்களை கவனித்தால், அது எந்த விதத்திலும் பார்பன/முற்பட்ட ஜாதிகளுக்கு எதிரான பிற்பட்ட ஜாதிகளின் ஒன்றிணைப்பை பற்றி பேசவில்லை, மாறாக தலித்களுக்கு எதிராகவும், 90களில் ஏற்பட்டுள்ள தலித் எழுச்சியின் காரணமாய் எழுந்துள்ள பயத்தின் காரணமாகவும் உருவானவை என்பது தெளிவாக தெரியும். இவற்றில் சில முடிந்தால் மற்ற முற்பட்ட ஜாதி சக்திகளிடம் கூட்டணி வைக்கவும் தயங்காதவை.

கட்ந்த ஒன்றரை ஆண்டில், தமிழ் என்ற 'பொது அடையாளத்தில்' திருமா ராமதாசை முன்வைத்து நிகழ்ந்த இணைப்பினால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்று தோன்றினாலும், தென் மாவட்டங்களில் தேவர்கள் எந்தவித சமரசத்திற்கும் தயாரக இல்லாத பிடிவாதத்துடன் தொடர்வதையும், தலித்கள் மீதான பல வன்கொடுமைகள் இன்னும் தொடர்வதுமே யதார்த்தமாக உள்ளதாய் தெரிகிறது. இதில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்பவரின் பெயர் உருவம் உள்ளிட்ட அனைத்தும் , தேவர் ஜாதி வெறியின், ஜாதி பெருமையின் திருவுருவாக திகழ்வதை விளக்க தேவையில்லை. அந்த ஜாதி திமிரை கொண்டாடும் ஒரு தருணமாகவே தேவர் ஜெயந்தி வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி வரும்போது, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் (மதுரையில் இன்னும் அதிகமாய் இருக்கும் என்றாலும், அதை காணும் வாய்ப்பு எனக்கு இருந்ததில்லை) போஸ்டர்களில் ஜாதிவெறி வெளிப்படையாய் கோரப்பற்களுடன் இளிக்கும்.

எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஓட்டு என்ற காரணத்திற்காக இந்த தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ளும் கட்டாயம் உள்ளது. ஆனால் தேவர்களின் ஓட்டில் எந்த சதவிகிதமும் விழ வாய்ப்பு இருப்பதாக தோன்றாத, பாமகவும் இந்த தேவர் ஜெயந்திவிழாவில் கலந்துகொள்வது ஆரய்தலுக்கு உரியது. திருமாவும் கலந்துகொண்டு மாலை போட்டு தேவர்சிலையை வழிபாடு செய்ததாக ரவி ஸ்ரீனிவாஸ் பதிவின் பின்னூட்டத்தில் சுட்டி பையன் என்பவர் சொல்லியிருக்கிறார். அது குறித்த (பத்திரிகை செய்தி வடிவிலான) ஆதாரத்தை, நான் கேட்டு பதில் வரவில்லை. வேறு யாரிடமிருந்தும் மறுப்பும் வரவில்லை. நான் இந்த செய்தியை நம்பவில்லை. நம்பாதது மட்டுமில்லாமல் பொய்யாய் இருக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.

பாமக விடுதலை சிறுத்தைகளின் இணைவினால் ஏற்படும் மாற்றங்கள் என்பது இரு பக்கங்களிலிருந்தும் வரும் சமரசங்களை உள்ளிட்டது என்பதை சொல்ல தேவையில்லை. இதில் திருமா என்னவகை சமரசங்களை செய்துள்ளார், செய்யவேண்டி உள்ளது என்பதே தலித் அரசியலில் ஆர்வமுள்ளவ்ரகளின் அக்கறையாய் இருக்க முடியும். பாமக ஒரு தேவர்ஜெயந்தி விழா வழிபாட்டில் கலந்து கொள்வதும், திருமா அது குறித்து விமர்சனமில்லாமல் இருப்பதுமே இந்த இணைவின் முக்கிய சமரசத்தின் குறியீடாய் இருக்கிறது. இன்று தேவர்ஜாதி வெறியை எதிர்க்கும் போர்குணத்தின் திருவுருவாய் பரிணமித்திருக்க வேண்டிய தோழர் இமானுவேல் இவர்களை எல்லாம் மன்னிப்பாராக!

Post a Comment

---------------------------------------
Site Meter