ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல். | |||
எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும். Tuesday, November 30, 2004கொடுக்க வேணும் இனிமா!தமிழ் சினிமாக்கள் பார்க்க கிடைக்காத ஒரு இடத்தில் வாழ்வதில், `இந்த பழம் கடிக்கும்' என்று தெரிந்தாலும், அவ்யபோது கொஞ்சம் ஏக்கமாகவே இருக்கும். சில மாதங்கள் முன்பு உஸ்மான் ரோட்டில் அள்ளிவந்த சில (சத்தியமாய் திருட்டு) விசிடிக்களை பார்த்ததில், தமிழ் படங்களை நினைத்து கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது. விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு சமரச சமன்பாட்டு மனதுடன் பார்க்கையில், தமிழ் சினிமா ஒரு ஆரோக்கியமான சூழலில் இருப்பதாகவே தோன்றியது. அப்படியே இருந்திருக்கலாம்! சென்ற வாரம், மேற்சொன்ன ஏக்கம் வந்து தொற்றிகொள்ள, ஸன்மிக்ஸ் பக்கம் போய் பார்தேன். `மன்மதன்' படம் ஆன்லைனில் இருந்தது. இறக்கி ஒரு பதினைந்து நிமிடம் (அதுவும் மற்ற வேலைகளை கவனித்து கொண்டே) பார்த்திருக்க மாட்டேன். தாங்கமுடியாமல் விண்டோஸ் மீடியா ப்ளேயரை ஒரு கிளிகடித்து காலி பண்ணினேன். படமாய்யாஅது! இப்படியும் கேவலமாக படம் எடுக்க முடியுமா? சிம்புவின் நடிப்பு வேறு, சகிக்கவில்லை! இவ்வாறாக, ஆபிஸ் நேரத்தில் வாங்கும் சமபளத்திற்கு வேலை செய்யாமல் ஒரு விதேச துரோகியாய் இருப்பது உறைத்து மீண்டும் வேலையிலாழ்ந்தேன். ஆனாலும் விதி விடவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சொந்த காரணங்களால் கொஞ்சம் பதற்றத்தில் இருந்தேன். பதற்றித்து ஆவதொன்றுமில்லை என உணர்ந்து, ரிலாக்ஸிக்க மீண்டும் ஸன்மிக்ஸ் பக்கம் போய் பார்தேன். `மன்மதன்' படத்தின் மூன்றாம் பாகம் இருந்தது. படத்தில் கவுண்டமணி இருப்பது ஞாபகத்திற்கு வந்தது. `என் ஆசை மைதிலியே..' பாட்டை வேறு ஏற்கனவே கேட்டிருந்ததால் பழைய டீ.ராஜேந்தர் ரசனையும் வந்து சதி செய்ய, விதி வழி சென்று படத்(தின் மூன்றாம் பாகத்)தை இறக்கி, அதையும் முன்னே ஒட்டி கடைசி சில காட்சிகளை மட்டும் பார்த்து தெரிந்துகொண்ட கதை இது. இடையில் வந்த `என் ஆசை மைதிலியே..' பாட்டு மட்டும் ஏமாற்றவில்லை. சிம்பு-ஜோதிகா போட்டு கலக்கியிருந்தார்கள். ரெண்டு சிம்பு. அண்னன் சிம்பு ஹீரோ. தம்பி சிம்பு, அண்ணன் விவரிக்கும் ப்ளாஷ் பேக்கில் மட்டும் வரும் ஒரு (மனதளவு) சொங்கி. சில படங்களில் தொடக்கத்தில் ஹீரோவிற்கு கனவில் கனவுக்கன்னி வந்து விளையாட்டு காட்ட (உதாரணம் காதலன், காதல் தேசம், ....), அந்த கனவுகன்னியை நனவில் சந்தித்து கதை போகும். இங்கே புதுமையோ புதுமை! ஒரு மாறுதலாய் ஜோதிகாவிற்கு கனவு. கனவு வாலிபனாய் வரும் சிம்பு, கனவில் ரேப் பண்ணி விடுகிறார். ரேப் பண்ண வருவதாய் அல்ல கனவு, பண்ணுவதாய் முழுசாய் ரேப் பண்ணி முடியும்வரை கனவு கான்கிறார். (குரோசோவாவிற்கு இது தோணாம போச்சே, இதையும் இன்னொரு நேரேஷனாக ரஷோமானில் சேர்த்திருக்கலாம்.) எல்லோரும் எதிர்பார்பது போல் சிம்புவை நேரில் சந்திக்க நேர்ந்து, கனவில் `கற்பை பறிகொடுத்தவர்' (படத்தில் வரும் வசனம்), பிடித்து போய் நனவில் மனதை பறிகொடுக்கிறார். இடையில் இந்த சிம்பு பாரில் தண்ணியடிக்கும், பலருடன் காதல் கொள்ளும், `கெட்ட' பெண்களை எல்லாம் சிகப்பு ரோஜாக்கள் பாணியில் தீர்த்துகட்டி வருகிறார். ஜோதிகாவிற்கு விஷயம் தெரியவந்து, போலீஸில் போட்டு கொடுக்க ப்ளாஷ் பேக். தம்பி சிம்பு காதல் தோல்வியில் `ஏ..புள்ள..புள்ள..' என்று பாட்டு பாடி(அய்யோ!), பின்பு காதலில் பாஸாகி, பிறகுதான் காதலி மேற்சொன்ன `நடத்தை கெட்ட' பெண் என்பது தெரிகிறது. வாழ்க்கையில் பல ஆடவரோடு ஜாலியாக இருக்கவேண்டும் என்ற நோக்கதிற்காக, அதை கண்டுகொள்ளாத ஒரு சொங்கி கனவன் வேண்டும் என்ற சூப்பர் ஐடியாவை மனதில் வைத்து, சிம்புவை பிடிக்கிறாராம். இன்னொரு ஆணுடன் காதலியை படுக்கையில் (விலாவாரிவாக) பார்க்கும் தம்பி சிம்பு, ரெண்டு பேரையும் தீர்த்து கட்டிவிடுகிறார். பிறகு, சொங்கியாயிருந்தவர் கெட்டப் மாறி, அவர்தான் மேலே உள்ள கொலைகளை எல்லாம் செய்ததாக ப்ளாஷ் பேக் சொல்ல, அண்ணன் சிம்பு விடுதலையாகிறார். ஜோதிகா `என் ஆசை மைதிலியே..' பாட்டை கனவு காண்கிறார். ஆனால் சிம்பு அவரது காதலை மறுக்கிறார். ஏனெனில் உண்மையான ப்ளாஷ்பேக்கில் தம்பி சிம்பு தற்கொலை செய்துகொண்டுவிட, அந்த கொலைகளை எல்லாம் அண்ணன் சிம்புதான் செய்துவருகிறார். இன்னும் செய்ய போகிறார். இதுதான் கதை. சிகப்பு ரோஜாக்கள்/visiting hours போன்ற திரில்லர்களில் எல்லாமாவது கதாநாயகன் மனநிலை பாதிக்கபட்டவனாய், கொலைகளுக்கு அந்த பாதிப்பே ஒரு காரணமாய், விமர்சன பூர்வமாய் இருக்கும். இங்கே மிக தெளிவாக, `நடத்தை கெட்ட' பெண்களை எல்லாம் கொல்ல வேண்டும், அப்படி கொல்வதுதான் சரி என்று ஒரு தர்க்க நியாயத்தை முன் வைத்து, தீர்மானத்துடன் கொலைகளை செய்கிறான். அதை வசனமாய் சொல்ல வேறு செய்கிறான். போலீஸிலிருந்து தப்பிப்பது (இந்தியன் தாத்தா மாதிரி ஒரு நல்லகாரியம் செய்வதால் அவன் தப்பிப்பது தர்மரீதியாய் நியாயமானது என்று கட்டமைப்பது) மட்டுமில்லாமல், அதை ஒரு வாழ்க்கை லட்சியமாய் (ஜோவின் காதலை மறுத்து) தொடரவும் போகிறான். படத்தில் ஒரு ஏட்டு (காமெடியாம்!) வசனம் பேசுகிறார், " நாங்க அவன பிடிக்க மாட்டோம். நாங்க எதுக்கு அவன பிடிக்கணும்! அவன் என்ன நல்ல பொண்ணுங்களையா கொலை பண்றான், நடத்த கெட்டதுகளைத்தானே கொல்றான்! நாங்க அவன பிடிக்க மாட்டோம்!" உலகில் எங்குமே இல்லாத அளவிற்கு கற்பு மதிப்பீட்டை தூக்கி பிடிக்கும் தமிழ் சூழலில் இப்படி ஒரு படத்தை சென்ஸார் எப்படி அனுமதித்தது? கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு தீவிரவாதி உருவாவதையோ, வீரப்பன் போன்று ஒருவர் உருவாவதையோ, அதற்குரிய சமூக சூழல்/நியாயங்களை முன் வைத்து (விமர்சனத்துடனேயே) படம் எடுத்தால் இங்கே எத்தனை பிரச்சனைகள் வரும். எத்தனை கண்டனங்கள் குவியும். பிரச்சனைகளை கொச்சை படுத்துவது தவிர வேறு எதுவும் தெரியாத மணிரத்தினத்தின் படங்களுக்கே எத்தனை பிரச்சனைகளை சென்ஸார் தந்திருக்கின்றன. தமிழகத்து பெண்கள் எல்லாம் இந்த படத்தை பார்த்து பொங்கி எழுந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் பெண்ணிய அமைப்புகள் என்று சொல்லி கொண்டிருப்பவர்களாவது பொங்கி எழவேண்டும். ஆர்பாட்டம் நடத்த வேண்டும். வழக்கு தொடுக்க வேண்டும். பாய்ஸ் படத்தில் ஈவ்டீஸிங் கொஞ்சம் நியாயபடுத்த பட்டிருந்தாலும், அதில் தாராள பாலியல் பேசபட்ட காரணத்திற்காகவே பெருமளவில் எதிர்க்க பட்டது. பெண்ணை இன்னும் கொஞ்சம் சுதந்திரமாய் காட்டும், டேட்டிங் செய்வதை, பாய்ஸும், கேர்ள்ஸும் பாலியல் குறித்து பேசிகொண்டதை இயல்பானதாய் காட்டியதனாலேயே இங்கே மிகுந்த கண்டனத்திற்கு உள்ளானது. ஞாநி, யமுனா ராஜேந்திரன் என்று ஒரு கூட்டமே போட்டு தாக்கியது. இதுவரை இப்படி எதையும் `மன்மதன்' படம் குறித்து எந்த எதிர்ப்பையும் கேள்வி படவில்லை. அப்போது வழக்கு தொடுத்த பெண்ணிய அமைப்புகள் எல்லாம் இப்போது மன்மதன் படம் குறித்து மௌனம் சாதிக்குமெனில் இவர்களின் நோக்கங்களை ரொம்பவே சந்தேகபட வேண்டி வரும். `சினிமா அதுக்கு கொடுக்க வேணும் இனிமா!' என்று பாவலர் வரதராஜன் ஒரு பாட்டு எழுதியிருப்பார். (வெகுஜன)சினிமாவை ஒரு சமூகசீரழிவாக பார்பதன் அடைப்படையில் அவ்வாறு எழுதியிருப்பார். ஞாநி போன்றவர்களும் அத்தகைய ஒரு பார்வையிலேயே எழுதிவருகிறார்கள். இந்த பார்வைகளை முழுமையாய் நிராகரிக்கிறேன். எந்த அளவிற்கு சமுதாயம் மற்றும் அதன் மதிப்பீடுகள், சீரழிந்து இருக்கிறதோ அதை பொறுத்து, அதற்கு ஏற்ற அளவில் (வெகு)சினிமாவும் சீரழிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (மேலும் சீரழிவு என்று இவர்கள் சொல்வது பொதுவாக அதன் ஜனரஞ்சக தன்மையையே!) சினிமாவில் இருக்கும் ஆணாதிக்கம் எல்லாமே சமூகத்தின் மதிப்பீடுகளை பிரதிபலிப்பதாக இருப்பதாகவே தோன்றுகிறது. இந்த படம் ஓடாது, ஊத்திகொள்ளும் என்றே தோன்றுகிறது. மீறி ஒரு வேளை ஓடினால், சினிமாவை விட, நிச்சயம் தமிழ் சமுதாயத்திற்குதான் இனிமா கொடுக்க வேண்டும்.
Friday, November 19, 2004ஸப்மிஷன்!திண்ணையில் ஆசாரகீனனின் கடித்தின் உதவியால், ஸப்மிஷன் குறும்படம் பார்க்க நேர்ந்தது. சாதாரணமாக இருந்திருந்தால் படம் குறித்த பல விமர்சனங்களை (குறிப்பாய் இனவாதம் முகிழ்ந்து குறிபிட்ட கட்டத்தை அடைந்துவிட்ட நெதர்லேண்டில் அந்த படம் ஏற்படுத்தகூடிய வாசிப்புகளை) முன் வைத்திருக்கமுடியும். ஆனால் வான் கோ கொலைக்கு பின்னால், அதை எந்த முஸ்லீமும் கண்டிக்காத நிலையில், அதை நியாயபடுத்தி ஒரு கடிதமும் திண்ணையில் வெளியான பின்னர் அந்த விமர்சனங்களை எழுதமுடியாது. மிக சாதாராணமான ஒரு படத்திற்கு வான் கோ கொலைசெய்யபட்டது, சில விஷயம் குறித்து பேசுவதில் (வேறென்ன இஸ்லாம் குறித்த வெளிப்படையான விமர்சனம்தான்) இன்னும் தயக்கம் காட்டுவது அவலமான ஒரு சூழலுக்குத்தான் இட்டுசெல்லும் என்று தோன்றுகிறது. அதுவும் அந்த வேலையை (சூர்யா, அரவிந்தன் , ஆசாரகீனன்) போன்ற இந்துத்வ ஆதரவாளர்கள் மட்டுமே செய்து வருவது மிகவும் அருவருப்பான ஒரு சூழலுக்கே இட்டுசென்று கொண்டிருக்கிறது. மற்றபடி இந்த நிகழ்வுகளை, இன்னும் பல விவாதங்களை இந்துத்வவாதிகள் பயன்படுத்தி வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது இயல்பானதாகவும் தெரிகிறது. அது குறித்து கவலைபடுவதோ, இப்படி பயன்படுத்தி கொள்வார்களே என்று மௌனமாக இருப்பதோ எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதாக தெரியவில்லை. உண்மையில் இந்த மௌனத்தைத்தான் அவர்கள் அதிகமாய் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆசாரகீனனை பொறுத்தவரை அவர் ஒரு இனவெறியராகத்தான் எனக்கு தெரிகிறார். (தொடக்கத்தில் ஒரு ஏதிஸம் சார்ந்த அடிப்படைவாதியாக மட்டுமே சந்தேகத்தின் பலனை அளித்து அவரை நினைத்திருந்தேன்.) அப்படி இருந்தும் கூட அவர் எழுத்தில் பல விஷயங்களை (அதில் உள்ள இனவாதம், இடதுசாரிகள் மீதான வசைகள், சில அசட்டுத்தனமான வாதங்கள் மற்றும் பொய்கள் தவிர்த்து, இஸ்லாம் குறித்த விமர்சனங்களை) எதிர்கொள்ளவேண்டும் என்றே நினைக்ககிறேன். அதையும், நேசகுமார் எழுப்பியுள்ள விவாதத்தயும் முன்வைத்து எனது கருத்துக்களை குட்டிபூர்ஷ்வா வாழ்க்கை அனுமதிக்கும் தருணத்தில் இங்கே தருகிறேன். அதுவரை இது ஒரு அவசர அடி மட்டுமே. யாரேனும் வம்புக்கு இழுத்தால், இதிலுள்ள சில ஸ்வீப்பிங் கமெண்டுகளை விரித்து தருகிறேன். மீண்டும் ஒரு முறை, அடிப்படைவாதத்திடம், ஒரு கலைபடைப்பிற்காக தன் உயிரை இழந்த வான் கோவிற்கு எனது தாமதமான அஞ்சலிகள். Sunday, November 14, 2004நினைச்சு பாத்தா எல்லாம் பொம்மை..!கொஞ்சம் வலைபதிவுகளை பீராய்ஞ்சதுல பெருசு உள்ளபோனதில நெறய சனம் ரொம்பவே அப்ஸெடாகி ஆடிபோனா மாறித்தான் தெரியுது. கொஞ்சம் பாவமாவே இருக்கு, நம்ம கும்படர விஷயம் சாக்கடைல விளுகரப்போ எல்லோருக்குமே இப்படிதானே இருக்கும். இதுல குட்டிபூர்ஷ்வா ஆடிப்பாடி சந்தோஷப்பட பெருசா எதுவுமில்ல. (அதென்னமோ போங்கோ, எல்லோரும் எதோ கூடி பேசி க்ரூப் டிஷ்கஷன் பண்ணி மனு சமர்பிச்ச தினுசில ஒரே மாதிரி புலம்பியிருக்காளே! அதுவும் சோ ஸார் கொடுத்த ரீடிஃப் பேட்டியோட எஃபக்ட் நன்னாவே தெரியறது.) யாரும் மாறுவாங்கன்னோ, பாடங்கத்துக்குவாங்கன்னோ எல்லாம் தோணல. சும்மா கண்ண கசக்கிகினு, கொஞ்சம் விமர்சனம் பாவ்லா, தர்மாவேசம் அப்டி இப்டி டான்ஸ் காட்டினு, அப்பால பழய பஜனைக்கே திரும்பிடுன்னு தெரியும். அது பிரச்சனையில்ல. ஆனாலும் இந்த சந்துல சிந்து பாடரதுதான் தாங்கமுடியல. போலிஸாண்ட பலான எவிடன்ஸ் சிக்கிகீது. வெளியவும் அது லீக்காயிருச்சு. நக்கீரன் வேற போட்டு தாக்கிகீது. பார்டீங்கள்ளாம் ஆர்பாட்டம் அது இதுனு ரௌஸ் விட்டுனுக்குது. அதுக்கப்பால லேட் பண்ணி வேற வழிதெரியாம ஜெயேந்திரரை புட்சி உள்ளே போட்டதுக்கு ஜெயாம்மாக்கு பாராட்டா? (பாரா ஸார் கூட!) என்னப்பா அனியாயமாக்குது! விஜயகுமார் குருதிபுனல் ஸெட்போட்டு, பலான வேலையெல்லாம் செஞ்சு வீரப்பனை புட்சாரு, சரி காலிபண்ணாரு. அதுக்கு எல்லோரும் ஜெயாம்மாவை பாராட்டினா `ஏதோ லாஜிக் இக்குதுபா'ன்னு குட்டி பூர்ஷ்வா ஒத்துக்குவானா இருக்கும். இதுக்குமா? ஸரி, பெருசை உள்ள போடரதுக்கு முன்னாடி மேடத்தாண்ட ஒரு வார்த்த நிச்சயமா கேட்டுருப்பாங்க. அதும் வேர வழி தெரியாம ஸரின்னு சொல்லியிருக்கும். அதுக்கு பாராட்டா? ரொம்ப பயமாக்கீது. அடுத்து எலீக்ஷன் வரும். ஜெயாம்மா அப்பீடாயி பார்லிமெண்ட் எக்ஸாம்ல வாங்கின மார்கையே வாங்குதுன்னு வை. மறுநா கவர்னராண்ட ராஜினாமா லெட்டர் குடுக்குது. அதுக்கும் `அட, இன்னா பிராம்டா ரிஸைன் பண்ணிட்டாங்க, இந்த தைரியம் யாருக்கு வரும்'ன்னு பஜனை பண்ணுவாங்க போல தெரியுது. சினிமா காரங்கல்லாம் ரொம்ப ஜெயா பஜனை செய்ரது தாங்காம பத்ரி ஸார் ரொம்ப பேஜாராயிட்டாரு. அதுங்களுக்கு பொழப்பு அது. இதுங்களுக்கு? இதை பாக்க ஸொல்ல என்னா தோணுது? கமெண்ட்ல அவுத்துவுடு கபாலி! Friday, November 12, 2004விதி!!!கொகுரா என்ற ஜப்பானிய நகரம் குறித்து யாராவது கேள்வி பட்டிருக்கிறீர்களா? வாய்பில்லை என்றே தோன்றுகிறது. உண்மையில் நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான ஒரு பெயராக இது இருந்திருக்க வேண்டும். சின்ன வயசில் பாடத்திலும், குவிஸிற்கு போகும்போதும் மனப்பாடம் செய்ய வேண்டிய பெயராகவும் இருந்திருக்கும். ஆண்டுதோறும் நினைவு கூரவேண்டிய ஒரு பெயராகவும் இருந்திருக்கும். இத்தனையும் நிகழாமல் போனதற்கு ஒரே காரணம் 1945ஆம் ஆண்டின் அந்த நாளில் கொகுராவின் வானம் மிகுந்த மேகமூட்டத்துடன் இருந்ததுதான். கித்தா க்யுஷு( நேரடியாய் மொழிபெயர்த்தால் வடக்கு க்யூஷு) என்று ஒரு இடம், ஜப்பானின் நான்கு தீவுகளில் ஒன்றான க்யூஷு தீவின் (ஹான்ஷுவிலிருந்து) நுழைவாய் முனையில் உள்ளது. இது உண்மையில் ஐந்து நகரங்கள் ஒன்றிணைந்து உருவான ஒரு ஆலை நகரம். அதில் ஒன்று கொகுரா. அமேரிக்க வான்படையை சேர்ந்த வெடிகுண்டு வீசும் B-29 Bock car, 'குண்டு மனிதன்'(fat man) என்ற (ஹிரோஷிமாவில் வெடித்த 'சின்ன பையனை' விட) சக்தி வாய்ந்த அணுகுண்டை சுமந்தவாறு கொகுரா நகரத்தின் மீது மூன்று முறை சுற்றியும் கூட தனது இலக்கை கண்டுகொள்ள முடியவில்லை. மேக மூட்டத்தின் காரணமாக அணுகுண்டு போடும் திட்டம் நாகஸாக்கியை நோக்கி திசை திருப்பபட்டது. இவ்வாறாக ஒரு பேரழிவிலிருந்து கொகுரா நகரம் அன்றய காலை மேகமூட்டத்தின் காரணமாக தப்பியது. Thursday, November 11, 2004தோழர் அராஃபத்!பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாஸர் அராஃபத் சற்று முன் இறந்ததாக அதிகாரபூர்வமாய் அறிவிக்கபட்டுள்ளது. எந்தவித இரக்கத்திற்கும் இடமளிக்காத மிக மூர்கமான அரசவன்முறைக்கு சரியான உதாரணமாய் திகழும் இஸ்ரேலின் 50 ஆண்டுகால bruttal ஆக்ரமிப்பு, படுகொலைகள், சதிகளை எதிர்த்து போராடிய ஒரு சகாப்தம் முடிவுற்றுள்ளது. அராபத் என்ற மனிதன் இல்லாமலிருந்தால் பாலஸ்தீன விடுதலை போராட்டம் இத்தகைய ஒரு எழுச்சியை அடைந்திருக்காது, அல்லது திசை திரும்பியிருக்கூடும் என்பதில் சந்தேகமில்லை. எல்லையற்ற அதிகாரத்திலிருந்து பிறக்கும் வன்முறையை எதிர்க்க உந்துதலாய் என்றென்றும் இருக்க போகும் தோழருக்கு எனது அஞ்சலிகள். தனது பிந்தய காலகட்டத்தில் அராஃபத் பல சமரசங்களை ஏற்றுகொள்ளவேண்டியிருந்தது. கையாலாகாமல் வாளாவிருக்க நேர்ந்தது.(எட்வர்டு சையத்தால் மிகவும் இதற்காக எதிர்க்கபட்டார்.) இவை, எத்தகைய போர்குணம் கொண்டவரானாலும் அரசு மற்றும் (ஏகதிபத்திய சார்) உலக அமைப்புகள் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தை, சமாதான முயற்சிகள் இவைகளில் பங்கு கொண்டால் எப்படியெல்லாம் சொதப்ப நேரிடும் என்பதற்கான உதாரணங்கள். அரஃபத்தின் அரசே(மற்றும் பாதுகாப்பு படையினர்) ஊழல்-முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றசாட்டுகளும் உண்டு. அரசு என்ற நிறுவனத்தினுள் நுழைந்தபின் யாரும் கறைபடாமல் இருக்க முடியாது என்பதற்கான இன்னொரு உதாரணம் இது(மண்டேலாவே விதிவிலக்கில்லாமல் போனபின்). வறலாற்றின் விகாரமான வக்ரங்களில் ஒன்றாக இஸ்ரேல் தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இனவாதத்தினால் தங்கள் மீது நிகழ்த்தபட்ட பெரும் இன அழிப்பால் பாதிக்கபட்ட ஒரு இனம், அதே போன்ற ஒரு கொடுமையான வன்முறையை இன்னொரு இனத்தின் மீது 50 ஆண்டுகளாக பிரயோகித்து வருவது போன்றதொரு வக்ரம் வேறு இருக்கமுடியாது. இஸ்ரேல் என்ற ஒரு அரசு நிறுவனம் அப்படி இருப்பதில் ஆச்சரியப்பட அதிகமில்லை. ஆனால் உலகமெல்லாம் உள்ள யூதர்கள்(எண்ணிவிடக் கூடிய சிலரை தவிர) அதற்கு ஆதரவாகவும்,. அதை நியாயபடுத்துவதும் தான் மிக பெரிய வக்ரமாய் தெரிகிறது. அதிலும் முக்கியமாக தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பை, இன்றய தங்கள் ஆக்ரமிப்பிற்கான நியாயங்களில் ஒன்றாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி பிரசாரம் செய்து வருவதும், பாலஸ்தீன சார்பாய் பேசுபவர்களை யூத வெறுப்பாளர்களாய் முத்திரை குத்துவதும் தான் வக்ரத்தின் உச்சமாய் தெரிகிறது. தங்கள் மீது நிகழ்த்தபட்ட இன அழிப்பிலிருந்து இதைதான் கற்றுகொண்டார்கள் என்றபோது மானுட சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து உற்சாகம் கொள்ள எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அராஃபத்தின் இறப்பு நிலமையை எங்கு இட்டுசெல்லும் என்று தெரியவில்லை. நிச்சயமாய் இதையும் இஸ்ரேல் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி கொள்ளும் என்பது மட்டும் புரிகிறது. |