ஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.

எண்ணுதலும், பரிசீலித்தலும், தேடுதலும்.

Wednesday, May 31, 2006

ஆஷா -10

சும்மா 'மசாலா பதிவுகளா' போட்டுக் கொண்டிருக்காமல், உடம்பு வணங்கி எதையாவது எழுத சொல்கிறார் நண்பர் கார்திக். அவர் நினைக்கும் விஷயங்களையும் எழுதும் நோக்கம் உண்டு எனினும், சினிமா பாட்டை பற்றி எழுதுவதெல்லாம் 'மசாலா' விஷயங்களாக எனக்கு தோன்றவில்லை. எந்த ஒரு சமூகத்திற்கும் கொண்டாட்டமும், இன்பமும் மிக ஆதாரமான விஷயங்கள். இந்திய சமூகத்தில், முக்கியமாய் தமிழ் சமூகத்தில், அதற்கான புலமாக சினிமா மிக முக்கியமான தளத்தில் இருக்கிறது. சினிமாவின் நுகரப்படும் முக்கிய பகுதி சினிமா பாட்டு. ஒரு சினிமா பாட்டு கூட பிடிக்காமல் தமிழ்நாட்டில் ஒருவர் கூட இருக்க முடியாது என்று தோன்றுகிறது. அதனால் இது குறித்து எல்லாம் சீரியசாய் பேச வேண்டும் என்பதுதான் என் நிலைபாடு. நமது வழக்கமான பதிவுகள் எதிர்வினைகளாக போய் விட, இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் இதை பற்றி எழுதலாம் என்று ஏதோ தொடுகோட்டுத் திசையில் சொல்லி செல்கிறேன். ஆனால் இதற்கும் உடல் வணங்காமல் இல்லை. ஒரு பத்து பாடல்களை தேர்ந்தெடுத்து, மியூசிக் இண்டியா ஆன்லைனில் தேடி(அதாவது வார்த்தையை தட்டி தேடும் இணயத்தேடல் அல்ல, அது வேலைக்காவ தில்லை, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பட்டியலில் தேடி) எடுப்பதற்குள், இன்னொரு பதிவு போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நமக்கு முக்கியமான இளயராஜா, விஸ்வநாதன், சுசீலா என்று தொட்டாகிவிட்டது. ஆஷாவை பற்றி பேசாவிட்டால் இந்த வாரம் சாபல்யம் அடையாது என்று தோன்றுவதால் இந்த பதிவு.

லதா மங்கேஷ்கரை இந்தியா (அதாவது தமிழகம் தவிர்த்த வட இந்தியா) ஆபாசமாய் கொண்டாடி வருவதாக, ஒரு நான்கைந்து முறை, நண்பர்கள் கூட்டத்தில் சொல்லி தர்ம சொல்லடி பட்டிருக்கிறேன். அதில் ஒரு முறை லோக்கல் தமிழ் அன்பர்களின் கூட்டமாக இருந்தது குறிப்பிடுதலுக்கு உரியது. 'ஆபாசமாக கொண்டாடுவது' என்று ஒன்றை சொல்வதன் பொருள், கொண்டாடப்படும் விதத்துடன்/கொண்டாடப்படும் அளவுடன் தொடர்புடையதே அன்றி, கொண்டாடப்படும் நபர் 'கொண்டாட்டத்துக்கு தகுதியானவரா' என்ற கேள்வியுடன் தொடர்புடையதல்ல. பாரதி பற்றி பேசும் போதும் நண்பர்களுக்கு இந்த நுண்மை ஏனோ தொடர்ந்து பிடிபடாமல் போவதற்கு, அந்நேரத்திய ஆல்கஹால் மட்டும் காரணமா என்று புரியவில்லை.

தமிழ் திரைப்பாடல்கள் அளவிற்கு ஹிந்திப் பாடல்களிலும் சிறு வயதிலிருந்தே பரிச்சயம் கொண்டிருக்கும் எனக்கு, லதா ஒரு மாபாடகி என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாற்பதுகளில் தொடங்கிய, அவரின் 50களின், அறுபதுகளின் குரலும், பாடிய பாடல்களும் (ஓரளவிற்கு 70களும்) வேறு ஒன்றுடன் ஒப்புதலுக்கு இடமில்லாத இந்திய திரை இசையின் பொக்கிஷம் என்பதிலும் ஐயம் எதுவும் இல்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் முழுவதும் பதிவாகி விட்டதும், அது தினமும் பொது ஊடகங்களில் நுகரக் கிடைப்பதும், என் காலகட்டத்தில் என்னால் உள்வாங்க முடிந்ததும் பெரும்பேறு என்றுதான் தோன்றுகிறது. 80 களில் அவரின் குரல் வீழத் தொடங்கியதையும், 90களில் சகிக்க முடியாமல் போய்விட்டதையும் பல நண்பர்கள் ஒப்புக்கொள்ளவும் கூடும். (அப்படி ஒப்புகொள்ளாமல் 2006வரை லதாவின் குரல் 'ஆயேகா ஆனேவாலா'வில் இருப்பது போல அப்படியே இருப்பதாக, தீவிரமாய் நம்பும் மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் இருப்பார்கள் என்றும் தோன்றுகிறது. ) பிரச்சனை அது பற்றியதல்ல.

ஏதோ லதாவிற்கு வாய்த்தது மட்டுமே ஒரு அல்டிமேட் குரல் என்பது போலவும், மெலடி என்பதன் எல்லை அதுதான் என்பது போலவும், அந்த குரலுடன் ஒப்பிட இந்த உலகில் எதுவும் இல்லை என லட்சங்கணக்கான் மக்களும், எல்லா வகை ஊடகங்களும் கற்பித்து கொண்டாடுவது மட்டுமே அபாசமாக தெரிகிறது. பாடும் திறமையில் லதாவை விட பலருக்கு அதிக திறமை இருக்கிறது என்பது தெளிவு என்றாலும், அவருக்கு வாய்க்கபெற்ற குரலினால் மட்டும், அவர் ஒப்பிலாதவராக கருதப்படுகிறார். எனக்கு குரல் விஷயத்திலும் ஆஷா போஸ்லேயும், நமது சுசீலாவுமே இணையற்றவர்களாக தெரிகிறார்கள். துரதிர்ஷ்ட வசமாக லதாவிற்கு அளிக்கப் பட்ட கவனமும் முக்கியத்துவமும் ஆஷாவிற்கு அளிக்கப் படவில்லை. லதா அளவிற்கு ஆஷாவிற்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை.(அண்மையில் தமிழில் வந்து ராஜாவின் 'செண்பகமே' 'ஓ பட்டர்ஃபளை' தொடங்கி 'எங்கெங்கே' , 'காதல் பிசாசு' என்று 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்'வரை என்று கலக்கியிருப்பது எல்லோருக்கும் தெரியும்.) ஆஷாவின் என்றும் அழியாத ஒரு பத்தை, மீண்டும் கைக்கு வந்த வகையில் தேர்ந்தெடுத்து தருவது இந்த பதிவின் நோக்கம்.


Jayiye Aap Kahan Jaayenge
உலுக்கும்தன்மையுடன் துவங்கும் இசை, மிக லாவகமாக ஆஷாவின் குரலுக்கு மாறும். மயிர் சிலிர்தெழுவதை பல இடங்களில் தவிர்க்க முடியாது.


Nigahen Milane Ko Jee Chahta Hai
மீண்டும் மீண்டும் கேட்டு, தொடர்ந்து கேட்க இன்பம் தரும் பாடல். பொதுவாய் கவாலி பாடவே பிறந்தவர் ஆஷா.


உம்ராவ் ஜான் பாடல்களை கேட்கும் போதெல்லாம் ரேகாவின் முகம் நினைவில் தோன்றாமல் இருக்காது. அழ வைத்துவிடும் படம். எல்லா படல்களும் ஆஷாதான் ('ஜிந்தஹி ஜாபி' தவிர்த்து) . பொதுவாக 'இன் ஆங்கோங்கி மஸ்தி' யும், முதல் பாடலான தில் சீஸ் கியா ஹைதான் பலருக்கு பிடித்தது. ஆனால் எனக்கு கேட்கும் ஒவ்வொருமுறை அழுகையின் விளிம்பிற்கு கொண்டு வரும் பாடல்
Yeh Kya Jagah Hai Dosto

இன்னும் சில...

Aage Bhi Jaane Na Tu


Aankhon Se Jo Utri Hai


Aao Huzoor Tumko


Parde Mein Rehne Do


Balma Khuli Hawa Mein


Bhanwara Bada Nadan


Chain Se Hamko Kabhi


Woh Haseen Dard De Do

Post a Comment

---------------------------------------
கள்ளன் போலிஸ்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நண்பனுடன் வந்த தோழியிடம் பேச நேர்ந்தது. உளவியல் பயின்று கொண்டிருந்தார். உண்மையிலேயே சமூக அக்கறையும், சுரண்டலுக்கு எதிரான உணர்வும் அவரிடம் இருந்தது. அத்தோடு கல்விப் பரவலாக்கம், கிராமங்கள் நவீனமடைய வேண்டியதன் அவசியம் என்பதாக அழைக்கக் கூடிய விஷயங்கள் குறித்து, அவருக்கு பல யோசனைகள் இருந்தன. அவரது அக்கறைகள் எல்லாம் எனக்கும் மரியாதைக்குரியதுதான். அவர் வாக்கியத்திற்கு வாக்கியம் ஆங்கிலமும் டமிலும் மாறி மாறி பேசியதற்கும், அவரது அக்கறைகளுக்கும் தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இருக்க வேண்டியதில்லை என்ற தெளிவு அப்போது ஏற்பட்டு விட்டுருந்தது. அன்றெல்லாம் இப்படி பேசுபவர்களுடன், குறிப்பாக பெண்களிடம், பேசுவதற்கென்றே ஒருவகை அசட்டு புன்சிரிப்பும், உடலசைவும் என்னிடம் இருந்தது இப்போது தெரிகிறது. தோழி நிறய பேசினார். நானும் நண்பனும் பொதுவாய் கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தோம். தோழி போகிற போக்கில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு போலிஸ் ஸ்டேஷன் வரவேண்டும். நவீனமடைவதன் அடையாளம் அதுதான் என்றார். இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் சுதாரிப்பதுதானே நம் வழக்கம்.

ஏன் போலிஸ் ஸ்டேஷன் வேண்டுமென்று கேட்டேன். விநோதமாக பார்த்து, 'குற்றத்தை தடுப்பதற்காகத்தான்' என்றார். சரி, அது என்ன குற்றம், அதை யார் செய்கிறார்கள், அதை ஏன் தடுக்க வேண்டும் என்று விதண்டாவாதமாய் என் கேள்விகளை நேர்கோட்டில் அடுக்க, தோழி 'இது அந்த மாதிரி எதாவது கேஸோ?' என்பது போல் நண்பனை பார்த்துவிட்டு, பதில் சொல்ல பிரயத்தனிக்க வில்லை. நானே பேசவேண்டியாகியது.

போலிஸ் எதுக்கு? திருடங்க கிட்டேயிருந்து நம்மள பாதுகாக்க! நம்மன்றது யாரு? திருடங்க கிட்டேயிருந்து பாதுகாப்பு தேவைப்படறவங்க. அதாவது திருடங்க திருட பொருளும் பணமும் அதுக்கான பாதுகாப்பும் வச்சிருக்கறவங்க. நம்ம கிட்டயிருந்து யாரு திருடப்போறா? இந்த பொருளும் பணமும் இல்லாதவங்க. இப்படி வசதியா இருக்கற நம்ம மிஞ்சி போனா ஒரு நாப்பது பெர்சண்டேஜ் இருக்கலாம். ஆக இந்த நாப்பது பெர்சண்டேஜை அறுபது கிட்டேயிருந்து பாதுக்காக்க போலிஸ் தேவை! கிராமத்திலே இந்த பெர்சண்டேஜ் என்னன்னு தெரியுமா?'

தோழி 'அந்த மாதிரி கேஸ்தான்' என்று முடிவுக்கே வந்து விட்டார் போல இருந்தது. ஆனாலும் பொறுமை காட்டி 'கம்யூனிசத்தில் உள்ள பிரச்சனைகள்' என்பதாக பேசப் போக, அவசரமாக 'நான் கம்யூனிஸ்ட் இல்லை' என்றேன், இது போன்ற சந்தர்ப்பங்களில் முத்திரையை சந்தோஷமாய் வாங்கி கொள்ளும் வழக்கத்திற்கு மாறாக. அவர் குழம்பி விடவில்லை. கிராமத்தில் இருக்கும் நிலப்பிரபுத்துவ அராஜகம் என்று நாம் நினைப்பதில் தொடங்கி போலிஸின் தேவையை நீட்டி சொன்னார். நான் அவர் சொன்ன அராஜகங்களை ஒப்புகொண்டு, அந்த அராஜகத்திற்கான இன்னும் அதிகமான பாதுகாப்பை மட்டுமே போலிஸ் வழங்கும் என்பதாக நீட்டினேன். ஒரு கிராமத்தில் அது வரை இருக்கக் கூடிய நிலை, ஒரு போலிஸ் படை நிலை கொண்டால் நடைபெற கூடிய அராஜகங்கள், இன்னும் ராணுவம் வந்தால் வரக்கூடிய நிலமை என்று நீட்டமாய் சில உதாரணங்களுடன் போக அவர் சொன்னார்.

"இதையெல்லாம் ஏன் சொல்றீங்க? ரொம்ப டிஸ்டர்பிங்கா இருக்கு!"

(குத்து மதிப்பாய் நடந்த ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறேன்.)

Post a Comment

---------------------------------------
செந்தூரப்பூவே! -1

அடைமொழி வைப்பதை கலாச்சாரத்தின் பகுதியாய் கொண்டிருக்கும் தமிழ் சமூகத்தில், அபூர்வமாய் அது பொருந்திப் போவதும் உண்டு. அத்தகைய ஒரு உதாரணமான இசைஞானி இளயராஜாவை பற்றி, இசை அறிவு உள்ள பலர் ஏராளமாய் எழுதியிருக்கிறார்கள். வெங்கட் எழுதியது தவிர்த்து, நான் அதிகமாய் படிக்காவிட்டாலும், இணையத்திலும் நிறைய இருக்கும். இதில் நான் புதிதாய் என்ன சொல்ல இருக்கிறது என்று தெரியாவிட்டாலும், ஏதோ எண்ணத்தில் பட்டதை நட்சத்திர வாரத்தில், தலைவனை பற்றி எழுதும் பேராவலில் தட்டி வைக்க நினைத்து விட்டேன். முன்னொரு பதிவில் சொல்லிவிட்ட படி, இளயராஜாவின் இசையின் மேன்மையை அதன் முக்கியத்துவதை உணர்ந்திருப்பதாய் நினைத்தாலும், அதை வார்த்தைகளில், இசைக்கான கலைச்சொற்கள் கொண்டு சொல்லும் அறிவு எனக்கு இல்லை. பல வகை இசைகளை தொடர்ந்து கேட்டு வந்திருந்தாலும், செவ்வியல் இசைக்கான (கேட்பதற்கும் ரசிப்பதற்குமான அளவில் கூட) பயிற்சி எதுவும் எனக்கு கிடையாது. என்றாலும் உணர்வை, அனுபவத்தை அடிப்படையாய் வைத்து என் போக்கில் எழுது முயல்வதே இந்த பதிவும், தொடர்ந்த பதிவுகளும

ராஜா ஒரு இசைமேதை மட்டுமில்லாமல் தனக்குள் தொடர்ந்த ஒரு ஆன்மீக தேடலையும் கொண்டவர். அவரது ஆன்மீக தேடலுக்கான ஊடகமாகவே இசை அவரிடமிருந்து வெளிப்படுவதாக தெரிகிறது. ஆன்மீகம் என்பதாகவும், ஆன்மீகத் தேடல் என்பதாகவும் அவர் தன் கருத்தில், செயல்களில், கவிதை என்பதாக நினைத்து கொண்டு செய்தவைகளில் முன்வைப்பதெல்லாம், இசையை தவிர வேறு எதுவும் தனக்கு தெரியாது என்ற முதிர்ச்சி வராததால் விளைந்த அசட்டுத்தனங்களாவே இருக்கின்றன. ஆனால் ஒரு 'பிரபஞ்சம் தழுவிய தேடல், மனப்பயணம், படைப்பு நிலை நோக்கிய தவம்' என்பதாக ஒரு 'ஆன்மிகத் தேடல்' இல்லாமல், அவரின் பல வகை இசை வெளிபாடு சாத்திய முற்றிருக்காது.( இதில் எந்த வகை மெடாஃபிசிகல் அர்த்தத்தையும் நான் சேர்க்க முனையவில்லை.) உள்ளே தேடலை கொண்டிருந்தாலும், சந்தர்ப்ப சூழல், வணிக நிர்பந்தத்திற்கு ஏற்பவே அவரது இசை வெளிபாடு அமைய வேண்டியிருக்கிறது.


ராஜவின் தேடல், இயல்பான எதிர்பார்ப்பின் படி, இந்திய இசையின் சாஸ்திரியச் சட்டகத்தினுள்தான் வெளிபட்டிருக்க வேண்டும். ஆனால் துவக்கத்திலிருந்தே, எந்த themeஐ வேர் கொண்டு தொடங்கியிருந்தாலும், அவரது இசை மேற்கத்திய இசையின் அமைப்பைக் கொண்டு, நாட்டிசையின் ரத்த ஓட்டத்துடன் உயிர்ப்பிக்கிறது. அது வலிந்து செய்ததாக அல்லாமல், மிக இயல்பாக வெளிப்பட்டாலும், அவர் அதை சுயநினைவுடன் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் இதுவரை வெளிப்படுத்தியுள்ள (உளரல்கள் உட்பட்ட) கருத்துக்கள் எதிலும், இந்திய கலைகள் எல்லாவற்றையும் - குறிப்பாக சாஸ்திரிய இசையை - கறைபடுத்தியுள்ள இந்திய வர்ண அமைப்புமுறை குறித்த, எந்த அரசியல் பிரஞ்ஞையும் அவரிடம் இருப்பதாக தெரியவில்லை. அப்படிபட்ட பிரஞ்ஞைக்கு எதிராக இருப்பதாக அவர் காட்டிகொண்டு வந்திருப்பதாகவே தோன்றவும் கூடும். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்திய இசை சட்டகத்தை தனக்கு போதாததாக அவர் நினைப்பதையும், தனது எல்லா இசை பயணத்திற்கும் மேற்கத்திய இசையின் அமைப்பையே அவர் தகுந்ததாக கொண்டு தேர்தெடுத்துள்ளதையும் காணலாம். இது ஏதேச்சையாக நிகழ்ந்ததாக கருத இயலவில்லை.


இந்திய சாஸ்திரிய இசையை (செவ்வியல் என்று சொல்வது பொருத்தமாய் படவில்லை) ராஜா புறக்கணிக்கவில்லை. தீவிரமாய் பயின்றதுடன், அதன் அதிகப்படியான சாத்தியங்களுடன் பயன்படுத்தவும், அதிலும் தன் கையெழுத்தை அழுத்தமாய் பதிக்கவும் தவறவில்லை. ஆனால் தனது இசையின் அடித்தள அமைப்பிற்கு மேற்கையே நாடுகிறார். அவர் தேர்ந்தமைத்து கொண்ட வடிவத்தில், மேலே சொன்ன வர்தக சூழல்/வணிக நிர்பந்தங்களின் விளைவாய், சிறு பொறிகளாய் விண்மீன்களை மட்டும் நம் கண்களுக்கு காட்டி விட்டு, விண்மீன்களுக்கு இடையே நாம் அறியாதிருக்கும் பெருவெளியைப் போன்ற மாபெரும் இசை ரகசியத்தை தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்.


ஒரு வகையில் தமிழ் சினிமா அவர் இயல்புக்கு முழுவதும் ஒத்து வராவில்லைதான். பல இடங்களில் அவர் அளித்த அற்புதங்களை விளங்கி கொள்ள கூட இயலாமல், அசட்டுத்தனமாக காட்சியமைக்கப் பட்டு, (உதாரணங்களுக்கு பஞ்சமே இல்லை என்றாலும், உதாரணமே இல்லாமல் எழுதக்கூடாது என்பதால், ஒரு உதாரணத்திற்கு 'நினைவெல்லாம் நித்யா'வில் 'பனிவிழும் மலர்வனம்') அவரது கற்பனைக்கு ஏற்ப தமிழ் சினிமா எடுத்தவர்களால் சிறகு விரிக்க முடியவில்லை. அவருக்கான வெளியை சினிமாவால் முழுமையாய் அளிக்கவும் முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமாதான் அந்த மேதையை உலகுக்கு அடையாளம் காட்டியது. அவரை கொண்டாட வைத்தது, கொண்டாடியது. சினிமா என்ற ஊடகம் இல்லாவிட்டால் இளயராஜா என்ற கலைஞன் அடையாளம் காணப்படாமலே, அவரது தனித்த இசைக்கான ஒரு வெளி வாய்க்காமலேயே கூட போயிருக்கலாம்.


தமிழ் சினிமா அளித்த வெளியில் அவரால் வெறும் துணுக்குகளை மட்டுமே தர முடிந்தது. தமிழ் சினிமாவை தவிர வேறு எதுவும் ராஜாவின் இசைக்கான பொருத்தமான ஒரு வெளியை அளித்திருக்க முடியாது என்றே தோன்றினாலும், அதே சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது (ரீ ரெகார்டிங் சமாச்சாரம் வேறு) .அதற்கு பிறகு வருகிறேன். அதே நேரம் அவர் போகிற போக்கில் அளித்த சில அற்புத இசைத் துணுக்குகளை கூட ஒழுங்காய் பயன்படுத்திக் கொள்ள தமிழ் சினிமாவின் கேமெராக்களுக்கு வக்கில்லை என்றும் தோன்றுகிறது.


மிக விதிவிலக்குகளான(ராஜாபார்வை தீம் இசைபோல, 'ராக்கம்மா கையை தட்டு' போல, 'தென்றல் வந்து தீண்டும் போது' போல) சில இடங்களை தவிர, அவரால் சிறிய அளவில் கூட சினிமா இசையில் பயணிக்க முடிந்ததில்லை. நிச்சயமாய் அவரது மேதமை வெளிப்பட்டது. ஆனால் அதை ஒரு பயணித்த வடிவத்தில், நிறைவான வகையில் அவரால் அளிக்க இயலவில்லை. எத்தனையோ பாடல்களின் இடையீடுகளில், எத்தனையோ காட்சிகளின் பிண்ணணி இசையில், ஆயிரக்கணகான துணுக்குகளாய் இளையராஜா அற்புத பொறிகளை அளித்துள்ளார். அவையனைத்தும் ஒரு மாபெரும் கலைப்படைப்பிலிருந்து மேற்கோள் மட்டும் காட்டப்பட்ட ஒற்றை வர்ணணையை போல, பயணிக்காமல் போன ஒரு பெரும் இசையின் ஒரு பெயர்க்கப் பட்ட துண்டாய், 30 ஆண்டுகால சினிமா உலகில் சரியாய் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது.

சினிமா தவிர்த்து 80களின் இடையில் அவர் வெளியிட்ட 'Nothing but wind, How to name it?' ஆல்பங்கள், அண்மையில் வெளிவந்த 'திருவாசகம்' தவிர வேறு எங்கேயும் அவரின் இசை, அதன் ஓரளவு சாத்தியங்களுடனாவது பயணப்பட்டதாக தெரியவில்லை. ஒரு துணுக்கு வடிவத்திலேயே அவரின் இசை தேங்கிவிட்டதாக தோன்றுகிறது. இது குறித்த வருத்தம் எனக்கு பல காலமாய் இருந்தாலும், காலப்போக்கில் அது அர்த்தமற்றது என்றும் புரிந்தது. புதுமைப் பித்தனின் தனது கதை ஒன்றில் குழந்தை ஒன்று ஆற்றங்கரை படித்துறையில் உட்கார்ந்துகொண்டு பாதி காலை தண்ணீரில் மூழ்கியிருக்கும். 'சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளி வரும் பொழுது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம், குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும்.' அப்போது புதுமைபித்தன் எழுதுவார், "சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்துதான் ஆக வேண்டும். இளையராஜாவிடமும் நாம் அத்தகைய ஒரு குழந்தை அளிக்கும் சூரிய பிரகாசமாய், ஒரு இசைத் துணுக்கோ அல்லது பயணப்பட்ட ஒரு இசையோ கிடைக்க கூடிய சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதை தவிர, அது குறித்து விசனப்படுவதில் பொருளிருப்பதாக தெரியவில்லை.

அந்த வகையில் நமக்கு கிடைத்த துணுக்குகள் அத்தனையையும் (வைரம் ரத்தினம் என்ற திடமான வார்த்தைகள் அதை அர்த்தமற்று போகவைக்கக் கூடும்), வேறு ஒரு திறமை படைத்த, உழைக்கத் தயாரான ஒரு இசைஞனுக்கு பெரும் இசையை வேர்கொள்ள உதவும் விதையாக நாம் கருதலாம். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த ஏ.ஆர். ரகுமான் போன்றவர்கள் அதை கணக்கில் கொண்டாலே அது முக்கிய நிகழ்வாக இருக்க கூடும்.

(தொடரும்.)

Post a Comment

---------------------------------------

Tuesday, May 30, 2006

கண்கள் எங்கே?

சிலருக்கு போதையேற்றிக் கொண்டால், அது மேலும் மேலும் போதையேற்றிக் கொள்வதையே தூண்டிக் கொண்டிருக்கும். கஞ்சா அடிப்பவர்களில் இந்த பண்பு அதிகம் காணப்படும். அது மாதிரி ஒரு சில பாடல்கள் மட்டும் திரும்ப திரும்ப கேட்டும் அலுக்காத அதே நேரம், ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மீண்டும் புதிதாய் ஒலித்து, மீண்டும் அதையே கேட்க தூண்டிக் கொண்டிருக்கும். ஜேசுதாசின் 'ஏழிசை கீதமே', எஸ்பிபியின் இளமை எனும் பூங்காற்று', லதாவின் 'மௌஸம் ஹை ஆஷிக்கானா!' (பாகிஸா) போன்றவை எனக்கான அத்தகைய பட்டியலில் சில. அதில் முதலில் இடம்பெறும் பாடல் 'கண்கள் எங்கே?'.

இந்த பாடலை கணக்கற்ற முறை கேட்ட பின்பு, சுசீலாவை மட்டும் 'பாடகி' என்று அழைத்து மற்றவர்களை எல்லாம் வேறு ஏதாவது ஒரு வார்த்தையால் விளிக்க வேண்டும் என்பது என் தீர்க்கமான முடிவு. பெர்ஃபக்ஷன் என்பது இதற்கு மேல் சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. சுசிலாவை தவிர இதை இந்தியாவில் இருக்கும் வேறு எந்த பாடகியும் பாடமுடியும் என்றும் தோன்றவில்லை. பாடல் மிக மெதுவான வேகத்துடன் துவங்கி, நாம் வேறுபடுத்தி உணர முடியாத தொடர்சியுடன், மெள்ள மெள்ள வேகம் பெற்று ஒரு உச்சக்கட்டத்தை தொடுவதை உணரலாம். அதற்கான முக்கிய பாலமாக கோரஸை ஒரு வாத்தியத்தின் நிலையில் வைத்து எம், எஸ்.விஸ்வநாதன் பயன்படுத்தி யிருப்பதை கவனிக்கலாம். கோரஸ் இசை ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒவ்வொரு பாணியில் வெளிபடுகிறது. எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு வேறு வழியில்லாமல் தன் மோனாடனியை ஈடுகட்ட பயன்படுகிறது. ரஹ்மான் தேவையான அளவு திறமையாக பயன் படுத்துகிறார். இளயராஜா பல பாடல்களில் தனக்கே உரிய உச்சநிலையில் பயன்படுத்தியிருக்கிறார். உடனடி உதாரணங்களாக 'மடை திறந்து', ராமன் ஆண்டாலும், 'ஆசையை காத்துல' என்று பல பாடல்கள்; இப்போது திருவாசகத்தில். 'பொல்லா வினையேன்'; பாரதி திரைப்படத்தில் கடைசியில் வரும் 'நல்லதோர் வீணை செய்தே..' பாடலில் மிக அனாசியமான முறையில் கோரஸை பயன்படுத்தி குறிப்பிட்ட ஒரு சோக உணர்வை கொண்டு வருவதை உன்னிப்பாய் கவனித்தால் தெரியலாம், குறிப்பாய் பாடல் இறுதி பகுதியில். என்றாலுல் எம்.எஸ்.வி. அளவிற்கு எஃபக்டிவாக கோரஸை பயன்படுதியவர்கள் வேறு யாருமில்லை என்று என்றோ ஏற்பட்ட கருத்து மட்டும் மாற மாட்டேனென்கிறது. அதற்கு உதாரணமாக 'பார்த்த ஞாபகம் இல்லையோ' 'உன்னை நான் சந்தித்தேன்' அழகிய தமிழ் மகள் இவள்' என்று உடனடியாய் பல எண்ணிக்கைகளில் சொல்ல முடியும் என்றாலும், இந்த பாடல் அளவிற்கு கோரஸ் அற்புதமாய் இயைந்த ஒரு பாடல் வேறு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கோரஸை நீக்கி வேறு ஏதாவது செய்தால் பாடல் முற்றிலும் வீழ்ந்துவிடும் வகையில் கையாளப்பட்டிருக்கிறது.

எம்.எஸ்.வி. நேரடியாய் காப்பி அடிக்கும் பழக்கம் இல்லாதவராயினும், இசையமைக்க மேற்கிலிருந்து, ஹிந்தியிலிருந்து பல பாடல்களை இன்ஸ்பிரேஷனாக கொண்டவர். (அது தேவா மாதிரி 'இன்ஸ்பிரேஷன்' இல்லை என்றாலும், அதை பற்றி கூட நேர்மையாய் "காப்பியடிக்கலாம் தப்பில்லை, ஆனா காப்பியடிச்சது எவனுக்கும் தெரியக் கூடாது, எவனாலயும் கண்டு பிடிக்க முடியாத படிக்கு காப்பியடிக்கணும்" என்று எம்.எஸ்.வி. ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்.) அந்த வகையில் 'கண்கள் எங்கே?' பாடலுக்கு ஹிந்தியில் (மேற்கில் நிச்சயமாய் இருக்க முடியாது) எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. ஒரு வகையில் ஒப்பிடக் கூடியதாய் 'பியா தோஸே நைன லாகேரே' இருக்கலாமோ என்று ஏனோ சம்பந்தமில்லாமல் (கோரஸ் காரணமாக?) இந்த கணத்தில் தோன்றினாலும், ஒப்பிடக்கூடிய அனைத்து பாடல்களையும் விட அற்புதமானதாக 'கண்கள் எங்கே?' வடிவெடுத்திருக்கிறது என்பது என் எண்ணம்.

பாடலை கேட்க.

(பாடல் வரிகளை எழுதும் பொறுமை இப்போது இல்லை. மன்னிக்கவும்!)

Post a Comment

---------------------------------------
ஐஐடியிலிருந்து ஒரு குரல்.

ஐஐடி கான்பூர் ஃபாகல்டி உறுப்பினர்கள் பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிய கடிதத்தை முன்வைத்து பத்ரி விமர்சனம் எழுதியுள்ளார். ஐஐடிகாரர்களின் கடிதத்தில் எதிர்பார்பிற்கு மாறாக எதுவும் இல்லை. இதை இன்னொரு உதாரணமாக எடுத்துக் கொள்வதை தவிர வேறு எதுவும் இப்போது சொல்ல எனக்கு இல்லை.

அதே ஐஐடி கான்பூரில் இருக்கும் பேராசிரியர் ராகுல் வர்மன் எழுதிய ஒரு கட்டுரை எனக்கு மின்னஞ்சலில் கிடைத்தது. கூகுளீயதில் கிடக்கவில்லை, அதனால் இணையத்தில் இருக்கிறதா, அதாவது பொதுப் பார்வைக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. கீழே அதை முழுதாய் தருகிறேன். அவர் பெயரை வெளியிட அனுமதி கேட்டிருக்கிறேன். கிடைத்தால் இங்கே தருகிறேன். தமிழ்படுத்த முடியாததை எல்லோரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இகாரஸ் பிரகாஷ் அம்பேத்கார்.ஆர்ஜில் கட்டுரை இருப்பதை கண்டெடுத்து தந்தார். அதனால் கட்டுரையின் நீளம் கருதி, முழு கட்டுரையையும் இங்கே தருவதை தவிர்த்து, கட்டுரைக்கான சுட்டியை மட்டும் தருகிறேன். இகாரஸிற்கு நன்றி.

Post a Comment

---------------------------------------
ஸ்ரீரங்கனுக்காக!

நண்பர் ஸ்ரீரங்கன் புலிகள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தன்னை தேடுவதாகவும் ஒரு பதிவு எழுதியுள்ளார். அது தனது கடைசி பதிவாகவும் இருக்கலாம் என்று எழுதியுள்ளார். இதை இலகுவாக எடுத்து கொள்ள முடியாதுதான். வறலாறு அப்படியிருக்கிறது! புலிகள் மீது களங்கம் கற்பிக்க யாராவது கிளப்பி விட்டிருக்கலாம், தலைமைக்கு தெரியாமல் பொடியன்கள் ஆடலாம் என்றெல்லாம் யாராவது சொன்னால் விரக்தி சிரிப்பு மட்டுமே வரும். களங்கம் புதிதாக வர, அதையும் கற்பிக்க என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. 'இப்படி சொல்லிவிட்டு செய்வார்களா' என்றும், ஜெர்மனியில் செய்வார்களா என்பதும், இன்னும் பல லாஜிக்கல் கேள்விகளைக் கேட்பதும் மகா அபத்தமானது என்பது வறலாற்றை பார்த்தால் தெரியும். உலகின் கருத்து பற்றி புலிகளுக்கு பெரிய கவலை முன்பு இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் சமாதான பேச்சுக்கள் என்ற அவல நாடகம் காரணமாய் கவலை கொள்ளலாம் என்று தோன்றினாலும், தனிமைபடுத்தப் பட்டுகொண்டிருக்கும் சூழலில் அதை பற்றி கவலைப்படாமல் கூட போகமுடியும். ஆனாலும் ஐரோப்பாவில் மட்டுமே இன்னும் இயங்க கூடிய வகையில் தற்பொழுது தடையில்லாமல் இருக்கும் நிலையில், செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்படிக்கூட ஒரு சால்ஜாப்பை சொல்ல பயமாய்தான் இருக்கிறது. அந்த வகையில் வறாலற்றில் புலிகள் ரத்தக்கறை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் நான் தனிப்பட்ட முறையில் இது ஒரு வெத்து மிரட்டலாக மட்டும் இருக்கும் என்று நம்புகிறேன். மிரட்டி, அதன் மூலம் ஸ்ரீரங்கனின் எழுத்தை தடுப்பது நோக்கமாக இருக்கலாம், செயலில் இறங்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். (அதுவும் கண்டிக்கத் தக்கதுதானே என்று கேட்டால், ஆமாம் அதிலென்ன சந்தேகம்! ஆனால் இப்போது நமக்கு இன்னும் முக்கியம் ஸ்ரீரங்கனின் உயிர்.) இவ்வாறு நான் நம்ப முக்கிய காரணம் புலிகள் இதுவரை செய்த கொலைகள் அனைத்துமே அரசியல் முக்கியத்துவம் வாய்தவை, அவர்களுக்கான லாபநோக்கில் செய்யப்பட்டவை என்ற என் புரிதல்தான். ஸ்ரீரங்கன் புலிகளுக்கான வருவாயை தடுக்கும் விதமாகவோ, உள்ளூரில் புலிகள் இயங்குவதற்கான சவாலாகவோ, அவர் மூலம் (இன்னும் அறியப்படாத உண்மை) ஏதாவது வெளிவரகூடும் என்றால் நிச்சயமாய் செய்வார்கள். அப்படி புலிகள் தீர்மானித்து விட்டால் காப்பாற்ற யாரும் இல்லை என்றுதான் முடிவு செய்துகொள்ள வேண்டும். அந்த வகையில் புலிகள் புள்ளி வைத்து விட்டால் புஷ்ஷை கூட போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்பது எண்ணம். ஆனால் அப்படியில்லாமல் வெறும் வலைப்பதிவில் எதிர்த்து எழுதுவதற்காக இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் வன்முறை பயங்கரவாதத்தை கைகொண்டாலும், ஒரு கார்பரேட் நிறுவனம் அளவிற்கு லாபநஷ்டங்களை ஆராய்பவர்கள், அவர்களுடய இன்றய வெற்றியடைந்த நிலைக்கு அதுவும் ஒரு காரணம் என்ற புரிதலில் இதை சொல்லுகிறேனே ஒழிய, அவர்களின் சகிப்புதன்மையை முன்வைத்து அல்ல.

ஆனாலும் இப்படி சொல்ல தயக்கமாகவும், பயமாகவும் இருக்கிறது. ஸ்ரீரங்கன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் அவருடன் தொடர்பை தொடர்சியாய் வைத்து அவர் பற்றிய தகவல்களை அவ்வப்போது எழுத எழுத வேண்டும். நானும் முயற்சிக்கிறேன். புலிகளை (அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளாமல், ஆனால் வேறு வழிவகையில்லாமல்) ஆதரிப்பவர்களும் ஸ்ரீரங்கனுக்கு ஆதரவாக ஆறுதலாக குரல் கொடுக்க வேண்டும். எல்லா வகையிலும் அவர் பக்கம் நிற்க வேண்டும். இட நினைத்த பின்னூட்டம் பெரிதாகி விட்டதால் இங்கே இடுகிறேன்.

இது குறித்த பெயரிலியின் பதிவு.

Post a Comment

---------------------------------------
சாமியாரும், குழந்தையும், சீடையும்...

-- புதுமைப்பித்தன்.


"மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.

"இருவரும் மாறி மாறிப் போட்டி போட ஆரம்பித்தார்கள். இன்னும் போட்டி முடியவில்லை.

"நேற்றுவரை பிந்திப் பிறந்த கடவுளுக்கு முந்திப் பிறந்த மனிதன் ஈடு காட்டிக் கொண்டு வந்தான்

"இதில் வெற்றி -தோல்வி, பெரியவர் -சின்னவர் என்று நிச்சயிப்பதற்கு எப்படி முடியும்?

'நிச்சயிக்க என்ன இருக்கிறது?" ...


இப்படியாக பின்னிக் கொண்டே போனார் சாமியார். எதிரிலே தாமிரவருணியின் புது வெள்ளம் நுரைக் குளிர்ச்சியுடன் சுழன்று உருண்டது.

அவர் உடகார்ந்திருந்தது ஒரு படித்துறை. எதிரே அக்கரையில் பனைமரங்களால் புருவமிட்ட மாந்தோப்பு; அதற்கப்புறம் சிந்துபூந்துரை என்று சொல்வார்களே அந்த ஊர். இப்பொழுது பூ சிந்துவதற்கு அங்கு மரம் இருக்கிறது. அதைப்போல எண்ண குலவையும் ஏமாற்றத்தையும் சிந்துவதற்கு சுமார் ஆயிரம் இதயங்கள் துடிக்கின்றன. துடிப்பு நின்றவுடன் வைத்து எரிக்க அதோ சுடுகாடு இருக்கிறது. இப்பொழுது இந்த நிமிஷத்தில் கூடத்தான் அது புகைந்து கொண்டிருக்கிறது. தோல்வியின், ஏமாற்றத்தின் வாகனங்களை வைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருப்பது பலவீனந்தானே? பலவீனத்தை வைத்துக் கொண்டு நாலு காசு சம்பாதிக்க பிச்சைக்காரனுக்கு முடியும். மனுஷனால் வாழமுடியுமா? அதனால்தான் இந்தச் சுடுகாடு என்ற ரண சிகிச்சை டாக்டர், வாழ்க்கை என்ற நோயாளிக்கு மிக அவசியம்.

அதை இந்த சாமியார் அறிந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் இவருக்கு விரக்தி ஏற்பட்டது. இவருக்கு இடது பக்கத்தில் சுலோசன முதலியார் பாலம். கட்ட பொம்மு சணடையின் போது சமரசம் பேச முயன்ற துபாஷ் அவர். அவர்தான் அதை கட்டினது. திருநெல்வேலிக்காரர்களுக்கு அதில் அபாரப் பெருமை. முட்டையும் பதினீரும் விட்டு அரைத்த காரையில் கட்டியதாம். அதில் ஒரு தனிப் பெருமை.

இதற்கு முன் எப்போதோ ஒரு முறை இதுபோல வந்த வெள்ளம் அடித்துக் கொண்டு வந்த வைக்கோல் போர், முன் பல்லை தட்டின மாதிரி இரண்டு மூன்று கணவாய்களை பெயர்த்துக் கொண்டு போய்விட்டது. இப்பொழுது மறுபடியும் கட்டிவிட்டார்கள். பொய்ப்பல் கட்டிகொண்டால் எப்படியும் கிழவன் தானே; அப்படித்தான் அதுவும் வயசு முதிர்ந்த நாகரிகம் ஒன்று தன்னை வலுவுள்ளது மாதிரிக் காட்டிக்கொள்வது போன்றிருந்தது. அதற்கும் சற்று அப்பால் பொதிகை. குண்டுக்கல் மாதிரி ஒரு குன்று. தெத்துக்குத்தான வானத்தின் சிவப்புக் கோரச் சிரிப்பை தாங்குவது போலப் படுத்திருந்தது குன்றின் தொடர்.

சாமியாருக்குப் பின்புறத்தில் சுப்பிரமணியன் கோவில்.அதாவது வாலிபம், வலிமை, அழகு, நம்பிக்கை இவற்றை யெல்லாம் திரட்டி வைத்த ஒரு கல் சிலை இருக்கும் கட்டிடம். அதற்கு பின்னால் ஒரு பேராய்ச்சி கோவில். மேற்குத் திசையின் கோரச் சிரிப்பிற்கு எதிர்ச் சிரிப்பு காட்டும் கோர வடிவம். இருட்டில் மினுக்கும் கோவில். வாலிபமும் நம்பிக்கையும் அந்த கோரச் சிரிப்பின் தயவில் நிற்பது போல, சாமியாரின் முதுகுப் புறத்திலிருந்தன.

அவர் வெறுத்து விட்டவை; ஆனால் மனிதனால் வெறுக்க முடியாதவை. அதனால்தான் அவரது முதுகுப் புறமானது அவற்றிற்கு அப்பால் விலகிச் செல்ல முடியாது தவித்தது.

சாமியாரின் வலது பக்கத்தில்...

சாமியாரின் வலது பக்கத்தில் ஒரு சின்னக் குழந்தை, நான்கு வயசுக் குழந்தை, பாவாடை முந்தானையில் சீடையை மூட்டை கட்டிக் கொண்டு, படித்துறையில் உட்கார்ந்து காலைத் தண்ணீரில் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது. சின்னக் கால் காப்புகள் தண்ணீரிலிருந்து வெளி வரும் பொழுது ஓய்ந்துபோன சூரிய கிரணம் அதன் மேல் கண் சிமிட்டும். அடுத்த நிமிஷம் கிரணத்திற்கு ஏமாற்றம், குழந்தையின் கால்கள் தண்ணீருக்குள் சென்று விடும். சூரியனாக இருந்தால் என்ன? குழந்தையின் பாதத் துளிக்கு தவம் கிடந்துதான் ஆக வேண்டும்.

குழந்தை சீடையை மென்று கொண்டு சாமியாரை பார்கிறது.

சாமியார் வெள்ளத்தை பார்கிறார். வெள்ளம் இருவரையும் கவனிக்கவில்லை.

"மனிதன் நல்லவன் தான்;தான் உண்டாக்கின கடவுளிடம் அறிவை ஒப்படைத்திருந்தால் புத்திசாலியாக வாழ்ந்திருக்க முடியும். அப்பொழுது அது தன்னிடமிருந்த தாக அவனுக்கு தெரியாது. இப்போழுது அறிவாளியாக அல்லல் படுகிறான்.

"சிருஷ்டித் தொழிலை நடத்துகிறவனுக்கு அறிவு அவசியம் என்பது அவனுக்கு அப்போது தெரியாது. இப்போழுது அவஸ்தைப் படுகிறான். அதற்காக அவனை குற்றம் சொல்ல முடியுமா?

"மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்குக் கடவுள் என்று பெயர். மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக் கூடியது.

"அதனால்தான் காத்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் துறு துறுத்த கைகள். அதனால்தான் பிசகுகளின் உற்பத்தி கணக்கு வரமபை மீறுகிறது..." என்றார் சாமியார்.

துறையில் தலை நிமிர்ந்து வந்த நாணல் புல் ஒன்று சுழலுக்குள் மறைந்துவிட்டது. குழந்தையும் 'ஆமாம்' என்பது போல் தலையை அசைத்துக்கொண்டு ஒரு சீடையை வாயில் போட்டுகொண்டு 'கடுக்'கென்று கடித்தது.

அந்த படித்துறையில் 'கடுக்'கென்ற அந்த சப்தத்தைக் கேட்க வேறு யாரும் இல்லை.



(கையில் புதுமை பித்தனின் ஒரே ஒரு தொகுப்புதான் உள்ளது, ஐந்திணை பதிப்பகம் முன்னாளில் போட்ட சின்ன சின்ன தொகுப்பு. மற்றவை பலரால் சுடப்பட்டு விட்டதால் அதிலிருந்த சொற்பமான கதைகளில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம். முதலில் 'கயிற்றரவு' கதையை தட்டச்சிட தொடங்கியிருந்தேன். பிறகு நீளம் கருதி இந்த கதையை அடித்தேன். புதுமைபித்தனை இதுவரை படிக்காதவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் (இப்போதய நினைவில் சில) கதைகள் துன்பக்கேணி, நாசகார கும்பல், பிரம்ம ராக்ஷஸ், உபதேசம், காஞ்சனை, கயிற்றரவு, நிகும்பலை, சாபவிமோசனம் ..... )

Post a Comment

---------------------------------------
சொல்லித் தந்த பூமி!

ஒரு வருடத்திற்கும் மேலாக என் வீட்டில் இந்த அதிசயம் நடந்து வருகிறது. பையனுக்கு ஒன்றரை வயது. எல்லா குழந்தைகளை போல பல காரணங்களுக்காக அவன் அழுவதை, சில நேரங்களில் மிக தீவிரமான குரலில் அழுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. குழந்தையின் அழுகைக்கு பொதுவாக பசி, தூக்கமின்மை காரணமாய் இருக்கலாம். அப்படியில்லாமல் நம்மால் எளிதில் விளங்கி கொள்ள இயலாத பல காரணங்களினாலும் குழந்தைகள் அழ நேர்கிறது. எளிதில் தெரிந்துணர முடியாத உடல் உபாதை, உடை அணிகலனின் உறுத்தல் தொடங்கி, மூளை பாகங்களின் புதிய வளர்ச்சி வரை பல காரணங்கள் இருக்க கூடும். இப்படி தீவிரமான காரணங்கள் எதுமில்லாமலே அல்லது நம் ஊகங்களுக்கு அப்பாற்பட்ட காரணங்களால் கூட கட்டுபடாமல் குழந்தைகள் அழக்கூடும்.

கி. ராஜநாராயணன் 'கரிசல் காட்டு கடிதாசிகள்' தொகுப்பில், விடாமல் பல மணிநேரங்கள், யாராலும் சமாதான படுத்த முடியாமல், தொடர்ந்து அழுத குழந்தையை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதியிருப்பார். வயதான மூதட்டி ஒருவர் , நாலு முள வேட்டியை இரு பக்கங்களிலும் பிடித்துகொள்ள செய்து, குழந்தையை அதில் சரித்து வைத்து, குறிப்பிட்ட கோணத்தில் ஆட்டி அழுகையை நிறுத்தியது பற்றி எழுதியிருப்பார். அதற்கான நவீன மருத்துவத்தின் விளக்கம் எதுவும் இல்லாமல் இருப்பது பற்றி கட்டுரை பேசும்.

நவீனமாக்கி கொண்ட வாழ்க்கையில் இது போன்ற மரபு வைத்தியங்கள் கிடைப்பதில்லை. தலைமுறை தலைமுறையாய் பாடபட்டு வரும் பாட்டியின் பாடல்கள், கதைகள் என் மகனுக்கு கிடைக்கப் போவதில்லை. நவீன வாழ்க்கையின் பல பயன்/வசதிகளில் இது போன்ற அரிய இன்பங்கள் அவனுக்கு நிராகரிக்கப் படுகிறது. தளையற்ற முறையில், பாரபோலிக் பாதையில் மூத்திரம் அடிக்க கூட, அவனை ஜப்பானில் இருந்த 8 மாதங்களுக்கு அனுமதிக்கவில்லை என்பது, அதைவிட எல்லாம் கொடுமையாய் படுகிறது. ஜப்பானில் இருந்த அவனது எட்டு மாதங்களில், ஜப்பானிய தத்தாமி அறையை அசிங்கம் செய்தால், காலி செய்யும் போது கட்டவேண்டிய தொகையை நினைத்தாவது 'நாப்பி' என்ற கருமத்தை போட்டு, நான் பெற்ற இன்பத்தை அவனுக்கு தராமல் கொடுமை படுத்த வேண்டியிருந்தது. அதைவிட கொடுமையாய் படுவது ஒரு குழந்தைக்கு தன் குஞ்சில் அளையும் சுதந்திரத்தை நிராகரிப்பது. கைக்கு இலகுவாக எட்டகூடிய இடத்தில் கிலுகிலுப்பை வடிவில், பிசந்து ஆட்டகூடிய கவர்ச்சியுடன் இருக்கும், தனது குஞ்சை தொடக்கூட விடாமல், இந்த டைஃபர் கருமத்தை போட வேண்டி யிருந்தது. அவன் அழும்போது இந்த கோபமெல்லாம் கூட சேர்ந்து கொள்ளுமோ என்னவோ!

பசி, தூக்கம் தவிர்த்து நமக்கு புலப்படாத காரணங்களால் அழ நேரிடும் போது, நாம் செய்ய கூடிய ஒரே விஷயம் கவனத்தை திசை திருப்புவது. பிறந்த சில மாதங்களுக்கு கிலுகிலுப்பையின் நவீன வளர்ச்சியடைந்த விளையாட்டுப் பொருட்கள் உதவக் கூடும். கனமான நிறங்கள், குறிப்பாய் சிவப்பு, கனமான நீலம் கவனத்தை கவரக் கூடியவை. சிவப்பு மூடியிட்ட டப்பாக்கள், கொடியில் ஆடும் அம்மாவின் திக் நீல நிற நைட்டி, இவற்றின் அருகே தூக்கி காட்டலாம். அவருக்கு அதைவிட மேலே உத்திரம் பார்வையில் ஆடிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஜப்பானில் நிலம் நடுங்கினாலொழிய, தானே ஆடக்கூடிய சாத்தியம் இல்லாததால், அவரை தூக்கி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். மேலே உத்தரம் எதிர்திசையில் நகர்வதற்கான காரணத்தை கண்கொட்டாமல் ஆராய்ந்து கொண்டிருப்பார். கொஞ்சம் சுமாராய் பாடுவதாக எனக்குள் பலர் ஏற்றிவிட்ட எண்ணத்தின் காரணத்தினால், எழுபதாண்டு தமிழ் திரைப்படப் பாடல்களில் அந்த நேரத்தில் தோன்றுவதை நடிப்புடன் பாடுவேன். இப்படி பாடிய பல பாடல்களில், எதிர்பாராத விதமாய் அவன் தானே செட்டிலாகி கொண்டதுதான் 'அள்ளி தந்த புமி அன்னை அல்லவா!'.

வீம்பான அழுகையின் போதெல்லாம் இந்த பாடலை பாடினால் அவன் அழுகை நின்று அழுத்தமாய் என் முகத்தையே கவனிப்பதை, துணைவிதான் முதலில் கவனித்தாள். பிறகு அது பழக்கமாகி எத்தனையோ முறை அழுத போதெல்லாம், படலின் துவக்க ஹம்மிங்கை இழுக்கத் தொடங்கியவுடனேயே, விசை அமுங்கியது போன்ற கணப்பொழுதில் அழுகை நின்று, நான் பாடுவதையே கவனிக்கத் தொடங்கினான். இது மிகவும் பழகி, அவன் ஒவ்வொரு முறை அழும்போதும் இந்த பாடல் (என் குரலில் அல்லது மியூசிக் இண்டியா ஆன்லைன் தயவில், இறுதியில் டீ நகரில் கண்டெடுக்க நேர்ந்த MP3 மூலம் தேவையான வால்யூமில் 'மலேசியா' பாட) ஒரு நிவாரணமாகவே எங்களுக்கு வாய்த்தது. அழத் தொடங்கி பசி, தூக்கம், உறுத்தல் போன்ற காரணங்கள் இன்றி, இந்த பாடலையும் மீறி அழுகை தொடர்ந்தால், அது விபரீதமானது என்ற எங்களின் அனுமானம் தவறவில்லை. இரண்டு தீவிரமான தருணங்களில் இந்த அனுமானம் உதவிய பயனை மறக்க இயலாது.

இந்த மாயத்தை என் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் சொன்ன போது அவர் முதலில் சிரித்த விதம் மிகவும் எரிச்சல் தந்தது. நான் புண்படக் கூடாது என்று, 'எப்படியோ வாழ்க்கைல இந்த மாதிரி அஸம்ஷன்ஸும் சுவாரசியமும் தேவைதான்' என்ற வகையில் சொன்னது மேலும் எரிச்சலை மட்டுமே வரவழைத்தது. அவரிடம் அது குறித்து மேலே பேசுவதில்லை என்று முடிவு செய்தேன்.

இன்னொரு நண்பனிடம் பேசிய போது, முதல் முறை நான் பாடிய போது, பாடிய தருணத்தில் எதாவது நிவாரணம் ஏதேச்சையாய் கிட்டியிருக்கலாம்; உதாரணமாய் வலியோ உறுத்தலோ இருந்து, தூக்கி கொண்டு பாடும் போது, அது நீங்கியிருக்கலாம்; இதை ஒத்த வேறு காரணமும் இருக்கலாம் என்று தர்க்க பூர்வமாய் அணுகினான். அவன் சொன்ன காரணம் உண்மையாகவே இருக்கலாம். நமக்கு புலப்படாவிட்டாலும், நாம் கையில் வைத்திருக்கும் சட்டகத்தினுள் விளங்காவிட்டாலும், இயற்கை தனக்கான ஒரு சட்டகத்தினுள் எல்லாவற்றிற்கான விளக்கங்களை அடக்கி கொள்கிறது என்ற அடிப்படையில்தானே மனித இனம் தன் அறிதலை விரிவாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக இந்தப் பாடல் மீதான மகனது ஈர்ப்பு குறையாமல், அதன் டெசிபல்களின் மாயத்தனம் தரும் ஆச்சரியத்தை, ஏதாவது தர்க்கத்தை அளித்து சாதாரணமாக்கி விட என் மனம் ஒப்பவில்லை. கடவுள் இறந்து விட்ட உலகில், கற்பிதங்களும், தர்க்கத்திற்கு பிடிபடாமல் அதற்கு அப்பாற்பட்டதாய் தோன்றும் நம்பிக்கைகளும், வாழ்வின் அத்தியாவசியமாக தோன்றுகிறது. ஒரு குழந்தையை கொண்டு அதை அடைவதே இயல்பானதாகவும் இருக்க முடியும். அதை மிக எளிதாக விளங்கிக் கொள்ள மனம் ஒப்பவும் இல்லை. அதற்கு பிறகு யாரிடமும் இதை பற்றி பேசியதில்லை. பல மாதங்கள் கழித்து இங்கே பதிகிறேன். இப்போது பாடலுக்கான மரியாதை ரொம்பவே குறைந்துவிட்டது. வளர்ந்து மொழி வழியில் சிந்திக்கத் தொடங்கத் தொடங்கும் பருவத்தில், இந்த அதிசயம் மறந்து எல்லாம் சாதாரணமாகவும் ஆகி விடக்கூடும்.

பாடலை கேட்க.

சொல்லத்தேவையில்லை இசை: இளயராஜா.
படம்: நண்டு
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

அள்ளித் தந்த பூமி அன்னை யல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை யல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் -
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா!
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்.

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வாசல்கள்
விசிறியாகும் நாணல்கள்
மனத்தில் ஊறும் மகிழ்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியுமில்லை.


Post a Comment

---------------------------------------

Monday, May 29, 2006

இன்னும் சில கவிதைகள்.

(புத்தகங்களுக் கிடையில் மனப்போக்கில் தேடியதில் சிக்கி, இந்த தருணத்தில் உள்ளுணர்வு தேர்வு செய்த, சில கவிதைகளை இங்கே தட்டுகிறேன். இது எந்த விதத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமான கவிதைகள், சிறந்த கவிதைகள் என்ற வகையில் தேர்வு செய்யப்பட்டவை அல்ல. கையிருப்பில் குருட்டாம் போக்கில் தேர்வு செய்யப்பட்டவை. நான் உண்மையில் தட்ட நினைத்த வேறு சில பிரமீள், ஆத்மாநாம், கலாப்பிரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், இன்னும் பலரது கவிதைகள் இப்போது கைவசமில்லை என்பதால்....)



மௌனமாய் ஒரு சம்பவம்.

-- தேவதேவன்.


கால்களை இடறிற்று ஒரு பறவை பிணம்.
சுற்றிச் சூழ்ந்த விஷப்புகையாய் வானம்.
கலவர முற்ற பறவைகளாய்
திசையெங்கும் குழம்பி அலையும் காற்று
பீதியூட்டுகிறது மரங்களின் அசைவு
மெல்ல நெருங்குகிறது
சலனமற்றிருந்த ஒரு பூதாகாரம்.

விரைத்து போய்
ஆழ ஆழ மூழ்குகிறேன் நான்
முழுக்க முழுக்க நீரால் நிறைந்த
என் தலைமறைவுப் பிரதேசத்திற்குள்.

என் உள்ளங்கை முத்தாய் ஒளிரும் இது என்ன?
வீணாகிப் போகாத என் இலட்சியமோ?
என் துயர்களை ஆற்றத்
தூதாய் வந்த வெறுங் கனவோ?

என்ன பொழுதிது?
மீண்டும் எட்டிப் பார்கிறேன்:
சலனம் கெட்டித்திருக்கும் இவ்வேளையுள்ளும்
காலம் திகட்டாது
கல்லுக்குள் தேரையான
என் உயிர் பாட்டின் வேதனை.
என் நோய் தீரும் வகை எதுவோ?

இரத்தக் கறைபடிந்த சரித்திரமோ நான்?
இயற்கை புறக்கணித்து வளர்ந்த
அதிமேதாவிக் கொழுந்தோ?
அன்பால் ஈர்க்கப்பட்டு
இன்று இம் மலைப்பிரதேசம் வந்து நிற்கிறேன்.

முடிவுறாத காலச் சங்கிலி
தன் கணத்த பெருமூச்சுடன்
கண்ணுக்கு புலனாகாமல் நிற்கிறதோ,
இப்பள்ளத்தாக்கின் மவுனத்திடம்
ஒரு தற்கொலையை வேண்டி?

எதோ ஒன்று
யாருக்கும் தெரியாமல்
மவுனமாய் நடந்து கொண்டிருக்கிறது.



பனம் பழம்

--- அச்சுதன் தங்கவேல் முருகன்


முப்புரி சுற்றிய
மூளை பொட்டலத்தான்களுக்கு
முப்பத்தி முக்கோடிக் குறி
இனம் மொழி இஸம் என
அவை செய்யும் ஏராள விறைப்பு வித்தைகள்
முப்புரி அரைஞாணாகும் நிர்பந்தச் சூழலின்று
வழக்கம் போல்
வைதீகக் கோவணத்துள்ளிருந்து
விறைக்கிறது புதிய 'தலித்'
அது சரி
பனம் பழம் திங்கும் பாமரனுக்கு தெரியாதா
'பாப்பான் பொச்சும் பறையன் பொச்சும்'



Untitled

A.M. Budzish


அட முஹம்மதுவே

யேசு கிறிஸ்து
ஒரு சிறந்த
ராக்-இசை நாடகத்தில்
சூப்பர்-ஸ்டாராக இருந்தான்.

ஆனால் தடை செய்யப்பட்ட நாவல்களிலும்
நிராகரிக்கப் பட்ட கவிதைகளிலுமே
நீ தோன்றுகிறாய்.

(மொழி பெயர்ப்பு: எஸ் பாலச்சந்திரன். நன்றி: உன்னதம். )



வரைபடக் கடல்

--T. கண்ணன்


கடலறியா
நினைவின் உறைகுளிர் குகையொன்றில்
நான் வரைந்த விரல்களின் தழும்பைத்
தடவிப் பார்தேன்

உணராது காணாது ஒப்பிப்பில்
வரைந்த வரைபடக் கடலது
தழும்பகன்ற கடல் கண்டுணர் அறிவுடன்
மீண்டும் படக் கடல் வரைய விழைந்து
காலம் தாண்டி என் மேசையமர்ந்தேன்

அருகமர்ந்தான் என்னருகே மூலிகை
மணம் பரப்பும் காந்த கண்
சிறுவன் நான் காகிதத்துடன்
நீலம் தடவி காகிதத்துள் நிறம் சேர்தேன்
உப்பை தேய்த்துக் காற்றை பூசினேன்
V வரைந்து பறவை உள்நுழைத்தேன்
படகு தீட்டி வலு சேர்த்தேன்
ரேகை பதித்து அலை மற்றும்
சூரிய சந்திரருக்காய் அடிவான வட்டம்
நான் காண எனை நகல் செய்யும்
அருகாமை சிறுவன் நான்
என் வரைபடம் அதன் அருகே செல்லச்
செல்ல விலகிக்கொண்டே இருந்தது கடல்
விரக்தியின் விரல்களால் படம் கிழித்தேன்
கிழிந்த காகிதத் துண்டுகளில் சொட்டிக்
கொண்டிருந்தது நீர்
சிறூவன் நான் தான் வரந்த படத்தில்
கப்பல் செய்து அதில் மிதக்க விட்டான்
நெகிழ்ந்து நான் அவன் விரல் பற்ற
வடுவில்லை அதில்
சிரித்தபடிக்கு வெளியேறினான்.



தீவினைப்பூக்கள்

--பிரம்மராஜன்


தீவினைப் பூக்களை தீண்டுவதும் அணை உடைக்கும் இன்பம்
கனிகளின் கனிவில் வியர்வை மூச்சாகும்
குலையும் கூலாங்கற்கள் சீறிச்சாகும்
ரகசியங்களில் கசிந்துருகும் காம சேகரம்
இசைந்து புண்ணாகும் பெண்ணின் பேய் வழி
கற்றும் மறந்துவிடும் விருப்பின் பேதபின்னம்
வக்ர ராகங்களின் போதை மிஞ்சும்
குப்புற மிதக்கும்
மதகின் திருகில் அருகில்
ஈர்ப்புகளை வென்ற சுயம்
இன்னும் சாமந்திப் பூக்களின் புழுக்களை வியக்கும்
நாளும் நாளும்
நீள்கிற போதிலும்
அபயம் கேட்கும் மனம்
நித்ய கன்னியிடம்
பேசா மடந்தை எனில்


(நன்றி: உன்னதம், சிலேட் இதழ்கள்)

Post a Comment

---------------------------------------
3 கவிதைகள் - பிரமீள்.

மொழியின் தீராத பக்கங்களில் கவிதையின் வாழ்வை எழுதிச் சென்ற பிரமீள்.

(பிரமீள் இறந்த பின், 'உன்னதம்' இதழில் சித்தார்த்தன் எழுதிய அஞ்சலி குறிப்பிற்கு நான் அளித்த தலைப்பு.)



அறைகூவல்

இது புவியை நிலவாக்கும்
கண்காணாச் சரக்கூடம்.

நடுவே நெருப்புப் பந்திழுத்து
உள்வானில் குளம்பொலிக்கப்
பாய்ந்துவரும் என் குதிரை.

பாதை மறைத்து நிற்கும்
மரப்பாச்சிப் போர்வீரா!
சொல் வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தோலும் தசையும்
ஓடத் தெரியாத
உதிரமும் மரமாய்
நடுமனமும் மரமாகி
விரைவில்
தணலாகிக் கரியாகும்
விறகுப் போர்வீரா!

தற்காக்கும் உன் வட்டக்
கேடயம்போல் அல்ல இது.

சொற்கள் நிலவு வட்டம்
ஊடே
சூரியனாய் நிலைத்(து) எரியும்
சோதி ஒன்று வருகிறது.

சொல்வளையம் இது என்றுன்
கேடயத்தைத் தூக்கி என்னைத்
தடுக்க முனையாதே.

தீப்பிடிக்கும் கேடயத்தில்
உன்கையில் கவசத்தில்
வீசத் தெரியாமல்

நீ ஏந்தி நிற்கும் குறுவாளில்
யாரோ வரைந்துவிட்ட
உன் மீசையிலும்!

நில் விலகி,
இன்றேல் நீராகு!



முதுமை

காலம் பனித்து விழுந்து
கண்களை மறைக்கிறது.
காபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப்பின்னி
ஓய்கிறது மூளைச்சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக் காற்று
வாரியிரைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப் போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்
அந்தியை நோக்குகிறேன்:
கதிர்க்கொள்ளிகள் நடுவே
எதோ எரிகிறது...
ஒன்றுமில்லை பரிதிப்பிணம்.



முடிச்சுகள்

கீழே நிலவு
நீரலையில் -
சிதறும் சித்தம்
சேரக் குவிகிறது
மேலே நிலவு.

' மலைமேல் நிலா ஏறி
மழலைக்குப் பூக்கொண்டு
நில்லாமல் ஓடிவரும்
குடிசைக்குள் சிதறும்
கூரைப் பொத்தல் வழி
மல்லிகை ஒளி.


மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று ஆகி
அது என்ன உளிச்சத்தம்?
கல்லை செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

ஜாதியம்தான் வாய் ஓதும்
நாளாந்த வேதம்
அப்பப்போ வாய்
கொப்பளித்துச் சாக்கடையில்
துப்பும் எச்சல்
வேதாந்த வாயலம்பல்.


சாக்கடைக்கும் சமுத்திரத்துக்கும்
சேர்ந்தாற்போல் சாந்நித்யம்
நிலவொளியில்


முடியாது மணலைக்
கயிறாய் திரிக்க
காலத்தைக் திரித்து
நேற்று நாளை
இரண்டுக்கும் நடுவே
இன்று முடிந்திருக்கிறது
முடிச்சின் சிடுக்கு - நான்.

அத்துவிதம் கணந்தோறும் நான்
செத்த விதம்

சொல்வேன் உண்டென்று
சொல்லில் இல்லாதது

சொல்வேன் உண்டென்று சொல்லில்,
இல்லாதது

சொல்வேன் உண்டென்று
சொல், இல்
இல்லாத
அது.

(இந்த கவிதையின்
டிவத்தில் அடுத்தடுத்த பத்தி வேறு இடங்களில் அலைன் ஆகவேண்டும். ஏனோ ப்ளாகர் மறுக்கிறது.)


பிரமீளின் கவிதைகள் சுந்தரமூர்த்தியின் பதிவுகளில்.

பிரமிள் கவிதைகள் - 1

பிரமிள் கவிதைகள் - 2

பிரமிள் கவிதைகள் - 3 - குறுங்காவியம்
கண்ணாடியுள்ளிருந்து

பிரமிள் - மேலும் சில குறிப்புகள்

Post a Comment

---------------------------------------
அறைகூவல்!

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதையை பிகே சிவக்குமார் தன் பதிவில் போட்டு, அதை முன்வைத்து தனது சிந்தனைகளாக கொஞ்சம் கதைத்திருந்தார். ரவி ஸ்ரீனிவாஸ் அதற்கு எதிர்வினையாக தன் வறலாற்று ஞானத்தை முன் வைத்திருந்தார். இந்த சண்டையை பற்றி என் கருத்துக்களை எல்லாம் எழுதத் தொடங்கினால், நட்சத்திர வாரத்தின் துவக்கத்திலேயே 'அமங்கலமாய்' கதைப்பதாக விடும். அது குறித்து பேசுவதல்ல என் நோக்கம். இதை முன்வைத்து, பசுவய்யா, பிரமீள் பற்றி ஸ்வீப்பிங்காக (அதாவது ரொம்ப விளக்கம் தராமல்) என் கருத்துக்களை முன்வைப்பது மட்டுமே. (ஆனால் தப்பித்து போகாமல் இந்த சண்டை பற்றி மொட்டையாய் சொல்வதென்றால், அது சிவக்குமார் சார்பாகத்தான் இருக்கிறது. சிவக்குமார் நா.முத்துசாமி எழுதியதை அடிப்படையாக வைத்து எழுதிய அளவில், அப்படி (குறிப்பிட்டு விட்டு) எழுதலாம் என்ற அளவிலும், நா.முவின் கருத்தை திரிக்கவில்லை என்ற அளவிலும் அவர் தவறாக எதுவும் எழுதியதாக தெரியவில்லை. ரவி எழுதியதில் வழக்கம் போல, தன் வறலாற்று அறிவை பறை சாற்றும் முனைப்பும், வழக்கமான அவசரமும் தெரியும் அளவிற்கு, தகவல்களை தெளிவாக்கும் நோக்கம் முதன்மையாக தெரியவில்லை. பதிலுக்கு பிகேஎஸ் கேட்ட கேள்விகளுக்கும் வழக்கம் போல பதில் இல்லை.) அது எப்படியும் போகட்டும்.

சிவக்குமார், "தனிப்பட்ட சண்டைகளும் சச்சரவுகளும் பொருட்டுப் பிறக்கிற எதிர்வினையான படைப்புகள் மிகவும் இலக்கியத்தரமானதாக இருக்க முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன..... இணையச் சண்டைகளும் கூட அப்படிப்பட்ட நல்லக் கட்டுரைகளுக்கோ படைப்புகளுக்கோ வழிவகுக்க முடியும் .... .... சச்சரவுகளின் சண்டைகளின் பொருட்டு எழுந்த எழுத்து என்று எதையும் புறந்தள்ளுவது மிகவும் அபத்தமான காரியம் என்பதே நான் சொல்லவருவது" என்று எதை முன் வைத்து சொல்லியிருந்தாலும், இந்த கருத்து எனக்கு மிகவும் ஏற்புடைய கருத்துதான் ('அதுதானே உன் பிழைப்பு' என்று தோன்றுகிறதோ, அதுவும் சரிதான்!). வேறுபாடு என்னவென்றால் சிவக்குமார் முன்வைக்கும் உதாரணங்களுக்கு (எல்லா தளத்திலும்) நேரெதிரான உதாரணங்களை நான் முன் வைப்பேன். அந்த வகையில் பிரமீளின் சில கவிதைகளை இங்கே தர நினைத்தேன். நினைத்தவை கைவசம் இல்லை! கைவசம் இருக்கும் கவிதைகளை வைத்து பதிவை ஒப்பேத்த எண்ணம்.

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதை என்னை கவரவில்லை, கவர்ந்ததில்லை. சிவக்குமார்(உம்) சிலாகிக்கும் 'உறக்கமல்ல தியானம் பின்வாங்கல் அல்ல பதுங்கல்' என்பது வாசிக்க சுவாரசியமாய் இருந்தாலும், கவிதை என்ற அளவில் ஒப்பேறியதாக தோன்றவில்லை. வைரமுத்துவின் சொல் விளையாட்டுக்கள் போலத்தான் இருக்கின்றது. இந்த கவிதை மட்டுமல்ல, பொதுவாகவே எனக்கு சுராவின் (பசுவய்யாவின்) கவிதைகள், அவரது உரைநடை அளவிற்கு, எதுவும் கவர்ந்த நினைவு இல்லை. அவர் நிலை நிறுத்திக் கொண்ட ஆளுமைக்காக அவரது கவிதைகள் பேசப்படுகின்றனவே தவிர, கவிதைக்காக அல்ல என்பது என் எண்ணம். அல்லது அதில் இலக்கிய/வேறு ஏதாவது ஒரு அரசியல் இருக்கலாம். ஒரு பொருத்தமான உதாரணமாக அவரது 'தக்காளி ரசம்' கவிதையை சொல்லலாம். புதுக்கவிதை எழுதத் தொடங்கும் பல முதிரா இளைஞர்களின் கவிதையை போன்ற, அசட்டுத்தனம் வழியும் கவிதைக்கு, வாசிப்புகளை மக்கள் தரும் போது சிரிப்புதான் வரும். சிவக்குமார் (மற்றும் பாஸ்டன்) எடுத்துப் போட்ட நாய்/ பூனை/ ஆந்தை கவிதைகளின் நிலமை ரொம்பவே மோசம். முகமுடி ( மற்றவர்களும்) கூட, தங்கள் மன அரிப்புக்கு ஏற்ப, உண்மையிலேயே சுரா போல கவிதை படைத்து விட முடியும் என்ற தரத்தில்தான் அது இருக்கிறது. ('ஆட்டுகுட்டி மறைத்த சூர்யோதயம்' இன்னமும் பரிதாபத்திற்குரியது. அபத்த தரிசனங்களை தத்துவமாக்குவதும், வலியற்ற சோகத்தை நவீனத்துவமாக்குவதும் நிச்சயமாய் சுராவிற்கு கை வந்த கலை. )

முகமுடிக்கு இலக்கிய முதிர்ச்சி இருந்திருந்தால் (இலக்கிய முதிர்ச்சியுடன் கவிதை படைப்பது அவர் நோக்கம் அல்ல, தன் மன அரிப்பை கொட்டி அரசியல்ரீதியாய் எதிரான ஒரு கூட்டத்தை நாய் உவமை போட்டு திட்டுவது மட்டுமே என்றாலும்), சில நேரடி வாசிப்புகளை தவிர்க்கும் வகையில் உருவக உருவத்திலேயே எழுதியிருந்தால், கவிதை பசுவய்யா தரத்திற்கு வந்திருக்க கூடும் என்றே தோன்றுகிறது. (ஞானகூத்தனின் 'தவளைகள்' இந்த வட்டத்திற்குள் வராது, அதன் தளம் வேறு என்பதற்கு முடிந்தால் இன்னொரு சந்தர்ப்பத்தில் வருகிறேன்.) சுரா நாய், ஆந்தை, பூனை என்று உருவகப் படுத்தியதை எல்லாம் 'படிமம்' என்கிறார் சிவக்குமார். ஒரு வங்காள கவிஞர் ஒரு சந்தர்ப்பத்தில், "If he is a poet, then I would like to be called as a plumber" என்று சொல்லியிருப்பார். அந்த மாதிரி, இந்த குழப்பம் அப்படியே தொடர்ந்து , இன்னும் நான்கு பேர் வழிமொழிந்து 'படிமம்' என்ற வார்த்தை அதிகமாய் புழங்க நேர்ந்தால், பிரமீள் கவிதைகளில் வரும் படிமங்களை ( 'பார்வை செவிப்பறையில் பருவம் முரசறையும்' 'கைப்பிடியளவு கடலாய் இதழ் விரிய உடைகிறது மலர் மொக்கு' ) பற்றி பேச நாம் புதிய வார்த்தை எதையாவது தேடவேண்டும்.


பிரமீளும், கவித்துவத்தோடு தொடர்பில்லாமல் சில 'வசை கவிதைகளை' எழுதியிருக்கிறார்தான். ('பாடபேதம், சுறா அல்ல சு.ரா.' 'எங்கிட்டு பாக்கிரே வெங்குட்டு விமர்சகா' ). ஆனால் பிரமீள் தன் சொந்த பகையின் காரணமாய் எழுதிய சில 'வசை கவிதைகளில்' கூட சில பொறிகளை எடுத்து காட்ட முடியும். உதாரணமாய் அவர் சாருநிவேதிதாவை திட்டுவதற்காகவென்றே எழுதிய நீண்ட கவிதையில் ஒரு வரி,

"எலிவால் நுனியில் எலியொன்றுண்டு
பாம்பு முழுவதும் வாலே என்று கிராமத் தானுக்கறிவு உண்டு! "

இது தவிர்த்து சுபமங்களாவிற்கு சமர்ப்பித்து எழுதிய கழுதை சிங்கம் கவிதையை குறிப்பிடலாம்.(வார்த்தைகள் சரியாய் நினைவிலில்லை.)

வயிற்றுக் கோளாறை சரி செய்துகொள்ளும் விதமாக பிரமீள் எழுதிய சில அதிரடி கவிதைகளை விட்டு விட்டு பார்த்தால், பிரமீளின் பல கவிதைகள், தமிழ் கவிதை இலக்கியத்தின் உச்ச கட்ட சாதனையாக இருந்திருக்கிறது. நான் தரும் எனது ஒரு உதாரணம் 'முதுமை' (அடுத்த பதிவில்.)

பிரமீள் தனது இலக்கிய பயணத்தில் காட்டிய அளவுக்கு மீறிய சகிப்பின்மை, போலித்தனம் என்பதாக அவர் நினைப்பது சட்டையை போல ஒரு சமூகத்தின் தேவை என்பதை உணராத அவரது குறுகிய பார்வை, தன்னை மட்டுமே மையமாய் கொண்டு/தன்னை முன்னிறுத்திய இலக்கிய அரசியல் சார்ந்த விமர்சனம் இவை எல்லாம் மிகுந்த விமர்சனத்திற்குரியது. அவர் முன்வைத்த அறிவு கோட்பாட்டை நான் இன்னொரு பார்பனியமாகத்தான் பார்கிறேன் என்று சுந்தரமூர்த்தியின் பதிவில் சொல்லியிருக்கிறேன். பார்பனராய் பிறக்காமல், பார்பனராய் ஆக விரும்பிய பார்பனரல்லாதவர் முன்வைக்கும் பார்பனியத்தின் சாயல் அதில் இருப்பதாக நினைப்பதை அலசுவது, இந்த பதிவின் நோக்கமல்ல. ('அம்பை பற்றி பிரமீள் சொன்னதை' யாரும் கண்டிக்கவில்லையே, அதை வசதியாக எல்லோரும் மறந்துவிடுகிறார்கள் என்று ( அவர் யாரிடமோ கேள்விபட்ட ஒன்றை மனதில் வைத்து என்று நினைக்கிறேன்) சிவக்குமார் இரண்டு முறை கேட்டிருந்தார். , 'பிரமீள் என்ன சொன்னார் சொல்லுங்கள், என் கருத்தை (தேவையாயின் கண்டனத்தை) வைக்கிறேன்' என்று இரண்டு முறையும் நான் கேட்டும் பதில் வரவில்லை. நான் எழுதியதை அவர் பார்க்காமலும் இருந்திருக்கலாம். அதனால் இந்த பதிவின் பின்னூட்டத்திலும் சொல்லலாம்.)

சுந்தர ராமசாமியின் 'சவால்' கவிதைக்கு பதிலாகவோ/பாதிப்பினாலேயோ பிரமீள் தனது 'அறைகூவலை' எழுதினாரோ, அல்லது நேரெதிராய் நடந்ததோ, வேறு எப்படி வறலாறு இருப்பினும், எனக்கு பிரமீளின் 'அறை கூவல்' கவிதைக்கு அருகே எந்த சவாலும் நெருங்க இயலும் என்று தோன்றவில்லை. சும்மா அள்ளி கொண்டு போகும் கவிதை! பிரமீளின் கவிதைகளில், அதன் ஒவ்வொரு அலகும் ஒரு தனிக் கவிதையாய் இருப்பதை காணமுடியும். அடுத்த பதிவில் தமிழின் மாகவிஞனின் (கைவசமிருக்கும்) சில கவிதைகளுடன் இந்த வாரத்தை தொடங்குவதில் மிகவும் உணர்ச்சி வசமடைகிறேன்.

Post a Comment

---------------------------------------
ஏதோ சுகம் எங்கோ தினம்...!

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு, தினமும் ஒரு பதிவு போட்டு, தமிழ்மணத்தில் புகையை கிளப்பும்படி மதி என்னை பணித்திருக்கிறார். வாரம் (அமேரிக்காவில்) தொடங்க இன்னும் பல மணிநேரங்கள் இருப்பினும், நாளை இணையத் தொடர்பு கொள்ள தாமதமாகிடும் என்பதால், இப்போதே ஆட்டத்தை தொடங்குகிறேன். இதற்கு மதி, காசி, அனைத்து தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நன்றி. இந்த பாடலை கேட்டுக் கொண்டு தொடர்ந்து படிக்கலாம்.


Writing must then return to being what it should never have ceased to be: an accessory, and accident, an excess.

-- Jacques Derida.


ஆயிரத்தை விரைவில் தொடக்கூடிய அல்லது ஏற்கனவே தொட்டுவிட்ட எண்ணிக்கையில் உள்ள தமிழ் வலைக் குமுகம், தினமும் நூற்றுக்கணக்கில் பதிவுகளை இடுவதும், அவை தீவிரமாய் சில நூறு மக்களால் வாசிக்கப் படுவதும், இன்னமும் எதிர்காலத்தில் வாசிக்கப் படப் போவதும், தமிழ் சூழலில் நிகழும் அகவுலகை விரிவாக்கும் மொழியாரோக்கியமான பல செயல்பாடுகளில், மிக முக்கியமான ஒன்று. இப்படி ஒரு ஆரோக்கியமான நிலையை அடைந்ததில், காசி 'தமிழ்மணம்' என்பதை தொடங்கிய நிகழ்விற்கு முக்கிய பங்கு இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

வலைப்பதிவு அதன் பின்னுட்ட வசதி கொண்டு தொடர்ந்த விவாதம் போன்ற, தொழில்நுட்ப புரட்சியினாலான வசதியும் சுதந்திரமும் கொண்ட ஜனநாயக வெளி வேறு இருப்பதாக தெரியவில்லை. அவற்றில் தோன்றியிருக்கும் சில சிக்கல்கள், தடுக்க இயலாத குறைந்த பட்சம்/குற்றவாளியை கண்டுகொள்ளக் கூட இயலாத வகையில் போலி மறுமொழி, போலி பதிவுகள் இடுவதும், தங்கள் போக்கிற்கு ஒத்துவராதவர்களை பற்றி எவ்வளவு மோசமாக வேண்டுமானாலும் எழுத இயலும் என்கிற சாத்தியப்பாடும், இந்த ஜனநாயக அமைப்பு பற்றி விரிவாய் விவாதிக்கவும், எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும் தேவைப்படும் நிபந்தனைகள், கட்டுபாடுகள், தண்டனைகள் பற்றி விவாதிக்கும் தேவையை ஏற்படுத்துகின்றன. வலைப் பதிவுகளின் இன்றய நிலை, அதன் வெளிபாடின் மீது எத்தனையோ விமர்சிக்க இருந்தாலும், ஓரிரு கேடுகள் (அதற்கு அளிக்க வேண்டிய விலை) தவிர்த்து பல நூறு மக்கள் நிதானத்துடன் கருத்து பரிமாறி விவாதித்து நடக்கும் அறிவு செயல்பாடு பற்றி, நாம் நிச்சயமாய் பெருமை கொள்ளலாம். அதில் நானும் ஒரு ஓரமாய் பங்கு கொள்வதில் மிகவும் மகிழ்சியும், இதுவரை செய்த இடையீடுகளில் ஓரளவு நிறைவும் கொள்கிறேன்.

இந்த பதிவு முழுக்க வெறும் சுய புராணம் மட்டுமே. குழந்தை வயது முடிந்து, ராஜேஷ் குமார், தமிழ்வாணன் என்று அலைந்து, எனக்கான எழுத்தை சுஜாதாவிடம் முதன் முதலில் அடையாளம் கண்டேன். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எனக்கான அரசியலை துக்ளக் பத்திரிகையில் 'சோ'விடம் அடையாளம் கண்டேன். எனது துவக்க அரசியல் ஈடுபாடுகளும் இந்துத்வ சார்பாகவே இருந்தது. கிட்டதட்ட வாலிப பருவம், சோ, சுஜாதா பாதிப்பில் ஏற்பட்ட பார்வையின் அடிப்படையிலேயே தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் பார்வையை முற்றிலும் புரட்டி போட்டது நூலகத்தில் படிக்க நேர்ந்த பெரியாரின் எழுத்துக்கள். அதற்கு முன்னாலான பல பரிசீலனைகளில் மனம் அதை உள்வாங்கும் வகையில் பக்குவப் பட்டிருந்ததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. சோவும், அதுவரை வாழ்ந்த சூழலும் ஏற்படுத்தியிருந்த பாதிப்பிலிருந்து மீண்டு, ஒரு மார்க்சிய, பெரியாரிய சார்பில் சிந்திக்க துவங்கவும், பின் அதையும் மீள் பார்வை பார்க்க, பல நிகழ்வுகள், நண்பர்கள், புத்தகங்கள் என்று வாழ்வின் ஒரு பெரிய பகுதி கழிய வேண்டியிருந்தது. என்றாலும் தீவிரமான அரசியல் பார்வை என்பது எனக்கு 'சோ'வின் எழுத்துக்களை படிப்பதன் மூலமாகவே நிகழ்ந்தது. ஒருவேளை 'சோ'வை படித்திராவிட்டால், அரசியல் ரீதியாய் தீவிரமாய் சிந்திக்கும் ஒரு பழக்கமே வராமல் போயிருக்கலாம். அந்த வகையில் சோ எனக்கு முக்கியமானவரே!

வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்கள் பிளவை ஏற்படுத்தியிருந்தாலும், சுஜாதா எழுத்துப் பிதாமகனாக மனதை ஆக்ரமித்திருந்த பிம்பத்தை, தி. ஜானகிராமன் படித்த முதல் நாவலிலேயே உடைத்து எறிந்தார். பிறகு ஒரு வெறியுடன் படிக்க தொடங்கி, இன்றுவரை தி,ஜா. பற்றிய பிம்பம் மட்டும் வீழவே இல்லை. அதற்கு பிறகுதான் புதுமை பித்தனும், சுந்தர ராமசாமியும் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர். அதிகமுறை மீண்டும் மீண்டும் படித்த நாவலாக, கிட்டதட்ட எல்லா வரிகளையும் மனபாடமாய் இன்றும் சொல்லகூடிய அளவிற்கு மனதில் பதிந்ததாய், ஜேஜே சில குறிப்புகளே இருக்கிறது -அதன் மீது இன்று பல விமர்சனங்கள் வந்து, அதன் மீதான தனிப்பட்ட மதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது எனினும்.

'மௌனி'த்தனமான இலக்கிய வாசிப்பினால் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த அரசியல் பார்வை, 'சுபமங்களா' இதழ்கள் மூலம் அறிமுகமான 'நிறப்பிரிகை' பத்திரிகை மூலம் - குறிப்பாய அ.மார்க்சின் 90களின் துவக்ககால எழுத்துக்கள் மூலம் - மீண்டும் விழிப்பு கண்டது. இவ்வாறாக இலக்கிய அரசியல் பார்வைகள் ஒன்றோடொன்று முரண்பட்டு, தனக்குத்தானே தெளிவாகி கொண்டு முகிழ்ந்த அக உரையாடலில், இலக்கியமும் அரசியலும் ஒன்றுக் கொன்று எதிராக முரண்பட்டதல்ல, இரண்டும் பகிர்ந்து கொள்ளும் வெளி பற்றிய அறிதல் மட்டுமின்றி, பகிராமல் இயங்கவும் இயலாது என்ற தெளிவும் பிறந்தது. மேலோட்டமாக போலெமிக்ஸ் மொழியிலேயே இன்றுவரை எழுதி வந்தாலும், இந்த தெளிவிலேயே இன்றய எனது எழுத்து இயங்குவதாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன். இதற்கான -அரசியல்/ இலக்கியம் இரண்டும் சுய பிரஞ்ஞையுடன் பகிர்ந்து வெளிபடும் இயக்கத்திற்கான - ஒரு உதாரணமாக அருந்ததி ராய் அவர்களை சொல்லலாம் -அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றையும் தேடி கரைத்து குடித்து விடவில்லை யெனினும் (அப்படிப்பட்ட ஆயிரக்கணகான ரசிகர்களை அவர் நிச்சயம் கொண்டவர்).

இவ்வாறாக 90களின் மத்தியில் சுமார் மூன்று ஆண்டுகள் தீவிரமாய் சிறுபத்திரிகைகள் வாசிக்கத் தொடங்கி, அதன் எல்லாவித தா(க்)கங்கள், தேடல்கள், மலச் சிக்கல்களுடன் அலைந்தேன். நல்லவேளையாய் (ஆமாம், நல்லவேளைதான்), வாழ்வின் சொந்த பிரச்சனைகள் சார்ந்த கட்டாயங்கள் அதிலிருந்து விடுவித்தது என்றாலும், தொடர்ந்து இலக்கிய/அரசியல் தொடர்பு கொண்ட ஒரு சிந்தனை தொடர்ச்சி அகவயமாய் இருந்ததாகவே கருதி வருகிறேன். ஐந்து வருடங்கள் முன்பு நண்பர் ஒருவரிடம் மின்னஞ்சலில், கிட்டத்தட்ட வாசிப்பு என்று எதுவுமே இல்லாமல், இலக்கிய அரசியல் தொடர்புகள் அற்று வருடக் கணக்கில் இருப்பது பற்றி புலம்பியிருந்தேன். அவர் என்னை திண்ணையை வாசிக்க சொன்னார். அப்போது ஏனோ பார்க்க நேரவில்லை. அதற்கு பிறகு பல மாதங்கள் கழிந்து திண்ணையை பார்த்த போது, அது மிகவும் ரத்த அழுத்தத்தை ஏற்றி விடுவதாய் இருந்தது. நண்பர் சொன்ன நோக்கம் வேறு என்றாலும், அவருடைய பரிந்துரை என்னை ஒரு சுழலில் மாட்ட காரணமாய் இருந்தது. மஞ்சுளா நவனீதன், சின்ன கருப்பன் போன்றவர்களுக்கு யாருமே எதிர்வினை வைக்காத ஒரு சூழலில் (அல்லது எதிர்வினைகள் வைத்து, நான் வாசிக்க வரும் காலகட்டத்தில் அலுத்துப் போய் வெளியேறிவிட்ட நிலையில், அனாதை ஆனந்தன் மட்டும் திடீரென தோன்றி ஒரு கொரில்லா தாக்குதல் நடத்திவந்த சூழலில்), எளிதில் எழுதி உள்ளிடும் இணையத்தின் வசதி காரணமாய், நான் எதிர்வினை வைக்க தீர்மானித்து, திண்ணை விவாத களத்தில் உள் நுழைந்தேன். ஆனால் வேலை சார்ந்த கட்டாயங்கள், தொடர்ந்த கணணி வசதிகள் இல்லாமை, அனுபவமின்மை காரணமாய் தீவிரமாய் எழுத இயலவில்லை. எழுதிய அனைத்துமே மட்டையடிகளாய் மேலோட்டமாய் இருந்தது. என்றாலும், அன்று ஒரு தேவையான இடையிடுகைகளை செய்ததாய் நிறைவு உள்ளது.

பிறகு திண்ணை விவாதகளம் மூடப்பட்டு, பதிவுகள் விவாத களத்தில், ஒரளவு முதிர்ச்சியுடன், இந்த முறை (ஒரே ஒரு முறை இன்றய பெயரிலி/அன்றய திண்ணை தூங்கியுடன் நடந்த சண்டை, அவர் மீதான என் தாக்குதல் தவிர்த்து, ரவி ஸ்ரீனிவாசுடன் நடந்த விவாதங்கள் உட்பட) நட்பு சார்ந்தே எழுத்து தொடர்ந்தது. இதற்குள் ஏதோ ஒரு போக்கில் திண்ணையில் அரவிந்தன் நீலகண்டனுக்கு, திடீர் தாக்குதல் செய்வதாய் ஒரு எதிர்வினை வைத்து, பின் தொடர்ந்த பலதரப்பட்ட வினைகளின் முடிவில், திண்ணை பொய் காரணம் கூறி, நான் திண்ணையில் தடை செய்யப் பட்டது குறித்து பல முறை கத்தியிருக்கிறேன். (இந்த வாரமும் முடிந்தால் ஒரு பாட்டம் ஒப்பாரி காத்திருக்கிறது.) அதற்கு பிறகு, திண்ணையில் நான் தடை செய்யபட்ட நிகழ்வு குறித்து, திண்ணை (மாதங்கள் கழித்து நேரடியாக அல்லாமல் மறைமுகமாக) அளித்த கயமைத்தனமான ஒரு விளக்கத்தை பற்றிய என் இடுகை, நியாயமின்றி பதிவுகள் ஆசிரியரால் எடிட் செய்யப் பட்டதாக நினைத்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் விவாத களத்திலிருந்தும் வெளியேறியவனை, நண்பர் அனாதை ஆனந்தன் அழைத்து தன் பதிவில் என்னை எழுதப் வைத்தார். அவர் அன்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் ஏற்ற வகையில் நிறைவாக எதையும் அவரின் வலைப்பதிவில் எழுத முடியவில்லை.

இதற்கிடையில் வாழ்ந்த/வேலைபார்த்த சூழலின் காரணமாய் மிகவும் தனிமையான ஒரு வாழ்க்கை அமைந்தது. முற்றிலுமான தனிமை என்பதை அதற்கு முன் அனுபவித்து இருந்தாலும், இந்த முறை அதில் ஒரு இழை கூட மன அழுத்தமில்லாமல், 'நவீனத்துவ சோகம்' கலந்த தேடலென்ற பாவனையில்லாமல், முற்றிலும் உற்சாகமாய், முழுக்க சந்தோஷமும் இன்பமுமாய், ஒரு கட்டத்தில் எழுதுவது மட்டுமில்லாமல் தமிழிணைய தொடர்பும் நின்று, மது, இசை, வேலை, பேசக்கூட ஆளில்லாத தனிமை என்று, காற்றில் ஒரு தூசு போல, கடலில் ஒரு தோணி போல அற்புதமாய் கழிந்து கொண்டிருந்த வாழ்க்கை. இதில் ஒரு கட்டத்தில் அவ்வப்போது இளைபாறும் வகையில் தமிழிணையத்திற்கு வந்தபோது, இகாரஸ் பிரகாஷ் இடையீடு செய்ததில், மீண்டும் ஏதோ தீர்மானித்து வலைப்பதிவு தொடங்கினேன். பிறகு எழுதிய அனைத்தும் இங்கே இருக்கிறது, தொடக்கத்தில் பின்னூட்டங்களை சேமிக்கவில்லை. பின்னர் சேமிக்கத் தொடங்கினேன். இப்போது அதையும், அதை முன்வைத்த விவாதத்தை நோக்கமாகவும் கொண்டு 'கூத்து' வலைப்பதிவை தொடங்கியிருக்கிறேன். என் பதிவுகளை வாசிக்கும் அனைவருக்கும், பின்னுட்டமிட்ட, உற்சாகமளித்த, விமர்சித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நன்றி கூறுகிறேன்.


இடை குறிப்பு: பதிவின் தொடக்கத்தில் தெரிதாவை மேற்கோள் காட்டியிருப்பது வெட்டி பந்தாவிற்கு மட்டும்தான்.


இந்த ஒரு வாரத்தில் முழுமையாய் பதிவு எழுதுவதில் மட்டுமே என்னை ஈடுபடுத்திக் கொள்வதாய் இருக்கிறேன். தினமும் ஒரு பதிவு உள்ளிட தமிழ்மணம் என்னை பணித்திருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்டது தினமும் வந்து விழ சாத்தியம் உள்ளது. அதற்கான கருக்களை சேர்த்தும் வைத்திருக்கிறேன். வேலைகளை விலக்கியும் வைத்திருக்கிறேன். இசை இலக்கியம், அரசியல், அறிவியல் என்று, எல்லாம் ஒன்றோடு ஒன்று விலகி வாழ்வதில்லை என்ற என் பார்வையுடன் இயைந்து, எல்லாவற்றையும், தொட்டு, ஆடு புல் மேயும் லாவகத்துடன் ( 'நாய் வாயை வைப்பது போல' என்றும் வாசிக்கலாம்), எழுத உத்தேசித்திருக்கிறேன். எவ்வளவு தூரம் இறைவன், சாத்தான் மற்றும் சார்பற்ற இயற்கையின் ஓரப்பார்வை எனக்கு சாதகமாக இருக்கும் என்று பார்க்கலாம்.


எனது பழைய சில பதிவுகள் பற்றி நண்பர்கள் அவ்வப்போது விசாரிக்கிறார்கள் (பீலா ரொம்ப விடக்கூடாது, மொத்தமாய் இரண்டு நண்பர்கள் இதுவரை கேட்டார்கள்). அதனால் ஒரு வசதிக்காக உருப்படியாய் எழுதியதாக நானே நினைக்கும் சில பதிவுகளும் அது குறித்த சில வரிகளிலான குறிப்பையும் கீழே தருகிறேன்.


எனது ஒரே ஒரு சிறுகதை வடு.
கடைசியாக ஹரன் பிரசன்னா கேள்விப்பட்டு, படித்து தனது பாராட்டையும், ஊக்குவிப்பையும் தெரிவித்துள்ளார். அவருக்கும் நன்றி. புனைவு எழுத்து நாம் திட்டமிட்டு முன் தீர்மானித்து எழுதக் கூடியது அல்ல. சில ஐடியாக்கள் உள்ளன. விரைவில் அதில் நேரத்தை செலவிடும் உத்தேசமும் உள்ளது.


இதுவரை முன் திட்டமிடலில்லாத அந்த நேரத்து வெளிபாடாக வந்த மூன்று கவிதைகள். எதிர்கொள்ளும் மரம்.

வட்டம்!

மெய்களாலானது!


இனி நமது வழக்கமான பாணி பதிவுகளில் இருந்து..


மன்மதன் படத்தை முன்வைத்து இரண்டு விமர்சனங்கள்.
கொடுக்க வேணும் இனிமா!

சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.

இதில் முதல் பதிவு கண்டுகொள்ளப் படாமல் இரண்டாம் பதிவு மட்டும் பரவலாக -பொதிவாகவும், நொகையாகவும் - பேசப்பட்டுள்ளது. வலை பதிய தொடங்கிய காலத்தில் மிக சாதாரணமான ஒரு மனநிலையில் எழுதியது. ஆனால் இதில் வரும் ஆண்குறியை இன்றுவரை பலர் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள். 'சிம்புவின் ஆண் குறியை அறுக்க வேண்டும்!' என்ற பதிவை எழுதும் நோக்கம் முதலில் இல்லை. எனது முதல் பதிவை படித்தவர்கள், அது காட்டம் குறைவாகவும், 'சினிமாவை மிகையாக தாக்க வேண்டிய அவசியம் இல்லை' என்ற பார்வையுடன், சினிமாவை விட சமூக மதிப்பீடுகளே தாக்குதலுக்கு உரியது என்ற கருத்துடன் எழுதப் பட்டிருப்பதை அறியலாம். ஆனால் தமிழ் சமூகம் -குறிப்பாய் பெண்ணிய அமைப்புகள் - பாய்ஸ் போன்ற ஒரு படத்திற்கு நிகழ்த்திய மிகையான எதிர்வினைகளையும், மன்மதன் போன்ற ஒரு படத்திற்கு காட்டிய அரசியல் மௌனத்தையும், இணையத்தில் பல இடங்களில் 'மன்மதன்' பாராட்டப் பட்டு எதிர்குரல் கேட்காத சுரணையின்மையை முன்வைத்து, ஒரு தீவிரமான எதிர்வினையின் தேவையை உணர்ந்ததாக நினைத்து அந்த பதிவை எழுதினேன். குறிப்பாக மற்ற எந்த மேற்கத்திய சூழலிலும் நிகழ்ந்திருக்க கூடிய எதிர்வினையில் ஒரு விழுக்காடு கூட தமிழ் சமூகத்தில் ஒலிக்கக் கேட்டிருந்தால், நான் என் எதிர்வினையை எழுதும் கட்டாயம் வந்திருக்காது. இன்னமும் நான் கத்தியை வைத்துக் கொண்டு சிம்புவின் ஆண்குறியை அறுக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக, ஏதாவது ஒரு உவமேயம் கொண்டு கருதிக்கொள்ளும், எல்லா அன்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! முதிரா மனம் வாய்ப்பது போல பெரும்பேறு வேறு உண்டோ!


ஃபேன்ஸி பனியன்கள்!
சாரு நிவேதிதா பற்றி நான் விரிவாய் எழுத நினைத்திருப்பதற்கு ஒரு முன்னுரையாய் இதை கொள்ளலாம்.


'காதல்' திரைப்படம் தமிழ் சினிமாவில் வறலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக எனக்கு படுகிறது. அதற்கான முக்கிய காரணம் 'காதல்' திரைப்படம் படம் பிடிக்கும் யதார்த்தம், அதே நேரம் அது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஜனரஞ்சக தனமை. யதார்த்தம் என்பதாக நாம் அனுமானித்து வைத்திருப்பதற்கு முற்றிலும் வேறுபட்டே, தமிழ் சினிமாவில் நமக்கு காட்டப்படும் யதார்த்தம் இருந்து வந்திருக்கிறது. இதற்கான ஒரு சமன்பாட்டை ஒப்புகொண்ட மனநிலையிலேயே தமிழ் பார்வையாளர்களால் சினிமா பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. இவ்வாறு பொதுவாக யதார்த்தம் என்று அனுமானித்திருப்பதையும், சினிமா யதார்த்தம் என்பதாக இதுவரை அமையப்பெற்றிருப்பதையும் ஒரே தளத்தில் கொண்டு வருகிறது 'காதல்' திரைப்படம். யதார்த்ததை படம் பிடிப்பதில் வெற்றியடைகிறது, ஆனால் கலைப்பட யதார்த்த சிமிழில் அடங்கவில்லை. ஒரு வெகுஜன ரசனைக்குரிய தளத்திலிருந்து நகராமல் அதை சாதித்திருக்கிறது. இதற்கு முன் இதை இத்தனை பொருத்தமாய் சாதித்த வேறு திரைப்படம் இருப்பதாய் தெரியவில்லை. அதை முதல் பதிவில் எழுதினேன். அதுதான் படம் மீதான எனது அடிப்படை விமர்சனம். ஆனால் ஒரு விஷயத்தை, படம் தவறு செய்யாமல், ரொம்ப கவனமாய் கையாண்டிருப்பது மண்டையில் உரைத்து, படத்தின் மீதான அந்த விமர்சனமும் அவசியம் என்று தோன்றியதால் அதை அடுத்த பதிவிலும் எழுதினேன். இரண்டையும் சேர்த்து ஒரு திருத்திய வடிவில், சில வரிகள் நீக்கி சிலதை சேர்த்து பதிவுகளில் வெளிவந்த வந்த கட்டுரை படிப்பதற்கு இன்னும் நேர்தியானது என்பது என் கருத்து.


காத்தடிக்குது, காத்தடிக்குது கானா பாடல்கள் பற்றி என் அவதானிப்புகள் சார்ந்து சில குறிப்புகள்


சந்திரமுகி பற்றிய என் பதிவை சற்று மாற்றி மேலான வடிவத்தில் பதிவுகளில் வாசிக்கலாம். என் பதிவில் பின்னூட்டங்களுடன்


சுந்தர ராமசாமி எழுதி பலரால் கண்டனம் செய்யப்பட்ட 'பிள்ளை கெடுத்தாள் விளை' சிறுகதை பற்றி ரவிக்குமார் எழுதிய ஒரு கட்டுரையை முன்வைத்து, ' ஷங்கரின் அந்நியன் பற்றி..' நான் எழுதிய பகடி கட்டுரை. பதிவுகளில் ஒரு வாசகர் நேரடியாக பொருள் கொண்டு வாசித்து என்னை திட்டியது, தமிழகத்தின் பிரபல எழுதாளர் ஒருவர் நேரடியாக பொருள் கொண்டு எனக்கு மின்னஞ்சல் எழுதியது, மற்றும் டோண்டு தவிர்த்து, அனைவரும் சரியான வகையில் பொருள் கொண்ட ஒரு ஹிட் பதிவு.
சில திருத்தங்களுடன் பதிவுகளில் 'ஷங்கரின் அந்நியன் பற்றி'.


இளயராஜாவை பற்றி சாருவின் திரித்தல் மற்றும்...


சன் டீவியில் நடந்த ஒரு கலந்துரையாடலை முன்வைத்து, குறிப்பாய் திருமாவின் அரசியல் பற்றிய விமர்சனங்கள் சட்டி சுட்டதடா!


சண்டை கோழி படத்தில் வரும் ஒரு வசனத்தை முன்வைத்து, குட்டி ரேவதியும் மற்றவர்களும், எதிர்ப்பு அரசியல் டீஷர்ட் அணிந்துகொண்டு நடத்திய ஒரு அழுகுணி ஆட்டம் பற்றிய என் பார்வை. கேலிக்கூத்தாகும் எதிர்ப்பு அரசியல்.


தேர்தல் குறித்த பதிவுகள்
1
2
குறிப்பாய் ரவிக்குமாரை முன்வைத்த பதிவை நானே முக்கியமாய் நினைக்கிறேன்.


தேர்தல் முடிவு பற்றி 'ம்!;

இவ்வாறாக எனது பழைய பதிவுகள் அனைத்தையும் ஒரு முறை மறுபடி மேய்ந்து ஒரு மீள்பார்வை பார்க்க நேர்ந்தது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி

Post a Comment

---------------------------------------

Thursday, May 25, 2006

துப்புரவு தொழில்.

( பிரச்சனையை தொடர்ந்து விவாதத்தின் நினைவில் இருத்தி வைக்கும் நோக்கத்துடன், 'இந்தியா நாற்றமடிக்கிறது' புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே பதிவதன் அடுத்த பகுதியாக, புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலிருந்து இங்கே அளிக்கிறேன். )

தொடர்புடைய முந்தய பதிவுகள்,

நாறும் பாரதம்!

நாறுவது மனம்!

'நாறுவது மனம்'- பின்னூட்டங்களுக்கு பதில்

முன்னுரையிலிருந்து...

செய்தியல்ல!


துப்புரவு தொழில்.


இரவு சாப்பிட உட்கார்ந்த பின், எண்ணங்கள் அன்றய வேலையை அசை போடத்துவங்கும். ஒரு கவளத்தை கூட முழுங்க இயலாது. சில நாட்கள் இந்த வேலைக்கு போகாமல் இருந்து பார்த்தேன். ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? குடும்பத்தை கவனித்து கொள்ள என் கணவர் எதுவும் செய்யவில்லை. நாங்கள் சாப்பாட்டிற்கே எப்போதும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று.


-- கமலா, ஹைதராபாத்

மற்றவர்கள் சுத்தமாக தோற்றமளிப்பதற்காக நாங்கள் எங்களை அசிங்கப்படுத்தி கொள்கிறேம்.

--- கொட்டம்மா, சிராலா.



இந்தியாவில் துப்புரவு தொழில் என்பது, வீடுகளிலும் பொதுத்துறை நிர்வாகத்தால் நிர்வகிக்கப் படும் கழிப்பறைகளிலும், மனித மலத்தை கைகளால் எடுத்து அப்புறப் படுத்துவதாகும். இரண்டு வழிகளில் இந்த துப்புரவு தொழில் மேற்கொள்ளப் படுகிறது. முதலாவது, கல்லின் மீதோ, தட்டின் மீதோ, மண்தரையின் மீதோ, வாளியிலோ, எடுப்பு கக்கூஸ்களில் மலம் இடப்படுகிறது. அங்கிருந்து அது கொட்டப் படும் இடத்திற்கு துப்புரவு தொழிலாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இரண்டாவது, தனி வீடுகளிலும், நகராட்சிகளிலும் மலக்குழி மற்றும் சாக்கடைகளை துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. தனிப்பட்ட வீடுகளின் மலக்குழிகள் சமூகத்தின் கண்ணில் புலப்படாத வகையில் சுத்தம் செய்யப்படுபோது, மனிதர்கள் பாதாளச் சாக்கடைகளின் மூடியை திறந்து கீழிறங்கி சுத்தம் செய்வது, நாம் அன்றாடம் காணும் ஒரு காட்சியாய் இருக்கிறது.

இத்தகைய துப்புரவு தொழில் ஒரு சம்பிரதாய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் 1993இல் தடை செய்யப் பட்டுள்ளது. அது 'துப்புரவு தொழிலாளர்கள் பணி நியமனம், எடுப்பு கழிவறை கட்டுமானம் தடை சட்டம்' என்று அழைக்கப் படுகிறது. எடுப்பு கழிவறையை பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதுடன், தண்டனைக்கும் அபராதத்திற்கும் உரியது. என்றாலும் இந்திய அரசாங்கத்தின், Ministry of Social Justice and Empowerment தரும், 2002-2003 ஆண்டிற்கான புள்ளி விவரங்கள், இந்த நாட்டில் 6.76 லட்சம் துப்புரவு தொழிலாளர்கள், 96 லட்சம் எடுப்பு கழிவறைகளில் வேலை செய்வதை வெளிப்படுத்துகிறது. ஆந்திராவில் மட்டும் இரண்டிலிருந்து மூன்று லட்சம் எடுப்பு கழிவறைகள் , உள்ளூர் அதிகாரிகளால் நிர்வகிக்க பட்டு வருகிறது.
(தொடரும்)

Post a Comment

---------------------------------------

Tuesday, May 23, 2006

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக!

முதலில் இதை ஒரு பதிவாக போடவா வேண்டாமா என்று ஒரு குழப்பம். பிறகு, 'காசா பணமா, செலவா, போட்டு வைப்போம்' என்று தோன்றியதால்...

இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக பெடிஷன் ஆன்லைனில கையெழுத்திட ஒரு பக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சிந்திப்பவர்கள், சில நிமிடங்கள் எடுத்து கையெழுத்திடலாம். நிச்சயமாய் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இன்னொரு தளம் வரும்(இன்னும் வரவில்லையெனில்). அதற்கு ஆதரவு இன்னும் அதிகமாகக் கூட இருக்கும். என்றாலும், இத்தனை ஊடக கருத்து திணிப்பிற்கு எதிராக (பார்க்க குழலியின் பதிவு, பத்ரியின் பதிவு ), என்ன அடிப்படையில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறோமோ, அந்த அடிப்படையில், ஒரு கையெழுத்திடலாம்.

வலைப்பதிவில் பலர் அருமையாக இட ஒதுக்கீடு பற்றி கருத்து சொல்லியிருக்கின்றனர். கடைசியாய் படித்த பத்ரியின் பதிவும், எனக்கு பெருமளவில் ஒப்புதலானதே. பலர் கருத்து சொல்லிவிட்ட காரணத்தால் நான் எதுவும் எழுதவில்லை. ரவியின் எச்சங்களுக்கு பதில் சொல்லும் வேலையில் எல்லாம் இறங்கும் காலகட்டத்தினை தாண்டி விட்டதாக நினைக்கிறேன். இவற்றை தாண்டி சில பார்வைகள் உண்டு. அதை முன்வைக்க உழைப்பு அதிகமாய் தேவைப்படுகிறது. இப்போதிருக்கும் கலவர சூழலில் அது எடுபடாது, தேவையும் இல்லை என்று தோன்றுகிறது. வெள்ளம் வடிந்த பின்பு இது குறித்து விரிவாய் பேச உத்தேசித்திருக்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Tuesday, May 16, 2006

லோக் பரித்ரன் உடைகிறது!

நாட்டை சீர்திருத்த ஐஐடி சான்றோர்களால் உருவாக்கப் பட்ட லோக் பரித்ரன் கட்சி உடைந்து விட்டது. நாட்டில் ஊழலை ஒழித்து, தூய்மையான வெளிப்படையான நிர்வாகத்தை தரும் உயர்ந்த நோக்கத்துடன் துவங்கப்பட்ட கட்சி, காசு விஷயத்தில் தேசியத் தலைமை புரட்டுத்தனமாக் நடந்து கொள்வதாகவும், வெளிப்படைதன்மை அற்று இருப்பதாகவும் அதிலிருந்து வெளியேறிய ஒரு சாராரால் குற்றம் சாட்டப்பட்டு, உடைந்தது. ஒரு கட்சி உடைந்தால் அதன் சட்டசபை உறுப்பினர்கள் எத்தனை பேர்கள் உடைந்த தரப்பினுடன் சென்றார்கள் என்று பார்பது வழக்கம். லோக் பரித்ரனுக்கு சட்டசபை உறுப்பினர்கள் இல்லாததால், சட்டசபைக்கு போட்டியிட்ட ஏழு பேரில் நான்கு பேர் வெளியேறி கட்சியை உடைக்க வேண்டியதாயிற்று.

லோக் பரித்திரனின் அண்ண நகர் வேட்பாளர் ராஜாமணி கூறுகையில், " We left Lok paritran on Sunday in disgust after witnessing the favouritism shown to the Mylapore candidate Santhanagopalan, who was given all the financial support and workforce for the campaign. We got nothing by the way of support. On the other hand, we were humiliated and even threatened by our national leadership." அவர் மேலும் தான் பொருளாளராய் நியமிக்க பட்டதாகவும், கணக்கு கேட்ட காரணத்தினால் பதிவி நீக்கம் செய்யப் பட்டதாகவும் கூறுகிறார். (எம்ஜியார் நினைவுக்கு வருகிறார்!) ராஜாமணி 11,665 வாக்குகள் பெற்றிருந்தும், வெறும் 9436 வாக்குகள் மட்டும் பெற்ற சந்தானகோபாலனை தங்கள் நட்சத்திர வேட்பாளராய் கட்சி தூக்கி பிடிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

சேப்பாக்கத்தில் கருணாநிதியை எதிர்த்து நின்ற இன்னொரு வேட்பாளரான இளந்திருமாறன் சொல்வது கொஞ்சம் சுவாரசியமானது, " அரசியல்ரீதியாய் உணர்ச்சிகள் விளையாடும் சேப்பாக்கத்தில் நான் தாக்கப்பட்டால், சந்தான கோபாலன் பொது மக்களின் அனுதாபத்தை பெற்று வெற்றி பெறுவார் என்று கட்சியின் தலைவரும் மாநில பொதுசெயலாளரும் கூறினார்கள்." அவர் மேலும் ராஜ்புரோஹிட் (தலலவர்) தன்னை மாநில தலைவராக நியமித்ததாகவும், ஆனால் சந்தானகோபாலன் பத்திரிகைகளிடம் தன்னை தலைவராக அறிவித்துக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆயிரம் விளக்கில் போட்டியிட்ட இஷ்ரயேல் மஹேஷ்வர், தேர்தல் குறித்த தன் கருத்துக்களை வெறுமே சொன்னதால், ராஜ்புரோஹிட் தன்னிடம் கூச்சலிட்டு கத்தி, பின் வெளியேற்றிவிட்டதாக சொன்னார். 700 உறுப்பினர்கள் வெளியேறி போட்டி தரப்பில் சேரப்போவதாகவும் அவர் சொன்னார்.

(ஆதாரம் Deccan Chronicle, Tuesday, 16, 05, 06.)

இன்னும் ஒரு கொத்து குற்றச்சாட்டுக்கள் உண்டு. எனக்கு தட்ட போரடிக்கிறது.

இது தவிர்த்து தேர்தலுக்கு பல நாட்கள் முன்னர் டெகான் கொரோனிகிளில் லோக் பரித்ரனுக்கு ஓட்டுப் போட போவதாக சொன்ன சிலரின் கருத்துக்களை போட்டிருந்தார்கள். அதில் சில பெண்கள் சந்தானகோபாலன் 'பார்க்க ஸ்மார்டாக' இருப்பதால் ஒட்டு போடப்பாவதாக சொன்னார்கள். (இதில் எனக்கு எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் எம்ஜியாருக்கும், கலைஞருக்கும், ஜெயலலிதாவிற்கும் முட்டாள்தனமான பிம்ப வழிபாடு காரணமாய் ஒட்டு போடுவதாகவும், லோக்பரித்த்ரனுக்கு அறிவுபூர்வமாய் ஓட்டுபோடுவதாகவும் யாராவது சொன்னால் அதற்கு பதிலாக மட்டும் இந்த தகவல்.)

Post a Comment

---------------------------------------

Friday, May 12, 2006

ம்!

ரவிக்குமார் அமோக வெற்றி பெற்றிருப்பது முதல் சந்தோஷம். இதுவரை சீரியசான தளங்களில் செய்து வந்த, திராவிட இயக்க எதிர்ப்பை முதன்மையாய் கொண்ட அரசியலை, இன்னும் தீவிரமாக வெகுதளத்தில் செய்யபோகிறார் என்றாலும், ஏற்கனவே எழுதிய காரணங்களுக்காக, தமிழகம் முதல் முறையாக ஒரு தலித் அரசியல் சார்ந்த, ஒரு தலித் அறிவுஜீவி ஒருவரை சட்டசபைக்குள் அனுமதித்ததற்காக, பெருமையும் மகிழ்ச்சியும்!

விடுதலை சிறுத்தைகள் மொத்தம் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் வெற்றி பெற்றிருப்பதை தவிர மற்ற எல்லாமே, இருப்பதில் நல்லது நடக்க சாத்தியமுள்ளதாக நான் நினைத்தவையே நடந்துள்ளது. திமுக, கூட்டணி ஆதரவில் இயங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நல்லதுதான். அதிகாரம் கையில் இல்லாத போதே, பல ஆட்டங்கள் ஆடியுள்ள பாமகவிற்கு ஏற்பட்ட சரிவும் ஆரோக்கியமான விஷயம்தான். தங்கள் ஆதரவை நம்பி அரசு இயங்கும் யதார்த்தத்தில், எந்த அராஜகத்தில் இறங்கினாலும், மக்கள் கேள்விகள் இன்றி தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கைவைக்கப் பட்டிருப்பது, நாட்டுக்கு மட்டுமின்றி பாமகவிற்கே மிகவும் தேவையானது. அந்த வகையில் பாமகவின் கோட்டைக்கு சென்று அதன் அடித்தளத்தில் ஆப்பு வைத்த விஜயகாந்தின் வெற்றியும் சந்தோஷத்திற்குரியதே.

பத்திரிகையாளர் சந்திப்பில், கலைஞரின் முகத்தில் வெற்றி களிப்பின் ஓட்டம் இருந்ததாக தோன்றவில்லை. ஸ்டாலினை ஏனோ காணவேயில்லை. தமிழகத்தின் பழக்க தோஷம் காரணமாக ஏதாவது நடந்து பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று நம்பி ஏமாந்ததாலோ, சென்னையிலேயே அடிபட்டதாலோ, திமுகவின் உற்சாகம் வழக்கமான ஆரவாரத்துடன் இல்லை. என்றாலும், ஒரு அறுதி பெரும்பான்மை கொண்ட ஆட்சியின் கொட்டத்தை கொண்டிருக்க இயலாது என்பதை தவிர, போட்டியிட்ட இடங்களில் நான்கில் மூன்று பங்கிற்கு மேல் வெற்றிபெற்றுள்ளதிலும், தங்கள் ஆட்சியை தவிர இந்த சட்டசபைக்குள் வேறு சாத்தியங்கள் இல்லாததிலும் திமுக சந்தோஷம் கொள்ளலாம் என்றுதான் தோன்றுகிறது.

திமுக வெற்றிபெற்று கலைஞர் பதவி ஏற்பது என்பது, மிக தீவிரமான உணர்ச்சிகளை தமிழகத்தின் குறிப்பிட்ட மக்களிடையே ஏற்படுத்தக் கூடியது. அந்த தீவிர உணர்ச்சிகள், இரு விதங்களில் எதிர்வகைப் பட்டது. இந்த இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகளையும், மிக அருகில் இருந்து பல முறை பார்த்தவன் என்ற முறையிலும், இரண்டையும் நானே தனிப்பட்ட முறையில், வேறு வேறு கால கட்டங்களில், மிகையாக அனுபவித்தவன் என்ற முறையிலும், இந்த முறையும் மக்களிடையே அதை உணர முடிகிறது.

ஒன்று எப்பாடு பட்டாவது கலைஞர் ஆட்சியில் அமர்வதை தடுக்க நினைக்கும், கலைஞரை தங்களின் இன எதிரியாக பார்க்கும், பார்பனர்களில் பெரும் பகுதியினர். கலைஞர் முதல்வர் நாற்காலியில் அமர்வது என்பதை தாங்கவே இயலாமல், உச்சகட்ட வயிற்றெரிச்சலில் இருப்பவர்கள். இவர்களில் நடுத்தர மற்றும் 'ஏழை பிராமண' வர்க்கத்தை சார்ந்தவர்கள் அதிகமாக இருப்பார்கள் என்பது சுவாரசியத்திற் குரியது. மோடி ஆட்சிக்கு வருவதை பார்த்து முஸ்லீம்களுக்கு அப்படி ஒரு உணர்ச்சி இருக்க கூடுமெனின், அது எல்லா நியாயத்தின் படியும் புரிந்து கொள்ளக் கூடியது. ஏனெனில் மோடியின் கையிலிருக்கும் அதிகாரம், இஸ்லாமியர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால் கலைஞர் ஆட்சி உட்பட்ட எல்லா காலகட்டத்திலும், தங்கள் மேலான்மை கூட எந்த விதத்திலும் அச்சுறுத்தப் படாத தமிழக பார்பனர்களின், இந்த உளவியலின் வெறித்தன்மை உண்மையிலேயே ஆராய்சிக் குரியது. கலைஞரின் வெற்றியை (இந்த முறையும்) இவர்கள் எதிர்கொள்ளும் வகையில் வரும் மிக மோசமான வசைகளை, நானே என் காதால், பிறந்ததில் இருந்து நேற்றுவரை கேட்டு வருபவனவற்றை, நாகரீகம் கருதியும், பொலிடிகலி கரெக்ட்னஸ் கருதியும் இங்கே என்னால் எழுத முடியாது. என்றாலும் மனசாட்சிப்படி, பொத்தாம் பொதுவாய் இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. இவர்களின் இந்த வயிற்றெரிச்சலும் நமது (அதாவது என்னை போல இந்த வயிற்றெரிச்சல் நேரவேண்டிய சமூகத்தேவையை அங்கீகரிப்பவர்களின்) சந்தோஷத்திற்கு உரியதே. (கலாநிதியின் மனைவியை வைத்து எல்லாம், ரொம்ப லாஜிக்கலாய் கேள்வி எழுப்பி என்னை திக்குமுக்காட வைக்க வேண்டாம் என்பது வேண்டுகோள் மட்டுமே - ப்ளீஸ்! இந்த இடத்தில் காக்கை பாடினியார் என் பதிவில் எச்சங்களை இட்டு தொந்தரவு செய்யமாட்டார் என்பது மிகவும் நிம்மதியாய் இருக்கிறது.)

இதற்கு நேரெதிராய், திமுக என்ற கருப்பொருளை, உடலின் அத்தனை திரவங்களிலும் கலந்து கொண்ட வேறு லட்சோப லட்சம் மக்களுக்கு, கலைஞர் நாற்காலியில் அமர்வது என்பது வாழ்வின் உச்சகட்ட பரவச நிலைக்கு கொண்டு செல்லும் நிகழ்வாகும். சில நாட்கள் முன்பு சந்திக்க நேர்ந்த கிழவர் ஒருவர், கலைஞர் மீண்டும் நாற்காலியில் அமர்வதை காணவே உயிரோடு இருப்பதாகவும், அதற்கு பிறகு சந்தோஷமாய் சாக தயாராய் இருப்பதாகவும் சொன்னார். அவர் ஏழை எளிய வர்க்கத்தை சார்ந்தவரும் அல்ல. திமுகவின் ஊழலை, தொண்டர்களின் கேள்வி கேட்காத விசுவாசத்திற்கு கலைஞர் அளிக்கும் உதாசீனங்களை, கூட இருந்த பலருக்கு கலைஞர் செய்த துரோகங்களையும், கலைஞரது குடும்ப அரசியலையும் அதன் இன்றய செல்வ செழிப்பையும் மிக நன்றாக புரிந்து கொண்டவர். நல்ல வசதியுடன் இருக்கும் அவர், தனக்கு எந்த லாபமும் இல்லாத கலைஞரின் அரியணை ஏற்றத்தை, தன் வாழ்வின் லட்சிய நிகழ்வாக பார்பதை எப்படி புரிந்து கொள்வது? இது லட்சக்கணக்கான உதாரணங்களில் ஒன்று மட்டுமே. இப்படிப்பட்ட நிலை எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவிற்கும், ராஜிவிற்கும் சோனியாவிற்கும் கூட இருக்கலாம். ஆனால் இவர்களை கொண்டாடுவதில் உள்ள வழிபாட்டுத் தனமையை தாண்டி, கலைஞர் மீதான பிரேமைக்கு வேறு பல பரிமாணங்கள் இருப்பதாகவும், ஒரு சமூகத்தின் அடையாளம் சார்ந்த கொண்டாட்டமாகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் சார்ந்த குதுகலமாக இருப்பதாகவும் எனக்கு தோன்றுகிறது. மிகவும் பிற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த ஒருவரை, ஜாதிய உணர்வுகள் தாண்டி, தமிழ் சமூகம் இவ்வாறு கொண்டாடும் உளவியலை நாம் புரிந்து கொள்ள புதிய கருத்தியல்களை தேடவேண்டும் என்று தோன்றுகிறது.

சமூகத்தின் இப்படிப்பட்ட அடையாளம் சார்ந்த ஒரு கொண்டாட்டத்தை திருப்தி செய்யவேண்டியது ஒரு ஆதாரத் தேவை என்று நினைக்கிறேன். இதை ஒரு மட்டையான மார்சியதை கொண்டோ, எலீட்தன்மை கொண்ட வறட்டுப் பார்வை கொண்டோ புரிந்து கொள்ள இயலாது. அந்த குதுகலத்தை அளிக்கும் ஒரு நிகழ்வாகவும் திமுகவின் இந்த தேர்தல் வெற்றியை பார்க்கலாம்.

மற்றபடி அதிமுக வறலாறு காணாமல் செலவு செய்த, எல்லவற்றையும் விலைக்கு வாங்கி போட்ட பணபலத்தை, ஊடகத்தை ஆக்ரமித்த அதன் பிரசாரத்தை திமுக தனியாய் எதிர்கொண்டு வென்றது ஒரு சாதனையாகவே தோன்றுகிறது. கலைஞரின் கண்ணம்மா படத்தை முன்வைத்த அயோக்கியத்தனமான பிரச்சாரம், தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு, 'சோ'வை எக்ஸிட் போல் வரை எல்லாவற்றிற்கும் கருத்து சொல்ல வைத்து ஜெயாடீவியின் பொய் பிரச்சாரங்கள் அனைத்திற்கும் அங்கீகாரம் வரவழைக்க முயன்றது (இந்த விஷயத்தில், வழக்கமான பிம்பத்தித்ற்கு மாறாக, சோ கோமாளியானார் என்ற வகையில் சந்தோஷம்தான்) என்று பல பிரச்சனைகளை திமுக தாண்டியிருக்கிறது. இதில் சென்னையில் வழக்கத்திற்கு மாறாக (அதாவது பொதுவாய் திமுகதான் செய்யும், இந்த முறை) அதிமுக அதிக அளவில் கள்ள ஓட்டு போட்டதாக கேள்விப்படுகிறேன் (தகவல் தரும் இடங்கள் திமுக சார்பானவை என்பதை குறிப்பிடவும் வேண்டும்.) இத்தனைக்கும் நடுவே பொதுக்கருத்தின் மிக பாரபட்சமான பார்வையும் திமுகவிற்கு எதிராகவே இருந்தது. உதாரணமாய் சன் டீவியின் 'ஞாபகம் வருதே' விளம்பரத்தை மகாபாதகமாக ஒரு பத்து பேராவது என்னிடம் சொன்னார்கள். (அதில் ஒருவர் நம் அன்புக்குரிய வலைப்பதிவு நண்பர் என்பது ஆச்சரியத்திற்குரியது.) சன் டீவியின் விளம்பரத்தில் என்ன பாதகம் இருக்கிறது என்று மூளையை கசக்கி யோசித்தும் எனக்கு பிடிபடவில்லை. அதிமுக ஆட்சியில் நடக்காத எதையும் காண்பிக்கவில்லை. கலைஞரை நள்ளிரவில் கைது செய்தார்கள். அரசு ஊழியர்கள் மீது ஏதேசதிகாரம் பாய்ந்தது. நிவாரணத்தில் ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, மூன்று முறை நெரிசலில் மக்கள் செத்தனர். யானைகளை துக்ளக்தனமாக இடமாற்றம் செய்து துன்புறுத்தியதும் நடக்கத்தான் செய்தது. இதையெல்லாம் ஒரு எதிர்கட்சி தன் பிரச்சாரத்தில் பயன்படுத்தாமல் வேறு என்னய்யா செய்யும்? மிக வடிவாக எடுக்கப் பட்ட தேர்தல் விளம்பரம் அது. முடிவில் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கூட கேட்காமல் 'சிந்திப்பீர் வாக்களிப்பீர்' என்று முடிகிறது. கடைசி இரண்டு நாட்களில் மட்டும் போட்டு, மிகையாக்கி விடாமல் செய்தது சன் டீவியின் முதிர்சியையும் காண்பிக்கிறது. இப்படிப் பட்ட உருவாக்கப் பட்ட பொது கருத்துக்களையும் தாண்டி, திமுக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கான காரணங்களை ஆராய்வது இந்த பதிவின் நோக்கமில்லை. இந்த தேர்தல் முடிவுகளில் நிறைவும் சந்தோஷமும் கொள்வதற்கான காரணங்களை, பொத்தாம் பொதுவாய் அவசர கதியில் அடுக்குவது மட்டுமே நோக்கம்.

கலர் டீவி வழக்கும் திட்டம், எல்லா மட்டத்திலும், மந்திரியிலிருந்து கடைசியாக டீவியை பெற ஒரு குடிமகள் அரசு ஊழியனுக்கு தரவேண்டிய லஞ்சம் வரை, ஒரு வறலாறு காணாத ஊழலை ஊற்றுவிக்கும். ஆனால் இரண்டு ரூபாய்க்கு (நல்ல )அரிசி என்பதை சாத்தியமாக்கினால், உண்மையிலேயே மக்கள் காலகாலத்திற்கும் திமுகவை போற்றுவார்கள். ஒரு வகையில், இன்றய சந்தை/நுகர்வு பொருளாதாரத்திற்கு, உலகமயமாதலுக்கு எதிரான அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படுவதும், அதற்கு மக்கள் கூட்டத்தில் வேறு சிலர் ஒரு விலை கொடுப்பதும் எந்த விதத்திலும் அநியாயமானதாய் தெரியவில்லை. இதற்கு ஆகக்கூடிய சில நூறுகோடிகள் ஒரு அரசாங்கத்திற்கு ஜுஜுபியான தொகை மட்டுமே. நேரடியாக இதை காரணம் காட்டி, தமிழகத்தில் தொழில் செய்பவர்களிடம் கூட இதை வசூலிக்க இயலும். கலைஞர் சொதப்பாமல், ஒரு புத்திசாலித்தனமான கண்ணோட்டத்துடன் அணுகுமுறையுடன் உண்மையிலேயே இதை நிறைவேற்றினால் அடுத்த முறையும் அவர் முதல்வராக வருவார் என்று தோன்றுகிறது. இப்போதைக்கு இங்கே நிறுத்தி கொள்கிறேன்.

Post a Comment

---------------------------------------

Wednesday, May 10, 2006

ஐஐடி தேர்தல்.

இட ஒதுக்கீட்டை முன்வைத்து ஐஐடி கான்பூரில், படித்து முடித்த 'பதிவு செய்த அலும்னி'களிடம் ஒரு கருத்து தேர்தல் நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை கீழே தருகிறேன். சுவாரசியத்திற்கும், அறிந்துகொள்ளவும் எதுவும் இல்லாவிட்டாலும், எதிர்பார்ப்பிற்கு மாறாக எதுவும் இல்லை என்று உறுதி படுத்திக் கொள்ள மட்டும்.

என்னிடம் அனுமதி கேட்ட பின்பு மின்னஞ்சலில் எனக்கு இது வரவில்லை என்பதுபோல், இதை வெளியிட யாரிடமும் நான் அனுமதி கேட்க வில்லை. அனுமதியில்லாமால் வெளியிடவேண்டாம் என்று எனக்கு வந்த மின்னஞ்சலில் சொல்லப்படவும் இல்லை. இறுதியில் இருந்த ஒரு பேராசிரியரின் பெயரை மட்டும் நீக்கியுள்ளேன்.

Dear Members,

The Hon'ble Minister, Human Resources Development, Government of India (GOI), had recently indicated that GOI intends to introduce reservations for OBCs in admissions to IITs, IIMs and other similar institutions. The Board of Directors of AA considered this issue and sought the views of members of AA through a web poll. The voting was done only among registered members of the IIT Kanpur Alumni Association through the Alumni Association web-site. This web poll was open from 24 April 2006 to 8 May 2006.

We tabulate, here below, the views of the members of AA that have emerged from the web poll:

1 Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm the brand of IITK?

Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 1 %

2. Do you think reservations, as they are planned to be implemented in higher education, will harm India's competitiveness in the global knowledge economy?

Agree: 94 % Don't Agree: 5 % Don't Know: 2 %

3. Do you support IITK AA taking an active stand against the implementation of reservations as planned?

Agree: 95 % Don't Agree: 4 % Don't Know: 2 %

4. Do you support the Govt. making significant investments in primary and secondary education to enhance opportunities for OBC as an alternative measure than additional reservations in IIT's and IIM's and institutes of higher learning?

Agree: 92 % Don't Agree: 6 % Don't Know: 2 %

The total number of votes polled was 1851.

Post a Comment

---------------------------------------

Wednesday, May 03, 2006

4. தேர்தல் - 2006.

இவை தவிர தொகுதி ரீதியாய் எனக்கு இருக்கும் அக்கறை, வேலூரில் போட்டியிடும் சல்மா (கவிஞர் அல்ல), காட்டு மன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளரான நம் அன்புக்குரிய அறிஞர் ரவிக்குமார்.

வேலூரில் போட்டியிடும் சல்மா ஒரு அரவாணி. அவரை வெற்றி பெறச் செய்தால், அது அரவாணிகளை சகமனிதர்களாக ஒப்புகொள்ளும் நம் சமூகத்தின் சகிப்புதன்மைக்கு எடுத்துக் காட்டாகவும், பன்மை தன்மையை அங்கீகரிக்கும் பரந்த மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்தை நோக்கிய பயணமாகவும் இருக்கும். அரவாணிகள் மீது நம் சமூகம் பிரயோகிக்கும் வன்முறையையும், அவர்கள் இருப்பையே அங்கீகரிக்காத கீழான பார்வையையும் விளக்க வேண்டியதில்லை. அவர்களின் அடையாளமாய் இருக்கும் கூவாகத்திலேயே (1998இல் நேரில் சென்றபோது கண்டதில்) அவர்கள் மீது நிகழும் வன்முறைக்கு அளவில்லை. இந்நிலையில் சல்மாவை வேலூர் மக்கள் வெற்றி பெறச் செய்வார்களெனில், தமிழர் நாகரீகம் ஆரோக்கியம் அடைந்து வருவதன் அடையாளமாக எண்ணிக் கொள்ளலாம். (வெற்றி பெறாவிட்டால் அதற்கு எந்த கற்பிதமும் இல்லை.) (வேலூரில்தான் போட்டியிடுகிறாரா என்று தெளிவுபடுத்திக் கொள்ள தேடினால், வேலூரில் சல்மா என்பவர் ஆண் அடையாளத்தில் போட்டியிடுவதாக அறிந்து கொள்ள முடிந்தது.)

சில வருடங்களுக்கு முன்னால் எதிர்பார்த்தது இப்போது நடக்கிறது. ரவிக்குமார் வேலையை துறந்துவிட்டு அரசியலில் குதித்திருப்பது (அவருக்கு நல்லதா என்று தெரியாவிட்டாலும்), குறைந்த பட்சம் இரண்டு விதங்களில் நல்லது. நிறப்பிரிகை ஆசிரியர் குழுவிலிருந்து விலகி, இரண்டு வருட மௌனத்திற்கு பிறகு, ரவிக்குமார் முன்வைத்த பெரியார் விமர்சனம் (அதுவும் அ.மார்ஸுடனான ஈகோ சண்டையில், காலச்சுவடு பாலிடிக்ஸில் தொடங்கியது என்றாலும்), ஆரோக்கியமான ஒரு விவாதத்தை நோக்கியதாகவே எனக்கு துவக்கத்தில் தெரிந்தது. பின்னர் அது அழுகிப் போய், காலச்சுவடில் அவரது கடைசி கட்டுரையில் பெரியாரை பொம்பளை பொறுக்கியாய் காட்டும் அயோக்கியத்தனமாகவும், அகில இந்திய பத்திரிகைகள்/அறிவுஜீவி களுடனான குசும்பாகவும் வெளிப்பட்டாலும் கூட, அவரை போன்ற தலித் அரசியல் சார்பும், சமூக அக்கறையும், கோட்பாட்டு தெளிவும், களப்பணி அனுபவங்களும் கொண்ட அறிவு ஜீவு ஒருவர், வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவதை ஆதரிப்பதை தவிர, நமக்கெல்லாம் வேறு வேலை என்ன இருக்கிறது! ஆகையால் தோழர் ரவிக்குமார் வெற்றி பெற்று அரசியலில் மேலும் மேலும் பிரகாசித்தால் ரொம்ப ரொம்ப சந்தோஷம்!

இதில் இருக்கும் வேறு சந்தோஷம் என்னவென்றால், ரவிகுமார் ஜெயலலிதாவின் ஆதரவோடு நிற்பதும், அதன் காரணமாய் அவர் செய்ய வேண்டிய சமரசங்களும், குறிப்பாய் ஜெயலலிதாவின் பணத்தில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியதான நிலை. இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது என்று தோன்றலாம். முதலில் ஜெயலலிதாவின் (அதாவது அதிமுகவின்) பணத்தில் அவர் செய்யும் தேர்தல் பிரசாரத்தை குற்றமாகவோ, தவறாகவோ, தார்மீகம் இழந்ததாகவோ, எதிர்மறையான ஒரு விஷயமாக கூட பார்க்கவில்லை. மாறாக நேர்மறையானதாகத்தான் பார்கிறேன். தேர்தல் களத்தில் இறங்குவது என்றாகிய பின், இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. முடிந்த வரை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்பதுதான் என் பார்வை. எனவே நமது விமர்சனத்துக்கு இலக்கானவரும் 'யோக்கியமல்ல' என்ற அற்ப சந்தோஷம் பற்றியது அல்ல.

ரவிகுமார் முன்வைக்கும் அரசியலின் அறிவுஜீவித்தனத்தை எடுத்துகொண்டால், அது மிக வித்தியாசமாய் கலக்கப் பட்ட காக்டெய்ல். ஒரு பக்கம் அவர் (மார்க்சிய லெனினிய அரசியலில் இருந்து விலகி), தனது பாணியில் நிறப்பிரிகை காலத்தில் கைகொண்ட தலித், மாற்றுக் கலாச்சார, பெரியாரியம் சார்ந்த எதிர்ப்பு அரசியல். இன்னொரு பக்கம் தமிழ் சிறுபத்திரிகைகளின் நவீனத்துவம் சார்ந்த, அவரது இலக்கிய அறிவுஜீவி முகம். இடையே தன் வாசிப்பில் ஒட்டிகொண்டு வெளிகாட்டலுக்கு நிர்பந்திக்கும் ஃபூக்கோ. இவை முரண்படாமல் பயணிக்க முடியாது என்பது என் வாதமல்ல. ஆனால் ஒன்றின் காட்டமும், இன்னொன்றின் சாந்தமும், ரவிக்குமாரின் தனிதன்மை கொண்ட குசும்புகளுடன், உணர்ச்சிவயப்பட்ட பெரிது படுத்தல்களுடன் ஒன்று சேரும் போது, வண்டி குண்டக்க மண்டக்க பயணித்து விபத்துக்கு உள்ளாகிறது. சகபயணிகளின் போக்கிற்கு ஏற்ப, ஆக்சிலேட்டரை அழுத்தும் போதெல்லாம், வெறுப்பாய் புகை கக்குகிறது, எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, கருத்தியல் ரீதியாய் இருக்கும் பலவீனத்தையே தெம்பாக்கி, தார்மீகப் படுத்தி பில்லியனில் ஏற்றிகொண்டு ஒரு குத்துமதிப்பாய் பயணிக்கிறது.

அவரது இலக்கிய நவீனத்தவமும், எதிர்ப்பு அரசியலும் இணைந்து இலக்கிய தளத்தில் வெளிபட்ட போது, சாருநிவேதிதாவின் சொந்த வாழ்க்கையை கிசுகிசுப்பதை, தமிழவனை திட்டுவதை தாண்டி எதையும் செய்ததாய் (எனக்கு வாசிக்க கிடைத்தவரை) தெரியவில்லை. இதையெல்லாம் நேரடியாய் சொல்வதில் உள்ள நேர்மை, வலிந்த புனைவாக முன் வைக்கும்போது கயமைத்தனமாகவே வெளிபடுகிறது. (சாருநிவேதிதாவிற்கும் இது பொருந்தும் என்றாலும் அவரது சாதனை என்று தனித்துவமாக வேறு விஷயங்கள் உள்ளன.) ஒரு காலத்தில் ரவிக்குமாரால், எல்லோரையும் விட அதிகமாக தூக்கி, கட்டவுட்டிற்கு மேலே வைக்கப் பட்ட பெரியார், இன்று அவரால் மிக மோசமாய் தாக்கப்பட்டு, அவுட்லுக் ஆனந்த் போன்று தான் என்ன எழுதுகிறோம் என்ற நேர்மையும் தெளிவும் இல்லாத அவரது நண்பர்களால் ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்டு, விஷயமும் பிண்ணணியும் சரியாய் தெரியாத இந்திய அளவிலான தலித் சார்புடையவர்களிடம் ஒரு பக்கமாய் மட்டும் போய் சேருகிறது.

ஒரு உதாரணமாய் 1995இல் பெரியாரியம் தொகுப்பில் ரவிக்குமார் பேசியதைப் பார்த்தால்,

"தமிழவன் எழுப்பிய பிரச்சனையை யாரும் விரிவாய் பேசவில்லை, ............

அவர் முன்னிலைப்படுத்துகிற ஆட்களுக்கு ஆபத்து வந்துட்டுங்கறதுதான் அவர் முன் வைக்கிற குற்றச்சாட்டு. மௌனி, காநசு இது மாதிரி ஆட்களுக்கு. கார்ல் மார்க்சிடம் இருக்கக் கூடிய இசை பற்றிய ஆர்வம், கவிதை பற்றிய ஆர்வம் இதையெல்லாம் இவர்கள் வியந்து போன்றுவார்கள். என்னை 'ஸ்தானோஸ்'ன்னு சொன்னாலும் சரி. இது மாதிரி கூறுகள் மார்க்சிடமிருந்த ஹெகலிய தாக்கத்தின் விளைவுகள். இது என்ன மாதிரி meta physical சிந்தனைகளை அவரிடத்தில் ஏற்படுத்தியது என்றெல்லாம் பார்கணும். மார்க்சியத்திலுள்ள இடைவெளிகள் பற்றி பேசும் போது இலக்கியம் பற்றிய அதனுடைய பார்வையும் ஒன்று. அந்த வகையில் மார்க்சிடமிருந்த சில தவறுகளுக்கு பெரியார் இடமில்லாமல் செய்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கு."

(பெரியாரியம் - நிறப்பிரிகை கட்டுரைகள், பக்கம் 115.)

பெரியாரியம் தொகுப்பிலும், 90களின் நடுவே வந்த சிறு பத்திரிகைகளில் வேறு சில இடங்களிலும் ரவிக்குமார் பெரியாரை அளவுக்கு மீறி புகழ்ந்து பேசிய பல வாசகங்கள் இருந்தும், இதை மட்டும் எடுத்து போட காரணம், மார்க்ஸை விட பெரிய ஆளாக பெரியாரை அவர் புகழ்ந்துள்ளது மட்டுமல்ல. இன்று அவர் ஜெயமோகனுடன் (கருத்தியல் ரீதியாய்) பகிர்ந்து கொண்டு, பெரியாரை இலக்கியத்தின் எதிரியாய் முன்வைக்கும் பார்வையையே, அன்று பெரியாரின் சிறப்பு தன்மையாக சொன்னதை எடுத்துக் காட்டத்தான். (எனக்கு ரவிக்குமாரின் கருத்து பெரியாருக்கு பொருந்தி வருவது என்ற விதத்தில் மட்டுமில்லாது, அதன் அடிப்படையிலேயே ஒப்புதலில்லாதது.) இவ்வாறு ஒரு சந்தர்ப்பத்தில் பெரிதுபடுத்தி, தடாலடியாய் வெளிவரும் ரவிக்குமாரின் ஒரு பார்வையின் தன்மையே, அவரது இப்போதய பெரியார் பற்றிய கட்டுரைகளிலும், திருமாவளவனின் செயல்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்தும் எழுதுக்களிலும் வெளிப்படுவதை காணலாம். இந்த பதிவின் நோக்கம் ரவிக்குமாரின் பெரியார் எதிர்ப்பின் முரண்பாட்டை, சந்தர்ப்ப வாதத்தை, ஆபத்தை பற்றி விவாதிப்பதல்ல, ரவிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதை முன்வைத்தது என்பதால் அதை நோக்கியே பேசுகிறேன்.

எந்த ஒரு அடையாளம் சார்ந்த அரசியலிலும் ஒரு அடிப்படை பிரச்சனை இருக்கும். தூக்கிப் பிடிக்கும் அடையாளத்தை தூய்மையானதாய் கற்பித்து, அதன் அடைப்படையில் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கத்தை முன்வைத்து, மற்ற எல்லா வகை அடையாளங்களையும் அரசியல்களையும் நிகழ்வுகளையும் அணுக முனைவது. தூக்கி பிடிக்கும் அடையாளத்தோடு, இயைந்து வரும் அனைத்தையும் தூய்மையாக்கப் பட்டதாக பார்க்க வேண்டிவரும். மற்ற அடையாளங்களின் கற்பிதத் தன்மை (அல்லது பொய்மை) பற்றி தயக்கமில்லாமல் பேசும் போது, தூக்கிப் பிடிக்கும் அடையாளத்தை மட்டும் இயற்கையானதாய் பேசவேண்டி வரும். இந்திய தேசியம், தமிழ் தேசியத்தை முன்வைத்து இதை விலாவாரியாக விளக்க உதாரணங்கள் இரைந்து கிடக்கின்றன. ஆனால் தலித் என்ற அடையாளம் கூட இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடாத வண்ணமே இருக்கிறது. அதற்கு சிறந்த உதாரணம் ரவிக்குமாரும் அவரை சார்ந்த சிலரும். (இதை எல்லாம் சொல்லும்போது அடையாளம் சார்ந்த அரசியலை எல்லாமே ஆபத்தானதாக சொல்லி நிராகரிக்கவோ, அதற்கான தேவையை மறுக்கவோ இல்லை.)


தமிழ் தேசியம் குறித்தோ, பெரியாரின் அரசியல் குறித்தோ எழுதிய விமர்சனத்தில், தான் நிராகரிக்கப் பயன்படுத்தும் தர்க்கங்களை, ரவிக்குமாரால் தலித்தியத்திற்கு பொருத்தி பார்க்க இயலாது. குறைந்த பட்சமாய் பெரியாரிடம் காட்டும் கறார்தன்மையை அயோத்திதாசரிடம் அவரால் காட்ட முடியாது. அயோத்திதாசரை பற்றி விமர்சனம் வந்தால் அதை வசையாலோ மௌனத்தாலோ மட்டுமே அவரால் எதிர்கொள்ள முடியும். பெரியாரை 'கட்டுடைக்கவும்' , அல்லது மறுவாசிப்பு என்ற பெயரால் அவதூறுகள் செய்யவும் முடியும். ஆனால் அயோத்திதாசரை வியந்து இல்லாததை எல்லாம் கட்டமைக்க மட்டுமே முடியும். பெரியார் குறித்த அவரது கடைசி காலச்சுவடு கட்டுரையை எடுத்து கொண்டால், வலிந்து பெரியார் சொன்னதை எல்லாம் திரித்து, பெரியார் சொன்னதெல்லாம் வெறும் அதிர்ச்சியூட்டும் கருத்துக்களே தவிர, அது குடும்பம் என்ற நிறுவனத்தை நிராகரிப்பதல்ல என்று நிறுவ, படாத பாடுபட்ட தர்க்கங்களை எல்லாம் அனாசியமாய் அள்ளி போடுவார்(ஆனால் ரவிக்குமார் எழுதுவது முற்றிலும் பொய், பெரியார் குடும்பம் என்ற கருத்தாக்கதை முற்றிலும் கட்டுடைக்கும் உரைகளையே நிகழ்த்தியிருப்பார்.) அதே கட்டுரையில் போகிற போக்கில், அம்பேத்கார் தனது 'இந்தியாவில் சாதிகள்' புத்தகத்தில், குடும்பம் என்ற கருத்தாக்கத்தை கட்டுடைத்ததாக சான்றிதழ் வழக்குவார். அம்பேத்காரின் 'இந்தியாவில் சாதிகள்' புத்தகத்தை படித்த யாருக்குமே இப்படி தோன்றியிருக்க வாய்ப்பில்லை. அம்பேத்கார் சதி போன்ற வழக்கங்கள் கூட, சாதிய ஒழுங்கை (அக திருமணத்தை) காப்பாற்றும் நோக்கில் உருவானதை பற்றிய ஆய்வை தந்திருப்பரே ஒழிய, குடும்பம் பற்றி எந்த பெரிய ஆச்சரியப்படக் கூடிய கருத்தையும் (பெரியாரை போல) கூறியிருக்க மாட்டார். மேலும் அம்பேத்காரின் பல கருத்துக்கள் (தலித் சார்ந்தவைகள் தவிர) பழைமைவாத தன்மை கொண்டது என்பதையும், குடும்பம் என்ற நிறுவனத்தின் மீது அவருக்கு எந்த பெரிய விமர்சனமும் (பெரியாரை போல) இல்லை என்பதையும் அறிய, வெறும் வாசிக்கும் திறன் மட்டும் போதும். ஆனால் அம்பேத்கார், அயோத்திதாசர் தலித் அடையாளம் சார்ந்தவர்கள், ரவிக்குமாரின் கற்பிதப்படி அவர்கள் தூய்மையான அடையாளம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இல்லாத தகுதிகள் தரப்படுவதும், பெரியார் உண்மையாகவே வைத்த கருத்தாக்கங்கள் கூட திரிக்கப் பட்டு, அவர் பெண்பித்தராக, வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக கருத்து சொன்னவராக அவதூறு செய்யப்படுவார். தமிழ் தேசியம் என்பதை எதிர்க்கும் ரவிக்குமார், இதுவரை நடந்த அத்தனை 'மொழிபோர்களையும்' வரிசையாக சாக்குகளை சொல்லி நிராகரித்துவிட்டு, இன்றய பாமக-விசி 'மொழிப்போர்' மட்டும் அவற்றிலிருந்து வேறுபட்டதாய், திருமாவளவன் தலமை தாங்குகிறார் என்பதால் மட்டுமே தூய்மைப்படுத்தப் பட்டதாய், ரொம்ப கஷ்டப்பட்டு கட்டுரை வரைந்ததை விட, இன்னும் ஜோக்காக எதிர்காலத்தில் பேசவேண்டிவரும் என்றாலும்,

தலித் என்ற அடையாளத்தை புனிதமானதாய் கற்பித்து, அதை சார்ந்து நிகழும் எதையும் உன்னதப்படுத்தும், ரவிகுமாரின் கருத்தியல் தூய்மையை, அவருடய தேர்தல் அரசியல் ஈடுபாடுகள், ஜெயலலிதாவின் கூட்டணி, ஜெயலலிதாவின் பணம் மாசு படுத்தும் என்பதுதான், ரவிக்குமார் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு இருக்கும் இன்னொரு சந்தோஷப் படக் கூடிய விஷயம். இங்கே மாசுபடுதல் என்பதை ஒரு நல்ல விஷயமாகவே, ஒரு நேர்மறையான பொருளிலேயே சொல்லுகிறேன். தூய்மை என்பது பாசிசக் கூறை கொண்டது என்பதனால், அதற்கு எதிராக நிகழ்வதாய் இந்த மாசுபடுதலை கருதுகிறேன்.

தேர்தல் முடிந்த உடன் அதிமுகவுடனான கூட்டணிக்கு அருத்தமில்லாமல் போகும். அதனால் இதன் மூலம் தலித் சார்ந்த அரசியலுக்கு பின்னடைவு ஏற்பட வாய்பில்லை. (வேறு காரணங்களால் ஏற்படலாம்.) தலித் என்ற அடையாளத்தை தூய்மையானதாய், ரவிக்குமார் செய்யும் கற்பிதம் மட்டுமே மாசடையும் என்று தோன்றுவதால், ரவிக்குமாரின் அரசியல் பிரவேசத்தை வாழ்த்தி வரவேற்கிறேன். முதலாய் சொன்ன, ரவிக்குமார் என்ற தலித் அரசியல் சார்ந்த அறிவிஜீவி வெற்றி சட்டசபைக்குள் நுழைவதுதான் முக்கிய காரணம் என்றாலும், இந்த காரணத்தாலும் வரவேற்கிறேன்.

எதை நோக்கி குவிப்பது என்ற தெளிவில்லாமல் நீட்டி முழக்கிய இந்த பதிவிற்கு மன்னிக்கவும். இந்த பதிவுடன் தேர்தல் குறித்த என் பதிவுகள் நிறைவுறுவதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன். வாசித்த, பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு மிகவும் நன்றி.

Post a Comment

---------------------------------------

Tuesday, May 02, 2006

3. தேர்தல் - 2006

ஜெயலலிதா பெரும்பான்மையுடன் திரும்ப வரக் கூடாது என்பது தவிர, எனக்கு இந்த தேர்தலில் இருக்கும் வேறு ஒரு அக்கறை, விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 11 இடங்கள்(11 அல்ல 9- திருத்திய அருண்மொழிக்கு நன்றி). தேர்தல் அரசியலில் திருமாவளவனை ஆதரிப்பது, தலித்திய சார்பில் சிந்திக்கும் அனைவரின் தார்மீக கடமை என்பதாக தோன்றினாலும், அப்படி ஆதரிப்பது, அதையும் விமர்சனமின்றி செய்வது, உண்மையிலேயே தேவைதானா என்ற கேள்வியும், அவரது சமீபகால நடவடிக்கைகளினால் எழுந்திருக்கிறது. குறிப்பாக குஷ்பு பிரச்சனையில் அவர்(உம்) ஆடிய ஆட்டம் மறக்கக் கூடியது அல்ல.

திருமாவளவனின் தொடக்க கால செயல்பாடுகள், அவர் உருவாக்கிய எழுச்சி, இதனால் கிடைத்த நம்பிக்கையில் உத்வேகம் பெற்று, பல தரப்பிலிருந்து அவரை ஆதரிக்கும் குரல்கள் வந்தன. அவர்களில் (என்னையும் சேர்த்த) பலர், அவரது அண்மைக்கால தமிழ் சார்ந்த அரசியல் செயல்பாடுகளால் (சினிமாவில் 'தமிழ் பெயர்' வைக்க நடத்திய அடாவடித்தனங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அரசியல் பார்வைகளில் செய்யும் எத்தனையோ சமரசங்களில் ஒன்றாக அதை பெரிதாக்காமல் புறக்கணித்து விட்டு), குறிப்பாக குஷ்புவை முன்வைத்த பிரச்சனைக்கு பின்னர், அந்த ஆதரவை ரொம்பவே பரிசீலிக்கும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

திருமாவை போன்ற மக்கள் ஆதரவைப் பெற்ற தலைவர், தலித்திய நோக்கில் செய்ய எவ்வளவோ இருக்கிறது. இன்னமும் சாதியமைப்பை மீறாத சமூக ஒழுங்குகளும், தலித்கள் மீதான வன்கொடுமைகளும் அன்றாட நிகழ்வாய் இருக்கும் சமூக யதார்த்தத்தில், அது குறித்த மீறல்களுக்கு மக்களை அணிதிரட்டுவதில், அவற்றை வெளிச்சமிட்டு காட்டுவதில், பரவாலாக அதை கண்டிக்கும் மனநிலையை ஊடகங்களிலும் சமூக பிரஞ்ஞையிலும் உருவாக்குவதில் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் அரசியல் மூலம் குரல் கொடுத்தல், அரசியல் கட்சிகள் உட்பட்ட எல்லா சமூக அமைப்புகளுடன் உரையாடல், சாதிக் கொடுமைகளுக்கு எதிரான களத்தில் நேரடியான போராட்டம், ஒன்று திரட்டிய பலம் கொண்டு மிரட்டல், பேரம் பேசி மசிய வைப்பது என்று எத்தனையோ வழிமுறைகளில் தலித் நலன்களை முன்வைத்து செயல்படும் தேவையும் உள்ளது. ஆனால் அவர் சக்தியை வேறு விஷயங்களில் செலவழித்து, ஏற்கனவே சாதகமில்லாத பொதுக்கருத்தின் வெறுப்பை இன்னும் சம்பாதிப்பதிலும் அல்லது சாதிய ஒழுங்கை ஒப்புகொள்ளும் பொதுமனோபாவத்திற்கு தனக்கு தானே நியாயம் சொல்லி கொள்ள உதவுவதிலும், (கேள்விப்படும் செய்திகளின் படி) கிராம அளவில் இன்றும் தொடர்ந்திருக்கும் தலித்கள் மீதான் சாதிய நடைமுறைகளை கண்டு கொள்ளாம லிருப்பதிலும்தான் இப்போது நிலை கொண்டிருப்பதாய் தெரிகிறது.

இது குறித்து திருமா மீது விமர்சனம் வைக்க வேண்டிய அவசியம் இருந்தாலும், அந்த விமர்சனங்களை வைக்கும் இரு எதிர் தரப்புகளை அடையாளம் கண்டு வகைப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இதுவரை தலித் அரசியல் சார்ந்த எல்லாவற்றையும் முரட்டுத்தனமாய் எதிர்த்தவர்கள், தலித் சார்பாகவோ சாதிய நடைமுறை பற்றி விமர்சனமாகவோ ஒரு முறை கூட பேசியிராதவர்கள், அப்படி பேசுபவர்களை கடுமையாய் தாக்கி வந்தவர்கள். இவர்கள், திருமாவளவன் தலித் நலன் மீது அக்கறையில்லாமல், கற்பை முன்வைத்தும் 'தமிழ் கலாச்சாரத்தை காக்கவும்' செய்யும் அரசியல் பற்றி அங்கலாய்ப்பது ஒரு வகை. அவர்களின் போலித்தனத்தை தோலுரிக்கும் முனைப்பில், திருமா மீது உண்மையிலேயே விமர்சனம் வைக்கும் தேவையும் கடமையும் கொண்ட தலித்திய சார்புடையவர்கள், மௌனமாக இருப்பது அல்லது விமர்சனத்தை மென்மையாய் கையாள்வது இன்னொரு வகை. தீவிரமான அணுகல்களின் போது, முதல் தரப்பை முற்றிலும் புறக்கணித்து அலசினால் ஒழிய, ஒரு அடி கூட நகரமுடியாது. இரண்டாவது தரப்பினரின் நோக்கம் சாதிய நடமுறையை தகர்ப்பதாயின், இருக்கும் விமர்சனத்தை திடமான குரலில் முன் வைப்பதை தவிர வேறு வழியில்லை.

இப்படி விமர்சனங்கள் இருந்தாலும், திருமாவை எல்லா கட்டங்களிலும் ஆதரித்துத்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி இருந்தாலும், அதை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டிய தேவை இருந்தாலும், இன்றய நிலையில் தலித் நலன்களுக்கு விடுதலை சிறுத்தைகளை தவிர, வேறு யாரும் குரல் கொடுக்கும் நிலை இருப்பதாக தெரியவில்லை. இன்றைக்கும் 'பஞ்சமி நில மீட்பு' பற்றி திருமாதான் பேச வேண்டியிருக்கிறது. சினிமா பெயர் மாற்றம் பற்றியும். குஷ்புவை எதிர்த்தும் நடக்கும் போராட்டங்களுக்கு கிடைக்கும் ஊடக கவனம், இது போன்றவற்றில் விழுவது கிடையாது. திருமா நடத்திய/நடத்தும் மற்ற போராட்டங்களை பொதுவாய் பலர் கேள்விப்பட்டதும் கிடையாது. அவரது கடந்த ஒன்றரை ஆண்டு நடவடிக்கைகளை முன்வைத்து, அதற்கு முந்தய பத்தாண்டு நடவடிக்கைகளையும், அதன் மூலம் நிகழ்ந்த எழுச்சியையும் புறக்கணிக்க முடியாது. விடுதலை சிறுத்தைகளின் இருப்பின் மூலம், தலித் பிரச்சனைகள் சைடு ட்ராக்கிலாவது கவனிக்கப் படும். குறிப்பாக மற்ற வேறு யாரும் அதை செய்யப் போவது இல்லை என்ற நிலமையில், திருமாவுக்கு ஆதரவாக எண்ணுவதுதான், தலித் சார்பு உள்ளவர்களுக்கான இப்போதைக்கான வழிமுறையாய் தோன்றுகிறது.

திருமாவை ஒரு தலித் போராளி என்று பார்க்காமல், ஒரு அரசியல்வாதி என்று பார்த்தால், இன்றய அரசியலில், மற்ற அனைவரோடும் ஒப்பிடும்போது, அவரிடம் தான் கொஞ்சாமாவது விவஸ்த்தையும், நேர்மையும் இருக்கிறது. அதிமுக பக்கம் சென்றதை நியாயபடுத்திப் பேசிய போது நிதானம் காட்டியதிலும், வைகோவை போல் கூட்டணியில் சங்கமித்து விட்டதென்றாகிய பின் வாய்க்கு வந்த படி உளராததிலும், ஜெயா டீவி நேர்காணலில் கூட குறைந்த அளவே அம்மா புகழ் பாடி, தேவையான அளவே கேனத்தனமாய் பேசியதிலும் இன்றய அரசியலில் அவரே ஓரளவாவது பொருட்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார் என்று தோன்றுகிறது.

அந்த வகையில் திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இன்று அரசியலில் அடைந்திருக்கும் இடம் மிக முக்கியமானது. திமுகவில் இருந்திருந்தால் கிடைத்திருக்க கூடியதை விட அதிகமாக கிடைத்தாலும், அவருடைய பலத்திற்கு ஏற்றார் போல இடங்கள் கிடைத்திருக் கின்றனவா என்று தெரியவில்லை. நான் வாழும் பகுதியில் அவருக்கு மிக பெரிய ஆதரவு இருப்பது தெரிகிறது. அதிமுக பக்கம் சேர்ந்த சில தினங்களிலேயே சுவர்களில் இங்கே வேலை தொடங்கிவிட்டது. எப்படியிருந்தாலும் இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கணிசமான வெற்றி பெற்றால், அதன் மூலம் கைப்பற்றப் போகும் அரசியல் வெளியும் அங்கீகாரமும், இன்னொரு மைல் கல்லாக இருக்கும். இவற்றின் மூலம், எந்த அளவு தலித் நலன்களுக்கு, தலித் அரசியலுக்கு குரல் கொடுக்கும் சாத்தியங்களும், அதே நேரம் லோக்கல் தளத்திலான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் இருக்கும் சவாலும்தான், அக்கறைக்கும் கவனத்துக்கும் உரியதே ஒழிய, சட்டசபைக்குள் விசியினர் பெறும் பிரதிநிதித்துவம் அல்ல. இவை குறித்து காலப்போக்கில்தான் பேசமுடியும். இப்போதைக்கு விடுதலை சிறுத்தைகள் கணிசமாய் வெற்றி பெறுவது ஒரு நல்ல அறிகுறியாகவே இருக்கும்.

(மன்னிக்கவும், இன்னும் ஒரு பதிவு வரும்.)

Post a Comment

---------------------------------------
Site Meter